பாரதிதாசன்/கல்வியும் ஆசிரியப் பணியும்
கல்வியும் ஆசிரியப் பணியும்
எட்டுப் பதினொன்று நாற்பத் தாறிட்ட எழிலுறுநாள்
விட்டுப் பிரிந்ததென் ஆசிரியப் பணி மேலும் எனைக்
கட்டுப்படுத்துவ தொன்றில்லை திங்கள் கடைசிதொறும்
தட்டாது வந்திடும் ஐம்பான் வெண் பொற்காக சம்பளமே.
பா.குயில் 10.7.57
- சிகரம் போல் செம்மாந்த தோற்றம். முழங்காலைத் தொடும் நீண்ட குப்பாயம். யாருக்கும் குனிந்து பழக்கப்படாத தலை. பயிற்சி பெற்ற மல்லனைப் போன்ற உடம்பு. பணைத் தோள்கள். குறிக் கொண்டு நோக்கும் கூர்த்த பார்வை. வாயில் உள்ள கவிதைக் கனியை உண்ணக் கவிழ்ந்து படுத்திருக்கும் வெளவால் போன்ற பருத்த மீசை, திருவாரூர்த்தேர் மெதுவாகக் குலுங்கி வருவது போன்ற நடை. அன்போடு அதிரப் பேசும் குரல். கூர் முனைகள் கழுத்தின் இருபக்கமும் மார்பில் தொங்கும் காச்மீரச் சால்வை. இதுவே பாவேந்தர் பாரதிதாசன் தோற்றம்.
புதுவை நகரில் 'பள்ளிக் கூடத்தார்' என்று சிறப்புப் பெயர் பெற்ற சுப்பராய முதலியார் குடும்பம் புகழ்பெற்றது. அக்குடும்ப வாரிசான கனகசபைக்கு இரண்டு மனைவியர். இரண்டாம் மனைவியான இலக்குமி அம்மையாருக்குப் பிறந்தவர். சுப்புரத்தினம் என்ற பாரதிதாசன். இவர் கர ஆண்டு சித்திரைத் திங்கள் பதினேழாம் நாள் புதன் இரவு பத்தே முக்கால் மணிக்குப் பிறந்தார். இது கி.பி. 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் ஆகும்.
கனகசபை புதுவையில் மளிகை மண்டி வைத்து நடத்தி வந்தார். மணிலா, வெங்காயம், கோழிமுட்டை, புட்டியில் அடைத்த மிளகுரசம், வெற்றிலை முதலியவற்றைக் கப்பலில் பிரான்சு முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார். சுப்புரத்தினத்தின் அண்ணன் சுப்பராயர் சிறந்த சோதிட வல்லுநர். புதுவைச் செல்வர்களின் குடும்பச் சோதிடர். சுப்புரத்தினம் சிறுவராக இருக்கும்போதே வாணிபத்தில் இழப்பு ஏற்பட்டுக் குடும்பம் நலிவுற்றது.
கனகசபையார் குடும்பம் பழுத்த வீரசைவக் குடும்பம். அவருக்கு வள்ளலாரின் மீதும், அவரது சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் மீதும், ஈடுபாடு அதிகம். இச்சங்கத்தின் கொள்கை ஏடான, 'சன்மார்க்க விவேக விருத்தி' இதழ் நடத்தத் திங்கள்தோறும் நிதி உதவுவோர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. கலை, இலக்கியம்,நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர் கனகசபை. பெரும்புலவர் பு.அ. பெரியசாமி பிள்ளை இவருக்கு நண்பர்.
சுப்புரத்தினம் தம் இளமைக் காலக் கல்வியைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
"அந்தக் காலத்தில் தமிழ்ப்புலவர்களால் தனிமுறையில் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களுக்குப் பெயர் திண்ணைப் பள்ளிக் கூடம்.
தமிழுக்கும் தமிழ் நெறிகளுக்கும் புறம்பான பள்ளிக் கூடங்களை யெல்லாம் சர்க்கார் பள்ளிக் கூடம் என்பார்கள்.
