பூநாகம்/011
அடுக்காத மாடி
அந்த மூவரும் ஆட்டோவில் இருந்து விடுபட்டார்கள். ஆட்டோ, ‘கொஞ்சே கொஞ்சம் நில்லுப்பா’ என்று கலைச்செல்வி ‘கான்பூர் தமிழில்’ கேட்டாள் ‘ரன்னிங் டயம், சீக்கிரமாய் வாங்கோ’ என்றான் டிரைவர்.
கலையழகு வாய்ந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நின்ற அந்தத் தெருவைப் பார்ப்பதற்கே பெருமிதமாக இருந்தது அழகம்மாவிற்கு. இந்தத் தெருவில் நிலம் வாங்கிப் போட்டதற்காக கணவனைப் பெருமை பொங்கப் பார்த்தாள். கலைச்செல்வி வியந்தபடி தந்தையின் கையைப் பற்றிக் குலுக்கி ‘கங்கிராட்ஸ் டாடி பீட்டிபுல் லொகேஷன்’ என்றாள்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் முத்துவேல் நின்றார். மேலும் கீழுமாய் பார்த்தார். சந்தேகமில்லை அது அவரது இடந்தான். தெற்குப் பக்கம் அதே சக்தி வித்யாலயா. இரண்டு வருஷத்துக்கு முன்பு ஓடு போட்ட கட்டிடம்.... இப்போது காங்கிரீட் மாளிகையாகி விட்டது.
முத்துவேல் தலையை ஆட்டி ஆட்டிப் பார்த்தார். அவர் வாங்கிப் போட்ட இரண்டு கிரவுண்டு இடத்தையும் சாலையில் மூன்றடியையும் ஆக்கிரமித்து ‘அன்பு இல்லங்கள்’ என்ற பிளாஸ்டிக் பெயர் ஒட்டப்பட்ட காம்பவுண்ட் சுவரைப் பார்த்தார். ஆறடுக்கு மாடி. ஒரு அரண்மனையின் கம்பீரம். பத்துப் பதினைந்து கார்கள், ஸ்கூட்டர்கள், வாசலில் கூர்க்கா... என்ன இதெல்லாம்.
அதிர்ச்சியடைந்து கீழே விழப் போனவரை தாயும் மகளும் தாங்கிப் பிடித்தார்கள். அழகம்மா, ‘என்னங்க.... என்னங்க’ என்று அரற்றியபடியே அங்குமிங்குமாய் சுற்றியபோது, சக்தி வித்யாலயா சண்முகம், அவரைப் பார்த்துச் சிரித்தபடி வந்தார். முத்துவேல் மனைவியையும் மகளையும் உதறிப் போட்டுவிட்டு அவரிடம் ஓடினார்.
“ஸார்.... ஸார்.... அது என்னோட நிலந்தானே....?”
“ஒரு காலத்துல.... அப்புறம் அதை சேட்டுக்கு வித்துட்டீங்க போலிருக்கே என்ன ரேட்டுக்கு கொடுத்தீங்க. என்கிட்ட சொல்லியிருந்தா நானே நல்ல ரேட்டுக்கு வாங்கியிருப்பேனே.”
முத்துவேல் தலைக்குள் ஏதோ ஒன்று உட்கார்ந்து தலையோட்டை பிய்த்தெறிவது போல் பிரமை. அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை தானும் மகளும் மனைவியும் கல்தூண்களாய் தலையில் வைத்து பாரம் தாங்காமல் பரிதவிப்பது போன்ற உடல்வலி... அழகம்மா தான் முன்பின் பார்த்திராத சக்தி வித்யாலயாரைப் பார்த்து ‘என்ன ஸார் சொல்லுங்க’ என்று பதறியடித்துக் கேட்டபோது அந்த ஆசாமி ‘ஸார் இந்த இடத்தை அந்த சேட்டுக்கு வித்துட்டாருன்னு நெனச்சேன்’. அவர் என்னடான்னா விக்கலன்னு சொல்றார்.
முத்துவேல் சிறிது சுயத்திற்கு வந்தார்.‘நான் விக்கல ஸார். விக்கவே இல்ல ஸார். ஒங்ககிட்டக் கூட என் அட்ரஸக் கொடுத்தேனே ஸார். ஒரு வரி எழுதிப் போட்டிருக்கலாமே ஸார்.’
