உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17/001

விக்கிமூலம் இலிருந்து



தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

குறிப்பு: மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் கிறித்தவமும் தமிழும் (1936) என்னும் தலைப்பில் எழுதிய நூல்.


நினைவு

எனக்குக் கல்வியறிவைப் புகட்டித் தமிழ்ச்சுவை ஊட்டியருளிய என் அருமைத் தமையனார் மயிலை சீனி. கோவிந்தராசனார் அவர்களின் நினைவு மலராக இந்நூல் இலங்குக.

- நூலாசிரியர்.



முன்னுரை

(முதற்பதிப்பு)

தமிழ்மொழி வளர்ச்சிபெற்ற முழு வரலாற்றையும் அறிய வேண்டும் என்னும் ஆர்வம் எனக்கு நெடுநாளாக உண்டு. ஆகையால், சமயம் வாய்த்தபோதெல்லாம் அத்துறையில் ஆராய்ச்சி செய்துவந்தேன். இவ்வாறிருக்குங்கால், 1934 -ஆம் ஆண்டின் கடைசியில், வித்துவான் திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள், M.A., B.L., சென்னையிற் கூட்டிய தமிழ் மாநாட்டில், சென்னைக் கிறித்தவக் கல்லூரித் தமிழ்ப்பேராசிரியராகிய திரு. ச.த. சற்குணர் அவர்கள், B.A., “கிறித்துவமும் தமிழும்” என்னும் பொருள்பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அதனைக் கேட்டபோது, தமிழ்மொழிச் சரித்திர ஆராய்ச்சியில் கருத்தைச் செலுத்திநின்ற எனக்குப் புதியதோர் ஊக்கம் உண்டாயிற்று. கிறித்துவ சமயத்தவரால் தமிழ்மொழி அடைந்த நன்மைகளைக் கூறும் தமிழ்நூல் இதுகாறும் இல்லாமையால், முதலில் இதனை எழுதுவதுதான் நலம் எனக்கருதி, இத்துறையில் என் கருத்தைச் செலுத்தி ஆராய்ச்சிசெய்யத் தொடங்கினேன். இதனிடையில் 1935 -ஆம் ஆண்டின் கடைசியில், இலங்கை திருமிகு. விபுலாநந்த சுவாமிகள், B.Sc., (London), சென்னைக்கு வந்திருந்தபொழுது, அவர்களிடம் எனது ஆராய்ச்சியைத் தெரிவித்தேன். சுவாமிகள், இது அவசியம் எழுதவேண்டிய பகுதிதான் என்று தெரிவித்து, இவ்வாராய்ச்சி சம்பந்தமாகத் தங்கள் கருத்துக்களையும் தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். இதுவே இப்புத்தகம் எழுதப்பட்டதன் வரலாறு. இந்நூலிலுள்ள குற்றங்களை நீக்கிக் குணங்களையே கொள்ளும்படி பெரியோரை வேண்டுகிறேன்.

இந்நூலுக்கு முகவுரை எழுதியருளுமாறு இலங்கை திருமிகு. விபுலாநந்த சுவாமிகளைக் கேட்டுக் கொண்டேன். சுவாமிகள் அன்புடன் எழுதியருளினார்கள். இதற்கிடையில் புதிதொரு யோசனை தோன்றியது. தமிழ் இலங்கைக்கும் தமிழ் இந்தியாவுக்கும் தமிழ்த் தலைமை பூண்டு விளங்கும் திருமிகு. சுவாமிகள் அருளிய முகவுரை யொன்றே சாலும் என்றாலும், இந்நூல் இந்து உலகத்துக்கு மட்டுமன்றி, கிறித்துவ உலகத்துக்கும் உரியதாகலின், கிறித்துவத் தமிழறிஞரின் முகவுரையும் இந்நூலுக்கு அவசியம் எனத் தோன்றியது. கிறித்துவ மதத்தில் கத்தோலிக், புரொட்டஸ்டெண்டு என்னு இருபிரிவுகள் இருப்பதால், அவ்விரு பிரிவுகளின் சார்பாக இரண்டு தமிழ்ப் பெரியோர்களை முகவுரை எழுதியுதவுமாறு கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளுக்கிணங்கி, மேல் நாட்டு மொழிகள் கீழ்நாட்டு மொழிகள் பலவற்றில் புலமை வாய்ந்து, தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி செய்துவந்த பெரியார், யாழ்ப்பாணத்து நல்லூர் உயர்திரு. சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள், O.M.I., ஒரு நூன்முகம் எழுதி அருளினார்கள். அவ்வாறே, எனது வேண்டுகோளுக்கிணங்கி, தங்கள் உத்தியோக காலம் போக மிகுதியுள்ள காலமெல்லாம், தனிப்பட்ட முறையில், யாதொரு ஊதியமும் கருதாமல் மாணவர்களுக்குத் தமிழ் நூல்களைப் பாடஞ்சொல்லி, அவர்களைச் சிறந்த தமிழ்ப்புலவராக விளங்கச் செய்துவருகிற நற்குணப் பெரியார், சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. ச.த. சற்குணர் அவர்கள், B.A., ஆங்கில முகவுரை எழுதியருளினார்கள். ஆகவே, இந்நூல் மூன்று முகவுரைகளுடன் வெசளிவருகிறது. இந்த முகவுரைகளை எழுதியருளிய மூன்று பெரியார்களுக்கும் எனது மனமார்ந்த வந்தனம் உரியதாகும்.

இந்நூலிற் சேர்ப்பதற்காக, திரு. வ. சுப்பையா பிள்ளையவர்கள், டாக்டர் ஜி.யூ. போப் ஐயர், டாக்டர் கால்ட்வெல் ஐயர், படங்களைக் கொடுத்துதவியதற்காக அவர்களுக்கும் எனது வந்தனம் உரியதாகும்.

மயிலாப்பூர்,

சென்னை, 24-11-36. மயிலை சீனி. வேங்கடசாமி