உள்ளடக்கத்துக்குச் செல்

மனத்தின் தோற்றம்/தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கு

விக்கிமூலம் இலிருந்து

9. தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கு



தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கும் சிறிது உண்டு. அப்பங்கை ஆராய்வதற்கு முன் ‘எந்தத் தமிழ் வளர்ச்சிக்கு?’ என்னும் வினாவிற்கு விடை காணல் வேண்டும்.

ஒரு வேடிக்கைக் கதை உண்டு. நோயாளி ஒருவன் சாகுந்தறுவாயில் இருந்தபோது அவன் உயிரைப் பிடிக்க எமன் சென்றானாம். நீ யார்? என்று நோயாளி கேட்டானாம். நான் எமன் என்ற பதில் வந்தது. உடனே நோயாளி, நீ பழைய எமனா? புதிய எமனா? என்று வினவினானாம். திடுக்கிட்ட எமன், புதிய எமன் ஒருவன் இப்போது கடவுளால் உண்டாக்கப்பட்டுள்ளான் போலும் - இவனது உயிரைப் பிடிக்கும் பொறுப்பு புதிய எமனுடையது போலும் - நமக்கு ஏன் வம்பு? என்று வாளா திரும்பி விட்டானாம். ஒரே எமன்தான்.

இந்தக் கதை இங்கே ஏன் சொல்லப்படுகிறதெனின், தெனாவிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதைப் போல, இன்றைய மொழியியலார் சிலர், பழைய தமிழைத் திருத்தியும் மாற்றியும் புதிய தமிழ் படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மொழியியலாரின் அடிப்படை நோக்கம் நல்லதே. தமிழை வளர்க்க வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவர்களே அவர்கள். அதாவது இப்போது மக்கள் பேசும் புதிய வழக்காறுகள் பழைய இலக்கண விதிக்கு மாறுபட்டிருப்பினும், அதைப் பொருட்படுத்தாது, பழமையை நீக்கிப் புதிய வழக்காறுகட்குப் பொருத்தம் கற்பித்து அவற்றை மொழியில் புகுத்துகின்றனர்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே”

எனப் பவணந்தி முனிவர் நன்னு லில் கூறியுள்ளார். மற்றும், ஆர்தர் மன்னன் தன் இறுதிக் காலத்தில் தன் அமைச்சர் சர்-பெடீவரிடத்தில் “Old order changeth yielding place to new” என்று கூறினானாம். ‘கழிதல்’ என்பதை விட, changeth என்பது மிக்க பொருத்தம் உடையதாகத் தோன்றுகிறது.

புதுமையைப் புகுத்துபவர்கள் தங்கள் கொள்கைக்கு அரணாக இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். ஆனால், இங்கே, “பழைய காலைத் தூர்க்காதே - புதிய காலை விடாதே” என்னும் பழமொழி இருப்பதையும் நினைவுசெய்துகொள்ளல் வேண்டும். கால் என்றால், நீரோடும் வாய்க்கால்.

“முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொரு
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே.”

என்பது மாணிக்கவாசகரின் திருவாசகப் பகுதி.

பழமையைக் கழித்துப் புதியன புகுத்தும் பயனுள்ள நல்ல பணி இன்றைய மொழியியலாரால் இப்போது மட்டும் செய்யப்படவில்லை. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டு களாகவே இந்தப் பணி முன்னோரால் செய்யப்பட்டு வந்துள்ளது.

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் சொல்லியுள்ள இல செய்திகளைப் பவணந்தியார் நன்னுாலில் விட்டுவிட்டார்; தொல்காப்பியர் சொல்லாத சில செய்திகளைப் பவணந்தியார் நன்னூலில் சொல்லியுள்ளார். எடுத்துக்காட்டுகள்:

ஆவிரை என்ற சொல்லைக் குறிப்பிட்டுத் தொல் காப்பியர் புணர்ச்சி விதி கூறியுள்ளார். நன்னூலார் இச் சொல்லைக் குறிப்பிடவில்லை. தொல்காப்பியர் சொல்லாத பதவியலை நன்னூலார் நன்னூலில் புகுத்தியுள்ளார். எகர ஒகரம் புள்ளியொடு நிற்கும் எனத் தொல்காப்பியர் சொன்னதை நன்னூலார் சொல்லவில்லை.

