உள்ளடக்கத்துக்குச் செல்

மகாத்மா காந்தி/மகாத்மா காந்தி

விக்கிமூலம் இலிருந்து

மகாத்மா காந்தி

உலக உத்தமர் மறைந்ததால், உள்ளம் நொந்துகிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகிவிட்டது; இழி குணத்தான் மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கொலைசெய்து, உலகம் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை. எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் — ஏக்கம் — எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப் பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு பேச்சும், மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டு வரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை; துக்கம் தரும் நிலை அது. ஆனால், அவர் புகழ் ஒளி பரவுகிறது. அதை எண்ணுவோம். ஆறுதல் பெற முயற்சிப்போம்.

நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார். அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ்கிறோம். அவர் பிறந்தபோது நமது நாடு உலகிலே இழிவும் பழியும் தாங்கிய நாடாக இருந்தது. அவர் மறைந்திடுவதற்கு முன்னம், மாஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையிலே உள்ள சகல நாடுகளிலும், நமது விடுதலையை விளக்கும் விருதுபெற்று, தூதுவர்களும், வீற்றிருக்கும் நிலை உண்டாகிவிட்டது.

அவர் பிறந்தபோது உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று நாம் இருந்தால், உலக மன்றத்திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அவர் பிறந்தபோது, இங்குத் தேவைப்படும் எந்தச் சாமானுக்கும், வெளிநாட்டின் தயவை நாடி, ஏங்கிக் கிடந்தோம். இன்று வெளிநாடுகள், நமது சரக்குகளைப் பெற நம்முடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்குத் தமது ராஜ தந்திரத்தை உபயோகிக்கும் அளவு மாறுதலைக் காண்கிறோம்.

அவர் பிறந்தபோது, கோயில்கள் மூடிக்கிடந்தன. தீண்டாதார் என்று தீயோரால் அழைக்கப்பட்டு வந்த தியாகப் பரம்பரையினருக்கு அவர் கண் மூடுமுன், மூடிக் கிடந்த கோயில்கள் எல்லாம் திறந்துவிட்டன.

குடித்துக்கிடப்பது மிகச் சாதாரணம். சகஜம் என்று யாரும் எண்ணிக்கொண்டிருந்த நாட்கள் அவர் பிறந்த காலம். மதுவிலக்குச் சட்டம் அமுல் நடத்தப்படுவதைக் கண்டான பிறகே அவர் மறைந்தார்.

அவர் பிறந்த காலத்திலே, சூரியனே அஸ்தமிக்க அஞ்சும்படியான அளவுள்ளதாக இருந்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம். அந்தச் சாம்ராஜ்யத்தின் ஆதிக்கப்போக்கு அழிந்ததைக் கண்டான பிறகே அவர் கண்களை மூடினார்.

அவர் பிறந்த நாட்களிலே, பிரிட்டனிலிருந்து, கவர்னர்களும், மற்ற அதிகாரிகளும் இங்கு வந்த வண்ணம் இருந்தனர் ஆள்வதற்கு அடிமை இந்தியாவை வெளியே அவர்கள் போகும் காட்சியைப் பார்த்துவிட்ட பிறகே, உத்தமர் உயிர் நீத்தார்.

இவ்வளவையும், அவர் மந்திரக் கோல் கொண்டோ, யாக குண்டத்தருகே நின்றோ சாதிக்கவில்லை — மக்களிடையே வாழ்ந்து, மக்களின் மகத்தான சக்தியைத்திரட்டிக் காட்டிச் சாதித்தார். புதிய வாழ்வு தந்தார். புதிய அந்தஸ்து தந்தார்.

இவ்வளவு தந்தவருக்கு, அந்தத் துரோகி தந்தது மூன்று குண்டுகள். சாக்ரடீசுக்கு விஷம் தந்ததுபோல.

அவர் சாதித்தவைகள் மகத்தானவை. ஆனால் அவர் சாதிக்க எண்ணியிருந்தவை வேறு பல. அவை மேலும் மகத்தானவை.