எனக்கு விவரம் தெரிந்த ஆறு ஆண்டு முதல் பதினேழு ஆண்டு வரைக்கும் எனக்குத் திண்ணைப் பள்ளி தவிர உலகில் வேறு எந்தப் பள்ளியும் தெரியாது.
திண்ணைப் பள்ளிகளில் உரைநடை அரும்பத விளக்கத்தோடு பாடம் நடக்கும். செய்யுள்கள் மூலபாடம் மட்டும் நெட்டுருவாக்கப் படும். மற்றும் பொன்னிலக்கம் எண்சுவடி கருத்தாகச் சொல்லிக் கொடுப்பார் ஆசிரியர்.
பன்னிரெண்டு வயதில் திருக்குறள் 1330 செய்யுள்களும் மனப்பாடம் எனக்கு. குமரேச சதகம் முதலியவைகளும் மனப்பாடம். கணக்கில் என் பள்ளியில் சட்டாம் பிள்ளை நான்”
புதுவை வட்டாரத்தில் புகழ்பெற்று விளங்கிய திருப்புளிசாமி அய்யாவின் திண்ணைப் பள்ளியில் பல ஆண்டுகள் பயின்ற சுப்புரத்தினம் இலக்கண இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை பெற்றதோடு, நாடகத்திலும் நல்ல பயிற்சி பெற்றார். மார்கழித் திங்கள், மாசிமகம் திருவிழாக்களில் இசையோடு பாடும் பாடற்குழுக்களிலும் இடம் பெற்றுச் சிறந்த இசைப் பயிற்சியும் பெற்றார்.
திண்ணைப் பள்ளிக் கூடக் கல்வியை முடித்து உயர்கல்வி பெறுவதற்காகக் கல்வே கல்லூரிக்குச் சென்றார். கலவை சுப்பராயச் செட்டியார் என்பவரால் உருவாக்கப்பட்டது கல்வே கல்லூரி நிறுவனம். ஆங்கிலம், பிரஞ்சு, தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பயிற்சி அளித்தது இக் கல்வி நிறுவனம்.
தமிழ் ஆசிரிய அலுவலுக்குரிய பட்டப் படிப்பைப் (Brevet de Langue Indigene) பயிலுவதற்காகக் கல்வே கல்லூரியில் நுழைந்தார் சுப்புரத்தினம். வகுப்பு மாணவர்களுள் சுப்புரத்தினம் சிறியவர்; படிப்பில் பெரியவர். அதனால் அரசாங்க உதவித் தொகையும் இவருக்குக் கிடைத்தது. தமிழ்ப் புலவர் தேர்வில் முப்பது பேருக்கு மேல் வெற்றி பெற்றனர். ஆனால் முதன்மையாக வெற்றி பெற்றவர் சுப்புரத்தினம்.
