பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/ஆறும் சேறும்

விக்கிமூலம் இலிருந்து

7. ஆறும் சேறும்


பலர் கூடியிருந்து குதூகலமாக மகிழ்ந்திருக்கும் பொழுது ஏற்படுகின்ற இன்ப மனத்தின் வெளிப் பாட்டை செயல் மூலமாக மிகுதியாகக் காட்ட, இந்த விளையாட்டு அதிகமாகவே உதவிடும். சிறு குழந்தைகளுக்கும். இந்த ஆட்டம் ஒரு சிறந்த ஆட்டம் தான்.


இதற்கென்று முன் கூட்டியே எந்த விதமான விளையாட்டு சாதனங்களையும் தயாரிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வந்திருக்கின்ற, அதே சமயத்தில் விளையாட விரும்புகின்ற அனைவருமே இந்த ஆட்டத்தில் பங்கு பெறலாம்.

எல்லோரையும் இரண்டு குழுவினராக சம எண்ணிக்கையில் பிரிக்க வேண்டும்.

பிறகு, நான்கு அடி இடைவெளி இருப்பது போல், இரண்டு நேர்க்கோடுகளை (தண்டவாளம் இருப்பதுபோல) இணையாகக் குறித்து விடவேண்டும் 

இந்த இணையான - இரு நேர்க்கோடுகளின் மீது இாண்டு குழுவினரையும் ஒருவரை ஒருவர் பார்ப்பது. போல நிறுத்தி வைத்துவிட ஆட்டம் தொடரும்.


ஆட்டத்தை நடத்துபவர் ஆறு என்று சொன்னால் , கோட்டில் நிற்பவர்கள் முன்புறமாகத் தாண்டிக் குதிக்க வேண்டும். சேறு என்று சொன்னால் பின்புறமாகத் தாண்டிக் குதிக்க வேண்டும்.

உதாரணமாக, ஆறு என்று சொன்னவுடன் முன்புறம் குதிக்காமல் பின்புறமாகத் தாண்டியவர்கள், ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள். 'பின்னர் முன்போல எல்லோரும் வரிசையாக நின்று கொள்ள ஆட்டம் மீண்டும் தொடரும். -

இறுதியாக, யார் ஆட்டமிழக்காமல் தாண்டிக் குதித்து எஞ்சி தனியே இருக்கிறாரோ அவரே ஆட்டத்தில் வெற்றிபெற்றவராவார்.

குறிப்பு : 1. ஆட்டத்தில் கண்ணுங்கருத்துமாக இருந்தால் தான், ஆறு சேறு என்று அறிந்து, உடனே உரிய இடத்திற்குத் தாவி நிற்க முடியும், ஆகவே, கவனமாக இருக்கவும்.

3. நேரங்கழித்துத் தாண்டிக் குதிக்கக் கூடாது. உடனே தாவிடவேண்டும். நேரம் எடுத்துக் கொள்பவர்கள் முதலில் எச்சரிக்கப்பட்டு, மீண்டும் செய்தால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். 

3. தாவிக் குதித்திடவேண்டும் என்பதானது. அதிக உயரமாக இல்லாவிட்டாலும், முடிந்தவரை தள்ளிக் குதித்தால் போதும். ஒரடி தூரமாவது முன் புறம் தாண்டினால் தான் ஆட்டம் உற்சாகமாக அமையும்.

4. ஆறு சேறு என்று குரல் கொடுப்பவர்கள் சற்று இழுத்தாற் போலவும், கேட்பவர் தடுமாறுவது போலவும் சாமார்த்தியமாகச் சொல்வதில்தான் ஆட்டத்தில் எழுச்சியூட்டுவதாக (திரில்) அமையும்.