நாட்டிலே உள்ள மற்றக் கொடுமைகள்; ஜாதிச்சனியன், வறுமை, அறியாமை, ஆகியவற்றை அடியோடு களைந்தெறிந்துவிட்டு, உலகினர் கண்டு பின்பற்றத்தக்க முறையிலே, உன்னதமான இலட்சியங்களைக் கொண்ட ஓரு சமுதாயத்தைக் காண விரும்பினார். அதற்காக அரும்பாடுபட்டு வந்தார். அந்த நேரத்தில், ஆத்திரத்தால் அறிவை இழந்தவனால் அவர் கொலை செய்யப்பட்டார்.

அவர் கண்ட, அந்த நாள் இந்தியா, வீரர்களைக் கோழையாக்கிவிடக் கூடியது. விவேகிகளை விசாரத்தி வாழ்த்தக் கூடியது. முப்பது கோடிக்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் முதுகெலும்பு முறிந்தது போலிருந்து அடிமைச் சுமையினால் நம்பிக்கை தகர்ந்து போயிருந்த நேரம்.

முடிதரித்த மன்னர்களெல்லாரும் ஆங்கில ஆட்சியின் பிடியிலே, கோட்டை கொத்தளம் கட்டிக் காத்தவர்களெல்லாரும் நாட்டை இனி மீட்டிட முடியாது, என்றெண்ணி வாட்டமுற்றுக் கிடந்தனர். எப்படியோ ஆட்சி நடக்கட்டும்; இதை எதிர்ப்பதோ முடியாத காரியம். எனவே, இதற்குப் பயபக்தி விசுவாசம் காட்டி, ஏதேனும் பலன் பெற்றுக் காலந்தள்ளுவோம் என்று பலர் எண்ணி விட்டனர்.

அவர்களிடம் ஆயுதம் இல்லை — ஆட்சியாளர்களோ, ஆயுத பலமுள்ளவர்கள்.

அவர்களிடம் நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களிடமோ, நம்பிக்கை, ஆணவமாகிவிட்ட நிலை.

இந்த நிலையிலே தோன்றினார் விடுதலைப் போர் தொடுக்க. யார் அந்தச் சமயத்திலே நாட்டை நோக்கினாலும், நம்பிக்கை துளியும் பிறக்காது. இவர் நம்பிக்கையுடன் பணியாற்றலானார். நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார். அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். நானிலத்தின் நன் மதிப்பைப் பரிசாகப் பெற்றார்

முடியுமா? என்ற சந்தேகத்தை அவர் விரட்டினார். நாடு விடுதலைபெறவேண்டுமா, அல்லவா? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். ஆம்! என்றது அவருடைய தூய்மையான உள்ளம் - உள்ளம் உரைத்ததை ஊராருக்கு அறிவித்தார். ஊரார் சந்தேகமும் பயமும் கொண்டனர். "விடுதலை வேண்டும். நாடு மீளவும், கேடு தீரவும், நாம் இனி மனிதராய் வாழவும், கட்டாயமாக விடுதலை வேண்டும். ஆனால் நம்மால் முடியுமா?" என்று கேட்டனர்.

"விடுதலை வேண்டும் என்று மனம் கட்டளையிட்டு விட்ட பிறகு, மறு கேள்வி ஏது?" அவர் கேட்டார்.

"அவர்கள் பலசாலிகள் " மக்கள் கூறினர்.

"நாம் பலம் பெற வேண்டும். பெறுவோம்" அவர் உரைத்தார், உறுதியுடன்.

"சிறையிலே தள்ளுவார்களே" -பயத்துடன் கூறினர் மக்கள்.

"தள்ளுவர் - ஆனால் இப்போது உள்ள இடமும் சிறைதான், இது பெரிய சிறை" -அவர் பதில் சொன்னார் நகைச்சுவையுடன்.

தடியடி, துப்பாக்கி, தூக்குமேடை, அந்தமான் தீவு என்பன போன்ற எத்தனையோ ஆபத்துக்கள் அடுத்தடுத்து வரும் — உரிமைப் போரிலே உள்ள ஆபத்துக்களை அவர் ஒளிக்காமல் குறைக்காமல் கூறினார்.

