பிள்ளையார் சிரித்தார்/பிள்ளையார் சிரித்தார்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

Page3-1024px-பிள்ளையார் சிரித்தார்-சிறுகதைகள்.jpg


1
பிள்ளையார் சிரித்தார்

மிகச் சிறிய ஊராக இருந்தாலும், சங்கரபுரம் சிறந்த புண்ணிய சிவஸ்தலம். அழகான ஊருக்குச் சோபை அளிப்பதேபோல், மத்தியில் ஏகாம்பரேசுவரருடைய ஆலயம் எழும்பி நின்றது. ஊரைச் சுற்றிலும் வேலி போட்டாற்போல் வளமான மணியாறு ஒடிக் கொண்டிருந்தது.

அநேகமாய் ஏழைச் சர்மாவைத் தவிர அந்த ஊரில் எல்லோருமே சுக ஜீவனம் செய்பவர்கள் என்றே சொல்ல வேண்டும். அக்கிரகாரத்தின் கோடியிலே வளைவு திரும்பியதும் காணப்படும் பாதி வேய்ந்த கூரை வீடுதான் சர்மாவினுடையது. தினமும் அவர் உஞ்சவிருத்தி செய்து சம்பாதித்துக் கொண்டு வரும் அரைச் செம்பு அரிசியை எதிர்பார்த்து, அதனுள் ஐந்து ஜீவன்கள் அதாவது, அவரது தர்ம பத்தினியைத் தவிர, அதிக ஏற்றத்தாழ்வான வயதுகளுக்கு இடையே வந்து அவதரித்த நான்கு குழந்தைகள்-வாழ்ந்து வந்தன.

ஐம்பத்து ஆறாவது வயதை அணுகிக்கொண்டிருக்கும் சர்மா அபாரமான தெய்வ பக்தி கொண்டவர்; பூஜை செய்ய ஒரு நாள்கூடத் தவறமாட்டார்; காலையிலும் மாலையிலும் சிவதரிசனம் செய்யாமல் நீர் அருந்துவதுகூடக் கிடையாது. அவருக்கு வாய்த்த மனைவியோ சர்மா அவர்களுக்கு நல்ல தசாபுக்திகள் நடந்து வந்த காலத்தில் கிடைத்த ஒரு பொக்கிஷம்தான் இந்தப் பத்தினித் தெய்வம். 'இல்லை' என்று தன் கணவர் அறிய அவள் குறை ஏதும் வைட்பதில்லை.

தானும் குழந்தைகளும் துளசி ஜலத்துடன் இருக்க நேர்ந்தபோதும்கூட, மனைவியால் உபசரிக்கப்பட்டு வயிறார உண்டுவந்த சர்மாவுக்கு வீட்டின் சூழ்நிலையே தெரியாமல் இருந்து வந்தது ஆச்சரியம் இல்லை அல்லவா? ஆனல், ஒரு நாள் அதை அவரும் உணரும் சந்தர்ப்பம் ஒன்று எப்படியோ ஏற்பட்டுவிட்டது!

சர்மா துடிதுடித்துப் போனார். 'இப்படி எத்தனை நாள்கள் என் பொருட்டுத் தாயும் குழந்தைகளும் பட்டினி கிடந்திருப்பார்களோ! என்று எண்ணிப் பார்க்கக்கூட அவர் மனம் தாளவில்லை. தம்மையும் மீறி 'ஹோ' வென்று அழுதுவிட்டார். அவரது அந்த வேதனைக் கண்ணிர் வெண்ணீறணிந்த கைலைநாதனது மேனியைக் கொதிநீராகப் பட்டுப் பொசுக்கியிருக்க வேண்டும். இனித் தாமதித்தால், தம் பக்துன் உயிர் - வாடிப்போகும் என்பதை உணர்ந்தார் பரமன்.

ஆனால், பரமனுக்கு சர்மாவைப் போலவே, நாள் தவறாமல், இருமுறை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு, ஆயிரமாயிரம் விண்ணப்பங்களை வாரி இறைத்துவிட்டுச் செல்லும் வேறு ஒரு பக்தனும் உண்டு. அவன் பெயர் தனபாலன். பெயருக்கேற்றபடி அவனிடம் மிகுந்த செல்வம் மண்டிக் கிடந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் பேராசை அவனை விடவில்லை. தர்மம் என்கிற வார்த்தைக்கே அவனுக்குப் பொருள் தெரியாது. மகா லோபி அவன் கைக்குச் சென்ற பொருள், காலன் வாயில் விழுந்த உயிர்போல, ஒரே ஐக்கியம் தான்!

