உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13/005

விக்கிமூலம் இலிருந்து

[1]இசைக்கலை

தெள்ளாறெறிந்த நந்திவர்மன் காலத்திலே இசைக்கலை தமிழ்நாட்டிலே நன்கு பரவியிருந்தது. நாட்டிலே இசைக்கலைக்கு மதிப்பு ஏற்பட்டிருந்தபடியினால், இசைப்புலவர்கள் பலர் தோன்றியிருந்தனர். கோயில்களிலே இசைப்பாடல்கள் பாடப்பட்டன. அக்காலத்திலிருந்த இசைப் புலவர்களின் பட்டியல் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனாலும், மூன்று சிறந்த இகைக்கலைஞர்கள் இருந்தார்கள் என்பது இலக்கியங்களினால் தெரிகிறது. அவ்விசைப் புலவர்கள் யார் என்றால், சுந்தரமூர்த்தி நாயனார், பாணபத்திரர், ஏமநாதர் என்பவர்கள்.

சுந்தரர்

சுந்தரமூர்த்தி நாயனார் சிறந்த சிவபத்கராக இருந்ததோடு, உயர்ந்த இயற்றமிழ்ப் புலவராகவும் இசைத்தமிழ் வாணராகவும் விளங்கினார். அவர் பாடிய தேவாரப் பாடல்கள் இசைப்பாடல்களே. இந்தளம், தக்கராகம், நட்டராகம், கொல்லி, கொல்லிக்கௌவாணம், பழம்பஞ்சுரம், தக்கேசி. காந்தாரம், பியந்தைக் காந்தாரம், காந்தார பஞ்சமம், நட்டபாடை, புறநீர்மை, சீகாமரம், குறிஞ்சி, கவுசிகம், செந்துருத்தி, பஞ்சமம் முதலிய பண்களில் இவருடைய தேவாரப் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடவுளே இசையுருவாக இருக்கிறார் என்பதும், அவர் சையைக் கேட்பதில் விருப்பமுள்ளவர் என்பதும் பெரியோர் கொள்கை. இதனைச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கூறுகிறார்.

“ஏழிசையாய் இசைப் பயனாய்”1

என்றும்,


“பண்ணுளீராய்ப் பாட்டுமானீர்
     பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்”2

என்றும்,

“பண்ணார் இன்தமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே”3

என்றும்,

பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற்சுவை யொப்பாய்”4

என்றும் அவர் கூறியிருப்பது காண்க. மேலும்,

“தக்கை தண்ணுமை தாளம் வீணை
      தருணிச் சங்கிளைச் சல்லரி
கொக்ரை குடழுழவி னோடிசை
      கூடப்பாடி நின்றாடுவீர்”

என்றும்,

“இருந்து தீந்தமிழோடிசை கேட்கும்
      இச்சையால் காசு நித்தம் நல்கினீர்
அருந்தண்வீழி கொண்டீர்
      அடியேற்கும் அருளிதிரே”
5

என்றும்,

“ஏழிசை ஏழ்நரம்பி னோசையை ஆரூர்புக்
கேழுலகாளியை நானென்று கொலெய்துவதே”
6

என்றும்,

“விட்டிசைப்பன கொக்கரை கொடுகொட்டித் தத்தளகம்
கொட்டிப் பாடுமித் துந்துமியொடு குடமுழா நீர்மகிழ்வீர்”
7

என்றும் அவர் கூறுவது காண்க.

மேலும், அவர் காலத்திலேயே கோயில்களில் இசைப் பாடல் பாடி நடனம் ஆடும் வழக்கமும் இருந்ததை, அவருடைய தேவாரப்பாடல்களில் காணலாம். வெஞ்சமாகக் கூடல் கோயிலைக் கூறும் போது,

“பாடல் முழவுங் குழலும் இயம்பப்
    பணைத்தோளியர் பாடலோ டாடலறா”

வெஞ்சமாக் கூடல் என்கிறார்.

“பண்ணார் இசைகள் அதுகொண்டு
     பலரும் ஏத்தும் பழையனூர்”

என்கிறார்.

“பண்ணின் தமிழிசை பாடலின் பழவேய் முழவதிரக்
     கிண்ணென்று இசைமுரலுந் திருக்கேதாரம்”

என்று கூறுகிறார்.

“பண்ணார் மொழிப் பாவையார் ஆடுந்துறையூர்”

என்றும் கூறுகிறார்.

