பூநாகம்/006
பனிப் போர்
அன்று இரவு, எனக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. காரணம், என்னவென்றும் சொல்லத் தெரியவில்லை.
இப்போது தூக்கத்திற்கே என்னைப் பிடிக்கிறது. ஆனால் எனக்குத்தான் இந்தத் தூக்கத்தைக் கண்டாலே பிடிக்கவில்லை. தூங்கக்கூடாது என்று ஒரு எண்ணம். தூக்கத்தின் மீது ஒரு எரிச்சல். என்ன வந்தது எனக்கு?
இந்தப் பூமியில் விழுந்த அந்த நாளிலிருந்து, இதோ இப்போது எழுந்து நிற்கும் இந்த நாள் வரை நானும் தூக்கமும் கடும் சினேகிதர்கள். கடும் சிநேகிதம் கண்ணைக் கெடுக்கும் என்பது போல் ஆகிவிட்டதா? தூங்குகிற ஒரு காரியத்தை மட்டும்தான் நான் உருப்படியாய் செய்ததாய் அந்தக் காலத்தில் அம்மாவும், இந்தக் காலத்தில் ‘அவளும்’ சொன்னதுண்டு; சொல்வதுண்டு. அடர்ந்த முடியும் படர்ந்த முகமும், சர்க்கரைவள்ளிக்கிழங்கின் நிறமும் கொண்ட என் அம்மா, காதுகளில் பாம்படங்கள் ஊஞ்சலாட பள்ளிக்கூட மணியடிக்கிற சப்தம் கேட்டு என்னை உசுப்புவாள். பிறகு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் ஊற்றுவாள் அப்படியும் நான் அசைவற்றுக் கிடப்பதைக் கண்டு, தன் முந்தானையால் என் முகத்தைத் துடைத்து விடுவாள். அம்மா சொல்லித்தான் பொழுது விடிந்தது எனக்குத் தெரியும். ஆனாலும், சின்ன வயசிலேயே நிரந்தரத் தூக்கமான என் அம்மாவை நினைக்கும்போதெல்லாம், இடம் தெரியாத ஒரு இடத்திலிருந்து, உருத் தெரியாத ஒரு சுகச் சோகமான தென்றல் முகத்தை வருடிக் கொடுக்கிறது கண்களை ஈரப்படுத்துகிறது. இதை ஒரு தடவை என்னுடைய சைக்யாட்ரிஸ்ட் மைத்துனனிடம் விளையாட்டாகச் சொன்னபோது அவனோ, “அம்மாவின் பிரிவு உங்கள் அடி மனதில் தேங்கி உங்களுக்கு ‘ஃபீலிங்க் ஆப் இன்செக்கூரிட்டி’—அதாவது பயப்பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது” என்றான். நான் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே அவனை பயமுறுத்துவது போல் பார்ப்பேன். பக்கத்தில் நின்ற மனைவிகூட ‘இவரா பயப்படுறவரு?.... நம்ம பயமுறுத்தாம இருந்தா சரிதான்’ என்றாள்.
இந்த கடந்தகால நினைப்போடு நின்ற எனக்கு, தலை தரையில் விழுவது போல் துடித்தது. தூங்க வேண்டுமென்று உடல் தன்னை வளைத்துக் கொண்டது. ஆனால், உள்ளமோ தூங்கக்கூடாது என்று என்னுள்ளே சொல்லிச் சொல்லி உடம்பை நிமிர்த்தியது.
படுத்த உடனே தூங்கக்கூடியவன் நான். என் மனைவி கூட ‘ராமாயணத்துல ராமபிரான் வில்ல ஒடிச்சதுதான் தெரியும். எடுத்தது தெரியாதுன்’னு கம்பன் சொன்னது மாதிரி நீங்க தூங்கறதுதான் தெரியுது, படுக்கையிலே விழுகறது தெரியல. ‘என்ன ஜென்மமோ’ என்பாள். நான் தூக்கத்தில் புரள்வதை தப்பாக நினைத்துக்கொண்டு, ‘நான் ஒண்ணும் அந்த அர்த்தத்துல சொல்லலே’ என்று தோளில் கையைப் போட்டுக்கொண்டு சொல்வது லேசாய் ஒலிக்கும். ஆனாலும் இந்த தூக்க சுகத்தைவிட, அந்த ‘சுகம்’ எனக்கு பெரிதாய் பட்டதில்லை. அதை ஈடுகட்ட பகலில் அவளிடம் பல்லைக் காட்டுவேன். அவள் பார்க்கும் பார்வையில் வாயை மூடிக் கொள்வேன். இல்லையானால் அந்தப் பற்களை அவளே கிள்ளியெறிந்து வெளியே போட்டிருப்பாள். அப்படிப்பட்ட எனக்கு, இன்றைக்கு தூக்கம் வந்தாலும் அதை வரவிடக்கூடாது என்று ஒரு வைராக்கியம். காரணம் என்னவாக இருக்கும்?
