உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன்/பாரதியும் தாசனும்

விக்கிமூலம் இலிருந்து

2

பாரதியும் தாசனும்

பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

1962ஆம் ஆண்டு, நான் சென்னையில் கல்லூரி மாணவனாக இருந்தேன். அப்போது பாரதிதாசனை அடிக்கடி சந்திக்கும்பேறும், அவரிடம் கவிதை பயிலும் வாய்ப்பும் எனக்கு ஏற்பட்டன. ஒரு நாள் அவரிடம், பாரதியார் பற்றிக் கூறுங்கள் என்று நான் கேட்டபோது பாரதியார் சந்திப்பைப் பற்றிக் கீழ்க்கண்ட கருத்தைச் சொன்னார்.

பாரதியார் கி.பி. 1908இல் புதுச்சேரி வந்தார். அவர் புதுச்சேரி வந்து ஓரிரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பாரதியாரோடு பழக்கம் ஏற்பட்ட நேரத்தில் நான் இருபது வயதுக்காளை. நான் அரசியற் கழகம், புலவர் கழகம் சண்டைக்கழகம் (மற்களம்) ஆகிய எல்லாவிடத்திலும் இருப்பேன். என் தோற்றமே பார்ப்பதற்கு முரட்டுத்தனமாகத்தான் தெரியும்.

கையில் தங்கக் காப்பும், கழுத்தில் கறுப்புக் கயிறும், மேனி தெரியும் மல் ஜிப்பாவுமாக எப்போதும் 'வஸ்தாது' போல் திரிந்து கொண்டிருப்பேன். என் நடையுடை பாவனைகளில் ஒரு பண்பட்ட நிலை அப்போது ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மற்களத்தில் முறையாகப் பயிற்சி செய்யத் தொடங்கியிருந்ததால், உடற்கட்டும் நன்றாக இருந்தது.

பாரதியாரின் தோற்றமும், வெளிப்படையான போக்கும் என்னை அவர்பால் இழுக்கத் தொடங்கின. அவர் தொடர்பு என் பழக்க வழக்கங்களிலும், சிந்தனையிலும் என்னையறியாமலே சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதைக் காலப்போக்கில் நானும் உணரத் தொடங்கினேன். சுப்புரத்தினமாக இருந்த நான் 'பாரதி தாசனாக மாறத் தொடங்கினேன்.'

1963ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் பொள்ளாச்சி நகரில் பெரிய அளவில் பாரதி விழா நடந்து கொண்டிருந்தது. கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம், கவிஞர் சிற்பி, பாரதி அன்பர்கள் பலர் சேர்ந்து சிறப்பாகக் கொண்டாடிய விழா அது. அவ்விழாவில் திரு. எஸ். இராம கிருஷ்ணன், சிலம்பொலி செல்லப்பன், ருசியத் தமிழ் மாணவி இசபெல்லா ஆகியோர் சொற்பொழிவாற்றினர். பாரதிதாசனும் அவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கப் பட்டிருந்தார்.

அவ்விழாவில் பேசிய பேச்சாளர் ஒருவர் பாரதியை 'அவன்' என்று ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். மேடையில் அமர்ந்திருந்த பாரதிதாசனுக்குச் சுள்ளென்று சினம் பொங்கி விட்டது. 'பாரதியார்' என்று மரியாதையாகக் குறிப்பிடுமாறு மேடையிலிருந்து முழங்கினார் பாரதிதாசன்.

பார்த்தவர்களை மலைக்க வைக்கும்படியான தோற்றம் பாரதிதாசன் தோற்றம். அவர் குனிந்திருந்ததை யாரும் பார்த்திருக்க முடியாது. நின்றாலும், உட்கார்ந்திருந்தாலும் அவருடைய நெஞ்சும் தலையும் நிமிர்ந்தே இருக்கும். ஆனால் பாரதியாரைப் பற்றிப் பேசும்போது மட்டும் அவர் தோற்றத்தில் ஓர் ஒடுக்கமும், பேச்சில் ஓர் அடக்கமும் தோன்றியதை நான் கவனித்திருக்கிறேன். பாரதியைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதை விட அய்யர் என்று கூறுவதில் பாரதிதாசனுக்கு அலாதி விருப்பம்.

