உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன்/புரட்சிக் கவி

விக்கிமூலம் இலிருந்து

4

புரட்சிக்கவி

இருட்டறையில் உள்ளதட உலகம், சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே!

கவிஞன் காலம் பெற்றெடுத்த குழந்தை, ஷெல்லி பிரெஞ்சுப் புரட்சி பெற்றெடுத்த குழந்தை என்று மேலைநாட்டு இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜார் மன்னனின் கொடுமையைத் தாங்காத ருசியம் லெனினை ஈன்றது.

"தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்
இலகு பாரதிப் புலவன் தோன்றினான்"

என்று பாரதியின் பிறப்பின் இன்றியமையாமையைப் பாரதிதாசன் பாடியுள்ளார். பாரதி நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தேசியக் கவி. பாரதி தனக்குப்பின் விட்டுச் சென்ற மூடநம்பிக்கை ஒழிப்பு. பெண்விடுதலை, தமிழ்வளர்ச்சி, பொருளாதாரச் சமன்மை ஆகியவற்றைப்பாட ஒரு கவிஞன் தேவைப்பட்டான். அப்பணியை நிறைவேற்றத் தோள் தட்டிக் கிளம்பியவர் பாரதிதாசன். 1937ஆம் ஆண்டு அவர் எழுதிய புரட்சிக்கவி' என்ற குறுங்காப்பியம் வெளியிடப்பட்டது. அக்காப்பியத் தலைவன் ஒரு கவிஞன். அவன் தன் பேச்சாற்றலால் முடியரசைக் கவிழ்த்துக் குடியரசாக்கினான். அக்காப்பியத்தைப் படித்த தமிழ் மக்கள், பாரதிதாசனையும் 'புரட்சிக்கவி' என்ற அடைமொழியோடு அழைக்கத் தலைப்பட்டனர்.

பாரதிதாசனைப் புரட்சிக் கவியாக மாற்றியவை மூன்று, பாரதியின் தொடர்பு, பிரெஞ்சுப் புதுச்சேரி, பெரியார் ஈ.வெ.ரா.வின் தன்மான இயக்கம். பாரதி சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டவர். சுதந்தரம், சமத்துவம் சகோதரத்துவம் மூன்றும் பிரெஞ்சுப் புரட்சி உலகிற்கு வழங்கிய உயர்ந்த கோட்பாடுகள். பெரியாரின் தலையாய கொள்கை மடமை எதிர்ப்பு. இக்கொள்கைகளின் தாக்கங்களால் பாதிக்கப்பட்ட பாரதிதாசன் புரட்சிக் கவியாக மாறினார் என்று அறுதியிட்டுக் கூறலாம்.

பொதுவாகப் புரட்சிக் கவிஞர்கள் அஞ்சாமையும் எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சமும் மிக்கவர்கள். இப்பண்புகள் பாரதிதாசனிடம் நிறைந்திருந்தன.

இருளினை வறுமை நோயை
இடறுவேன்; என்னு டல்மேல்
உருள்கின்ற பகைக் குன்றை நான்
ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நானங்கோர் மறவன் கன்னற்
பொருள்தரும் தமிழே நீயோர்
பூக்காடு; நானோர்.தும்பி!

என்றும்

எவர்பேரால் ஆனாலும் உயர்ந்த தென்னும்
எதன்பேரால் ஆனாலும் ஏய்த்து வாழ்தல்
தவறேதான்! அவ்வாறு வாழ்ப வர்க்குத்
தடியடிதான்! தமிழடிதான்!

என்றும் துணிச்சலோடு பாடியிருக்கிறார்.

பொதுவாகக் கவிஞர்கள் அழகின் இருப்பிடமான வானையும், நிலவையும், கடலையும் கதிரையும் காதலையும் விரும்பிப் பாடும் இயல்பினர். ஆனால் பாரதிதாசனின் விருப்பம் வேறு விதமாக இருந்தது. பாரதிதாசன் ஒரு நாள் கவிதை எழுதுவதற்காக ஏட்டினை எடுத்தார். அப்போது வானம் தன்னை எழுதென்று சொன்னது. ஓடையும், தாமரைப்பூக்களும் காடும் கழனியும் கார்முகிலும் ஆடுமயில் நிகர் பெண்களும் எதிரில் வந்து தங்கள் அழகினைக் கவிதைகளில் வடிக்குமாறு வேண்டி நின்றனர்:

சோலைக் குளிர்தரு தென்றல் வரும்பசுந்
தோகை மயில்வரும் அன்னம் வரும்
மாலைப் பொழுதினில் மேற்றிசையில் விழும்
மாணிக்கப் பரிதி காட்சி தரும்
வேலைச் சுமந்திடும் வீரரின் தோள் உயர்
வெற்பென்று சொல்லி வரைக எனும்.

