பூக்கும் மாலை
பூக்கும் மாலை
மேலாண்மை–பொன்னுச்சாமி
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை — 600 017.
- முதற் பதிப்பு : அக்டோபர், 2007
- உரிமை : ஆசிரியருக்கு
- பதிப்பாசிரியர் : வானதி திருநாவுக்கரசு
- விலை : ரூ. 70–00
*Title POOKKUM MAALAI *Language Tamil *Subject Short Stories *Author Melanmai Ponnusamy *Edition First Edition, October - 2007 *Pages xiv + 210 = 224 *Publication Thiruvarasu Puthaka Nilayam
23/13 Deenadayalu Street,
Thyagaraya Nagar, Chennai - 17.
Ph: 24342810 / 24310769*Price Rs. 70-00
- ஒளி அச்சு : நேரு அச்சகம், இராயப்பேட்டை, சென்னை — 600014
- Printed at : Nathan & Company, Chennai-42.
சமர்ப்பணம்
அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் பொறுப்பாளர்களில் முக்கியமானவரும், விசா கிடைக்காமல் போன துரதிருஷ்டத்தால் அமெரிக்கப் பயணம் தடைப்பட்ட பின்பும், அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை எனது தமிழ்ப்பணிக்கென அறிவித்திருந்த கீர்த்திமிக்க- பணமதிப்புமிக்க - ‘மாட்சிமைப்பரிசு’ எனும் சிறப்புமிகு விருதை...
சென்னைக்கே வந்திருந்து... என்னையும், என் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து மிகச் சிறப்பான - செழிப்பான - விழா நடத்தி, விருது தந்து கௌரவித்தவரும்,
தமிழையும், தமிழ்ப் படைப்பாளிகளையும் போற்றிப் பாதுகாத்து மகிழ்கிற உயர் பண்பாளருமான...
(Axes) ஆக்ஸஸ் டெக்னாலஜி திருமிகு பால்பாண்டி அவர்களுக்கு.
அகம்–முகம்–உயிர்
தமிழில் சிறுகதை இலக்கியம் தொடர்கதை எனும் நாவல் இலக்கியம் இரண்டுக்கும் நீண்ட நெடிய பாரம்பர்யம் இருக்கிறது. புகழ்மிக்க வரலாறு இருக்கிறது.
சமகாலத்தின் சாஸ்திரங்களும், சடங்கு சம்பிரதாயங்களும், நிலவிய கருத்தியல்களும் ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு மீறிச் செயல்பட்டு... பால்ய மண எதிர்ப்பு, விதவா விவாகம், சர்வஜன சமத்துவம் என்று புதிய தடத்தில் துணிவுடன் சிந்தித்த வ.வே.சு. ஐயர், மகாகவி பாரதி போன்றவர்கள்தாம் முதல் சிறுகதைகளைத் தமிழில் படைத்தனர். தமக்கான புதிய சூழலைப் படைத்தனர்.
சிறுகதை இலக்கியம், நாவல் இலக்கியம் தமிழில் ஒவ்வொரு காலத்திலும் அலைவட்டமென விரிந்து பரந்து சென்று கொண்டேயிருந்தன. அறிவு ஜீவிகள் சொத்தாக மட்டுமே சுருங்கிக் கிடந்த இலக்கியம், நவீனக் கல்வி மக்களுக்குப் பரவப் பரவ... பரந்து விரிந்த வெகுஜன மக்கள் சிறுகதைகள் தொடர்கதைகள் வாசித்தனர்.ஒவ்வொரு குடும்பமும் சிறுகதைகள் தொடர்கதைகள் வாசிக்க... வாசிக்க... வாசிப்பியக்கமும், கல்வி இயக்கமும் பெருகப் பெருக... வெகுஜனப் பருவ இதழ்களின் விற்பனையும் லட்சக்கணக்கில் பெருகிற்று.
இன்றைக்கு என்ன நிலை?
சிறுகதை இலக்கியம் உயிருடன் இருக்குமா? தொடர்கதை எனும் நாவல் இலக்கியம் நிலைக்குமா? நீடிக்குமா? இடமற்றுப் போகுமா? இல்லாமலேயே போய்விடுமா? தமிழில் சிறுகதை, நாவல் இலக்கியமே மறைந்துவிடுமா? ஒழிக்கப்பட்டுவிடுமா?