புதுவைக் கல்வி இயக்குநரின் செயலாளராக இருந்த திரு. கையார் என்பவர் கனகசபையின் நெருங்கிய நண்பர். அவர் சுப்பு ரத்தினத்தைக் கூப்பிட்டு, "சுப்பு! தமிழாசிரியர் வேலைக்கு ஒரே ஓர் இடம் தான் காலியிருக்கிறது, அதுவும் நிரவியில்தான். நியாயமாக அந்த இடம் உனக்குத்தான் கிடைக்கவேண்டும். காரணம் நீதான் முதன்மையாகத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாய். அதுவுமல்லாமல் நீ அரசாங்க உதவித் தொகை பெற்றுப் படித்தவன். சட்டப்படி அரசாங்க உதவித் தொகை பெற்றுப் படித்தவனுக்குத்தான் முதற் சலுகை. உன்னிடம் உள்ள ஒரே குறை நீ உருவத்தில் மிகச் சிறியவன் பொடியன். நீ நேர்முகத்தேர்வுக்கு வரும்போது இரண்டு மூன்று சட்டையணிந்து, அவைகளுக்கும் மேல் ஒரு கோட்டும் அணிந்து வரவேண்டும். உன்னை உயரமாகக்காட்டிக் கொள்ளக் குதியுயர்ந்த காலணி அணிந்து வா! கல்வி இயக்குநரிடம் தைரியமாகப் பேசு! நான் அருகில் தான் இருப்பேன்" என்று அறிவுரை கூறினார். கையார் சொன்னபடியே எல்லாம் நடந்தது. நேர்முகத் தேர்வு முடிந்து அன்று மாலையே, அலுவலில் சேர்வதற்குரிய ஆணையைக் கையார் கையோடு வாங்கி வந்து வீட்டில் கொடுத்தார். நிரவியில் ஆசிரியர் பணி ஏற்றுக் கொண்டபோது சுப்பு ரத்தினத்துக்குப் பதினெட்டு வயது முடிந்து சில திங்கள்கள் ஆகியிருந்தன. நிரவி பிரெஞ்சு ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சிற்றூர். உருவத்தில் சிறியவனாக இருந்த சுப்புரத்தினத்தை அவ்வூர் மக்கள் ஓர் ஆசிரியனாகவே பொருட்படுத்தமாட்டார்கள். பள்ளி முடிந்து செல்லும்போது "இதோ போறானே பொடிப்பய, இவந்தா நம்ப ஊர்ப்பள்ளி வாத்தியாராம்!" என்று இவர் காதில் விழும்படியாகவே பேசிக் கொண்டு செல்லுவார்களாம்.
நிரவி அப்போது நகரத்து நாகரிகம் பரவாத சிற்றூர். புதுவையிலிருந்து சுப்புரத்தினத்தைப் பார்க்க நண்பர்கள் யாராவது முழுக்கால் சட்டை அணிந்துவந்தால் ஊர்மக்கள் கூட்டம் கூடிக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்களாம்.
சுப்புரத்தினத்துக்குத் தமது தமிழ்ப் புலமையில் சிறுவனாக இருக்கும்போதே நம்பிக்கையும் உறுதியும் உண்டு. அவருக்குக் கல்வே கல்லூரியில் தமிழ் கற்பித்த பங்காரு பத்தர் சிறந்த தமிழாசிரியர். சுப்புரத்தினத்தின் தந்தையாரின் நண்பரான பு.அ. பெரியசாமிப் புலவர் தமிழ்க்கடல். அவருக்கு ஒப்பாக யாரையாவது சொல்ல வேண்டுமானால் தமிழகத்தில் அரசஞ் சண்முகனாரைச் சொல்லலாம். இத்தகைய பெரியோர்களிடம் தமிழ்கற்ற சுப்புரத்தினம் எப்போதும் எந்தப் புலவரிடமும் அஞ்சியதில்லை. பெரும் புலவர்களின் பகையைச் சில நேரங்களில் இவரே விரும்பித் தேடிக் கொள்வதும் உண்டு.
விசுவலிங்கம் பிள்ளை என்பவர் நிரவியில் ஒரு முக்கியப் புள்ளி. இவருடைய ஆசிரியர் இராமசாமிப் புலவர் என்பவர். இப்புலவருக்கு வயது எழுபது இருக்கும். ஒரு நாள் மாலை சுப்புரத்தினம் பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த போது குருவும் சீடரும் குறட்டுப்பலகையில் அமர்ந்து இலக்கியச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தனர். இன்னும் சிலரும் உடனிருந்தனர்.
விசுவலிங்கம் பிள்ளை சுப்புரத்தினத்தைப் புலவருக்குக் காட்டி, 'இந்தப் பையன்தான் இங்கே தமிழ் வாத்தியார்' என்று சொன்னார். புலவர் சுப்புரத்தினத்தைக் கூப்பிட்டார். அவர் கூப்பிட்ட தோரணையே, சுப்புரத்தினத்துக்கு கர்ரென்று சினம் வரும்படிச் செய்தது. இருந்தாலும் அவருடைய முதுமைத் தோற்றத்துக்கு மதிப்புக் கொடுத்து அடக்கமாகக் குறட்டின் மீது அமர்ந்தார் சுப்புரத்தினம். புலவர்,
இலைபடர்ந்த பொய்கை யிடத்தழுதல் கண்டு
முலைசுரந்த அன்னையோ முன்னின்-நிலைவிளம்பக்
கொங்கை சுரந்தவருட் கோமாளோ சம்பந்தா
இங்குயர்ந்தாள் ஆர்சொல் எனக்கு?
