பெருங்கதை/1 40 உவந்தவை காட்டல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

1 40 உவந்தவைகாட்டல்

நாளணி[தொகு]

புரிந்த சுற்றமொடு புணர்ந்துடன் கெழீஇ
விரிநீர்ப் பொய்கையுள் விளையாட்டு விரும்பிய
மறுநீங்கு சிறப்பின் மதிலுஞ் சேனை
நறுநீர் விழவி னாளணி கூறுவென்

நீர்மாடத்தின் சிறப்பு[தொகு]

பனையும் ஒஎதிரும் பாசிலைக் கமுகும் 5
இனையன பிறவும் புனைவனர் நாட்டிக்
கிடையும் பீலியு மிடைவரித் தழுத்தி
மிடைவெண் டுகிலி னிடைநிலங் கோலி
அரிச்சா லேகமு மார வள்ளியும்
கதிர்ச்சா லேகமுங் கந்துங் கதிர்ப்ப 10
வம்பப் படத்துப் பொன்னுருக் கூட்டி
அன்னிலை வாழை யகம்போழ்ந் திறுத்த
வெள்ளி வெண்டிரள் வேண்டிடத் தூன்றிக்
கட்டளை நாசியொடு கபோதங் காட்டி
எட்டிறை யெய்திய விலக்கணக் காட்சி 15
ஏரணி யமைந்த வெழுநில நல்வினை
நூரணி மாடத்து நிலாநெடு முற்றத்

நாரைகளின் செயல்[தொகு]

தரிப்பொற் கிண்கிணி யார்ப்ப வியலிக்
கருங்கண் மகளிர் கைபுடைத் தோப்ப
இருங்கண் விசும்பக மிறகுறப் பரப்பிக் 20
கருங்கயல் கொண்ட கவுள வாகிப்
பொங்கிரும் புன்னைப் பூம்பொழின் முன்னிச்
செங்கா னாரை செல்வன காண்மின்

ஒரு பிடியின் செயல்[தொகு]

சாந்தரை …… யன கூலப் பெருங்கடை
ஈண்டிய மாதரை மீண்டிடந் தம்மினெம் 25
பூங்குழை மாதர் புனலகம் புக்கனள்
ஆங்கியன் றவளைத் தாங்குந ரில்லெனக்
கூந்த நறுமண் சாந்தொடு கொண்டு
நானச் செப்பொடு கூன்பின் றுளங்கப்
பெருங்கோ நங்கை பெட்ப வேறிய 30
இருங்கை யிளம்பிடி கடச்செருக் கெய்திக்
கடிற்றுப் பாகன் கைப்புழிச் செல்லாது
தொடிக்கை மகளிர் நீர்குடை வெரீஇய
நெட்டிரும் பொய்கைக் குட்ட மண்டி
ஒளிச்செந் தாமரைப் பாசடைப் பரப்பிற் 35
களிக்கய லிரியக் குளிப்பது காண்மின்

ஒரு பெண்ணின் செயல்[தொகு]

ஞாழற் படுசினை தோழியர் நூக்க
ஆம்பற் பரப்பிற் பாய்ந்த பைந்தொடி
செண்ணச் சிகழிகைப் பின்னிடை சேர்ந்த
பொன்னரி மாலைதன் புறம்பிடைப் புடைப்பச் 40
செற்றப் புதவு குத்தி வாங்கிக்
கொழுநன் கூந்தல் கொண்டெனக் கருதிக்
கழுநீ ருண்கட் கடையி னோக்கி
அனமையி னழுங்கிய நன்னுத லுவப்ப
வள்ளிலைப் பரப்பின் வள்பெறிந் தன்ன 45
துள்ளியல் வட்டிகை துடுப்பிற் கடைஇ
உள்வழி யுணரா நுழிதருங் கணவன்
நனிபெருங் காதலொடு நண்ணுவழி யடையப்
பனிவா ருண்கண் பைதன் மறைய
முகிழ்ந்துவீங் கிளமுலை முத்திடை நாற்றிக் 50
கவிழ்ந்தெருத் திறைஞ்சுமோர் காரிகை காண்மிண்

ஒரு குரங்கின் செயல்[தொகு]

