புறநானூற்றுச் சிறுகதைகள்/9. அவனுக்குத்தான் வெற்றி!

விக்கிமூலம் இலிருந்து
9. அவனுக்குத்தான் வெற்றி!

இந்த உலகத்தில் இரண்டு வகையான காதல் காவியங்கள் வழங்குகின்றன. காதலித்தவனும் காதலித்தவளும் தங்கள் கருத்து நிறைவேறி இன்பமுறும் காவியங்கள் ஒரு வகை. இருவருமே காதலில் தோற்று அமங்கலமாக முடியும் காவியங்கள் இன்னொரு வகை. இருவகைக் காவியங்களும் காதல் காவியங்களே.

ஆனால் காதல் நிறைவேறி மங்கலமாக முடியும் காவியத்தை விடக் காதல் நிறைவேறாமல் அமங்கலமாக முடியும் காவியங்கள்தாம் படிப்போர் மனங்களை உருக்கித் தம் வயமாக்கி விடுகின்றன.

சங்க இலக்கியங்களில் காதல் நிறைவேறாமல் அவல முடிவெய்திய நிகழ்ச்சிகள் பெரும்பான்மையாகக் காணக் கிடைப்பதில்லை. ஆனால் இதற்கு ஒரு சிறு விதிவிலக்காக நிறைவேறாத - நிறைவேற முடியாத காதலை வெளியிட்டுக் குமுறும் ஒரு பெண்ணின் கதையைப் புறநானூற்றில் காண்கிறோம். புறநானூற்றிலுள்ள மிகப் பல சோக நிகழ்ச்சிகளுள் நிறைவேறாத காதலின் ஏக்கமெல்லாம் இழைந்து கிடக்கும் இந்த நிகழ்ச்சியும் ஒன்று.

போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என்று ஒரு சோழ மன்னன். இந்தச் சோழ மன்னன் எல்லோரையும் போலச் சாதாரணமான வீரன் மட்டுமில்லை. பார்த்தவர் கண்களை மீளவிடாத கட்டழகன். ஆண்களையே மயக்கிவிடுகிற அழகு என்றால், பெண்கள் இந்த அழகுக்குத் தப்பிவிடவா முடியும்? ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, உயர்ந்த காவியத்தைச் சுவைப்பதிலுள்ள ஈடுபாடு அவன் அழகைக் காண்பதில் இருந்தது. இருப்பிடம் தெரியாமல் மணத்தைப் பரப்பும் பூவைப் போன்ற அமைதியான அழகென்று சொல்லிவிடமுடியாது இந்த அழகை கவர்ச்சியும் எழுச்சியும் உண்டாக்கிக் காணும் கண்களை மலர வைக்கும் செயல் திறன் வாய்ந்த அழகு இது. ஆனால் பலரைக் கவர்ந்த இந்த அழகனை எதிர்த்துப் போர் செய்யவும் ஒருவன் முளைத்தான். ‘முக்காவல் நாடு’ என்று சோழநாட்டுக்கருகில் ஒரு பகுதி இருந்தது. அதைப் பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர். அவர்களில் ஒருவன் ஆமூரை ஆண்டு வந்த சிற்றரசன்.

ஆமூரரசன் மற்போரில் வல்லவன். அதனால் அவனை ஆமூர்மல்லன் என்றே சிறப்புப் பெயரிட்டு அழைத்து வந்தார்கள். ஆமூர் மல்லன் தான் ஒரு சிற்றரசனாக இருந்தும் பேரரசனான போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியைப் பற்றி அடிக்கடி அவதூறாக இகழ்ந்து பேசி வந்தான்.

இதன் காரணமாகப் போர்வைக் கோப்பெருநற்கிள்ளிக்கும் முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனுக்கும் போர் ஏற்பட்டது. போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் தந்தைக்குப் பெயர் ‘தித்தன்’ என்பது.கிள்ளியின் போர்த்திறனிலும் வீரத்திலும் அதிக அக்கறை காட்டிப் பெருமை கொள்வது தித்தனின் வழக்கம்.

முக்காவல் நாட்டு ஆமூரில் பெருங்கோழி நாய்கன் என்ற ஒரு செல்வச் சீமான் வாழ்ந்து வந்தான்.பெருங்கோழிநாய்கனுக்கு ஒரே ஒரு மகள். ‘நக்கண்ணை’ என்று பெயர். அவள் மணமாகாதவள். கன்னிமை செழித்து நிற்கும் பருவம். குறுகுறுப்பான சுபாவம். புதுமைக் கட்டமைந்த அழகு. பருவமடைந்து வீட்டிற்குள்ளேயே கன்னிமாடத்தில் இருக்கச் செய்து பாதுகாத்து வந்தார்கள் அவளை.

ஆமூர் நகரத்திற்குள் நுழையும் தலைவாயிலுக்கருகே பிரதானமான வீதியில் அமைந்திருந்தது பெருங்கோழி நாய்கனின் மாளிகை.

