பெரியாரும் சமதர்மமும்
பெரியாரும் சமதர்மமும்
நெ.து. சுந்தரவடிவேலு
முன்னாள் துணைவேந்தர்
சென்னைப் பல்கலைக் கழகம்
மக்கள் நெஞ்சம்
4 (11), சி.என்.கே. சந்து,
சேப்பாக்கம், சென்னை-600005.
புதுவாழ்வுப் பதிப்பகம்
23. நான்காவது முதன்மைச் சாலை,
கஸ்தூரிபா நகர், அடையாறு
சென்னை — 600 020
நூற் குறிப்புகள்
| நூல் தலைப்பு | : | பெரியாரும் சமதர்மமும் |
| ஆசிரியர் | : | நெ.து.சுந்தரவடிவேலு |
| உரிமை | : | ஆசிரியருக்கே |
| பதிப்பு ஆண்டு | : | டிசம்பர் 1987 |
| விலை | : | ரூ.25/- |
| அச்சிட்டவர் | : | கவிஞர்.நாரா நாச்சியப்பன் நாவல் ஆர்ட் அச்சகம் 137. ஜானி ஜான் கான் தெரு சென்னை- 600 014. |
| முகப்போவியம் | : | ஸ்டெனி |
| வெளியீடு | : | புது வாழ்வுப் பதிப்பகம் 23, நான்காவது முதன்மைச் சாலை கஸ்தூரிபா நகர், அடையாறு சென்னை—600 020. |
| பொருள் | : | பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் சமதர்மத் தொண்டு பற்றியது. |
சமதர்மம் என்றால் என்ன?
“புதியதும், சிறப்பானதுமான ஒரு சமுதாயத்தை அமைக்க நாம் விரும்புகிறோம. புதியதும், சிறப்பானதுமான அந்தச் சமுதாயத்தில் ஏழைகளும் இருக்கக் கூடாது, பணக்காரர்களும் இருக்கக் கூடாது. எல்லோரும் உழைக்க வேண்டும். விரல் விட்டு எண்ணத்தக்க பணக்காரர்கள் மட்டுமல்லாது, உழைக்கும் மக்கள் அனைவரும் தங்களுடைய பொது உழைப்பின் பலனைக் கட்டாயம் அனுபவிக்க வேண்டும், எல்லோருடைய உழைப்பையும் எளிதாகும்படிச் செய்யவே, இயந்திரங்களும் பிற வளர்ச்சிகளும் பயன்பட வேண்டும், கோடிக்கணக்கான மக்களின் உழைப்பில் சிலர் மட்டுமே பணக்காரர்களாவதற்கு அவை பயன்படக் கூடாது. புதியதும் சிறப்பானதுமான இந்தச் சமுதாயமே சமதர்மச் சமுதாயம் எனப்படும். இப்படிப்பட்ட சமுதாயத்தைப் பற்றிச் சொல்லித் தரும் பாடமே சமதர்மம் ஆகும்.”
— லெனின்
(V. I. Lenin — A Short Biography. 1969, Page 46)
பதிப்புரை
“உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும், இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகிறது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப் படுகிறது. அதாவது, முதலாளி (பணக்காரன்)—வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால், இந்தியாவிலோ மேல் சாதியார், கீழ்ச் சாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையானதாகவும் இருப்பதால், அது பணக்காரன்—ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.
— பெரியார் ஈ.வெ.ரா.
