மகாபாரதம்-அறத்தின் குரல்/5. வீரச்சிங்கம் வீழ்ந்தது!

விக்கிமூலம் இலிருந்து

5. வீரச்சிங்கம் வீழ்ந்தது!

வீழ்ந்த அபிமன்னன் மறுபடியும் எழுந்திருக்கவே இல்லை. அந்த வீரச்சிங்கத்தின் உடலில் உயிர் இருந்தால் அல்லவா மீண்டும் எழுந்திருக்க இயலும்? வீர சுவர்க்கம் அடைந்து விட்டான் அபிமன்னன். வீரத்தின் சிகரமாக அதுவரை அந்தப் போர்களத்தில் போராடிய ஒரு புனித ஆன்மா செயலிழந்து உணர்வொடுங்கித் தரையில் வீழ்ந்து விட்டது. பகைவர்களும் கூட மனம் கலங்கி வருந்திக் கண்ணீர் சிந்துமாறு செய்தது அவன் முடிவு. துச்சாதனன், சகுனி, கர்ணன் ஆகியவர்கள் மட்டும் மனம் வருந்தவில்லை. தன் மகனை இழந்த வருத்தம் கூடத் துரியோதனனுக்கு அப்போது மறந்துவிட்டது. அர்ச்சுனன் மகனான அபிமன்னன் இறந்துவிட்டான் என்ற களிப்பே அவன் மனத்தில் நிறைந்து நின்றது. இவர்கள் நான்கு பேரைத் தவிரப் பரந்து விரிந்த அந்தக் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அபிமன்னனுடைய மரணத்திற்காக வருந்தாதவர்கள் வேறெவருமில்லை. இதற்குள் அபிமன்னன் இறந்து விட்டான் என்ற இந்தக் கொடிய செய்தி தருமருக்கும் வீமனுக்கும் எட்டியது. தருமர் ஒரு கணம் ஒன்றுமே புரியாமல் திக் பிரமையடைந்து விட்டார். வீமனுக்கு இதய ஓட்டமே நின்று விடும் போலிருந்தது. மனத்துயரம் பொறுக்க முடியாமல் இருவரும் பலவாறு அழுது புலம்பினர். தருமரும் வீமனும் அன்று அந்த அந்தி வேளையில் அங்கே அழுது புலம்பியதைக் கேட்கும் சக்தி மட்டும் இருந்திருந்தால் குருக்ஷேத்திரத்துக் கல்லும் மண்ணும் கூட அழுது கண்ணீர் சிந்தியிருக்கும். சூரியன் அஸ்தமிக்கப் போகிற சமயம். அப்போதுதான் சஞ்சத்தகர்களோடு போர் செய்து அவர்களைத் துரத்தி விட்டு மகிழ்ச்சியோடு திரும்பிக் கொண்டிருந்தான் அர்ச்சுனன். தன் மகனான அபிமன்னன் கெளரவர்களின் வஞ்சனைக்காளாகி இறந்து போனான் என்ற செய்தி அது வரை அவனுக்குத் தெரியாது. ஆனால் அர்ச்சுனனுடைய தேரைச் செலுத்திக் கொண்டிருந்த எல்லாம் வல்ல கண்ணபிரான் தம்முடைய ஞான திருஷ்டியால் அபிமன்னனுடைய முடிவைத் தெரிந்து கொண்டான். அர்ச்சுனன் திடீரென்று அதைக் கேள்விப்பட்டால் கதிகலங்கி மூர்ச்சையாகி விடுவான் என்று பயந்து கண்ணன் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டு அதன்பின் அந்தப் பயங்கரச் செய்தியை அவனுக்கு உரைக்க விரும்பினான். கண்ணன் தன் மனத்திற்குள் இந்திரனைத் தியானித்துக் கீழ்வருமாறு வேண்டிக் கொண்டான்:-

“உன் மகன் அர்ச்சுனன் புத்திரனை இழந்து விட்டான். இந்தச் சோகம் நிறைந்த சூழ்நிலையில் உன் மகனுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவிக்க நீதான் வரவேண்டும்” கண்ணனுடைய தியானத்திற்கும் வேண்டுகோளுக்கும் இந்திரன் மனமிரங்கினான். உடனே கண்ணனும் அர்ச்சுனனும் தேர் மேலேறித் திரும்பிக் கொண்டிருக்கக் கூடிய வழியில் இந்திரன் ஒரு கிழட்டு வேதியனைப் போல உருமாறி வந்து நின்று கொண்டான். வேதியன் அழுது புலம்பியவாறு தளர்ந்து நின்று கொண்டிருந்தான்.

