பிடி சாம்பல்/ஒளியூரில்
ஒளியூரில்
‘ரதிமதன்’ நாடகம் நடத்த வேண்டுமானால், ராமப்பிரசாதனும், வாசமல்லிகாவும் அப்படியே அரங்கம் ஏறி நின்றால் போதும்; தத்ரூபமாக இருக்கும். “எப்படித்தான் கிடைத்ததோ அந்த எழில், இருவருக்கும்! எவ்வளவு பொருத்தமாக அமைந்திருக்கிறது அந்த ஜோடி” என்றான் சத்ரு சங்காரன்.
“அமைந்திருக்கிறது என்று கூறாதே, அமைய இருக்கிறது என்று சொல்” என்று திருத்தினான் காவியபூபதி.
“தடை என்ன இருக்கிறது. அவர்கள் தம்பதிகளாவதில்? ராமப்பிரசாதன் தகப்பனார் ரங்கராஜ பண்டிதர் தன் மகன், அழகிற் சிறந்தவளை அடைவதற்கான முயற்சியில் ஈடுபட்டபோதே ஆசீர்வதித்தாரே—அழகான மங்கை என்பதற்காக மட்டுமல்ல, ஐஸ்வரியமும் ஏராளமாக இருக்கிறது என்ற காரணத்தால். வாசமல்லிகாவின் தகப்பனாருக்கு வாணிபத்திலே ஏராளமாக இலாபம் குவிகிறது. பல அரசாங்கங்களுக்குப் பண்டங்கள் வாங்கித் தரும் பொறுப்பும் கூட அவரிடம் தரப்பட்டு இருக்கிறது. மண்டலாதிபதிகள், தம்முடன் சரிசமமாக அல்லவா நடத்தி வருகிறார்கள் பாஞ்சசன்ய பூபதியாரை! அவ்வளவு நல்ல செல்வாக்கு அவருக்கு” என்று விளக்கமளித்தான், சத்ரு சங்காரன்.
அந்த இருவர் மட்டுமல்ல, மாளிகை பலவற்றிலேயும் நிகழ இருக்கும் இந்த நேர்த்தியான திருமணத்தைப் பற்றிய பேச்சாகவே இருந்தது.காதல் கைகூடுகிறது என்ற நிலை ஏற்படும்போது, அலாதியாகப் பிறந்திடும் பேரழகுடன் வாசமல்லிகா விளங்கினாள். எந்த அரசரும் அவளை அதுவரையில் சிறை எடுத்துச் செல்லாததற்குக் காரணம், அவள் அப்படிப்பட்ட அழகி அல்ல என்பதல்ல. அந்தக் காலம், ருக்மணியைத் தூக்கிக் கொண்டோடிய கிருஷ்ணன் காலமல்ல; அந்த இடமும் உருமாறிக் கூடிடும் வித்தை அறிந்தவர் வாழும் விசித்திர உலகமுமல்ல.
வாசமல்லிகாவின் அழகு மணம், ராமப்பிரசாதனைத் கவருவதற்கு முன்பே, ரங்கராஜ பண்டிதரின் பூபதியாரிடம் இலயித்திருந்தது. பண்டிதருக்குப் போதுமான ‘தொழில்’ கிடைக்காத காலம் அது. அரச அவைகள் இருந்தன. ஆன்றோர் கூடிடும் அரங்குகளும் இருந்தன. மக்கள் மன்றங்களும் இருந்தன. எனினும், அங்கெல்லாம் முன்பு போலப் பண்டிதர்களுக்கு கெம்பீரக் குரலெழுப்பி, பகவானின் பல்வேறு திருவிளையாடல்களைக் குறித்துப் பாடியும் பேசியும், பக்திரசம் ஊட்டி, பரிசும் பவிஷும் பெறுவதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை. பூஜாமாடங்களிலே, எப்போதும்போல முரளிதரன் இருந்தான்; கோதண்டபாணி கோயிலில் ஆறுகால பூஜை, எப்போதும்போல நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தது. துளசி மாடங்களைச் சுற்றிவந்து தத்தம் நாயகர்கள், குறைவற்ற செல்வத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ அருள் புரியும் என்று வேண்டிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் எல்லாவற்றிலும் தரக்குறைவோ, ரசக் குறைவோ இருப்பதுபோலக் காணப்பட்டது. ஆலயமணி ஓசையிலேகூடக் கெம்பீரம் குறைந்து சோகம் ஒலித்தது.
“பத்துநாள் போகட்டும்; பிறகுதான் நிச்சயமாக எதையும் சொல்லமுடியும். இப்போதைக்குப் பிராணபயம் உடனடியாக இல்லை. நாடியிலே கோளாறு இல்லை. ஆனால் நாளை மறுநாள் என்ன ஆகிறதென்று எப்படிக் கூறமுடியும்? எதற்கும் ஒரு பத்து நாள் கழியட்டும்!” என்று மருத்துவர் கூறுவது கேட்ட இல்லத்தார், நோயாளியை எந்த நோக்குடன் பார்ப்பார்களோ, அந்தப் பார்வையிலேயே, ஆலயப் பூஜாரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஸ்வாமிகளே! எப்படி க்ஷேம இலாபங்கள்?”
“இருக்கிறேன், தங்கள் யோக க்ஷேமம் எப்படியோ?”
“எல்லாம் அவ்விடம் உள்ளது போலத்தான்.”
“பகவத் கடாட்சம் எப்படியோ, பார்ப்போம்” இவ்வளவுதான் அவர்களிடையே பேச்சு—அதுவும் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, வறட்சி நிறைந்த குரலில், மிரட்சி பொங்கிடும் கண்ணினராய்.
பொன்னொளி பரப்பிக் கொண்டிருந்த காலம் அது—எனவே புரட்டர்களும், புல்லர்களும் மனம் புழுங்கிப் போயினர். புனித மார்க்கம், புராதன மார்க்கம் என்று பல காலமாகப் பக்திபூர்வமாக எந்த மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்களோ, வந்தனை வழிபாடுகளை அன்புடனும், அக்கரையுடனும் செய்து வந்தனரோ, அவர்களே ஏதோ வேண்டா வெறுப்பாக ஈடுபாடு கொண்டிருந்த காலம்.
“மன்னா!” என்று மகரிஷிக் கோலத்திலிருப்பவன் அழைத்தவுடன் அடியற்ற நெடும்பனையெனக் கீழே வீழ்ந்து, அடிபணியும் மன்னர்களின் மனப்போக்கு மாறிவிட்டது; ‘எந்த ஆசிரமத்தைச் சேர்ந்தவர்? என்ன கோரிவந்திருக்கிறீர்? இதற்கு முன்பு எந்த மண்டலத்தில் தங்கியிருந்தீர்?’ என்று ‘விசாரணை’ நடத்திய காலம்! இந்நிலையில்; புராண இதிகாசங்களைக் கூறிக்கொண்டு, வாழ்க்கையில் மேம்பாடு பெற, எப்படி முடியும் ரங்கராஜ பண்டிதரால்! நெஞ்சு நெக்குருகக் கேட்ட காலம், கசிந்து கண்ணீர் மல்கிய காலம், கைகூப்பித் தொழுத நாட்கள், பக்திப் பரவசத்தால் மெய் மறந்துபோய் கைத்தாளம் கொட்டி ஆடிய காலம்—இவை போயேவிட்டன—கதை என்றுகூடக் கூறத் தொடங்கி விட்டனர் மக்கள்.
ஆண்டவனுடைய லீலா விநோதங்களை விஸ்தாரமாக எடுத்துச் சொல்லும்போது, சிலர், சிரிப்பதை அடக்கிக் கொள்கிறார்கள்; வேறு சிலர் சிரிக்கவே செய்கிறார்கள். சிவலீலை, விஷ்ணு மகாத்மீயம், கருட புராணம், அனுமத் பிரபாவம் ஆகியவை பற்றிக் கூறும்போது, முன்பெல்லாம், வெற்றிக் கொடி பிடித்து வீரர் முன்செல்ல, வெண்சாமரம் வீசிடும் வேல்விழியார் உடன் வர, கோலாகலமாகப் பவனி வரும் ‘ராஜாதி ராஜன்’ போல, ‘சபை’ செல்லுவார். பசுவத்நாம சங்கீர்த்தனம் சொல்லுவார்; மக்கள் இலயித்துக்கிடப்பார்கள்.
தொட்டார் வில்லினை
தொடுத்தார் அம்பு
விட்டார் எதிரே
அறுந்தது நாண்
ஓடிந்தது வில்
சங்கு சக்ரதாரியாக விஷ்ணு பகவான் கோயிலில் நின்று கொண்டிருந்தார் எப்போதும்போல; வழக்கப்படி அவருக்கு ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு வந்தன. எதிரே நின்று எப்போதும்போல, கைகூப்பித் தொழுதனர் பக்தர்கள். ஆனால் அவர்கள் உள்ளத்தில் இருந்த பக்தி, பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. சுடர் விட்டெரியும் திருவிளக்கு தரும் ஒளியில், ‘கமலக் கண்கள்’ தெரிந்தன. முன்பெல்லாம், விழியைத் திறந்து அவர் பார்ப்பது போன்றே ஒரு ‘பிரமை’ தோன்றும் பக்தர்களுக்கு—இப்போது அப்படித் தோன்றவில்லை.