புதுவாழ்வுப் பதிப்பகத்தின் முதல் வெளியீடான, கலசம் மொழி பெயர்த்த—ஆந்திர நாட்டு நாத்திகச் செம்மல் கோரா அவர்களின் ‘நாங்கள் நாத்திகரானோம்’ என்னும் தமிழாக்க நூலினை வரவேற்றுப் பரவச் செய்த தமிழ்மக்களுக்கு, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேடைப் பேச்சு, நாள்—கிழமை—மாத ஏடுகள் என இவைகளுக்கு அடுத்த நிலையில், கொள்கை பரப்பும் பணியைச் செய்து கொண்டிருப்பவை நூல்களே ஆகும்.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தோழர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்கள் ‘அறிவுவழி’ மாத ஏட்டில் 1979 சூன் முதல் 1983 பிப்ரவரி வரை, ‘பெரியாரும் சமதர்மமும்’ என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கித் தமிழ் மக்களிடையே உலவச் செய்வது, சமதர்மக் கொள்கையைப் பரப்புவதற்கும், பெரியார் ஒரு சமதர்மக்காரர் என்பதை இளந்தலைமுறையினர் அறிவதற்கும், உதவியாக அமையும் என்று கருதினோம். அக்கருத்தின் விளைவே இந்நூல்.தோழர் நெ.து.சு. அவர்கள், பெரியாரின் பேச்சுகளை நேரில் கேட்டறிந்தவர்; அவருடைய எழுத்துக்களைப் படித்தறிந்தவர்; அவருடைய செயல் முறைகளைத் தொடர்ச்சியாக உற்று நோக்கியவர். சுருங்கச் சொன்னால், தந்தை பெரியாரை நன்கு புரிந்து கொண்டவர்; அதே வேளையில், சமதர்மக் கொள்கையையும் நன்கு புரிந்து கொண்டவர். எளிமைக்கும், தோழமைக்கும் உரியவராக வாழ்ந்து வரும் அவர் உலக நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப் பயணம் செய்துள்ளார். ஏழு முறை சோவியத் நாட்டுக்குச் சென்று, சமதர்ம வாழ்க்கை முறையினை நேரில் அறிந்து வந்துள்ளார்.
குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து, இருபதாம் நூற்றாண்டின் ‘மனு’வாகச் செயல்பட்ட பார்ப்பன இராஜாஜியின் சூது நிறைந்த திட்டத்தை முறியடித்து, காமராசரும், பெரியாரும் தமிழ்நாட்டில் கல்விப் புரட்சியை நடத்திய நாள்களில், அரசுப் பணியில் கல்வித் துறை இயக்குநராக இருந்து நெ.து.சு. அவர்கள் உழைத்த உழைப்பு குறிப்பிடத் தக்கதாகும். அந்த உழைப்பு அத்தலைவர்களின் சிந்தனை, செயலாக்கம் பெறத் துணை செய்தது.
நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் சமகாலத்தவர் என்னும் நிலையில் இருந்து கொண்டு, அவர் கடந்த அறுபதாண்டுகளாகத் தமிழ் நாட்டில் நிலவிய சமுதாய—அரசியல் பின்னணியினையும் ஆங்காங்கே நமக்குப் புரியும்படி எடுத்துச் சொல்கிறார்.
கடந்த அறுபதாண்டுகளில், தமிழ்நாட்டு அரசியலில் நீதிக் கட்சி—சுயமரியாதை இயக்கம்—காங்கிரசு—பொதுவுடைமைக் கட்சி ஆகிய கட்சிகளுக்கிடையே நிலவிய உறவுகளையும், அவைகளுக்கிடையே வெளிப்பட்ட மோதல்களையும் இந்நூலைப் படிப்போர் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
நண்பர் ஸ்டெனி இந்நூலுக்கு மேலட்டையினை அழகுற வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்நூலுக்குத் தமிழ் மக்கள் தங்களுடைய பேராதரவினை வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
—பதிப்பகத்தார்
நூலைப் பற்றியும்…
நூலாசிரியரைப் பற்றியும்…
பெரியார் ஈ.வெ.ரா. யார்?
கடவுள் மறுப்பாளர்; பார்ப்பனீய வெறுப்பாளர்; சாதி—மதம்—சாத்திரங்களை ஒழிக்கப் போராடிய புரட்சியாளர்; வகுப்புரிமையைப் பெற்றுத் தந்தவர்; தமிழனுக்குச் சுயமரியாதை ஊட்டியவர். பொதுமக்கள் பலரிடமிருந்தும், பெரியாரைப் பற்றிக் கிடைக்கும் மதிப்பீடுகள் இவையாகும்.
ஆனால், இந்தச் சொற்களுக்குள் அடக்கி விட முடியாத வகையில், பெரியாரின் சிந்தனைப் போக்கும், செயலோட்டமும் அமைந்திருந்தன, அது என்ன? தம்முடைய பொது வாழ்வின் தொடக்கக் காலம் தொட்டு, இறுதி மூச்சு வரை அவர் சமதர்மக்காரராகவே வாழ்ந்தார்; செயல்பட்டார். இந்த உண்மையைச் செய்திகளாக நன்கு அறிந்தவர்கள், அவருடைய சமகாலத்தவர்கள். பிற்காலத்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், இவையே வரலாறாக வடிவமைக்கப்பட வேண்டும். பெரியாரின் எழுத்தும்—பேச்சும்—செயல்பாடும் —சமதர்மச் சமுதாயம் அமைப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அவர் சமதர்மத்துக்காகப் பாடுபட்ட செய்திகளை, வரலாறாகவே எழுதியுள்ளார் தோழர் நெ து. சுந்தரவடிவேலு அவர்கள்.
