பூச்சுமை
பூச்சுமை
மேலாண்மை பொன்னுச்சாமி
23, தீனதயாளு தெரு,
தியாகராய நகர், சென்னை- 600017
முதற்பதிப்பு : டிசம்பர், 1992 இரண்டாம் பதிப்பு (திருவரசு) : டிசம்பர், 2004 உரிமை : ஆசிரியருக்கு
- விலை : ரூ.70.00
❍ | TITLE | POOCHCHUMAI | |
❍ | AUTHOR | MELANMAI PONNUSAMY | |
❍ | LANGUAGE | TAMIL | |
❍ | SUBJECT | SHORT STORIES | |
❍ | EDITION | SECOND EDITION DECEMBER, 2004 | |
❍ | PAGES | 216 | |
❍ | PUBLISHED BY | THIRUVARASU PUTHAKA NILAYAM 23, Deenadayalu Street Thyagaraya Nagar. Chennai - 17 | |
❍ | Price | Rs. 70.00 |
Typesetting : AMARAVATHI
Chennai - 83.
Cell: 9444169725Printed by : Malar Printers 044-8224803
என்னுரை
டவுசர் போட்டிருந்த நாளிலேயே என்னுள் அரும்பிய இலக்கிய உணர்வை உணர்ந்து ஊக்கப்படுத்தி மலரச் செய்த எனது மதிப்பிற்குரிய தோழர் எஸ்.ஏ.பெருமாள்.
நான் எழுதியனுப்பிய கதைகளையெல்லாம் பொறுமையாய் படித்து, அன்போடு பிரசுரித்து என்னை வெளிச்சப்படுத்திய 'செம்மலர்' ஆசிரியர் கே.முத்தையா, தி.வரதராஜன், அரவணைத்து, அன்பான கதகதப்பூட்டி என்னைப் போற்றிப் பாதுகாக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்கள்-
எனது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு தருகிற திருவரசு புத்தக நிலையத்தாருக்கும், பதிப்பாசிரியர் வானதி ஏ.திருநாவுக்கரசு அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இக்கதைகளை வெளியிட்டு உதவிய இதழாசிரியர்கள், நூலுக்கு நல்ல அணிந்துரை, முன்னுரை வழங்கிய பேராசிரியர் சாலமன் பாப்பையா, டாக்டர் சு.வேங்கடராமன், அட்டை ஓவியம் வழங்கிய ஓவியர் ஆனந்தன் ஆகிய அனைவருக்கும் எனது இதயம், நன்றி சொல்லி மகிழ்கிறது.
சரி...நூலைப் படியுங்கள். மௌனமாயிருந்து விடாமல் எழுதுங்கள். உங்கள் பாராட்டு என் பயணத்துக்கு தெம்பூட்டும். விமர்சனம் வெளிச்சம் காட்டும்.
நன்றி!
மேலாண்மரைநாடு
காமராசர் மாவட்டம்
என்றும் உங்கள்,
மேலாண்மை பொன்னுச்சாமி
அணிந்துரை
பேராசிரியர், சாலமன் பாப்பையா
தமிழ்த்துறைத் தலைவர்,
அமெரிக்கன் கல்லூரி, மதுரை.
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபது-எழுபத்தைந்து வாக்கில் என்று ஞாபகம். ஒரு நள்ளிரவில் இலக்கியப்பட்டிமன்ற நிகழ்ச்சி முடிந்து, நிகழ்ச்சியின் வெற்றியில் நான் உற்சாகமாக வருகிறேன். கேட்க வந்திருந்தோரிற் சிலர் என்னுடன் பேசிக் கொண்டு வருகின்றனர். அவர்களுடன் ‘அரைக் கால் டவுசர்’ போட்ட ஒரு சிறு பிள்ளை; அதன் கையில் சில காகிதங்கள், பிள்ளையைக் கூர்ந்து பார்க்கிறேன்.
