போதி மாதவன்/போதி மாதவன்

விக்கிமூலம் இலிருந்து

ஒன்பதாம் இயல்

போதி மாதவன்

‘போதி மேவினை! புன்மை அகற்றினை!
சோதி வானவர் தொழஎழுந் தருளினை!
ஆதி நாத,நின் அடியிணை பரவுதும்!’

–வீரசோழியம்

மெய்யறிவு மனிதனுக்கு எட்டும்படி மிக அருகிலேயே உள்ளது. ஆயினும் அதை அடைய எவ்வளவு துன்பப்பட வேண்டியிருக்கிறது! அவனாகப்படைத்துக் கொண்ட ‘தான்’ என்னும் அகங்காரம், பெரும் பூதமாக வளர்ந்து, அவனையே ஆட்கொண்டு விடுகின்றது. அதனால் ஆசைகள் அவனைப் பற்றிக்கொள்கின்றன.

இன்பம் வேண்டி அவன் துடிக்கிறான்; அதனால் துன்பமே விளைகின்றது. மரணம் அவனுடைய தனித் தன்மையை அழித்துவிடுகின்றது. ஆயினும் அவனுக்கு அமைதியில்லை. உயிர் வாழும் ஆசை அவனைவிட்டு அகலுவதில்லை. மீண்டும் தனித் தன்மை பெற்று, அவன் புதுப் பிறவிகளை மேற்கொள்கிறான்.

உலகில் பாவமும் துக்கமும் பரவி நிற்கின்றன. மக்கள் உண்மையைப் பார்க்கிலும் மயக்கமே மேல் என்று கருதி வழி தவறிச் செல்கின்றனர். பாவமே பார்வைக்கு இனியதாய்த் தெரிகின்றது. ஏதோ ‘செயல், செயல்’ என்று அவர்கள் கருமங்களைச் செய்துகொண்டேயிருக்கின்றனர். அவர்களுடைய செயல்களும், அவர்கள் அடையும் இன்பங்களும் நீர்க்குமிழிகளாகவே இருக்கின்றன. குமிழிகள் உடைந்தவுடன் அவற்றினுள்ளே எதுவும் இல்லை !

கௌதம முனி ஆறு ஆண்டுகள் அருந்தவம் செய்த பிறகும் அவர் கொண்ட குறிக்கோளை அடைய முடிய வில்லை. உடலை வருத்துதல் வீண் வேலை என்று அவர் பிறருக்கெல்லாம் போதனை செய்தும், கடைசியில், ‘அதையும் செய்து பார்ப்போம்’ என்று தாமே தமது திருமேனியை வதைத்துக் கொண்டார்!

அதன் முடிவில் ஒரு வேளை அவருக்கே சந்தேகம் எழுந்திருக்கும். கண் முன்பு கண்ட நாடு, சுற்றம் எல்லாம் துறந்து, சாட்டில் கிடந்து வாடியும் இலட்சியம் கைகூடவில்லை. அது எட்டாத தாரகையாய், மேலும் மேலும் உயரே தள்ளிப் போய்க் கொண்டேயிருந்தது. ஒருவேளை எரிநட்சத்திரத்தையே உண்மைத் தாரகையாக எண்ணினாரா? கானலை நீர் என்று கருதி, அதன் பின்னே அலைந்து கொண்டிருக்கிறாரா? அவர் யாத்திரை முடிவற்ற நீண்ட யாத்திரையாகவே இருந்தது! அவர் மனத்தில் தோன்றிய ஐயப்பாடுகளை யாரே அளவிட்டுரைக்க முடியும்? அதில் நடந்த போராட்டங்களை யாரே புனைந்துரைக்க முடியும்?

ஞான உதயம்

ஆனால் அவர் கலங்கவில்லை. அவர் சித்தம் தெளிவாகவே யிருந்தது. மன உறுதிதான் அவருடைய மாசற்ற நண்பனாக விளங்கியது. அரச மரத்தின் அடியில் அமரும் போதே அவர் உறுதியுடன் சபதம் செய்து கொண்டு விட்டார்: ‘எனது இலட்சியம் கைகூடும் வரை நான் பூமியில் இந்த இடத்தைவிட்டு எழப்போவதில்லை!’ அந்தச் சூளூரை கேட்டு வன விலங்குகளும் பறவைகளும் வாயடங்கி அயர்ந்து விட்டன. காற்றில் ஆடிய மரங்களும் அசைவற்று அமைதியாக நின்றன. வானத்திலே மட்டும் மகிழ்ச்சி ஒலிகள் எழுந்தன. மக்களுக்கு ஆசையூட்டி மயக்கும் சீல விரோதியாகிய மாரன் சாக்கிய முனிவரின் கொடிய உறுதியைக் கண்டு கலக்கமடைந்தான். அவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்றுவிட்டால், பின்னர் அவர் உபதேசம் கேட்டு மக்கள் அனைவரும் நன்னெறிகளில் நின்று விடுவர். அதனால் அவனுக்கு வேலையில்லாமற் போகும். ஆதலால் அவருடைய முயற்சியை ஆரம்பத்திலேயே தடுத்து விட வேண்டும் என்ற முடிவுடன் அவன் அரச மரத்தை அணுகி வந்தான்.