“வார்த்தய வியர்த்தமா கொட்டாதீங்க ஸார்.... யார் வீடு கட்டினா எனக்கு என்ன? ஏதோ எனக்கு பவர் ஆப் அட்டர்னி எழுதிக் கொடுத்தது மாதிரி அதட்டுறீங்க....?”
“அதட்டல் ஸார்.... அதட்டல. ஒரு ஆறுதலுக்காகக் கேட்டார்.”
“சரி... சரி... அதோ ஷெட்டு முழுசயும் அடச்சிட்டு நிற்கிற கான்டசாவுல ஏறப்போறான் பாருங்க.... அவன் தான் சேட்டு. அவங்கிட்டே போய்க் கேளுங்க. ஆனால் நான் சொன்னேன்னு சொல்லாதீங்க. அவனுக்கு அடியாளுங்க அதிகம்.”
சக்தி வித்யாலயர் சேட்டுக்கோ அவரது அடியாள்களுக்கோ அஞ்சுபவரல்ல. ஆனாலும் வீட்டுக்குள் போய் தன்னை மறைத்துக் கொண்டார். அந்த சேட்டு அப்பப்ப கார்ல லிப்ட் கொடுக்கிறான். அதோட இந்த வாத்திப் பசங்க வேற.... வம்பு பண்றாங்க... சேட்டுக்குப் பிரண்டாய் இருந்தால்தான் லேடி டீச்சருங்களாவது பயப்படுவாளுங்க. சேட்டு கெட்டிக்காரந்தான். எங்கேயோ இருந்து ஒரு பிச்சைக்காரனாய் வந்து ஒரு ராசாவாயிட்டான். பலர பிச்சைக்காரங்களாகவும் ஆக்கிட்டான். எம்.பி.யும் வேற ஆகப் போறானாம்...
முத்துவேலர் குடும்பத்துடன் கேட் பக்கம் வந்தபோது கூர்க்கா வழி விட்டான். இன்னும் பாக்கியிருக்கும் பிளாட்களில் ஒன்றை வாங்க வந்திருப்பதாக நினைத்து, சேட்டு சொல்லிக் கொடுத்தது போல் தலையைக் குனிந்து அதையே கை போலாக்கி ஒரு சல்யூட் அடித்தான்.முத்துவேல் முக்கியடித்து ஓடினார். காரில் ஏறப் போன சேட்டின் குறுக்கே கையை நீட்டியபடியே அவனை வெறித்துப் பார்த்தார். தேவிலால் மாதிரியான தோற்றம். ஆனால் வயிறு மட்டும் உடம்பின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக விம்மியிருந்தது. சேட் அவரைப் பார்த்ததும் அவசரத்தனமான நிதானத்துடன் விளக்கமளித்தான்.
“அதோ ரிஜிஸ்தரோட நிற்கிறார் பாருங்க... அவர்கிட்டே எல்லா விவரமும் கேளுங்க... நாலு பிளாட்டையும் நல்லா பாருங்கோ.... நான் அரை மணி நேரத்துக்குள்ளே வந்துடுறேன். அட்வான்ஸ் கொண்டு வந்திருக்கீங்களா?”
முத்துவேல் விண்ணதிர மண்ணதிரக் கத்தினார்.
“அடே.... பாவி.... இது என்னோட நிலம்டா.... அஞ்சு வருஷத்துக்கு முன்னால முப்பதாயிரம் ரூபாயக்கு வாங்கிப் போட்ட கிரவுண்டுய்யா.... பொண்டாட்டி நகையவித்து ஜி.பி.எம்.லோன் போட்டு குருவி சேர்த்தது மாதிரி சேர்த்து வச்ச பணத்தையும் போட்டு வாங்கிப் போட்ட இடம்டா....”