‘முற்றிக் காய்ந்த நெல்லின் நிறம்; வற்றி வரண்ட எலும்பு மேனி: அறிவுத் தாகத்தில் அலைந்து பாயும் விழி; அடங்கியும் அடங்காமலும் வரும் மொழி; மொத்தத்தில் கவனிப்பார் அற்ற வெட்ட வெளிச் சிறு செடி’
நான் பார்த்த வேகத்தில் அந்தப் பிள்ளை ‘ஐயா’ நான் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். இது பிரசுரிக்கத்தகுதியானது தானா- பார்த்துச் சொல்லுங்க' என்கிறது.
கிராமத்து வெளிச்சம்; இரவின் சோர்வு; எனினும் வேகமாக என் விழிகளை எழுத்துகளின் மேல் விரட்டுகிறேன். அதிகம் படிக்காத அந்தக் கிராமத்துச் சிறுவனின் எழுத்தில் கிராமியம் கொட்டிக் கிடந்தது. எனக்கு வசப்படாத தமிழ் அந்தச் சிறுவனுக்குச் சேவகம் செய்வது கண்டு அப்போது எனக்குள் பொறாமையா - பெருமையா எது தோன்றியது என்று இப்போது சொல்லத் தெரியவில்லை. ‘உனக்கு நன்றாகவே எழுத வருகிறது; பத்திரிகைகளுக்கு அனுப்பி வை’ என்று மட்டும் சொல்லி வைத்தேன். சிறுவனின் நினைவு என் நெஞ்சிற்குள் சிறைப்பட்டுக் கிடந்தது. அந்தச் சிறுவன்தான் பல்வேறு இதழ்களில் பரிசு பெறும் எழுத்தாளராக, பண்பிலும் படிப்பிலும், அன்பின் பிடிப்பிலும் மேலும் மேலும் வளர்கின்ற மனிதராக மிளிரும் ‘மேலாண்மை பொன்னுச்சாமி’ என்று அறிந்த போது எனக்குள் கங்கை வெள்ளமாய்க் கிளப்பு. அவரது ‘பூச்சுமை’ அவரை அறிந்து கொள்ளவும் உதவும்; வளரும் எழுத்தாளர்கள் எழுதும் வழி தெரிந்து கொள்ளவும் துணை நிற்கும்.
மதுரை
16.12.1992
வாழ்த்துகளுடன்
சாலமன் பாப்பையா
முன்னுரை
டாக்டர் சு.வேங்கடராமன்
தற்கால இலக்கியத்துறைத் தலைவர்,
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்
அண்மைக்காலமாக நிறைய நல்ல தரமான படைப்புக்களைத் தந்து வருபவர் மேலாண்மை பொன்னுச்சாமி. கரிசல் பகுதி படைப்பாளரான அவர் சிறுகதைகளை நல்ல வலுவான உள்ளடக்கத்துடன் தேர்ந்த கலை நயத்துடனும் எழுதுகிறார். சமூகமாற்றத்திற்கும் மனிதகுல மேன்மைக்கும் தம் கதைகள் பயன்பட வேண்டும் என்ற தீவிர சிந்தனை உடையவர் அவர். பூச்சுமை என்ற இந்தத் தொகுப்பும் அவருடைய எழுத்தின் தனித்தன்மை வெளிப்படுத்துகிறது. வியாபார நுட்பங்கள் அறியாமல், கை நஷ்டப்பட்டு வியாபாரஞ் செய்து பொறுப்பின்றி இருக்கும் பூவாத்தாவின் கணவன், பிள்ளைக்குத் தந்தையாகப் போவது அறிந்ததும் பொறுப்புள்ளவனாக மாறுகிறான். இந்த மாற்றம் அவனிடம் ஏற்பட்டதைப் ‘பூச்சுமை’ கதை மிகுந்த நளினத்துடன் இயல்பான