இவர்காலத்தில் கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்த்துவதற்கும் திருத்தொண்டுகள் செய்வதற்கும் உருத்திர கணிகையர் இருந்தார்கள் என்பதைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றிலிருந்தும் தெரிகிறது. தமிழ்நாட்டுத் திருக்கோயில்களுக்குச் சென்று இயற்றமிழோடு இசைத் தமிழையும் கலந்து மனமுருகப் பாடிப் பக்தி செலுத்தினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

பாணபத்திரர், ஏமநாதர்

அக்காலத்தில் இருந்த இன்னொரு இசைப் புலவர் பத்திரர் என்பவர். இசைக்கலையில் வல்லவர்களான பாணர் இனத்தைச் சேர்ந்தவராகையினாலே இவரைப் பாணபத்திரர் என்றும் கூறுவர். பாண்டிநாட்டிலே இருந்த இவர், வரகுண பாண்டியன் அவைக்களத்தில் இசைப் புலவராக இருந்தார். இந்த இசைக்கலைஞர் சொக்கப் பெருமானிடம் பக்தியுடையவர். அக்காலத்திலே, பாண்டி நாட்டிற்கு வடக்கேயுள்ள சோழநாட்டிலே இருந்த பேர் போன இசைப்புலவர் ஏமநாதர் என்பவர். இவருக்கு இசைவல்லான் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு.8 இவரும் பாணர் இனத்தைச் சேர்ந்தவரே.

இசைவல்லான் ஏமநாதன், பாண்டிநாட்டிற்கு வந்து வரகுணபாண்டியனைக் கண்டு இசைபாடி பரிசுபெற்றார். அன்றியும், இசைக்கலையில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர் என்றும் பெருமிதத்துடன் பாண்டியனிடம் கூறினார். பாண்டியன், தன்னுடைய இசைப்புலவரான பாணபத்திரரை அழைத்து, ஏமநாதரை இசையில் வெல்லக் கூடுமா என்று கேட்டான். பாணபத்திரர், ஏமநாதரை இசையில் வெல்வேன் என்று கூற, பாண்டியன் இசையரங்கிற்கு நாள் குறித்தான்.

“சுந்தர அணிஅணிந்து தொகுமுடிச் சுற்றும் சுற்றிச்
சுந்தரப் பொட்டும் இட்டுச் சிறந்த குப்பாயம் இட்டுச்

சந்தனம் இட்டு வீணை தண்டுயாழ் கையில் வாங்கி
வந்த தந்திரி திருத்திப் பாடினார் மயங்க எங்கும்.”

ஏமநாதருடைய சீடர்கள் மதுரை வீதிகளில் சென்று இனிய இசை பாடி, தமது புலமையைக் காட்டினார்கள். அவர்கள் பாடிய இசையைக் கேட்டுப் பாணபத்திரர் பெரிதும் வியந்தார். வியந்து மனத்தில் அச்சங் கொண்டார். “சீடர்களின் இசைப்பாடல் இவ்வளவு சிறந்ததாக இருக்கிறதே. ஏமநாதரின் இசைக் கலை எவ்வளவு சிறந்ததாக இருக்கும். அவரை இசையில் வெல்வது எவ்வாறு” என்றுன்னி ஏங்கினார். தாம் நாள்தோறும் இசைபாடி வழிபடும் சொக்கப் பெருமானிடம் சென்று தமக்கு இசைப் போட்டியில் வெற்றி அருள வேண்டும் என்று வேண்டினார்.

இசைப் போட்டி நிகழ்வதற்கு முந்திய நாள், ஏமநாதர் தங்கியிருந்த வீதிவழியே விறகு வெட்டி யொருவன் வந்தான். அப்போது மாலை நேரம். வந்த விறகு வெட்டி, விறகுச் சுமையை ஏமநாதர் தங்கியிருந்த கூட்டுத் திண்ணையின் மேல் வைத்துவிட்டுச் சற்று இளைப்பாறினான். சற்று இளைப்பாறிய பின்னர், மெல்ல ஓர் இசை பாடினான்.

“ஆதாரமாகி நின்றான் அரையி ருட்போதில் மெல்லச்
சாதாரி என்னும் கானம் பாடினான் தரணியுய்ய”

அவன் பாடியது சாதாரிப் பண். அதாவது முல்லைப் பண். இக்காலத்தில் தேவகாந்தாரம் என்று கூறப்படுகிற இராகம். விறகு வெட்டி பாடிய முல்லைப் பண் மிகச் சிறப்பாக இருந்தது. அதைக் கேட்டுக் கொண்டு வீட்டிற்குள்ளிருந்த இசை வல்லானாகிய ஏமநாதரே. வியப்படைந்தார். அவர் வெளியே வந்து விறகு வெட்டியைக் கண்டபோது மேலும் வியப்படைந்தார். இவனா இவ்வளவு நன்றாகச் சாதாரி பாடினான்! அவனை நோக்கி “நீ யார்? எங்கு வந்தாய்?” என்று வினவினார்.