என்ற பாடலை எடுத்துச் சொல்லி,
“ஞானசம்பந்தருக்கு அன்னையர்களாக இப்பாடலில் இருவர் குறிப்பிடப்படுகின்றனர். ஒருவர் உமா தேவியார் மற்றொருவர் பாண்டிமாதேவியான மங்கையர்க்கரசியார். இந்த இருவருள் எவர் சிறந்த அன்னை?" என்று கேள்வி கேட்டார் புலவர்.
"மங்கையர்க்கரசிதான்" என்று உறுதியாக விடையிறுத்தார் சுப்புரத்தினம்
"எப்படி? என்றார் புலவர்.
சுப்புரத்தினம் சிறிதும் தயக்கமின்றி விளக்கம் சொல்லத் தொடங்கினார்.
"பசியால் குழந்தை அழுமுன்பே பால் நினைந்து ஊட்டும் தாய் தலையன்புடையவள். குழந்தை அழுவதைக் காதால் கேட்டவுடன் முலைசுரந்து ஊட்டுபவள் இடையன்புடையவள். குழந்தை அழுவதைக் கண்ணால் கண்ட பிறகு பாலூட்டுபவள் கடையன்பினள். சம்பந்தக் குழந்தை பொய்கைக் கரையிலே பாலுக்காக ஏங்கியழுததைக் கண்ணால் கண்ட பிறகும் உமாதேவி பாலூட்ட வில்லை. இறைவன் உணர்த்திய பிறகே ஊட்டினாள். இவளை எவ்வாறு தாயென்று சொல்ல முடியும்?
"ஆனால் மங்கையர்க்கரசியின் நிலைவேறு" 'சீகாழியில் சம்பந்தக் குழந்தை பாலுக்காக அழுதது' என்று இறந்த கால நிகழ்ச்சியை எதிரில் நின்றவர்கள் எடுத்துரைத்த கணமே பாண்டிமாதேவியின் மார்பகங்கள் விம்மிப் பரந்து பாலைப் பொழிந்தன. மேலும் இப்பாடலில் உமாதேவி 'முலைசுரந்த அன்னை' என்று சாதாரணமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறாள். ஆனால் மங்கையர்க் கரசியோ 'கொங்கை சுரந்த அருட் கோமகள்' என்று குறிப்பிடப்படுகிறாள். 'அருள்' என்னும் அடைமொழியே, அவள் சிறந்த அன்னை என்பதைக் காட்டும் என்று விளக்கமாக விடையிறுத்தார் சுப்புரத்தினம்.
இவ்விளக்கத்தைப் பொருட்படுத்தாதவர் போல் புலவர் நடித்தாலும் இரவில் வீடுதேடி வந்து சுப்புரத்தினத்தைப் பாராட்டியதோடு, மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு வாத்தியார் சுப்புரத்தினத்தின் புகழ் நிரவியில் உயர்ந்தது.