‘மரணத்தைக் கண்டு அஞ்சும் க்ஷத்திரிய வீர! எழு வாய், எழுவாய்! முக்தி வழியைக் கைவிட்டு எழுவாய்! எழுந்து, இவ்வுலகையும், இந்திரன் உலகையும் வெற்றி கொள்வாய்! ஆண்டியாக வாழ்தல், உன் உன்னத மரபுக்கே இழுக்காகும்; குல தர்மத்தைக் கடைப்பிடித்தலே உன் கடன்!’ என்று முழக்கிக் கொண்டு, அவன் முனிவர் முன்பு தோன்றினான்.

கௌதமர் நிலையில் மாற்றம் காணாமையால் அவன் கையிலிருந்த மலர் அம்பினைத் தொடுத்து அவர் மீது எய்தான். அவர் அசையவில்லை.

அதன் பின்னர் அவன் தன் படையினங்களை அவர் மீது ஏவினான். கரடிகள், திமிங்கிலங்கள், குதிரைகள், கழுதைகள், ஓட்டைகள், புலிகள், சிங்கங்கள், யானைகள், ஒற்றைக் கண்ணும் பல தலைகளுமுள்ள விலங்குகள், பல நிற அரக்கர்கள் முதலிய படையினங்கள் வனத்தில் வந்து சூழ்ந்து கொண்டு பயங்கரமாகக் கர்ஜனை செய்தன. வானம் இருண்டது. திசைகள் கறுத்தன. புயல் எழும்பிற்று. ஆனால் பாறைகளையும் மரங்களையும் பறித்தெடுத்த அரக்கர்கள் அவர்மீது அவைகளை வீசமுடியாமல் கைகள் முடங்கி நின்றனர். வானத்திலிருந்து அவர் மீது பொழியப்பட்ட அனற் கங்குகள் அரசமரத்தடியில் செந்தாமரை இதழ்களாகச் சிதறிக் கிடந்தன. போதி சத்துவர் அவைகளையெல்லாம் குழந்தைகளின் விளையாட்டாக எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார். காகங்களின் நடுவே கருடன் அமைதியோடு அமர்ந்திருந்தல் போல, அவர் விளங்கினார்.

மாரனுடைய குமாரர்களான கலக்கம், செருக்கு, கேளிக்கை ஆகிய மூவரும், அவனுடைய குமாரிகளான காமம், களிப்பு வேட்கை ஆகிய மூவரும் போதிசத்துவரை அசைக்க முடியவில்லை. கௌதமர் மாரனைப் பார்த்து, ‘மேரு மலையைக் காற்று அசைக்க முடிந்தாலும், நீ என்னை அசைக்க முடியாது! நெருப்பு குளிரலாம்; நீரின் நெகிழ்ச்சி குன்றலாம்; பூமியே உருகி ஓடலாம். ஆனால் பல்லாண்டுகளாகப் பல பிறவிகளிலேயே தேடிய தவ வலிமையுள்ள நான் என் தீர்மானத்தைக் கைவிடப் போவதில்லை! இரு கட்டைகளை வைத்துக் கடைந்து கொண்டேயிருப்பவன் நெருப்பைக் காண்பான். பூமியை அகழ்ந்து கொண்டே செல்பவன் கடைசியில் தண்ணீரைக் காண்பான். அதேபோல் விடாமுயற்சியுள்ளவன் வெற்றி கொண்டே தீருவான்!’ என்று கூறினார். முடிவில் மாரன் தோல்வியுற்று ஓட ஆரம்பித்தான்.

ஓடும்போது, ‘ஏழு வருடம் படிப்படியாக இவ் வண்ணலைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன் பேரறிவும், பெருவிழிப்புமுள்ள இவரை அண்டுவதற்கே வழி கிடைக்கவில்லை. கல்லைக் கண்டு மாமிசத்துண்டு என்று கருதி, “இந்த இறைச்சி இனிப்புள்ளதாக இருக்கும்!” என்று சொல்லும் காகத்தைப் போல் இருக்கிறது என் நிலைமை. அங்கே இனிப்புமில்லை, இறைச்சியுமில்லை என்று தெரிந்ததும், காகம் பறந்து செல்கிறது. இவ்வாறு பாறையைக் கொத்திப் பார்த்த காகம்போல், நானும் வெறுப்படைந்து கௌதமரை விட்டுச் செல்கிறேன்!’ என்று அவன் புலம்பினான்.[1]

வானத்திலேயிருந்து பூமழை பொழிந்தது. ‘அவர் உறுதியுள்ள முனிவர்! விரைவிலே சத்தியத்தைக் கண்டு, அதன் ஒளியால், கதிரவனைப் போல, உலகின் இருளைக் கடிவார்!’ என்று தேவர்கள் ஆர்த்தனர்.

மாரனுடைய போராட்டங்களெல்லாம் மனத்துள் நடக்கும் போராட்டங்களே. காமம், குரோதம் முதலிய தீய குணங்களோடு போராடி வெற்றி கொள்வதையே இவை உருவகப்படுத்திக் கூறுகின்றன.