தொல்காப்பியரையே எடுத்துக் கொள்வோமே - இப்படியெல்லாம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். உயிர் மயங்கியலில் புணர்ச்சிவிதி சொல்லும் இடத்திலும் இவ்வாறு கூறியுள்ளார்:

“செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியாது என்மனார் புலவர்” (20)

என்பது நூற்பா.

இப்போதைய மொழியியலார் இப்போது வழக்கில் இல்லாததை நீக்கிப் புதிய வழக்கைப் புகுத்துகின்றனர். தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இயல்புப் புணர்ச்சி நீங்கலான விகாரப் புணர்ச்சிகள் - அதாவது - தோன்றல், திரிதல், கெடுதல் உள்ள விகாரப் புணர்ச்சிகள் அனைத்தும், பழமை நீங்கிய புதிய வழக்காறுகளே. எனவே, தொல் காப்பியரையும் அந்தக் காலத்துப் புதிய மொழியலார் என்று கூறலாம். ஒரோஒர் எடுத்துக் காட்டு வருமாறு:

மக்கள் பனைமரத்தின் பூவைப் ‘பனம்பூ’ என்கின்றனர். ஆனால் ‘பனம்’ என ஒரு சொல் கிடையாது. பனை என்பதன் ஈற்றில் உள்ள ஐ கெட்டு, ‘பன்’ என நிற்க, அதனுடன் ‘அம்’ என்பது சேர்ந்து ‘பனம்’ என்றாகிறது. இதோடு பூ சேரும் போது ‘பனம்பூ’ என்றாகிறது. ‘காய்’ என்பது சேரின் ‘பனங்காய்’ என ‘ம்’ என்பது ‘ங்’ எனத் திரிகிறது. ஆவிரை என்ற சொல்லுக்கும் இதே விதிதான்:

“பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
கினையுங் காலை அம்மொடு சிவனும்
ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே
மெய் அவண் ஒழிய என்மனார் புலவர்” (81)

என்பது உயிர் மயங்கியல் நூற்பா. பனை பூ என்னும் பழைய இயற்கையான சொற்களை மக்கள் பனம்பூ எனத் திரித்துப் பேசினர். புதுமைக்கு இந்தக் காலத்து மொழி யியலார் இடம் கொடுப்பது போலவே, அந்தக் கால மொழியியலாராகிய தொல்காப்பியரும் புதுமைக்கு இடம் கொடுத்துள்ளார். இவ்வாறு எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் தர முடியும்.

இந்தக் கால மொழியியலாரின் கூற்றுப்படி, ‘பனைபூ’ என்பதைப் பழைய தமிழ் என்றும், ‘பனம்பூ’ என்பதை அந்தக் காலப் புதிய தமிழ் என்றும் கொள்ளல் வேண்டும். இந்தக் காலத்திலும் பனம்பூ என்றே மக்கள் வழங்குகின்றனராதலின், இந்தக் காலத்து மொழியியலாருக்கு வேலை வைக்காமல் இவர்களின் வேலையை அந்தக் காலத்திலேயே தொல்காப்பியர் முடித்து வைத்துச் சென்றுள்ளார்.

