பாரதிதாசன் பரம்பரை/003
“சொல்லடா” என்ற பாடல் இளைஞர் ராஜகோபாலன் இயற்றியது. ராஜகோபாலன் சிக்கல் பழையனூரைச் சேர்ந்தவர். இப்பொழுது “சினிமா வசனம்” எழுதுவதில் முனைந்துள்ளார். இவர் புனைபெயர் “சுரதா” “சுப்புரத்தின தாசன்” என்று அப்பெயர் விரியும், பெயருக்கேற்ற உயர்வு இவர் பாடல்களில் உண்டு.
—ஆசிரியர்
சொல்லடா!
கோங்கம் மலர்பூத்த—பசுங்
குன்றம் முழுநிலவை
வாங்கிப் புசிக்குதுபார்—குளிர்
வண்ணப் பனிச்சிரிப்பே!
தீங்கனிச் செந்தமிழ்தான்—எங்கள்
சிறப்பு விளக்கமென்றே
மாங்கனி வாய்திறந்து—நான்
மகிழ்ந்திடச் சொல்லாயோ!
“இச்சகத் தார்க்குநாங்கள்—எதிலும்
இளைத்தவ ரல்லகாண்!
அச்சம் இடித்துவிட்டோம்—நாங்கள்
ஆண்மை வரிப்புலிகள்!
உச்சி இமயத்திலே—புகழ்
ஓங்கும் மறக் குலத்தின்
மச்சக் கொடிபறக்கும்”—என்று
“மாமல்லா!” நீசொல்லடா!
“வானை அளந்திடுவோம்—புது
வையம் நிறுத்திடுவோம்!
தேனைநிகர் தமிழ்க்குத்—துளி
தீங்கு விளைப்போர் பெரும்
ஆனைகள் போல்வரினும்—நாங்கள்
ஆயிரம் சிங்கங்கள்தாம்”—எனச்
சேனை முரசொலித்து—இதைச்
செப்படா தோள்உயர்த்தி!
—சுரதா
இதழ் பொன்னி,
1947 ஏப்ரல்