பாங்கில் யதார்த்தமாகக் காட்டுகிறது. ‘பூ’ என்ற சிறுகதை மிகவும் நுட்பமான வாழ்க்கை தத்துவத்தைக் காட்டுகிறது. தன் மகளின் வளர்ச்சியை நினைத்து மகிழாமல், அஞ்சும் தாயின் மனநிலை, அதற்கான காரணம், அச்சத்திலிருந்து அவள் பெறும் தெளிவு என்பன அருமையாக இக்கதையில் இணைந்து வடிவம் பெற்றுள்ளன. ‘பெண்ணா ஜென்ம மெடுத்தவளைக் கிழிச்சு கேவலப்படுத்துகிற ஊரு உலகத்துக்குப் பயந்து என்ன ஆகப்போறது? தும்பம் வந்தா செத்தா போறோம்? மல்லுக்கட்டிப் புரளிலியா? அப்படித்தான் இதுவும்’ என்னும் வரிகளில், வாழ்க்கை பற்றிய நம்பிக்கைக்குரலும், பிரச்சினைகள் வரும் போது, அவை கண்டு துவண்டு விடாமல், எதிர்த்து நின்று போராடி வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற துணிவையும் இக்கதைகள் காட்டுகின்றன. இதைபோன்ற குரலை ‘அவள் சாரதி’ சிறுகதையிலும் “வாழ்க்கையோடு மல்லுக் கட்டதுணிவு கொண்ட உழைப்பாளிகளிடம் பாலிடாலுக்கு ஏது வேலை?” என்று வருவதிலும் கேட்கலாம்.
இவருடைய கதை நிகழும் களம் யாவும் கரிசல் பகுதிதான். இவருடைய கதை மாந்தர்கள், நாள் முழுவதும் பாடுபட்டு, உழைத்து அரைக்கால் வயிற்றுக்கு உணவு தேடிட அத்தனைபேரும் கடும் உழைப்பை நல்கும் கந்தகபூமி உழைப்பாளர்கள். விளையாட்டுப் பருவம் கழியாத நிலையில், தீப்பெட்டி ஆலைக்கு வேலைக்குச் சென்று, முதலாளி, மேஸ்திரி ஏஜெண்ட், கார் டிரைவர் என்று அத்தனைக் கொடுமையாளர்களிடமும் ஏச்சும் பேச்சும் வாங்கி இடிகஞ்சி குடிக்கும் குழந்தைத் தொழிலாளர் முதல் வயல் வரப்புகளில் நாள் கூலிக்குச் செல்லும் பெண் வரை அனைவரும் உழைப்பாளிகளே, ‘விலைவாசி ரெக்கை கட்டிப் பறக்க’ தினமும் வயிற்றுப் பாட்டிற்கே கூலி கிட்டாத காலத்தில் (மழை தண்ணீர் இல்லாமல், ஒரு வெள்ளாமை கூட இல்லை. இறவைக் கிணறுகளிலும் தண்ணீர் வரட்டிழுப்புத்தான். மிளகாய்ச் செடிகள், தாயற்ற பிள்ளைகளாக வாடிச் சுருங்கிக் கிடந்த காலத்தில்) தான் வளர்க்கும் வாயில்லா ஜீவன்களான ஆட்டுக் குட்டிகளுக்குக் குழை ஒடிப்பதற்காக அலைந்து திரிந்து-திருடியாவது கொண்டு வரும் பாசமுடைய உழைப்பாளிகள் இக்கதை மாந்தர்கள். உழைத்து நாள் முழுக்கப் பாடுபட்டு மாலை மயங்கும் வேளையில் வீட்டிற்கு வந்து, பிள்ளை-குட்டி, கணவனுக்காக உணவு சமைக்க வரும் தாய்க்கு, பள்ளி சென்று வந்த பெண் குழந்தை கூடமாட உதவும் அன்புலகமாக வீடு உள்ளது. மகளின் இத்தகு பொறுப்பும் உழைக்கும் பாங்கும் கண்டு தாய் மகிழ்கிறாள்.