பாரதியாருக்கும் பாரதிதாசனுக்கும் ஏற்பட்ட முதல் சந்திப்பு ஒரு சுவையான நிகழ்ச்சி. பாரதிதாசன் இளமையில் வாழ்ந்த வீடு காமாட்சியம்மன் கோயில் தெருவில் இருந்தது. அந்தக் காமாட்சியம்மன் கோயில் தெருவும், மாதா கோயில் தெருவும் சந்திக்கும் முனையிலே வேணுநாயக்கரின் சிலம்பப் பயிற்சிக் கூடம் இருந்தது. பாரதியார் வரலாற்றில் குறிப்பிடப்படும் அம்மாகண்ணு அம்மாவின் மூத்தமகன் தான் வேணுநாயக்கர். சிலம்பக் கூடத்துக்குக் 'கரடிக் கூடம்' என்ற பெயரும் உண்டு. இக்கூடத்திலேயே பாரதிதாசன் பயிற்சி பெற்றார்.

அடுத்த தெருவில் குடியிருந்த பாரதியார் சில நாட்களில் பாரதிதாசன் குடியிருந்த காமாட்சியம்மன் கோயில் தெரு வழியாகச் செல்வதுண்டு. அவருடைய ஆடையும்,தோற்றமும், நடையும் மற்றவரிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுவனவாக இருந்தன. தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு 'சுதேசி' என்ற அளவிலேயே பாரதிதாசன் அவரை அறிந்திருந்தார். அவரைப் பார்க்கும்போ தெல்லாம் 'இவர் ரவிவர்மா படத்தில் காணும் பரமசிவம் போல் இருக்கிறார்' என்று பாரதிதாசன் நினைப்பதுண்டு.

மற்கள ஆசிரியர் வேணுநாயக்கருக்குத் திருமணம். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்த பிறகு விருந்து நடைபெற்றது. வேணு நாயக்கரின் நண்பர்கள் முப்பது பேர் கூடத்தில் உட்கார்ந்து பேசிச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். பின்னர் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வேணுநாயக்கர் பாரதிதாசனைப் பார்த்து, சுப்பு ஏதேனும் பாடு என்று கேட்டுக் கொண்டார்.

'வீரசுதந்திரம் வேண்டிநின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ?' என்ற பாடலையும் தொன்று நிகழ்ந்த தனைத்தும் என்ற பாடலையும் இசையோடு கணிரென்று பாடினார் பாரதிதாசன். அவர் பாடிக்கொண்டிருந்தபோது, அங்கமர்ந்திருந்த பலரும், பின்பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவரையே திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டை நிறுத்தியதும் பாரதிதாசனும் திரும்பிப்பார்த்தார். பின்பக்கத்தில் ரவிவர்மாவின் பரமசிவம் அமர்ந்திருந்தார்.

அப்போது வேணுநாயக்கர், "அவுங்க யாருன்னு தெரியுமா? அவுங்கதானே அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்ரமண்ய பாரதின்னு சொல்றாங்கல்ல" என்று பாரதிதாசனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

உடனே பாரதியார் "பொருளுணர்ந்து நன்றாகப் பாடினீர்கள். தமிழ் வாசிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார்.

கொஞ்சம் என்று அடக்கமாக விடையிறுத்தார் சுப்புரத்தினம்.

பாரதியார் வேணுநாயக்கரைப் பார்த்து, "வேணு ஏன் இவரை நம்ம வீட்டுக்கு அழைத்து வரல?" என்று கேட்டார். இந்நிகழ்ச்சியிலிருந்து பாரதி-பாரதிதாசன் நட்பு தொடர்ந்தது.