கௌதமர் அமர்ந்திருந்த புனிதத் தலத்தை[2] நிலமகள் முகம் அல்லது திலகத்திற்கு ஒப்பிடலாம். அது உலகின் நடுநாயகமான க்ஷேத்திரம். அங்கே அரசமரத்தின் நிழலிலே அறிவு துளிர்த்து மரமாக வளர்ந்து கொண்டிருந்தது. அம்மரம், உறுதியாகிய பூமியில் வேரோடி பொறுமை என்னும் நீர் பெற்று, நினைவு, சிந்தனை யாகிய கிளைகள் பரப்பிக் கொண்டிருந்தது. அதிலே விரைவிலே தருமம் என்னும் கனி பழுக்கும் நேரம் வந்து விட்டது.

அன்று பூர்ணிமை,[3] புன்னகையுடன் விளங்கும் பூவையைப் போன்று, சந்திரன் வானத்திலிருந்து தண்ணொளி பரப்பிக் கொண்டிருந்தான். அகிலமெங்கும் அமைதி பரவியிருந்தது.

கௌதமர் ஆசைகளையும் பாசங்களையும் அறவே களைந்துவிட்டு, ஆழ்ந்த சிந்தனையும் ஆராய்ச்சியும் கூடிய மனத்துடன் முதலாவது தியானத்தில்[4] அமர்ந்திருந்தார். அப்போது ஏற்பட்ட ஆனந்த உணர்ச்சியால் அவர் மன நிலை மாறவில்லை.

பிறகு சிந்தனையும் ஆராய்ச்சியும் நிகழாமல் தடுத்து உள்ளத்தை ஒரு நிலைப்படுத்தி, ஆனந்த உணர்ச்சியோடு, இரண்டாவது தியானத்தில் அமர்ந்தார்.

பூரண, அமைதியுடன் விழிப்பு நிலையிலே இருந்து கொண்டு, மூன்றாவது தியானத்தில் அமர்ந்திருக்கையில், அவருக்குப் பேரானந்த உணர்ச்சி ஏற்பட்டது.

பழைமையை யெல்லாம் மறந்து, இன்ப துன்பங்களை யெல்லாம் விலக்கி, அமைதியோடும் விழிப்போடும் அவர் நான்காவது தியானத்தையும் அடைந்தார்.

அப்போது அவர் தமது முற்பிறப்புக்களைப் பற்றி அறிய முடிந்தது. ஒவ்வொரு பிறவியிலும் அவருக்கு ஏற்பட்ட அநுபவங்கள் எல்லாம் தெளிவாகத் தெரிந்தன. இரவின் முற்பகுதியிலேயே இவைகளை அவர் அறிந்து கொண்டார். அந்நிலையில் அஞ்ஞானம் தொலைந்து அறிவு துலங்கிற்று; இருள் மறைந்து ஒளி விளங்கலாயிற்று.

அதன் பிறகு உயிர்கள் தோன்றி மறைவதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டார். நல்வினை, தீவினை களுக்குத் தக்கபடி, உயிர்கள் பின்னால் நன்மையையும் தீமையையும் அடைவதை அவர் கண்டார். ஞான

திருஷ்டியால் அவருக்கு எல்லாம் விளக்கமாகத் தெரிந்தன. இவையெல்லாம் நள்ளிரவிலே ஏற்பட்ட அநுபவங்கள்.

நான்கு வாய்மைகள்

பின்னர் பிறவிக்குக் காரணமான குற்றங்களை நீக்கும் வழியைப் பற்றிச் சிந்தனை செய்தார். அப்போது பின் கண்ட நான்கு சிறந்த வாய்மைகளும் அவருக்குத் தெளிவாக விளங்கின: துக்கம், துக்க உற்பத்தி, துக்க நீக்கம், துக்க நீக்க வழி.

முதலாவது வாய்மை துக்கம் நிலைத்திருத்தல். பிறப்பு துக்கம், வளர்ச்சி துக்கம், பிணி துக்கம், மரண துக்கம். நாம் விரும்பாதவைகளோடு இணக்கம் ஏற்படுவது துக்கம். நாம் விரும்பியவற்றிலிருந்து விலக நேர்வது அதிகத் துக்கம். பெறமுடியாதவற்றில் ஏற்படும் ஆசை பெருந்துக்கம்.

இரண்டாவது வாய்மை துக்க உற்பத்தி, துக்கத்தின் காரணம் அவா. நம்மைச் சூழ்ந்துள்ள உலகம் புலன்களின் உணர்ச்சிகளைத் தாக்கி ஆசையாகிய வேட்கையை எழுப்புகின்றது. ஆசை உடனே நிறைவேற வேண்டும் என்ற ஆத்திரம் எழுகின்றது. ‘நான்’ என்ற உணர்வோடு இன்புற்று வாழ விருப்பம் ஏற்படுவதால், துக்க வலையில் வீழ நேருகின்றது. இன்பங்களே தூண்டில்கள்; முடிவு துன்பமே.

மூன்றாவது வாய்மை துக்க நீக்கம். ‘நான்’ என்ற அகங்காரத்தை வென்றவனுக்கு ஆசை அற்றுவிடும். எதிலும் அவா இல்லாமற் போகையில் ஆசைத் தீ பற்றிக் கொண்டு எரிவதற்கு ஒரு பொருளும் அகப்படாமற் போகிறது. இவ்வாறு ஆசை அவிந்துபோகும்.