அந்த படுக்கையறையில் அப்படியே அசைவற்றிருந்த நான், அந்த அமாவாசை இருட்டில் மங்கிய பச்சை பல்பின் ஒளி அவள் சிவப்பு முகத்தில் சிந்தி ஒரு அதிசய கலவை நிறத்தை—சிவப்பு வட்டத்திற்கு பச்சை வேலி போட்டதுபோல் காட்டியதுண்டு. சில வேளைகளில், என் மனைவி என் காதுகளை திருகி, கண்ணிமைகளை நிமிர்த்தி, இறுதியில் மூக்கையும் வாயையும் தனது உள்ளங்கையால் ஒருசேர அடைத்து என்னை விழிக்கச் செய்து, முகத்தில் முகம் போடுவாள். அந்த மாதிரி அத்திப்பூ சந்தர்ப்பங்களில் அவள், அழகு தேவதையாய் தோன்றுவாள். அவளின் பிரிந்த உதடுகள் அற்புதப் புன்னகையாய் கோடு காட்டும். ஆனால், இப்போது தூங்கிக் கொண்டிருக்கும் அவளைப் பார்க்க என்னவோ போலிருந்தது. செத்துப் போனவள் போல் வாய் பிளந்திருந்தது. ஒரு காலை செங்குத்தாய் தூக்கி, மறுகாலை, முப்பது டிகிரியில் சாய்த்து அசிங்கம் அசிங்கமாய்... அதுவும் உருமி மேளம் மாதிரியான குறட்டை... என் பார்வைகூட தாளமாட்டாது மார்பகத்தை முந்தானையால் மூடிக்கொள்கிறவள் இப்போது.... இதையெல்லாம் சொல்லப்படாது... அவள் திருக்கோலத்தை இந்தத் தூக்கம் அலங்கோலமாக்கிவிட்டது. தூக்கம் உயிரினத்தை மூச்சை முடிக்காமலே பிணமாக்கும் எமதூதன். வருவதை உரைக்கும் ஆரூடம். இந்தத் தூக்கம் எனக்கு வேண்டாம். வேண்டவே வேண்டாம்.
நான் படுக்கை அறையிலிருந்து வெளிப்பட்டேன். கூடத்தில் அங்குமிங்குமாய் நடமாடினேன். பிறகு எதிர்த்திசையில் சுவரோடுசுவராக அதே நிறத்தில், இருந்த கதவை தள்ளிக்கொண்டு, உள்ளே போனேன். அங்கே என் மகள் ‘பிளஸ் டூ’ மீனா, மோவாயையும் முன் தலையையும் படுக்கையில் மறைத்து குப்புறக் கிடக்கிறாள். பாவாடை தாவணியானாலும், சல்வார்கமீஸானாலும் சரி, தன்னாலேயே அவை அழகுபடுகின்றன என்ற தோரணை காட்டும் அவள், இப்போது இரு கண்களிலும் ஊளை பிறள உதட்டோரங்களின் இரு பக்கமும் எச்சில் கோடுகள் செதில் செதிலாக அருவருப்பாய் கிடக்கிறாள். அவள் பக்கத்துப் படுக்கையில் படுத்திருக்கும் எனது மகன் முள்ளம்பன்றி மாதிரி உடம்பைச் சுருக்கிக் கொண்டு கிடக்கிறான். மூக்கு ஒழுகுகிறது. ஏறும்போதும் இறங்கும் போதும் ஒவ்வொரு படியாய் துள்ளிக் குதிக்கும் என் மகன் பல திரைப்படங்களைப் பார்த்ததாலோ என்னமோ, ஸ்லோ மோஷனில் ஓடுவது போல் நடந்தும், நடப்பது போல் ஓடியும் அழகு காட்டும், என் மகனை இந்தத் தூக்கம் இப்படி தாற்காலிக் பிணமாக்கிவிட்டது.