பாரதியாருக்குப் புதுவையில் வாய்த்திருந்த நண்பர்கள் வட்டம் பெரிது. அரவிந்தர், வ.வெ.சு.அய்யர், மண்டையம் பூரீனிவாசாச் சாரியார் ஆகிய தேச பக்தர்கள் ஒரு வகை, வ.ரா. முத்தியாலு பேட்டை கிருஷ்ணசாமி செட்டியார், செல்வர் பொன்னு முருகேசம் பிள்ளை குவளைக் கண்ணன், எழுத்தர் சுந்தரேச ஜயர் என்ற நண்பர் கூட்டம் மற்றொரு வகை. முருகேசம் பிள்ளை பாரதியை ஆதரித்த நெருங்கிய நண்பர் முத்தியாலு பேட்டை கிருஷ்ணசாமி செட்டியார் பாரதியாரால் வெல்லச்சு செட்டியார் என்று விருப்பத்தோடு அழைக்கப்பட்டவர். இவரும் எழுத்தர் சுந்தரேச ஐயரும் பாரதியாருக்கு வேண்டும்போதெல்லாம் தட்டாமல் பொருளுதவி செய்தவர்கள். குவளைக் கண்ணன் உடல் உழைப்புக்குத் தயங்காத பாரதி தொண்டர். இந்தப் பெரிய வட்டத்தோடு பாரதிதாசனும் சேர்ந்து கொண்டார்.

ஆங்கில அரசாங்கத்தின் ஒற்றர்களால் பாரதிக்கு அடிக்கடி தொல்லை ஏற்படுவதுண்டு. புதுவை எல்லையோரம் பாரதி வந்தால் அவரை எப்படியாவது கைது செய்து தமிழகத்துக்குள் கொண்டு செல்லவேண்டுமென்று அவர்கள் முயன்றனர். ஒற்றர்களின் வருகையைக் கண்காணித்துப் பாரதியை எச்சரிப்பதும் பாதுகாப்பதும் பாரதிதாசன் முக்கியப் பணி. வெளியூரிலிருந்து புதுவை வந்து மறைந்து வாழ்ந்த தேசபக்தர்களுக்கு வெளிநாட்டுக் கைக்துப்பாக்கி வாங்கிக் கொடுப்பது, பாரதி இட்ட பணிகளை யாருக்கும் தெரியாமல் செய்து முடிப்பது, பாரதிதாசன் முக்கியப் பணிகள். பள்ளி விடுமுறை நாட்களில் பெரும்பாலும் பாரதியோடு அவர் வீட்டுமாடியில்தான் இருப்பார். வேணு நாயக்கரும், சிவா, நாயக்கரும் இவருடைய இணைபிரியாக் கூட்டாளிகள். சிவா நாயக்கர் பாரதிபாடல்களை மிக இனிமையாகப் பாடுவார். எனவே எல்லோரும் அவரைக் 'குயில் சிவா' என்று அழைப்பதுண்டு.

ஒருநாள் பாரதியாரின் வீட்டில் நண்பர்கள் கூட்டத்தோடு பாரதிதாசனும் இருந்தார். பாரதி அமர்ந்து வழக்கமாக எழுதும் சிறிய கணக்குப்பிள்ளை மேசை எதிரில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார் பாரதிதாசன். அதைக் கவனித்த குயில் "சிவா, சுப்புரத்தினமும் அய்யர் மாதிரியே உட்கார்ந்து என்னமோ எழுதறாரப்பா!" என்று கிண்டலாகச சொன்னார்.

இதைச் செவிமடுத்த பாரதியார், "சுப்புரத்தினம் கவி எழுதக் கூடியவன்" என்று கூறினார். உடனே அங்கிருந்த நண்பர்கள் "அப்படியானால் ஒரு கவிதை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம்!" என்றனர். உடனே 'எங்கெங்குக் காணினும் சக்தியடா' என்று பதினாறு வரிப்பாடலை எழுதி முடித்துப் பாடிக் காட்டினார் பாரதிதாசன்.