ஒருநாள் காலை நேரம். அப்போதுதான் நீராடிவிட்டுக் கன்னிமாடத்திற்குள் நுழைந்திருந்தாள் நக்க்ண்ணை வெண்கலக் கூண்டிலிருந்துதுவாரங்களின் வழியே சுருள் சுருளாகக் கிளம்பும் அகில் புகையில் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள். அலை அலையாகப் புரண்ட கருங்கூந்தலுக்கு நடுவே சுருள் சுருளாக இழைந்த புகைப் படலங்கள் புகுந்தன. குளித்து முடித்தவுடன் வாசனை நிறைந்த அகிற் புகையை நுகருவதில் நாசிக்கு இதமான ஒரு திருப்தி இருக்கிறது. அந்த இன்பமயமான வாசனையின் போதையில் கட்டுண்டிருந்த அவள் திடுதிடுவென்று வீதியில் ஆரவாரத்தோடு பலர் ஓடிவருகின்ற ஒலியைக் கேட்டுச் சாளரத்தின் வழியாகத் தெருவைப் பார்த்தாள்.

யானைகளும் குதிரைகளும் தேர்களும் தொடரப் பலவகை ஆயுதங்களைத் தாங்கிய வீரர்களின் பெருங்கூட்டம் நகரத்திற்குள் நழைந்து கொண்டிருந்தது. படைகளைப் பார்த்தால் உள்ளுரைச் சேர்ந்தவையாகத் தெரியவில்லை. யாரோ வெளியூரார்தான் படையெடுத்து வந்திருக்க வேண்டும் என்று நினைத்தாள். இந்தச் சமயத்தில் அவளோடு கன்னிமாடத்தில் துணையிருக்கும் தோழி பரபரப்பாக அங்கே ஓடிவந்தாள்.

“அம்மா! அம்மா! கேட்டீர்களா செய்தியை?...”

“எந்தச் செய்தியையடி சொல்கிறாய்?”

“நம்முடைய ஆமூரைத் தாக்குவதற்காகச் சோழ மன்னர் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் படைகள் நகருக்குள் துழைந்துவிட்டன. இதோ தெருவைப் பாருங்களேன்?”

“ஒகோ! அதுதானா இந்தப் படை?”

அவள் விழிகள் மீண்டும் சாளரத்தின் வழியே தெருவைப் பார்த்தன.

அப்போது படைகளுக்கு நடுவே.? நடுவே என்ன? மேகங்களுக்கு நடுவே கதிரவனைப் போல ஒரு தேர் மெல்ல நகர்ந்து வருவதைக் கண்டாள். அந்தத் தேரின் இடையே கரும்பு வில்லேந்திய மன்மதனைப்போல வீற்றிருந்தான் ஒர் ஆணழகன். ‘அழகு என்றால் இப்படியும் ஒர் அழகா? அதுவும் ஆண்களில் இப்படி ஒர் அழகன் இருக்க முடியுமா?’

“தோழி”

“என்ன அம்மா?”

“அதோ தெருவில் போகின்ற தேரில் பார்த்தாயா?.”

“பார்த்தேன்! பார்த்தேன்! பார்க்காமல் என்ன? அவர்தான் சோழ மன்னர் போர்வைக் கோப்பெருநற் கிள்ளி”

“என்ன, சோழ மன்னரா இவர்?”

“அதற்குச் சந்தேகம் என்ன அம்மா? நம் நகரத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கும் சோழ மன்னர்தான் இவர்.”

அவள் கண்கள் தேரைவிட்டு அகலவே இல்லை.ஆனால் அவள் காணவேண்டும் என்பதற்காகத் தேர் நின்று கொண்டிருக்குமா என்ன? சாளரத்திலிருந்து காண முடிந்த பார்வை எல்லையைக் கடந்து சென்றுவிட்டது தேர்.

தேர் மட்டுமா போயிற்று? அந்தத் தேரில் இருந்தவனோடு அவள் உள்ளமும் ஏறிக் கொண்டுபோய் விட்டதே? நக்கண்ணை கன்னிமாடத்தில் வசித்து வருகிறவள். இதுவரை ஆண்களையே கண்ணால் காணாமலிருந்தவள்; அவள் இதயம்.? பாவம் அது அந்தத் தேர்மேலிருந்த அழகுக்குத் தோற்றுச் சரணாகதி அடைந்துவிட்டது.

“தோழி! ஆண்களில் இப்படி அழகுள்ளவர்.”

“வேறெங்கும் இல்லை அம்மா” - அவள் தொடங்கிய வாக்கியத்தைத் தோழி முடித்தாள்.

படைகள் எல்லாம் சென்றுவிட்டன. தெரு பழைய அமைதியை அடைந்துவிட்டது. சூன்ரியம் திகழும் வீதியை வெறித்துப் பார்த்தாள் நக்கண்ணை.

“அம்மா! இனிமேல் இந்த நகரத்தின் நிலை மதில்மேற் பூனைபோலத் திண்டாட்டம்தான்!”

“ஏன் அப்படி?”

“நம்முடைய அரசராகிய ‘ஆமூர்மல்லர்’ வெல்வாரா? சோழன் வெல்வானா? நம் அரசனுக்கு வெற்றி கிடைத்தால் கவலை இல்லை. சோழனுக்கு வெற்றி கிடைத்தால் நம் கதி என்ன ஆகுமோ?”