நீலக் குவளை நிரையித ழுடுத்த
கோலப் பாசடைப் பால்சொரிந் தன்ன
தூவெள் ளருஞ்சிறைச் சேவலொ டுளரிப்
பள்ளி யன்னம் பகலிற் றுயிலா 55
வெள்வளை மகளிர் முள்குவநர் குடையும்
நீரொலி மயக்கிய வூர்மலி பெருந்துறைக்
கடற்றிரைக் கண்டங் கான்றஃ குத்தி
மடற்பனை யூசலொடு மாட மோங்கிய
உருவ வெண்மணற் பெருவெண் கோயிலுட் 60
செம்பொற் கிண்கிணிச் சேனா பதிமகள்
கம்பற் சுற்றமொடு கன்னியர் காப்பப்
பைந்தொடிக் கோமா ணங்கையர் நடுவண்
வண்டுள ரைம்பால் வாசவ தத்தை
அரைச மங்கைய ராயமொடு கெழீஇ 65
நிரைவெண் மாடத்து நீரணி காணிய
போதரு மென்னுங் காதலின் விரும்பிப்
பெருங்காற் புன்னைக் கருங்கோட் டணைத்த
நாவாந் பண்ணு மாவிறன் மள்ளர்க்குக்
கள்ளடு மகடூஉக் கைசோர்ந் திட்ட 70
வெள்ளரி வள்ளம் பல்லுறக் கவ்விக்
கூடக் கூம்பி னீடிர ளேறி
உச்சிக் கிவருங் கட்கின் கடுவன்
வீழ்ந்த தங்களை விசும்புகொண் டேறும்
தெய்வ மகாஅரி னையுறத் தோன்றித் 75
துள்ளுபு திரிதருந் தோற்றங் காண்மிண்

ஒரு களிமகன் செயல்[தொகு]

சுழலுங் கண்ணினன் சோர்தரு மாலையன்
அழன்றுந் தேற லார மாந்திக்
காழக மிக்கொண் டாழுந் தானையன்
வாழ்க வாழ்கவெம் மதிலுஞ் சேனை 80
மட்டுண் மகளிர் சுற்றமொடு பொலிகெனத்
துட்டக் கிளவி பெட்டவை பயிற்றிக்
கட்பகர் மகடூஉக் கட்குடை யோசையும்
கன்னமர் பள்ளிக் கம்மிய ரிடிக்கும்
பன்மலர்க் காவி னம்மனை வள்ளையும் 85
குழலும் யாழும் மழலை முழவமும்
முட்டின் றியம்பும் பட்டின மொரீஇத்
துறக்கங் கூடினுந் துறந்திவ ணீங்கும்
பிறப்போ வேண்டேன் யானெனக் கூறி
ஆர்த்த வாய டூர்க்களி மூர்க்கன் 90
செவ்வழிக் கீதஞ் சிதையப் பாடி
அவ்வழி வருமோ ரந்த ணாளனைச்
செல்ல லாணை நில்லிவ ணீயென
எய்தச் சென்று வைதவண் விலக்கி
வழுத்தினே முண்ணுமிவ் வடிநறுந் தேறலைப் 95
பழித்துக் கூறுநின் பார்ப்பனக் கணமது
சொல்லா யாயிற் புல்லுவென் யானெனக்
கையலைத் தோடுமோர் களிமகற் காண்மின்

சில மகளிர் செயல்[தொகு]

பல்காசு நிரைஇய வல்குல் வெண்டுகில்
ஈரத் தானை நீரிடைச் சோரத் 100
தோட்டார் திருநுதற் சூட்டயற் சுடரும்
சுட்டி சிதையக் குட்டத்துக் குளித்து
மகர குண்டல மறிந்துவில் வீசக்
கிளரும் பாசிழைக் கிண்கிணிக் கணைக்கால்
அஞ்செஞ் சீறடி யஞ்சுவர வோடி 105
நிரைவளை மகளிர் நீர்குடை வொரீஇப்
புரைபூங் கொண்டையிற் புகைப்பன காண்மின்

மயிலின் செயல்[தொகு]