‘என்ன கனிவு! எவ்வளவு கவர்ச்சி! அந்தக் கண்களில் அருள் ஒழுகிடக் கண்டேன்; புளகாங்கிதம் கொண்டேன்!’ என்று உருகி உரைப்பர்—முன்பு. இப்போது மனு கொடுத்தவன் வந்து நிற்பதைக் கவனியாமல் குறிப்பேட்டினைப் புரட்டி கொண்டிருக்கும் கொத்தவால் முன்பு நின்றுகொண்டு ஆர்ப்பாட்டத்துக்குக் குறைச்சலில்லை. அலுவலகத்தில் அமுலுக்குப் பஞ்சமில்லை; ஓயாது வேலை செய்வது போலத்தான் காணப்படுகிறார். என்றாலும் என்ன பலன்? களவு போன என் பொருளைக் கண்டுபிடித்துத் தரும் திறமை மட்டும் இல்லை—‘இப்படி ஒரு கொத்தவால் இருக்கிறார், நாமும் இவரிடம் வந்து வந்து குறையைக் கூறிவிட்டுப் போகிறோம்’ என்று சலிப்புடன் எண்ணிக் கொள்ளும், கிராமத்துக் கிழவன்போலக் கடவுளின் சன்னதியில் நின்று கொண்டிருந்தனர். முன்பெல்லாம் தவறி எங்கே தவறான, கேவலமான, ஆசாபாச உணர்ச்சிகள் ஆண்டவன் ஆலயத்திலே இருக்கும்போது உள்ளத்தில் தலைதூக்கிவிடுமோ, தேவனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடுமோ என்று திகில் கொண்டு, “தேவ தேவா! எம்மைக் காத்தருளும்; சத்ய நெறியின்றும் தவறி நடக்காத மன உறுதியைத் தாரும்; தீய எண்ணங்கள் எம்மைத் தீண்டாதபடி தடுத்தாட்கொள்ளும்; சகல பாவங்களையும் சம்ஹரிக்கும் தங்கள் திருப்பார்வையை, நாயினும் கடையராம் எம்மீது சிறிது செலுத்தும். பிரபோ! பித்துமனம் கொண்ட நான், செய்துள்ள பிழைகளைப் பொறுத்தருளும்; சாசுவதமான இன்பம் பெறும் மார்க்கத்தை சர்வேஸ்வரா! எனக்குக் காட்டும்” என்று கேட்டு வந்த பக்தர்களிலே மிகப் பலருக்கு, ஆலயத்திலே காணப்படும் அலங்காரமும் ஆடம்பரமும், அர்ச்சகர்களாகி அரசோச்சும் பூசுரரின் பேராசையும் ஆதிக்க வெறியும், அவர்களைப் பற்றி ஆபாசம் நெளியும் கதைகளும் கண்ணிலும் கருத்திலும் உறுத்தின; இந்த இடத்தில் தூய்மையான கருத்து எங்ஙனம் துளிர்விடும்! வாடைக் காற்றடிக்கும் இடத்திலே மல்லிகையின் நறுமணம் தேடுகிறோம்—வீண் வேலை! என்று தோன்றிற்று.
எவ்வளவு அழகான சிலைகள்! எத்துணை நேர்த்தியாகச் சமைத்திருக்கிறான் சிற்பி. அந்தக் கண்கள் கவிதை பாடுவது தெரிகிறதே! கன்னங்கள், கனிந்த பழம் போலல்லவா உள்ளன! அதரம் துடிப்பது போலவே தோற்றமளிக்கிறது. தன் கைவண்ணத்தைச் சற்றே சரிந்த குழலின் பாரம் பின்னுக்கு இழுக்க, கனகப் பந்துகளின் கனம் முன்னுக்கு அழைக்க எப்பக்கம் என் நிலை என்று துடிப்பதுபோல் இடை நெளிய, இந்தக் காட்சியிலே சொக்கி நிற்கும் என் நாதனைக் காணீரோ என்று கேட்பதுபோல் கண் பேச, ஆஹா! கல்லைக் கொண்டு இவ்வளவு அழகாக அளித்திருக்கிறானே, பேசும் பாவையர் கண்டு காமுறத் தகும் சிலை வடிவச் சிங்காரியை. ஸ்ரீதேவி என்றழைக்கட்டும், சிவகாமி என்றுரைக்கட்டும், மீனலோசனி, விசாலாட்சி, விரூபாட்சி, கமலலோசனி என்று பெயர் எதுவேண்டுமானாலும் சொல்லட்டும்; கதை எப்படி வேண்டுமானாலும் கட்டட்டும்; கல்லிலே இந்த எழிலைக் காட்டினானே, அவனைத்தான் நான் தேடுகிறேன், புகழ் பாடிட; கொண்டாடி மகிழ.
இப்படி ‘சிலை’யிலே காணப்படும் சிற்பியின் கைத்திறனைப் புகழ்ந்தனர் சிலர்.
சீற்றம் பிறக்கவில்லை, ஆலயத்து மேலோருக்கு. அவர்கள் பக்திப் பரவசத்தால் கனிவுவழிய தரிசிக்கிறார்கள் என்று எண்ணி, தேவ மார்க்கம் தழைத்து நிற்கும், புத்த புயலிலே வீழ்ந்து போகாது, சிறிதளவு தாழ்ந்து போக நேரிடலாம். ஆனால் அடி பெயர்ந்திடாது—இதோ வைத்த கண் வாங்காது நிற்கிறார்களே, இவர்களெல்லாம் புராதன மார்க்கம் புதுமுறைக்காரர்களால் அழிக்கப்படுவதற்கு இடமளிப்பார்களா? ஒருபோதும் இல்லை!—என்றெண்ணினர், மகிழ்ச்சிபெற்று, மலரால் மகேசனை அர்ச்சித்தனர், பிரசாதமளித்து மகிழ்வித்தனர் பிறரை.
தேவனைத் தரிசிக்க வந்தனர் பக்தர்கள் என்று அர்ச்சகர்கள் எண்ணிக் கொண்டனர். வந்தவர்களோ ‘சிலை’யைக் கண்டு களித்திடும் கலா ரசிகர்கள், பூஜை செய்கிறார்கள் என்று பூஜாரிக் கூட்டத்தினர் எண்ணிக் கொண்டனர். சிலையை ரசித்தவர்களோ, சிற்பியைப் புகழ்ந்துரைத்தனர். அருள்பெறும் இடம் என்று கூறி ஆலயத்துக்கு அழைத்தால், அழகொழுகும் கலைக்கூடம் இது என்று கூறிப் பாராட்டினர். ரசிகர்களைப் பக்தர்கள் என்று எண்ணிக் கொண்டவர்;—ஏமாந்தனர்.
ஆரிய மார்க்கம் இங்ஙனம் அடித்தளம் தாக்குண்ட நிலையில் இருந்த காலத்தில் ரங்கராஜ பண்டிதருக்குத் தொழிலில், பொருளும் புகழும் மிகக் குறைந்த அளவுக்குத்தானே கிடைக்க முடியும்.
புத்த மடாலயம் சென்றுவிட்டவர்கள்—நிராசை—நிர்வாணம்—நிர்மலம் எனும் இலட்சிய சித்திக்கான முறைகளிலே ஈடுபட்டனர்—புத்த மடாலயம் சேராதவர்களும், புத்த மார்க்கத்தில் புகாமலும், புத்த மார்க்கப் பிரசாரமூலம் பெற்ற தெளிவினால், ஆரிய மார்க்கத்திலே உள்ள ஆபாசங்களை அறிந்து கொண்ட ‘இந்துக்கள்’ ரங்கராஜ பண்டிதரின் கதைகளைக் குறித்து அவரைக் கேட்ட கேள்விகள் அவருக்குக் கோபமூட்டின. கேள்விகள் தவறானவை என்பதால் அல்ல; பதில் கண்டறிவது கடினமாக இருந்தது. கடுங்கோபம் பிறந்தது பண்டிதருக்கு, எனினும் தனியே இருந்து, அதே கேள்விகளைப் பற்றிச் சிந்திக்கும்போது அவருக்குச் சிரிப்புக்கூட வரும். ஆமாம்! அந்தப் போக்கிரியப் பயல்கள், சொல்வதைக் கேட்டுக் கேட்டு எனக்கே இப்போது சந்தேகம் பலமாகிக் கொண்டுதான் வருகிறது என்று தனக்குத் தானே கூறிக் கொள்வார்.