“ஐயோ! என் மகனை இழந்த துயரைப் பொறுக்க முடியவில்லை ! இதோ, நான் தீயிலே பாய்ந்து இறந்துவிடப் போகிறேன்” என்று வேதியன் இரைந்து கத்தினான். தேரில் வந்து கொண்டிருந்த கண்ணனும் அர்ச்சுனனும் இதைப் பார்த்தார்கள். கண்ணன் அர்ச்சுனனுக்கு அந்த கிழவனை சுட்டிக் காட்டி, “அர்ச்சுனா! அதோ அந்தக் கிழவன் ஏதோ மகனை இழந்து விட்டேனென்றும் தீயிலே பாய்ந்து விடப் போகிறேனென்றும் கத்திக் கொண்டிருக்கிறான். நீ போய் அவனைத் தேற்றித் தீப்பாயாமல் தடுத்தால் நல்லது” என்று கூறினான். உடனே அர்ச்சுனன் கண்ணன் கூறியபடியே தேரிலிருந்து இறங்கி அந்தணனுக்கு அருகே சென்று, “ஐயா! வயதான வேதியரே! நான் சொல்லுகிறபடி கேளும். நீர் உம்முடைய மகனை இழந்ததற்காகத் தீயில் பாய்ந்து உயிர்விடப் போவதாகக் கூறுகிறீர் இறப்பதும் பிறப்பதும் நம் கையிலா இருக்கிறது? எல்லாம் விதியின் வழி நடக்கும்? மகன் இறந்ததற்காக நீர் ஏன் தீப்பாய வேண்டும்? நீர் தீப்பாய்ந்தால் உம்முடைய மகன் திரும்பி வந்து விடுவானா? அறிவிற் சிறந்தவர் போலத் தோன்றும் நீர் என் சொற்படி கேட்க வேண்டும்” என்று அவருக்கு ஆறுதல் கூறினான்.

உடனே அந்த மாயக்கிழவர் அர்ச்சுனனை நோக்கி, “நல்லது அப்பா! என் மகனுக்காக நான் தீயில் பாய்ந்து இறக்கக்கூடாது என்று நீ தடை செய்கிறாய்! இதே போல் உன் மகன் இறந்தாலும் அவனுக்காகத் தீப்பாய முற்படக் கூடாது. இதற்கு நீ சம்மதித்தால் உன் சொற்படி நானும் கேட்கிறேன்!” என்றார்.

“கிழவரே! என் மகன் இறந்தால் நான் தீப்பாய மாட்டேன். அப்படியே தீப்பாய எண்ணினாலும் அப்போது நீர் வந்து என்னைத் தடுத்தால் கண்டிப்பாக நிறுத்தி விடுகிறேன். இது சத்தியம்” என்று அர்ச்சுனன் அவருக்கு வாக்களித்தான்.

“அப்படியானால் நல்லது? நானும் இப்போது தீப்பாயவில்லை” என்று சிரித்துக் கொண்டே கூறினார் வேதியர். அர்ச்சுனனும் கண்ணனும் வேதியரை வணங்கி விட்டு மேலே சென்றார்கள். வேதியர் மறைந்தார். தேர் பாசறையை நெருங்கியது. முன் ஜாக்கிரதையாக அர்ச்சுனனின் கைகளில் எந்தவிதமாக ஆயுதங்களும் இல்லாமல் கண்ணன் வாங்கி வைத்துக் கொண்டான். பாசறையிலிருந்து ஒரே அழுகைக் குரல்களாகக் காற்றில் கலந்து வந்தன. அழுகைக் குரல் செவியில் கேட்டதும் ஒன்றும் புரியாமல் மிரண்டு போய் கண்ணனைப் பார்த்தான் அர்ச்சுனன். கண்ணன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவனுடைய கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அர்ச்சுனன் திகைத்தான்.

“கண்ணா! இதென்ன நம்மவர்கள் தங்கியிருக்கும் எல்லாப் பாசறைகளிலிருந்தும் அழுகைக் குரலே கேட்கிறது? நீயும் அழுகிறாய். எனக்கும் மனத்தில் இனம் புரியாத பயமும் நடுக்கமும் தோன்றுகின்றன. இடது கண், இடது தோள், இடது மார்பு எல்லாம் துடிக்கின்றன. இதன் பயன் என்ன? என்ன துயரம் நம்மை எதிர் நோக்கியிருக்கிறதோ? எல்லாம் உணரவல்ல உனக்குத் தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க முடியாதே?” -என்று கண்ணனைப் பார்த்துக் கவலை நிறைந்த குரலில் அர்ச்சுனன் கேட்டான். கண்ணன் இதற்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாகக் கண்ணீர் சிந்தியபடியே இருந்தான்.