தோழர் நெ.து. சுந்தரவடிவேலு என்பவர் யார்?
1912-ஆம் ஆண்டில் செங்கற்பட்டு மாவட்டம், நெய்யாடு பாக்கம் கிராமத்தில், நெ.ச. துரைசாமி—சாரதாம்பாள் வாழ்க்கைத் துணைவர்களுக்குப் பிறந்தவர். 1929-ஆம் ஆண்டில், செங்கற்பட்டில், பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாநாட்டுக்கு நேரில் சென்று கண்டு—கேட்டு, உணர்வு பெற்றவர். சுயமரியாதை இயக்கத்துடன் அன்று நெ.து.சு. அவர்கள் தொடங்கிய பயணம், இன்றும் தொடர்கிறது. இடைப்பட்ட காலத்தில், கல்லூரிக் கல்வியை ஒழுங்காக முடித்து, எம்.ஏ.,எல்.டி, பட்டங்களைப் பெற்றார். அரசுப் பணியில் சேர்ந்தார். கலப்புத் திருமணம் செய்து கொண்டு, வாழ்க்கையைத் தொடங்கினார். சுய மரியாதைச் சமதர்மக்காரராக வாழ்ந்து கொண்டே, அரசுப் பணிகளில் உயர் பதவிகளைப் பெற்றார்.
தமிழ்நாடு பொதுக் கல்வி—பொது நூலக இயக்குநராக, தமிழ்நாட்டின் இணை கல்வி ஆலோசகராக, தமிழ்நாட்டின் தலைமைக் கல்வி ஆலோசகராகவும், கூடுதல் செயலாளராகவும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக, இவ்வாறாகப் பல பெரிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றினார். இந்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ பட்டம் பெற்ற இவருக்குச் சென்னைப் பல்கலைக் கழகம், டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது.
அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும்—இன்றும்- தம் 75-ஆம் வயதிலும், சுய மரியாதை—சமதர்மக் கொள்கை பரப்பலுக்கு நாள் தோறும் எழுதியும், பேசியும், தொண்டாற்றி வருகிறார். முதலாவது சுயமரியாதை மாநாட்டில் கலந்து கொண்ட நெ.து.சு. அவர்கள், சுயமரியாதை இயக்கத்தின் சமகாலத்தவராகிறார். பெரியார் சமதர்மத்துக்காகப் பட்ட பாட்டினை விளக்கித் தாம் எழுதியுள்ள நூலுக்கு இவர் “பெரியாரும் சமதர்மமும்” எனப் பெயரிட்டுள்ளார். நேரில் உரையாடுவது போன்ற உணர்ச்சி, நெ.து.சு. அவர்களுடைய எழுத்தில் காணப்படும் தனிச் சிறப்பு. படிப்போர்க்குச் சோர்வூட்டாமல், கதையோட்டம் போல், நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தி, இவர் இந்நூலினை எழுதியுள்ளார்.
இராஜாஜி புகுத்திய கட்டாய இந்தி—குலக் கல்வித் திட்டம்… திராவிடர் கழத்திலிருந்து அண்ணா பிரிந்தது… தமிழகக் கம்யூனிஸ்டு கட்சியும், பெரியாரும்… ஆகிய செய்திகள் குறித்து, இவர் இந்நூலில் கூறும் ஆராய்ச்சி நோக்குடைய கருத்துக்கள், பொது வாழ்வில் உள்ள திறனாய்வுக்காரர்கள்—கட்டுரையாளர்கள்—பேச்சாளர்கள் ஆகியோர் முழுதும் அறிந்து கொள்ள வேண்டியனவாகும்.
இந்தியச் சூழலுக்கேற்பப் புரட்சி இங்கே மலர வேண்டும் என்ற சிந்தனையும், செயலும் கொண்டவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய நூல் “பெரியாரும் சமதர்மமும்”.
பெரியார் அன்பர்களின் “வீட்டு நூலகத்தில்” இடம் பெறும் தகுதியும்—சிறப்பும், தேவையும் கொண்ட நூல் “பெரியாரும் சமதர்மமும்”.
