பாரதிதாசன்/இயற்கைக் கவிஞர்

விக்கிமூலம் இலிருந்து


6

இயற்கைக் கவிஞர்

அருவிகள் வயிரத் தொங்கல்!
அடர்கொடி பச்சைப் பட்டே
குருவிகள் தங்கக் கட்டி!
குளிர்மலர் மணியின் குப்பை!

காமில் சொலபில் என்பவர் செக்நாட்டுத் தமிழறிஞர். பிராகு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது பிரெஞ்சு நாட்டில் உள்ளார். தமிழின் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாகத் தம் குழந்தைகளுக்குக் கண்ணகி யென்றும் மாதவியென்றும் பெயர் வைத்தவர்.

இவர் 1962ஆம் ஆண்டுத் துவக்கத்தில் தமிழகம் வந்து தமிழ் அறிஞர்களையும், கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் நேரில் சந்தித்து உரையாடிவிட்டுச் சென்றார். பாரதிதாசன் குடியிருந்த 10, இராமன் தெரு, தியாகராயர் நகர் இல்லத்துக்கு வந்து அவரைப் பேட்டி கண்டு ஒலிப்பேழையில் பதிவு செய்து கொண்டு சென்றார்.

செக்நாடு சென்ற அவர் பாரதிதாசன் பாடல்களைச் செக் மொழியில் மொழிபெயர்த்து, அந்நாட்டு இலக்கியத் திங்களிதழான 'நோவி ஓரியண்ட்' (Novy/New Orient Monthly) டில் படத்தோடு வெளியிட்டிருந்தார். அவ்விதழை 19.03.1962இல் பாரதிதாசனுக்கும் அனுப்பி வைத்திருந்தார்.

காமில் சொலபில் பாரதிதாசனை நேரில் கண்டு உரையாடிய போது, அழகின் சிரிப்பு நூலைப்பற்றி ஒரு சுவையான கருத்தைக் கூறினார். "இந்நூலின் பெயரே ஒரு கவிதை" (The heading itself is a poetry) என்பதே அக்கருத்து, பாரதிதாசன் எழுதிய சிறந்த கவிதைப் படைப்புகளில் இதுவும் ஒன்று.

'அழகின் சிரிப்பு' என்ற பெயரே பல சிறந்த கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சிறு செய்யுளாகும் என்பது மொழி ஞாயிறு தேவ நேயப் பாவாணர் கூற்று.

தமிழர்கள் இயற்கையில் ஆழமான ஈடுபாடு கொண்டவர்கள் என்பதற்குச் சங்க இலக்கியங்களே சிறந்த சான்று. இயற்கையழகு இடம்பெறாத சங்கப் பாடல்களே இல்லையென்று சொல்லலாம். மேலை நாடுகளில் இயற்கையைத் தனித்துறையாகப் பிரித்து, அதைப்பற்றியே பாடல் எழுதும் வழக்கம் உண்டு.

இப்பாடல்களை இயற்கைப் பாடல்கள் (Nature Poetry) என்றும், அவ்வாறு பாடும் கவிஞர்களை இயற்கைக் கவிஞர் (Nature Poets) என்றும் கூறும் வழக்கம் உண்டு. ஆங்கிலக் கவிஞர்களுள் வோர்ட்ஸ் வொர்த்தும் (Wordsworth) பிரெஞ்சுக் கவிகளுள் ஆல்பிரெட் தெ முய் சே (Alfrede de Musset) வும் சிறந்த இயற்கைக் கவிஞர்கள்.

தமிழ்நாட்டில் இயற்கையாகிய தனித்துறைக்கு முதன் முதலில் கவிதை நூல் எழுதியவர் பாரதிதாசனே. அந்த நூல்தான் அழகின் சிரிப்பு, அழகின் சிரிப்பைத் தொடர்ந்து 'எழிலோவியம்' என்ற இயற்கைப் பாடற் தொகுப்பு ஒன்றை வாணிதாசனும் அதைப் போலவே வேறு சில கவிஞர்களும் எழுதி வெளியிட்டிருக்கின்றனர்.