ஆயினும், செல்வத்தின்மீதுள்ள பேராசையால் அதை மீண்டும் மீண்டும் பெருக்க எண்ணி, தெய்வத்தினிடம் அவன் நம்பிக்கை வைத்தான். 'ஆயிரம் ரூபாய்க்குத் தான் ஆரம்பித்த வியாபாரத்தை லட்சத்திற்குக் கொண்டுவந்த தெய்வம், நம்பினால் ஏன் ஒரு கோடி வரைக்கும் தன்னைக் கொண்டுபோய் விடாது?' என்கிற உள்ளச் சபலத்தினால் ஏற்பட்டதுதான் அவனுடைய நாளுக்கு இருமுறை கோயில் விஜயமும், பைசா பைசாக் கர்ப்பூர்ம் வாங்கித் தவறியும் கொளுத்திவிடாத கடவுள் பக்தியும்!

அன்று சர்மா வழக்கம்போல், ஒரு குரல் உள்ளம் உருகி அழுதுவிட்டுச் சென்ற பத்து நிமிஷங்களுக்கு எல்லாம் தனபாலன் உள்ளே துழைந்தான். அப்போது தற்செயலாய்த் தெய்வங்கள் இரண்டும் கர்ப்பக் கிருகத்தில் இருந்து பேசிக்கொள்வது தனபாலன் செவிகளில் விழவே, 'சட்' டென்று சனிபகவான் சந்நிதிப் பக்கமாக வந்து ஒளிந்துகொண்டபடி தெய்வச் சம்பாஷணையை உன்னிப்பாகக் கேட்டான்; கடவுளுக்குத் தெரியாமல் ஒட்டுக் கேட்பதாகத்தான் அவன் நினைப்பு!

"ஏண்டா கணபதி, அந்தச் சர்மாதான் இப்படித் தினம் பசியும் பட்டினியுமாகக் கிடந்து கூண்டோடு நொந்து மாய்கிறானே! அவனுக்கு இன்னும் நீ ஒரு வழி செய்யக் கூடாதா?" — இது பரமசிவனின் குரல். "செய்யத்தான் போகிறேன், அப்பா! கல்லுமாதிரி உட்கார்ந்திருக்கிறேன் என்றால் காலம் வரவில்லை! காத்திருந்தேன். சர்மா பக்குவம் அடைந்துவிட்டான். இப்போது ஒரு நல்ல ஏற்பாடும் செய்துவிட்டேன்" — இது பிள்ளையாரின் குரல்.

என்ன ஏற்பாடு குழந்தாய் அது?"

"வருகிற புதன்கிழமையன்று ஐயாயிரம் ரூபாய் அந்தச் சர்மாவுக்குக் கொடுக்கப்போகிறேன்!"

"அப்படியா? ரொம்பச் சந்தோஷம்! பிள்ளை குட்டிக்காரன். சம்சாரி, பிழைத்துப் போகட்டும்!"

இதற்குள் எங்கோ வேறு மனித அரவம் கேட்கவே, தெய்வங்கள் இரண்டும் மீண்டும் மெளனிகளாகிவிட்டன. ஆனால், தனபாலன் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. தெய்வ சம்பாஷணையின் சாராம்சத்தை அறிந்துகொண்டுவிட்ட அவன் மனம், சந்தோஷ மிகுதியால் குதிபோட்டது.

பெரிய தேவரகசியத்தையல்லவா கேட்டுவிட்டான்! சர்மாவுக்குக் கடவுள் கொடுக்கப்போகும் பொருளைப் பற்றி -அதாவது நாளைய விதியைப்பற்றி அல்லவா அவன் அறிந்துவிட்டான்! மனம் கட்டு மீறி அலைந்தது. எப்படியாவது சர்மாவுக்குப் பிள்ளையார் கொடுக்கப்போகும் பணத்தைத் தந்திரமாகத் தான் அடைந்துவிடுவதற்கான குறுக்கு வழிகளில் அவன் மூளை வெகு தீவிரமாக வேலை செய்தது!