“கண்ணா ! இனியும் பொறுக்க முடியாது! இன்றைய போரில் நம்மைச் சேர்ந்த நமக்கு நெருங்கிய யாரோ ஒருவர் பெருந்துன்பம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. என் சகோதரர்களில் யாருக்கேனும், என் புதல்வர்களில் யாருக்கேனும் துன்பமா? யாருக்குத் துன்பம் ? உள்ளதைச் சொல்லி விடு! இனிமேலும் என்னை ஏமாற்றாதே!” -அர்ச்சுனன் கதறி விட்டான். கண்ணன் அர்ச்சுனனை மார்புறத் தழுவிக் கொண்டான்.

“அர்ச்சுனா! மனத்தைத் திடப்படுத்திக் கொள். நீ விரைவில் உணர்ச்சிகளுக்கு அடிமையாகிறவன். நான் சொல்லப்போவதோ பரிதாபகரமான செய்தி."

“சொல் கண்ணா! சொல்லிவிடு! இன்னும் என்னைச் சோதனை செய்யாதே!”

‘உன் அருமைப் புதல்வனும் என் அருமை மருமகனுமாகிய அபிமன்னன் வீர சுவர்க்கம் அடைந்துவிட்டான்.” கண்ணன் கூறிய சொற்கள் செவியில் நுழைவதற்கு முன்பே அர்ச்சுனன் தேரிலிருந்து வேரற்ற மரம் போல் தரையில் சாய்ந்தான். செய்தியைக் கேள்வியுற்ற அதிர்ச்சியில் அவனுக்குப் பிரக்ஞை தவறிவிட்டது. கண்ணன் உடனே பதறிப் போய்த் தேர்தட்டிலிருந்து கீழே குதித்து அர்ச்சுனனுக்குப் பிரக்ஞை வரச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டான். மயக்கம் தெளிந்ததும் அர்ச்சுனன் கோவென்று கதறியழுதான். பலவாறு புலம்பினான். தரையில் முட்டிக் கொண்டான். ஒரே கன்றை இழந்த தாய்ப் பசுவின் நிலையை அடைந்தான். பாண்டவர் படையைச் சேர்ந்த எல்லோரும் அர்ச்சுனன் விழுந்து கிடந்த இடத்தில் துயரமே உருவாகச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். அப்போது மகா முனிவராகிய வியாசர் பெருமான் அந்த இடத்திற்கு விஜயம் செய்தார். துயரத்தால் வாடி நிற்கும் யாவருடைய மனமும் ஆறுதலடையும்படி பொதுவாக ஓர் அறிவுரை வழங்கினார் அவர்.

“பந்த பாசங்களும், உறவு முறைகளும் மாயையினால் ஏற்படுகின்றவை. மனைவி, மக்கள், தாய், தந்தை, சுற்றம், எல்லாமே பொய் மயக்கம் தோன்றுமிடமும் சேருமிடமும் பரமாத்மாவின் திருவடியே. இன்பமும் துன்பமும், வெறும் அவஸ்தைகளே, மெய்ஞ்ஞானமுள்ளவர்கள் துயரங்களைக் கண்டு வருந்திக் கதறக் கூடாது. ‘இது இந்தப் பூத உலகத்தின் இயற்கை’ என்று எண்ணித் தெளிவு பெற வேண்டும். இறப்பதும் பிறப்பதும் இவ்வுலகில் புதுமை இல்லை , நடந்ததை மறந்து இனி நடக்க வேண்டியதை நினையுங்கள். உங்கள் கவலையால் அபிமன்னன் உயிர் பெறப் போவதில்லை” -என்றார் வியாசர். வியாசருடைய அறிவுரையால் பலர் மனம் தேறியது. உண்மையானாலும் அர்ச்சுனன் அந்த அறிவுரையை ஏற்றுத் தெளிவு பெறவில்லை. மகனை இழந்த வேதனை பொறுக்க முடியாமல் தீயிலே பாய்ந்து தானும் உயிர் துறப்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தான் அவன். தீயும் வளர்த்தாகி விட்டது. யார் தடுத்தும் கேட்காமல் அர்ச்சுனனும் அதில் பாயத் தயாராகி விட்டான். இன்னும் சில விநாடிகள் தாமதித்தால் அர்ச்சுனனுடைய அழகிய சரீரம் தீயில் மறைந்துவிடும். அப்போது கண்ணன், முன்பு போலி வேதியனாக உருமாறி வந்து அர்ச்சுனனிடம் வாக்குப் பெற்றுக் கொண்டுபோன இந்திரனை நினைத்தான். நினைத்த அளவில் அர்ச்சுனனுக்கு முன் வந்து போலி வேதியன் நின்றான்.