இப்படிப்பட்ட கேள்விகள் ஏன் எழுகின்றன?
வாரத்துக்கு நான்கு சிறுகதைகள் பிரசுரித்த வெகுஜன வார இதழ்கள், இப்போது ஒன்றே ஒன்று பிரசுரிக்கின்றன.
இரண்டு தொடர்கதைகள் பிரசுரித்து வந்த அதே வார இதழ்கள் சுத்தமாக நிறுத்திவிட்டன. பிரசுரிக்கிற ஒற்றைச் சிறுகதையும் ‘மூன்று பக்கங்களுக்கு மிகாமல்’ என்ற எச்சரிக்கையுடன் பிரசுரிக்கப்படுகிறது.
இது ஏதோ ஒரு வார இதழ் மட்டுமல்ல... தமிழின் அத்தனை வார இதழ்களிலும் இதே போக்குதான்.
இந்தப் போக்கு, சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கிய உருவாக்கத்தில் இருக்கிற எழுத்தாளர்களுக்கு மிகப்பெரிய சோர்வையும் அயற்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ‘பிரசுரிக்க இதழ்கள் இல்லாமல். ‘எழுதிவைத்து என்ன செய்ய’ என்ற ஆயாசத்தில் மனச்சோர்வடைந்து மூடிக்கொண்ட பேனாக்கள் நிறைய.
இப்படியான சோர்வூட்டுகிற — அயற்சியூட்டுகிற இறுக்கமான புறச்சூழல் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு மூச்சுத் திணறடிக்கின்ற தருணத்தில் எழுதப்பட்டவைதாம் இந்தச் சிறுகதைகள்.
நான் சோர்வடையவில்லை. அயற்சியடையவில்லை. தொடர்ந்து எழுதுகிறேன்.
1972 நவம்பரில் எனது முதல் சிறுகதை ‘பரிசு’ செம்மலர் இலக்கிய இதழில் பிரசுரமாயிற்று.
இடை இடையே அவ்வப்போது குறுநாவல்கள், சிறுநாவல்கள், அணிந்துரைகள், மதிப்புரைகள் எழுதியிருந்தாலும் அறுபடாத தொடர்ச்சியுடன் தொய்வில்லாத பயணமாக நடைபோடுவது, சிறுகதைப் பாட்டையில்தான்.
நான் பெற்றிருக்கிற பரிசுகளும், விருதுகளும், சிறப்புப் பாராட்டுகளும், சந்தோஷங்களும் சிறுகதைப் படைப்புகளில்தாம். அதுவே எனது அகம். முகம். உயிர்.
உரைநடைப் படைப்பிலக்கியவாதிகளை மூச்சுத் திணறச் செய்து, நெருக்கடி தந்து நிர்மூலமாக்குகிற இந்த மோசமான புறச்சூழலின் தட்பவெப்பம் முழுமையையும் உணர்ந்திருக்கிற நான், எவ்வித மனத் தொய்வுமில்லாமல் எனது சிறுகதைப் பயணம் தொடர்கிறது. அதுவே எனது ஆத்மாவின் அசலான வெளிப்பாட்டு வடிவம்.
புறச்சூழலுக்கு எதிராக முரட்டுத்தனமாகப் பயணம் செய்வது சரியா? சூழல் யதார்த்தம் புரிந்த பின்பும், கண்டுகொள்ளாமல் பயணப்படுவது புத்தி சாலித்தனமா?
யோசித்துப் பார்த்தால்... முடிவில்லாத நீண்ட யாத்திரையான மனிதகுல வாழ்க்கையே இயற்கையெனும் புறச்சூழலுக்கு எதிரான பயணம்தான். இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்திய மீறலிலும் போராட்டத்திலும்தான் விஞ்ஞானம் பிறந்தது. மானுட ஆற்றல் எனும் கூட்டுச்சக்தி பிறந்தது. மனித சமூகம் உருக்கொண்டது. அடித்துக் கொன்று தின்ற மிருகங்களை வசக்கி... வளர்க்க முனைந்ததில் மேய்ச்சல் சமூகம் தோன்றியது. உழவு தோன்றியது. உணவு உற்பத்தி வந்தது. மனிதகுல நீள்வரலாறே மீறல்களும், போராட்டங்களும் நிறைந்ததுதான்.