அழகின் சிரிப்பு பதினாறு தலைப்புகளிலான பாடல்கள் அடங்கிய ஒரு கற்பனைக் களஞ்சியம். வரிக்கு வரி சுவை குன்றாத வற்றாத தேனருவி. இயற்கையழகின் முக்கியக் கூறுகளையெல்லாம் இதில் ஒன்றுவிடாமல் தொகுத்துப் பாடியுள்ளார் பாரதிதாசன். இயற்கையைச் சுவைக்க அழகுணர்ச்சி வேண்டும். ஆனால் எல்லாருடைய கண்களுக்கும் அழகு நங்கை தட்டுப்படுவதில்லை; எதையும் ஈடுபாட்டோடு கூர்ந்து நோக்கும் கவிஞர் கண்களுக்கே தட்டுப்படுகிறாளாம். அழகாகிய அந்த நங்கை எங்கெங்கு வீற்றிருந்து இன்பமளிக்கிறாள் என்பதைப் பாரதிதாசன் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

 பரிதியிலே அவளைக் கண்டேன்!
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச்
சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில்
தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப் பட்டாள்!
மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்; ஆலஞ்
சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனிலந்த அழகென்பாள் கவிதை தந்தாள்.

இப்பட்டியல் தொடர்கிறது. கடைசியாக எல்லாருக்கும் அழகைச் சுவைக்க நல்ல அறிவுரையொன்று கூறுகிறார்.

பசையுள்ள பொருளிலெலாம் பசையவள் காண்
பழமையினால் சாகாத இளையவள் காண்
நசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்:
நல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை.

இயற்கையழகை விருப்பத்தோடு கூர்ந்து நோக்கும் பக்குவம் வந்துவிட்டால், சுவைப்பது எளிது, அழகைச் சுவைக்கும் போது நம் துன்பமும் பறந்துவிடும் என்பது கவிஞர் வாக்கு. கவிஞன் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்திழுப்பவை காலையும் மாலையும் இரவும்தான். காலையில் கிழக்கில் பரிதி தோன்றும் காட்சியை

எழுந்தது செங்க திர்தான்
கடல்மிசை அடடா எங்கும்
விழுந்தது தங்கத்தூற்றல்!
வெளியெலாம் ஒளியின் வீச்சு!
முழங்கிய நீர்ப்பரப்பின்
முழுதும்பொன்னொளி பறக்கும்,
பழங்கால இயற்கை செய்யும்
புதுக்காட்சி பருகு தம்பி!-என்றும்

மாலையில் குன்றின் பின் கதிரவன் மறையும் காட்சியை

தங்கத்தை உருக்கி விட்ட
வானோடை தன்னி லேஓர்
செங்கதிர் மாணிக் கத்துச்
செழும்பழம் முழுகும் மாலை
செங்குத்தாய் உயர்ந்த குன்றின்
மரகதத் திருமே ணிக்கு
மங்காத பவழம் போர்த்து
வைத்தது வையம் காண

என்றும் இரவில் நிலவு தோன்றும் இனிய காட்சியை

பொன்னுடை களைந்து, வேறே
புதிதான முத்துச் சேலை
தன்னிடை அணிந்தாள் அந்தத்
தடங்கடற் பெண்ணாள், தம்பி
என்னென்று கேள்; அதோபார்
எழில்நிலா ஒளிகொட் டிற்று
மன்னியே வாழி என்று
கடலினை வாழ்த்தாய் தம்பி!

என்றும்

சிந்தனை வளத்தோடு செழித்த தமிழ்ச் சொற்களால் நயம்படப் பாடுகின்றார் பாரதிதாசன். புறப்பட்ட இளங்கதிரின் பொன்னொளிச் சிதறல்களை, "விழுந்தது தங்கத் தூற்றல்" என்ற தொடராலும், மாலையில் குன்றின் பின் மறையும் கதிரவனைச் 'செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம்' என்ற தொடராலும், மாலை நீங்கி நிலவொளியில் மூழ்கும் கடலின் செயலைப் பொன்னுடை களைந்து வேறே புதிதான முத்துச் சேலை தன்னிடை அணிந்தாள் அந்தத் தடங்கடற் பெண்ணாள் என்ற வரிகளாலும் கூறுவது நயமான கற்பனைகள். சதங்கை ஒலிப்பது போல் கொஞ்சு தமிழால் இப் பாடல்களைப் பாடி இருக்கிறார் பாரதிதாசன்.