"இவ்வளவையும் நான் பொருட்படுத்தப் போவதில்லை—மரண பயமின்றி இக்காரியத்திலே ஈடுபடத் தீர்மானித்து விட்டேன்—ஆயுத பலத்தை நம்பி அல்ல ; மன உறுதியை நம்பி—நாம் நமது பிறப்புரிமைக்காகக் போராடுகிறோம். இது தர்மம் என்ற பலத்தை நம்பிப் போரைத் தொடுக்கிறேன்" என்றார்; தொடுத்தார். வயலோரத்திலிருந்து வாட்டமுற்ற உழவன் முதற்கொண்டு, வசீகர வாழ்விலே இருந்துவந்த சீமான் வீட்டுச் செல்லப் பிள்ளை வரையிலே, அவர் முகாமில் வந்து குமிந்தனர்.

வேறு நாடுகளிலே விடுதலைப் போர் தொடுத்தவர்கள் இரகசியமாகவோ, பகிரங்கமாகவே, சொந்தத்திலேயோ, வேறு நாட்டின் துணைகொண்டோ, இராணுவத்தைத் திரட்டுவது; போர்ப் பொருளைக் குவிப்பது; மறைந்திருந்து தாக்குவது; சதிசெய்வது என்ற பல முறைகளைக் கையாண்டனர். தாய் நாட்டின் விடுதலைக்காக இவையாவும். எனவே, சரியா? தவறா? என்ற கேள்விக்கும் இடம் இல்லை என்றனர்.

உவக வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தத் திட்டம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுப் புதியதோர் தத்துவத்தைக் கொண்ட திட்டத்தை, ஆயுதமின்றி,

இரகசியமின்றி, வெளிப்படையாகத் தூய்மையுடன் விடுதலைப்போர் நடத்தலானார்; அதிலே வெற்றி கண்டார்.

அந்த வெற்றி வீரனுக்கு - வெறியன் தந்த பரிசு மூன்று குண்டுகள்—அடிமைகளின் வீடுதலையைப் பெற்றுத் தந்த ஆபிரகாம் லிங்கன்மீது ஆங்கோர் வெறியன் குண்டு வீசியது போல.

இவ்வளவு பெரிய துணைக் கண்டத்துக்கு விடுதலையை வாங்கித் தந்தவர், நாட்டு மக்களின் ஏழ்மைக்கோலத்தைக் கண்டார்—கருத்திலே அக்காட்சி கலந்தது. அவர், அவர்களில் ஒருவராகவே வாழலானார். "எல்லாம் மாயம்; உலகமே இந்திர ஜாலம்," என்று உபதேசிக்கும் குருமார்கள் தங்கப் பாதக் குறடும்,வைரம் இழைத்த குண்டலங்களும் அணிந்துகொண்டிருக்கக் கண்ட மக்கள் முன்பு எவ்வளவு சுகமும் வசதியும் நினைத்தால் பெறுவதற்கு உரிமையும் வாய்ப்பும் பெற்றிருந்தும், ஏழை வாழ்வை நடத்திய உத்தமர் உலவினார். மக்களின் மனம், என்னென்ன எண்ணியிருக்கும்; குண்டல மணிந்த குருமார்களையும், குறுந்தடி பிடித்து உலவிய உத்தமரையும், ஏக காலத்தில் கண்ட போது, "கண்டறியாதன கண்டோம்" என்று களித்தனர். காதகனுக்குக் கண்ணிலேயும் கருத்திலேயும் கடு விஷம்—அவன் காணச் சகிக்கவில்லை இந்தக் காட்சியை—கொன்றான் உத்தமரை—அருளொழுகும் கண்ணுடையவர் என்று மக்கள் கூறக்கேட்டும், ஏசுவைச் சிலுவையில் அறைந்த வஞ்சகர் போல்.