இயற்கையுடன் தோழமை பூண்டுகொண்டே இயற்கையின் உற்பாதங்களை எதிர்த்து மனிதகுலம் நடத்திய போராட்டத்தில்தான் கப்பல்கள் தோன்றின. கட்டிட நாகரிகம் தோன்றியது. அணைக்கட்டுகளும், அக்னி தீண்டாத அரண்களும், காற்று புக முடியாத காவல் கோட்டைகளும் எழுந்தன.
எனது பின்தங்கிய கிராமம், பின்தங்கிய பொருளாதார வாழ்க்கை, குறைந்த கல்வி எல்லாமே ஓர் எழுத்தாளனை முளைக்கவிடாத புறச்சூழல்தான். முளைத்துவிட்டேன். எனது கடை வியாபாரமும், அதன் விதிகளும் பொதுவாழ்க்கைக்கு என்னை நகரவிடாத புறச்சூழல்தான்.
பொதுவாழ்க்கையில் தொடர்ந்து இயங்கி வருகிறேன். இப்போதும் நான் தொய்வின்றி தொடர்ச்சியாக சிறுகதைப் பயணமும், படைப்பும் செய்கிறேன். எனக்கொன்றும் பயமில்லை. மனிதகுல வரலாறு அறிந்த எவருக்கும் பயம் வராது.
மனிதன், சூழலின் வார்ப்பு. சூழலின் கைதியல்ல. சுயமான செயலாற்றல் மிக்கவன். சூழலைப் புதிதாக்க அவனுக்கு இயலும். அதுதான் வரலாற்றின் வரலாறு.
இப்போதைய புறச்சூழலும் மாறும். நான் நிச்சயமாக நம்புகிறேன்.
1980களின் துவக்கத்தில் தொலைக்காட்சிகள் பெருகி, சேனல்கள் ஏராளமாகி... எல்லா வீட்டு அடுப்பங்கரைக்குள்ளும் கொண்டுவந்து சேர்க்கிற கேபிள் தொழிலும் பெருகி...
எல்லோரும் சின்னத்திரையெனும் சிந்தனைச் சிறைக்குள் சிக்கிக்கொண்டபோது, புத்தக விற்பனை சுத்தமாக நின்றுபோயிற்று.
‘புத்தக வாசிப்பு என்பதே புராதன அனுபவமாகிவிடும், புத்தகம் அருங்காட்சியகப் பொருளாகிவிடும்’ என்று எல்லா அறிவுஜீவிகளும் ஒரே குரலில் பயத்துடன் கத்தினர். இப்போது நிலைமை என்ன?
தொலைக்காட்சி தொலையவில்லை. சேனல்கள் குறையவில்லை. தொடர்களும் சலிக்கவில்லை.ஆயினும்,
புத்தக வாசிப்புப் பழக்கம் மீண்டும் அரும்பி, மலர்ந்து வாசம் பரப்புவதைப் பார்க்கிறோம். புத்தகக் கண்காட்சிகள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்று வருவதைக் காண்கிறோம்.
சிறுகதைகள், தொடர்கதைகள் பிரசுரிக்காமல் மறுதளிக்கிற இதே வாரஇதழ்கள்... மீண்டும் ‘சற்ற பெரிய கதை’களைக் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கவே செய்யும்.
மகாகவி பாரதி, வ.வே.சு. ஐயர் போன்றவர்கள் எழுத ஆரம்பித்தபோது, சிறு பத்திரிகைகளில்தான் எளிய பயணம் துவங்கியது. புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, மௌனி போன்ற சிறுகதைப் படைப்பாளிகள் சிறு பத்திரிகைச் சூழலில்தான் இயங்கினர். சிறுகதைப் பத்திரிகைகளில் இயங்கி வந்த ஜெயகாந்தன் தாம், வெகுஜனப் பத்திரிகைகளில் சிம்மாசனம் பெற்றார்.
