உள்ளடக்கத்துக்குச் செல்

பாரதிதாசன் பரம்பரை/042

விக்கிமூலம் இலிருந்து

தோழர் ப. முத்துச்சாமி பாரதிதாசன் பரம்பரையினர், பாரதிதாசன் மருகரான வித்துவான் கண்ணப்பரிடம் தமிழ் கற்ற சிறப்புடையவர். செவந்தி பாளையம் புதூர் அவர்தம் சொந்த ஊர்.

—ஆசிரியர்

கலை மடந்தை


நெஞ்சத்தில் குளிர்வைப்பாள்; இருட்டொ ழிக்கும்
நிலவாகிப் பாய்ந்திடுவாள்; யாழ்ந ரம்பில்
சஞ்சரிக்கும் இசையாவாள்; எழுத்தி டையே
தாரகையாய் ஒளிவிடுவாள்; புதுமைத் தேவி
கஞ்சமலர் முகமலர்த்தி ஆடும் பெண்டிர்
கண்வழியே நெளிந்திடுவாள்; எண்ணம் செய்யும்
விஞ்சையதாம் கற்பனைவில் மூழ்கி, மூழ்கி
விளையாடும் கலைமடந்தை அவள்தான் கண்டீர்!

ஓவியத்தில் உயிர்வரியாய் மின்ன லிட்டே
உளிமுனையில் சதிராடிச் சிற்பம் செய்வாள்.
ஆவியினில் அணு அணுவாய் இன்பம் ஊற்றும்
அதிசயத்துக் காதலாகிச் சிரித்து நிற்பாள்
பூவினிலே கொழித்திருக்கும் மணத்தைப் போலப்
புத்திளமை கலையாத புன்ன கையாய்த்
தாவிடுவாள் பெண்உதட்டில், அறிவ ரங்கின்
தமிழ்க்குரலாம் கலைமடந்தை அவள்தான் கண்டீர்!


கள்ளத்தால் வாழாதார்; மெய்யு ழைப்பைக்
காட்டுகின்ற ஏர்மழவர் வெற்றி மூச்சாம்
பள்ளத்தில் கிடக்குமொரு சமுதா யத்தின்
பசியறுக்கும் உணர்வன்னை அவள்தான் கண்டீர்!
உள்ளத்துப் படுதாவில் எண்ணம் சேர்த்தே
ஒளிக்கவிகை தீட்டிடுவாள் நச்சுப் பான்மை
உள்ளத்தால் சாகாதாள்; வீர மாகி
ஒளிதீட்டும் கலைமடந்தை அவள்தான் கண்டீர்!

                                                                —ப. முத்துச்சாமி
                                                                         இதழ் : பொன்னி, 25-6-1949
                                                                         மலர்—3
                                                                         இதழ்—10


"https://ta.wikisource.org/w/index.php?title=பாரதிதாசன்_பரம்பரை/042&oldid=1877254" இலிருந்து மீள்விக்கப்பட்டது