—கலசம்
நூலாசிரியரின் முன்னுரை
உலகில் பிறந்தோர் கணக்கில் அடங்கார்; இருப்பவர் நானூறு கோடிக்கு மேல். அவர்களில், காலத்தின் பொன்னேடுகளில், ஒளிர்வோர் சிலரே.
அச்சிலரில் ஒருவர், நம்மிடையே பிறந்தார்; நம்மிடையே வாழ்ந்தார்; நமக்காகப் பாடுபட்டார்; நமக்காகத் துன்பப்பட்டார்; நம் நிலை கண்டு பதறினார்; கதறினார். நம் நிலை என்ன? அரசியலில் அடிமை; சமுதாயத்தில் கீழோர்; பொருளியலில் வறியோர். இவற்றை மாற்றி, நம்மை மனிதர்களாக—ஒரு நிலை மனிதர்களாக, தன் உழைப்பில் வாழும், மானம் உடைய மனிதர்களாக—உருவாக்க, அயராது உழைத்தார். தன் வீட்டுச் சோற்றை உண்டு—தன் பணத்தைச் செலவிட்டு—தன் உடலை வாட்டி—தன் உள்ளத்தை வைரமாக்கி —துறவிகளுக்கெல்லாம் துறவியாகப் புரட்சிப் பணியாற்றினார். அத்தகைய புரட்சியாளர் எவரோ?
அவர் பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆவார். அவர் இயல்பாகவே, படிப்படியாகவே முழுப் புரட்சியாளர் ஆனார். அவர் வயதில் பெரியார்; அறிவில் பெரியார்; சிந்தனையில் பெரியார்; செயலில் பெரியார்: சாதனையில் பெரியார்; நாணயத்தில் பெரியார்.
பெரியாரைப் போன்று, தொண்ணூற்று அய்ந்து வயது வாழ்ந்தவர் எங்கோ ஒருவரே. அவ்வயதில், ஊர் ஊராகச் சூறாவளிப் பயணம் செய்து, கருத்து மழை பொழிந்த பெரியாருக்கு ஈடு அவரே.
‘அரசியலில், மக்கள் பெயரில் ஆட்சி நடப்பது மட்டும் போதாது. அது மக்களுக்காகவே நடக்க வேண்டும்’ என்று இடித்துரைத்தவர் பெரியார். மக்கள் விழிப்பாக இராவிட்டால், அவர்கள் பெயரில், படித்தவர்களும், பணக்காரர்களும், தங்களுக்காக ஆட்சி செய்து கொள்ளும் நிலை உருவாகி விடும் என்று நம்மை முதலில் எச்சரித்தவர் பெரியார்.
‘எல்லோரும் ஓர் குலம். ஆகவே அனைவரும் சேர்ந்து சமைக்கட்டும்; இணைந்து பரிமாறட்டும்; ஒரே பந்தியில் இருந்து உண்போம்’ என்னும் சமத்துவக் கொள்கையை பொது மக்களிடையே நடைமுறைப் படுத்திக் காட்டிய வெற்றி வீரர் பெரியார் ஆவார்.‘வாழலாம்; எல்லோரும் வாழலாம்; அடிப்படைத் தேவைகள் நிறைவு பெற வாழலாம்; வாயடியும், கையடியும் மிகுந்த பேர்கள், இயற்கை வளத்தை தேவைக்கு மேல் முடக்கிப் போட்டுக் கொள்ளா விட்டால்’, இக்கருத்தைப் பயிரிட்டதில், பெரியாரின் பங்கு பெரிது; மிகப் பெரிது; ஆழமானது.
பெரியாரின் தொண்டு நீண்டது; பன்முகங் கொண்டது; புரட்சிகரமானது; பயன் கருதாதது; சோர்வு அறியாதது; எதிர் நீச்சல் தன்மையது.
அறுபதாண்டு காலம், பொதுத் தொண்டில் பல பக்க புரட்சிகரமான தொண்டில், தந்தை பெரியார் ராமசாமியைப் போல் வெற்றிகரமாக தாக்குப் பிடித்தவர் எவரே உளர்.