சேட்டு, முத்துவேல் தன்னைப் புகழ்வது போல் வாயை ஒரு கோடாக்கினான். இதற்குள் பல்வேறு பிளாட் பால்கனிகளில் பல்வேறு உருவங்கள் தோன்றின. சிலருக்கு சேட்டு மாட்டிக் கொண்டதில் சந்தோஷம். சேட்டை விரும்பாத மற்றும் பலருக்கு புது வருத்தம். இந்த வில்லன் செய்த வில்லங்கத்தால், லட்சககணக்கான ரூபாயில் வாங்கி போட்ட பிளாட்டுக்குக் கேடு வந்துவிடக் கூடாதே என்ற பயம். அந்த பயத்தின் அடிப்படையில் வில்லாதி வில்லனான அந்த சேட்டை கதாநாயகனாகப் பார்த்தார்கள். தங்கள் விருப்பத்திற்கு விரோதமாகவே சேட்டுக்கு ஆதரவாளராய் மாறினார்கள். சேட்டுக்கும் ஒரு பிரச்னை. அதையே ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டான். இவனை விரட்டுகிற விரட்டில்.... பிளாட்டுகளில் பிளாட் போடுற பசங்க பயப்படணும். ஆடாமல் அசையாமல் முத்துவேலை பார்த்துக்கேட்டான்.
“யாருய்யா.... நீ.... பதறாத காரியம் சிதறாது நிதானமாப் பேசு...!”
‘இந்த நிலத்த வாங்கிப் போட்டவன் ஸார்!’
‘யார்கிட்ட வாங்குனீங்க.’
‘கண்மணி ராமச்சந்திரன் கிட்டே. காந்தி நகர்ல இருக்காங்களே அந்தம்மாகிட்டே...!’
‘அவங்ககிட்டே போய்க் கேளு!’
‘அவங்க இறந்துட்டதாய்....!’
‘அப்போ அவங்க சமாதியத் தேடிப் பிடிச்சு... அங்க போய்க் கேளு... என்னய்யா நீ நிசமாவே, ஏமாந்துட்டியா இல்ல ஏமாத்துறியா? எப்படி இருந்தாலும் எனக்கென்ன? இந்த இடம் திருவான்மியூருல... இன்னும் உயிரோடு இருக்கிற மகோன்னதனோட இடம்... வில்லங்க சர்டிபிகேட் வாங்கி சப் ரிஜிஸ்திரார் ஆஃபீஸ்ல பத்திரம் பதிஞ்சு.... கிரவுண்டுக்கு அஞ்சு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கேன். மெட்ரோபாலிட்டன் ஆபீஸ்ல கார் மேல கார் போட்டு அலஞ்சு திரிஞ்சு பிளான் அப்ரூவலோடு எண்பது லட்சத்துல கட்டுன அடுக்குமாடி வீடு.... நீ எவ்வளவு ஈஸியா ஒன்னோட இடமுன்னு சொல்ற.... ஒன்ன மாதிரி ஆளுங்கள எல்லாம்..... ஏய் கூர்க்கா ஒனக்கு வேலயக் காப்பாத்திக்க ஆச இல்லயா.... இந்த மாதிரி ஆளுங்கள ஏய்யா விடுற....’ சட்டப் பேரவை மார்ஷல் மாதிரி கூர்க்கா முத்துவேல் பக்கம் ஓடி வந்தான். அவரது மனைவியும் மகளும் பயந்து விட்டார்கள். அவனைக் கையெடுத்துக் கும்பிட அந்தக் கும்பிடு அவன் வேகத்தைப் பின்னாலும், சேட்டின் எசமானப் பார்வை முன்னாலும் இழுக்க அவன் அல்லாடியபோது அழகம்மாவும், கலைச்செல்வியும் முத்துவேலை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்கள். அதில் அதிக சிரமமும் இல்லை. முத்துவேலர் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு உடன்பட்டார். ‘அய்யோ... அய்யோ....’ என்று அரற்றிக் கொண்டார். பெரிய பணக்காரி என்று தான் நம்பிய கண்மணி ராமச்சந்திரன் ஏமாற்றிவிட்டாளே என்று துடித்துப் போனார். இல்லாவிட்டால் அந்தச் சேட்டு அப்படி பயப்படாமல் பேசியிருக்க மாட்டான் என்ற அனுமானம்...