உவைத்தீயை ஊது கின்றாய்!
உலைத்தீயில் உருகும் கொல்லன்
மலைத்தோளில் உனது தோளும்
மார்பினில் உன்பூ மார்பும்
சலிக்காது தழுவத் தந்து
குளிர்ச்சியைத் தருவாய்! பெண்கள்
விலக்காத உடையை நீபோய்
விலக்கினும் விலக்கார் உன்னை

என்று,

தென்றலின் குறும்பைத் தீஞ்சுவைக் கவிதையாக்கித் தருகிறார்.அழகின் சிரிப்பில் இயற்கையழகைப் பாடினாலும் இடையிடையே நகைச்சுவை விதைகளையும் தூவிச் செல்கிறார் பாரதிதாசன். கீழே தொங்கும் விழுதையும் தனது வாலையும் பாம்பென்று எண்ணிக் குரங்கு போடும் குதியாட்டம் சுவைத்தற் கினியது:

கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று, குரங்கு தொட்டு
“விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதிப்பதைப்போல்
கிளைதொறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம் பாய் எண்ணி எண்ணி
உச்சி போய்த் தன்வால் பார்க்கும்"

சில இடங்களில் இயற்கையழகை மனிதாபிமானத்தோடு சேர்த்துப் பிசைந்து கொடுக்கிறார். இயற்கை அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்தாலும் ஏழை மக்களை அவர் மறப்பதில்லை.

முற்றிய குலைப்பழத்தை
முதுகினில் சுமந்து நின்று
"வற்றிய மக்காள் வாரீர்"
என்றது. வாழைத் தோட்டம்

என்று பாடும்போது, 'வற்றிய மக்களின் வறுமை' வந்து முன்னால் நிற்கிறது.

கிளியைப் பற்றிப் பாடும்போது, அதன் சிறப்பொன்றைச் சுட்டிக் காட்டுகிறார். கிளிக்கு ஏழை பணக்காரர் என்ற வேறுபாடு கிடையாது இருவரையும் தன் கொஞ்சு மொழியால் மகிழ்ச்சியூட்டுகிறது. ஏழைகள் விரும்பியூட்டும் நைந்த பழத்தையும் கூழையும் விரும்பிச் சாப்பிடுகிறது.

கொஞ்சுவாய் அழகு தன்னைக்
கொழிப்பாய்நீ, அரசர் வீட்டு
வஞ்சியர் தமையும் மற்ற
வறியவர், தமையும், ஒக்க

நெஞ்சினில் மகிழ்ச்சி வெள்ளம்
நிரப்புவாய், அவர் அளிக்கும்
நைஞ்சநற் பழத்தை உண்பாய்
கூழேனும் நன்றே என்பாய்

என்று இனிதாகப் பாடுகிறார்.

கவிஞன் இயற்கைக் காட்சியைக் காணும்போது, அக்காட்சிகள் அவன் உள்ளத்தில் ஓவியங்களாகப் பதிகின்றன. அவ்வாறு உள்ளத்தில் பதிந்த ஓவியக் காட்சிகளுக்கு உயிர்கொடுத்து நிலை பேறுடைய படிமங்களாக (Images) ஆக்கிப் படிப்பவர் நெஞ்சத்தில் நிறுத்துகிறான். கவிதையைப் படிக்கும் போதெல்லாம். இந்த அழகோவியங்கள் திரைப்படங்களாக நம் நெஞ்சத்தில் ஓடுகின்றன.

பாரதிதாசன் தமது கவிதையில் அடுக்கடுக்காக ஓவியம் தீட்டுவதில் வல்லவர். மயிலின் தோகையில் எத்தனை ஓவியங்கள்!

உனது தோகை புனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்

கண்ணாடித் தரைபோல் காட்சியளிக்கும் குளத்து நீரில் மிதக்கும் பசிய தாமரை இலைத் தட்டில், தவழ்ந்து விளையாடும் தண்ணீர்த் துளிகளை இயற்கை தீட்டிய அழகோவியமாகவே வடித்துக் காட்டுகிறார், பாரதிதாசன்.

கண்ணாடித் தரையின் மீது
கண்கவர் பச்சைத் தட்டில்
எண்ணாத ஒளிமுத்துக்கள்
இறைந்தது போல், குளத்துத்
தண்ணிரிலே படர்ந்த
தாமரை இலையும் மேலே
தெண்ணிரின் துளியும் கண்டேன்;
உவப்போடு வீடு சேர்ந்தேன்.

