மனப்பூ
மனப்பூ
மேலாண்மை. பொன்னுச்சாமி
கங்கை புத்தக நிலையம்
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர்,
சென்னை — 600 017.
முதற்பதிப்பு : நவம்பர், 1999 இரண்டாம் பதிப்பு : ஜூலை, 2005 மூன்றாம் பதிப்பு : மார்ச் 2007
- விலை: ரூ. 36-00
TITLE : MANAPPOO AUTHOR : MELAANMAI. PONNUCHAMY SUBJECT : Short Stories LANGUAGE : TAMIL EDITION : Third Edition, March 2007 PAGES : 192 PUBLICATION : GANGAI PUTHAKA NILAYAM
13, Deenadayalu Street,
Thyagaraya Nagar,
CHENNAI - 600 017PRICE : Rs. 36 - 00
- Laser Typeset at:
SPM Graphics, CHENNAI-600 116
- Laser Typeset at:
- Printed at: Nathan & Company, Chennai - 42.
சமர்ப்பணம்
இந்திய சுதந்தரப் போராட்டம்
என்னும் மிகப்பெரிய தேசபக்த
வேள்வியில் தம்மையும்
எண்ணெயாக வார்த்துக் கொண்ட
போராளிகளையெல்லாம்
மறக்காமல்—
சுதந்தரப் பொன்விழா கலை
இலக்கிய இரவுகளிலும், பிற மக்கள்
திருவிழாக்களிலும் அந்தப்
போராளிகளை மேடையேற்றி,
பாராட்டி, கௌரவித்து, சிறப்பித்த—
இந்தத் தலைமுறையின்
தேசபக்த இளைஞர்களுக்கும்,
இலக்கிய அமைப்புகளுக்கும். . .
முன்னுரை
காணும்- உணரும்- வாழ்க்கையை வார்த்தைகளில் பதிவு செய்வது மட்டுமா, சிறுகதையின் இயல்பு? அல்ல.
வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் உள்ளும் புறமுமான முழுமையை, உண்மையோடு உணர்த்துகிற தொனியிலேயே வாழ்க்கைத் தீர்வுக்கான வெளிச்சத்தையும் வழங்குவதுதான் சிறுகதைக் கலையின் இயல்பும், பணியும்.
இந்தப் பணி முழுமையாக நிகழ்ந்தேற வேண்டுமானால், சிறுகதையின் வடிவநேர்த்தி மிகமிக முக்கியமானதாகிவிடுகிறது. வடிவநேர்த்திதான் சிறுகதையின் உள்ளடக்க உயிர்ப்பையும் உணர்வுப் பாய்ச்சலையும் நிகழ்த்துகிறது; உயிர்ப்போடு இயங்கி வெற்றிகரமாக்குகிறது.
வாசகரின் உள்ளத்தை எடுத்த எடுப்பில் அள்ளிக் கொண்டோடுவது மொழிநடை. வாசிக்கும் கணத்திலேயே மனசை வசீகரித்து வசப்படுத்துவது கதையின் உத்தி. படைப்பின் சாராம்சத்தையும், சமுதாயநோக்கையும் வாசகப் பண்பாட்டு உணர்வாக்குவது கதைக் கட்டுமானக் கச்சிதமும் வடிவநேர்த்தியும்தான்.
இவை எல்லாவற்றையும்விட மிகமிக முக்கியமானது, படைப்பின் உள்ளடக்க உணர்வு படைப்பாளியின் மனஉண்மையாக இருக்க வேண்டும். அதுதான் படைப்பின் அழகியலாக பூக்கிறது; வாசமும் பேரொளியுமாய்ப் பரவுகிறது.
ஆனந்தவிகடனில் இருவாரச் சிறுகதையாகப் பிரசுரமாகி... அந்த மாதத்தின் தமிழ்ச் சிறுகதைகளிலேயே சிறந்த சிறுகதை என்ற ‘இலக்கியச் சிந்தனை’யின் பரிசையும் பெற்ற “பட்டம்” சிறுகதைக்கு பரந்துபட்ட வாசகத்திரளிடமிருந்தும், அறிவார்ந்த ஆய்வாளர்களிடமிருந்தும் வந்து குவிந்த பாராட்டுகள் (அதில் மிகவும் குறிப்பிடத்தக்க கடிதம், விருதுநகர் மாவட்ட வட்டாட்சியர்களின் மேலாளராக இருக்கிற திரு. சுப்பிரமணியம் என்ற நண்பர் கடிதம்) எனக்கு இதைத்தான் உணர்த்துகிறது.