ஆனால் பாரதிதாசன் அவற்றின் வேண்டுகோளையும் மறுத்தார். அவர் நினைவில் துன்பத்தில் துயிலும் தமிழ்மக்களின்காட்சிமட்டுமே தோன்றியது. அவர்கள் துயரைப்பற்றிப் பாட முடிவு செய்தார்.

இன்னலிலே, தமிழ் நாட்டினிலேயுள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்,
அன்னதோர் காட்சி இரக்கமுண்டாக்கியென்
ஆவியில் வந்து கலந்ததுவே!

என்று பாடுகிறார். பாரதிதாசனைப் புரட்சிக் கவிஞர் என்று சொல்ல வேறு என்ன சான்று வேண்டும்? பாரதிதாசன் இயற்கையை வெறுப்பவர் அல்லர். வானையும், நிலவையும், விண்மீன்களையும் அவர் பாடியிருக்கிறார். அவற்றைப் பாடும்போது கூட அவர் சிந்தனை மக்களின் மீதுதான் படிந்திருந்தது. வானத்தில் விண்மீண்களைப் பார்த்தபோது அவைகொப்புளங்களாக அவர் கண்களுக்குத் தோன்றுகின்றன. வானத்தில் ஏன் கொப்புளங்கள் தோன்றின? பகலில் உழைக்கும் மக்கள் இவ்வுலகில் படும் துன்பங்களைப் பார்த்து உள்ளம் வெந்து போனதால், அந்தவானின் உடம்பெல்லாம் கொப்புளங்கள் தோன்றிவிட்டதாம். சமுதாயம் சார்ந்த கற்பனை நம் நெஞ்சை அள்ளுகிறது.

மண்மீதில் உழைப்பா ரெல்லாம்
வறியராம்; உரிமை கேட்டால்
புண் மீதில் அம்பு பாய்ச்சும்
புலையர் செல்வராம்; இதைத்தன்
கண்மீதில் பகலிலெல்லாம்
கண்டுகண்டந்திக்குப் பின்
விண்மீனாய்க் கொப்பளித்த
விரிவானம் பாராய் தம்பி!

முழு நிலவை வானத்தில் காணும் போதும் இதே போன்ற கற்பனை கவிஞர் நெஞ்சில் தோன்றுகிறது. "நாள்தோறும் கூழுண்ணும் பாட்டாளி பசியோடு கூழைத்தேடும்போது எதிர் பாராமல் பானையார அரிசிச் சோறு இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவானோ, அந்த மகிழ்ச்சியை முழு நிலவே உனைக் காணும் போது நானடைகிறேன்" என்று பாடுகிறார் பாரதிதாசன். ஏழைக்கு வெண்சோறு கிடைப்பது எவ்வளவு அரிய செயல் என்பதைக் கவிஞர் இப்பாட்டின் மூலம் புலப்படுத்துகிறார்:

உனைக்காணும் போதினிலே என்னுள் ளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவதில்லை
நித்திய தரித்திரராய் உழைத்துழைத்துத்
தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிது கூழ் தேடுங்கால், பானை யாரக்
கனத்திருந்த வெண்சோறு காணுமின்பம்
கவின்நிலவே உனைக்காணும் இன்பந்தானோ!

"விடுதலை" என்ற பாடலில் பாரதி கூறும் கருத்து குறிப்பிடத் தக்கது. நாட்டுக்கு விடுதலை கிடைத்தால் எல்லாவித நலன்களும் தாமாக வந்து சேரும் என்று நம்பினார் பாரதி.

ஏழை யென்றும் அடிமை யென்றும்
எவனுமில்லை ஜாதியில்
இழிவுகொண்ட மனிதர் என்பர்
இந்தியாவில் இல்லையே
வாழிகல்வி செல்வம் எய்தி
மனமகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
கசமானமாக வாழ்வமே!

என்று விடுதலைக்குப் பின் பெறக் கூடிய சிறப்புக்களை ஆடியும் பள்ளுப் பாடியும் குறிப்பிட்டார்.