வாசமல்லிகாவுக்குப் பூட்டி அழகு பார்க்கவும், பெருமைப் படவும், தம்மிடம் பொன்னும், பொருளும் இல்லையே என்று பண்டிதர் ஏங்கிக் கிடந்தாரே தவிர, அந்த வனிதை இயற்கையிடமிருந்து எழிலைச் செல்வமாகச் குறைவின்றிப் பெற்றிருந்தாள்: ஆபரணச் சுமைதாங்கிகள் அரண்மனையில் அசைந்தாடிக் கிடந்தனர்—இந்த அழகு மயிலுக்கு அவை தேவையற்றன! இருக்கவேண்டிய இடமறியாததால், முத்து மாலையும் மோகராக்குவியலும், மரகதமும் பிறவும், சீமாட்டிகளிடம் சிறைப்பட்டுச் சீரழிந்தன. இந்தச் சிங்காரிக்கு அவை ஏன்? முத்தும், பவழமும் அளித்தனை, இயற்கையே! எனினும் அவைதமை அணிந்து மகிழவா செய்தனை? பேழையிலிட்டுப் பாதுகாத்து வரும் வேளையில் அல்லவா என்னை விட்டிருக்கிறாய். பேழையிலுள்ளதை அவ்வப்போது சிலர், களவாடிச் செல்கிறார்கள்—‘ஓ’வெனக் கூவி, அவர்களைப் பிடித்திடத் துரத்திச் சென்றாலும், என்னைத் தடுத்து நிறுத்துகிறாள், நிலமடந்தை, என் செய்வேன்! கொடுத்தும் கெடுத்தாய், இருந்தும் பயனேதும் நான் பெற்றேனில்லை என்றல்லவா கடல் ஒலிக்கிறது, இயற்கையின் வஞ்சனையைக் கண்டு. இதோ செம்பவளத்தை அதரமாக்கி, முத்துக்களை அழகான பற்களாக அமைத்து, பொன்னைப் பொடி செய்து குழம்பாக்கி உடலெல்லாம் பூசி. தேயாத் திங்களாக முகத்தினைத் தீட்டி, நினைக்கும் போதெல்லாம், கனிச்சாறு ஊற்றெடுக்கும் வகையும் தந்து, வாசமல்லிகாவைத் தன் செல்லப் பெண் ஆக்கிக் கொண்டனையே என்று கத்துங் கடலொலி கேட்கிறது.
அவனல்லவா அதை அறிந்திருக்கிறான்! அந்தி நேரத்தில், ஆற்றோரத்தில், “எண்ணமதைக் கொள்ளையிட்ட வண்ணப்பூவே! எங்கு பெற்றாய் இத்தனை எழிலை எல்லாம்” என்று கேட்கிறான்! போதும் உமது பரிகாசம் என்று அவள் சிணுங்கினாள். வண்ணப்பூ மேனிக்கு இந்த வான்காற்று ஆகாது; பண்ணொத்த மொழியாளே! வாராய் இங்கு என்று அழைத்து, நீண்ட இரு கையைப் போர்வையாக்கி, பிறை நெற்றிக்கு முத்தமெனும் பொட்டிட்டு, வெட்கத்தால் முகம் சிவக்க ‘விடுங்கள்’ என்றே வீணைமொழியிலே அவள் கூறும்போது, தலைசாய்த்து துயிலுவதற்குத் தக்கதன்றோ, எந்தன் தடந்தோட்கள் என்றே மிக்கவும் கோபமது கொண்டான் போலே அவனும் கேட்க, மஞ்சமிதை வேறு அஞ்சுகமும் கொள்ளட் போமோ! என்று அவள் கூறி நெஞ்சம் நிறைந்துள்ள இன்பத்தேனை, அதரம் தன்னில் வைத்து, மகிழ்வூட்டி மகிழ்கின்றாளே, அங்கு அல்லவா தெரியும், பண்டிதர், தன் மகளுக்கு எழிலூட்டப் பொன்னையும் பொருளையும் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை என்னும் பேருண்மை.
‘கொண்டலைத் தழுவிடும் மேகம்; கூறுவதென்ன கோகிலமே!’ என்று அவன் கேட்கிறான்; அவள் காதற்புலமையுடன் “தழுவிடச் சென்ற மேகமங்கை, பின்னர் அழுதிடும் காரணம் அறிவீரோ?” என்றல்லவா கேட்கிறாள்! செல்வம் நிரம்ப இருந்தால் வாசமல்லிகாவின் திருமணத்தை மிகச் சிறப்பாக, கோலாகலமாக நடத்தலாம்; அதற்கான காலமா இது? இல்லையே என்று ஆயாசப்படுகிறாரே இந்தப் பண்டிதர். இதோ, வண்டுகள் யாழை மீட்ட, வரிக்குயில் பண்ணிசைக்க, அண்டையில் அருவி பாய்ந்து அழகாய் முழவொலிப்ப, கெண்டைகள் துள்ளியோடிக் கேளிக்கை நடத்திக்காட்ட, வெண்முகில் கருத்துப் பன்னீர்த் துளிகளை வாரிவீச, வாசமல்லிகா—ராமப்பிரசாதன் கடிமணம், பல ஆயிரம் வராகன்களைக்கொட்டிச் செலவிட்டாலும் பெறமுடியாத அழகுடன் நடைபெறுகிறது. பண்டிதர் இதனை அறியாமல், பணமில்லை பணமில்லை என்றெண்ணிப் பதைக்கிறார். பேழைக்கல்லவா, பணம் தேவை! இந்த ஆணழகன் தேடுவது, இந்த வடிவழகை, வண்ணமலரை, மண்ணகத்து மதியை, பொன் அவிர்மேனியாளை, புது வாழ்வை! வாசமல்லிகா கிடைக்கும்போது, அவன் அவளுடன் வந்துள்ள பேழைகள் எத்தனை என்று ஏன் கேட்கப் போகிறான்! அவன் உள்ளத்தை “முத்து வைத்த நற்பவழப் பெட்டி” கவர்ந்துவிட்டது!
“அங்கே சென்று, நட்சத்திரங்களை எல்லாம் எடுத்துப் பூப்பந்துகளாக்கி விளையாடினால் எப்படி இருக்கும்?”—என்று குழந்தை போலக் கேட்டாள் மல்லிகா; குறும்புப் புன்னகையுடன், ராமப்பிரசாதன், “அங்கு நீ சென்றால், தேவலோகத்திலே பெரும் போரல்லவா மூண்டுவிடும்” என்பான்.
“அங்கு போர் எழ என்ன காரணமிருக்கிறது? இங்கு தான் புத்தமார்க்கத்துக்கும் புராதன மார்க்கத்துக்கும் போர் மூண்டு கொண்டிருக்கிறது என்கிறார்கள். அங்கு போர் எழ என்ன காரணம்?” என்று அவள் கேட்க, “அன்பு மலரே! அமரர் உலகிலே நீ சென்றால், எனக்கா உனக்கா என்று அவர்களுக்குள் போட்டி கிளம்பி பெரும் போர்மூண்டு விடாதோ!” என்று அவன் குறும்பாகச் சொன்னான்.
“எனக்கென்ன அச்சம் அதனால்!” என்கிறாள் வாசா. பயந்து போகிறான் ராமப்பிரசாதன்! கோபமாகக்கூட இருக்கிறது. “அதென்ன மல்லிகா, அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்கிறான். “ஏன்! அமரர்கள், என் பொருட்டுப் போரிட்டுக் கொண்டால் எனக்கென்ன? அமரர்க்கரசனே குறுக்கிட்டாலும் புறமுதுகிட்டோடச் செய்து என்னை உம்மவளாக்கிக் கொள்ளும் என் ஆற்றலரசர் இருக்கும்போது எனக்கென்ன அச்சம்?” என்று அவள் கூறுவாள்; வாரி அணைத்துக் கொள்வான்; அவர்கள் காலடியில் மகதம், மாளவம், கூர்ஜரம், மாரடம், வங்கம்...எல்லாம் உருண்டோடும்; விண்ணகத்து மண்டலங்களை எல்லாம்கூடக் கடந்து, அவர்கள். காதல் உலகு செல்வர்—கண்களைத் திறந்தாலோ, பசும் புற்றரையும். பழமுதிர் சோலையும், நீரூற்றும், இது கலிங்கம் என்பதை நினைவிற்குக் கொண்டுவரும்.
பண்டிதர் பொருள் தேடிட எந்த மண்டலம் சென்றும் பயனில்லை என்று அறிந்திருந்தார்; ஆனால் சம்பந்தியிடம் சற்றுக் கௌரவமாகத்தானே பேசி வைக்கவேண்டும்! அதனை வணிகர் அறியாமலில்லை. அவர் பல மண்டலங்கள் சென்று வருகிறார். எங்கும் மாறுதல் உருவாகிக் கொண்டிருக்கிறது. எல்லா மண்டலங்களிலும் புத்தமதம் பரவிவிடவில்லை; இந்து மார்க்கத்தை விடாப்பிடியாகக் காப்பாற்றிக் கொண்டும், புத்த மார்க்கத்தினருக்குப் பல கொடுமைகள் இழைத்துக் கொண்டும் பல மண்டலங்கள் இருந்தன. என்றாலும், அங்கெல்லாம்கூட இந்து மார்க்கத்திலேயே காலத்துக்குப் பயந்து மாறுதல்கள் செய்து வந்தனர். பேரிரைச்சலுடன் ஓடிவரும் ஆற்றைத்தாண்டி அக்கரை செல்ல வேண்டுமானால், தட்டுமுட்டுச் சாமான்களையும் உடன் தூக்கிக் கொண்டா செல்ல முடியும்?
