மகாபாரதம்-அறத்தின் குரல்/1. உலூகன் போகின்றான்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உத்தியோக பருவம்

1. உலூகன் போகின்றான்

வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்துக் கொண்ட பாண்டவர்களும், கண்ணன் முதலியவர்களும் மேலே நிகழ வேண்டிய பவற்றினைப் பற்றிக் கூடிச் சிந்தித்தனர். போர் செய்து அதில் துரியோதனாதியர்களை வென்று அரசாட்சியைக் கைப்பற்ற வேண்டுமென்று வீமனும் அர்ச்சுனனும் கருதினர்.

“போர் செய்து அவர்களை வெல்லுவது தவறில்லை, ஆனால் போருக்கு அவசியம் இருக்கிறதா என்பதை நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள். சூதாட்டத்தினால்தான் நாட்டைப் பறிகொடுத்தீர்கள். சூதாட்டத்தினாலேயே மீட்க முயல்வது தானே முறை! எதற்கும் துரியோதனனிடம் தூது அனுப்பி அவன் எதை விரும்புகிறான்? என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது” என்றான் கண்ணன். கண்ணனுடன் வந்திருந்த பலராமன் அடுத்துக் கூறிய யோசனை அங்கிருந்தவர்களுடைய மனத்தைப் புண்படுத்தியது.

“பாண்டவர்களே! இத்துணை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் மீண்டும் நாடாள நினைப்பது வீண் பேராசை. துரியோதனாதியர் உங்களிடமிருந்து பறித்துக் கொண்ட நாட்டைப் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து உரிமை கொண்டாடி விட்டனர். ‘இனி அவர்களிடமிருந்து அதைப் பெறலாம்’ என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்” -பலராமன் இவ்வாறு கூறவும் அங்கிருந்த சாத்தகி என்பவன் அடக்க முடியாத சினங்கொண்டான்.

“ஏ! பலராமா, உனக்கு எப்போதுமே நல்லதை எண்ணவும் தெரியாது, நல்லதைச் சொல்லவும் தெரியாது” என்று சாத்தகியும் மற்றும் சிலரும் ஆத்திரத்தோடு கூறினர். பலராமனுடைய பேச்சு அங்கு ஒரு பெருங்குழப்பதையும் அடிபிடியையும் உண்டாக்கிவிடும் போல இருந்தது. நல்ல காலமாகக் கண்ணன் குறுக்கிட்டு அதைத் தடுத்தான்.

“நமக்குள்ளேயே குழப்பம் எதற்கு? முதலில் துரியோதனாதியர்கள் என்ன நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதை ஒரு தூதுவன் மூலம் அறிந்து கொள்ளலாம். இங்குள்ளவர்களில் உலூகன் ஒருவனே தூது செல்லத் தகுதியானவன். எனவே நம் எல்லோருடைய விருப்பத்தின்படி உலூகன் பாண்டவர்களின் சார்பாகத் துரியோதனாதியர்களிடம் தூது சென்று வரட்டும்.”

உலூகன் கண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்கித் தூது சென்றான். கண்ணன் முதலியவர்கள் துவாரகைக்குப் புறப்பட்டனர். துரியோதனன், உலூகனிடம் கூறியனுப்புகிற மறுமொழியைத் தெரிந்து கொண்டு தங்களுக்கு விவரம் அறிவிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு வந்திருந்த சிற்றரசர்கள் எல்லோரும் சென்று விட்டனர். தருமனும் கண்ணனும் கூறி அனுப்பிய செய்திகளோடு அத்தினாபுரத்தை அடைந்து துரியோதனனைக் காணச் சென்றான் உலூகன்.

பாண்டவர், கெளரவர் இரு சாராருக்கும் இடையே உலூகன் ஒரு பெருந்தகையாளன், தன் பகைவர்களிடம்மிருந்து வந்தவனென்று அலட்சியமாக இராமல் துரியோதனன் அவனை மரியாதையோடு வரவேற்றதற்குக் காரணம் இது தான். துரியோதனன் மட்டுமில்லை. அவன் அவையைச் சேர்ந்த பெரியோர்களாகிய வீட்டுமன், விதுரன் முதலியவர்களும் கூட உலூகனை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். வரவேற்பு, உபசாரங்கள், எல்லாம் முடிந்த பின் துரியோதனன் உலூகனை நோக்கி, “ஏதோ முக்கியமான செயல் நிமித்தமாகத்தான் வந்திருப்பீர்கள் போலிருக்கிறது. அது என்ன செயல் என்று நான் அறியலாமா?...” என்று கேட்டான். உலூகன் அதற்கு மறுமொழி கூறினான்:

“நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செயல்தான். அதை உங்களிடம் சொல்லி இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு போவதற்காகத்தான் வந்திருக்கிறேன். நிபந்தனைப் படியே பாண்டவர்கள் பன்னிரண்டு வருட வனவாசத்தையும் ஒரு வருட அஞ்ஞாத வாசத்தையும் கழித்து விட்டார்கள். முன்பு நீங்கள் அளித்த வாக்கின்படி அவர்களுக்குச் சேரவேண்டிய நாடு நகரங்களைக் கொடுக்கின்றீர்களா? அல்லது பாண்டவர்கள் உங்களோடு போர் செய்து பெற்றுக் கொள்ளட்டுமா? சூதாட்டமோ, போராட்டமோ, எதுவாக இருந்தாலும் சரி; பாண்டவர்கள் தயாராக இருக்கிறார்கள். பாண்டவர்களின் வலிமையும் பேராற்றலும் உங்களுக்குத் தெரியாதவை அல்ல! மீண்டும் அவர்களுடனே போரிட்டு உங்களுக்கு நீங்களே அழிவு தேடிக் கொள்வதை விட அவர்களுக்குச் சேரவேண்டியதைக் கொடுத்துவிடுவது நல்லது. உலூகனை மரியாதையோடு வரவேற்ற துரியோதனன், இப்போது அவன் வந்த காரியத்தைக் கேட்டதும் கோபங் கொண்டு விட்டான்.

“மிகவும் நல்லது! வார்த்தைகளில் இல்லை வீரம் என்பது. பாண்டவர்களுக்கு எங்களோடு போரிட வேண்டும் என்ற எண்ணம் இருக்குமானால் போர்களத்திற்கு வந்து எதிரில் நின்று செய்யக் கருதுவதைச் செய்யலாம். இந்த மிரட்டல் எல்லாம் வேண்டாம்! இதுதான் என் விடை போய் கூறுங்கள்” என்றான் அவன். துரியோதனனின் விடையைக் கேட்ட உலூகன் விதுரனின் முகத்தைப் பார்த்தான். உடனே விதுரன் எழுந்து துரியோதனனை நோக்கி “துரியோதனா! நியாயமாக இந்தத் தூதுவர் கூறுகிறபடியே பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கொடுத்து விடுவதுதான் நல்லது, போர் எண்ணம் வேண்டாம்” என்றான். அடுத்துத் துரோணரும் கிருபாச்சாரியாரும் எழுந்து விதுரனைப் போலவே, ‘போர் வேண்டாம் என்றும், பாண்டவர்களுக்குச் சேரவேண்டிய நாட்டைக் கொடுத்து விடுவதே தலம்’ என்றும் துரியோதனனுக்கு அறிவுரை கூறினர்.

ஆனால் துரியோதனன் இவர்களது அறிவுரைகளைச் சிறிதும் பொருட்படுத்தவே இல்லை. அவன் அலட்சியத்தைப் பார்த்த வீட்டுமர் கொஞ்சம் மனக்கொதிப்புடனேயே எழுந்து பேசினார்: “வனவாசம் முடிந்ததும் நாட்டைத் தருவதாக முன்பு உறுதிமொழி கூறிவிட்டு, இப்போது இப்படிப் பேசுவது ஆண்மைக்கு அழகில்லை. போர் என்று வந்துவிட்டால் அர்ச்சுனன் ஒருவனுக்குக்கூட உங்களால் எதிர் நிற்க முடியாது. ஏன் போர் போர் என்று வீணாகத் துள்ளுகிறீர்கள்?” இவ்வாறு வீட்டுமர் துரியோதனனை இகழ்ந்து பேசியதைக் கர்ணனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் வீட்டுமனுக்கு மறுமொழி கூறினான்:-

“கிழட்டு வேங்கையைப் போல இருந்த பரசுராமனை நீ எப்படிக் கொன்றாய் என்பது உனக்கு மறந்துவிட்டதா? எந்தப் பரசுராமனிடம் அருங்கலைகளை எல்லாம் நீ கற்றாயோ, அதே பரசுராமனை நீ கொல்லவில்லையோ? உனக்குக் கற்பித்த ஆசிரியனை மாணாக்கனாகிய நீ எப்படி வென்றாயோ அப்படியே நானும் கெளரவர்களும், பாண்டவர்களை வென்று வாகை சூடுவோம்.” வயது முதிர்ந்தவராகிய வீட்டுமருக்குக் கர்ணனுடைய சொற்கள் அளவிலடங்காத கோபத்தைக் கிளறிவிட்டன.