‘மைதானம்’ இத்தொகுப்பிலே அற்புதமான கதையாக உள்ளது. தீப்பெட்டி ஆலைக்குச் சென்று உழைத்து வரும் கூட்டுக்குஞ்சு பேச்சி அற்புதமான படைப்பு தன் வயதுக்கேற்ப விளையாட்டுப் போக்கில், தனக்கு ஒதுக்கப்பட்ட குச்சி அடுக்கும் பணி முடித்தபின், அடிபம்பில் அவள் விளையாட்டாகத் தண்ணீர் அடித்து, அந்த இன்னோசையில் சிறிது நேரம் நிற்கிறாள். தனியாக இருந்த அவளை மேஸ்திரி, வேலை செய்யாமல் விளையாடிக் கொண்டிருப்பதாகக் கூறி அதட்டிக் கையை ஓங்குகிறான். அது வாக்கு வாதமாகிப் பிரச்சினையாகிறது. ‘இந்த வயசில் விளையாடுகிறது இம்புட்டுப் பெரிய குற்றமா?’ என்று அச்சிறுமியின் எண்ண ஓட்டத்தைக் காட்டுமிடமும், மைதானம் அவளை விட்டுப் பிரிந்து தூரம் தூரமாகப் போய்க் கொண்டிருந்தது’ என்று வரும் கதையின் கடைசி வரியும் மிக நுட்பமான கலைநயத்துடன் வெளிப்பட்டுள்ளன. நடப்பியல் பார்வை அருமையாக வெளிப்பட்டுள்ளது. சிறுவர்களைத் தீப் பெட்டி ஆலைக்கு வேலைபார்க்க அனுப்பும் குடும்ப நிலை, வறுமை, ஆலைகளில் பிள்ளைகளின் உழைப்பைச் சுரண்டிடும் அவலம், பள்ளிக்குச் செல்ல வேண்டிய பருவத்தில், கல்வி கற்கப் போகாமல் இப்படி கடும் உழைப்பிற்கு ஆளாகும் சிறுவர்களின் நிலை என்று பல்வேறு நிலைகளை நம் படைப்பாளர் பலரும் காட்டியுள்ளனர். ‘விளையாட்டு மைதானம்’ சிறுகதை அவைகளிலிருந்து மாறுபட்டுச் சிறுவர் உளவியல் பார்வையில், விளை யாட்டுப் பருவத்தில் அச்சிறுமிக்குக் கிட்ட வேண்டிய மனமகிழ்வையும் விளையாட்டையும் இழக்கும் அவலத்தைக் காட்டுகிறது.
முன்னரே கூறியபடி, இக்கதைகள் நுட்பமான கலைத் திறனும், வடிவச் செம்மையும், ஆழமான உள்ளடக்கமும், வலுவான சமூகப் பார்வையும் கொண்டவை. வாழ்க்கை பற்றிய நம்பிக்கையையும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் உரமிக்க உழைப்பாளிகளையும் மனிதநேயமிக்க பாங்கில் நட்பியல் நெறியில் படைத்துள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. அவருடைய இச் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதையுலகிற்குப் புதிய வளம் சேர்ப்பவை. அவரை நாம் பாராட்ட வேண்டும். இன்னும் மிகச் சிறந்த கதைகளை எழுதி, அவர் மேன்மேலும் உயர்ந்து சாதனைகள் பல செய்து, பாராட்டும் சிறப்பும் பரிசும் ஏற்றங்களும் பெற்றிட வேண்டும். அவருக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள். இத்தகு சிறுகதைகளை அறிமுகஞ் செய்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மதுரை
24-12-1992.
சு.வேங்கடராமன்
உள்ளே...
1. | 11 |
2. | 26 |
3. | 47 |
4. | 59 |
5. | 76 |
6. | 92 |
7. | 107 |
8. | 121 |
9. | 135 |
10. | 149 |
11. | 160 |
12. | 170 |
13. | 182 |
14. | 192 |
15. | 202 |