புறாவுக்கு ஒழுக்கமான ஓர் உணவுப் பழக்கம் உண்டு. முண்டியடித்து முட்டிமோதும் பழக்கம் மாந்தருக்குத்தான் உண்டு. பாரதிதாசனைக் கவர்ந்த இவ்வொழுக்கம் அழகான ஓவியமாகிறது.

இட்டதோர் தாம ரைப்பூ
இதழ்விரிந் திருத்தல் போலே
வட்டமாய்ப் புறாக்கள் கூடி
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில்
வெட்டில்லை; குத்து மில்லை;
வேறுவே றிருந்த ருந்தும்
கட்டில்லை; கீழ்மேல் என்னும்
கண்மூடி வழக்க மில்லை.

ஆங்கிலக் கவிஞன் கீட்சைப் போலப் பாரதிதாசனும் ஓர் வண்ணக் கவிஞர் (Poet of colour). அவருக்கு வண்ணங்களில் அளவற்ற ஈடுபாடும் உண்டு. இயற்கையில் படிந்துள்ள வண்ணவேறுபாடுகளை எப்படியெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அப்படியெல்லாம் பாட்டில் பதிவு செய்கிறார்.

குயிலைப் பொதுவாகக் கருங்குயில் என்போம். ஆனால் குயில் கறுப்பில்லை. அதன் கறுத்த மேனியில் இலேசாகத் தங்க முலாம் பூசியது போல இருக்கும். இந்த மாயம் பாரதிதாசனின் கூர்த்த கட்புலனுக்குத்தான் தட்டுப்பட்டது.

செங்கதிர் சீர்க்கையால்
பொன்னள்ளிப் பூசிய
கங்குல் நிகர்த்த
கருங்குயிலே கூவாயோ?

என்று பாடிய பாரதிதாசன், அந்தி வானத்தின் செங்கதிர்ப் பூச்சைக் குயிலின் நிறத்தோடு ஒப்பிட்டு எப்படி மகிழ்ந்திருக்கிறார் என்பது புலனாகும்.

வீட்டில் புறா வளர்க்கும் பழக்கம் பாரதிதாசனுக்கு உண்டு. புறாக்களின் வண்ணங்கள் அவருக்கு அத்துபடி அவற்றின் வண்ணங்களை அடுத்தடுத்த படிமங்களில் அழகாகத் தீட்டுகிறார்:

இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும்; செவ்வி தழ்கள்
விரியாத தாமரை போல்
ஓரிணை மெல்லியர்கள்
கருங்கொண்டை கட்டி ஈயம்!
காயாம்பூக் கொத்து! மேலும்
ஒருபக்கம் இருவா ழைப்பூ!
உயிருள்ள அழகின் மேய்ச்சல்.

நாடகம் என்பது உணர்ச்சி மோதல்களின் வெளிப்பாடு. மாந்தரிடத்தில் காணப்படும் காதல், வீரம், அவலம், தாயன்பு, பகைமை, சீற்றம், போர்க்குணம் ஆகிய இயல்பூக்கங்கள் (lnstincts) பறவைகளுக்கும் உண்டு. இவ்வுணர்ச்சிகள் பொங்கி வழியும்போது நாடகக் காட்சிகளாக அமைகின்றன. அக்காட்சிகளில் நடிக்கும் பறவைகளின் மெய்ப்பாடுகளையும் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகிறார் பார்திதாசன்.

தலைதாழ்த்திக் குடுகு டென்று
தனைச்சுற்றும் ஆண்பு றாவைக்
கொலைபாய்ச்சும் கண்ணால், பெண்ணோ
குறுக்கிற்சென்றே திரும்பித்
தலைநாட்டித் தரையைக் காட்டி,
இங்குவா என அழைக்கும்
மலைகாட்டி அழைத்தா லுந்தான்
மறுப்பாரோ மையல் உற்றார்.

தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நடைபெறும் அன்பு நாடகம் உள்ளத்தை நெகிழ்விக்கும் தன்மையது. புறாக் குடும்பத்தில் நடைபெறும் அது போன்ற ஒரு நாடகக் காட்சியைக் கவிஞர் சிறப்பாக நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறார்.