அஷ்டாங்க மார்க்கம்

நான்காவது வாய்மை துக்க நீக்க வழி. இந்த வழி: எட்டுப் பிரிவுகளையுடைய அஷ்டாங்க மார்க்கம். சத்தியத்தின் முன்பு அகங்காரம் ஒழிந்து, செய்ய வேண்டியதை அறிந்து நிறைவேற்றுவதற்குச் சித்த 1 உறுதி கொண்டு தன் கடமையைச் செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இருப்பவன் விடுதலை அடைவான். அறிவுள்ளவன் இந்த வழியைப் பின்பற்றி, தானமும் சீலமும் மேற்கொண்டு, துக்கத்தை ஒழித்து விடுவான்.

அஷ்டாங்க மார்க்கத்தின் பிரிவுகள் இவை:

நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்லூக்கம், நற்கடைப்பிடி, நல்லமைதி.

பன்னிரண்டு நிதானங்கள்

இறப்பு பிறப்புக்களின் ஆரம்பத்தைப் பற்றிச் சிந்திக்கையில் கௌதமர் சகல தீமைகளுக்கும் பேதமையே அடிப்படையாக இருப்பதை அறிந்து கொண்டார். பிறப்பு ஏற்படுவதற்குக் காரணமான பேதமை முதலிய பன்னிரண்டு சார்புகள் (நிதானங்கள்) இவை:

பேதமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பவம், தோற்றம், வினைப் பயன். இவை, சங்கிலிக்கோவை போல், ஒன்றோடொன்று தொடர்புடையவை.

வாழ்க்கை ஏற்படு முன்பு ஜீவன்களின் ஆரம்பத்தில் (அறிவின்மையாகிய) பேதைமையே நிறைந்துள்ளது. அந்தப் பேதைமை வெள்ளத்தில், பின்னால் நாமமும் உருவும் கொள்ளத்தக்க நுண்மையான தேட்டங்களின் கருக்கள் அல்லது விதைகள் அடங்கிக்கிடக்கின்றன. அவைகள் பக்குவமடைந்து பரிணமிக்கும்போது (ஸம்ஸ்காரங்களாகிய) செய்கைகள் எழுகின்றன. இச்செய்கை களின் தொழிலால் ஆரம்ப நிலைவிலுள்ள உணவு செயற்பட ஆரம்பிக்கின்றது. உணர்வைத் துணைக் கொண்டு உருவமும் குணமும் (தனி ஜீவன்கள்–நாம ரூபங்களாகிய அருவுருக்கள்) அமைகின்றன. அருவுருக்களிலிருந்து ஆறு களன்களாக விளங்கும் மனமும் ஐம்பொறிகளும் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. இந்த ஆறு வாயில்களும் (ஞானேந்திரியங்களும்) வெளிப் பொருள்களோடு தொடர்பு கொள்ளும்போது ஸ்பரிசம் அல்லது ஊறு ஏற்படுகின்றது. ஊறு காரணமாக, எல்லா நுகர்வுகளும் உண்டாகின்றன. காய்ந்த புல்லில் கனல் பற்றுவதுபோல், நுகர்வு தனிவாழ்வில் ஆசை கொள்ளும்படி வேட்கையை எழுப்புகின்றது. வேட்கையிலிருந்து, பொருள்களையும் வாழ்வையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற பற்று உண்டாகின்றது. இது சிறு நெருப்புப் பொறி காட்டையே பற்றிக் கொள்வது போன்றது. இந்தப் பற்றினால் ‘நான்’ என்னும் தனி உணர்ச்சி–அகங்காரம்–தோன்றி வளர்ந்து, பிறப்புக்கு மூலமாயுள்ள பவம் என்னும் கருமக் கூட்டம் விளைகின்றது. பவத்திலிருந்து பிறப்பு (திரும்பத் திரும்ப எடுக்கும் பிறவி) உண்டாகின்றது. பிறவி தோறும் ‘நான்’ என்ற அகங்காரமும் தொடர்ந்து நிலைக்கின்றது. பிறப்பினால் மீண்டும் (மீண்டும் பிறவி யெடுப்பதால்) துக்கம், முதுமை, பிணி, மரணம் ஆகிய வினைப்பயன்கள் விளைகின்றன. துக்கத்தின் பரம்பரை இதுவேயாகும்.

துக்கத்திற்கெல்லாம் மூல காரணம் முதலிலேயே அமைந்துள்ளது. ஜீவனின் தோற்றத்திற்குக் காரணமான பேதைமையிலேயே துக்க காரணம் மறைந்திருக்கினறது. அப்பேதைமையை நீக்குவது எங்ஙனம்?

முதுமை, பிணிகளை நீக்கினால், மரணம் நீங்கும்; பிறப்பை (தோற்றத்தை) நிறுத்தினால் முதுமை, பிணிகள் நீங்கும், ‘நான்’ என்னும் தனித் தன்மையின் சுயநல மாகிய பவத்தைப் போக்கினால், பிறப்பு நீங்கும். பற்று நீங்கினால் தான் பவம் ஒழியும். பற்றுக்குக் காரணமான வேட்கை அழிந்தால், பற்றும் ஒழிந்து விடும். தவறான நுகர்வினாலேயே வேட்கை உண்டாவதால், நுகர்வை ஒழிக்கவேண்டும். அதனால் வேட்கை ஒழியும். உலகப் பொருள்களோடு ஏற்படும் தொடர்பால் தோன்றும் நுகர்வு ஒழியவேண்டுமானால், ஆறுவாயில்களாகிய பொறிகளின் மூலம் ஏற்படும் மயக்கங்கள் நீங்கவேண்டும். அருவுரு ஆகிய நாம ரூபங்கள் ஒழிந்தால் தான் ஆறு பொறிகளும் வெளிப் பொருள்களோடு கொள்ளும் தொடர்பு (ஊறு) அற்றுப் போய் அடங்கிவிடும். அருவுரு ஒழிய உணர்வு நீங்க வேண்டும். செய்கைகளாகிய ஸம்ஸ்காரங்கள் நீங்கினால் தான் உணர்வு நீங்கும். ஆகவே செய்கைகள் நீங்க முதற்கண் பேதமையை ஒழிக்க வேண்டும். பேதமை ஒழியும் போது அதனுள் அடங்கிக்கிடந்த நுண்மையான தேட்டக் கருக்கள்–அவாவின் ரேகைகள்–சக்தியின்றிப் போகின்றன.

