உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் பரம்பரை/005

விக்கிமூலம் இலிருந்து

இளைஞர் ராம. நாக. முத்தையா தன்மான இயக்கத்தைச் சார்ந்தவர். காரைக்குடி அருகிலுள்ள சண்முகநாதபுரம் அவர் ஊர். “தளபதி” என்று தம்மை அழைத்துக் கொள்ள விரும்புவர். “எத்தனை தடைகள்” என்ற பாடல் அவர் இயற்றியது!

—ஆசிரியர்

எத்தனை தடைகள்!


என்னுளத்து விருப்பம்போல் என்னை யன்னோன்
ஏற்றிடவும் இசைவானோ? இல்லை தானோ?
என்செய்வேன்? எப்படியான் அன்னோன் உள்ளத்
திசைவுதனைப் பெற்றிடுவேன்? காதல் வாழ்வில்
என்னிச்சை, ஒருமுடவன் கொம்புத் தேனை
எய்தொண்ணா நிலைபோல இருந்து போமோ?
நின்றுவெறும் விழலுக்கு நீரி றைத்த
நிலையாகப் போய்விடுமோ, பயனே யின்றி?

அப்படியே அவர்மணக்க ஒப்பினாலும்
அவர்பெற்றோர் இசைவாரோ? இசைந்த பின், என்
அப்பாவும் அம்மாவும் ஒப்பு வாரோ?
யான்செய்யும் பிடிவாதம் அவரை யெல்லாம்
அப்படியே மனமிசைய வைத்து விட்டால்
அடுத்துள்ள உறவின்முறை யார்க ளெல்லாம்
ஒப்பிமணம் காணவரு வாரோ? இல்லை
ஒதுக்குவாரோ சமூகம்விட்(டு) அவருன் ஒப்பின்


புரோகிதர்கள் பொருத்தமில்லை என்று ரைத்தால்
போங்கதியென்? வாழ்வென்னாம்? இதை நினைக்க
உரோமமெலாம் கூச்செரியும்! உள்ளம் வாடும்?
உடல்கொதிக்கும் காய்ச்சலிலே உயிர்வா தைப்பட்(டு)

இராதபடி ஓடவழி பார்க்கும்! என்றன்
இருவிழியும் நீர்சொரியும்! ஐயர் சொல்லும்
அரோகர வெனுமொழியும் நெஞ்சில் வந்து
ஆயிரம்வே லாய்ச்சொருகும் அல்லல் வாழ்வே!

                                                —ராம. நாக. முத்தையா

                                                                               இதழ்: பொன்னி
                                                                               1947—ஜுன்


"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதிதாசன்_பரம்பரை/005&oldid=1877216" இலிருந்து மீள்விக்கப்பட்டது