பாரதிதாசன் பரம்பரை/041
தோழர் மா. குமாரசாமி விழுப்புரத்தைச் சேர்ந்தவர். தீய புயலையும், ‘திருந்தி வாழ்’ என்று வாழ்த்தும் தமிழ்ப் பண்பை இப்பாடல் மூலம் அவரிடம் காண்கின்றோம்.
—ஆசிரியர்
புயல்
பார்க்கின்ற வீதி மாந்தர்
பார்வையைப் புழுதி மண்ணால்
போர்க்கின்றாய், உயர்ம ரங்கள்
பொடிபட முறித்து வீழ்த்தி
ஆர்க்கின்றாய்; வீட்டுக் கூரை
அதிரச்செய் தவற்றை மண்ணில்
சேர்க்கின்ற புயலே உன்றன்
சேட்டையை என்ன சொல்வேன்!
திண்ணிட்ட மணல்மேட் டைநீ
திருத்தியோர் குழியாய்ச் செய்வாய்
மண்ணிப்போர் குழியை மேடாய்
மாற்றினும் மாற்று வாய்;நின்;
கண்பட்ட பொருள்க ளெல்லாம்
காற்றிலே பறக்கச் செய்வாய்!
பண்பட்ட இயல்ப தொன்றும்
படைத்திலை போலும் நீதான்!
வன்கண்மை கொண்டு நீஇவ்
வையத்தில் செய்யும் மாற்றம்
மின்கண்ணால் சினந்து நோக்கும்
மேல்வானம் கருமு கில்கள்
உன்செய்கை கண்டு நொந்து
உறுமும்;பின் கடலும் உன்னைத்
தன்கைகள் விரித்து நீட்டித்
தகைவிலாய் “போபோ” என்னும்!
வல்லூறாய் அமைந்தாய் போலும்
வையத்து அமைதிக் கேநீ!
கல்லாத கயவர் போலக்
கருத்தின்றிச் செயல்கள் செய்வாய்;
எல்லோரும் உன்னைக் காய்வர்;
ஏனோதான் உனக்கிப் புன்மை?
பொல்லாத செயல்மேற் கொண்டாய்
புயலேநீ திருந்தி வாழி!
—மா. குமாரசாமி
இதழ் : பொன்னி, 10-6-1949
மலர்—3
இதழ்—9