“ஐயா! நான் ஏழை. பாணபத்திரரிடம் சிறிது காலம் இசை பயின்றேன். எனக்கு இசை வராது என்ற என்னைத் தள்ளி விட்டார். நான் விறகு விற்று வயிறு பிழைக்கிறேன்” என்று கூறினான் விறகு வெட்டி.

“நீ இப்பொழுது பாடினாயே, அந்த இசையை இன்னொரு முறை பாடு” என்றார் ஏமநாதர்.

விறகு வெட்டி பாடினான். உளம் இனிக்கச் செவி இனிக்க இசைத்திறம் அமையப் பாடிய சாதாரிப் பண்ணைக் கேட்ட ஏமநாதர் செயலற்று நின்றார். பிறகு உணர்வு பெற்று வீட்டுக்குள் நுழைந்தார்.

வீட்டுக்குள் சென்ற ஏமநாதர் தமக்குள் எண்ணினார். பாணபத்திரரால் புறக்கணிக்கப்பட்ட சீடன் விறகு விற்றுப் பிழைப்பவன் - இவ்வாறு உயர்ந்த இசைப்புலமை பெற்றிருந்தால், பாணபத்திரர் இசைப்புலமை எப்படி இருக்கும்! அவரை இசை வாதில் வெல்வது எப்படி முடியும்? என்று எண்ணினார். அன்றிரவு ஏமநாதர், தமது சீடர்களுடனும் பரிவாரங்களுடனும் ஒருவருக்கும் சொல்லாமல் ஊரை விட்டுப் போய்விட்டார்.

அடுத்த நாள் பாண்டியன் அவையில் மக்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர், பாணபத்திரருக்கும் ஏமநாதருக்கும் நடைபெறப்போகும் இசை வெற்றியைக் காண்பதற்காக. குறித்த நேரத்தில் பாணபத்திரர் வந்து சேர்ந்தார். ஏமநாதர் வரவில்லை. நேரஞ் சென்றது. இன்னும் வரவில்லை. ஆட்கள் அழைத்துவரச் சென்றார்கள். ஏமநாதர் வீட்டில் ஒருவரும் இலர். நகரமெங்கும் தேடினார்கள். ஏமநாதர் காணப்படவில்லை. “நேற்று மாலை ஒரு விறகு வெட்டி வந்து ஏமநாதர் வீட்டுத் திண்ணைமேல் இளைப்பாறினான். அவன் அற்புதமாக ஒரு சாதாரி இராகம் பாடினான். ஏமநாதர் இன்னொருமுறை அந்த இசையைப் பாடும்படி கேட்டார். அவன் மறு முறையும் மிக நன்றாகப் பாடினான். அவன் பாணபத்திரருடைய சீடன் என்று சொல்லிக்கொண்டான்” என்று அத்தெருவிலிருந்தவர் கூறினார்கள்.

பாண்டியன் பாணபத்திரரை நோக்கினான். பாணபத்திரர் வணங்கி, “அரசே! விறகு விற்கும் சீடர் எனக்கு ஒருவரும் இலர். சொக்கப் பெருமானிடம் முறையிட்டு, ஏமநாதரை வெற்றிகொள்ள எனக்கு ஆற்றல் தந்தருளும்படி வேண்டினேன். எனக்கு வேறு ஒன்றும் தெரியாது” என்று கூறினார்.

அவையிலிருந்தவர் அனைவரும் வியப்படைந்தார்கள். பாணபத்திரருக்காகச் சொக்கப் பெருமானே விறகு வெட்டியாக வந்து முல்லைப் பண்பாடி ஏமநாதரை விரட்டி விட்டார் என்று சொல்லி வியந்தார்கள். பாண்டியன் பாணபத்திரருக்குச் சிறப்புச் செய்தான். பெரும்பொருள் பரிசு அளித்து, அவரை யானைமேல் ஏற்றி நகர்வலம் செய்வித்துப் பாராட்டினான். “நீர் சிறந்த சிவபக்தர். இனி நீர் எமது அவைப் புலவர் அல்லீர். எம்பெருமான் சொக்கநாதருடைய இசைப் புலவர் ஆவீர்” என்று கூறி அனுப்பினான்.