சுப்புரத்தினத்துக்கு இளமையிலிருந்தே அரசியல் ஈடுபாடு அதிகம். அதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம். அதனால் அவரை நிலையாக ஓரிடத்தில் இருக்கவிடாமல் ஊர்ஊராக மாற்றிக் கொண்டே இருப்பர். கூனிச்சம்பட்டு என்ற சிற்றூரில் அவர் பட்ட தொல்லை அதிகம். சுப்புரத்தின வாத்தியாருக்கு எந்த விதமான உதவியும் எவரும் செய்யலாகாது என்று கட்டுப்பாடு ஒன்று ஊரில் போடப்பட்டிருந்ததாம். அவருக்கு உண்ண உணவும், இருக்க உறையுளும் கூடக் கொடுப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இவர் துணைவியார்க்குப் பிறந்த குழந்தையொன்று இரண்டு நாளில் இறந்து விட்டது. அதன் இறுதிச் சடங்கில் கூட யாரும் கலந்து கொள்ளவில்லை. பக்கத்து ஊர்க்காரர் துணையோடும், ஒத்துழைப்போடும், பிஞ்சுக் குழந்தையின் சடலத்தைத் தாமே எடுத்துக் கொண்டு போய் இடுகாட்டில் இட்டுவிட்டுத் திரும்பினார் சுப்புரத்தினம்.
இளம் மாணவர்கள் விரும்பும் வகையில் பாடம் சொல்லிக் கொடுப்பதில் சுப்புரத்தினம் வல்லவர். கரும்பலகையில் படம் வரைந்து மாணவர்க்குப் புரியும் வகையில் பாடம் நடத்துவார். கல்வியின் சிறப்பை மாணவர்கட்கு உணர்த்தவேண்டி, எளிய பாடல்கள் எழுதிக் தாட்டி மாணவர்களைப் பாடச் சொல்வார்.
அப்பாடல்களில் ஒன்று:
கல்வியின் மிக்கதாம் | கல்வி மிகுந்திடில் |
செல்வமொன்றில்லையே | கழிந்திடும்மடமை |
கண்மணி கேளடா | கற்பது வேஉன் |
நீயென்றன் சொல்லையே | முதற் கடமை |
செல்வம்பிறர்க்குநாம் | இளமையில்கல்லென |
தந்திடில் தீர்ந்திடும் | இசைக்கும் ஒளவையார் |
கல்வி தருந்தொறும் | இன்பக் கருத்தைநீ |
மிகச் சேர்ந்திடும் | சிந்திப்பாய்செவ்வையாய் |
கல்வியுள் ளவரே | இளமை கழிந்திடில் |
கண்ணுள்ளார் என்னலாம் | ஏறுமோ கல்விதான் |
கல்வியில் லாதவர்கண் | இப்பொழு தேயுண் |
புண்ணென்றே பண்ணலாம் | இனித்தி டும்தேன் |
கவிஞர் பாடம் நடத்துவதோடு மாணவர்கள் மீது அன்பும் அக்கறையும் காட்டுவதில் ஈடு இணையற்றவர். புதுவை சுயர் கூப் வீதித் தொடக்கப் பள்ளியில் சுப்புரத்தினம் ஆசிரியர் பணியாற்றும் போது குறிப்பிடத் தக்க ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் வழக்கம் உண்டு.
ஒரு நாள் பகல் உணவு பரிமாறப்பட்டபோது, மாணவர்களிடம் பரபரப்பு ஏற்பட்டது. சுப்புரத்தினம் மாணவர்களை அணுகிக் காரணம் வினவினார். மாணவர்கள் "முசியே! சாம்பாரு கசப்புங்க!" என்று சொன்னார்கள். (முசியே' என்ற பிரெஞ்சுச் சொல்லுக்கு 'ஐயா' என்பதுபொருள்) சுரைக்காய் சாம்பார். உடனே அதைச் சுவைத்த சுப்புரத்தினம் சமையற்காரரைக் கடுமையாகக் கடிந்து கொண்டார் உடனே மாணவர்களை வரிசையாக நிறுத்திக் கல்வித்துறைத் தலைவரின் அலுவலகத்துக்கு இட்டுச் சென்று. இக்கொடுமையை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியை விவரமாகக் கேட்ட கல்வியதிகாரி உடனே தம் உதவியாளரை அழைத்து வேண்டுவன செய்யும்படி ஆணையிட்டார். சுப்புரத்தினத்தின் கடமை உணர்வை மிகவும் பாராட்டி "மாணவர்களை அழைத்துச் செல்லுங்கள், பொது நோக்குடன் ஆசிரியப் பணி புரியும் உங்களைப் பாராட்டுகிறேன். இனி அடிக்கடி என்னைச்சந்திக்க வாருங்கள்" என்று பரிவுடன் பேசி அனுப்பினார். அவர் பணியில் இருக்கும்வரை சுப்புரத்தினத்துக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டாள்.