மகதம் இவ்வளவுக்கும் வழி செய்துவிட்டது என்று மறையவர்கள் அடிக்கடி ஆத்திரத்துடன் பேசுவர். அந்தப் பாப பூமியில்தான் இப்போது, கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டுள்ளனர் புத்த மார்க்கத்தினர். அங்கு புத்த மார்க்கத்துக்கான படிப்பும், பயிற்சியும் பெற்று, பாரெங்கும் சென்று பௌத்தத்தைப் பரப்பும் பண்டிதர்களைத் தயாரிக்கிறார்கள்.
புத்த மார்க்கத்தின் புனிதத்தைப் புகட்டும் ஏடுகள் அங்கு மலைமலையாகக் குவிந்து கிடக்கின்றனவாம். ஒரு பெரிய பல்கலைக்கழகமே ஏற்படுத்திவிட்டிருக்கிறார்கள்.
இவ்விதமாகவெல்லாம், அந்த மண்டலம் போய் வந்தவர்கள் வியந்து கூறுவர்; வைதீக மார்க்கக் காவலர்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கும்.
“இவ்வளவுக்கும் ஆதரவு அளிக்கும், மகத நாட்டு மன்னன் ரௌரவாதி நரகமல்லவா போய்ச் சேருவான்?”
“அப்படி நாம் கூறுகிறோம்; நம்புகிறோம். அவர்கள் மோட்சம், நரகம் என்ற பேச்சே ஆரியச் சூழ்ச்சி என்கிறார்களே!”“மேதாவிகளே! யுகயுகமாக இருந்துவரும் ஐதீகத்தைப் பொய்யென்று கூறும் இவர்கள் வாய் புழுத்துப் போகும்—பார்—பார்.”
“அந்த ஐதீகங்களெல்லாம் வீணுரை என்று விளக்கிடவே, அங்கு பேராசிரியர் பலர் பாடம் தருகிறார்களாம்.”
“அதைக் கேட்க ஒரு கூட்டமும் சேருகிறது போலும்!”
“அவ்வளவு அலட்சியமாக நீர் கூறுகிறீர். அந்த நலந்தா பல்கலைக்கழகத்தில் 10,000க்கு மேற்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள்; ஆசிரியர்கள் 1500க்கு மேல்.”
“பொய்! பொய்! வீண் புரளி! பத்தாயிரம் பேர் அங்கு படிக்கிறார்களாம்.—அது என்ன பாடசாலையா அல்லது பாடலிபுத்திரமா?”
“நீர் கேட்பதும் நியாயம்தான். பாடலிபுத்திரம் போன்ற ஒரு நகரமே அங்கு எழுப்பப்பட்டுத்தான் இருக்கிறது. அங்கு மாணவர்களும், ஆசிரியர்களும், தங்கியிருந்து அறநெறி பற்றிய அறிவு வளர்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.”
இவ்விதமெல்லாம் கேள்விப்பட்டு ஆரிய மதக் காவலர்கள், மனம் புழுங்கிப் போயிருந்தனர்.
சீன யாத்ரீகனான யுவான் சுவாங் கூட, இந்த நலந்தா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பௌத்த மார்க்கம் பற்றிய பாடம் கேட்டுப் பெற்றான் என்றால், ஆத்திரம் எப்படியிருக்கும், ஆரியக் குருமார்களுக்கு?
எவ்வளவு அற்புத அற்புதமான லீலா விநோதங்கள்—பிரபாவங்கள் கொண்டதாக உள்ளன, நமது புராண இதிகாசாதிகள்!
எத்துணை வாதத் திறமையுடன் கோர்க்கப்பட்டுள்ளன நமது சாஸ்திரங்கள்!எத்தனை எத்தனை உட்பொருள்களை உள்ளடக்கியதாக நமது வேதங்கள் உள்ளன!
எவ்வளவு காலமாக இந்தப் பாரத்வர்ஷத்தில் உள்ள ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் இந்து மார்க்கத்துக்கு ரட்சகர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆரிய தாசராக இருப்பதைப் பெரும் பேறு என்று கருதும் சிரோன்மணிகளாக அல்லவா இருந்து வந்தனர்!
இவ்வளவு ‘மகிமை’ வாய்ந்த இந்து மார்க்கத்தைக் கற்றறிந்து கொள்ள வேண்டும் என்று ஒரு சீனனும் ஆவலைக்காட்டவில்லை; ‘பாடம்’ கற்றறிய சீனத்து யுவான்சாங் வருகிறானே! எவ்வளவு வேதனை தரும் செய்தி இது?
ஏதோ ஒரு மனக்குழப்பத்தால் மன்னன் மகனொருவன், தன் பொறுப்பை மறந்து, கடமையைத் துறந்து, அரச பதவியில் இருந்து ‘சேவை’ செய்ய மனமின்றி, அங்கும் இங்கும் அலைந்து திரிந்து, கண்டேன் பேருண்மையை! காணீர் பேரொளியை! கேண்மின் பெருநெறியை! என்று கூறுகிறானாம். இந்த மக்கள் நேற்று வரை, கைகட்டி வாய் பொத்தி நம் எதிரே நின்று, காணிக்கை செலுத்தி அனுமதி பெற்று, நமது காலைக் கழுவி, நீரைப்பருகி, கதிமோட்சம் கிடைத்தது என்று கிடந்துவந்தனர். கண்ணா மணிவண்ணா! என்று கைத்தாளமிட்டுக் கூத்தாடி நின்றனர்; வேள்விக்கு உதவினர்; வேத பாடசாலைகள் கட்டினர். சமாராதனைக்குச் சம்பிரமமாக ஏற்பாடு செய்தனர், சர்வம் பிரம்மமயம் ஜெகத் என்ற சாஸ்திரத்தை ஏற்றுக் கொண்டு, சரணம்!சரணம்! என்று கூறிக் கிடந்தனர். அப்படிப்பட்டவர்கள், ‘வேதம் வேண்டாம் பேதம் கூடாது, ஜாதி ஆகாது, ஆசையை அகற்று’ என்று கூறிடும் புத்தனிடம் தங்கள் புத்தியைப் பறிகொடுத்துவிட்டுக் கிடக்கின்றனரே! இவர்களுக்கு வந்துற்ற கெடுமதிக்கு என்ன காரணம்?
வைதீக மார்க்கத்தினர் இதுபோலெல்லாம் கேட்டனர்; கலகமூட்டினர்.மாடங்களும், சிற்ப வேலைப்பாடமைந்த தூண்களைக் கொண்டு அழகுற விளங்கின. அல்லியும் பிறவும் பூத்து அழகினைத் தேக்கி வைத்துக் கொண்டிருந்த அலங்காரக் குளங்கள் அணியாக அமைந்திருந்தன. ஒவ்வோர் துறைக்கும் தனித் தனிக் கட்டிடம்—ஒன்பது அடுக்கு மாடி ஒன்று ஓங்கி நின்று கொண்டிருந்தது, வளரும் புத்தமார்க்கத்தின் எழிலை விளக்குவதுபோல. இவ்வளவு சிறப்புடன் விளங்கிய நலந்தாவின் வளர்ச்சிக்காக மகதநாட்டு மாமன்னன் மானியமாக 200 கிராமங்கள் தந்திருந்தான். வங்கநாட்டு வேந்தனும் அது போன்ற மானியம் வழங்கினான்.
நலந்தாவில் புனித ஏடுகளைக் குருட்டுப் பாடமாகக் கொண்டு, பாமரரை மிரட்டுவதற்காக அவைகளை உரத்த குரலிலே உச்சரிக்கும் புரோகிதர்கள் தயாரிக்கப்படவில்லை—ஆய்வுரையாளர்கள்—அறநெறி பரப்புவோர்—அன்பு போதனை புரிவோர் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர். ஜாதி பேதம் அறவே நீக்கப்பட்டது; பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவதற்கேற்ற பக்குவம் உளதா என்று மட்டுமே பரிட்சை நடத்தினர்—குலம் என்ன, கோத்திரம் யாது? சிற்றரசனா, சீமான் மகனா? பேழையுடையானா, ஏழையா என்பதல்ல, அங்கு எடைபோட உதவிய படிக்கற்கள்! கற்றறிவாளனா, பற்றினை நீக்கிக் கொள்ளும் உளத்திண்மை உடையவனா, நற்பண்புகளின் கருப்பொருள் அவனிடம் உளதா-இவைகளைக் கண்டறிந்தே துவார பண்டிதர்கள், மாணவர்களைச் சேர்த்துக் கொண்டனர்.