வெகுஜன இதழ்கள் வரவேற்புத் தராத காலங்களிலும், சிறுகதை இலக்கியப் பயணம் சிறு பத்திரிகைச் சூழலில்தான் செழிப்பாகவும் சிறப்பாகவும் நடைபோட்டது. அதே சிறு பத்திரிகைச் சூழல் இப்போதும் நீள் சிறுகதை இலக்கியத்துக்கான தளமாகவும் களமாகவும் இருக்கிறது. வெகுஜன வார இதழ்கள் மீண்டும் சிறுகதை இலக்கியத்தை நாடி வருகின்ற காலமும் சமீபத்தில் இருக்கிறது.சினிமா சார்ந்த துணுக்குகள், நடிகைகள் சார்ந்த செய்திகள், பணக்காரர் ஆவது எப்படி, பெரும்பதவிக்கு வருவதெப்படி போன்ற சூட்சுமக் கட்டுரைகள், நிம்மதி தானம் தருகின்ற ஆன்மிக அருள்வாக்குகள், ஜெயித்த அரசியல்வாதிகள் பற்றிய சுவாரஸ்யங்கள் மட்டுமே புதிய இதழியல் போக்குக்குப் போதுமானதாகக் கருதப்படுகிறது. இவையெல்லாம் இலக்கிய வாசிப்பு எனும் பேரனுபவத்துக்கு ஈடாகாது. மாலைநேரக் கொறிப்புகள் முழுநேர உணவாகிவிடாது.
சிறுகதை, தொடர்கதை வாசிப்பு என்பது வாழ்க்கையைக் கலாபூர்வக் கலவையுடன் பிசைந்து தருவது. கனவுகளும் நிஜங்களும் கைகோர்க்கிற வினோதமான அனுபவம். மனசுக்குப் பரவச அனுபவத்தையும், அறிவுக்கு செழிப்பான உரத்தையும் ஒருசேரத் தர வல்லது.
மனிதர்களின் வாழ்க்கை, அன்பு, பண்பு, சிறுமை, பெருமை, அற்பம், உன்னதம் சகலத்தையும் கலந்து கலையெனும் அழகியலோடு பரிமாறுகிற அந்த விருந்துக்கு வெறும் மாலைநேரக் கொறிப்புகள் மாற்றாகிவிடாது.
மீண்டும் மனசுகள், இலக்கிய வாசிப்புகளுக்கு ஏங்கும். தேவையை உணரும். ‘கொண்டு வா’ என்று வார இதழ்களை உத்தரவிடும்.
எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.தமிழ் உள்ளவரை, மானுடம் உள்ளவரை உரைநடைப் படைப்பிலக்கியத்திற்கான அகத் தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கும்.
நான் தொடர்ந்து எழுதுகிறேன். நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.
அரசாலும், வரலாற்றினாலும், கைவிடப்பட்ட கிராமங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுகிறேன். வாருங்கள், வாசிப்பதற்கு. எழுதுவோம், புதிய புறச் சூழலை.
இந்தத் தொகுப்பில் இருக்கிற கதைகளில் ‘நடை நடையாய்’ குறிப்பிடத்தக்க கதை. கிராமத்திற்கும் வந்துவிட்ட பணக்கார நோய்களுக்கான காரணங்களையும் தீர்வையும் சொல்கிற கதை. உழைப்பின்மையால் வருகிற நோய்கள் என்று நினைக்கப்பட்டதைத் தகர்த்து வருகிற கிராமத்துக் கசப்பு நிஜங்கள். கடின உழைப்பாளிகளுக்கும் அதே நோய்கள். சிறுகதை என்ற அளவிலும் சரி... உள்ளடக்க அளவிலும் சரி... மிக முக்கியத்துவம் பெறுகிற கதை.