அவரைக் கொன்றானே கொடியோன், அப்பொழுது அவர் மனதிலே இருந்து வந்த எண்ணங்கள் யாவை? என்பதை எண்ணும்போதுதான், நாம் எவ்வளவு பெரிய நஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம் என்பது விளங்குகிறது. கல்லும், கட்டிடையும், காகிதக்குப்பையும் ஏற்றிக் கொண்டு சென்ற கலம் கவிழ்ந்தால் நஷ்டம் என்ன? முத்தும் பவளமும், முழுமதி போன்ற துகிலும் பிறவும் கொண்டு செல்லும் கலம் கடலிலே மூழ்கிவிட்டால் நஷ்டமும் மனக் கஷ்டமும் நெஞ்சை வெந்திடச் செய்யுமல்லவா? அதுபோலக் காந்தியாரைக் கயவன் கொன்றபோது, அவருடைய மனதிலே அருமையான திட்டங்கள் நாட்டுக்கு நலன்தரும் புதிய முறைகள், ஊசலாடிக் கொண்டிருந்தன. அதை எண்ணும்போது தான் எவ்வளவு பெரிய நஷ்டம் - இந்தச் சம்பவம் என்பது விளங்குகிறது

விடுதலை பெற்றுத் தந்ததோடு வேலை முடிந்தது என்று அவர் முடிவுகட்டவில்லை. நாட்டை மீட்கவேண்டும்—நல்லாட்சி அமைக்கவேண்டும்—மக்களை நல்லவர்களாக்க வேண்டும்—வீரம்—திறம், விவேகம், மூன்றையும் விரும்பினார். மக்களை நல்லவர்களாக்க வேண்டும் என்பதே அவருடைய இறுதி இலட்சியம். நல்ல மனிதர்களால்தான் நல்லாட்சி நடத்த முடியும். நாட்டுக்கு விடுதலையும் கிடைத்து மக்கள் நல்லவர்களாகாமல், கொலைபாதகர்கள் கொள்ளைக்காரர்கள், ஆதிக்க வெறியர்கள், ஆள் விழுங்கிகள், ஆஷாடபூதிகள், ஆகியோரின் ஆதிக்கம் அழிந்து படாதிருந்தால், விடுதலையால் என்ன பலன்? வேடனிடமிருந்து மீட்டுவந்த புள்ளிமானை, வேங்கையின் முன்பு துள்ளி விளையாட விடுவதா?

இதை எண்ணினால், நாடு விடுதலை பெற்றதும், நல்லாட்சி அமைக்கும் வழிவரை கூறி, அந்தப் பொறுப்பை, உடனிருந்தோரிடம் தந்தார். மக்களை நல்லவர்களாக்கும் நற்பணி புரியலானார்.

நல்ல மனிதர்களெல்லாரும், திடீர் திடீரென்று பொல்லாத செயல் புரியக் கிளம்பியது கண்டார். மனம் மிக நொந்தார். மனிதனுக்குள் இருக்கும் மிருகம் வெளிப்படக்கண்டு, மிகவும் வேதனைப்பட்டார். இந்தச் சூழ்நிலையை மாற்றியாகவேண்டும் என்று தீர்மானித்துப் பணி புரியலானார், அந்த அரும்பணி யாற்றுவாயிலே தான் அநியாயமாய்க் கொல்லப்பட்டார்.

நாட்டை மீட்க ஒரு ரணகளச் சூரரையும், நல்லாட்சி அமைக்கப் பல கலைவாணரையும், மக்களை நல்வழிப்படுத்த அறநெறி கூறுவோரையும் நாடியாக வேண்டும். எந்த நாட்டுக்கும் அனைவரும் ஏக காலத்தில் கிடைக்கமாட்டார்கள். ஒரு தலை முறையிலே வீரன் தோன்றி விடுதலை தருவான். மற்றோர் தலை முறையிலே நிபுணர் தோன்றி நல்லாட்சி அமைப்பார். பிறிதோர் சமயம் பேரறிஞர் தோன்றி மக்களுக்கு நல்வழி காட்டுவார்.