இந்த மாபாவிகளின் கோட்டம், மண்மேடாகாதா! மகேசா! திரிபுரங்களையும் ஒரு நொடியில், ஒரு சிறுபொறியினால் சாம்பலாக்கிய சதாசிவமல்லவா, நீர்! திரிசூலி, நீ நினைத்தால் போதாதா இந்தத் தீயர்களைத் தீக்கிரையாக்க! மராமரம் துளைத்தவனே! ஜானகிராமா? அம்பொன்று எய்தால் போதுமே, இந்த அசுரக் கூட்டத்தினை அடியோடு அழித்திட! என்று திருவுள்ளம் இரங்குமோ? திருவருள் பாலிப்பது எந்நாளோ? என்று மனம் புழுங்கிய மறையவர் கூட்டம், மாரடித்து அழுதவண்ணமிருந்தது! நலந்தாவின் புகழோ ஆந்தையின் அலறலுக்கும், கோட்டானின் கதறலுக்கும் சட்டை செய்யாது, தண்ணொளி வீசிடும் வெண்ணிலவாகத் திகழ்ந்தது.
ரங்கராஜ பண்டிதரிடம், அவருடைய ‘பால்ய’ சினேகிதர் பராசரதாசர் வந்தார்—பார்த்து நீண்ட காலமாகிவிட்டிருந்தது மட்டுமல்ல—பராசரதாசர், பராசரஸ்வாமிகளாகிவிட்டிருந்தார்—ரிஷிக்கோலத்தில்! நாட்டின் நிலைமைகளை எல்லாம் எடுத்துப் பேசிக்கொண்டு வந்தனர், இருவரும். பராசரஸ்வாமிகள் சொன்னார். ‘பைத்யக்காரா! முன்புபோல நலந்தாவில் அந்த நாசகாரர்கள் மட்டுமே அங்கு கொட்டமடித்துக் கொண்டில்லை. ஆரிய மார்க்கத்தினரும் மெத்தச் சிரமப்பட்டு இடம் பெற்றாகி விட்டது. இப்போது, மாற்றானின் கோட்டைக்குள்ளேயே நமது படை இருக்கிறது. ரங்கராஜா! எந்த நேரத்தில் எந்த முறையில் இதைச் சாதிப்பது என்பதைக் கண்டறிவதே என் வேலை. நலந்தாவில் வேத வகுப்புகள் நடத்தும் பொறுப்பு எனக்கு. அடிக்கடி விவாதங்கள், சச்சரவு, அமளி—ஆமாம்—இப்பொது புத்தசாதுக்கள் பாடு திண்டாட்டம்தான்! கைகலப்பு என்று வந்துவிட்டால், நம்முடைய ஆசாமிகளுடைய திறமைதான் மேலோங்கி நிற்கிறது.’
“அதெப்படி ஸ்வாமிகளே?”
“அது எப்படியா? அசடன் கேட்க வேண்டிய கேள்வியை இராமாயணம், மகாபாரதம் அனைத்தும் அறிந்த நீ கேட்கிறாயே! அங்கு ஆரியமதம் பயிலும் மாணவர்களெல்லாம், உண்மையிலேயே மாணவர்கள்தானா? ஐம்பது ஆட்களை எதிர்த்தடிக்கும் வல்லமைசாலிகள் இருக்கிறார்கள்—கையில் ஓலைச்சுவடி இருக்கும் பகலில்; இரவு நேரங்களில் கட்டாரி! ஆமாம்; கூரிய கட்டாரி! ஆரிய போதனைக்குச் செவி சாய்க்க மறுக்கும் சண்டாளர்களின் மார்பிலே கட்டாரி பாயும்—பிறகு முதலைகள்!! ரங்கராஜா! நிர்மூலமாக்குவதற்கான சகல யுத்த சன்னத்தமும் செய்தாகிவிட்டது”.இருவரின் பேச்சைக் குறுக்கே தடுக்கும் நிலையில் அங்கு பூபதியார் வந்தார். “ஆரிய சிரேஷ்டரே! இவர் பாஞ்சசன்ய பூபதியார், என் நண்பர்; என் மகள் வாசமல்லிகாவை, இவர் திருக்குமரன் ராமப்பிரசாதனுக்கு ‘பாணிக் கிரகணம்’ செய்ய ஏற்பாடாகி இருக்கிறது” என்று பண்டிதர் சொன்னார்; ஒரு கணம் முகம் கருத்தது பராசர ஸ்வாமிகளுக்கு-மறுகணம் ஓர் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “மெத்தச் சந்தோஷம்! வணிகரோ?” என்று கேட்டார். “ஆமாம்! மண்டலம் பலவற்றிலே தொடர்பு...நலந்தாவுக்குக்கூட, பண்டகசாலைக்குத் தேவையான பொருள்களை இவர் மூலம்தான் பெறுகிறார்கள்...” என்றார் பண்டிதர்.
“அதுதான் ஆர்ய தர்மம். நலந்தாவில் உள்ள நீசர்கள், நமது மதத்தை அழித்தொழிப்பவராக இருந்தாலும், அவர்கட்கு உதவி செய்வதுதான் ஆரிய தர்மம்...” என்றார் பராசர ஸ்வாமிகள்.
“உண்மைதான்! மேலும், நலந்தாவில் உள்ளவர்கள், நீசர்களுமல்ல. இது விஷயமாகவே பண்டிதருடன் பேச வந்தேன். என் மனம் நலந்தாவில் இலயித்துவிட்டது. ‘சொத்தில்’ பெரும் பகுதியை நலந்தாவுக்கே மானியமாக்கிவிட்டு குழந்தை வாசமல்லிகாவின் திருமணத்தையும் விரைவிலே முடித்துவிட்டு நலந்தாவுக்கே சென்று தங்கி ஊழியம் செய்து வாழ விரும்புகிறேன். குழந்தை என்னைப் பிரிய மனமின்றிச் சங்கடப்படுகிறது. என்றாலும், பெரியவர் இருக்கிறார் என்று தைரியம் கூறினேன்...” என்றார். பண்டிதரின் முகம் பயங்கரமாக மாறிவிடலாயிற்று. சிரமப்பட்டுச் சமாளித்துக் கொண்டார்.
“பூபதியாரே! சொத்து முழுவதையும் நீர் தானமாகக் கொடுத்துவிட்டு, வாசமல்லிகாவை வெறுங்கையோடு என் இல்லம் அனுப்பினாலும், நான் கவலை கொள்ளமாட்டேன். ஆனால், தாங்கள் நலந்தா சென்று தங்குவது என்றால். அது நாங்கள் பாஷாண்டி மதத்தில் வீழ்ந்துவிட்டது போலத் தோன்றும்—அந்தக் களங்கம், எனக்குள்ள புகழ், என் குடும்பத்தின் கீர்த்தி இவைகளைக் கெடுத்துவிடும்...” என்றார்.“ரங்கராஜா! என்ன அவசரமான முடிவுக்கு வருகிறாய்? பூபதியார் நலந்தா சென்று ஊழியம் செய்வதாகச் சொன்னாரே தவிர, புத்தமார்க்கம் புகுந்துவிடுவதாகவா கூறினார்? அங்குதான் இப்போது ஆரிய மார்க்கமும் இருக்கிறதே—சேவை செய்வது என்றால், சகலமும் உணர்ந்த பூபதியார், ஆரிய சேவை செய்கிறார் என்பதுதானே பொருள். இப்போது, யாகம்கூட அங்கு நடத்தப்பட்டு வருகிறது. பூபதியார் போன்றவர்கள், ஆரியரின் புனித கைங்கரியத்துக்குத் தம்மாலான பேருதவி புரிந்துதான் வருகிறார்கள்” என்று பராசரஸ்வாமிகள், சாகசமாகப் பேசினார். பூபதியாரோ, “மன்னிக்க வேண்டும். நான் புத்த மார்க்கத்திடம் பற்று கொண்டுவிட்டேன்” என்றார்.
“அப்படியானால், திருமணம்?” என்று ஆத்திரமாகச் கேட்டார் பண்டிதர்.
“விரைவில் நடத்திவிட்டுத்தான் நான் நலந்தா செல்வதாக உத்தேசம்.”
“திருமணத்துக்குச் சம்மதிக்க மாட்டான், என் மகன். அவன் மகா உத்தமன்—நமது பூர்விக மதத்தில் நிரம்பப் பற்று கொண்டவன்...”
“வாசமல்லிகாவை அல்லவா அவன் திருமணம் செய்து கொள்ளப்போவது—என் நிலைபற்றிக் கவலை என்ன?”
பண்டிதரை, ஸ்வாமிகள் அதிகம் பேச இடமளிக்கவில்லை.
“தீர்க்காலோசனைக்குக் காலம் கொடு, பூபதியாரே! திடீரென்று தாக்காதீர்” என்று கூறி அனுப்பிவிட்டார்.
நலந்தா பிரச்சினை நந்தவனத்திலே, புயலையும், புனலையும், கனலையும் கிளப்பிவிட்டது.