மற்றும், தஞ்சாவூர் தஞ்சை எனவும், வாழ்நன் வாணன் எனவும், ஐந்து அஞ்சு எனவும், மையல் மயல் எனவும் மக்கள் வழங்குவதற்கு, முன்னமேயே இலக்கண ஆசிரியர்கள் அமைதி கூறியுள்ளனர். (மரூஉ, போலி)

இதுகாறும் கூறியவற்றால் அறிய வேண்டுவதாவது: ஆயிரம்-ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் புதுமை பெற்றுத் தான் வந்துகொண்டிருக்கிறது; ஆனால், இவ்வளவு கால மாக நடந்து வருவது போலவே, மொழியியலார் ‘புதிய தமிழ்’ என்னும் புதிய பெயரைத் தங்கள் உள்ளகத்தி லிருந்தும் விலக்கிவிட்டுப் பொருத்தமான புதுமைகளைப் புகுத்திக் கொண்டிருக்கலாம் என்பது, இதுவரை கூறிய வற்றால் அறிய வேண்டியதாகும்.

இதுகாறும் இவ்வளவு கூறவேண்டியதின் காரண மாவது:- ‘புதிய தமிழ்’ என்னும் பெயர் பலரைப் புண் படுத்துவதேயாகும். இப்போது இது பற்றித் தமிழ் அறிஞர்களிடையே கடுமையான கார சாரமான கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. மொழியியல் என்னும் பாடம் படித்துப்பட்டம் பெற்றவர்கள், அப்பட்டம் பெறாதவர்களை மிகவும் மட்டமாக மதிக்கிறார்கள். இதற்கு எவ்வளவோ சான்றுகள் உண்டு.

அதே நேரத்தில் மொழியியல் என ஒன்றைத் தனியே படிக்காதவர்கள், மொழியியல் என்பது தமிழுக்கு வேண்டாத - வீணான ஒரு பெருஞ்சுமை என்கின்றனர். மொழியியல் என ஒன்றைத் தனியே படிக்காமலேயே, மொழியியல் எனத் தனியே படித்தவர்கள் செய்யும் பணியை முன்னோர் போல் செய்யலாம் என்பது இவர்களின் வாதம். முன்னோர்கள் செய்தது இப்படித்தானே.

‘தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கு’ என்னும் தலைப்பில் இந்தச் செய்திகளை யெல்லாம் ஆராய வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இங்கே இதை ஒதுக்கிவிடலாகாது.

கல்வித்துறையில், ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், வரலாறு, தரையியல், வானியல், உயிரியல், பொறியியல், மருத்துவம், வணிக இயல், பொருளியல், மெய்யுணர்வு என்னும் தத்துவ இயல், உளவியல், சமூக இயல், வேளாண்மை இயல் முதலிய தனித்தனித் துறைப் பாடங்கள் இருப்பது போலவே, மொழியியலுக்கும் தனிப்படிப்பும் தனித்தேர்வும் எம்.ஏ (M.A.) என்னும் முதுகலைப்பட்டமும் உண்டு.

இதற்கென நூற்றுக்கணக்கான புதிய கலைச் சொற்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழியியலார் படித்து அறிந்து வைத்துள்ளனர். அவற்றையெல்லாம் தமிழில் புகுத்தவும், அவற்றின் அடிப்படையில் தமிழை அணுகவும், அந்தத் துறைக் கண்கொண்டு தமிழைக் காணவும் மொழியியலார் சிலர் முனைந்து முயல்கின்றனர்.

மற்றதுறைப் பாடங்களாலும் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு சிறிது கொடை கிடைக்காலம். அவற்றினும், மொழியியலால் சிறிது கூடுதலாகத் தமிழ் வளர்ச்சிக்குக் கொடை கிடைக்கலாம் . அவ்வளவுதான். எனவே, மொழியியல் என்னும் ஒரு பொதுப் பெயரை வைத்துக்கொண்டு, தமிழுக்கு முன்னால் ‘புதிய’ என்னும் அடைமொழியைச் சேர்த்துப் ‘புதிய தமிழ்’ படைக்கப்போகிறோம் என்று அடம் பிடிப்பது பொருந்தாது.