எங்கெங்குக் காணினும் சக்தியடா, - தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!

***



காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழுநினைப்பில் - அன்னை
தோளசைத்தங்கு நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம்பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வையமுழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீ நினைத்தால் - அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!

பாடலைக் கேட்டு எல்லாரும் வியப்பில் துள்ளினர். பாட்டின் பொருளும் பண்ணும் தம்முடைய கவிதைப் பாணியிலே அமைந்திருந்ததைக் கேட்டு மகிழ்ந்த பாரதியார், அப்பாடலைத் தம் கையாலேயே பெயர்த்து எழுதி, "ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது" என்று ஒரு குறிப்பெழுதிச் சுதேசமித்திரன் நாளிதழுக்கு அனுப்பி வைத்தார்.

பாரதியின் வாழ்க்கையில் புதுவையில் வாழ்ந்த பத்தாண்டுகளும் பொற்காலம் என்று சொல்லாம். அரவிந்தர், வவே.சு அய்யர் ஆகியோரோடு இலக்கிய, ஆன்மீக உரையாடல்களில் நீண்ட நேரத்தைச் செலவிடுவார். செல்வர் பொன்னு முருகேசம் பிள்ளை வீட்டில் உலகியல் பேசி மகிழ்வார். வேணுநாயக்கர்கொட்டடியில் சிலம்பம், வாள் வீச்சு பார்த்து மகிழ்வார். மாலையில் நண்பர்களோடு கடற்கரையில் பொழுதைக் கழிப்பார். சில நாட்களில் வெல்லச்சு செட்டியாரின் குயில் தோப்பில் மெய்மறந்து கற்பனையில் வீற்றிருப்பார். அவருடைய அரிய படைப்புகளான குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு ஆகியவை புதுவையில் இருக்கும்போதுதான் எழுதப்பட்டன.

பாரதியார் சாதிக் கொடுமையை வன்மையாகக் கண்டிப்பார். கனகலிங்கம் என்ற அரிசன இளைஞருக்குத் தாமே புரோகிதராக இருந்து உபநயனம் செய்வித்தார். எல்லாரும் காணும்படி பாரதிதாசனோடு இகலாமியர் கடையில் தேநீர் அருந்துவார். 'பாரதி உள்ளம்' என்ற தம்முடைய பாடலில், பாரதியார் உயர் பண்புகளைப் பாரதிதாசன் படம் பிடித்துக் காட்டுகிறார். சாதி ஒழிப்பதும், தமிழ்வளர்ப்பதுமே அவரது தலையாய கொள்கைகள் என்கிறார்.

சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால்-மற்றப்
பாதி துலங்குவ தில்லை

சாதி களைந்திட்ட ஏரி நல்ல
தண்டமிழ் நீரினை ஏற்கும்
சாதிப் பிணிப்பற்ற தோளே.நல்ல
தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார்என்னிடத்தில்-அந்த
இன்ப உரைகள் என்காதில்
இன்றும் மறைந்திட வில்லை-நான்
இன்றும் இருப்பத னாலே!

பாரதிக்குப் பணத்தட்டுப்பாடு எப்போதும் உண்டு. ஓர் உயர்ந்த கவிஞனை வறுமை ஒன்றும் செய்து விடுவதில்லை. என்றாலும் சில நேரங்களில் உள்ளம் தளர்ந்து பராசக்தி என்னை ஏன் மேன்மேலும் சோதிக்கிறாய்? இன்னும் என்னைச் சோதித்தால் நான் நாத்திகன் ஆகிவிடுவேன்!" என்று பராசக்திக்கே எச்சரிக்கை விடுவதுண்டு.