“அடே! கர்ணா, ‘நீ யாரோடு பேசுகிறாய்’ என்பதனை யோசித்து, மட்டு மரியாதையோடு பேசப் பழகிக் கொள். அன்று. திரெளபதிக்குச் சுயம்வரம் நடந்தபோது நீயும் தான் அர்ச்சுனனோடு போர் செய்து பார்த்தாயே? உன்னால் அவனை வெல்ல முடிந்ததா? ஒரு சமயம் உன்னுனடய மதிப்பிற்குரிய நண்பன் துரியோதனனைத் தேவர்கள் தேர்க்காலில் கட்டி இழுத்துக் கொண்டு போனார்களே! அப்போது உன் வீரம் எங்கே போய் ஒளிந்து கொண்டிருந்தது? கடைசியில் துரியோதனனைத் தேர்க்காலிலிருந்து விடுவிக்க வீமன் வரவேண்டியிருந்ததே ஒழிய உங்களால் முடிந்ததா? அட இவையெல்லாந்தான் போகட்டும். சமீபத்தில் விராட நகரத்தில் உங்களுக்கும் அர்ச்சுனனுக்கும் போர் நடந்தது. உங்களில் யாராவது அவனை வென்றீர்களா? வெல்லவில்லை. வெல்வதற்குப் பதிலாக மூன்று முறை புறங்காட்டி ஓடினாய் நீ! நாளைக் குருட்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குத் தேர் ஓட்டப் போவது யார் தெரியுமா? கண்ணன் தேரோட்டம் போகிறான். பயங்கொள்ளியாகிய உத்தரகுமாரன் தேரோட்டும் போதே அவனை வெல்ல முடியாத நீ, இனி மேலா வெல்லப் போகிறாய்? கர்ணா! உன் வீரத்தின் அளவு இது தான் என்று நன்றாக அளந்து வைத்திருக்கிறேன் நான்.” வீட்டுமருக்குப் பதில் கூற வாய் இன்றி வெட்கமுற்றுத் தலை குனிந்து சிலை போல வீற்றிருந்தான் கர்ணன். அவையில் அசாதாரணமான அமைதி நிலவியது.

உலூகன் எழுந்திருந்தான். துரியோதனனைப் பார்த்து, “நான் தூது வந்தவன். இங்கே கூறுகிற முடிவு எதுவோ, அதை அப்படியே அங்கே போய்க் கூறுவேன். இப்போது நான் இவ்விடத்து முடிவைத் தெரிந்து கொண்டு புறப்படலாமா?” என்றான்.

துரியோதனன் ஏளனந்தோன்றக் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். உலூகனை அலட்சியமாக நோக்கிக் கொண்டே “இத்தனை நாட்களாகப் பிறருக்கு உரிமையின்றி ஏகபோகமாக ஆண்டு விட்டோம். எங்களுக்கு உரியதான இதை விட மனமில்லை. பாண்டவர்கள் காட்டில் வசித்துப் பழக்கப்பட்டுவிட்டதனால் காட்டை வேண்டுமானால் ஆண்டு கொள்ளட்டும். நாட்டைக் கொடுக்க நாங்கள் தயாராயில்லை. இதுதான் எங்கள் முடிவு, போய்ச் சொல்!” என்று கூறினான். உலூகன் இதைக் கேட்டதும் வீட்டுமன், விதுரன் முதலியவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுத் தருமனைச் சந்திக்கச் சென்றான்.

தருமன் முதலியவர்கள் அப்போது விராட நகரத்துக்கு அருகிலிருந்த உபலாவியம் என்ற இடத்தில் தங்கியிருந்தனர். உலூகன் அங்கு சென்று நடந்த நிகழ்ச்சிகளையும் துரியோதனனின் -முடிவையும் கூறினான். துரியோதனாதியர்களோடு போரிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைப் பாண்டவர்கள் தெரிந்து கொண்டனர்.

“உலூகா! எங்கள் சார்பாக நீயே துவாரகைக்குச் சென்று இச்செய்தியைக் கண்ணனுக்கும் கூறிவிட்டு வந்தால் நல்லது” என்று உலூகனை வேண்டிக் கொண்டான் தருமன். உலூகன் அந்த வேண்டுகோளுக்கு இணங்கித் துவாரகைக்குப் புறப்பட்டான். துவாரகையில் கண்ணனைச் சந்தித்துச் செய்திகளைக் கூறினான். விவரங்களை அறிந்து கொண்ட கண்ணன் மனத்தில் பல விதமான சிந்தனைகள் உண்டாயின. ஒரு பெரும் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதற்கு ஏற்ற முறையில் பாண்டவர்களைத் தயார் செய்தாக வேண்டுமே என்ற கவலை அவனைப் பிடித்துக் கொண்டது. “அர்ச்சுனனை உடனே நான் சந்திக்க விரும்புகிறேன். நீ போய் அவனை வரச்சொல்” என்று உலூகனிடமே கூறி அனுப்பிவிட்டு எதிர்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய சிந்தனைகளில் எண்ணங்களை மிதக்க விட்டான் மாயப் பெருமான், சிந்தனைகளுக்கு எல்லாம் மூலமான அவன் கூட ஒரு சிந்தனையில் ஈடுபட்டான்.