புதுவையில் பிரெஞ்சு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் எப்போதும் போட்டியாகத்தான் இருக்கும்.
பிரெஞ்சு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் புதுவை அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகள் அவர்களுக்குச் சம்பளமும் அதிகம்; தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் குறைவு. எனவே இவர்களுக்குள் எப்போதும் போட்டி பொறாமை அதிகம் இருக்கும். பிரெஞ்சு ஆசிரியர்கள் கட்சிக்கு வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் தலைவர். அவர் புதுச்சேரி தலைமைப் பள்ளியின் முதல்வர்; தமிழாசிரியர்கள் கட்சிக்குச் சுப்புரத்தினம் தலைவர். சமயம் வரும்போது ஒருவரையொருவர் காலை வாரிவிடுவது இவர்களுக்குள் வழக்கம்.
ழுய்ல் ஃபெரி (Jules Fery) என்பவர் 19ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்த பெரிய சமுதாய சீர்திருத்தவாதி. கல்வித்துறை சமயவாதிகளின் கையில் இருந்ததை அவர் கண்டித்தார்.
"பாதிரிமார் கையில் கல்விக்கூடங்கள் இருப்பதால் ஏழை எளியவருக்குக் கல்வி எட்டவில்லை. கல்வியை எல்லாரும் பெறாவிட்டால் ஏழை ஏழையாகவும், பணக்காரன் பணக்காரனாகவுமே இருக்க நேரிடும். கல்விக் கூடங்களைப் பாதிரிமாரிடமிருந்து பிடுங்கி அரசாங்கமே ஏற்று நடத்தினால் குடியரசின் முழுப் பயனை நாட்டு மக்கள் எல்லாரும் நுகர முடியும்" என்று அவர் பிரசாரம் செய்தார். பிரெஞ்சுப் பாதிரிமார்கள் தமக்கிருந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ழுய்ல் ஃபெரியை நாடு கடத்தி விட்டனர். ழுய்ல் ஃபெரி வெளிநாட்டில் இருந்து கொண்டே தம் பிரசாரத்தை ஓய்வின்றிச் செய்து வந்தார்.
பின்னர் நாட்டுத் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்ட போது முய்ல் ஃபெரி கல்வியைச் சமய ஆதிக்கத்திலிருந்து மீட்டு அரசாங்கத்தின் பொறுப்பில் கொண்டு வந்தார். அன்று முதல் பிரெஞ்சு நாடு முய்ல் ஃபெரியைக் கல்விச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றுவது வழக்கம். ழுய்ல் ஃபெரியின் நூற்றாண்டு விழா வந்தது. அவ்விழா பிரெஞ்சு நாடு மட்டுமன்றிப் பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளிலும் கொண்டாடப்பட்டது.
புதுவையிலும் அவ்விழா எல்லாப்பள்ளிகளிலும் கல்வித்துறைத் தலைவர் (சீஃப்) முன்னிலையில் கொண்டாடப்பட்டது. அவ் விழாவின் போது ஆடல், பாடல், நாடகம் முதலிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. முய்ல் ஃபெரியைப் பற்றிச் சுப்புரத்தினம் எழுதிய பாடல் ஒன்றை மாணவர்கள் பாடினர். அப்பாடலைப் பாடத்தொடங்குவதற்கு முன்பே இது மதத் துரோகமான பாட்டு, இதைப் பாடினால் கூடியிருப்போர் உள்ளம் புண்படும் என்று கல்வித்துறைத் தலைவரிடம் கிருஷ்ணசாமி நாயுடுவின் ஆட்கள் கோள் மூட்டினர். ஆனால் தலைவர் அவர்களுடைய பேச்சுக்குச் செவி சாய்க்காமல் தொடர்ந்து நடத்துமாறு கட்டளையிட்டார். மாணவர் கீழ்க்கண்ட வரிகளைப் பாடினர்.