என்னால் தாள முடியவில்லை. அவர்களை எழுப்பிவிடப் போனேன். மகள், மகனையும், மகன், மகளையும் தூக்கத் தொல்லைகளாக நினைத்து கண்களை மூடிக்கொண்டே ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டார்கள். அவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க மனமில்லாமல், வெளியே பால்கனி பக்கம் வந்தேன். மார்பளவு உயர்ந்த இரும்பு கிராதிகளின் மேல் உடம்பு வளைத்துப் போட்டுக்கொண்டு அந்தத் தெருவை கீழ்நோக்கி பார்த்தேன். ஒரே இருள் மயம். தெருவோர கார்ப்பரேஷன் விளக்குகள் எலும்புக்கூட்டிற்கு மேல் கண்ணாடித் தோல் போர்த்தப்பட்டு லேசுலேசான வெள்ளையாய் தோன்றின. ஆனாலும், அவற்றையும் தூக்கம் பிடித்துக் கொண்டது. உள்ளே ஒளியில்லை. வெளியே வியாபித்த இருட்டுக்கு அது பயந்துவிட்டது. எல்லாம் இந்தத் தூக்கமே காரணம். தூங்காமைதான் ஆன்மாவுக்கு அழகு சேர்ப்பது.எனக்கு ஏனோ அங்கு நிலவிய இருள் பிடித்தது. இருளா அல்லது இருட்டா? இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. பகலில் நிழல் இருள் சூரியனின் சடலம் இருட்டு. எதுவோ... எனக்கு இந்த இருள் பிடிக்கிறது. இந்த இருளுக்குள் ஒரு ஒளியைக் காண்கிறேன். நான் தூங்க மாட்டேன். நான் ஏன் தூங்கக்கூடாது? அசையும் பொருள், அசையாப் பொருள் அத்தனையும் தூங்கும்போது, எதிரே உள்ள வீடுகளை முழுமையாக மறைத்து இருள் மயமாய் தோன்றும் தாவர சங்கமம் அசையும் நிலையிலிருந்து அசையா நிலைக்குச் சென்று தூங்கும்போது, நான் ஏன் தூங்கக்கூடாது? ஏனோ? எதுவோ?
நான் லேசாய் பயந்து போனேன். ஆனாலும் ‘தூங்காதே, தூங்காதே’ என்று என்னுள்ளே ஏதோ ஒன்று சொல்லச் சொல்ல, நானும் எனக்குள்ளே அப்படி திருப்பி சொல்லிக் கொண்டேன். கண்களைத் திறந்து வைத்து தூக்கத்தை வழிமறித்தேன்.