தாய்இரை தின்ற பின்பு
தன்குஞ்சைக் கூட்டிற் கண்டு
வாயினைத் திறக்கும் குஞ்சு
தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்

தாய்அருந்தியதைக் கக்கித்
தன்குஞ்சின் குடல் நிரப்பும்;
ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்!
அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்

குழந்தைக்குத் தாய் மட்டுமே நம் வீடுகளில் கொஞ்சிக் கொஞ்சி உணவூட்டுவதைப் பார்க்கிறோம். ஆனால் குஞ்சுகளுக்குத் தாயும், தந்தையும் மாறி மாறி உணவூட்டும் அன்புப் பரிமாற்றத்தைப் பறவைகளிடம் தானே காணமுடிகிறது.

புறா நீர் அருந்தித் தன் வேட்கையைத் தணித்துக் கொள்ளும் போது, அதனிடத்தில் தோன்றும் மெய்ப்பாடுகளைப் பாரதிதாசன் இனிய நாடகமாக்கிக் காட்டுகிறார்.

அகன்றவாய்ச் சட்டி ஒன்றின்
விளிம்பினில் அடிபொருந்தப்
புகும்தலை; நீர்வாய் கொண்டு
நிமிர்ந்திடும்; பொன் இமைகள்
நகும்; மணி விழிநாற் பாங்கும்
நாட்டிடும்; கீழ் இறங்கி
மகிழ்ச்சியாய் உலவி வைய
மன்னர்க்கு நடைகற் பிக்கும்

நாடகத்தில் காணப்படும் 'கம்பீர ராஜநடை' இங்கும் இடம் பெறுகிறது. ஆடற்கலைக்குப் பாவமும், அடைவும் முக்கியம். அந்நாட்டியப்பண்புகளை மயிற்புறாவிடம் கண்டு மகிழ்கிறார் பாரதிதாசன்.

மயிற்புறா படம் விரிக்கும்;
மார்பினை முன் உயர்த்தும்
நயப்புறு கழுத்தை வாங்கி
நன்றாக நிமிர்ந்து, காலைப்
பயிற்றிடும்; ஆடல் நூலின்
படிதுக்கி அடைவு போடும்
மயிற்புறா வெண்சங்கு ஒக்கும்
வால்தந்த விசிறி ஒக்கும்

மார்பகங்களை முன்னுயர்த்துவதும், கழுத்தை வெட்டுவதும் நாட்டிய மங்கையரிடம் நாம் அடிக்கடிப் பார்த்து மகிழும் சுவையான காட்சிகள். தந்த விசிறி மயிற்புறாவின் வாலுக்கு அழகான உவமை.

புறாக்களிடம் காணப்படும் இல்லற ஒழுக்கத்தைச் சுட்டிக் காட்டுவதன் மூலம், மக்களிடம் காணப்படும் குறைகளைச் சாடுகிறார்.

ஒரு பெட்டை தன்ஆண் அன்றி
வேறொன்றுக் குடன்ப டாதாம்
ஒரு பெட்டை மத்தாப்பைப் போல்
ஒளிபுரிந்திட நின் றாலும்
திரும்பியும் பார்ப்ப தில்லை
வேறொரு சேவல்! தம்மில்
ஒருபுறா இறந்திட் டால்தான்
ஒன்றுமற் றொன்றை நாடும்.

நம்மிடத்தில் நிலவும் பலதார மணத்தையும், சின்ன வீட்டுப் பழக்கத்தையும் நயமாகக் கண்டிக்கிறார் பாரதிதாசன்.

கலாப மயிலின் நீண்ட கழுத்தைப் பார்த்ததும், பாரதிதாசனுடைய கற்பனை சிறகடித்துப் பறக்கிறது. அம்மயிலை அருகில் அழைத்து "நீயும் பெண்களும் நிகர் என்று சொல்லுகிறார்கள். உண்மைதான் என்றாலும் உன்னுடைய கழுத்துக்கு அவர்களுடைய கழுத்து ஒப்பாகுமா? இயற்கை அன்னை உனக்கு நீண்ட கழுத்தையும் பெண்களுக்குக் குட்டைக் கழுத்தையும் ஏன் கொடுத்தாள் தெரியுமா?" என்று ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு

அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
இயற்கை அன்னையிப் பெண்களுக் கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள் உனக்கோ
கறையொன்றில்லாக் கலாப மயிலே!
நிமிர்ந்து நிற்க நீள்கழுத்தளித்தாள்

என்று கூறுகிறார்.

