பாரதிதாசன் பரம்பரை/002
பின்வரும் பாடலைப் பாடிய இளைஞர் நாரா. நாச்சியப்பன் இராமநாதபுரம் மாவட்டம் ஆத்தங்குடியைச் சேர்ந்தவர். இப்பொழுது திருச்சி தேசீயக் கல்லூரியில் படித்து வருகிறார். கவியரசர் பாரதிதாசன் பரம்பரையினர் இவர் என்பதற்கு ‘மழை’ நல்ல சான்று.
—ஆசிரியர்
மழை
ஒளிர்வெயில் மறைந்தி ருந்த
ஒருபோதிற் காட்டுப் பக்கம்
குளிர்தரும் காற்று வந்து
குப்பென்று வீசி நிற்க
விழுந்தது மழையின் தூற்றல்
விண்ணெலாம் ஆர வாரம்
எழுந்தது! மேகம் மின்னி
இடித்தது! சிங்கம் என்ன!
வையத்திற் கழுத மாக
வந்திடும் மழையைக் கண்டு,
செய்யதம் உள்ளம் ஆரச்
செடிகளும் கொடிகள் மற்றும்
வெய்யவன் கொடுமை மாற்ற
விளங்கிடும் மரங்கள் தாமும்
கைஎனத் தளிர்கள் நீட்டிக்
களித்திடும் சீர்த்தி என்னே!
வயற்புறம் உழவர் வந்து
வானத்தைப் பார்த்து நின்றார்.
செயற்கரும் பணியே யாய
செங்கெலை விளைக்கும் ஆற்றல்
புயங்களில் உள்ள தாலே
பூரித்து நின்றார், பின்னர்
வயலினை உழச்சென் றார்கள்
வாழிய உழவர்! செந்நெல்!
மழைசொட்ட நனைந்து போன
மதிகெட்ட ஓர்கு ரங்கு
குளத்துநீர் மொண்டு யாரோ
கொட்டினார் எனநி னைத்தே
உளங்கொண்ட சினத்தை எல்லாம்
உணர்த்திட நீரை மொண்டு
மளமளவென் றிறைத்த காட்சி
மதிக்கொரு நகைவி ருந்தாம்!
வானைச்சார் மேகம் எல்லாம்
வலிமிகும் யானைக் கூட்டம்!
யானைகள் ஒன்றை யொன்று
அழித்தன மோதி மோதி!
தேனைப்போல் இனிய சொல்லாய்!
திகழ்ந்தன தந்த மாசு
மீனைப்போல் ஒளிரும் உன்கண்
கவர்ந்திடும் மின்னல் கண்டாய்.
விழுந்திடும் மழையி னாலே
வீதியில் ஓடும் நீரில்
எழுந்திடும் கொப்பு ளங்கள்
இன்முத்துச் சிப்பி ஒக்கும்!
அழிந்திடும் அவைகள் பின்னர்
அவ்விடம் வேறு தோன்றக்
குழந்தைகள் வியந்து பார்த்துக்
கொட்டும்அம் மழையில் நிற்கும்!
விலையிலா நெல்வி ளைத்தே
விளையாடச் சிறுவர்க் கெல்லாம்
அலைநிலாம் ஆறொன் றாக்கி
அழகிய வீதி சேர்த்தே
உலகெலாந் தழையச் செய்தும்
உணர்ச்சியோ டெழுச்சி தந்தும்
அலகிலாப் பணிகள் ஆக்கி
அளித்திடும் மழைக்கெம் வாழ்த்தே!
—நாரா. நாச்சியப்பன்
இதழ் பொன்னி
1947—மார்ச்