அந்த அந்தகார இருளில், நிசப்தமே சப்தமாகியது. புறத்தில் ஏற்பட்ட அசைவின்மை, அகத்தை அசைவித்தது. ஏதோ ஒன்றுடன்—இருளுக்கும் ஒளிக்கும் அப்பாற்பட்ட ஒன்றில் ஐக்கியமானது போன்ற நினைப்பு—அந்த இருட்டே ஒளியானது போன்ற எண்ணம். தனித்துப் போவதை நினைவூட்டும் தனிமை. அதுவே அங்கும் இங்கும், எங்குமாய், ஏகமாய், அநேகமாய், பிரகாசிக்கிறது. தலையின் உட்பக்கம் ஒரு குகையாகிறது. உச்சியில் ஒரு ஒளி. அந்த ஒளி வெள்ளத்தில் பிரபஞ்சம். நட்சத்திரக் குவியல்கள். அண்ட அடுக்குகள்.... பேரடுக்குகள்.... நான் நிரந்தரம் என்ற ஒரு பூரிப்பு.... இருள் ஒளியாகவும், ஒளியை இருளாகவும் பார்த்துப் பழக வேண்டும் என்ற ஒரு தத்துவச் சிந்தனை. தனிமையிலேயே, ஒரு தனித்துவம். நிரந்தரத்தைப் பற்றிய நினைப்பு. கூடவே ஒரு பயம்.... நான் ஏன் தூங்கக்கூடாது? இப்படி இருப்பதே ஒரு நிரந்தரம் என்றால்.... இது ஒரு நரகமாகாதோ?எனக்கு லேசாய் பயம் பிடித்தது. வாழ்ந்தது தற்காலிகம். வாழப்போவது நிரந்தரம் என்ற எண்ணம் இல்லை, இல்லை. வாழ்வுமில்லை. வாழப் போவதுமில்லை என்ற சிந்தனைச் சிக்கல். அது உள்ளத்தைப் பின்னப் பின்ன, அந்தப் பின்னலை பிரிக்கும் முயற்சியாக சிந்தனையைத் திசை திருப்ப முயற்சித்தேன். எனது அலுவலக தனியறைக்குள் மானசீகமாக நுழைந்தேன். அன்று பகலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. நான் என் அறைக்குள் நுழையும்போது, வெளியே உள்ள ஊழியர்கள் எனது அறையை உற்றுப் பார்த்துவிட்டு என்னைப் பார்க்கிறார்கள். லேசாய் சிரிக்கிறார்கள். நான் உள்ளே நுழைந்தால், நான் மகளாய் நேசிக்கும் என் அந்தரங்க உதவியாளிப் பெண் ‘அந்தப் பித்துக்குளி இன்னும் வரலை. அது இருந்தா இப்படிப் பேச முடியுமா’ என்று டெலிபோனில் பேசிக் கொண்டிருக்கிறாள். என்னைப் பார்த்ததும் டெலிபோனை தொப்பென்று மேஜையில் போட்டுவிட்டு, பேச்சற்று மூச்சற்று வெளியேறுகிறாள். எனக்கு லேசாய் கோபம் வருகிறது. ஆனாலும் சிரித்துக் கொள்கிறேன். அவளின் அநாகரீகத்திற்கு நான் அநாகரிகத்தாலேயே பதில் அளிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறேன். அதோடு, சின்ன வயதில் அம்மா என்னை தவிக்கவிட்டுச் சென்ற நாளிலிருந்து இத்தகைய அவமானங்கள் எனக்கு அத்துப்படி. ஆனாலும் மனசு ஏனோ கேட்கவில்லை. இந்தச் சமயத்தில் எனது இன்னொரு உதவியாளர் மாரிமுத்து உள்ளே வந்தான். எடுத்த எடுப்பிலேயே என்னைச் செல்லமாக இப்படி திட்டினான்.
“என்ன ஸார் அநியாயம். உங்க காதுபடவே இந்த பத்தினித்தங்கம் இப்படி பேசிட்டுப் போவுது நீங்க, அவளை இன்னும் விட்டு வச்சிருக்கீங்களே.... உங்க இடத்தில நான் மட்டும் இருந்தால், இந்நேரம் அவள் சீட்டைக் கிழிச்சிருப்பேன். அதைக் கிழிக்கிறதுக்கு எவ்வளவோ காரணங்கள் இருக்கு.... ஒரு வார்த்தை சொல்லுங்க. நான் பார்த்துக்கறேன்.... ஏன் சார் இப்படி சிரிக்கிறீங்க? உங்களுக்கு நீங்களே இப்படி கண்டிப்பா இருக்கிற மாதிரி, பிறத்தியார் கிட்டேயும் கண்டிப்பா இருக்காட்டால் அந்த கண்டிப்பு ஒரு நடிப்பாயிடும். சிறுமை வரும்போதெல்லாம் அப்பப்ப வெடிக்கணும். மனசில இருக்கிற வெடிகளை வாய் வழியா விடணும் இல்லேன்னா ஒரேயடியா வெடிச்சுப் போயிடுவோம்....”
