உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் பரம்பரை/001

விக்கிமூலம் இலிருந்து

பாரதிதாசன் பரம்பரை

திரு. மு. அண்ணாமலை கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர், பாரதிதாசன் பரம்பரையினர் இவர் என்பதற்கு ‘காவிரி’ என்ற இந்தப் பாடல் சிறந்த எடுத்துக் காட்டாகும்.

—ஆசிரியர்

காவிரி


கடல்போலக் குமுறி திசைகொட்டிக்
காவிரி நடப்பதனைக் காண்மின்!
கடகடவென் றோலமிடும் நடையைக்
காண்டோறும் காண்டோறும் அணிசால்
மடவள்ள நங்கையரைக் கூவி
மங்கையெனக் காவிரியைச் சொன்னால்
நடையழகு மிகவுடைய அன்னார்
நகையாரோ என்றெனக்குத் தோன்றும்!

நடப்பினில் அமைதியிலாக் குறையால்
நங்கையிலை எனக்கூறல் முறையோ?
இடம்விட் டிடம்பெயர்ந்து மங்கை
இனியதன் காதலனைக் காணத்
திடங்கொண் டோடுகின்ற செயலில்
திகழ்கின்ற காதலுளத் துடிப்பில்
அடக்கமெங் கிருத்தற்கு முடியும்?
ஆகாதே என்றெனக்குத் தோன்றும்!


ஆனாலும் காவிரிப் பெண்ணே!
ஆண்டுபல எய்தியும் இன்னே
தேனார்ந்த செந்தமிழைப் போலே,
திகழிளம் பெண்ணானாய்; என்னே!
வானார்ந்த காதல்செய்யும் பெண்போல்
வாழ்கின்றாய் வீறுகொண் டென்னில்
கானாளும் முதுமையுனை எய்தரக்
கருத்தினை விளக்காயென் கண்ணே!

வண்ணக் கடலுன்னை ஏற்று
வாழ்தற்கு வேண்டியோ என்றும்
பண்டைத் தமிழ்த்தேனைப் போலே
பச்சையிளம் பெண்ணானாய்? இன்றேல்
தொண்டினைக் கருதியோ என்றும்
தொலையாத இளமையினைக் கொண்டாய்?
விண்டிடுக என்றுமனம் கேட்கும்
விழைவினை என்னென்று சொல்வேன்!

விண்தந்த மழையினை வாங்கி
விழைவோடு தமிழ்நாட்டிற் சென்று
பண்பட்ட நிலமாகச் செய்வாய்
பயிராக்கி உயிர்காக்கும் தாயே;
பெண்மக்கள் தாய்க்குலம் அன்றோ?
பெருவாழ்வும் அவர்களால் அன்றோ?
கண்டொத்த காவிரித் தாயைக்
கருத்தொடு வாழ்த்துவம் வாரீர்!

                                                        மு. அண்ணாமலை
                                                                              இதழ் : பொன்னி,
                                                                              பிப்ரவரி 1947.


"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதிதாசன்_பரம்பரை/001&oldid=1877212" இலிருந்து மீள்விக்கப்பட்டது