இன்றைய மொழியியலார் எழுத்து சொல் - சொற்றொடர் இவற்றிலேயே நிற்கின்றனர். பொருளுக்குப் போவது குறைவு. எனவே, தமிழ் எழுத்துகளின் மேல் தங்கள் சினத்தைச் செலுத்தி அவற்றுள் சிலவற்றை ஒழித்துக் கட்டுவதில் முனைப்பாயுள்ளனர். இது அவர்களின் பங்குகளுள் ஒன்றாகும்?

இந்திய மொழிகளுள் தமிழ் மொழியில் எழுத்து குறைவு. க, ச, ட, த, ப என்பன நந்நான்கு வரிவடிவமும் ஒலிவடிவமும் பெற்றுள்ள மற்ற இந்திய மொழிகட்கு உள்ள சுமை தமிழுக்கு இல்லை.

ஆங்கிலம் இருப்பத்தாறு எழுத்தில் நடை போடுகிறதாம். அதனால்தான், நெடுநல்வாடை என்பது Nedu Nal valai என ஆங்கில எழுத்தில் எழுதப் பட்டிருந்ததை ஒருவர் நெடுநாள் வடை' என்று படித்தாராம். குறில் - நெடில் தனித்தனியே இல்லாத குறையினால் நேர்வது இது போன்றது.

ஆங்கிலத்தில் A, (A), a, (a) B, (B), b, (b) எனப் பெரியஎழுத்தில் அச்செழுத்து ஒன்று-கையெழுத்து ஒன்று, சிறிய எழுத்தில் அச்சு எழுத்து ஒன்று - கையெழுத்து ஒன்று - என ஒவ்வோர் எழுத்திற்கும் பெரும் பாலும் நான்கு வரிவடிவங்கள் உள்ளன. இதை நோக்கத் தமிழில் எழுத்து மிகக் குறைவே என்பது தெளிவாகும். இங்கே, சீன மொழியின் எழுத்துப் பெருக்கத்தை ஒப்பிட்டு நோக்கின் வியப்பாயிருக்கும்.

தமிழில் நடைமுறை வசதிக்காக உயிர்மெய் எழுத்து படைக்கப்பட்டுள்ளது. முருகு என்னும் மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல்லை, ஆங்கிலத்தில் Muruku என ஆறு எழுத்துகளாலும், Mourourkou எனப் பிரெஞ்சு மொழியில் ஒன்பது எழுத்துகளாலும் எழுதவேண்டும் தமிழை உரோமன் எழுத்தால் எழுதலாம் என்பவர்கள் இதை ஊன்றி நோக்கவேண்டும்.

ஆனால், தட்டச்சு, கணிப்பொறி முதலிய துணைக் கருவிகளின் காரணமாக எழுத்தைக் குறைக்க வேண்டியது தேவையாகிறது, இது, தொப்பிக்கு ஏற்பத் தலையையும், மிதியடிக்கு ஏற்பக் காலையும் செதுக்கிக் கொள்வது போன்றது. தமிழுக்கு ஏற்பப் பொறி அமைக்க முயலின் முடியுமே. (எதையும் செதுக்க வேண்டா)

இப்போதுள்ள வரிவடிவங்கள் சிறார்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் முறையில் உள்ளன. க, கா, கி, கீ, கெள என்னும் வரிசை ன, னா, னி, னி, னெள என்பது வரையும் எளிதில் தன்னில் தானே ஒடும்.

எழுத்துச் சீர்திருத்தத்தில் மொழியியலார் மிகவும் வற்புறுத்துவது ஐ, ஒள என்னும் ஈரெழுத்துகளையும் நீக்கி விடவேண்டும் என்பதே. ஐ என்பதை ‘அய்’ என்னும் ஈரெழுத்துகளாலும், ஒள என்பதை ‘அவ்’ என்னும் ஈரெழுத்துகளாலும் எழுதி, ஐ, ஒள என்னும் இரண்டெழுத்துகளையும் கல்லறைக்கு அனுப்ப முயல்கின்றனர். இவை, வேறு மொழியிலிருந்து வந்ததாகச் சிலர் உளறுவர். தொல்காப்பியத்தின் சிற்சில பகுதிகளைப் பிய்த்துப் பிய்த்துக் கல்லறைக்குள் எறிகின்றனர் சிலர்.