ஆதலால் ஆசையை அடியுடன் துறக்கவேண்டும். ஆசை அகன்றால், அறியாமை அகலும். அதனால் செய்கைகள் ஒழியும். செய்கைகள் ஒழியவே, உணர்வு நீங்கும். உணர்வு நீங்கினால், அருவுரு நீங்கும். அருவுரு நீங்கினால், ஆறு வாயில்களும் நீங்கும். வாயில்கள் ‘செயற்படாத போது, ஊறு ஒழியும். ஊறு ஒழிந்தால், நுகர்வு இல்லாமற் போகும். நுகற்வு நின்றுபோன இடத்தில் வேட்கையில்லை வேட்கை நீங்கவே பற்றும் ஒழிகின்றது. பற்றற்ற இடத்தில் கருமங்ககளின் தொகுதி யாகிய பவம் தோன்ற முடியாது. பவம் இல்லாது ஒழியும்போது, தோற்றமாகிய பிறப்பில்லை, வினைப் பயன்களாக மூப்பு, பிணி, மரணங்களும் இல்லை. துக்கத்தை அடியோடு நீக்க இதுவே வழி.

புத்தர்

இவ்வாறு அறிய வேண்டிய விஷயங்கள் அனைத்தும் கௌதமருக்குப் புலனாகிக் கொண்டிருந்தன. திரைமேல் திரையாக அறியாமைத் திரைகள் அற்றொழிந்தன. அவித்தையின் தோடு உடைந்து சிதறி, கோடிக் கிரகணங்களுடன் பொன் மயமான மெய்யறிவுச் சூரியன் அவர் அகத்திலே உதயமாகி விட்டான். அவர் இனி அறியவேண்டியது எதுவுமில்லை. அன்றிரவு பொழுது விடியுமுன்னே, கௌதமபிக்கு போதியடைந்து. புத்தராகி விட்டார்! அவர் திருமுகத்தில் பூரண ஞானம் பொலிந்து விளங்கிற்று. அவர் பவம் ஒழிந்த பகவராகி விட்டார்! அகங்காரமற்ற தவ ராஜராகி விட்டார்! அறமுணர்ந்த தருமராஜராகி விட்டார்! அவரே ததாகதர்!

தேவர்கள் மலர் மழை பொழிந்தனர். தென்றல் இனிமையாக வீசிற்று. மண்ணகமெல்லாம் மகிழ்ச்சி வடைந்தது தேவர்கள், நாகர்கள் அனைவரும் தத்தம் உலகிலிருந்து போதி மரத்தடியில் வந்து சினேந்திரரை வணங்கிச் சென்றனர். மாரன் ஒருவனே மனத்துயர் கொண்டான்.

புத்தர் கூறினார்.

‘ஆசைத் தளையால் கட்டுண்டு நெடுங்காலம் அலைந்து திரிந்து, இதுவரை எத்தனையோ பிறவிகளெடுத்துக் களைத்து விட்டேன்!

‘பலவிதமான பிறவிகளை நான் எடுத்தாயிற்று–இந்த (உடலாகிய) குடிலைக் கட்டியவனை நான் இரவும் பகலும் தேடியும் காணவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பது துக்கமாயுள்ளது.[5]

‘குடிலைக் கட்டிய கொற்றனே![6] இப்போது உன்னைக் கண்டு கொண்டேன்! குடிலை மறுபடி நீ கட்ட முடியாது. உன்னுடைய உத்திரங்கள் எல்லாம் உடைந்துவிட்டன; குடிலின் முகடும் குலைந்துவிட்டது. என் சித்தம் நிருவாணப் பேற்றில் இலயித்துவிட்டது; (அதனால்) ஆசைகள் அவிந்தொழிந்துவிட்டன.[7]

போதியடைந்த புத்தர் பெருமான் ஏழு வாரங்கள் போதி மரத்தின் அடியிலும், அதன் பக்கங்களிலுமாகக் கழித்தார். அங்கயற் கண்ணி சுஜாதை அளித்த இன்னமுதுக்குப் பின்னால் அத்தனை வாரங்களிலும் அவர் உணவு கொள்ள வில்லை. நாள்தோறும் நெடுநேரம் அவர் சமாதியில் அமர்ந்திருந்து, உலக நிகழ்ச்சிகளையும், ஜீவன்கள் படும் அவதிகளையும் அறிவுக் கண்ணால் பார்வையிட்டு வந்தார். அவர் உள்ளத்திலே இன்பம் தேங்கி நின்று திளைத்துக் கொண்டிருந்தது. போக்குவரவற்ற பூரண நிலையை அவர் பெற்றிருந்தார். அவருடைய பனிமதி முகத்திலே புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.