“.........”

“வெற்றியா? தோல்வியா? - தோல்வியா? வெற்றியா? இரவு பகலாக இந்த இரண்டும் கெட்ட நிலைதான் இனிமேல்....”

“ஊரை வெல்வதற்கு முன்பே அவர் ஒர் உள்ளத்தை வென்றுவிட்டாரே! அது உனக்குத் தெரியுமா?”

“என்னம்மா சொல்கிறீர்கள்?”

“புரியவில்லையா? இதோ என் இந்த முன்கைகளில் துவண்டு சுழலும் வளைகளைப் பார்! இவை சொல்லும்”

“தோழீ! நீ கூறிய இரண்டுங்கெட்ட நிலை இந்த ஊருக்கு மட்டுமில்லை. இனிமேல் எனக்குந்தான்.”

“சோழன்தான் வெல்வான் என்கிறார்கள் சிலர். ஆமூர் மல்லர்தான் வெல்வார் என்கிறார்கள் சிலர். யார் வெல்வார் களோ? யார் தோற்பார்களோ? என்ன ஆகுமோ?”

“..........”

நாலைந்து நாட்கள் கழிந்தன. அன்று போலவே இன்றும் காலை நேரம் தெருவில் ஏதோ வெற்றி ஆரவாரம் கேட்கிறது. “வாழ்க! வாழ்க!” என்ற பேரொலி விண்ணை முட்டுகிறது. நக்கண்ணை ஆர்வம் அலைமோதும் உள்ளத்தோடு கன்னி மாடத்துக் கட்டுப்பாட்டையும் மறந்து தெருவிற்கு ஓடி வருகின்றாள். தண்டைகளும் சிலம்புகளும் கலின் கலின் என்று ஒலிக்கின்றன. தெருத் திண்ணையில் நின்று பார்க்கிறாள். பாலைப் பூசினாற் போன்ற நீண்ட கயல் விழிகள் மலர மலரப் பார்க்கின்றாள்.

அதே தேர்! அதே சோழ மன்னன்! அதே அழகு வெற்றிச் சங்குகள் முழங்க ஆமூரை வென்றுவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்தான்! நக்கண்ணைக்கு அப்படியே ஒடிப்போய்த் தெருவில் இறங்கித் தேரின்மேல்தாவி அவனைத் தழுவிக்கொள்ள வேண்டும்போல உள்ளம் குறுகுறுத்தது. ‘வெட்கம்’ என்று ஒன்று இருந்து தொலைக்கிறதே! அது நினைத்ததை நினைத்தபடி செய்யவிட்டால் தானே?

தேர் சென்றது. தெருக்கோடியில் மறைந்தது? வாழ்த் தொலிகளின் குரல் மங்கித் தேய்ந்து மெலிந்தன. நக்கண்ணையின் விழிகளின் ஒரத்தில் இரண்டு கண்ணிர் முத்துக்கள் திரண்டு நின்றன.

“அம்மா இதென்ன? இப்படித் தெருவில் நின்று கண்ணிர் சிந்திக் கொண்டு.”

நக்கண்ணை திரும்பிப் பார்த்தாள். தோழி பின்னால் நின்று கொண்டிருந்தாள்.

“தோழி! சோழனுக்குத்தான் வெற்றி! சோழன் வென்று கொண்டு போய்விட்டான்.”

“எதை அம்மா”

“என்னை; என் மனத்தை; என்னுடைய எல்லா வற்றையுமேதான்.”

“நீங்கள் என்ன அம்மா? சுத்தப் பைத்தியமாக அல்லவா இருக்கிறீர்கள்? அவன் நாடாளும் பேரரசன். நம்மைப் போன்ற நிலையிலுள்ளவர்கள் அவனைப் போன்றவர்கள்மேல் இப்படி ஆசை கொள்வதே தவறு!”

“தவறுதான்! ஆனால், அது இந்தப் பாழாய்ப் போன மனத்துக்குப் புரியவில்லையே!” நக்கண்ணை கண்ணைத் துடைத்துக்கொண்டு உள்ளே போனாள்.

ஆடாடு என்ப ஒரு சாரோரே
ஆடன்று என்ப ஒரு சாரோரே
நல்ல பல்லோர் இருநன் மொழியே
அஞ்சிலம்பு ஒலிப்ப ஒடிஎம்மின்

முழாவரைப் போந்தை பொருந்தி நின்று
யான் கண்டனன் அவன் ஆடாகுதலே! (புறநானூறு - 85)

ஆடு = வெற்றி, ஒரு சாரோர் = ஒரு சிலர், முழாவரைப்போந்தை = மத்தளம் போலப் படுத்த பனைமரத்தின் அருகிலுள்ள திண்ணை, ஆடாகுதல் = வெற்றியடைந்திருத்தல், கண்டனன் = பார்த்தேன்.

இந்தப் பாடல் நக்கண்ணையின் நிறைவேறாத காதலின் துன்பத் தழும்பாக இன்னும் புறநானூற்றில் இருந்து கொண்டு தான் இருக்கிறது!