“நில்! தீயை நெருங்காதே! சற்றுமுன் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டாயா?” அருச்சுனன் இந்தக் குரவைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்; வேதியர் நின்று கொண்டிருந்தார். “தன் மகன் இறந்தால் அதற்காக வருந்தித் தான் தீயில் பாய்வதில்லை” -என்று சிறிது நேரத்திற்கு முன்பு அந்தப் பெரியவருக்கு வாக்களித்ததை அவன் நினைவு கூர்ந்தான். சட்டென்று தீயை விட்டு விலகிக் கொண்டு நின்றான். அந்தக் கிழட்டு வேதியனை இம்மாதிரியெல்லாம் தூண்டி விட்டு ஆட்டுவது கண்ணபிரானாகத்தான் இருக்க வேண்டும் என்று அர்ச்சுனன் அனுமானித்துக் கொண்டான். எனவே ஒன்றும் செய்யத் தோன்றாது பேசாமல் இருந்தான். “எல்லாம் நம்முடைய தவறு! ஒரு சிறுவனைத் தன்னந் தனியாகச் சக்கரவியூகத்திற்குள் அனுப்பியதுதான் நாம் செய்த தவறு. இனி வருத்தி என்ன பயன்?” என்றான் தருமரை நோக்கி, அர்ச்சுனனுடைய மனம் கொதித்தது. கைகள் பகைவர்களைப் பழி வாங்குவதற்குத் துடிதுடித்தன. அவன் அங்கே கூடியிருந்தவர்கள் எல்லோருமே கேட்கும்படியாக இரைந்த குரலில் ஆத்திரத்தோடு சபதம் கூறத் தொடங்கினான்:

“இன்றைய போரில் என் அருமை மகன் அபிமன்ன னைக் கொன்றவன் எவனோ அவனை நாளை மாலைக்குள் கொல்லவில்லையானால் நாளை மாலை நான் தீயில் வீழ்ந்து இறப்பேன். என்னை அப்போது யாரும் தடுக்கவே முடியாது. என் மகனைக் கொன்றவனை என்னால் பழி வாங்க முடியவில்லையானால் நான் கொடுமையான நரகத்துக்குப் போகும்படி ஆகுக” என்று இவ்வாறு ஆத்திரத்தோடு பல சபத மொழிகளைக் கூறினான். அப்போது அங்கே கூடியிருந்த யாவர் செவிகளிலும் வீரமொழிகளாகிய இவை கேட்டன. அர்ச்சுனனின் கடுமையான இந்த சபதத்தைக் கேட்டுத் தருமர் திடுக்கிட்டார்.

“கண்ணா! இது என்ன? இவன் இப்படி முரட்டுத்தனமாக ஆத்திரத்தில் ஏதேதோ சபதம் செய்கிறானே? இவன் சொல்லுவது போல நாளை மாலைக்குள் சயத்திரனை இவனால் கொல்ல முடியுமா? முடியாவிட்டால் தீயிலே பாய்ந்து இறப்பேன் என்று வேறு சபதம் சொல்லியிருக்கிறானே? இவன் தீயில் பாய்ந்து இறந்தால் பின்பு நாங்கள் மட்டும் எப்படி உயிர் வாழ்வோம்? தீயில் பாய்ந்து இவன் உயிரை விட்டால் நாங்களும் உயிரை விட வேண்டியது தான்! என்ன செய்வது? நீ சர்வக்ஞன், நீதான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்” என்று தருமர் கண்ணனை நோக்கி மனமுருக வேண்டிக் கொண்டார்.

“தருமா கவலைப்படாதே. யாவும் நலமாக நிறைவேறும். அர்ச்சுனனுடைய சபதம் நிறைவேறாமலிருந்தால் தானே அவன் தீப்பாய்வான்’ என்று சொல்கிறான். அவனுடைய சபதம் நிறைவேறும்படி செய்து விடுவோம்.”

“அப்படியானால்...”

“அபிமன்னனைக் கொன்ற சத்திரதனை எவ்வாறேனும் நாளை மாலைக்குள் பழி வாங்கிவிட்டால் போகிறது. அர்ச்சுனனும் தீப்பாயமாட்டான். நீங்களும் வீண் சஞ்சலப்பட வேண்டிய அவசியமில்லை.”

“அது முடிகிற காரியமா?” என்று மலைப்புடன் கூறினார் தருமர்.

“முடிகிற காரியமோ? முடியாத காரியமோ? எல்லாவற்றையும் முடித்து வைப்பவன் நான் அல்லவா?” - இவ்வாறு கூறிக்கொண்டே புன்னகை புரிந்தான் கண்ணன்.