முதற் சீடர்கள்

அந்த நிலையில் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த செல்வம் மிகுந்த திரிபுஷன், பல்லிகன் என்ற இருவர்த் தகரும் போதியடியில் ஒளி மயமாக விளங்கிக்கொண்டிருந்த சுகதரைக்[8] கண்டனர். அவர்கள் வடக்கு உத்கல[9] நாட்டினர். ஐந்நூறு வண்டிகளில் சரக்குக்கள் ஏற்றிக் கொண்டு சென்ற பாதையில், அவர்கள் ததாகதரைத் தரிசித்து, தேனும், சக்கரையும், நெய்யும் அளித்து வணங்கினர். அவரும் அவைகளை அன்போடு பெற்றுக் கொண்டு உண்டார். போதியடைந்த பின்பு அவர் உட்கொண்ட முதல் உணவுகள் அவையே.

புத்தர் அவர்களுக்கு நிருவாண முக்தியை அடையும் மார்க்கத்தை உபதேசித்தார். அவர்களும் அவரிடம் முழு நம்பிக்கைகொண்டு, அவரையும் தருமத்தையும் சரணாலயமாக ஏற்றுக்கொண்டனர். இல்லறத்தில் இருந்து கொண்டு புத்தருக்கு முதன் முதல் சீடர்களாகச் சேர்ந்தவர்கள் அந்த இருவர்களே.

பிரும்மாவின் வேண்டுகோள்

உலகில் மக்கள் அடையும் துக்கங்களைக் கண்டு புத்தரின் மனம் உருகிக்கொண்டிருந்தது. தாம் பெற்ற இன்பத்தை அவர்களும் பெறவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காகவே அவர் ஆதியில் சபதம் செய்துகொண்டு நாடு விட்டுக் காடு அடைந்ததை எண்ணினார். ஆனால் ஜனங்கள் அவருடைய அமுத மொழிகளைக் கேட்பார்களா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது.[10]

‘மகா உன்னதமான உண்மையை நான் உணர்ந்திருக்கிறேன். அது உள்ளத்தை உருக்குவதாயும் சாந்தியளிப்பதாயும் உள்ளது. ஆனால் தெரிந்து கொள்ளக் கடினமானது. ஏனெனில் பெரும்பாலான மக்கள் உலகியல் விஷயங்களிலேயே ஈடுபட்டு அவைகளிலேயே இன்பம் காண்கின்றனர்.

‘உலகப் பற்றுள்ளவன் எனது தருமத்தை உணர்ந்து கொள்ளமாட்டான். ஏனெனில் “நான்” என்னும் அகங்காரத்திலேயே அவனுக்கு இன்பம் இருக்கிறது. சத்தியத்தோடு முற்றிலும் அடிபணிந்து சரணடைவதிலுள்ள இன்பத்தை அவன் உணர முடியாது.

‘போதி பெற்றவர் பேரின்பம் என்று கூறுவதை, அவன் துறவு என்பான். நிறைவு பெற்ற பெரியோர் நித்திய வாழ்வு என்று கண்டதை, அவன் அழிவு என்பான்; தம்மையே வென்று கொண்டு அகங்காரத்தை அகற்றிய வெற்றியாளர் அழியாவாழ்வு என்று அறிந்ததை, அவன் மரணம் என்று கருதுவான்.

வெறுப்புக்கும் விருப்புக்கும் அடிமைப்பட்டுள்ளவனுக்கு உண்மை மறைந்தே நிற்கும். மேகங்கள் சூழ்ந்தது போல், உலக ஆசைகள் அடர்ந்துள்ள, பேதைமையுள்ள மனத்திற்கு நிருவாண முக்தி உணர்ந்து கொள்ள முடியாத மர்மமாகவேயிருக்கும்.

‘நான் தரும உபதேசம் செய்து, மனிதகுலம் அதைப் புரிந்து கொள்ளாவிடில், எனக்குக் களைப்பும் சிரமமுமே மிச்சமாகும்.[11]

அந்த நிலையில் மகா பிரும்மா தேவருலகிலிருந்து இறங்கி வந்து, மனித குலத்திற்காக மனம் இரங்கித் தமது தருமத்தை உபதேசிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மக்கள் வீணாக அழிந்துவிடுவர் என்றும் புத்தர் பிரானை வேண்டிக் கொண்டார்.

‘உலகில் சிலர் இருக்கின்றனர். அவர்கள் உலக பாசங்களைக் கடந்தவர்கள். அவர்களுக்குத் தரும உபதேசம் செய்யாவிடில், அவர்களை நாம் இழக்க நேரும். அவர்கள் அறிவுரையைக் கேட்டால், அதை நம்பி உய்ந்து கொள்வார்கள்!’ என்று அவர் கூறினார்.

பகவரும் அங்கிருந்தபடியே உலகை மக்களை அறிவுக் கண்ணால் நோக்கிக் கவனித்தார். சிலருடைய உள்ளங்களை உலகப் பற்றுக்கள் கவராமல் இருந்ததைக் கண்டார். காமம், பாவம் முதலியவற்றின் துயரங்களை அறிந்த சிலர் இருந்தனர்.