கேட்டுக்கு வெளியே வந்தவர்களை இடிக்கப் போவது போல், சேட்டின் ‘செட்டுக்கார்’ வாசலில் இருந்து ஒரே துள்ளலாய்த் துள்ளி அப்புறம் பாய்ந்தது. அங்கிருந்து விலகிய மூவரும் சாலையின் மறுமுனை விளிம்பில் நின்றார்கள். சக்தி வித்யாலயர் ஜன்னல் வழியாகப் பார்த்தான். பிளாட் அடுக்குமாடிவாசிகள் சந்தோஷப்பட்டார்கள். பிழச்சுட்டு.... பிழைச்சுட்டு.... ஆனாலும் அங்கிருந்த ஒரு நடுத்தர ஆசாமி, நாலாவது மாடியின் ஓரத்திற்குப் போய் லிப்ட்டின் மூலம் கீழே வந்தார். சேட்டின் கார் தெருவைத் தாண்டுவதற்கு அவகாசம் கொடுத்து நின்றார். பிறகு கேட்டுக்கு வெளியே வந்து அங்குமிங்குமாய் பாவ்லா காட்டிவிட்டு சக்தி வித்யாலயர் இப்போது குனிந்து போயிருப்பதை அனுமானித்துக் கொண்டு முத்துவேலர் பக்கம் வந்தார். அவரைப் பார்த்ததும் ஆறுதல் தேடிப் பேசப் போனவரிடம் அவரே பேசினார்.
“கவலைப்படுறத விட்டுட்டு.... காரியத்தப் பாருங்க.... இந்த நிலம் கண்மணி ராமச்சந்திரனுக்குத்தான் சொந்தம். ஏதோ பெரிய பைனான்ஸ் விவகாரத்துல மகோன்னதன் மாட்டி, அவனோட இந்த நிலம் ஜப்திக்கு வந்தது. கண்மணி ராமச்சந்திரன் அதை ஏலத்துல எடுத்துருக்காங்க. இந்த சேட்டுப் பயல். மகோன்னதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ஜப்தி விவகாரத்த மூடி மறச்சு.... மகோன்னதனோட ஒரிஜினல் பத்திரத்த மட்டும் காட்டி இந்த நிலத்தை வாங்கிட்டதா பத்திரம் பதிவு செஞ்சுட்டான். எவ்வளவு அநியாயம் பாருங்க. எந்த சப் ரிஜிஸ்திரார் ஆபீஸ்ல யாரு எந்த நிலத்த வாங்கினாரோ அதே நிலத்த வாங்குனதாய் பதிவு செய்துட்டான்.”
கலைச்செல்வி முதல் தடவையாகப் பேசினாள்.
‘சப் ரிஜிஸ்திரார் ஆபீஸ்ல எப்படி அங்கிள் சம்மதிப்பாங்க. சட்டத்துக்கு தப்பாச்சே.’
‘நீ வேறம்மா.... சப் ரிஜிஸ்டிரார் ஆபீஸ்ல பெண்டாட்டி, புருஷன விக்கிறதாயும், புருஷன் பெண்டாட்டிய விக்கிறதாயும் எழுதிக் கொடுத்தாலும் பதிவு செய்வாங்க... என்ன கொஞ்சம் வாய்க்கரிசி போடணும்.’
‘நீங்க இங்கே பிளாட்ல இருக்கீங்களா’
‘அங்க இருந்தா இப்படி உங்க்கிட்ட அன்பா பேசுவனா நான் ரியல் எஸ்டேட் புரோக்கர்... இந்த சேட்டுப்பயல... நம்பி அவன் ஆயிரம் சதுரடின்னு சொன்ன பிளாட்ட ஒருததருக்கு வாங்கிக் கொடுத்தேன. கடைசில மொத்தமே எழுநூறு சதுரடி... வாங்குனவர் சேட்டததானே பொலீஸ்ல புகார் செய்யணும்...? அதுக்குப் பதிலா என்மேல் கம்பளையிண்ட் கொடுக்கப் போறதாய் மிரட்டுறான். கமிஷன் கேட்டால் குலைக்கிறான். அவனைப் பார்க்கத்தான் வந்தேன். மொதல்ல போலீஸ்ல போய் கம்ப்ளெயின்ட குடுங்க. எனக்குக் கமிஷன் கொடுக்காத பயல். பிளாட்ட விட்டுட்டு நடு ரோட்ல திரியணும்... அப்போதுதான நிம்மதி.... சீக்கிரமாப் போங்க....’
முத்துவேலர் வேக வேகமாகப் போன அந்த மனிதனின் முதுகைப் பார்த்தபடியே நிமிர்ந்தார். அவர் பதிவுப் பத்திரத்– தில் இந்த மகோன்னதன் இடத்தை அந்தக் கண்மணி ராமச்சந்திரன் எப்படி ஏலத்தில் எடுத்தாள் என்ற விவரம் எழுதப்பட்டிருந்தது நினைவுக்கு வரவர அவருள் ஒரு போர்க்குணம் எழுந்தது. அவரையே உற்று நோக்கிய மனைவியையும், மகளையும் ‘வாருங்கள்’ என்று மோவாயை ஆட்டிக் காண்பித்துவிட்டு முன் நடந்தார்.
