பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/கொண்டு வா சீக்கிரம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


11. கொண்டுவா சீக்கிரம்!

இந்த விளையாட்டைத் தொடங்குவதற்கு முன்பே, ஆட்டத்தை நடத்துபவர்கள், அந்த சுற்றுப் புறத்தில் கிடைக்கக்கூடிய, அதாவது அதிகம் தேடினால்தான் கண்டு பிடிக்க முடியும் என்ற அளவில் கிடைக்கின்ற வகையில் மூன்று நான்கு பொருட்களின் மாதிரிகளைக் கூடவே கொண்டு வந்து, தங்களிடம் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.


உதாரணமாக, அத்தகைய பொருட்கள் கூழாங்கற்கள், கிளிஞ்சல்கள், இலை அல்லது பச்சிலை, எரிந்த தீக்குச்சி, பூக்களில் சிலவகை என்பதைப் போன்றும் இருக்கலாம்.


பிறகு, ஆட்டத்தில் பங்கு பெறுகின்ற அனைவரையும் அழைத்து ஓரிடத்தில் நிறுத்தி வைத்து, முதலில் நான்கு குழுவினராக, சம எண்ணிக்கையில் ஆட்டக் காரர்கள் இருப்பது போல பிரித்துவிட வேண்டும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைவரையும் நியமித்துவிட வேண்டும். 

அதன் பின்னர் தாங்கள் தயாராக வைத்திருக்கும் மாதிரிப் பொருட்களைக் காட்டி, இவை போன்று சேகரித்துக் கொண்டு வாருங்கள் என்று அனைவரையும் அனுப்ப வேண்டும். அந்தந்தக் குழுவினரை, வழி நடத்தி அழைத்துச் சென்று தேடும் பொறுப்பு குழுத் தலைவரையே சேரும்.


எந்தக் குழுவினர், எல்லாப் பொருட்களின் மாதிரியையும் முதலில் தேடி வந்து சேர்த்துக் கொண்டு வருகின்றாரோ, அந்தக் குழுவினரே வென்றதாக அறிவிக்கப்படுவார்.


குறிப்பு:1 ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தலைவர் இருக்கிறார். அவரே அக்குழுவின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பாளி ஆகிறார்.


2 அங்கத்தினர்கள் எந்தப் பொருளைத் தேடி எடுத்தாலும், அதைத் தன் குழுத் தலைவரிடம் கொடுத்து, அவர்மூலம்தான், ஆட்டத்தை நடத்து பவர்களிடம் கொண்டு வந்து காட்டவேண்டும்.


3. மாதிரிப் பொருட்கள் குழுத் தலைவரிடம் இருப்பதால், அவற்றைப்போல்தான் கொண்டுவர வேண்டும். மாற்றிக் கொண்டுவந்தாலும், அல்லது ஏதாவது ஒன்றைக் குறைவாகக் கொண்டுவந் தாலும், அக்குழு முதலாவதாக வந்து நின்றாலும், அந்தக் குழு வெற்றி பெறும் வாய்ப்பையே இழந்து விடும்.