டவுண்பஸ்ப்பயண மூச்சுத்திணறலும், வெக்கைச் சுவாச மோதலும், இடிபடலும், மிதிபடலும் ஏறக்குறைய சகல மக்களின் அனுபவமாகி... அடிமன உணர்வாகிக் கிடக்கிறது. எனக்கு அது நிறைய்ய.
அந்தக் களத்திலேயே அந்த அனுபவ உணர்வுண்மையிலேயே நான் கண்டுணர்ந்த சமுதாய நடப்புப் புதிய சலனத்தை இயங்கவைப்பது... எனக்குச் சுவாசத்தைப்போல இயல்பாக இருந்தது.
பழம்பெரும் நாடு; ஞானம் செறிந்த நாடு; உலகுக்கெல்லாம் நாகரீகமும் வாழும் முறைமையும் கற்றுத்தந்த நாடு. இப்படி இந்தியாவுக்கு எத்தனையோ தனித்த பெருமைகள் இருப்பதைப்போலவே, நம் இந்தியாவுக்கே உரித்தான இழிவும் உண்டு. அதுதான் சாதீயம்.
சாதியில் உயர்வு- தாழ்வு சொல்கிற சமூக அநீதியும், சாதீயப்பகைமையால் மனிதன் பிளவுண்டு வெட்டிக்கொண்டு சாவதும், சாகடிப்பதுவும் என்பது இன்றளவும் நீடிக்கிற தலைகுனிவு.
‘நிலமான்ய முறைமையை அடித்து நொறுக்காமலேயே... தொழில் முதலாளீய முறைமையின் முகிழ்வு’ என்கிற வரலாற்றுப் பிறழ்வு, இந்திய மண்ணில் சாதீயப் பிளவுகளையும், சாதீயப் பாகுபாடுகளையும் இந்த ஜனநாயகக் காலத்திலுதித்த வைகுந்த ஸ்வாமிகள் என்ற முத்துக்குட்டி ஸ்வாமிகள், வள்ளலார், விவேகாநந்தர், வைத்தியநாத அய்யர் போன்ற ஆன்மீகச் சுடர்கள் மட்டுமல்ல... ஈரோட்டு நாயகர் ஈ.வே.ரா. பெரியார், சிங்காரவேலர் போன்ற நாத்திகர்களும், பொதுவுடைமை இயக்கத் தலைவர்களும், வள்ளுவர், கோபால கிருஷ்ணபாரதி, மகாகவி பாரதி, பாரதிதாசன், தமிழ்ஒளி போன்ற கவிஞர் பரம்பரையும் சாதீயப் பாகுபாடு எனும் சமூக அநீதிக்கெதிராக போர்க்குரல் கொடுத்துள்ளனர். துணிச்சலாகப் போராடியுள்ளனர். சிலபல உரிமைகளைப் பெற்றுள்ளனர். சில பல நல்ல விளைவுகளை நிகழ்த்தியிருக்கின்றனர்.
ஆயினும்-
சாதீயப்பேதம் எனும் சமூகநோய் இன்றைய பேனாக்களுக்கும் பெரும் சவாலாகவே இருக்கின்றது. அதில் என் பேனாவும் அந்தச் சவாலை எதிர்கொள்கிறது.
சாதீயப் பகைமையின்மீதும், சாதீயப் பாகுபாட்டின் மீதும் என் எழுத்துகள் சமரசமற்ற பகைமை கொண்டிருக்கிறது. சாதீயக் கலவரங்களும், தீண்டாமையும் மலிந்த இந்தக் கரிசல் மண்ணின் வெக்கைமிகுந்த வாழ்க்கை நிகழ்வுகள் என் கதைக் கருக்களை நிர்ணயம் செய்கின்றன. ‘எழுது, எழுது’ என்று முன்வந்து நிற்கிற அந்த அழுக்குத் திரளை அசூயையுடன் பார்க்கிறேன்.
என் கதைகளின் களமும், நான் வாழ்கிற கந்தகபூமியும் விந்தைமிக்க தனித்தன்மை வாய்ந்தது.
காய்ந்தால் ஒரேயடியாகக் காய்ந்து, வறட்சியால் வாழ்வை எரிக்கும்; பெய்தால் ஒரேயடியாகப் பெய்து, கண்மாய்கள் உடைந்து, காடுகரைகள் நாசமாகி, மாதக் கணக்கில் வெள்ளம் பாய்ந்து பெரும் சீரழிவாகும். ஆம், காய்ந்தும் கெடுக்கும்; பெய்தும் கெடுக்கும்.