உத்தமர் காந்தியாரின் உள்ளம் இந்த மூன்றுபண்புகளையும் ஏக காலத்தில் ஒன்றுக் கொன்று குறையாத அளவில் கொண்டு இருந்தது. மூன்று தலைமுறைகள், மூன்று தனித்தனித் தலைவர்கள் கொள்ள வேண்டிய குணத்தை, அவர் ஒருவர் கொண்டிருந்தார். உலக வரலாற்றிலே இதற்கு வேறு ஈடு கிடையாது.

விடுதலை வாங்கித்தந்தவர்கள் உண்டு—போர்த் திறனால்!
நல்லாட்சி நிறுவியர்கள் உண்டு—அறிவின் மேம்பாட்டினால்:
மக்களை நல்லவர்களாக்கினவர்கள் உண்டு—தூய்மையினால்.

மூன்று அரும்பணிகளையும் ஒரு சேரச் செய்த ஒப்பற்ற சிறப்பு, உத்தமர் காந்தியார் ஒருவருக்கேதான் உண்டு.

நாடு விடுதலை பெற, அன்னியருடன் போராட வேண்டி இருந்தது - செய்தார். வெற்றிபெற்றுநாட்டுக்குச் சிறப்பை வாங்கித் தந்தார்.

நல்லாட்சி நிறுவுவதற்காகத் திட்டங்களை நிபுணர்களைக்கொண்டு தீட்ட வேண்டும்-அந்தக் காரியத்தை நடத்த, அகிலம் அறிந்த பண்டித நேரு இருக்கிறார் என்ற களிப்பும் நம்பிக்கையும் கொண்டார்.

மக்களை நல்லவர்களாக்குவதற்கு அவர்கள் மனதிலே உள்ள மாசுகளைப் போக்கவேண்டும். மக்கள் மனதிலே பல காலமாக மூண்டு போய்க் கிடக்கும் மதவெறி, அதன் கிளைகளான பேத புத்தி, வகுப்புத் துவேஷம், கொடுமை ஆகியவைகளைக் களைந்தாக வேண்டும். மக்கள் மனதிலே குரோதத்தை, துவேஷத்தை, சுய நலத்தைத் தூவும் முறையிலே உள்ள போதனைகளை, ஏற்பாடுகளை, எண்ணங்களை அகற்றியாக வேண்டும் என்று அவர் எண்ணினார்,

இந்து மதத்திலே ஏறிப்போய் ஊறிப் போயிருந்த கேடுகளைத் தமது பரிசுத்தவாழ்க்கையாலும், தூய்மையான உபதேசத்தாலும், புதிய விளக்க உரைகளாலும் நீக்கும் காரியத்தில் ஈடுபடலானார். அன்பு நெறி தழைக்க வேண்டும் என்றார். அவர் இந்த மதம், அவன் அந்த மதம், என்று குரோதம் கொள்ளாதீர் என்றார். இது பெரியது; இன்னொன்று தாழ்ந்தது என்று எண்ணாதீர், என்றார். தீண்டாமை போகவேண்டும் என்றார். அமளிக்கிடையே நின்று படுகொலைகள் நடைபெற்ற இடத்திற்கெல்லாம் சென்று கூறிவந்தார்.

மிக மிக எளிய வாழ்க்கையில் இருந்துகொண்டு இன்சொல் பேசி, எந்த முறையையும் ஐதீகத்தையும் ஒரே அடியாக ஒழித்துவிடும் புரட்சித் திட்டமும் கூறாமல், மக்களை நல்லவர்களாக்குமளவுக்குப் பழைய முறைகளிலே உள்ள தூசு தட்டி, மாசு போக்கி, பயனுடைய மனித மேம்பாட்டுக்கு உதவக்கூடிய ஏற்பாட்டினைச் செய்ய வேண்டுமென்று பாடுபடலானார். இதற்கு இவரைக் கொலை செய்தான் மாபாவி. எண்ணும்போதே நெஞ்சு பதறுவது மட்டுமல்ல; இவருடைய இன்சொல் முறைக்கே மதவெறி இவரைப் பலி கேட்டது என்றால், நாட்டிலே தலைகீழ் மாற்றம், செங்கோல், ஜபமாலை, இரண்டும் செலுத்தும் ஆதிக்கம் ஆகியவற்றை ஒழிக்கவேண்டுமே இனி. நமது நாட்களில். அப்போதுதான் தன்னாட்சி நல்லாட்சியாக முடியும். அந்தக்காரியம் செய்யும்போது உத்தமர் உயிரைக் குடித்த மத ஆதிக்க வெறி உலவுமானால், எத்தனை கோட்சேக்கள் கிளம்புவரோ, என்பதை எண்ணும்போதே நெஞ்சு திடுக்கிடுகிறது.