பாரதியார் ஒரு சமயம், அதிகமான மனவருத்தத்தால் புதுவையை விட்டுவிட்டு, ஆங்கிலேயரின் இந்தியப் பகுதிக்குச் சென்று விடுவது என்ற முடிவோடு, புகைவண்டி நிலையத்துக்குச் சென்று விட்டாராம். யாராலும் அவரைத் தடுக்க முடியாது. செல்லம்மாளும் பாரதியை எதிர்த்துப் பேச முடியாது. பாரதியார் கோபங்கொண்டு எங்கோ போய்விட்டார் என்ற சேதி நண்பர்களிடையே பரவியது. பாரதிதாசன் நேரே புதுச்சேரி புகை வண்டி நிலையம் சென்று அங்குப் பாரதியார் இருப்பதைக் கண்டார். பாரதியார், கண்களில் தீப்பொறி பறக்க, நிலையத்தில் யாருடனும் பேசாமல் உலவிக் கொண்டிருந்தார். சுப்புரத்தினத்தைப் பார்த்ததும் பாரதியாரின் முகம் ஓரளவு மலர்ச்சி அடைந்தது.

பாரதியாரை எப்படியோ சமானதாம் செய்து தள்ளுவண்டியில் ஏற்றி உட்கார வைத்துக் கொண்டு திரும்பினார். இத்தள்ளுவண்டி அந்நாளில் புதுவையில் பிரபலம், மனிதன் தள்ளும் மூன்று சக்கர வண்டி தருமராசா கோயில் வீதியிலிருந்த தன் வீட்டுக்கு வர மறுத்தார் பாரதி. எனவே சுப்புரத்தினம் வீட்டை நோக்கி வண்டி சென்றது.

அப்போது பாரதியாரின் வீட்டு வேலைக்காரி அம்மாக் கண்ணு வண்டியை வழிமறித்து, கையில் கொண்டு வந்த சுண்டல் முதலிய தின்பண்டங்களைப் பாரதியின் கையில் கொடுத்தாள். அம்மாக் கண்ணுவின் உபசாரம் அன்று பூராவும் பட்டினி கிடந்த பாரதிக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது. சுண்டலை வாயில் போட்ட பாரதிதாசன் தேவாமிருதம்' என்றார். உடனே பாரதியாருக்குத் தேவலோக நினைப்பு வந்துவிட்டது. வண்டிக்காரனைப் பார்த்து 'ஓட்டடா ரதத்தை' என்றாராம் பாரதி.

கவிதை எழுதத் தவங்கிடக்க மாட்டார் பாரதியார். கவிதை உள்ளத்திலிருந்து அருவியாகக் கொட்ட வேண்டும். கவிதை எழுதி முடிக்க வேண்டுமே என்பதற்காகப் பொருத்தமில்லாத சொற்களைப் பொறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்க மாட்டார். சொத்தைச் சொற்களை நத்தும் வழக்கம் அவரிடமில்லை. கவிதை நின்று விட்டால் எடுத்து வைத்து விடுவார். பின்னர் அது எப்போது பீறிட்டுச் சுரக்கிறதோ அப்போது மீண்டும் தொடருவார். இது அடுத்த நாளாக இருக்கலாம். அடுத்த திங்களாகக் கூட இருக்கலாம். ஆங்கிலக் கவிஞனான வோர்ட்ஸ் வொர்த் 'Wandering Voice' என்ற சொற்றொடருக்குப் பன்னிரெண்டு ஆண்டுகள் காத்திருந்தாக வரலாறுண்டு.

பாரதியார் எழுதிய புதிய ஆத்திசூடி 'பௌவனம் காத்தல் செய்' என்பதோடு நின்று விட்டது. அதை எடுத்து வைத்துவிட்டு எதிரில் இருந்த பாரதிதாசனிடம் “சுப்பு! மனிதர்கள் வீடு பிடிக்கவில்லை. இயற்கை வீட்டில் உலாவச் செல்லலாம்" என்றார்.