அவரைப் பார்த்து திட்டப்போன ஆட்டோக்காரன், அவர் வந்ததும் வராததுமாய் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போப்பா என்று போர்க்குரல் எழுப்பியபடி, ஆட்டோவிற்குள் உட்கார்ந்த தோரணையில் அசந்து விட்டான். அவர்களும் ஏறிக் கொண்டார்கள்.
அப்போது தூரத்தைப் பற்றிக் கவலைப்படாத முத்துவேல் இப்போது அந்தக் காவல் நிலையம் கண்ணில் படுவதற்காக துடியாய்த் துடித்தார். அங்குமிங்குமாய் நெளிந்தார். இப்போது அழகம்மா வாய்விட்டே அரற்றினாள்.
‘குருவி சேர்த்தது மாதிரி சேர்த்த பணமெல்லாம் போயிட்டே. கடைசில தெருவுல நிக்கோமே... நான் எத்தன தடவ சொன்னேன். மெட்ராஸ் ஒத்து வராதுங்க. கான்பூர்லயே இருந்துடலாம்னு சொன்னனே கேட்டீங்களா... தமிழ் தமிழ்நாடுன்னு மூச்சுக்கு மூச்சு பேசுற ஒங்களுக்கு என்ன நடந்திருக்குன்னு பார்த்தீங்களா. தமிழ்நாட்ல வாழத்தான் முடியல சாவுறதயாவது அங்க வச்சிக்கலாமுன்னு நீங்க விளையாட்டாச் சொன்னது வினையாயிட்டே. சாகாமச் சாகப் போறோமே... அய்யோ ஒங்களுக்கு பிளட் பிரஷர்னு தெரிஞ்சும் நான் திட்டுறேனே. என் மனசு கேட்கமாட்டக்கே. கலை.... ஒங்கப்பாவுக்கு மாத்திரை கொடுடீ....’
அழகம்மா மீண்டும் பேசி விடுவோமே என்று பயந்து போய் வாயில் வலது கையால் அழுத்திக் கொண்டாள். கலைச்செல்வி அம்மாவை அணைத்துக் கொண்டாள். முத்துவேல் விறைத்தும் விக்கித்தும் சிறிது வீறாப்போடும் நிமிர்ந்து நின்றார். ஆட்டோ டிரைவர் இளைஞன் கேட்டான்.
‘அந்த சேட்டு பிராடு.... அவன் கிட்டவா மாட்டினீங்க.... என்ன நடந்தது.....’
வாயை வலுக்கட்டாயமாக மூடிய அழகம்மா மீண்டும் அரற்றினாள்.
‘அதை ஏன் கேக்குற தம்பி... இவரு ஊர்ல அனாதயா பிறந்து எப்படியோ எஸ்.எஸ்.எல்.சி. படிச்சுட்டு கான்பூர்ல ஒரு தோல் கம்பெனில சேர்ந்தாரு. பக்கத்து ஊர்ல இவரப் போலவே அநாதரவாப் போன என்னையும் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இவள் கான்பூர்லதான் பிறந்தாள். இவருக்கு இந்த மண்ண மறக்கமுடியல. மகளுக்குக் கலைச்செல்வின்னு பெயரிட்டாரு. கம்பெனி விஷயமா இந்த சி.எல்.ஆர்.ஐ யில வருஷத்துக்கு ஒரு தடவ வருவாரு. அப்போ யாரோ... சொன்ன இந்த இடத்த வாங்கிப்போட்டாரு வருஷா வருஷம் நிலத்த பார்க்கிற மனுஷன் போன வருஷம் பார்க்கல. அதே சமயத்துல ‘அழகம்மா.... அழகம்மா... நம்ம நிலத்தோட மதிப்பு.... இப்போ பத்து லட்சம். அஞ்சு லட்சத்துல ஒரு கிரவுண்ட் வித்து... ரெண்டு லட்சத்துல ஒரு சின்ன வீடு கட்டி, மூணு லட்சத்துல நம்ம மகளுக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு நல்ல பையனாப் பார்க்கலாமுன்னாரு. அடம் பிடிச்ச எங்கள எப்படியோ கூட்டி, வந்துட்டாரு. கான்பூர் கம்பெனில் கணக்கு வழக்கை முடிச்சுட்டு. போன வாரந்தான் மெட்ராஸ் வந்தோம். சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல. ஒரு லாட்ஜ்லதான் இருக்கோம். வாடகை வீடு பார்த்துட்டு வர்றோம். அதுக்குள்ள இந்த அநியாயத்த பார்த்துட்டோம்.’