அடுத்தவர் நடப்பில் விரும்பி மூக்கை நீட்டும் பழக்கம், பெண்ணினத்தின் மீது படிந்துள்ள கறையாகக் கவிஞர் நினைத்தார் போலும். என்றாலும் பெண்கள் என்ன கூறுவார்களோ என்ற அச்சம் அவருக்கில்லாமல் இல்லை. எனவே மயிலை அருகில் அழைத்து "நான் சொன்னதைப் பெண்களிடம் சொல்லிவிடாதே அவர்கள் என்னை ஏசுவார்கள்" என்று மெதுவாக அதன் காதில் ஓதுகிறார்.

"நல்லவேளை கவிஞர் இதைக் கலாப மயிலான ஆண்மயிலிடம் தான் கூறினார். இதையே பெண் மயிலிடம் கூறியிருந்தால் அது கவிஞரைக் கொத்தியிருக்கும்" என்று கவிஞர் செளந்திரம் கைலாசம் நயம்படக் கூறுகிறார்.

கோழிச் சேவல் காதலர்க்கு எதிரி. அது நேரந்தெரியாமல் கூவி, அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் இயல்பினது. சங்கப் புலவர் முதல் பலர், தமது பாடலில் கோழியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கின்றனர். ஆனால் பாரதிதாசன் சட்டமன்றத்துக்கே சென்றுவிட்டார்.

சட்டமன்றம்கோழி வளர்ப்பதைத் தடைசெய்யுமா?
தொட்டார் கைதொட்டுத் தொடருமுன்-பட்டப்
பகலாயிற் றென்று பறையடிக்கும் சற்றும்
அகலார் அகலும் படிக்கு!

பாரதிதாசன் பாடிய பறவைப் பாடல்களில் வானம்பாடி குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் பாடிய வானம்பாடிப் பாடலுக்கும், ஆங்கிலக் கவிஞன் வோர்ட்ஸ் வொர்த் பாடிய கக்கூ (Cuckoo) என்ற பாடலுக்கும் ஒரு பொதுத் தன்மை இருக்கக் காணலாம்.

சிறு குன்றுகள் சூழ்ந்த ஸ்காத்லாந்து ஏரிக்கரையில் படுத்த வண்ணம் இயற்கையழகை மாலை நேரத்தில் சுவைப்பது வோர்ட்ஸ் வொர்த்தின் விடுமுறைக் காலப் பொழுதுபோக்கு. அவ்வாறு படுத்திருக்கும்போது உள்ளத்தை உருக்கும் ஒரு தேனிசை வானவெளியில் வட்டமிடுவதைக் கேட்டான். ஆனால் அந்த இசை எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த இசையை எழுப்புவது யார் என்றும் அவன் கண்ணுக்குப் புலனாகவில்லை.

அந்த இசை ஒரு குன்றிலிருந்து மற்றொரு குன்றிற்கும், ஓர் இளமரக் காட்டிலிருந்து மற்றோர் இளமரக் காட்டிற்கும் சுற்றிச் சுற்றி வந்தது. அந்த இசைப் பயணத்தைப் பொருத்தமான சொற்றொடர் ஒன்றால் குறிப்பிடுகிறான் வோர்ட்ஸ் வொர்த், "Wandering Voice" என்பது அச்சொற்றொடர்.

வோர்ட்ஸ்வொர்த்துக்கு ஏற்பட்ட அதே மயக்கம் வானம்பாடியின் இன்னிசையைக் கேட்ட பாரதிதாசனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. அவரது பாடலைக் கேளுங்கள்

வானந்தான் பாடிற்றா? வானிலவு பாடிற்றா?
தேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி
நல்லிசை நல்கிற்றா? நடுங்கும் இடிக்குரலும்
மெல்லிசை பயின்று மிக இனிமை தந்ததுவோ?
வானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்
தானுதும் வேய்ங்குழலா? யாழா தனியொருத்தி
வையத்து மக்கள் மகிழக் குரலெடுத்துப்
பெய்த அமுதா?

என்று அடுக்கிக் கொண்டே போகிறார். வோர்ட்ஸ் வொர்த் காடுமே டெல்லாம் தேடித் திரிந்தும் கக்கூவைப் பார்க்க முடியவில்லை. ஆனால் வானம்பாடி கண்ணுக் கெட்டாத தூரத்தில் பாரதிதாசனுக்குக் காட்சி வழங்கியது.

உன்றன் மணிச்சிறகும் சின்ன கருவிழியும்
என்றன் விழிகட்கே எட்டா உயரத்தில்
பாடிக் கொண்டே இருப்பாய்

என்று பாடுகிறார்.