அப்போது அவர், ‘கேள்விக்கு ஏற்ற செவிகளையுடை யவர்களுக்கு நித்திய வாழ்வின் கதவை விசாலமாகத் திறந்து வைக்கிறேன். தருமத்தை அவர்கள் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளட்டும்!’ என்று கூறினார்.

அதைக் கேட்டுப் பிரும்மா தம் கருத்து நிறைவேறி விட்டது என்று மகிழ்ச்சியடைந்தார்.

‘தருமத்தை நான் முதலில் யாருக்குப் பிரசாரம் செய்யலாம்?’ என்று புத்தர் பிரான் எண்ணும்போது, ஆலாரகாலாமர், உருத்திரகர் இருவரைப் பற்றியும் கருதினார். இவ்விருவரும் ஆனந்தத்தோடு தமது தருமத்தை ஏற்றுக் கொள்வர் என்று அவர் எண்ணினார். ஆலார காலாமர் ஏழு நாட்களுக்கு முன்பு இறந்து போன தாயும், உருத்திரகர் முந்திய நாள் மாலையில் மரித்து விட்டதாயும் பிரும்மா கூறினார்.

அடுத்தாற்போல் பகவர் உருவேலா வனத்தில் தம்மோடு இருந்த ஐந்து தாபதர்களைப் பற்றி எண்ணமிட்டார். அவர்களைத் தேடிச்சென்று, என் விடுதலை மார்க்கத்தை முதன்முறையாக அவர்களுக்கே உபதேசம் செய்கிறேன்!’ என்று அவர் கூறிக்கொண்டார்.

காசி யாத்திரை

அக்காலத்தில் அந்த ஐந்து சீடர்களும் கங்கை நதிக் கரைகளிலிருந்த காசிமாநகரில், சாரநாத்[12] என்னுமிடத்தில் ‘மிருகதாவனம்’ என்ற மான் தோட்டத்தில் தங்கியிருந்தனர். புத்தர் தாம் ஜீவ-மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் தம்மைக் கைவிட்டுச் சென்றதை எண்ணாமல், அவர்கள் முன்னால் செய்த உதவிகளையும், அவர்கள் நோற்ற கடுமையான நோன்புகள் பயனற்றுப் போவதையும் எண்ணினார். அவர் உள்ளத்தில் அவர்கள் மீது கருணையே நிறைந்திருந்தது. எனவே அவர் காசியை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

போதிமரத்திலிருந்து கயை நகருக்குச் செல்லும் பாதையில் உபாகர் என்ற ஆஜீவக சமயத் துறவி[13] அவரைச் சந்தித்தார். உபாகர் வாலிபர்; வேதியர்; புத்தருக்கு அவர் முன்பு தெரிந்தவர். அவர் புத்தரின் முகத்தில் பொலிந்த தேசையும்[14] அமைதியையும் கண்டு, ‘நண்பரே, உமது தோற்றம் சாந்தி நிறைந்திருக்கின்றது. பரிசுத்தமும் பேரின்பமும் பெற்ற மகா புருடர்களின் கண்களைப் போல, உமது கண்கள் சுடர் விடுகின்றனவே!’ என்று கூறினார்.

புத்த பகவர், ‘நான் அகங்காரத்தை அழித்து விடுதலை அடைந்துள்ளேன். எனது உடல் புனிதமாகி யுள்ளது. எனது உள்ளம் ஆசையற்றுள்ளது. எனது இதயத்தில் உண்மை உறைந்துள்ளது. நான் நிருவாண முக்தியைப் பெற்றுள்ளேன். அதனால் தான் என் தோற்றம். சாந்தி நிறைந்திருக்கின்றது; என் கண்கள் பிரகாசிக்கின்றன. இப்போது பூமியிலே எனது சத்திய இராஜ்யத்தை அமைக்க விரும்புகிறேன். இருளால் சூழப்பட்டவர்களுக்கு ஒளியளித்து, மக்களுக்கு நித்திய வாழ்வின் வாயிலைத் திறந்து வைக்க விரும்புகிறேன்! என்று பதிலுரைத்தார்.

‘அப்படியானானால் நீர் - உலகத்தை வென்ற சினேந்திரர் என்றே உம்மைக் கருதுகிறீரா!’ என்று கேட்டார் உபாகர்.

‘தங்களைத் தாங்களே வெற்றி கொண்டு, அகங்காரத்தால் வரும் உணர்ச்சிகளை அடக்குவோர் அனைவரும் சினேந்திரர்களே. மனத்தை அடக்கிப் பாவத்திலிருந்து விலகியவர்களே வெற்றியாளர்கள். ஆதலால் உபாக, நான் ஒரு சினேந்திரனே!’ என்றார் வள்ளலும்.

‘தங்களுடைய குரு யாரோ?’

‘நான் யாவற்றையும் வென்றவன்; நான் யாவற்றையும் அறிந்தவன்; வாழ்வின் நிலைகள் யாவற்றிலும் நான் ஒட்டுப் பற்றில்லாதவன். எல்லாவற்றையும் நான் துறந்தாயிற்று; அவாவை அழித்ததால் நான் முக்தியடைந்தவன். எல்லாவற்றையும் நானே கற்றுக் கொண்டபின், எவரை என் குரு என்று காட்டுவேன்?’[15]

உபாகர் தலையை அசைத்துக் கொண்டு, ‘புனித கௌதமரே! நீர் செல்ல வேண்டிய வழி அதோ இருக்கிறது!’ என்று புனித மூர்த்திக்கு, வழி காட்டி விட்டுத் தாம் தம் வழியே சென்றார். போகும் வழியிலே சாலையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அவர் சற்று நின்று ததாகதரின் புதிய தருமத்தைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டே சென்றார்.