'ஏழைச் சர்மாவுக்கு இத்தனை பணம் ஒரேயடியாக எதற்கு?’ என்பது ஒரு காரணம். அப்படியே கிடைத்தாலும், அதை அருமை தெரிந்து தன்னைப் போல் வைத்துக் காப்பாற்றத் தெரியுமா அவருக்கு என்பது மற்றறொரு காரணம்! இறுதியாகத் தனபாலன், ஒரு புதுத் தந்திரத்துடன் சர்மாவின் வீட்டை அடைந்தான். அதாவது, தனபாலன் முன்னதாகவே தன் கைப்பணம் ஆயிரம் ரூபாயைக் கொண்டுபோய்ச் சர்மாவிடம் கொடுத்து விட்டு, "உமக்கு நாளைப் புதன்கிழமை என்ன கிடைக்கிறதோ, அதை நீர் அப்படியே என்னிடம் கொடுத்துவிட வேண்டும்!" என்று ஒரு நிபந்தனை மட்டும் போட்டான்.

இதைக் கேட்ட சர்மா சிரித்தார். "தனபாலா! அன்று அப்படி எனக்கென்ன அதிர்ஷ்டம் அடித்துவிடப் போகிறது? அப்படி அடித்தாலும் அரைப்படிக்கு ஒரு படி அரிசி கிடைக்கலாம். இல்லாவிட்டால் என்னை மாத்திரம் சில நாள் சாப்பிடக் கூப்பிடும் பண்ணையார் அன்று, 'நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து போஜனம் செய்ய வேண்டும்’ என்று அழைக்கலாம்; இரண்டு வாழைக்காய்களுக்கு நான்கு வாழைக்காய்களாக உபாதானம் கிடைக்கலாம். இவற்றை எல்லாம் நம்பி நீங்கள் ஏன் அநாவசியமாக ஆயிரம் ரூபாயைத் துாக்கி எனக்குக் கொடுத்து நஷ்டப்பட வேண்டும்?" என்றார் சர்மா, சூதுவாது அறியாமல்.

ஆனால் தனபாலன் அதை லட்சியமே செய்யவில்லை. அவன் தேவ ரகசியத்தை அறிந்தவனல்லவா? துணிந்து சொன்னான். உமக்கு அதைப்பற்றி என்ன? கிடைத்தால் கிடைத்ததைக் கொடுத்துவிடும். இல்லாவிட்டால் இந்த ஆயிரம் ரூபாயையும் நீர் எடுத்துக்கொண்டுவிடும்" என்றான். தெய்வ வாக்கு ஒரு காலும் பொய்யாகாது என்கிற தைரியம் அவனுக்கு!

குறிப்பிட்ட புதன்கிழமையும் வந்தது. சர்மாவைத் தனபாலன் காலையிலேயே வந்து எச்சரித்துவிட்டான். இன்று நீர் சற்று நிதானமாகக் கவனமாகக் கண்ணைத் திறந்துபடியே தெருவில் நடந்து செல்லும். கீழே ஏதாவ்து துணிமூட்டைபோல் கிடந்தால், ஆசாரத்தை எண்ணி, அதை அலட்சியமாக விலக்கிவிட்டு வந்துவிட வேண்டாம். முன்பின் பரிச்சயமில்லாதவர்கள்கூட, யாராவது பெயரைச் சொல்லி அழைத்தாலும் தயங்காமல் செல்லும்" என்று எல்லா வழிகளையுமே விவரமாக விளக்கினன். ஏனென்றால், வரப்போகிற ஆதாயத்தை எண்ணி, முன்பே துணிந்து முதல் போட்டவனல்லவா அவன்? அந்தப்படியே நடப்பதாக ஒப்புக்கொண்டார் சர்மா. தம்மை நம்பி ஆயிரம் ரூபாயைக் கொடுத்திருக்கிறானே என்கிற விசுவாசம் அவருக்கு.

ஆனால் என்ன ஆச்சரியம்! உஞ்சவிருத்திக்குக் கிளம்பிய சர்மா, ஒரு நாளுமில்லாமல் அன்று மட்டும் சோதனை போல், பிடி அரிசிகூடக் கிடைக்காமல், மிகச் சோர்வுடன் வீடு திரும்பினார். தனபாலன் தெரிவித்ததுபோல் துணி மூட்டைக்குப் பதில் ஒரு கல்லைக்கூட அவர் வழியில் காணவில்லை. தெரிந்தவர்கள்கூட அன்று ஏனோ முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்; சலனமடையாத சர்மாகூடச் சஞ்சலம் அடைந்தார்.