ஷெல்லி என்ற ஆங்கிலக் கவிஞன் கண்ட கனவு பொற்காலம்(Golden Age) என்பது ஷெல்லிதாசனான பாரதியார் விடுதலைக்குப் பின் பெறக்கூடிய பொற்காலத்தை 'அமரநிலை' என்றும் 'கிருதயுகம்' என்றும் குறிப்பிட்டார். விடுதலை கிடைத்தது. ஆனால் பாரதி கண்ட 'அமர நிலை' நமக்கு இன்னும் கிடைக்கவில்லை.

பாரதிதாசன் நம்பிக்கையோ இதற்கு நேர்மாறானது. இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில் 'நல்ல சுதந்தரம்' உண்டாகுமோ?" என்று கேள்வி எழுப்புகிறார்.

இருட்டறையில் உள்ளதடா உலகம்; சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே!
வாயடியும் கையடியும் மறைவ தெந்தாள்?
சுருட்டுகின்றார் தம்கையில் கிடைத்த வற்றைச்
சொத்தெல்லாம் தமதென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே ஆகும்!

என்று முழக்கமிடுகிறார் பாரதிதாசன்.நாட்டு விடுதலைக்கு முன் சமுதாய விடுதலை தேவை என்பது பாரதிதாசன் கருத்து. சமுதாய விடுதலை ஏற்படாமல் நாம் பெறும் விடுதலை நமக்குக் கெடுதலை தான் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். எனவே அவரது பாடல்கள் சமுதாய விடுதலை பற்றிய சங்க நாதமாக முழங்குகின்றன.

பேதம் வளர்க்கப் பெரும் பெரும் புராணங்கள்!
சாதிச் சண்டை வளர்க்கத் தக்க இதிகாசங்கள்
கட்டிச் சமூகத்தின் கண்ணவித்துத் தாமுண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்:

என்று சுதந்திரத்துக்கு எதிரான சூழ்நிலையைச் சுட்டிக் காட்டினார். சிந்தனா சக்தி சிறிதுமில்லாத, தம்தோள் உழைப்பில் நம்பிக்கை யில்லாத, பகுத்தறிவற்ற, பாமரத் தன்மை நிரம்பிய மக்களின் எதிர்காலம் பற்றி எச்சரிக்கை செய்தார்.

பெரியார் ஈ.வெ.இராமசாமி ருசிய நாடு சென்று திரும்பிய பிறகு பொதுவுடைமைக் கொள்கை பற்றிப் பிரசாரம் செய்யத் தொடங்கினார். உடனே அவரைப் பின்பற்றிய பாரதிதாசனுக்கும் அக்கொள்கையின் பால் பற்றும் ஈடுபாடும் ஏற்பட்டது. அக் கருத்துக்களைத் தமது பாடல் மூலம் பாரதிதாசன் பரப்பத் தொடங்கினார்.

'எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான
இடம்நோக்கி நடக்கின்ற திந்த வையம்'

என்று கூறித் தமிழ் மக்களின் கவனத்தைப் பொதுவுடைமை நாடுகளின் பக்கம் திருப்பினார்.

நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்
நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு
நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக கல்லின்
நெடுங்குன்றில் பிலம்சேரப், பாம்புக் கூட்டம்
போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்
புதுக்கியவர் யார்? அழகு நகருண்டாக்கி!

சிற்றுாரும், வரப்பெடுத்த வயலும், ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப்படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்விளைக்கும்
நிறையுழைப்புத்தோள்களெல்லாம்.எவரின்தோள்கள்?
கற்பிளந்து மலைபிளந்து கனிகள் வெட்டிக்
கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?
பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்
போயெடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?

என்று மக்கள் உள்ளத்தில் வரிசையாகக் கேள்விக் கணைகளை எழுப்புகிறார். அவ்வாறு தமது பச்சை ரத்தத்தைப் பரிமாறி இவ்வுலகை உருவாக்கிய பாட்டாளி மக்கள் எலியாகவும் முயலாகவும் வாழ ஏமாந்த காலத்தில் ஏற்றம் பெற்றவர்கள் புலிவேடம் போடும் கொடிய நிலையைப் பாட்டில் படம் பிடித்துக் காட்டுகிறார். உலகம் என்ற பழைய முதலாளியினைப் பகுத்தறிவு மன்றத்தில் நிற்க வைத்து,

பொத்தல்இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல் நிறைந்த தொட்டியைப் போல் ஆனார் செல்வர்
புதுக்கணக்குப் போட்டுவிடு, பொருளை எல்லாம்
பொதுவாக எல்லார்க்கும் குத்தகை செய்!

