உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிக்குப்பின் தமிழ் உரைநடை/022

விக்கிமூலம் இலிருந்து


21. ஜெயகாந்தன்


1960களிலிருந்து தமிழ் எழுத்துலகத்தில் ஜெயகாந்தன் ஒரு வலிய சத்தியாக விளங்குகிறார். இளம் எழுத்தாளர்களிடையே அவருடைய பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. அவரைப் பின்பற்றி—ஜெயகாந்தன் மாதிரியே—எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு முயன்றவர்கள் அநேகர் ஆனால் வெற்றிபெற்றவர் எவரும் இலர். ஜெயகாந்தன் பிறரால் பின்பற்ற முடியாத தனி சக்தி ஆவார்.

அவருக்குக் கிட்டிய அனுபவங்களும், வாழ்க்கையை அவர் தரிசித்த நோக்கும், அவற்றை அடிப்படையாக்கி அவர் வளர்த்த—வளர்க்கிற—சித்தனைகளும், இவற்றை எடுத்துச் சொல்கிற தெளிவும் துணிச்சலும் விசேஷமானவை.

தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, சிந்தித்ததை அழுத்தமாக எடுத்துச் சொல்கிறார் ஜெயகாந்தன். ‘உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்’ வாக்கினிலே ஒளி உண்டாம் என்ற உண்மைக்கு அவருடைய எழுத்துக்கள் நல்ல சான்றுகள் ஆகின்றன.

எண்ணங்களை எடுத்துச் சொல்கிற சாதனமாகவே ஜெயகாந்தனின் உரைநடை அமைகிறது. முதலில் அவர் எளிமையாக, சிறு சிறு வாக்கியங்களாகத்தான் ஆரம்பிக்கிறார்.

“சொர்க்கம்—ஒன்று உண்டு. அது என்னுள் இல்லை; வெளியில் இருக்கிறது. வெளியெல்லாம் நரகம் என்றால் என்னுள் மட்டும் சொர்க்கம் எப்படி இருக்க முடியும்? அந்தச் சொர்க்கம் முதலில் வெளியில் பிறக்கட்டும். அதன் பிறகு அது என்னுள் வரட்டும்; வரும்.

நான் வெளியில் திரிகிறேன். வெளியிலேயே வாழ்கிறேன். உலகை, வாழ்வை, மனிதர்களைக் கூர்ந்து நோக்குவதில் மகிழ்கிறேன், கண்டதை, சொன்னதை, கேட்டதை எழுதுகிறேன்.

எதையும் நான் கற்பனை செய்ததில்லை. உலகில் யாரும் எதையும் கற்பனை செய்ததில்லை. ஒரு தலை இருக்கக் கண்டு தான் மனிதன் பத்துத் தலையைக் ‘கற்பனை’ செய்தான். தலையையே மனிதன் கற்பனை செய்து விடவில்லை.

எல்லோருக்கும் தனித் தனியாகத் தெரிந்த உண்மைகளே ஏனோ எல்லோருமே நேர்நின்று பார்க்கக் கூசுகிறோம். இந்தக் கூச்சம் கூடப் போலிக் கூச்சம்தான். நான் கண்டதை—அதாவது உலகத்தால் எனக்குக் காட்டப்பட்டதை நான் கேட்டதை—அதாவது வாழ்க்கை எனக்குக் சொன்னதை நான் உலகத்துக்குத் திரும்பவும் காட்டுகிறேன்; அதையே உங்களிடம் திரும்பவும் சொல்கிறேன். அது அசிங்கமாக, அது அற்பமாக, அது கேவலமாக—அல்லது அதுவே உயர்வாக, உன்னதமாக எப்படி இருந்த போதிலும் எனக்கென்ன பழி? அல்லது புகழ்? அப்படிக் காட்டும் கருவியாய், கண்ணாடியாய், ஓவியமாய், கேலிச் சித்திரமாய், சோக இசையாய், என் எழுத்து இருந்தது என்பதைத் தவிர, மற்றதெல்லாம் உங்களுடையதுதானே—அதாவது நம்முடையது தானே!’

(‘இனிப்பும் கரிப்பும்’ முன்னுரையில்)

சிறு சிறு வாக்கியங்களில் வளர்கிற ஜெயகாந்தனின் உரை நடை, எண்ண ஓட்டம் வலுப்பெறுகிற போது, பல பிரிவுகளையும் விளக்கங்களையும் தன்னிடம் கொண்ட நீள வாக்கியங்களாக (‘காம்பவுண்ட் ஸென்டன்ஸ்’, ‘காம்ப்ளெக்ஸ் ஸென்டன்ஸ்’களாக) இயல்பாக மாறிவிடுகின்றன. இதை அவருடைய கட்டுரைகளிலும் கதைகளிலும் நன்கு காண முடியும்.