மக்களை நல்லவர்களாக்கவேண்டுமானால், அவர்கள் மனதிலே உள்ள மாசு, மதவெறி, ஜாதி ஆணவம், சுயநலம், ஆதிக்க எண்ணம் ஒழிந்தாக வேண்டும் - என்று பேசிவந்தபோதும் நாட்டை மீட்க வேண்டும் என்று அவர் அன்னியருடன் போரிட்டபோதும் கிளம்பாத பயங்கரச் சக்தியொன்று கிளம்பியது, கோட்சே உருவில். அதுதான் மத ஆதிக்கவெறி ; அதனால் கொலையுண்டார்.

தோட்டத்தை மண்மேடாக்கியவனிடமிருந்து மீட்டு அதைப் புன்னகைப் பூந்தோட்டமாக்குவதற்காக, அழகிய மலர்ச் செடிகளுக்கான விதைகளைத்தூவ, அங்குச் சென்ற போது, புதருக்குள்ளிருந்து, பாம்பொன்று வந்து கடித்துக் கொல்வது போல், நாட்டை மீட்டு, நல்லாட்சி அமைத்து மக்களை நல்லவர்களாக்குவதற்காகக் கருத்தைப் பரப்பும் போது, கோட்சே கிளம்பினான். இந்தப் பழியைத் துடைத்தாகவேண்டும். பாரெங்கும் பேசுவர், நாட்டை மீட்டுத்தந்த உத்தமனை, உள்நாட்டு மத ஆதிக்க வெறி கொன்றது என்று.

மேட்டினைப் பூந்தோட்டமாக்க விதை கொண்டுவந்த வேளையில், பாம்பொன்றினால் இறந்த தோட்டக்காரனைக் கண்டு புலம்புவதும், பாம்பை அடித்துக் கொல்வது மட்டுமல்ல, குடும்பத்தாரின் கடமை. இறந்து கிடப்பவரின் கரத்திலே உள்ள விதையை எடுத்துப் பார்த்து விம்மி அழுதான். பிறகு,இவைகளைத் தூவி இங்கு பூந்தோட்டம் காண விரும்பினார்; அவர் மறைந்தார். விதையோ இருக்கிறது இதோ. இதைத் தூவுவேன் பூந்தோட்டம் காண்பேன் அந்த உருவில் அவரைக் காண்பேன் ; அந்த மணத்திலே அவர் பெருமை தெரியக் கண்டு மகிழ்வேன் - அவர் செய்துவந்த பணியை நான் மேற்கொள்வேன் என்று கூறவேண்டும். மறைந்த உத்தமர் மத ஆதிக்க வெறியால் கொல்லப்பட்டார். அந்தக் கொடும் பாம்பை, ஒழித்தாக வேண்டும். அவர் அனைவரும் ஒன்று எனும் அன்பு மார்க்கக் கருத்தைத் தூவி வந்தார். அதை நாம் செய்து முடிப்போம் என்பதே நமது உறுதியாக இருக்க வேண்டும்.

புத்தர் காலத்திலே நடந்தேறியது போலப் புதிய வழியைக் கொள்வோம் என்ற உறுதி கொண்டு உழைப்பதே, நாம் அந்த உத்தமருக்கு எழுப்பக்கூடிய நிலையான ஞாபகச் சின்னம்.