‘மம்மி அழாதீங்க... டாடி... இந்தாங்க மாத்திரை—’ அந்த டிரைவர் பாதிக்கப்பட்டதை அந்த ஆட்டோ நின்று காட்டியது. பிறகு அங்குமிங்குமாய் அலை மோதி, அந்தக் காவல் நிலையததிற்கு முன்பாக நின்றது.
முத்துவேல் மனைவியையும், மகளையும்—பற்றியபடியே அந்த செஞ்சிவப்புக் கோடுகள் போட்ட கட்டிடத்தின் மாடிகளில் ஏறினார். வாசலில் துப்பாக்கியுடன் வழிமறித்த ஒரு காவலரிடம் அத்தனையையும் சொல்லச் சொல்ல அவன் தலையாட்டிக் கேட்டான். அப்புறம் அதோ போய்ச் சொல்லுங்க, என்று கை காட்டினான்.
இடுப்புத் துப்பாக்கியோடு ஏதோ செக்யூரிட்டி டியூட்டிக்குப் புறப்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துவேலரை சுழிபோட்டுப் பார்த்தார். சத்தமாய்ப் பேசப் போனவரை, ‘மெதுவாப் பேசுங்க எனக்குக் காது கேட்கும்’ என்று ஸ்பீட் பிரேக் போட்டார். முத்துவேலும் அழகம்மாவும் அவரிடம் மாறி மாறி முறையிட்டார்கள். ‘என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் அந்தப் பொண்ணு பேசாமல் அரோகன்டா நிற்பாள்’ என்று கலைச்செல்வியை கர்வத்தோடு பார்த்தார். இதற்குள் ஒரு டெலிபோன். ‘ஹலோ... நான்தான்... இதுக்குப் பேர்தான் டெலிபதி... இப்போதான் அந்தப் பார்ட்டியும் வந்திருக்கு. டோண்ட் ஒர்ரி, ஒங்க காம்ப்ளெக்சுக்கு செக்யூரிட்டி ஏற்பாடு செய்யறேன். இன்னிக்குக் கமிஷனர் ஆபீஸ்ல டூட்டி... நாளைக்கு வச்சுக்கலாம். எங்க ஆட்கள அனுப்பி வைக்கிறேன். அப்பதான் ஒங்க பிளாட் ஆளுங்களுக்கும் ஒங்க மேல ஒரு ‘இது’ வரும்...’
இன்ஸ்பெக்டர் அந்த மூவர் பக்கமும் நெருங்கி வந்து கத்தினார்.
‘பெரிய மனுஷங்க மேல... பழி போடுறதுக்கு இப்படி எத்தன பேருய்யா கிளம்பி இருக்கீங்க. அடுத்த தெருவுல ஏழைப் பிள்ளையாரை பத்து லட்சத்துல பணக்காரராய் ஆக்குனவரே அவரு... வேனுமின்னால் தாசில்தாரப் பாருங்க... அப்படி இல்லாமல் அங்க போய் பழயபடியும் கலாட்டா செய்தீங்கன்னா இபி கோ. 427–வது செக்க்ஷன் படி அத்துமீறி பிரவேசித்ததற்காகவும், செக்க்ஷன் 147–படி சட்ட விரோதமாய் கூடியதுக்காகவும், செக்க்ஷன் 327–டி சட்டவிரோத செயலுக்காகவும் செக்க்ஷன் 41–படி வன்முறையில் ஈடுபட்டதுக்காகவும், நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கும். போலீஸ் ரிமாண்டும் ஏழாண்டு ஜெயிலும் கிடைக்கும். காரணம்... ஒரு பொருள் அல்லது உடைமை யார்கிட்ட இருக்குதோ அதுக்கும் அவங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது போலீஸ் டூட்டி... ஓ.கே.. எனக்கு தலைக்கு மேல் வேல... போங்க... போங்க...’