கருங்காற் புன்னையொ டிருங்கரும் புடுத்து
நாணல் கவைஇய கான லொருசிறை
மகிழ்பூ மாலையொடு மருதிணர் மிடைந்த 110
அவிழ்பூங் கோதையொ டவிரிழை பொங்க
எக்கர்த் தாழை நீர்த்துறைத் தாழ்ந்த
நெடுவீ ழூசன் முடிபிணி யேறித்
தொடுவேன் முற்றத்துத் தோழியொ டாடாப்
பட்டியல் கண்டத்துப் பலர்மனங் கவற்றவோர் 115
எட்டி குமர னினிதி னியக்கும்
இன்னொலி வீணைப் பண்ணொலி வெரீஇ
வஞ்சிக் கொம்பர்த் துஞ்சரித் துளரி
ஒளிமயிர்க் கலாபம் பரப்பி யிவ்வோர்
களிமயில் கணங்கொண் டாடுவன காண்மிண் 120

உண்ணும் அந்தணர் செயல்[தொகு]

அதிரல் பரந்த வசோகந் தண்பொழில்
கணிக்கயத் தியன்ற மறுவி றண்ணிழல்
பனிப்பூங் குவளையொடு பாதிரி விரைஇ
வேதிகை யெறிந்த வெண்மணற் றிண்ணைப்
பாலிகைத் தாழியொடு பல்குட மிரீஇ 125
முந்நீர்ப் பந்தர் முன்கடை நாட்டி
வரைவின் மாந்தர்க்குப் புரைபதம் பகரும்
கலம்பூச் சரவத் திலஞ்சி முற்றத்துக்
கருப்புக் கட்டியொடு தருப்பணங் கூட்டி
நெய்ச்சூட் டியன்ற சிறுப லுண்டி 130
நகைப்பத மிகுத்த கைய ராகித்
தொகைக்கணம் போதரு மறச்சோற் றட்டில்
தளையுலை வெந்த வளைவா லரிசி
வண்ணப் புழுக்க லுண்ணாது சிதறி
ஊட்டெமக் கீத்த கோப்பெருந் தேவி 135
முன்ன ராக முன்னுமின் கொண்டெனத்
தலைப்பெரு மடையனைத் தலைக்கடை வாங்கும்
எந்தயிர் வாரா னெமக்கெனச் சீறி
அந்த ணாள ரலைப்பது காண்மிண்

மகளிர் குரவை[தொகு]

முன்றுறை மீண்டிய குன்ற வெண்மணல் 140
எக்கர் மீமிசைத் தொக்கொருங் கீண்டி
நுண்ணயிர் வெண்டுகள் குடங்கையின் வாரி
இலைப்பூண் கவைஇய வெழுதுகொடி யாகத்து
முலைக்கச் சிளமுலை முகத்திடை யப்பி
மராஅ மயிலின் மயங்குபு தூங்கும் 145
குழாஅ மகளிர் குரவை காண்மின்

ஒரு பெண்ணின் செயல்[தொகு]

புனைந்தேந் தல்குற் காசுபுதை யாது
நனைந்து நிறங்கரந்த நார்நூல் வெண்டுகில்
அரைய தாகவு மாடைகா ணாது
நிரைவளை முன்கைத் தோழியர் குடைந்த 150
நுரைகை யரிக்குமோர் நுடங்கிடை காண்மின்

சில மகளிர் செயல்[தொகு]

தொக்கனர் படியுந் தொய்யின் மகளிர்தம்
கைக்கொ ணீரிற் கண்ணிழல் கயலென
மெய்க்கண் மேவார் மெல்லெனச் சொரிதந்
தெக்கர்க் கிளைக்கு மேழையர்க் காண்மின் 155

கட்குடி மகளும் அவள் காதலனும்[தொகு]