வறியோர்க் கெல்லாம் கல்வியின் வாடை
வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை
நறுக்கத் தொலைந்ததந்தப் பீடை
நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை
இதைப்பாடியதும் நாயுடுவின் ஆட்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். உடனே கல்வித்துறைத்தலைவர் இப்பாடலை அப்படியே பிரெஞ்சில் மொழிபெயர்த்துத் தருமாறு கூறினார். மொழி பெயர்த்துக் கொடுக்கப்பட்டது. அதைப் படித்து விட்டுக் கல்விக் தலைவர் உள்ளம் மகிழ்ந்தார். "இது தானய்யா நாம் இன்று எல்லாருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய செய்தி. சுப்புரத்தினம் பாடியது சரி!" என்று சொன்னார். சுப்புரத்தினத்தையும் பாராட்டினார். அத்தலைவர் புதுவையில் இருக்கும் வரை, சுப்புரத்தினத்தின் செல்வாக்கு, கல்வித் துறையில் கொடிகட்டிப் பறந்தது.
இளமையிலிருந்தே சுப்புரத்தினத்துக்கு அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு என்று ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். கெப்ளே என்பவர் புதுவை ஆளுங்கட்சித் தலைவர். அவரை எதிர்த்து, குட்டியா சபாபதிப்பிள்ளை என்பவர் போட்டியிட்டார். அவர் பெரிய வழக்கறிஞர். திருபுவனையில் அப்போது சுப்புரத்தினம் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்ததால் அவ்வட்டாரத்தில் அவருக்குச் செல்வாக்கு அதிகம். பிள்ளை வெற்றி பெறக் கடுமையாக உழைத்தார் சுப்புரத்தினம். பிள்ளை வெற்றியும் பெற்றார். தேர்தல் முடிந்து ஒரு திங்கள் ஆனதும் கெப்ளேயின் ஆட்கள் பாரதிதாசன் மீது பொய் வழக்குப் போட்டு ஒரு மாதம் மூன்று நாள் சிறையிலே தள்ளிவிட்டார்கள். சிறையிலிருந்து வெளியில் வந்ததும் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது அவருக்கு வயது 29. அவர் மனைவி பெயர் பழனியம்மாள் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் என்பாரின் மகள்.
புதுச்சேரித் தேர்தல் காலங்களில் சுப்புரத்தினம் ஒரு சிங்கம். அவர் எழுதுகோலின் முழக்கத்தைக் கேட்டு அரசியல் நரிகள் ஊளையிட்டு ஓட்டமெடுக்கும். தேர்தல் முடிந்தவுடன் மக்கள் பல நாட்கள் கவிஞரின் தேர்தல் இலக்கியத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருப் பார்கள்.” என்று சர்வோதயத் தலைவரும் காந்தியவாதியுமான எஸ்.ஆர். சுப்பிரமணியம் தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மாசித்திங்களில் வரும் மகவிழா புதுவையில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும். அக்கம் பக்கத்திலுள்ள நூறு சாமிகள் கடலில் மகமுழுக்காடுவதற்குப் புதுவைக் கடற்கரைக்கு வரும். மயிலத்திலிருந்து வரும் முருகப் பெருமானும், செஞ்சியிலிருந்து வரும் அரங்க நாத சாமியும் விழாவை அணிசெய்யும் முக்கியக் கடவுளர்கள்.
பாரதியைப் பார்ப்பதற்கு முன்பே கவிதை எழுதும் ஆற்றல் மிக்கவர் சுப்புரத்தினம். இவர் இளமையில் எழுதிய 'மயிலம் சுப்பிரமணியர் துதியமுது' வண்ண இசைப்பாடல்களால் அமைந்த சிற்றிலக்கியம். இசையிலும் அமைப்பிலும் சந்த நயத்திலும் திருப்புகழுக் கொப்பானவை அதில் உள்ள பாடல்கள்.