நான் அசட்டையாய் இருப்பதைப் பார்த்துவிட்டு, அவன் போய்விட்டான். அவன் வாய் முனங்கியது. ஒருவேளை அவள் எனக்கு கேட்கும்படி பேசியதை இவன் கேட்காமல் பேசுகிறானோ என்னமோ? மனம் சங்கடப்பட்டது. அனைவரையும் சமமாக பாவிக்கும் என்னைப் பற்றிய அவனது மதிப்பீடு என்னை எனக்குள்ளே தாழ்த்திக்கொண்டே இருந்தது. இப்படித்தான் அம்மா இறந்த சமயத்தில் வாத்தியார் ‘ஏ.சி.சி.ல சேர விரும்புறவங்கல்லாம், எழுந்திருங்க’ என்றார் நான் மற்ற மாணவர்களோடு எழுந்தேன். உடனே பக்கத்தில் இருந்த டிரில் மாஸ்டர் ‘உன் உடம்பு தாளாது... உட்காருடா’ என்றார். நான் கூனிக் குறுகி உட்கார்ந்தேன். இப்போது ஏனோ எனக்கு அந்த நினைப்பு வந்தது.
நான் சிறுமை கண்டு தவித்தபோது கடைநிலை ஊழியனான கண்ணன் உள்ளே வந்தான். நான் முகத்தை கேள்வியாக்கிய போது ‘ஸார்.... வீட்டில சொகமில்லே.... பிள்ளைத்தாய்ச்சி.... சிசேரியன்ல முடியுமோ என்னமோ.... டெலிபோன் வந்தது.... கொஞ்சம் பெர்மிஷன்’ என்று இழுத்தான். உடனே நான் பதைபதைத்து இருக்கையிலிருந்து எழுந்தபடியே ‘உடனே டாக்டரன்டே கூட்டிட்டுப் போ.... பணம் தேவையா’ என்று கேட்டுவிட்டு, மீண்டும் அவனைப் பார்த்தபடியே உட்கார்ந்தேன். அவனோ ‘எனக்கு ஒண்ணும் வேணாம் ஸார்.... என் வீட்டுக்காரிக்கு சுகப்பிரசவம் ஆகணும்னு கடவுள வேண்டிக்குங்க... நீங்க என்ன வேண்டினாலும் அது நடக்கும்... போன தடவை என் தம்பிக்கு வந்த இண்டர்வியூ பற்றி உங்ககிட்ட சொன்னேன். நீங்க ஆசீர்வாதம் செய்தீங்க.... அதனாலேயே எந்த சிபாரிசும் இல்லாமலே அந்த வேலை அவனுக்கு கிடைச்சுது பாருங்க.... நீங்க அநுமான் மாதிரி. உங்க சக்தி உங்களுக்குத் தெரியாது...!
என் அறையைவிட்டுப் போகும் அவனை ஸ்ரீராமனைப் பார்ப்பது போல் பார்த்தேன். என்னுள்ளே ஒரு பூரிப்பு... ஆமாம்.... எனக்குள்ளும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. என் வாயிலிருந்து வருபவை எல்லாம் பலிக்கின்றன என்று பல நண்பர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு தியானம் சிறிது பழக்கம்... மூன்றாவது கிராஸ் தெருவில் மூலையில் ஒரு குடிசை. அங்கே ஒரு சாமியார். குடிசை சாமியார் என்பதால் கோபுரக்காரர்கள் பார்வை படாதவர். ஒருநாள் மனைவியைக் காணவில்லை என்று அவள் போகாத கோவிலுக்குள் நான் போனபோது, அந்த சாமியாரைப் பார்த்து சிரித்து ஒரு வணக்கம் போட்டேன். உடனே அவர், எனக்கு ஒரு தியான முறையைச் சொல்லிக் கொடுத்தார். ஒலியை உருவகப்படுத்தி, வாய், தொண்டை, இருதயம், ஈரல், தொப்புள், ஆசனவாய், முதுகுத்தண்டு, பின்தலை, நெற்றி, காதுகள், கண்கள், மூக்கு முனைகள் வழியாய் கொண்டு செலுத்தி உச்சந்தலைக்கு உட்புறம் ஜோதி மயமாய் நிறுத்தி தரிசனம் காண வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். அதற்குக் கைமாறாக