தமிழிலிருந்து வேறு மொழிகட்குப் போன எழுத்துகளும் கலைகளும், அம்மொழிகளிலிருந்து தமிழுக்குத் திரும்ப வந்தன என்று கூறக் கூடாதா? அப்பா தந்த மிட்டாய்களுள் இரண்டை, சிறுவன் மீண்டும் அப்பாவுக்குக் கொடுத்தது போன்றதாகும் இது.

ஐ, ஒள இரண்டனுள் ஒள என்பது புதிய வரிவடிவம் கொண்டது அல்லவே! முன்பே ஒ உள்ளது. ள உள்ளது. இவற்றைப் பொறிகளில் பயன்படுத்தி ஒள எழுத்தைச் சரி கட்டலாமே. மற்றும், அய்யர் என்பதனினும் ஐயர் என்பதில் ஒரு வரிவடிவம் குறைவாயிற்றே.

ஐ, ஒள என்னும் எழுத்துகளை இந்த வரிவடிவத்தில் ஏன் படைத்துச் சேர்த்துக் கொண்டிருக்கவேண்டும்? என்பதையும் ஆராய வேண்டும். ஏதோ பயன் கருதித்தானே அந்தக் காலத்தில் முன்னோர்கள் இந்த ‘ஐ’ எழுத்தை அமைத்துள்ளனர். அந்த எழுத்தை இப்போது நீக்கி விடுவதால் சில புணர்ச்சி விதிகளில் தெளிவின்மை உண்டாகும்; இதற்காகப் புணர்ச்சி விதியில் கை வைக்க வேண்டி நேரும்.

எழுத்தைக் குறைக்கும் முயற்சியில், பண்டைக் காலத்தார் இந்தக் காலத்தார்க்கு இளைத்தவர் அல்லர், நுணா, கனா, புறா என்று இக்காலத்தார் ணா, னா, றா என இரண்டு வரி வடிவம் கொடுப்பதைக் குறைத்து , , என ஒரே வரிவடிவம் பண்டைக் காலத்தவர் கொடுத்துள்ளனர்.

இதுபோலவே, இணை, சுனை, அலை, களை, என இக் காலத்தார் ணை, னை, லை, ளை, என இரண்டு வடிவம் கொடுப்பதைக் குறைத்து , , , என ஒரே வடிவம் பண்டைக் காலத்தார் கொடுத்துள்ளனர். இது எழுத்தைக் குறைக்கவேண்டும் என்னும் எண்ணத்தால் ஏற்பட்ட முயற்சியே. என்பதைச் சிலர் ‘னை’ என எழுதாது, ‘’, என இரண்டையும் ஒன்று போல் எழுதி விடுகின் றனர். சிலர் ‘னன’ என ஒன்று போல் எழுதி விடுகின்றனர். இரண்டும் ஒத்த வரிவடிவம் உடைமையால் நேர்ந்த குறை பாடே இது. இந்தக் குறைபாடு அச்சுக்கோப்பவரிடத்திலும் எதிரொலிக்கிறது. சில நேரங்களில் அவர்கள் ‘’ என்பதை ‘’, எனவும், ‘’ என்பதை ளள எனவும் அச்சுக்கோக் கின்றனர். இதனை அச்சுப் பிழைகள் திருத்துபவர்கள் நன்கறிவர். இந்தக் குழப்பத்தை நீக்குவதற்கே முன்னோர்கள் , , , என்னும் வரி வடிவங்களைப் படைத்தனர். நிற்க —

எழுத்துச் சீர் திருத்தம் பற்றிப் பார்த்தோம். இனிச் சில சொல்லாட்சிகளைப் பார்ப்போம்:

வேண்டாம்

தீய செயல்களைச் செய்ய வேண்டா - என எழுதுவது அந்தக் கால வழக்கு. திருவள்ளுவர்,

“அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டுர்ந்தா னிடை” (37)
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்” (280)

என, வேண்டாம் என்னும் பொருளில் வேண்டா என்னும் சொல்லையே கையாண்டுள்ளனர். வேண்டா என்றிருந்தால் தான் வேண்டு + ஆ எனப் பிரித்து ஏதாவது பொருத்தமான புணர்ச்சி விதி கூறலாம். வேண்டாம் என்றால், வேண்டு+ஆ + ஆம் எனப் பிரிக்க வேண்டும். இங்கே ஆம்' என்பதை என்ன என்று சொல்வது - என்ற குழப்பம் நேரும். ஆம் என்பது தன்மைப் பன்மை வினைமுற்று விகுதியாகும். இங்கே அது பொருந்தாது.

ஆனால், உலகநீதி என்னும் நூலில், உலகநாதபண்டிதர்,

“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்...”

என நூல் முழுவதிலும் வேண்டாம் என்பதையே போட்டு வெளுத்துக் கட்டிவிட்டார். ஆனால், யான், இதுவரையும் வேண்டா என்று எழுதி வருகிறேன். மொழியியலார் சிலர் வேண்டாம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். இதற்கு இலக்கண அமைதி என்ன?

“வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன” (339)

என்பது நன்னூல் பா. இவை ஐந்து பால்களுக்கும் மூன்று இடங்கட்கும் வரும் என்பது இதன் கருத்து. வேண்டும், தகும், படும் என்னும் சொற்களையும் இவ்வாறே கொள்ள லாம் என உரையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவற் றுடன் வேண்டாம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அல்ல

அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று, அவை அல்ல, தான் அல்லேன் - நாங்கள் அல்லேம், நீ அல்லை - நீங்கள் அல்லீர் என்று எழுத வேண்டும் என்பது விதி. ஆனால் மக்கள், அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அது அல்ல, அவை அல்ல, நான் அல்ல, நீ அல்ல - என்றே பெரும்பாலும் எழுதுகின்றனர். அதனால், அல்ல என்பதையும் வேறு, இல்லை, உண்டு முதலியன போல் பொதுவாக வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். இதையும் வேண்டா வெறுப்பகாவாவது ஏற்றுக் கொள்ளலாம்.

எல்லாரும்

நாங்கள் எல்லேமும், நீங்கள் எல்லீரும், அவர்கள் எல்லாரும் என எழுதுவது விதி. ஆனால் மக்கள், நாங்கள் எல்லாரும், நீங்கள் எல்லாரும், அவர்கள் எல்லாரும் என எல்லாரும் என்பதைத் தன்மை - முன்னிலைக்கும் பயன் படுத்துகின்றனர். எனவே, எல்லாரும் என்பதையே மூன்றிடங்கட்கும் கொள்ளலாம் என்பதையும் வேண்டா வெறுப்பாயாவது ஏற்றுக் கொள்ளலாம்.

ஆறாம் வேற்றுமை உருபு

எனது மகன் முருகன், எனது நண்பன் என எழுது கின்றனர் மக்கள். திருமண அழைப்பிதழ்களில் பெரும்பாலும் எனது மகன், எனது மருகர் என்று ‘எனது’ என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. (இது குறித்து வேறொரு நூலிலும் எழுதியுள்ளேன்.)

ஆனால், ‘அது’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபை, எனது வீடு, எனது மாடு எனப் பின்னால் வரும் உடைமைப் பொருள் அஃறிணையாயிருந்தால் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது விதி.