“கதைகளில் சொல்ல முடியாத—சொன்னால் கதைத் தன்மை குலைந்து போகக் கூடிய, ஆனால் நான் கதை எழுதும் நோக்கம் வலுப்பெறச் சொல்லியே தீரவேண்டிய—கதை பற்றிய கருத்துக்களைப் பேசுவதற்கு நூலின் முன்னுரை ஒரு செளகரியமான தளம் என்பதால் இந்தச் சில பக்கங்களைப் பயன்படுத்திக் கொள்வது சமுதாயக் கண்ணோட்டத்துடன் இலக்கியப் பணிபுரியும் என் போன்றவர்க்கு இன்றியமையாததுமாகும்” (‘பிரம்மோபதேசம்’ முன்னுரையில்)

“எவனொருவன் தன்னலம் மறுத்து, மனித குலத்தின் ஒரு பிரிவின் மீதோ பல பிரிவுகளின் மீதோ துவேஷம் வளர்க்காமல் பொதுவான மனித குலத்தின் வளர்ச்சிக்கும், உன்னத வாழ்க்கைக்கும் பாடுபடுவதற்குத் தானோர் உதாரண புருஷன் என்ற லட்சிய வேட்கையோடு செயலாற்றுகிறானோ, தன் வாழ்வையே அர்ப்பணித்துக் கொள்கிறானோ அவன் அந்த அளவில் மனித இதயங் கொண்டோரின் மரியாதைக்குரிய முற்போக்குவாதிதான்.”

(‘யாருக்காக அழுதான்?’ முன்னுரையில்)

இத் தன்மைகளை (எளிமையும், போகப் போகப் பின்னல்களும், வளர்த்தல்களும் பெறுவதை) பிரதிபலிக்கும் நடைக்கு ஜெயகாந்தன் கதையிலிருந்து ஒரு உதாரணம்—

“எங்கள் ஊர் ரொம்ப அழகான ஊர். எங்கள் அக்ரஹாரத் தெரு ரொம்ப அழகானது. எங்கள் அக்ரஹாரத்து மனிதர்களும் ரொம்ப அழகானவர்கள். அழகு என்றால் நீங்கள் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஒன்றின் நினைவே சுகமளிக்கிறது என்றால் அது ரொம்ப அழகாகத் தானிருக்க வேண்டும். முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அங்கே, அந்தத் தெருவில் ஓர் பழங்காலத்து வீட்டின் கர்ப்பக்கிருகம் மாதிரி இருளடைந்த அறையில் பிறந்து, அந்தத் தெருப் புழுதியிலே விளையாடி, அந்த மனிதர்களின் அன்புக்கும் ஆத்திரத்துக்கும் ஆளாகி வளர்ந்து இப்போது பிரிந்து, இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்து நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவையாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே?

நான் பார்த்த ஊரும்—‘இவை என்றுமே புதிதாக இருந்திருக்க முடியாது’ என்ற உறுதியான எண்ணத்தை அளிக்கின்ற அளவுக்குப் பழசாகிப் போன அந்த அக்ரஹாரத்து வீடுகளும், ‘இவர்கள் என்றைக்குமே புதுமையுற மாட்டார்கள்’ என்கிற மாதிரி தோற்றமளிக்கும் அங்கு வாழ்ந்த மனிதர்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்கள் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எனினும் அவர்கள் அப்படி இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வதிலே ஒரு அழகு இருக்கிறது; சுகம் இருக்கிறது.”

(அக்ரஹாரத்துப் பூனை)

பட்டணத்துக் குப்பங்களில் வசிக்கிற சாதாரண மக்களின் பேச்சுநடையையும், பிராமணர்களின் பேச்சுநடையையும் ஜெயகாந்தன் தனது கதைகளில் ஆற்றலுடன் கையாண்டிருக்கிறார். அழகுக்காக, சோதனைக்காக திறமையைக் காட்டுவதற்காக என்றெல்லாம் அவர் நடைநயம் பயிலனில்லை.

“சிக்கலான புதிர்களையோ, ஜாலங்கள் எனும் கழைக் கூத்தாடித்தனத்தையோ, க்ஷணநேரத் துடிப்பு என்ற திருப்பங்களையோ, தித்திப்பை நாக்கில் தடவும் வர்ணனைகளையோ, உடைகளைகிற நிலை வரை உடன் சென்று குறிப்பெழுதும் ‘மார்க்கெட்’ விவகாரங்களையோ எனது வாசகர் என்னிடம் எதிர்பார்க்க மாட்டாரென்று நம்புகிறேன். எனது கதைகளில் பல நயங்களை உணர்ச்சிகளை, அர்த்தங்களை நான் அமைதியாக அதே சமயத்தில் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறேன்” (‘புதிய வார்ப்புகள்’ முன்னுரையில்) என்று அவர் குறிப்பிட்டிருப்பது நினைவுகூரத் தகுந்தது.