பத்து ரூபாய் கொடுத்தபோது ‘நீ எனக்கு தருவது சந்தோஷம். நான் உனக்குத்தருவது மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு சந்தோஷம் ஈடாகாது’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பத்து ரூபாயை சந்தோஷமாகவோ, மகிழ்ச்சியாகவோ வாங்கிக்கொண்டார். இந்தத் தியான முறையை என் நண்பர் அருண் வீரப்பனிடம் சொன்னபோது “காலையில் மூன்று மணிக்கும் நாலரை மணிக்கும் இடையேயுள்ளது பிரம்ம முகூர்த்தம்; இதில், சரஸ்வதி தேவி மகா விஷ்ணுவுக்கு வீணை வாசிப்பதாக ஐதீகம். இந்தச் சமயத்தில் தியானியுங்கள். ஆனால், அதற்குப் பிறகு தூங்கக் கூடாது. அப்படித் தூங்கினால் உடம்பிலிருந்து வெளியேறுவதற்காகக் கிளம்பும் நோய் நொடிகள் உடம்புக்குள்ளேயே மறு இடங்களில் படிந்துகொள்ளும்” என்றார். ஆனாலும், ஆழ்ந்த தியானத்திற்குப் பிறகு என்னால் தூங்காமல் இருக்க முடியவில்லை. இதனால் தியானத்தைக் கைவிட்டேன். இப்போது தியானிக்கலாமா? வேண்டாம். மீண்டும் தூக்கம் வரும், இந்த விழிப்புணர்வே ஒரு தியானம் தான். நான் அணுவினுள் அணு. அண்டத்தின் தியானம்தான். பேரண்டம். நானே பக்தன். நானே கடவுள்.
நான் பால்கனி தரையில் உட்கார்ந்தேன். எல்லாமே நான் என்றால், எதற்காக தூங்காமல் இருக்க வேண்டும்? இருக்கத்தான் வேண்டும். அதுவே ஞானம். அதுவே மோட்சம். நான் அண்டசராசரங்களை என் தலைக்குள்ளே சுற்றவிட்டேன். நெற்றிப் பொட்டை விசும்பாக்கி, அடிவயிற்றை நிலமாக்கி, கண்ணை அக்னியாக்கி, மூச்சை வாயுவாக்கி, ஆனந்தக் கண்ணீரை நீராக்கி, பஞ்சேந்திரியங்களின் ஒட்டு மொத்த உருவாக என்னைப் பாவித்துக்கொண்டேன். திடீரென்று உடுக்கையுடன் சிவன் தோன்றினான். நான் எழுந்து ஒரு காலைத் தூக்கி அங்குமிங்குமாய் ஆட்டினேன். ஊழிக்கூத்தனுக்கேற்ற ஞானக்கூத்து. பிறகு அப்படியே உட்கார்கிறேன். தூங்க வேண்டும், தூங்கக்கூடாது என்ற துவைத நிலையற்று அத்வைதமாக இருக்கிறேன்.
மனைவி என்னை உசுப்பவதை உணர்கிறேன். அவள் படபடப்பாய் பேசுவதைக் கேட்கிறேன். “என்ன இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க.... கண்ணெல்லாம் சிவப்பா இருக்கே? ராத்திரி தூங்கலியா? என்னங்க, உங்களைத்தான... ஏன் இப்படி பித்துப்பிடிச்சி இருக்கீங்க?”
அவள் சப்தம் கேட்டு, மகனும், மகளும் வருகிறார்கள். நான் உபன்யாசம் செய்வது போல் அமைதியாக பதிலளிக்கிறேன்.“பயப்படாதேம்மா.... தூக்கம் விழிப்பின் சத்துரு... ஞானத்தின் எதிரி. தூங்காமல் தூங்கும் சுகத்தை கற்றுக்கொண்டேன். எனக்குக் கிடைத்த ஞானோதயம் உங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஆனாலோ ஆசை கூடாது. புத்தர் மற்றவர்களுக்காக தனது நிர்வாணத்தை தானே மறுத்தது போல் நானோ உங்களுக்காக என் ஆசையை நானே விடாமலே வைத்திருக்கிறேன்.”