அன்று முதல், பாணபத்திரர் பாண்டியன் சபைக்குச் செல்லாமல், சொக்கப் பெருமான் கோயிலில் சென்று நாள் தோறும் பக்தியோடு சொக்கப் பெருமான் மீது இசை பாடினார். அரசர் அளித்து வந்த ஊதியம் நிறுத்தப்பட்டபடியால், அவர் வறுமை யடைந்தார். நாள் செல்லச் செல்ல வறுமைத் துன்பம் அவரை வாட்டியது. ஆயினும், ஆலயத்தில் நாள் தவறாமல் இசை பாடிக்கொண்டிருந்தார். இவருடைய வறுமைத் துன்பத்தை யறிந்த சிவபெருமான், சிறந்த சிவபக்தரும் சேரநாட்டு மன்னரும் ஆகிய சேரமான் பெருமாளுக்குத் திருமுகம் ஒன்று எழுதிக் கொடுத்துப் பாணபத்திரரைச் சேரமானிடம் அனுப்பினார்.

சொக்கப் பெருமான் அனுப்பிய திருமுகத்தைக் கண்டு9 சிவபக்தராகிய சேரமான் பெருமாள் இசைப்புலவருக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார். அப்பெரும் பொருளைக் கொண்டு பாணபத்திரர் வறுமை நீங்கிச் சுகமாக வாழ்ந்து வந்தார். ஆனால், சொக்கநாதர் ஆலயத்தில் யாழ்வாசித்து இசைபாடும் திருப்பணியை விடாமல் செய்து வந்தார்.

ஒரு சமயம் பெருமழை பெய்தது. பூமி குளிர்ந்தது. சில்லென்று காற்றுடன் விடா மழை பெய்தது. பாணபத்திரர் அப்போதும் சொக்கர் ஆலயத்தில் யாழ்வாசித்துப் பக்தியோடு இசை பாடினார். ஈரத்தில் நின்றிருந்தபடியால் அவர் உடல் சில்லிட்டுச் சிலிர்த்தது. யாழ் நரம்புகள் வீக்கழிந்தன. அப்போது, “பத்திரனுக்குப் பலகை இடுக” என்று ஒரு குரல் கேட்டது. அங்கிருந்தவர் அவ்வாறே பலகை இட்டனர். பத்திரர் பலகைமேல் நின்று இசை பாடினார். பாணபத்திரருடைய மனைவியாரும் இசைக் கலையில் தேர்ந்தவர் என்பதை இசைவாது வென்ற திருவிளையாடலிலிருந் அறிகிறோம்.

இந்த இசைச் செய்திகளைத் திருவிளையாடற் புராணங்களிலும் பெரிய புராணத்திலும் காணலாம். பெரும் பற்றப் புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில், சாதாரி பாடின திருவிளையாடல், திருமுகங்கொடுத்த திருவிளையாடல், பலகையிட்ட திருவிளையாடல் என்னும் மூன்று அதிகாரங்களிலும், பரஞ் சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் விறகு விற்ற படலம், திருமுகங் கொடுத்த படலம், பலகையிட்ட படலம் என்னும் மூன்று படலங்களிலும் இவ்வரலாறு கூறப்படுகிறது. பெரிய புராணத்தில் கழறிற்றறிவார் புராணம் என்னும் சேரமான் பெருமாள் நாயனார் புராணம் 26 முதல் 39-ஆவது செய்யுள் வரையில், சொக்கர் சேரமானுக்குத் திருமுகம் கொடுத்த வரலாறு கூறப்படுகிறது.

அடிக்குறிப்புகள்

1.திருவாரூர் 10.

2. திருவெண்காடு 4.

3. திருமழபாடி 5.

4. திருக்குறுகாவூர் 6.

5. திருவீழிமிழலை 8.

6. திருவாரூர் 6.

7. திருமுருகன் பூண்டி 6.

8. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம் இவரை ஏமநாதன் என்று கூறுகிறது. பெரும்பற்றப் புலியூர்நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற்புராணம் இவரை இசை வல்லான் என்று கூறுகிறது.

9. சிவபெருமான் அருளிய திருமுகப்பாசுரத்தை இன்னூலின் தொடர்பில் காண்க.

  1. மூன்றாம் நந்திவர்மன் (1958) நூலில் இடம் பெற்ற கட்டுரை.