பெரியார் ராமசாமியை, தீவிர காங்கிரசுவாதியாக அறிந்தவர்கள் அநேகமாக மறைந்து விட்டார்கள் எனலாம். காந்தியடிகளின் தலைமையில், கதரைப் பரப்பிய ராமசாமி வரலாற்று நாயகராகி விட்டார். கள்ளுக்கடை மறியலை முதலில் தொடங்கிய பெருமைக்குரியவர் ராமசாமி என்பதும், அவரது மனைவி நாகம்மையும், தங்கை கண்ணம்மாவும் அம்மறியலில் பங்கு கொண்ட முதல் பெண்கள் என்பதும், சிலருக்கே நினைவுக்கு வரலாம். தீண்டாமை ஒழிப்புப் பணியின் ஒரு கூறாக, கேரளத் தலைவர்களின் அழைப்பின் பேரில் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டதும், இரு முறை சிறைக் கொடுமைக்கு ஆளானதும், அதிலும் நாகம்மையும், கண்ணம்மாவும் பங்கு பெற்றதும் வரலாற்றின் ஒளி விளக்குகள் ஆகும். சாதிக் கலைப்பிற்கு வழியாக, கலப்பு மணங்களை ஊக்குவித்த பெரியாரைக் காண்போர் பலராவர்.
வெண் தாடி வேந்தராகக் காட்சியளித்த தந்தை பெரியார், பகுத்தறிவுப் பகலவன்; உயர் எண்ணங்கள் மலர்ந்த சோலை; பண்பின் உறைவிடம்; தன்மான உணர்வின் பேருருவம்; புரட்சியின் வற்றாத ஊற்று; தொண்டு செய்து பழுத்த பழம்: அச்சம் அறியா அரிமா ; எவர்க்கும், எத்தீங்கும் விளைவிக்காத மனிதாபிமானத்தின் பேராறு.
தந்தை பெரியார், இந்திய தேசிய காங்கிரசைத் தமிழ்நாட்டில் பரப்பிய நால்வரில் ஒருவர் என்பது ஒரு நிலை. அப்பணியைத் திட்டமிட்டு மறைத்தும், குறைத்தும் வந்தவர் ஒரு சாரார். அவரைத் தேசத் துரோகியாகக் காட்ட முயல்கின்றனர். சாதியொழிப்பு, தன்மானப் பயிர், தமிழ் உணர்வு, தமிழர் என்ற நினைப்பு ஆகியவற்றை வளாத்தவர் என்பது அடுத்த நிலை. பழைய இலக்கியங்கள், சமய நூல்கள் ஆகியவற்றைக் களையெடுத்து, பசுந்தாள் உரமாக்கியது அந்நிலையின் கூறாகும்.தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பணியினை திரித்துக் கூறி வருவோர் மற்றொரு சாரார். அவர்கள் பெரியாரை அழிவு வேலைக்காரர் என்று தூற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். ஏழைகளற்ற சமுதாயத்தை உருவாக்குவது அழிவு வேலையா? கொடுமைகளுக்கு ஆளாகி வரும் பெண்ணினத்திற்கு, உரிமை கேட்பது மனிதாபிமானம் அல்லவா?
அரசியல் உரிமை பெற்றாலும், சாதி வேற்றுமைகள் ஒழிந்தாலும், வகுப்புரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், எல்லோருக்கும் வேலையும், மனித வாழ்வும் வந்து விடாது என்பதை உணர்ந்த பெரியார், சமதர்மத்தின் தேவையை எடுத்துக் காட்டினார். அக்கோட்பாடு 1930இல் ஈரோட்டில் அரும்பிற்று; இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் அரும்பிற்று. 1931இல் விருது நகரில் போதாயிற்று; மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாட்டில் போதாயிற்று; சோவியத் ஒன்றியப் பயணம் அதை மலரச் செய்தது. சுயமரியாதை சமதர்மத் திட்ட மாகக் காய்த்தது.
சுயமரியாதை இயக்கம், சமதர்ம இயக்கமாகவும் இயங்கிற்று. பகுத்தறிவுப் பணி எல்லோரையும் வாழ்விக்கும் பணியாகச் செயல்பட்டது. திராவிடர் இயக்கத் தொண்டு பாட்டாளிகளின் தொண்டாக விளைந்தது.
பெரியாரைச் சமதர்ம ஞாயிறாகக் காண்பது, நம் கடமை. அவர் பரப்பிய சமதர்ம ஒளியை மக்களிடம் காட்டுவது நம் பொறுப்பு. வழியிலே வந்த நெருக்கடிகள் சில. அவை திசை திருப்பிகள். நெடுந்தூரம் திசை தவறிப் போதல் ஆகாது.