கவிஞன் கீட்சு நைட்டிங்கேலின் இனிய குரலுக்குப் போதை தரும் மதுவையும் கவிதையையும் ஒப்பிடுகிறான்; கொஞ்சங் கொஞ்சமாக உயிரைக் கொள்ளை கொள்ளும் 'ஹெம்லாக்' என்ற நஞ்சையும் ஒப்பிடுகின்றான். ஆனால் பாரதிதாசன்

'ஏந்தும் வான் வெள்ளத்தில்
கலக்கும் இன்ப வெள்ளம்'

என்று வானம் பாடியின் குரலைக் குறிப்பிடுகிறார்.

விண்ணையும் மண்ணையும் இன்ப வெள்ளத்தில் நனைக்கும் வானம்பாடியோடு பேசவேண்டும் என்ற ஆவல் கவிஞருக்கு ஏற்படுகிறது. பேசவும் செய்கிறார். வானம்பாடியிடம் பேசும் கடைசி இரண்டு வரிகள் இப்பாடலின் உயிர்நாடியாக அமைகின்றன.

அசையா மகிழ்ச்சி
அடைகநீ உன்றன்,
இசை மழையால்
இன்புறுவோம் யாம்!

என்று பாடலை முடிக்கிறார். கீட்சு, நைட்டிங்கேலின் பாடல் அமரத்தன்மை (immortality) வாய்ந்தது என்றும், மக்கள் வாழ்க்கை துன்பமும் சாவும் நிறைந்தது என்றும் பாடுகிறான். இங்குப் பாரதிதாசன் வானம்பாடியின் மகிழ்ச்சியை அசையா மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு அதன் நிலைபேற்றை நம் உள்ளத்தில் நினைவு படுத்துகிறார். இத்தொடர் மூலம் மனிதனின் மகிழ்ச்சி அசையும் மகிழ்ச்சி என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.

வானம்பாடியின் பாடலைக் கேட்டபோது ஏற்படும் இன்பம் கலந்த வியப்பு, குயிலின் பாடலைக் கேட்டபோதும் பாரதிதாசனுக்கு ஏற்படுகிறது.

ஆக்காத நல்லமுதா!
அடடாநான் என் சொல்வேன்
விட்டுவிட் டொளிக்கு மொரு
மின்வெட்டுப் போல்நறவின்
சொட்டுச் சொட் டொன்றாகச்
சுவையேறிற் றென் காதில்

என்று பாடுகிறார். இவ்வளவு சுவையான குரலை வெளிப்படுத்தும் அக்குயிலின் அலகையும் வாயையும் பாராட்ட வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

கருநெய்தல் காட்டரும்பு
போலும் குவிந்த
இரண்டலகு தம்மில்
பிரிந்து குரலெடுக்க
வாயிற் செவ்வல்லி
மலர்கண்டு நான் வியந்தேன்

என்று பாராட்டி மகிழ்வதோடு அதன் அலகுக்குச் சாமணத்தையும் உவமை கூறுகிறார்.

வறிஞனாக இருப்பவன் வள்ளலாக இருக்க முடியாது. ஆனால் குயில் அதற்கு விதிவிலக்கு என்று கருதுகிறார் கவிஞர். சொந்த வீடு கூட இல்லாத ஏழைக்குயிலிடம் குடிகொண்டிருக்கும் இந்த உயர்ந்த பண்பை

சேய்மையிலோர் சோலைக்குச்
செல்லும் குயிலினிடம்
தூய்மைமிகு பண்பொன்று
கேட்பீர்; சுவையைப்
படியளக்கும் வையத்தார்
உண்ணும் படியே
குடியிருப்பொன்றில்லாக் குயில்

என்று பாடுகிறார்.

கவிஞன் உள்ளம் வியப்பிற்குரியது. அவன் எதை விரும்புகிறான், எதை வெறுக்கிறான் என்று சொல்ல முடியாது. அவன் உள்ளத்தின் ஓட்டத்தைப் பின் தொடர்ந்து சென்றால்தான் உண்மை விளங்கும். காலைக் கதிரவனை, மாலை நிலாவை, தண் பொழிலைத், தாமரையை விரும்பும் பாரதிதாசனுக்கு 'இருள்' மிகவும் பிடித்திருக்கிறது. அழகின் சிரிப்பில் இருளைப் பற்றியும் பத்து விருத்தங்கள் எழுதியுள்ளார். இருளில் சுவைக்க என்ன இருக்கிறது என்று பொதுவாக எண்ணுவதுண்டு. ஆனால் இருளின் அருமை காதலர்க்கும் ஓவியருக்குமே புரியும்.