"வாழைக்குளம் தாண்டித் தென்னந்தோப்பும் நீர் ஊற்றும் உண்டு; நிலமும் தூய்மையாக இருக்கும்” என்றார் பாரதிதாசன். இருவரும் புறப்பட்டனர். தெருமுனையை அடைந்தபோது பினாகபாணியின் குழந்தையின் சாவுப்பயணம் எதிரில் வந்தது. பினாக பாணி நண்பர். எதிரில் கண்டு கும்பிடும் போட்டுவிட்டார். எனவே பாப்பம்மாள் சுடுகாட்டுப் பயணம் கட்டாயமாகிவிட்டது.

பாரதியாருக்கு ஓர் இளநீர் வாங்கிக் கொடுத்துவிட்டுப் பாரதிதாசன் துண்டைவிரித்துப் போட்டு ஒரு சிதைந்த மல்லிகைச் செடியின் அருகில் படுத்தார்.

மல்லிகையின் சிற்றரும்பும் பூவும் சிரித்துக் கொண்டிருந்த அழகில் பாரதிதாசன் ஈடுபட்டிருந்தபோது அம்மலர்களை எவனோ ஒருவன் பாப்பம்மாள் கோயில் சிலையின்மீது போடப் பறித்துக் கொண்டு சென்றுவிட்டான். இதைக் கவனித்த பாரதியார், "சுப்புரத்தினம் உனக்கு இளநீர்க் காயில்லை; அதுவுமல்லாமல் நீ பார்த்துச் சுவைத்த மல்லிகைச் செடியின் அரும்புகளையும் பூக்களையும் பறித்துக் கொண்டு போய்விட்டான் அதோ அந்தக் கல்லின்மேல் போட" என்றார். உயிர் ததும்பும் அழகைவிடப் பாப்பம்மா கோயில் சாமி சிறந்ததில்லை என்பது பாரதியார் எண்ணம்.

'யெளவனம் காத்தல் செய்' என்ற அளவில் நின்ற ஆத்தி சூடி தொடர்ந்தது. 'ரசத்திலே தேர்ச்சி கொள்' 'ராஜசம் பயில்' 'ரீதி தவறேல்' 'ருசிபல வென்றுனர்' 'வெளவுதல் நீக்கு' என்று புதிய ஆத்தி சூடியை முடித்தார்.

பாரதிதாசன் ஆனந்த விகடனில் எழுதிய 'பட்டினித் திருநாள்' என்ற கட்டுரை மிகவும் சுவையானது. பாரதியும் செல்லம்மாவும் வறுமையை எவ்வளவு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்கள் என்பதை நகைச்சுவை குன்றாமல் கூறுகிறது அக்கட்டுரை.

பாரதிதாசன், சுப்புரத்தினமாக இருந்த இளமைக் காலத்தில் பக்திப் பாடல்களும், சிறுசிறு தனிப்பாடல்களும், வண்ணம். இலாவணி போன்ற பாடல்களும் எழுதியுள்ளார். என்றாலும் கவிதைத் துறையில் எளிமையும் பக்குவமும் ஏற்பட்டது பாரதியின் தொடர்பிற்குப் பிறகுதான். பாரதி, சுப்புரத்தினத்தை ஒரு இலட்சியக் கவிஞராக உருவாக்கிவிட்டார்.

இளமைக் காலக் கவிதைகள் சற்றுக் கடினமான யாப்பில் அமைந்தவாறு பாரதிதாசன் எழுதியுள்ளார். இடைக் காலப் பிரபந்தங்களின் நடை அவற்றில் பின்பற்றப்பட்டுள்ளது. கருத்துச் சிறப்பைவிடக் கவிதைக் கட்டுமானச் சிறப்புக்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

பாரதியாரின் வீட்டில் இருந்தபோது, அவர் எழுதும் கணக்கப் பிள்ளை மேசையினுள் வைக்கப்பட்டிருந்த கையெழுத்துப் படியொன்றைப் பார்க்கும் வாய்ப்பு பாரதிதாசனுக்கு எதிர்பாராமல் ஏற்பட்டது. அதைப் படித்துப் பார்த்தார். அது பாஞ்சாலி சபதத்தின் கையெழுத்துப்படி அதன் நடை படிக்கப் படிக்கப் பாரதிதாசனைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது.