ஒருமுறை தேர்தல் நெருங்கும் நேரம், மகவிழா வந்தது. மயிலம் முருகன் புதுவையில் ஊர்வலம் வரும்போது, தெருவெல்லாம் பந்தல் போட்டு அலங்கரிப்பது வழக்கம். அவ்வாண்டு அலங்காரம் சுப்புரத்தினத்தின் தமிழ்வாளின் வீரவீச்சுக்கள் தாம்.
அநியாய ஆட்சியை அழிக்கவா முருகா!
பட்டுத் துணியால் பாழாகும் புதுவையை
நாட்டுத் துணியால் நலம்பெறச் செய்யவா!
- * *
காசியும் போலிசும் கவர்னரும் கையிலென்
றோதித் தேமாற்ற உன்னுவர் அழிக்கவா
மாம்பராய் வந்தபின் மக்களை வெருட்டும்
சோம்பற் குழுவினைத் தொலைக்க வேலாவா
- * *
தேர்தலின் பெயரால் திருடிப் பிழைக்கும்
பேர்களை ஒழிக்கப் பெருமான் வருக!
தலைவராவதற்குச் சனங்களின் தயவையே
எதிர்பார்த் திருப்போர் எழிலுறச் செய்யவா!
மாநிலம் புகழும் மகாத்மா வாழவா
பொதுவுக் குழைக்கும் புனிதர்கள் வாழவா!
அந்த நாளில் புதுவை அரசியல் அமைப்பில் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று இரண்டு வகை வாக்குச் சீட்டுகள் உண்டு. பிரெஞ்சுக்காரர்களும், தங்களைப் பிரெஞ்சுக்காரர் என்று பதிவு செய்து கொண்ட கலப்பினத்தவரும் முதல் வகுப்பு வாக்காளர்கள். பிரெஞ்சு ஆட்சியின் கீழிருந்த இந்தியப் பகுதியில் பிறந்து 21 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் இரண்டாம் வகுப்பு வாக்காளர்கள். இந்த அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்தார் சுப்புரத்தினம்.
பல்லவி
கூவாயோ கருங்குயிலே
யாரும் ஒன்றென்று
(கூவாயோ)
அனுபல்லவி
ஏவலர் இந்தியர்
இரண்டாம் தொகுதியென்றார்
அக்குறை நீங்கிற்றென்றே
இனிதாய் நன்றே
(கூவாயோ)
தொகையறா
ஒரு குடைக்கீழ் நின்ற
வருள் சிலருக்கு நிழல்
சிலருக்கு வெயிலோ?
குவிந்த பொருளோ
விஷமோ சமமாக
அடையாத தெவ்வகையிலோ?
(கூவாயோ)
மேலோர் என்றோர் தொகுதி
மீதிப் பெயர்க்கோர் தொகுதி
மேன்மைக் குடியரசில்
இதுவோகதி?
(கூவாயோ)
மகவிழாவின்போது நடைபெற்ற தேர்தலில் சுப்பரத்தினத்தின் பாடல்கள் எதிர்க்கட்சியின் ஆதரவை மக்கள் மனத்திலிருந்து அழித்த தோடல்லாமல், எதிர்க்கவும் வலிமை தந்தன. அந்தத் தேர்தலில் இருபது ஆண்டுகள் ஆட்சியிலிருந்த கட்சி படுதோல்வியடைந்து ஆட்சிப் பீடத்திலிருந்து இறக்கப்பட்டது.
அரசியல் ஈடுபாடு இருந்தாலும், ஆசிரியப் பணியையும், தமிழ்ப் பணியையும் பாரதிதாசன் மிக்க ஈடுபாட்டுடன் செய்து வந்தார். அவரிடம் பயின்ற மாணவர்கள் பலர் சிறந்த கவிஞர்களாகவும், ஆசிரியர்களாகவும் விளங்கினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் புதுவைச் சிவம், வாணிதாசன், பாவலர் சித்தன், பா. முத்து ஆகியோர்.