ஆனால், தனபாலனுக்கு மிகுந்த ஆத்திரந்தான் வந்தது. "நீர் ஆகாசத்தைப் பார்த்தபடி கண்ணை மூடிக் கொண்டு கூப்பிடுவதுகூடக் காதில் விழாமல், மெய்ம்மறந்து நாம பஜனை செய்துகொண்டு போயிருப்பீர்" என்று இரைந்தான். ஆனால் சர்மா, இன்று நான் அப்படி நாம பஜனைகூடச் செய்யவில்லை என்று ஒரேயடியாகச் சாதிக்கவுமே, அவனது அடங்காத கோபமெல்லாம், தன்னை ஏமாற்றிய பிள்ளையார்மீது திசை மாறிப் பாய்ந்தது.

வேகமாகக் கோயிலை அடைந்தவன், ஆத்திரம் தீரத் திட்டிக்கொண்டே, பொய் சொன்ன குற்றத்திற்காகப் பிள்ளையாரின் தொந்தியில் தொடர்ந்து குத்துகள் விட்டான். ஆனால், அப்போதுதான் தனபாலனே திடுக்கிடும்படியான ஒரு சம்பவம் நடந்தது.

அவன் பிள்ளையாரைக் குத்திக்கொண்டிருக்கும் போதே, மரத்தைச் சுற்றி மலைப்பாம்பு இறுக்குவதைப் போல், தன் கழுத்தை ஏதோ ஒன்று சுற்றி வளைப்பதை உணர்ந்தான். மறுகணம் பிள்ளையாரின் நீண்ட துதிக்கையினுள், தயிர் மத்துப்போல், இறுக்கப்பட்டு நின்றான் தனபாலன். அந்த இரும்புப்பிடியின் அணைப்பிலே மூச்சுத் திணறிக்கொண்டிருந்த தனபாலனது செவிகளில் சற்றைக்கெல்லாம் பழக்கமான ஏதோ ஒரு குரல் விழுந்தது.

"ஏனப்பா! கணேசா, இன்றுதானேடா புதன் கிழமை? முன்பு நீ சொன்னபடி சர்மாவுக்கு ஐயாயிரம் ரூபாயைச் சேர்ப்பித்துவிட்டாயோ?” என்றார் பரமசிவன், ஒன்றும் அறியாதவர்போல்.

"'ஆஹா! நான்கு நாட்களுக்கு முன்னமேயே ஆயிரம் ரூபாயை அனுப்பிவிட்டேனே! இப்பொழுது மீதிப் பணத்திற்குத்தான் வழி செய்துகொண்டிருக்கிறேன்!” என்று விநாயகர் சொல்லி முடிக்கு முன்னர், "அப்போது மீதி நாலாயிரத்தையும்கூட, நானேதான் கொடுத்து உங்கள் வார்த்தையை நிறைவேற்ற வேண்டுமா?" என்றான் தனபாலன், அழுதவண்ணம், கழுத்து வலி பொறுக்க மாட்டாதவனாய்!

"சந்தேகம் இல்லாமல் நீதான் கொடுக்க வேண்டும்! காசையும் பணத்தையும் உன்னைப் போல் நானா உள்ளே அமுக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன்?" என்றார் பிள்ளையார்.

அப்போது, "என்னை விட்டுவிடுங்கள், சுவாமி! வீட்டுக்குப்போய்ப் பாக்கித் தொகையையும் கொடுத்துத் தீர்த்துவிடுகிறேன்" என்று கெஞ்சினான் தனபாலன், உயிரின்மீதுள்ள ஆசையினால்.

உடனே, "ஏமாற்றினால் என்ன ஏற்படும் தெரியுமா?" என்றார் பிள்ளையார், சற்று உரத்த குரலில். "ஐயோ! சத்தியமாக அந்த எண்ணமே எனக்குக் கிடையாது சுவாமி! ரூபாய் செலவழித்துக் கற்றுக் கொண்ட புத்திமதியை அதற்குள் நான் மறந்துவிடுவேனா?" என்ற தனபாலன், மறுகணம் 'தப்பினோம் பிழைத்தோம்' என்று வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தான்.

கஞ்சப் பிரபுவான தனபாலன் தம் கையில் மீண்டும் ஒரு நாலாயிரம் ரூபாய்களைக் கொண்டு வந்து கொட்டவுமே, சர்மா ஒரு கணம் "திருதிரு" வென்று விழித்தார், ஒன்றும் புரியாதவராய் எல்லாம் உணர்ந்த பிள்ளையார் கல்லாக உட்கார்ந்திருந்தார்.