கிளிகள், மயில்கள் அழகான பறவைகள். அழகுணர்ச்சி மிக்க கவிஞர்களின் கதாசிரியர்களின் வர்ணிப்புகளுக்கான உவமைகளாக உச்சரிக்கப்படும். நகரத்துப் பிள்ளைகள் மயில்களையும், கிளிகளையும் பார்த்தாலே பரவசப்பட்டு மகிழ்ச்சியோடு கூச்சல் போடுவார்கள்.விவசாய உழைப்பில் ஈடுபடுகிற வியர்வை மனிதர்கள் அனுபவத்தில் கிளியும் மயிலும் அதன் கவித்துவ அழகையெல்லாம் உதிர்த்து... வெறும் தொல்லை தருகிற ராட்சஸப் பிராணிகளாக புதிய பிம்பம் பெறுகிறது. ‘கிளியும் மயிலும்’ மிகவும் வித்தியாசமான தனித்துவச் சிறப்புமிக்கது. கரிசல் காட்டு கிராமத்தானுக்கு மட்டுமே இப்படியான கருப்பொருள் கையாளும் வாய்ப்பு உள்ளது.
‘மன உடைப்பு’ கதையில் வருகிற ஆட்டுக்காரர்களை வேறு யாரும் இத்தனை யதார்த்தமாக யாராலும் பிரதிபலித்துவிட முடியாது.
இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளைப் பெருந்தன்மையுடன் பிரசுரித்து கெளரவித்த அத்தனை இதழ்களுக்கும் என் சிறப்பான நன்றிகள்.
எனது படைப்புகளையெல்லாம் சிறப்பான முறையில் வெளியிட்டு, அன்பும் பரிவும் காட்டி பாசத்தைப் பொழிகிற பதிப்பாசிரியர் புகழ்மிகு வானதி பதிப்பக உரிமையாளர் ஐயா. திருநாவுக்கரசு அவர்களுக்கும், அழகான அட்டை ஓவியம் படைத்துத் தந்த ஓவியர் அவர்களுக்கும், எனது இலக்கிய வாழ்வுக்கு எப்போதுமே ஆணிவேராகவும், ஆதார பலமாகவும் இருக்கிற என் தம்பி செ. கரிகாலனுக்கும் என்றென்றும் எனது நன்றிகள் உரித்தாகும்.
பொதுவாக... எனது பெரும்பான்மையான தொகுப்புகளின் தலைப்புகளில் ‘பூ’ என்ற சொல் வாசத்துடன் மலர்ந்திருக்கும். பல நண்பர்கள் அதைச் சுட்டிக்காட்டி இருக்கின்றனர். நானும்கூட... இனிவரும் நாளில் ‘பூ’ என்ற வார்த்தையைத் தவிர்க்கலாமே என்று நினைத்தேன்.
ஆனால் இந்தத் தொகுப்புக்கு ‘பூக்கும் மாலை’ என்ற தலைப்பே மிகவும் கச்சிதமாகப் பொருந்தி வருகிறது என்று அழுத்தமாக வாதாடி என்னை ஒப்புக்கொள்ளச் செய்த எனது மகன் கவிஞர் வெண்மணிச்செல்வன் B.E. எனது சிறப்பான பாராட்டுக் குரியவனாகிறான்.
இனி... நீங்களும்... ‘பூக்கும் மாலையும்...’ வாசித்து முடித்துவிட்டு மௌனத்தில் ஆழ்ந்துவிடாமல்... வாசித்த கதைகளால் உங்களுக்குள் எழுந்த உணர்வுகளை ஒரு கடிதமாக எழுதி அனுப்புங்கள், தயவுசெய்து.
உங்கள் பாராட்டுகள் என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும்; நீங்கள் கண்டுணர்ந்து சொல்கிற குறைகளும்கூட என்னைச் செதுக்கி, மேலும் கூர்மையாக்கும். இரண்டுமே இலக்கியத்துக்கு சிறப்பு செய்யும். நன்றிகள்.
மேலாண்மறைநாடு
626127
இராஜபாளையம் வழி
விருதுநகர் மாவட்டம்
04562/271233
9942610700
என்றும் உங்கள்
மேலாண்மை பொன்னுச்சாமி
உள்ளடக்கம்
| 1 |
| 13 |
| 21 |
| 36 |
| 47 |
| 59 |
| 72 |
| 83 |
| 94 |
| 105 |
| 116 |
| 130 |
| 142 |
| 154 |
| 174 |
| 185 |
| 195 |
| 203 |