என் மனைவி அழுவதைப் பார்த்தேன். அவள் விம்மலைக் கேட்டேன். அவள் உள்ளறைக்குள் ஓடினாள். டெலிபோனை எண்களைச் சுழற்றினாள். “சீக்கிரம் வாண்ணா.... சீக்கிரம் வாண்ணா” என்று அழுது கொண்டே அரற்றினாள். பிறகு என்னிடம் மீண்டும் வந்து மகனையும், மகளையும் என் இரண்டு தோள்களிலும் சாத்திக் கொண்டு விம்மினாள்.
இதற்குள், என் டாக்டர் – மைத்துனன் ஒரு காரோடு வந்தான். நன்றாக நடக்கடிய என்னை, அவனும் அவளும் கைத்தாங்கலாய் படியிறக்கி காருக்குள் திணிக்கிறார்கள் குழந்தைகள் அம்மாவைப் பார்த்தபடியே அழுகின்றன. அவளோ, அக்கம் பக்கம் பார்த்தபடியே கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். கால் மணி நேரத்தில் ஒரு மருத்துவமனையில் தனி அறைக்குள் திணிக்கப்படுகிறேன். ஸ்டெதாஸ்கோப் மாட்டாத ஒரு டாக்டர் என் மைத்துனனிடம் “ட்ரான்ஸ்குலைஸர் கொடுத்தா சரியாயிடும். அதுல முடியாட்டா ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாம்! உங்க ஸிஸ்டருக்கு ஆறுதல் சொல்லுங்க... அவரை எப்படியும் குணப்படுத்திடலாம்” என்கிறார்.
என்னுள்ளும் ஒரு பயம். நேற்றிரவு முதல் என்னுள் ஏற்பட்டது அந்த கடைநிலை ஊழியன் சொன்னது போல் ஞானமா? அல்லது அந்த பெண் சொன்னது போல் பித்துக்குளித்தனமா? ஒரு வேளை ஒருவனுக்கு பைத்தியம் பிடித்தால், அவன் சிந்தனை இப்படித்தான் இருக்குமோ? சிந்தாதிரிப்பேட்டை ஆறுமுகம், ‘நான் கடவுள், நான் கடவுள்’ என்று பைத்தியத்தில் புலம்பியது மாதிரி புலம்புகிறேனோ? நான் பைத்தியமோ? அதனால்தான் மனைவி இப்படி அழுகிறாளோ? இல்லை... ஆமாம். அவள் அஞ்ஞானி. அப்படித்தான் அழுவாள். நான் பைத்தியம் என்றுதான் நினைப்பாள். ஆனால் நானோ – ஞானி. புத்தனாய் ஆனவன். ரமணரிஷியாய் போனவன். ரமணரைக் பைத்தியம் என்று ஆரம்ப காலத்தில் அவர் மீது சிறுவர்கள் கல்லெறிந்தார்களாமே? சேஷாத்திரி சுவாமிகளைக் கூட பைத்தியம் என்று போலீஸ் ஸ்டேஷனில் அடைத்தார்களாமே? அவர்களைப் போலத்தான் நானும், நான் பைத்தியமில்லை. ஞானி. ஞானவான். அது சரி, ஞானத்திற்கும் தூக்கமின்மைக்கும் என்ன சம்பந்தம்? தட்சிணாமூர்த்தி கூட கண்ணை மூடிக் கொண்டு தானே இருக்கிறார்? அனந்த சயனம் கூட பாற்கடலில் அரிதுயில் கொள்கிறானே. நான் ஏன் தூங்கக் கூடாது? தூங்கக் கூடாது என்று ஏன் அப்படி ஒரு எண்ணம்? ஞானத்திற்கும், தூக்கமின்மைக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ? இல்லை. ஞானம் என்னைப் பற்றிக்கொண்டது... ஞானமா? பைத்தியமா?.... பைத்தியத்தின் முற்றலா? அல்லது ஞானத்தின் துவக்கமா?
மனைவியின் அழுகைச் சப்தம் என்னை நிமிர்த்துகிறது. அந்த அறை வாசலுக்குள் மாயமாய் மறைந்து போன, டாக்டர் இப்போது ஊசி மருந்தோடு வருகிறார். நடந்ததைக் கேள்விப்பட்டோ என்னமோ, அந்த குடிசை சாமியாரும், விபூதிப்பையோடு வருகிறார். இருவரும் என்னை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பனிப்போரில் யாருக்கு வெற்றி என்று பார்ப்போம்.
★★★