செல்வம் போய்விடுகிறதே என்பதுதான், தங்கள் தகப்பனாரின் கோபம்; வருத்தம், வேறென்ன? என் அப்பா புத்த மயத்தில் சேர்ந்தால் இவருக்கு என்னவாம்! இவரையும் தங்களையுமா சேரச் சொல்கிறார் என் தகப்பனார்? அவருடைய மனச்சாந்திக்கான மார்க்கத்தை அவர் தேடிக் கொள்கிறார் என்று வாசமல்லிகா வாதாட, “செல்வச் செருக்கு, உன்னைவிட்டு எப்படிப் போகும், மல்லிகா! கேவலம் சொத்துப் போய்விடுகிறதே என்று என் தகப்பனார் பதைப்பதாகக் கருதுகிறாய்—செல்வச் செருக்கல்லவா அதற்குக் காரணம்? அனாதி காலந்தொட்டு இருந்து வரும், மத மார்க்கத்தை இழித்தும் பழித்தும் பேசுபவருடன் எப்படி நாங்கள் உறவு கொள்ள முடியும்” என்று பேசுவான் பிரசாதன். கொதிப்பான பேச்சு—கோபமான பிரிவுகள்—இப்படி ஆகிவிட்டது நிலைமை.
கண்டதும் ஏற்படும் கனிவு—காதற்பேச்சிலே இருக்கும் கவர்ச்சி—இவை, குறையத் தலைப்பட்டன; மகிழ்ச்சி மங்கலாயிற்று.
“நேற்று முளைத்த ஒரு காளானுக்காக, நமது பூர்வீகப் பாரிஜாதத்தைக் காலால் மிதித்துத் துவைப்பவரை, அவர் யாராக இருப்பினும், நான் துச்சமாகத்தான் மதிப்பேன்.”
“அவரவரின் மனச்சாட்சிக்குத் தக்கபடி மார்க்க விஷயம் இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மதிக்காதவர்களை நான் தூசுக்குச் சமமாகக்கூடக் கொள்ளமாட்டேன்.”
“நாவை அடக்கிப் பேசு! தந்தையைக் கேவலமாகப் பேசுவதைக் கேட்டுச் சகித்துக் கொள்ளும் மண்டூகமல்ல நான்.”
“மாவீரராகத்தான் இருங்களேன்...அதனால் உன் முன் மண்டியிட வேண்டுமா என்ன! உமக்கு உம்முடைய மதம், எவ்வளவு ஆபாசம் நிரம்பியதாக இருப்பினும் மேலானது; என் தந்தையும் அதே மதத்தில் நம்பிக்கை வைத்திருத்தவர்தானே! நவராத்திரி உற்சவ கைங்கரியமும் யாருடையதாம்! நாலுகால் மண்டபம் யார் கட்டியது? எத்தனை கோயில்களுக்குக் காணிக்கை கொடுத்திருக்கிறார். இப்போது அவர் மனதில், இந்த மதம் மோசமான கொள்கைகள் கொண்டது என்று தோன்றுகிறது. உடனே அவரைத் தொலைத்துவிடுவதுதான், உங்கள் தர்மமோ? என்னைக் காதலித்து வந்தீரா அல்லது என் தந்தையின் பேழையைக் காதலித்து வந்தீரா என்றுகூடத்தான், எனக்கே இப்போது சந்தேகம் ஏற்படுகிறது.”
“ச்சீ! துஷ்டை! துராத்மா! விலகிச் செல்!”
இவ்விதம் ஊடல், மோதுதலாகவே மாறலாயிற்று.
பூபதியார், நாளுக்கு நாள் அமைதியை அதிகமாக மேற்கொண்டவரானார், புத்தமத ஏடுகளைப் படிப்பதும்—ரசிப்பதும்—பொருள் விளங்காதபோதெல்லாம் நலந்தா சென்று பாடம் பெறுவதுமாகவே காலங் கழித்து வந்தார்—வாணிபம் அறவே நின்றுவிட்டது.
“நேற்றுவரை இவரிடம் கணக்கு எழுதி வந்தவன், இன்னும் சில ஆண்டுகளிலே கோடீஸ்வரனாகப் போகிறான்” என்று கூறி வருந்தினான் பிரசாதன்.
“தந்தையின் செல்வம் போய்விட்டால், என் இளமையும், அழகும் கூடவே போய்விடாது” என்றாள் மல்லிகா.
“அது ஏன் போகும்! என்னை மயக்க அது இருந்து கொண்டுதான் இருக்கும்” என்றான் பிரசாதன்.
“நான் மயக்குபவளா?”
“அதிலென்ன சந்தேகம்?”
“அப்படிப்பட்டவளிடம் உமக்கு ஏன் பாசம்—நேசம்?”
“பாழும் மனம் கேட்காததால்...”
“படுகுழி என்று தெரிந்து ஏன் விழவேண்டுமோ?”
“காதலுக்குக் கண் ஏது?”“காதகனைக் கண்டறிய எனக்குக் கண் இருக்கிறது. இனி என்னைச் சந்திக்க, இந்தப் பொழிலுக்கு வரவேண்டாம்.”
“சந்திக்க வேண்டாம் என்று சொல்லு—பொழிலுக்கு வரவேண்டாமென்று சொல்ல நீ யார்?”
பொழிலுக்குப் போவதை வாசமல்லிகா நிறுத்திக் கொண்டாள்.
பராசர ஸ்வாமிகள் அடிக்கடி வந்துபோனவண்ணமிருந்தார்; ரங்கராஜ பண்டிதர் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை; ஏதோ தீவிரமான சிந்தனையில் மூழ்கிக் கிடந்தார். மாதங்கள் உருண்டோடின. காதல் முறிந்தே விட்டதென்று ஊரார் பேசிக் கொண்டனர். உகுத்திடும் கண்ணீர், வெளியே தெரியக்கூடாது என்பதற்காக வாசமல்லிகா வெகு பாடுபட்டு வந்தாள். ஆனால், அதற்குள் இவைகளைக் கவனிக்கும் நிலையைக்கூடப் பூபதியார் தாண்டிவிட்டார். நலந்தாவுக்கு நாள் தவறாமல் எதையாவது ‘நன்கொடை’யாகத் தருவார்; வாசமல்லிகா முகம்கூடக் கோணுவதில்லை.
“மல்லிகா! நமது தொழுவத்தில் இருக்கிற பசுக்கள்—அதிகம்—அல்லவா?”
“ஆமாப்பா...”
“நலந்தாவுக்கு...?”
“அனுப்புங்களேன்...அங்கு உள்ளவர்களுக்கும் பயன்படும்...”
“அம்மா, மல்லிகா! மகர கண்டிகை விற்று பணமாக்கிவிட்டேன்; நீதான் அதை இப்போதெல்லாம் அணிந்து கொள்வதில்லையே.”
“ஆமப்பா, எனக்கு அம்மாதிரி நகைகள் பிடிக்கவில்லை.”
“அப்படியா மகளே! குணவதியல்லவா நீ பணத்தை...”
“நலந்தாவுக்கு அனுப்பிவிடுங்களப்பா...”“அனுப்பிவிட்டதைச் சொல்லத்தான் வந்தேன், கண்ணே!”
“அப்பா, குளிர் காலத்தில் காஷ்மீர் கம்பளம், நல்லதல்லவா?”
“ஆமாம், மகளே! உன்னிடம் ஒரு உயர்தரமான கம்பளம் உண்டே?”
“எனக்கல்லப்பா? எனக்கென்ன—வாலிபம்தானே! சதா சிந்தனையில் மூழ்கியிருக்கும் நலந்தா நல்லவர்களுக்கு குளிரால், பாபம், எவ்வளவு கஷ்டமோ...”
“என்னம்மா செய்வது? கொடியவனெல்லாம் கோட்டையிலும், அரண்மனையிலும் தங்கி, கோடையிலே பூங்காற்றும், குளிர் காலத்தில் வெப்ப வசதியும் தேடிக் கொள்ள முடிகிறது. அவர்கள் என்ன செய்வார்கள் பாபம். ஆண்டிகள்தானே!”
“அதனால்தான், ஐயாயிரம் காஷ்மீர் சால்வைகளை வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டேன்.”
“அருமை மகளே, என்ன மேலான எண்ணம் உனக்கு.”
இவ்விதம், தந்தையுடன் போட்டியிட்டுக் கொண்டு வளர்ந்துவிட்டாள் மல்லிகா.
ஆண்டு மூன்றாயிற்று! எந்த ஆரணங்கும், ராமப்பிரசாதன் கண்வழி நுழைந்து நெஞ்சில் பதியவில்லை—அவனுடைய செவியில், எத்தனையோ சீமாட்டிகளைப் பற்றிப் போட்டு வைத்தார், பண்டிதர்; பணம் இல்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலையில் இருந்தான் பிரசாதன்; ஆனால் தன் தகப்பனாரை, மல்லிகாவே துச்சமாக மதிக்கிறாள் என்று எண்ணிக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரம் மட்டும் அடங்கவில்லை. மல்லிகா இல்லாத நேரத்திலெல்லாம், மலர்வனம் செல்வான்; அவளை எண்ணிக் கொள்வான்; அவளுக்காக ஏறிக் கனிபறித்த மரங்களைக் கட்டித் தழுவிக் கொள்வான்; அவள் பொருட்டு பயிரிட்ட மலர்ச் செடிகளுக்குக் கண்ணீரை ஊற்றுவான் - பித்தம் பிடித்தவன் போலானான்.“பிரசாதா! நாம் இருவருமே பெருந்தவறு செய்து விட்டோம்...” என்கிறார் பண்டிதர் ஒரு நாள்
ராமப்பிரசாதன் திகைத்துப் போனான்.