அந்த மூவரும் தள்ளாடித் தள்ளாடி இன்ஸ்பெக்டரின் அமானுஷ்யமான ஒரு சக்தி தள்ளிவிட்டது போல ஆட்டோவுக்கு வந்தார்கள். முத்துவேல் சுருதி குறைந்து பேசினார்.
‘ஒனக்கு எவ்வளவு பணமுன்னாலும் தர்றோம். தாசில்தார் ஆபீஸ் விடுப்பா.’
‘போறேன் ஸார்.... அதோ எனக்குத் தெரிஞ்ச வக்கீல் வர்றார். ஸார்... ஸார்...’
நீதிமன்றத்தில் போட்டுக் கொள்வதற்கும் காவல் நிலையத்தில் கையில் வைத்துக் சொள்வதற்கும் பயன்படும் கறுப்புக்கோட்டோடு வந்த சிவப்பு மனிதர், அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவரே வந்தார். முத்துவேல் விபரமாக எடுத்துரைத்துப் பேசினார் அவர் பேச முடியாமல் தத்தளித்தபோது அழகம்மாவும் கலைச்செல்வியும் அவருக்கு உதவிக்கு வந்தார்கள். வக்கீல் எந்தவிதச் சலனமும் இல்லாமல் ஏற்கனவே செத்துப் போய், இப்போது அவர் ஆவி மட்டுமே பேசுவது போல பேசினார்.
‘தாசில்தார் ஆபீஸ்ல... அவரையும் அவரோட ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் தேடுறதுக்கு ஒரு மாசமும்... அவர்கள் முகம் கொடுத்துப் பேச ஒரு வருஷமும் ஆகும். இது அசல் கிரிமினல் கேஸ். ஆனால், போலீஸ் சேட்டுப் பக்கம் இருக்கறதுனால ஒண்ணும் பண்ண முடியாது. ஆனால், கோர்ட்ல ஒரே சமயத்துல, சிவில், கிரிமினல் கேஸ் போடலாம். பத்து லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்குப் போடுவோம். அப்புறம் கேட்கிற ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ஏழார் ரூபாய்க்கு ஸ்டாம்ப் பேப்பர் வாங்கணும். பத்து லட்சம் ரூபாய்க்கும் எழுபத்தைந்தாயிரம் ரூபாய் ஆகும். என் பீஸ் வேற. அந்த சேட்டு அப்பவும் போகாட்டால் அஞ்சு வருஷத்துல ஜெயிச்சுடலாம். இதுதான் ஒரே வழி. விரலுக்கு ஒரு எம்.எல்.ஏ.வையும் கைக்கு ஒரு மந்திரியையும் பிடிச்சு வச்சிருக்கிற சேட்டை வேற வழில மடக்க முடியாது. ஓ.கே... எனக்கு இன்ஸ்பெக்டர்கிட்ட ஒரு கஞ்சா கேஸ் இருக்குது...’
அந்த ஆட்டோ திகைத்து திசையற்று ஓடியது. அதோ அந்தத் தெருப் பக்கம் வந்தபோது அழகம்மா டிரைவரின் முதுகைத் தட்டி ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள். அது நின்றதும் அதிலிருந்து குதித்தாள். அவள் முகம் இறுகிப்போய் உடம்பு முறுக்கேறியது. அந்தத் தெருவில் நிதானமாக நடந்தாள். டிரைவர் உட்பட அந்த மூவரும் அவளை இழுத்துப் பிடிக்கப் போனார்கள். அழகம்மா அவர்களைத் தட்டிவிட்டு விட்டு அந்த அடுக்குமாடி வீட்டுக்கு முன்னால் போய் நின்றாள். கீழே குனிந்தாள். ஒரு கை நிறைய மண்ணை அள்ளினாள். மேலே நிமிர்ந்தாள். மண்ணோடு உள்ளங்கையை வாய்க்கருகே கொண்டுவந்து மூன்று தடவை ஊதிவிட்டாள். ஒவ்வொரு ஊதலும், ஒரு புயலாகி, ஒவ்வொரு பிடி மண்ணையும் அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்தை நோக்கி அணுத்துகள்களாக அனுப்பிக் கொண்டிருந்தபோது—
அந்த அடுக்குமாடி வீட்டிற்கு ‘செக்யூரிட்டி’ கொடுக்க, போலீஸ் வேன் ஒன்று அந்தத் தெருவுக்குள் நுழைந்தது.
★★★