ததாகதரும், மெல்ல மெல்ல நடந்து, கங்கையைக் கடந்து, காசிமா நகரை அடைந்தார்.

  1. ‘லலிதவிஸ்தரம்’
  2. இந்தத் தலம் பின்னால், புத்தகயை என்று பெயர் பெற்றது போதி மரத்தின் அருகே கிழக்குப் பக்கத்தில் பிற்காலத்தில் அசோக சக்கிரவர்த்தி ஓர் ஆலயம் அமைத்தார். இப்போது அங்குள்ள ஆலயம் 160 அடி உயரம் உள்ளது. ஆலயத்தில் போதியடைந்த புத்தருடைய சிலை வைக்கப் பெற்றிருக்கிறது. இந்தத் தலத்திற்கு நம் நாட்டிலிருந்தும், இலங்கை, பர்மா, சீனா, சயாம், ஜப்பான் முதலிய நாடுகளிலிருந்தும் தினந்தோறும் யாத்திரிகர்கள் வணக்கத்திற்காகச் சென்று வருகின்றனர். பௌத்தர்கள் இதைப் பௌத்த தருமம் வளர்ந்த தொட்டில் என்று கருதி முதன்மையாகப் போற்றி வருகின்றனர்.
  3. கி.மு. 538, வைகாசி மாதம். 6-ஆம் தேதி, புதன் கிழமை.
    ‘மதிநாண் முற்றிய மங்கலத் திருநாள்’
  4. பௌத்த தரும முறைப்படி தியானம் என்பது சாந்தமான இடத்தில் சமாதியில் அமர்ந்து உள்ளறிவும் உண்மை ஆனந்தமும் பெறும் நிலை. தியானத்தில் மன உணர்வை இழந்து இன்பத்தில் இலயித்து விடுவதைப் புத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய திட்டப்படி, நான்கு வாய்மைகளையும் ஒப்புக்கொண்டு, அஷ்டாங்க மார்க்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள எட்டு வழிகளிலும் முறை தவறாமல் வாழ்ந்து வந்தாலே நிர்வாண முக்தி கிடைக்கும். ஆயினும் அத்தகைய வாழ்க்கைக்குத் தியானம் உதவியாயிருப்பதால், அதை அவர் மறுத்துத் தள்ளவில்லை. தியானங்கள் நான்கு வகை: ஏகாந்தமாக இருந்து, ஆராய்ச்சி செய்து, சிந்தித்து இன்ப நிலையில் இருத்தல் முதலாவது தியானம். ஆராய்ச்சியோ, சிந்தனையோயின்றி, ஆழ்ந்த அமைதி பெற்றிருத்தல் இரண்டாவது தியானம். மன விகாரங்களை யெல்லாம் அடக்கியிருத்தல் மூன்றாவது தியானம். துக்கத்தை அறவே ஒழித்து, சமநிலையான மனத்துடன் இன்ப நிலை. பெறுதல் நான்காவது தியானம். தியானங்களில் ஏற்படும் ஆனந்தத்தால் மன நிலை மாறாமல் இருக்கவேண்டும்.
  5. தம்மபதம். 153.ஆவது சூத்திரம்.
  6. ஆசையே உடலாகிய குடிலைக்கட்டிய கொற்றனாக உருவகப்படுத்திக் கூறப்படுகின்றது.
  7. தம்மபதம், 154-ஆவது சூத்திரம்.
  8. சுகதர்- நல்ல ஞானம் பெற்றவர்.
  9. வடக்கு உத்கலம்–வடக்கு ஒரிஸா.
  10. பிற்காலத்துச் சீன அறிஞர் 'சுவாங்த்ஸு' என்பவர் பொது மக்கள் சம்பந்தமாக இதுபோன்ற கருத்தைக் கூறியுள்ளார்: ‘பேருண்மைகள் பொதுமக்களின் மனத்தைக் கவர்வதில்லை. இப்போது உலகம் முழுவதும் தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு உண்மையான பாதை தெரிந்திருந்தும், நான் எப்படி வழி காட்ட முடியும்? நான் வெற்றியடைய முடியாது என்று தெரிந்திருந்தும், வெற்றியடையப் பிடிவாதம் செய்தால் அதுவும் தவறாகும். ஆதலால் நான் தலையிடாமல் பேசாதிருத்தலே சரி. ஆனால் நான் முயற்சி செய்யவில்லையானால், வேறு யார் முயற்சி செய்யப் போகின்றனர்?’
  11. ‘மகாவக்கம்’
  12. இதற்கு இஸிபதனம் என்றும் பெயருண்டு.
  13. உபாகர் ஜைனர் என்றும் கூறுவர்.
  14. தேசு - ஒளி
  15. தம்மபதம், 353-வது சூத்திரம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=போதி_மாதவன்/போதி_மாதவன்&oldid=1283887" இலிருந்து மீள்விக்கப்பட்டது