“அந்தப் பெண்ணை நேற்று பார்த்தேன்—எலும்பும் தோலுமாக இருக்கிறாள்” என்றார்.
“ஆமாப்பா! அதனால்தான் அவர்கள் ஆறு கிராமத்துக்குச் சொந்தகாரர்கள் என்று தெரிந்ததும், நான் அந்தச் சம்மந்தம் வேண்டாம் வேண்டாம் என்று கூறினேன்.”
“ஓஹோ! நான் ஒயிலூர் சீமான் மகளைப் பற்றிச் சொல்வதாக எண்ணிக் கொண்டாயோ! நான் பாபம், வாசமல்லிகாவைப் பற்றி அல்லவா கூறுகிறேன். உன் நினைவே அவளைச் சித்திரவதை செய்கிறது. நீ மட்டுமென்ன, துரும்பாகிவிட்டாய். நான் ஏன் இந்தப் பாபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஸ்வாமிகளும், காதலருக்குத் தடையாக இருப்பது, எல்லாப் பாபத்திலும் கொடியது என்கிறார். ஆகையால்...”
“ஆகையால் என்னப்பா?”
“நாளைக்கே சென்று பூபதியாரிடம் குழந்தைகளின் மனோபீஷ்டம் நிறைவேறட்டும் என்று கூறிவிடப் போகிறேன்.”
“அப்பா...”
“அன்பே!”
“ஆருயிரே!
எனக்குத் தெரியும்
எத்தனை நாட்கள்?
எங்கே ஒளிந்திருந்தது இந்தக் காதல்?
நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தக் கனிரசம்?”இவை மீண்டும்! மீண்டும் மலர்ச்சோலையில் மணம், நீரோடையில் சிரிப்பொலி, மாலை வேளைகளில் மதுரகீதம், களிநடம் புரியலாயிற்று. மதகு திறந்ததும் பாய்ந்தோடும் வெள்ளம்போல் காதல் பெருக்கெடுத்தது!
“மகிழ்ச்சி, மகளே! அவரும் அறிவாளி; அவனும் பண்பாளன். ஏதோ இடையில் சிறிது காலம் அவர்களுக்கு ஒருவகைக் கசப்பு இருந்தது. உன் தூய்மையான காதல் வெற்றி பெற்றுவிட்டது. இனி, எனக்கு நிம்மதிதான்” என்றார் பூபதியார்.
“இதற்குள் நிம்மதி எப்படி அப்பா ஏற்பட்டுவிடும். பதினாயிரம் தூண்களும் தயாராக வேண்டாமோ?” என்று மல்லிகா கேட்டாள்.
நலந்தாவுக்குப் புதுக்கூடம் அமைக்கும் பணியில், அப்போது பூபதியார் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். பதினாயிரம் செம்மரத் தூண்கள் சித்திர வேலைப்பாடுடன் தயாராகிக் கொண்டிருந்தன. அவைகளைச் செய்வதிலேயே, மகிழ்ச்சி ஊற்றெடுத்தது பூபதியாருக்கு; பண்டிதர் பகையை நீக்கிக் கொண்டது மேலும் மகிழ்ச்சி அளித்தது.
பண்டிதர் அடிக்கடி சென்று, செம்மரத் தூண்களின் அழகினைக் காண்பார்!
நிலவொளியில் பார்க்கும்போது நேத்திரானந்தமாக இருக்கிறது என்பார்.
பூபதியாருக்கு, பண்டிதர் மேலான குணம் கொண்டார் என்பதால், பூரிப்பு; பெருமையுங்கூட.
செம்மரத் தூண்கள் நலந்தா போய்ச் சேர்ந்துவிட்டன! அவைகளை அமைப்பதற்கான, சிற்பிகள் புறப்பட்டனர். தன் ‘சேவை’யின் பூர்த்தியை எண்ணி, பூபதியார் களிப்புற்றிருந்தார்.“செம்மரச் சிங்காரக்கூடம் அமைந்து, அதிலே ‘சீலம்’ குறித்து, சிறப்புரை நிகழ்ந்தானதும் திருமணம் என்று கூறப்பட்டதால், ஒவ்வொரு தூண் முடிவதும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டிற்று, காதலருக்கு.”
“நாளையோடு தீர்ந்தது; நாசகாலர்கள் ஒழிவார்கள்”
பிரசாதன், இந்தப் பேச்சுக் கேட்டதும், திடுக்கிட்டு போனான். ஸ்வாமிகள் அல்லவா, பேசுகிறார்! உற்றுக் கேட்டிடலானான்.
“ரங்கராஜா! நீ ஆரிய மார்க்கத்துக்குச் செய்துள்ள சேவை, மகத்தானது. மனு மாந்தாதா காலத்திலே ஆரியம் செழித்தது—இப்போது அழிய இருந்த ஆரிய மார்க்கத்தைக் காப்பாற்றும் பெரும்பாக்கியம் உன்னைச் சேர்ந்தது. உத்தமனே! உன்னை நண்பனாக அடையப்பெற்ற நானே பாக்கியசாலி.”
“என்னால் என்ன ஸ்வாமி! எல்லாம் தாங்கள் காட்டிய வழி நடந்தேன்; இட்ட கட்டளையை நிறைவேற்றினேன். என்னால் என்ன சாதிக்க முடியும்?”
“உன்னால் என்ன சாதிக்க முடியும் என்றா கேட்கிறாய்? நலந்தா வெந்து சாம்பலாகப் போகிறதே நாளைக்கு, யாரால்? உன் கைங்கரியமல்லவா இது? தூள் தூளாகப் போகிறது, அவர்கள் கட்டி வைத்துள்ள மாடங்களும், கூடங்களும்! நலந்தாவிலே கிளம்பப் போகும் ‘ஜ்வாலை’ நெடுந்தொலைவு தெரியும்—நெடுந்தொலைவு கற்கள் பிளந்து நாலா பக்கமும் பறக்கும்; கட்டிடங்கள், சடசடனெச் சரியும்...”
“ஸ்வாமி! அந்தப் புத்தப் பண்டாரங்கள்...”
“அவர்களா? ஆரியத்தை அழித்தொழிக்க முனைந்த அந்த அசுரர்களா? கட்டிடத்தின் அடியிலே சிக்குண்டு சிலர், நெருப்பிலே பலர், இடிபாட்டுக்கடியிலே சிலர்—இப்படிச் செத்துத் தொலைவார்கள். பிணக் குவியல்! நலந்தா, புத்தமதத்தாரின் பாசறை என்றார்களே—சுடுகாடு ஆகப்போகிறது, நாளைக்கு. உத்தமனே! எல்லாச் செம்மரத் தூண்களிலும் நான் கொடுத்த ‘பொடி’ சேர்த்துவிட்டாயல்லவா, தவறாமல்?”
“ஒவ்வொன்றிலும்—தாங்கள் சொன்ன அளவு! ஒவ்வொரு நாளும் அடிமடி நிறையக் கட்டிக்கொண்டு போயல்லவா, தூண்களின் துவாரத்தில் தூவிவிட்டு வந்தேன்.”
“அவனுக்குத் துளியும் சந்தேகம் எழவில்லையே...?”
“ஏமாளிதானே! என் மகன், வாசமல்லிகாவுடன் காதல் நாடகமாடினானே, அதைக் கண்டே நம்பிவிட்டான்.”
“ராமப்பிரசாதன் அறிவானோ?”
“இல்லை, ஸ்வாமிகளே! சிறுவன், மேலும் இளகிய மனம்! இந்தக் காரியத்தை அவன் சதி, சண்டாளத்தனம், கொலை பாதகம் என்று எண்ணிக் கொள்வான். என் சொல்லையும் மீறுவான். நமது இரகசிய ஏற்பாடு அவனுக்குத் துளியும் தெரியாது...அப்படி நடந்து கொண்டேன்...”
“ஒரு மண்டலாதிபதிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பம் உனக்கு இருக்கிறது ரங்கராஜா. உம்! இருக்கட்டும். நீயே ஒரு மண்டலாதிபதியாக முடியாதா என்ன? ஐயன், நீ செய்துள்ள சேவைக்கு அருள் பாலித்தாக வேண்டுமே...”
“ஸ்வாமி! யாககுண்டத்து நெருப்பு, செம்மரத் தூண்களிலே பாய்ந்து, செம்மரத் தூண்களிலே உள்ள ‘அரக்குப் பொடி’யினால் நாசம், வெள்ளம் போலப் பாயும்...அதிலே ஏதும் தங்கு தடையிராதே...?”