எளியநடை எளிய சந்தங்கள் படித்தவுடன் படிப்பவர் நெஞ்சில் உட்காரும்படி தெளிவான கருத்துக்கள், தெவிட்டாத கற்பனைச் சுவை. இதற்கு முன் பாரதிதாசன் இது போன்ற பாடலைப் பார்த்ததில்லை. அவர் படித்ததெல்லாம் சிலேடை, யமகம், திரிபு என்ற உதடு ஒட்டாத, பல்லுடைக்கும் பாடல்கள். பாஞ்சாலி சபதப் பாடல்கள் இளநீர் போல் இதமாக இதயத்தில் இறங்கின. பாரதிதாசனுக்கு ஒரு புதிய விழிப்பு: விசாலமான காற்றோட்டமான விடுதியில் நுழைவது போன்ற வியப்பு: சுகம்! பாரதிதாசன் உள்ளத்தில் அவரையும் அறியாதபடி ஒரு கவிதை இரசவாதம் நிகழ்வதை உணர்ந்தார். இதனைப்

'பாடலில் பழமுறை பழநடை யென்னும்
காடுமுழுவதும் கண்டபின் கடைசியாய்ச்
சுப்பிரமணிய பாரதி தோன்தறியென்
பாடற்குப் புதுமுறை புதுநடை காட்டினார்'


என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரதியார் எழுதிய எளிய இனிய கவிதைகளுக்குப் புதுவைப் புலவரிடையே பெரும் எதிர்ப்பு இருந்தது. பாரதிதாசனின் ஆசிரியரான பங்காருபத்தர் பாரதி பாடல்களைக் கடுமையாக விமர்சிக்கும் இயல்புடையவர். ' "சுட்டுக்கு முன் வல்லெழுத்து வந்தால் ஒற்று மிகும் என்ற எளிய இலக்கணம் கூடப் புரியாமல் 'அங்கு போனான்' என்று எழுதுகிறானே பாரதி, இவனையெல்லாம் கவிஞனென்று எவ்வாறு ஒத்துக்கொள்வது?" என்று கேட்பாராம் பங்காருபத்தர். இதைப் பற்றிப் பாரதியிடம் கூறினால் "ஏன் சுப்பு! அங்குப் போனான் என்று ஒற்று போட்டு எழுதினால் கேட்பதற்கு நன்றாகவா இருக்கிறது?" என்று கூறி மழுப்பிடுவாராம்.

"கேட்பதற்கு நன்றாக இருக்கிறதோ இல்லையோ, இலக்கணப் பிழையோடு எழுதுவது தவறுதானே?" என்று பாரதிதாசன் கூறுவாராம். பாரதி அதற்குச் சிரித்துக் கொள்வதோடு சரி. வேறொன்றும் கூறமாட்டாராம்.

1918ஆம் ஆண்டு பாரதியார் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு விட்டார். கடலூர் எல்லையில் கால் வைத்ததுமே தமிழகக் காவல் துறையினர் பாரதியைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். அதன்பின் கடையத்திலும் சென்னையிலும் மூன்று ஆண்டுகள் வாழ்ந்து உயிர் நீத்தார் பாரதியார்.

1946ஆம் ஆண்டு பாரதி விழாக் கவியரங்கம் திருச்சி வானொலி நிலையத்தாரால் நடத்தப்பட்டது. அக்கவியரங்கிற்குப் பாரதிதாசன் தலைமை ஏற்றார். பசுமலை சோம சுந்தர பாரதியும் அக்கவியரங்கில் பங்கு பெற்றார். அப்போது பாரதிதாசன் பாடிய தலைமைக் கவிதை ஒப்புயர்வற்றது. அதில் பாரதியைப் பாராட்டிப் பாரதிதாசன் பாடியதுபோல், இதுவரை வேறு யாரும் பாடியதில்லை.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு.
நீடு துயில்நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ்பாரதியால் தகுதி பெற்றதும்.