எனது மகன், முருகனது நண்பன் என்பனவற்றை, எனக்கு மகன், முருகனுக்கு நண்பன் என எழுத வேண்டும் என்பது பழைய விதி. எனக்கு என்பதை வேண்டுமானால் விட்டு விடலாம். ஆனால், எனது மகன், முருகனது நண்பன் என எழுதாமல், என் மகன் என உருபு இன்றியே எழுதலாம்; முருகன் நண்பன் அல்லது முருகனின் நண்பன் அல்லது முருகனுடைய நண்பன் என்று எழுதலாம். பெரியவர் ஒருவர் ஒரு திருமண அழைப்பிதழில், எனது மகன் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். உரியவர்கள் அழைப்பிதழின் கைப்படியை என்னிடம் காட்டித் திருத்தித் தரச் சொன்னார்கள். நான் எனது மகன்’ என்பதை என் மகன்' என்று திருத்திக் கொடுத்தேன். இதை எப்படியோ பார்த்துவிட்ட பெரியவர், நான் எனது மகன் என்று எழுதியதை என் மகன் என எந்த மடையன் திருத்தினான் என்று சினம் கொண்டாராம்.

எனது மகன் என்று எழுதாதவர்கள் மடையர்கள் என்ற அளவுக்கு நிலைமை முற்றிவிட்டிருக்கிறது. மொழி யியலார் சிலரும் மடையர்களாதற்கு அஞ்சிப் போலும் - எனது மகன் என்றே எழுதத் தொடங்கி விட்டனர்.

இப்போது தமிழ் இலக்கணத்திலிருந்து ஆங்கில இலக் கணத்திற்குத் தாவுவோம்: மாணவன் கால் என்பதற்கு Student's leg என ஆறாம் வேற்றுமை உருபாகிய ‘s’ என்பதற்கு முன்னால் ‘ ’ ’ என்னும் எழுத்தெச்சக் குறியை (Apostrophe) இடவேண்டும். இது ஒரு மாணவனின் காலுக்கு உரியது. அதாவது, உடையவர் ஒருமையாயிருந்தால் இது தகும்.

மாணவர்களின் கால்கள் என உடையவர் பலராயிருந் தால் - அதாவது பன்மையாயிருப்பின், Students legs என, 's என்னும் பன்மை விகுதிக்குப் பின்னால் என்னும் குறியைப் போட வேண்டும். ‘s’ பெறாத பன்மையில் Children's legs என ‘s’ என்பதன்முன் (’) போட வேண்டும்.

ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கில இலக்கண விதிப் படியே எழுதுபவர்கள், தமிழில் எழுதும்போது மட்டும், எனது மகன் என விதியை மீறி எழுதலாமா?

இது போய்த் தொலைகிறது. எனது மகன் என்று எழுதாதவர்கள் மடையர்களாவதால் விட்டுக் கொடுத்து விடலாம். கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்கார னல்லவா?

இவ்வாறு புதியன புகுதலுக்கும் ஒர் அளவு உண்டு. கண்டபடி மாற்றிக்கொண்டு போனால் மொழியே வேறாகி விடும். மொழியின் விதிகளை இழுத்துப் பிடிக்காமல் அதன் போக்கில் விட்டுவிடின், கரையில்லா ஆற்று வெள்ளம் அதன் போக்கில் சென்று பல கால்களாகப் பிரிந்துவிடுவது போல மொழியும் சிதைந்து பலவாகும்.

உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் தமிழ்ப் பகைவர்கள் சிலர் - தமிழின் தனித்தன்மையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் சிலர், மொழியியல் என்னும் போர்வையில் மறைந்துகொண்டு, தமிழ்மொழியின் பழைய உருவத்தை மறைத்துப் புதுமொழி படைக்க உரிமை யில்லை. இந்த முயற்சியில் இறங்காதீர் என அவர்களின் திருவடிகளை வணங்கி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.

பழமைவாதிகள் எனச் சுட்டப்படும் எங்களிடம் தமிழ் வளர்ச்சி தொடர்பான முயற்சியை விட்டுவிடுங்கள் - வழக்கம்போல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மனப் புண்ணை இப்போது நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். வணக்கம்.