“ஒரு துளியும் இல்லை. நிச்சயமாக, நாளைய தினம் நலந்தா சர்வ நாசத்தில் சிக்கப் போகிறது. அதனாலேயே, நானும், மற்றும் சில ஆரியோத்தமர்களும் வெளியேறிவிட்டோம்.”“பாவிகளா!” என்று தன்னையும் மீறிக் கூச்சலிட்டு விட்டான், ராமப்பிரசாதன்.
‘மல்லிகா! மல்லிகா!’ என்று அலறினான் — ஓடினான் நிசப்தமாய் இருந்த வீதிகளின் வழியே அவன்.
நலந்தாவுக்குத் தீ வைக்கிறார்கள்!
நலந்தாவுக்கு நாசம் விளைவிக்கிறார்கள்!
நாளைய தினம் நலந்தாவில் படுகொலை!
வாசமல்லிகா!
நலந்தா!
நலந்தா!
கதறுகிறான் ராமப்பிரசாதன். மக்கள் நடுநிசிக் கூச்சல் கேட்டு பதைத்தெழுந்து வந்தனர்.
வாசமல்லிகா, மாளிகையில் இல்லை! தந்தையுடன், நலந்தா புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறாள் என்று காவலாளி சொன்னான். ஐயோ! என்று பயங்கரமாகக் கூச்சலுடன் ஓடினான், அவர்கள் சென்ற திக்கு நோக்கி.
விரட்டிக் கொண்டோடினர், பண்டிதரும் ஸ்வாமிகளும்!
“விடாதே, பிடி! விடாதே, பிடி!” என்று கூவினர்.
சிலர் பிடிக்க முயற்சித்தபோது, ராமப்பிரசாதன், பாதையில் கிடந்த பெருங் கற்களை அவர்கள் மீது வீசினான்—பற்களை நறநறவெனக் கடித்தான் “தொட்டால் பிணமாவீர்கள்! பாவிகளே! அங்கே அறிவாளர்கள், அறநெறி அறிந்தோர், புத்தனின் பொன்மொழியை உலகுக்கு அளிக்கும் உத்தமர்கள் படுகொலை செய்யப்படச் சதி நடந்துவிட்டது; நலந்தாவுக்குத் தீ மூட்டப் போகிறார்கள். உடனே தடுத்தாக வேண்டும்—தொடாதே—கிட்டே வராதே” என்று கூவியபடி ஓடினான். தடுக்க வந்தான் ஒரு குதிரை வீரன்—அவனைக் குப்புறக் கீழே தள்ளிவிட்டான்—குதிரை மீதமர்ந்தான்—சிட்டாகப் பறந்தது பரி.
நலந்தாவுக்குப் போகும் பாதை.அந்த அறிவாலயம் நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார், பூபதியார், மகளுடன்; நாலு மாடுகள் பூட்டப்பட்ட வண்டியில்.
அதோ, தெரிகிறது, தொலைவில்—குதிரையின் குடல் அறுந்துவிடும் வேகத்தில் செலுத்துகிறான்.
மல்லிகா!
மல்லிகா!
வண்டியில், பாதித் தூக்கத்தில் இருந்த மல்லிகாவுக்கு, இன்பக் கனவு போலிருக்கிறது, அந்தக் குரலொலி.
பூபதியார் வண்டியை நிறுத்தச் சொன்னார்; கீழே இறங்கி நின்றார்; வாசமல்லிகா விழித்துக் கொண்டு கொள்ளைக்காரனோ என்ற பயத்துடன் பார்த்தாள்.
குதிரை நின்றது; கடிவாளம் அறுந்தது;
“ஐயனே! என்னை மன்னித்தருளும்” என்று பூயதியார் பாதத்தில் வீழ்ந்தான் ராமப்பிரசாதன்.
“என்ன இது? மகனே எழுந்திரு...”
“ஐயோ! நலந்தாவுக்குத் தீமூட்ட, சதி நடந்திருக்கிறது. சதிகாரன் என்னைப் பெற்ற மாபாவி! சடைமுடிதரித்த சண்டாளனுக்குத் துணை—உடந்தை.”
“நலந்தாவுக்கு தீ! என்ன ராமப்பிரசாத்! மன மருட்சியில் பேசுகிறாயா?”
“இல்லை ஐயனே, இல்லை! ஆரிய வஞ்சகர்கள், அந்த அறிவாலயத்தை அழித்துவிடவும், அதிலுள்ள புத்த சாதுக்களைச் சாகடிக்கவும், நாளையதினம். நலந்தாவைக் கொளுவிடச் சதி செய்துவிட்டார்கள். நீங்கள் அனுப்பியிருக்கிற செம்மரத் தூண்களிலே இந்த அழிவுக்கான அரக்குப்பொடி அடைக்கப்பட்டிருக்கிறது.”பூபதியார் பதைத்தார்—தலை தலை என்று அடித்துக் கொண்டார்.
வண்டி கிளம்பிற்று, நலந்தாவை நோக்கி. மாடுகளுக்குத் தெரியுமா, நடைபெறப் போகும் ‘நீசத்தனம்’ இப்படிப்பட்டது என்று?
குதிரை வீரர்கள் பத்துப் பேர் ‘ஸ்வாமிகளின்’ ஆட்கள் வந்து கொண்டிருந்தனர் ராமப்பிரசாதனைப் பிடித்திட.
மாட்டு வண்டிக்கும் குதிரைகளுக்கும் போட்டி, முடிவு என்னவாகியிருக்க முடியும்?
வண்டியைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள்.
“ராமப்பிரசாத்! நான் இவர்களுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறேன்—வண்டிக்காரனும் துணை இருக்கிறான்—நீ, மல்லிகாவுடன்...” என்றார் பூபதியார்.
“இந்தக் கொலைபாதகர்களிடம் தாங்கள் சிக்கிக் கொள்வதைப் பார்த்த பிறகா...” என்றான் பிரசாத்.
“அங்கே, நலந்தாவில் ஆயிரக்கணக்கானவர்கள், தம்பி, அவர்கள் நாட்டுக்கு, உலகுக்கு, மனித குலத்துக்கு ஆற்றவேண்டிய தொண்டு, மிகத் தேவையானது...எனக்கென்ன இன்னும் வாழ்வு...”
“ஐயனே, ஐயனே.”
“கீழே இறங்குங்கள் மரியாதையாக...உயிர் தப்ப வேண்டுமானால்” என்று கொக்கரித்தனர் முரடர்கள்.
கை கலப்பு மூண்டுவிட்டது—வாட்கள் சுழன்றன—தடிகள் நொறுங்கின—மாடுகள் மிரண்டன—வண்டி உருண்டது—சக்கரத்தில் சிக்குண்ட மல்லிகா, கதறக்கூட இல்லை.
எதிர்ப்புறமிருந்து, பெரிய நெருப்பு ஜ்வாலை பார்த்தார், பூபதியார்—‘ஐயோ, என்னாலே, என் ஏமாளித்தனத்தாலே ஏற்பட்டதே பெரும் அழிவு’ என்று கதறினார்.காதுகளைப் பிய்த்துக் கொண்டு போகும் சத்தம்—ஜ்வாலை மேலே, மேலே எழும்பிற்று. நலந்தா நாசமாகிக் கொண்டிருக்கிறது—இங்கே மூவரும், குற்றுயிராகக் கிடக்கின்றனர்.
“பஸ்பமாகிவிட்டதா! ஒழிந்தார்கள். நலந்தா அழிந்த பிறகு இதுகளுக்கு நாதி ஏது” என்று கோரச் சிரிப்புடன் கூவினார் ஸ்வாமிகள்.
“தங்கள் மகன்...” என்று கூறிக் கண்ணீர் சிந்தினான், யாரோ ஒருவன்.
“ஆரிய மார்க்கம் பிழைத்தது; பண்டிதரே, உம்மாலே, நலந்தா அழிந்தது. மலைமலையாகக் குவித்து வைத்திருந்த ஏடுகள் பிடி சாம்பலாகி இருக்கும். எந்த மன்றத்தில் அமர்ந்து அவர்கள் தமது மார்க்கத்தைப் போதித்து வந்தனரோ, அங்கேயே, பிணம்—பிணமா—வெந்து கருகிச் சாம்பலாயினர்” என்று பேய்ச்சிரிப்புடன் கூவினார் ஸ்வாமிகள்.
“என் மகன் இறந்துவிட்டானாம், சுவாமி” என்று கதறினார் பண்டிதர்.
“பகவத் சங்கற்பம், பண்டிதரே! பதினாயிரம் வராகன் உமக்கு முதல் தவணையாகத் தருகிறேன்” என்றான் கல்னெஞ்சக்காரன்.
“பாவி” என்று பண்டிதர் பதைத்துக் கதறிக்கொண்டே, ஸ்வாமிகளைத் தாக்கினார்.
“மகன் இறந்தானாம்—இவனுக்கு அதனால் மனக் குழப்பம்—பிடித்துக் கட்டிப் போடுங்கள்” என்று கட்டளை பிறப்பித்தான் காதகன்.
★