பெய்து கெடுக்கிற இயற்கையின் உற்பாதங்களை மானுட சக்தி எதிர்கொண்டு, தைர்யமாகச் சமாளித்து, போராடிப் போராடியே முன்னேறி வருகிறது என்பதுவே மனிதகுல வரலாறு.
இயற்கையின் உற்பாதங்களை எதிர்த்துப் போராடுகிற மனிதகுலம், இயற்கையை உயிரினும் ஆழத்தில் வைத்து நேசிக்கவும் செய்கிறது. மோதலும் நேசமும் இயற்கையால் நிகழ்கின்றன.
இயற்கையின் ஆதாரசக்தியை ஆக்கபூர்வமாக நேசித்து பயன்பாட்டு விஷயமாக்கிக் கொள்கிற அதேசமயம், அதன் குரூர நர்த்தனங்களை- பாதகத்தன்மைகளை- எதிர்த்து முறியடித்து தன்னைக் காத்துக் கொள்ளவும் செய்கிறது, மனிதகுலம்.
தைமாதத்துச் சூரியனை வணங்குவதும், சூரியப்பகுதிகளான தீபவரிசைகளின் பேரழகைக் கும்பிடுவதும், பசிய பயிர்களை- முற்றிய கதிர்க்கொத்துகளை ஆராதனை செய்வதும் வழிபாட்டு இரங்கலல்ல; ‘எனக்கு அதைத்தா, இதைத் தா’ என்று இறைஞ்சுகிற சடங்காச்சாரமுமல்ல. இயற்கையுடனான மனிதனின் இயல்பான உறவின் வெளியடையாளங்கள்தாம், அவை.
இயற்கையுடனான மனித உறவின் வாசம் என்பது தொப்பூள்கொடி உறவு போன்ற ஆதித்தன்மையும், நிஜத்தன்மையும் கொண்டது; தாய்- மகனுக்குரிய பாசப்பந்தம் அது.அந்த உறவு கடந்தகாலமல்ல; நிகழ்காலம் மட்டுமல்ல; இனிவரும் எல்லாக் காலங்களுக்கும் சத்தியமானது. நித்தியமானது.
கணினியுகத்திலும் வேப்பமரத்துக் குளுமை மானிடருக்கு வேண்டும். ஏவுகணை காலத்திலும் சூரியவெளிச்சக் கதகதப்பில்தான் உயிர்ச்சூடு வளர்க்க வேண்டும். செயற்கைக் கோள் யுகத்தின் விரல்நுனியில் உலகம் விரிந்தாலும், தழைகள் வருடிவருகிற மென்காற்றில்தான் உயிர் துடித்திருக்க முடியும்.
பஞ்சபூதச் சதைவடிவமே மானுடன்.
இப்படி டவுன்பஸ்பயண நெருக்கடி என்கிற துகளுக்குள்ளும், இயற்கையுடனான மானுடபந்தம் என்கிற பிரபஞ்சப் பெருவெளியிலுமாகப் பயணமாகிற என் கதைகள், கரிசல் மண்ணின் விளைச்சல்தாம். கரிசல் மண்ணைப் போல கறுப்புதான். எளிமைமிக்க வெக்கைதாம்.
வாழ்க்கைப்பரப்பின் அகலப்பிரம்மாண்டத்தையும், நுட்ப உணர்வின் அணுத்தனமான துல்லியத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதில்தான், என் கதைகளின் பலம் அடங்கியிருக்கிறது.
மானுடநேயம் மிகுந்த அறிவார்ந்த விமர்சகர்களுடனும், வாழ்க்கையை அதன் தளத்திலேயே நேர்கொண்டு கட்டிப்புரண்டு, நிறம் மாறி, நிறம் மாற்றி இயங்கிக்கொண்டிருக்கிற சராசரி மனிதர்களுடனும் உறவு கொண்டுவிடுகிற என் கதைகளின் தனிச்சிறப்புக்குக் காரணம், அவற்றின் உறைந்த நிலையிலான யதார்த்த உள்ளடக்கமும், யதார்த்த வடிவமும்தான்.
சமூகவாழ்வில் உறைந்து இயங்குகிற சகல மனிதர்களின் அனுபவரீதியான உணர்வுப் பகிர்வுகளின் உண்மைத் தன்மை மிக்கதாக இருக்கிற அதன் எளிமையான யதார்த்த இயல்பு.