நெடுநீர் மாடத் தேணி யேறிப்
பொறிமயிற் பெடையிற் பொங்குபு பாய்தலின்
அணிக்கையிற் றவழ்ந்த மணிக்குர லைம்பால்
ஈர்முத் தாகத் தீரம் புலர்த்தி
அழனறுந் தேறல் சுழல்வண் டோப்பிக் 160
குறிவெங் காதலன் பொறியாப் புறுத்த
தமனிய வள்ளத்துத் தன்னிழ னோக்கிப்
பிறண்முக மிதுவெனப் பெண்மையின் மயங்கிக்
கள்ளினுட் டோன்றுமிவ் வொள்ளிழை மாதரைப்
பண்டு மொருகாற் கண்டகத் தடக்கிய 165
வையப் பரத்தையைக் கையொடு கண்டேன்
இனிப் பொய் யுண்ணு மேழைய மல்லமென்
றணித்தகு நுதல்வியர்த் தரையெழுத் தளைஇத்
துனிப்புறு கிளவி பனிக்கடற் பிறந்த
அரும்பெற லமிழ்தென விரும்பும் வேடகையன் 170
முகிழ்நகை முகத்த னாகி முற்றிழை
அவிழ்குரற் கூந்த லங்கை யடைச்சிக்
கள்ளமர் தேவிநின் கதிர்விடு நெடுமுகத்
தொள்ளணி காணிய வுள்ளி வந்ததை
உணராது புலத்தல் புணர்குவை யாயினென் 175
உள்ளகஞ் சுடுமென வுள்ளவிழ்ந் தெழுதரும்
காமக் கட்டுரை கனியென வளைஇத்
தாமக் கோதையொடு தாழ்சிகை திருத்தி
வளர்ந்தேந் திளமுலை மருங்கிவர்ந்து கிடந்த
பொலங்கல மணிப்பூண் பொலியப் புல்லியவள் 180
மனங்கொளத் தேற்றுமோர் மைந்தனைக் காண்மின்

ஒரு பெண்ணின் ஊடல்[தொகு]

ஏம முந்நீ ரெறிசுற வுயர்த்த
காமனும் விழையுங்காமர் காரிகைக்
கலையுணர் மகளிருள்ளம் போல
நிலையின் றுழிதரு நெடுஞ்சுழி நீத்தத்து 185
வினைதீ ருயிரின் மிதந்தது கீழாப்
பண்ணமை நெடும்புணை திண்ணிதிற் றழீஇ
ஆய மாக்களொடு சேய்வழி யோடிக்
கலந்த காதலி னாடலிற் கைசோர்ந்து
மலர்ந்துகடை போழ்ந்து மாழை கழீஇக் 190
காமங் கனிந்த கருந்தடங் கண்ணின்
இமைதீர் வெம்பனி முலைமுக நனைப்ப
மாரிப் பிடிக்கை நால்புறல் கடுப்ப
நீர்பொறை யாற்றாது நெகிழ்ந்துவீ ழசைந்த
காரிருங் கூந்தல் கையி னேந்தி 195
அகலி னகலு முயிரின ளாகித்
தலைநீர்ப் பெருந்துறைநிலைநீர் நின்ற
வண்டார் கோதையைக் கண்டன னாகி
நீணீர் நீந்தி நெடும்புணை யொழியத்
தன்வயிற் செல்லு மில்வளக் கொழுநனை 200
நின்வயிற் காத னில்லா தூர்தரும்
பூம்புனன் மடந்தையைப் புணர்ந்துவிளை யாடித்
தேம்பட மொழிந்து வேம்புமனத் தடக்கி
வார லோவென வாய்திறந்து மிழற்றி
ஓராது புலக்குமோ ரொள்ளிழை காண்மிண் 205

நீராடுதலினின்றும் விலக்கப்பட்ட ஒரு பெண்ணின் செயல்[தொகு]

நச்சுமன வேந்தர்க்குத் துச்சி லமைத்த
சிறுவலி யொருவனிற் றன்மனஞ் சுருங்கி
நறுமெல் லாக நந்துபொறை யெள்கப்
போக்கிட மின்றி வீக்கமொடு பெருகி
அம்மையு மழகுங் கொம்மையொடு கழுமிக் 210
கால்பரந் திருந்த கருங்கண் வெம்முலை
மேலிருந் தனயான் பொறையாற் றேனென்
றொசிவது போலுநின் னொசிநுசுப் புணரா
தினக்கிடை யிப்புனல் குடைகுவை யாயின்
நினக்கிடை மற்றொன் றுடையை யோவெனக் 215
காதற் செவிலி கழறுபு விலக்கவும்
போதற் கண்ணே புரிந்த வேட்கையின்
ஐயரி பரந்த வரிமலர் நெடுங்கண்
மையுண்டு மதர்த்த மணியொழுக் கேய்ப்பக்
கோல வாகத்துக் கொடிபட வெழுதிய 220
சாதிங் குலிக மாதி யாகச்
சுட்டிச் சுண்ணமொடு மட்டித்துக் கலந்த
குங்குமக் கொழுஞ்சேறு கூடக் குழைத்திட்
மந்திர வின்னெகிழ்ந் துருகி யாங்கு
நீடுர வழியி னூடுநிமிர்ந் தொழுகிப் 225
பிணர்முரிப் பட்டுடைப் பெருநல வல்குற்
காசுநிழற் காட்டு மாசின் மாமை
ஆவி நுண்டுகி லணிநல நனைப்பப்
பூவினுட் பிறந்த புனையிழை போலத்
தண்ணீர் தோழிய ராடத் தான்றன் 230