தனது கதைகள் பற்றி ஜெயகாந்தன் கூறியுள்ள இன்னொரு கருத்தையும் குறிப்பிட வேண்டும்:

“பொதுவாக வாழ்க்கையே சிக்கல் மிகுந்தது என்பது ஒரு புரியாத சூத்திரம் அல்ல. சிக்கல் மிகுவதனாலேயே வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் அதன் மீதொரு பற்றும் நமக்கு அதிகரிக்கிற தென்பது சற்றுக் சிந்தித்தால் புரிகிற விஷயம். எவ்வளவுதான் சிக்கல் மிகுந்திருந்த போதிலும். வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்னையிலும் முரண்பாடுகளே மலிந்திருப்பினும், மனித வாழ்க்கையின் பொதுவான கதி உன்னதமாய்த்தான் இருக்கிறது என்பது வாழ்க்கையை ஒரு வெறியோடு வாழ்ந்து அனுபவித்தவர்கள் மட்டுமே உணரத்தக்க ஒரு ஞானம்.

தீயவன் என்று அனைவராலும் தீர்ப்பளிக்கப்பட்டவன் கூடத் தீமையை வெறுப்பதில் அதை நிதர்சனமாய்க் காணலாம். அறிவு பூர்வமாக மட்டுமல்ல; உணர்வு பூர்வமாகக் கூட மனிதன் நல்லதையே நாடுகிறான். இதைச் சாதாரண சமூகவாழ்க்கையில் சகல கோணங்களிலும் நான் தரிசிக்கிறேன். நான் எப்படித் தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும் முயற்சியே எனது கதைகள். இந்த எனது நோக்கத்தை ஓர் அர்த்தம் என்று கொண்டால் எனது கதைகளை எல்லாம் அந்த அர்த்தத்தின் பல உருவங்கள் என்று கொள்ளலாம்.”

ஜெயகாந்தன் தனது கதைகளுக்குப் பொருளாக எடுத்துக் கொள்கிற வாழ்க்கைப் பிரச்னைகளும் அவற்றைத் தனது அனுபவ தரிசனம் மூலம் எடுத்துச் சொல்கிறவிதமும் அவருடைய சிந்தனை அவற்றுக்கு ஏற்றுகிற மெருகும், அவருடைய அழுத்தமான நம்பிக்கைகளும் துணிச்சலான வெளியீடுகளும் அவற்றுக்குத் தருகிற கனமும் அவரது உரைநடைக்கு உயிரும் உணர்வும் தனித் தன்மையும் சேர்க்கின்றன.

பிரச்னைகள் சம்பந்தமான ஜெயகாந்தன் சிந்தனை ஒன்றை இங்கே எடுத்தெழுதுவது பொருத்தமாக இருக்கும்—

“இவை கதைகள்! அதாவது மனிதன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள். அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணுவன கதைகள் என்று யாராவது கூறினால் அவரைப் பார்த்து நான் அனுதாபமுறுகிறேன். பிரச்னைகளுக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையென்று யாராவது கூறினால் அவர்களை நோக்கி நான் சிரிக்கிறேன்.

ஆனால் உங்களுக்கு மட்டும் ஒன்று சொல்லி வைக்கிறேன். வாழ்க்கை (life) என்பது வாழ்வின் (existence) பிரச்னை; வளர்ச்சி என்பது வாழ்க்கையின் பிரச்னை; கலையும் இலக்கியமும் வளர்ச்சியின் பிரச்னைகள். எனது கதைகள் பொதுவாக, பிரச்னைகளின் பிரச்னை!
பிரச்னைகள் தீர்வது இல்லை; பிரச்னைகளை யாருமே தீர்த்து வைத்ததுமில்லை. எல்லாவற்றையும் தீர்த்துக் கட்டிவிடவா வாழ்கிறோம்? மேலும் மேலும் பிரச்னைகளை உற்பத்தி செய்து கொள்ளுவதே வாழ்க்கை. புதிய புதிய பிரச்னைகளை வளர்த்துக் கொண்டால் போதும். அளவிலும் தரத்திலும் மிகுந்த பிரச்னைகள்; மிகுதியான பிரச்னைகள் மனிதகுலம் வேண்டுவது இவ்வளவே! தீர்வா? யாருக்கு வேண்டும்?”