என்று கட்டளை இடுகிறார்.

ஓடப்பராயிருக்கும் ஏழை யப்பர்
உதையப்பராகிவிட்டால் ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார்,உணரப்பா நீ!

என்று எச்சரிக்கையும் விடுக்கிறார். தம்முடைய புரட்சிக் கருத்துக்களைத் தாலாட்டுப் பருவத்திலேயே துவங்குகிறார்.

அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளைநோய் போல் மதத்தைக் கூட்டியழும்
வைதீகத்தைப்
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல்
வேரோடு பேர்க்க வந்த வீரா இளவீரா!

என்று ஆண் குழந்தைகட்கும்,

மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி

என்று பெண் குழந்தைகட்கும் தாலாட்டுப் பாடுகிறார்.

சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்;பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகு செய்வோம்

என்று மக்களை அறைகூவி அழைக்கிறார். பொதுவுடைமை நாடுகளில் உண்டாக்கப்பட்ட 'பொதுவில்லம்' (Commune) போல நாட்டு மக்களிடை அமைக்கும் முயற்சியைத் தாம் எழுதியுள்ள 'காதலா? கடமையா?' என்றநூலின் இறுதியில் வெளிப்படுத்துகிறார் பாரதிதாசன்.

மன்னராட்சியை ஒழித்து மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த மகிணனிடம் அவன் தந்தை சில வினாக்களை எழுப்புகிறார். அதற்கு மகனும் ஏற்ற விடையிறுக்கிறான்.

உனையொன்று கேட்பேன் உரையடா என்று
முதிய தந்தை மொழியலானர்.
ஏரி தோண்ட இல்லையே என்றார்
இல்லை என்ப திராதென்றான் மகன்
திருக்கிளர் நாட்டின் செல்வர் கட்கும்
இருக்கக் குடிசை இல்லை என்றார்
இல்லை என்றசொல் இராதினி என்றான்
கடல்நிகர் நாட்டின் கணக்கிலா மக்கள்
உடல்நல மில்லா தொழிந்தனர் என்றார்
இல்லை என்பதே இராதினி என்றான்
எப்படி அரசியல் என்றார் கிழவர்
ஒப்பிட எவர்க்கும் ஒருவீடு ஒருநிலம்
ஒரு தொழில் ஓர் ஏர்,உழவு மாடுகள்
விரைவிற் சென்றால் தருவார் என்றான்.

'கடற் மேற்குமிழிகள்' என்ற காப்பியத்தில் முடியாட்சி ஒழிக்கப்பட்டுக் குடியாட்சி மலர்ந்தது. குடியாட்சியில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டுமல்லவா? குடியாட்சித் தலைவனின் ஆணைப்படி முரசு அறையப்படுகிறது ஊரெல்லாம்.

யானைமேல் வள்ளுவன்
இயம்புவான் முரசறைந்து;
“பூனைக்கண் போலும் பொரிக்கறிக்காக
ஆளுக் கிரண்டு கத்தரிக்காய் அடைக
செங்கை இரண்டளவு சீரகச் சம்பா
அடைக அங்கங்கு மக்கள் அனைவரும்

பொன்னிறப் பருப்பும் புத்துருக்கு நெய்யும்
ஒருகையளவு பெறுக ஒவ்வொருவரும்.
பாகற் புளிக்குழம்பும் பழமிளகின்சாறும்
ஆகத் தக்கன அடைக எவரும்!
ஆழாக்குத் தயிர், அடைக்காய் ஒவ்வொரு
வாழைஇலையிவை வழங்குவார் தெருத்தொறும்.
விருந்தே நாளை விடியலில்; அனைவரும்
அருந்துக குடியாட்சி அமைக்கும் நினைவிலே!"

***

இதுகேட்டுத் தெருத்தோறும் பொதுவில்லம்
எதுவெனக் கேட்டே ஏகினர்
அதுவதுபெற்றே அடைந்தனர் வீட்டையே.

கவிஞனால் கனவு காணாமல் இருக்க முடியாது. பாரதிதாசன் கண்ட கனவுகளுக்கு அளவில்லை. அக்கனவுகளில் சில உடனே நடந்தேறும் சில காலம் கனிந்தபின் நடந்தேறும் சில நடந்தேறாமல் நின்றுவிடுவதும் உண்டு. என்றாலும் கவிஞன் கனவுகள் சுவையானவை!