பரப்பரப்பான இந்த உலகில் உழைத்துழைத்து அலுத்துப்போன மக்களைத் தன் அன்புக் கரங்களால் ஆரத் தழுவி அவர்களை அமைதியான துயிலில் ஆழ்த்துவது இருளாகிய தாய் அல்லவா? இவ்வரிய தொண்டை

ஆடிஓ டிப்போர் இட்டும்
அருந்துதல் அருந்தி யும்பின்
வாடியே இருக்கும் வைய
மக்களை உயிர்க்கூட் டத்தை
ஒடியே அணைப்பாய் உன்றன்
மணிநீலச் சிறக ளாவ
மூடுவாய் இருளே! அன்பின்
முழக்கமே உனக்கு நன்றி

என்று கூறிப் பாராட்டுகின்றார். பகலும், இரவும், இருளின் ஆடைகளாம், அதைச் சுவைபடப் பாடுகிறார் பாரதிதாசன்.

அடிக்கடி உடையில் மாற்றம்
பண்ணுவாய் இருளே, உன்றன்
பகலுடை தங்கச் சேலை!
வெண்பட்டில் இராச் சேலைமேல்
வேலைப்பா டென்ன சொல்வேன்!

ஓவியருக்கு மட்டுமே உரிய ஓர் அரிய செய்தியை இப்பாடலில் விளக்குகிறார் பாரதிதாசன், ஓவியம் சிறக்க ஓவியர்கள் சில இடங்களில் இருளைப் பூசுவர்; இருட்கோடுகளை இழுப்பர். இதை அவர்கள் ஆங்கிலத்தில் Shade என்று கூறுவர். அந்த இருட் கோடுகளே ஓவியங்களின் அடையாளங்களை எடுப்பாக அறிவிக்கும். எந்தெந்த இடத்தில் இருள் அழகாக வீற்றிருக்கும் என்பதைக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.

உயர்ந்துள்ள அழகு மூக்கின்
இருபுறம் உறைவாய்; மங்கை
கயல்விழிக் கடையில் உள்ளாய்;
காதினில் நடுப்பு றத்தும்
அயலிலும் சூழ்வாய்; பெண்ணின்
முகத்தினில் அடையா ளத்தை
இயக்குவாய் இருளே, உன்சீர்
ஓவியர் அறிந்தி ருப்பார்.

தாமரைப்பூக்களின் ஒளியிதழ்கள் அடிப்புறத்தில் இருள் படுத்திருக்கிறதாம். இதைத் 'தப்புக் காட்டுதல்' என்கிறார் கவிஞர். இதழின் அடியில் உள்ள இருள், மேலுள்ள ஒளியை மிகைப்படுத்திக் காட்டுதற்காக அவ்வாறு அமைந்திருக்கிறதாம். இது இயற்கையின் சிறப்பு. இதை

அடுக்கிதழ்த் தாம ரைப்பூ
இதழ்தோறும் அடிப்புறத்தில்
படுத்திருப் பாய்நீ! பூவின்
பசையிதழ் ஒவ்வொன் றுக்கும்
தப்புக்காட் டுகின்றாய்! இன்றேல்
தாமரை அழகு சாகும்!
அடுத்திடும் இருளே, எங்கும்
அனைத்துள்ளும் அழகு நீயே!

என்று பாராட்டிப்பாடுகிறார்.

ஆங்கில இயற்கைப் புலவன் வோர்ட்ஸ் வொர்த்தைப் பற்றி ஒரு மேலைநாட்டுத் திறனாய்வாளன் பின் கண்டவாறு குறிப்பிடுகின்றான். "வோர்ட்ஸ் வொர்த்தின் கையிலிருந்த எழுது கோலைப் பிடுங்கி, இயற்கை என்னும் நங்கை தன்னைப் பற்றித்தானே எழுதினாள் (The nature snatched the pen from Wordsworth and wrote about herself என்று குறிப்பிடுகிறான். பாரதிதாசனுக்கும் அக்கருத்துப் பொருந்தும்.