அரசனுடைய ஏவலாளர்களின் செயல்[தொகு]

திருவீற் றிருந்த திருநகர் வரைப்பின்
உருமீக் கூறு மன்னவ னொருமகள்
கண்டுகண் ணோராக் காமர் காரிகை
வண்டுள ரைம்பால் வாசவ தத்தை 235
பேணி யாடும் பெரும்புனல் விழவினுள்
நாணிச் செல்லா நல்குர வுடையோர்க்
கரும்பொறி யணிகல மாரப் பெய்த
பெரும்பொறிப் பேழை இவையெனக் கூறிக்
கறைவாய் முரசங் கண்ணதிர்ந் தியம்ப 240
அறையவுங் கொள்ளுங் குறையில ராகித்
துறைதுறை தோறு மிறைகொண் டோருள்
அணியா தோரை யாராய்ந் துழிதரும்
பணியா வேந்தன் பணிநரைக் காண்மிண்

ஓர் அன்னச் சேவலின் செயல்[தொகு]

புழற்காற் றாமரை யழற்போ தங்கண் 245
அல்லி மெல்லணைப் பள்ளி கொண்ட
தார்ப்பூம் பேடை தையல ரெடுத்த
நீர்ப்போர்க் கவ்வையி னீங்கி முனாஅ
தொள்ளொளிப் பவளத் துள்ளொளி யடக்கி
வெள்ளிப் பூந்தா ரெள்ளுந் தோற்றத்துப் 250
போதுபொறை யாற்றாப் புன்னையம் பொதும்பர்த்
தாதுபுறத் துறைப்பத் தங்கலிற் றலைபரிந்
திகழ்வி னோக்கமொ டிரைவேட் டெழுந்த
பவழச் செங்காற் பானிறச் சேவல்
திரையுமிழ் பொய்கையு ளிரையுமிழ்ந்து மயங்கி 255
மதிபுரை தாமரைப் பொதிபோது புல்லியஃ
தனமையி னழிந்து புன்மையிற் புலம்பி
அருப்பிள முலையவ ரடைகரை வைத்த
மருப்பியல் செப்பை மதித்த தாகி
அழல்வெங் காமத் தன்புதலைக் கொண்ட 260
மழலைத் தீங்குரன் மருட்டி யழைஇக்
குறுகச் சென்றத னுறுநோக்குப் பெறாது
புன்னையம் பள்ளிப் பொழிறொறு நாடும்
அன்னப் புள்ளி னலமரல் காண்மிண்

ஓர் அந்தணன் செயல்[தொகு]