பகுத்தறிவு இயக்கத்தின் விளைவு, சமதர்ம இயக்கம். தன்மான வாழ்விற்கு உறுதியான கடைக்கால், சமதர்ம வாழ்க்கை முறையாகும். இத்திசையில், பெரியார் ஆற்றி வந்த அரிய தொண்டினை இந்நூலில் காணலாம். அத்தொண்டு இனித்தான் கனிய வேண்டும். எனவே பகுத்தறிவுவாதிகளாகிய நமக்கு, சாதி வேற்றுமைகள் பாராத நமக்கு சமதர்மச் சிந்தனையில் மறுமலர்ச்சி தேவை. அதில் முழு ஈடுபாடு தேவை.
தந்தை பெரியாரின் சமதர்மத் தொண்டினை மறந்து போவோமோ என்கிற அச்சம் பிறந்தது. அவரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும் காணும் நிலை வந்து விடுமோ என்ற அய்யப்பாடு தோன்றிற்று. வகுப்புரிமையின் தனிநாயகராக மட்டும் காட்டுவது முழு உண்மையாகாது. பெரியாரின் பெருந்தொண்டால், முழு மனிதனான எவராவது, அவரது முழு உருவையும் காட்டுவார்களென்று சமுதாயம் எதிர்பார்த்தது. அடுத்தடுத்துப் பெருக்கெடுத்து வரும் புதுப்புதுப் பொது விவகார வெள்ளத்தில், சமதர்மத் தொண்டு மூழ்கி விடுமோ என்று பலரும் அஞ்சினர்.
அந்நிலையில், பகுத்தறிவு சமதர்ம இயக்கத்தின் சார்பில், தோழர் கே. பஞ்சாட்சரம் அவர்களால் சென்னை அரும்பாக்கத்தில் இருந்து வெளியிடப்படும் “அறிவு வழி” என்னும் திங்கள் இதழில் ‘பெரியாரும் சமதர்மமும்’ என்னும் தலைப்பில் எழுதும்படி, அவர் அன்புக் கட்டளை இட்டார். காலத்தின் கட்டளையாக, ஏற்றுக் கொண்டேன். ஏறத்தாழ, நான்கு ஆண்டுகள் அப்படி எழுதினேன். இத்தோழருக்கு நம் நன்றி உரியதாகும்.
1976 சூன் திங்கள் 26ஆம் நாள் தோழர் கலச. இராமலிங்கமும், தோழியர் கோவி ராமலிங்கமும் என் தலைமையில், சீர்திருத்த முறையில் கலப்புத் திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது எம்.ஏ. பட்ட வகுப்புத் தேர்வு எழுதி முடித்திருந்த கோவி ராமலிங்கம், அதில் வெற்றி பெற்றதோடு, பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து, பி.எல். பட்டமும் பெறுள்ளார்; வழக்குரைஞராகத் தொழில் செய்து வருகிறார். இவர்கள் இந்நூலை வெளியிட துணிந்து முன் வந்தது, தனி மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இச்சீரிய தொண்டு நம் சிந்தனையைத் தூண்டுவதாக, வளர்ப்பதாக உள்ளது. இந்நூலை வெளியிடும் புது வாழ்வுப் பதிப்பகத்தாருக்கு, நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நெ. து. சுந்தரவடிவேலு
7-11-1987
32, கிழக்குப் பூங்கா சாலை,
செனாய் நகர்,
சென்னை - 600030.
பொருளடக்கம்
பக்கம்
| 01. | 1 |
| 02. | 5 |
| 03. | 8 |
| 04. | 12 |
| 05. | 19 |
| 06. | 23 |
| 07. | 28 |
| 08. | 34 |
| 09. | 39 |
| 10. | 45 |
| 11. | 50 |
| 12. | 53 |
| 13. | 57 |
| 14. | 61 |
| 15. | 65 |
| 16. | 74 |
| 17. | 78 |
| 18. | 85 |
| 19. | 93 |
| 20. | 102 |
| 21. | 106 |
| 22. | 110 |
| 23. | 115 |
| 24. | 123 |
| 25. | 131 |
| 26. | 136 |
| 27. | 142 |
| 28. | 148 |
| 29. | 156 |
| 30. | 164 |
| 31. | 168 |
| 32. | 177 |
| 33. | 182 |
| 34. | 191 |