ஆனந்தவிகடன், செம்மலர், ஓம்சக்தி, குங்குமம், தினகரன், தினபூமி, தீக்கதிர், இந்தியாடுடே, இதயம் பேசுகிறது போன்ற பிரபலமான- ஆரோக்கியமான- வார, மாத, தினசரி இதழ்களில் தனித்தனியாக வெவ்வேறு காலத்தில் பிரசுரமான கதைகள், ஒரே தொகுப்பாக அணிவகுத்து உங்கள் கையில் நிற்கின்றன.
பிரசுரித்து கௌரவித்த அந்த இதழ்களின் ஆசிரியர்களுக்கும், தொகுப்பாக்கி நூலாக வெளியிட முன்வந்த பாரம்பர்யப் பெருமைமிக்க கங்கை புத்தக நிலைய உரிமையாளர் அவர்களுக்கும், எனது நூல்களை வாங்கிப் படித்து ஆதரவுக் கரம் நீட்டுகிற தமிழ் வாசகர்களுக்கும்,
கதைகள் பிரசுரமான இதழ்களைத் தேடி எடுப்பதில் பெரிய உதவிகள் செய்த திருவேங்கடம் நூலகர் திரு. மாயாண்டி, மதுரை நூலகரும், எழுத்தாளருமான திரு. பாண்டுரங்கன், தோழன் ஹோ. சி. மின் ஆகியோருக்கும்,
சிறுகதைகள் வந்த இதழ்களை பத்திரப்படுத்தி, கத்தரித்து, ஒழுங்குசெய்து, தொகுத்துதவிய என் மகள் வைகறைச்செல்விக்கும், எனக்கு ஆதாரபலமாகவும் ஆணிவேராகவும் திகழ்கிற என் தம்பி கரிகாலனுக்கும்-
என் நன்றிகள் என்றென்றும் உரித்தாகும்.
இதோ... சிறுகதைத் தொகுப்பு உங்கள் கையில். வாசித்து முடித்துவிட்டு மௌனத்தில் உறைந்துவிட வேண்டாம். வாசித்த மனசில் பூத்த உணர்வுகளை வார்த்தைகளாக்கி ஓர் அஞ்சலட்டையில் எழுதியனுப்புங்கள்.
நீங்கள் தருகிற முள்குத்தல் போன்ற விமர்சனமும் என்னை மேலும் நெறிப்படுத்தும்; பயணவேகத்தை ஒழுங்குபடுத்தும்;
நீங்கள் வீசியெறிகிற பூக்கள் போன்ற பாராட்டு வார்த்தைகளும் என்னைப் பரவசப்படுத்தும்; என் பேனாவுக்கு இன்னும் மையூற்றும்.
இரண்டுமே சமூக அக்கறைமிக்க இலக்கியத்துக்கு நல்லது செய்யும்.
நன்றிகள்!
மேலாண்மறைநாடு
626127
விருதுநகர் மாவட்டம்
என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி
சிபிகள் | சிறுகதைத் தொகுப்பு | |
பூக்காத மாலை | ❠ (அனந்தாச்சாரியார் அறக்கட்டளை விருது) | |
மானுடப் பிரவாகம் | ❠ | |
பூச்சுமை | ❠ (கோவை லில்லி தேவசிகாமணி இலக்கிய விருது) | |
தாய்மதி | ❠ | |
காகிதம் | ❠ | |
கணக்கு | ❠ | |
விரல் | ❠ | |
உயிர்க்காற்று | ❠(ஸ்டேட் வங்கி விருது) | |
என் கனா | ❠ | |
தழும்பு | குறுநாவல் தொகுப்பு | |
கோடுகள் | ❠ | |
ஈஸ்வர | ❠ | |
முற்றுகை | நாவல் (கல்கி பொன்விழா நாவல் போட்டியில் முதற் பரிசு) | |
இனி | ❠ | |
அச்சமே நரகம் | ❠ | |
ஊர் மண் | ❠ | |
ஆகாயச் சிறகுகள் | ❠ | |
முழு நிலா | ❠ | |
சிறுகதை படைப்பின் உள்விவகாரம் | (இலக்கியக் கட்டுரை நூல்) |
உள்ளடக்கம்
1. | 11 |
2. | 33 |
3. | 51 |
4. | 63 |
5. | 81 |
6. | 102 |
7. | 124 |
8. | 140 |
9. | 154 |
10. | 170 |
11. | 177 |