நானந் தோய்த்த நறுமென் கூந்தலுள் 265
ஆனைந்து தெளித்து நீரிடை மூழ்கி
ஆவிரை யலரு மறுகையுஞ் செரீஇக்
கொட்டுமடி விரித்த பட்டுடைத் தானையள்
அங்கோற் றீந்தொடைச் செங்கோட் டியாழின்
பத்த ரன்ன மெத்தெ னவ்வயிற்றுத் 270
திரையொடு பட்டு நுரையொடு மறுகி
மட்டூண் மறுத்த பட்டினிப் படிவமொடு
கட்டளை பிழையாப் பட்டுடை யல்குலள்
பெட்ட வாய்மொழிப் பெரும்பா கீரதி
எதிர்ப்புன லாடுநர்க் கேம மாகப் 275
புன்ற்றுறை விடுத்த பொங்குமடைப் புழுக்கலைக்
காக்கை யோட்டி நோக்கி னுண்டு
வேண்டல னாயினும் விறலுஞ் சேனையும்
நீண்ட விஞ்சியு நிறைமணி மாடமும்
உருக்குறுநறுநெய் யுள்ளுறப் பெய்த 280
புழுக்கலொடு பாற்சோற் றயினி வாயின்
வழுக்க லின்றியென் வயிற்றக மார
உண்ப லென்றுதன் கண்பனி வாரக்
கொள்ளா வயிற்றி னாண்ட கையன்
செல்வோற் கண்டு பொள்ளென நக்கு 285
நுரைபுரை வெண்டுகி லரைமிசை வீக்கி
அவியிடப் படினென் னாருயிர் வைப்பது
கடிவோ ரில்லை முடிகுவெ னின்றெனச்
செவிமடுத் தெற்றிச் சிவந்த கண்ணினன்
உண்டற் புண்ணிய முடையெனை யொளித்துக் 290
கொண்டனை போகிற் கூடுமோ நினக்கெனப்
பிண்டப் பெருங்கவுட் பெருவிய ரிழிதரக்
கண்டோ ரார்ப்பக் கலாஅங் காமுறாஉம்
பண்டப் பார்ப்பான் பட்டிமை காண்மின்

சில பெண்களின் செயல்[தொகு]

நுரையொடு பொங்கு நுண்ணூல் வெண்டுகில் 295
அரையிடை நெகிழ வசைத்தல் செல்லார்
இறுமென நுடங்குஞ் சிறுகொடி மருங்கின்
மதுகை யோரா மறங்கூர் மனத்தர்
எதிர்நீர் தூஉ மிளையோர் திருமுகத்
தாழ மிகவா வரிபரந் தகன்ற 300
மாழை யுண்கண் மலரென மதித்துத்
தண்செங் கழுநீர்த் தகைமலர்த் தாதும்
ஒண்செந் தாமரைப் பைம்பொற் றாதும்
ஆராய்ந் துழிதரு மஞ்சிறை வண்டினம்
ஓராங்கு நிலைபெற் றுண்ணெகிழ்ந் தவிழ்ந்த 305
பேரா விவையெனப் பேர்தல் செல்லா
மொய்த்தலின் மற்றவை மொய்ப்பி னீங்கத்
தத்தரி நெடுங்கண் டகைவிரல் புதைஇப்
புதுமண மகளிரிற் கதுமெனத் தோன்றும்
மதுர மழலை மடவோர்க் காண்மின் 310

ஊடலைத் தீர்த்துத் தலைவன் தலைவியொடு நீராடல்[தொகு]

நிறைக்குறி னிறைத்துப் போக்குறிற் போக்கும்
பொறிப்படை யமைந்த பொங்கில வந்திகை
புன்னம் புக்க தன்னமர் காதலன்
பாடகச் சீரடிப் பைந்தொடி மாதரை
ஆடுக வாவித கைவயி னென்றலிற் 315
செஞ்சூட் டிட்டிகைச் கதைச்சுவர்ப் படுகால்
அஞ்சிறை யன்னத்தி னணிபெற வியலி
மண்ணுமணி யன்ன வொண்ணிறத் தெண்ணீர்த்
தண்ணிழற் கண்டே யென்னிழ லென்னும்
நுண்மதி நுணுகாப் பெண்மதி பெருக 320
எழுதி யன்ன வேந்துநுண் புருவம்
முழுதுநுத னெருங்க முரிய வேற்றிச்
செதும்பற் றாமரைச் செவ்விதழ் போலப்
பதம்பார்த்து மலரும் பனிமலர்த் தடங்கண்
கையிகந்து சிவப்ப வெய்துபட வுயிரா 325
நிரைகொ ளற்புத்தளை தெரிய வூர்தரும்
புலவி நோக்கத்துப் பூந்தொடி புலம்பி
நீரர மகளிரொடு நிரந்துட னின்ற
சூர னிவனெனச் சொல்லுங் குறிப்பினள்
பேரு முள்ளமொடு பிறக்கடி யிடுதலின் 330
நண்ணிய காதலி கண்ணிய துணர்ந்து
காளை போந்தவள் சிறுபுறங் கவைஇப்
பூளை மெல்லணைப் பொதியவிழ்ந் தன்ன
மென்றோ ணெகிழப் பற்றிக் குன்றா
அழல்புரை வேகத்து ளற்புநீ ரட்டிச் 335
சிறுவரைத் தணித்தவ டிருமுகந் திருத்தி
நீரா மடந்தையுங் கணவனு மிதனுள்
ஆர்வ வுள்ளமொ டானோர்க் காண்கம்
ஏகென வுய்த்துத்த மிருநலங் காட்டி
வேக வூட லவள்வயி னீக்கி 340
உருவக் கோலமொ டோம்பல் செல்லா
தொருவயி னாடு மிருவரைக் காண்மின்

சேனை வாணிகன்மகள் செயல்[தொகு]

ஒருமீக் கொற்றவ னுடைப்பொரு ளுடைய
செருவார் சேனைப் பெருவா ணிகன்மகள்
தன்னொடு நவிலத் தன்னை மார்கள் 345
கலத்திற் றந்த நலத்தகு விழுச்சீர்
வேறுபடு திருவினுள் விளங்கிழை மகளிரைக்
கூறுபட நிறீஇக் குளித்தன ளெழுவோள்
மின்னிருங் கூந்தன் மேதகப் புனைந்த
பொன்னரி மாலையைப் புனல்கொண் டீர்ப்ப 350
அத்துறை மருங்கி னயற்றுறை யாடும்
மைத்துன மன்னன் கைப்படுத்து வந்துதன்
சென்னி சேர்த்தியவண் முன்னர்த் தோன்ற
நெடும்புணை தழீஇ நீத்தொடு மறலத்
தடம்பெருங் கண்ணி தலைகவிழ்ந் திறைஞ்சிச் 355
செறிப்பி னாகிய செய்கையி னொரீஇயவள்
குறிப்பிற் கொண்டனன் கோதை யெனப
தயலோர் கருதி னற்றத் தருமெனக்
கயலேர் நெடுங்கண் கடும்பனி கால
மாலை கவர்ந்து மற்றவற் கீத்தனை 360
கோல வைவே லேனைய குமரர்க்
கறியக் கூறுவெ னஞ்சுவை யாயிற்
பெயர்த்துத் தம்மெனச் செயிர்த்தவ ணோக்கி
நீரணி யாட்டொடு நெஞ்சுநொந் துரைக்கும்
வாணிக மகளின் மடத்தகை காண்மின் 365

துறைகாக்கும் காவலர் செயல்[தொகு]

மின்னவிர் மணிப்பூண் மன்னவன் மடமகள்
அங்கலுழ் பணைத்தோட் செங்கடை மழைக்கண்
நங்கை யாடும் பொங்குபுனற் பூந்துறைக்
குங்குமக் குழங்கல் கொழுங்களி யாக
இத்துறை மேல வெத்துறை யாயினும் 370
ஆடன்மின் யாவிரு மாடுவி ருளிரெனின்
ஆடகப் பொன்னினும் மளவி னியன்ற
பாவை யாகும் படுமுறை யதுவெம்
கோவி னாணை போமி னீவிரெனத்
தென்மலைப் பிறந்த பொன்மருள் சூரல் 375
கருங்கண் டோறும் பசும்பொன் னேற்றித்
தொடித்தலைப் படுகோல் பிடித்த கையர்
வரிக்குப் பாயத்து வார்பொற் கச்சையர்
திருப்புன லாடிச் செயிர்த்த நோக்கினர்
முழுநீர் விழவின் மூவெழு நாளும் 380
கழுநீர்ப் பெருந்துறைக் காவ னண்ணிய
வண்டுஞ் சேரா வஞ்சுவரு சீற்றத்துக்
குண்டுதுறைக் காவலர் குழாஅங் காண்மிண்
இன்னவை பிறவுங் கண்ணொடு புணர்ந்த
புண்ணிய முடைமையிற் காண்மி னீரெனப் 385
பணிவி னல்வினைப் பயனுண் டாயின்
மணிமுடி மன்ன னணியுஞ் சேனையுள்
எழுமைப் பிறப்பு மெய்துகம் யாமெனக்
கழுமிய காதலொடு கைதொழு தேத்தி
நகர மாந்தர் பகர்வராற் பரந்தென். 390

1 40 உவந்தவைகாட்டல் முற்றிற்று.