உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/001

விக்கிமூலம் இலிருந்து



பதிப்பு-மொழிபெயர்ப்பு-உரை

நேமிநாதம்

குறிப்பு : மயிலை நேமிநாதர் பதிகம். (மயிலாப்பூர் வரலாறும் சேர்ந்தது) 1955.

மயிலாப்பூர் நேமிநாதர் கோயில்

மயிலாப்பூர், சென்னைப் பட்டினத்தின் தெற்கே அதன் ஒரு பகுதியாக இருக்கிறது. சென்னைப் பட்டினம் உண்டாகி முந்நூறு ஆண்டுகள்தானே ஆகிறது; ஆகவே மயிலாப்பூரும் முந்நூறு ண்டுகளுக்கு முன்புதானே தோன்றியிருக்க வேண்டும் என்று சிலர் கருதக்கூடும். அப்படிக் கருதுவது தவறு. மயிலாப்பூர் மிகப் பழமையான ஊர். சுமார் 2000 ஆண்டுகளாக மயிலாப்பூர் இருந்து வருகிறது. ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியார், செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய பிறகு அக் கோட்டையைச் சூழ்ந்து சென்னைப் பட்டினம் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து பெரிய நகரமாயிற்று. அப்போது பழைய மயிலாப்பூர் புதிய சென்னைப் பட்டினத்துடன் சேர்ந்து, சென்னையின் ஒரு பகுதியாயிற்று. ஆகவே, மயிலாப்பூர் இப்போது சென்னைப் பட்டினத்துடன் சேர்ந்து இருந்தாலும் அது ஒரு பழைய ஊராகும்.

மயிலாப்பூர், கடற்கரையோரமாக உள்ள ஊர். இது தொண்டை மண்டலத்துப் புலியூர் கோட்டத்துப் புலியூர் நாட்டைச் சேர்ந்த ஊர் என்று பழைய கல்வெட்டுச் சாசனங்கள் கூறுகின்றன.

பண்டைக் காலத்தில் மயிலாப்பூரில் ஜைனர்கள் வசித்து வந்தார்கள். 22ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாத சுவாமி கோயில் மயிலாப்பூரில் பண்டைக் காலத்தில் இருந்தது. மயிலாப்பூர் கடற்கரையில், இப்போது சென்தோம் என்று வழங்குகிற இடத்தில், தோமையார் கோயில் என்னும் கிருஸ்துவக் கோயில் இருக்கிற அதே இடத்தில், பழைய நேமிநாதசுவாமி கோயில் இருந்தது.

ஜைன தீர்த்தங்கரராகிய நேமிநாத சுவாமி, துவாரகையை யரசாண்ட கண்ணபிரானுடைய (கிருஷ்ணனுடைய) தமயன் முறையினர், நேமிநாத தீர்த்தங்கரர் காலத்தில், அகஸ்திய முனிவர், கண்ணபிரானிடம் சென்று அவர் உத்தரவு பெற்றுத் துவாரகையிலிருந்து பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் அழைத்து வந்து தமிழ் நாட்டில் குடியேற்றினார். தமிழ்நாட்டில் குடியேறி வேளிரும் அருவாளரும் தமிழ்நாட்டிலே ஜைன மதத்தைப் பரப்பியதோடு நேமிநாதர், கண்ணபிரான், பலராமர் வணக்கத்தையும் தமிழ்நாட்டில் நிறுவினார்கள்.

அகஸ்திய முனிவர், கண்ணபிரான் உத்தரவு பெற்று பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழகத்தில் குடியேற்றிய செய்தியை உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் இவ்வாறு கூறுகிறார்.

அகஸ்தியர் தென்னாடு போதுகின்றவர், துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடி யண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் (தொல் எழுத்து, பாயிரம்) என்றும்,

இது மலயமாதவன், நிலங்கடந்த நெடுமுடி யண்ண லுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப்பிறந்த வேளிர்க்கும் (தொல்’ பொருள், அகத்திணை 32-ஆம் சூத்திர உரை) என்றும் கூறுகிறார்.

இதனால், நேமிநாத தீர்த்தங்கரர், பாரத யுத்தகாலத்தில் (கண்ணபிரான் வாழ்ந்திருந்த காலத்தில்) இருந்தவர் என்பது தெரிகிறது.

நேமிநாத சுவாமிக்குத் தமிழ்நாட்டிலே பல இடங்களில் கோயில்கள் இருந்தன. அத்தகைய கோயில்களில் மயிலாப்பூர் நேமிநாதர் கோயிலும் ஒன்று.

சுமார் 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில், கடல் இந்தக் கோயிலின் அருகில் வந்துவிட்ட படியால், சிறிது காலத்தில் கோயில் கடலில் முழுகிவிடும் என்று நினைத்து ஜைனர்கள் அந்தக் கோயிலில் இருந்த நேமிநாதர் திருமேனியைக் கொண்டுபோய்ச் சித்தாமூர் கோயிலில் வைத்துவிட்டார்கள், அந்த உருவம் இன்றும் சித்தாமூர் ஜைனக் கோயிலில் இருக்கிறது. மயிலை நேமிநாதர் கோவிலில் இருந்த நேமிநாதரின் செம்புச் சிலையுருவத்தையும், தர்ம தேவியின் உருவத்தையும், வந்தவாசி தாலுகாவில் உள்ள இளங்காடு என்னும் ஊரில் இருக்கிற ஜைனக் கோவிலில் கொண்டு போய் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. டபல்யூ-ப்ரான்ஸிஸ் அவர்கள் தாம் எழுதிய தென் ஆர்க்காடு ஜில்லா கெஜட்டீர் என்னும் புத்தகத்தின் முதல் பகுதி 367-ஆம் பக்கத்தில், சித்தாமூரைப்பற்றிச் கூறுகிற இடத்தில், மயிலாப்பூர் நேமிநாத சுவாமியையும் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது:

“மேல் சித்தாமூர், தென் ஆர்க்காடு ஜில்லாவில் முக்கியமான ஜைன ஊர். அங்கே ஜைனரின் முக்கியமான கோயில் ஒன்று இருப்பதோடு, ஜைனரின் குருவும் அவ்வூரில் இருக்கிறார். இந்தக் கோயிலின் வடக்கேயுள்ள முற்றத்தில், வெகுகாலத்துக்கு முன்னே மதராசுக்கு அருகில் உள்ள மயிலாப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டது. என்று கூறப்படுகிற ஒரு பெரிய ஜைன விக்கிரகம் இருக்கிறது.”

கடல் கொஞ்சங் கொஞ்சமாக உள்ளே வருவதால் கடற்கரையில் இருந்த நேமிநாதர் கோயில் அழிந்துவிடும் என்று அக்காலத்தவர் நினைத்தது தவறாக முடிந்தது. ஏனென்றால், அவர்கள் நினைத்தது போலக் கடல் உள்ளே வாராமல் காலப்போக்கில் மீண்டும் பின்னுக்குப் போய் விட்டது. அதனால், நேமிநாதர் கோயில் கடலால் அழியவில்லை. அதற்குமாறாக போர்ச்சுகீசியரால் மதப் பகைமை காரணமாக இக்கோயில் அழிக்கப்பட்டது. போர்ச்சுகீசியர் மயிலாப்பூர் கடற்கறையோரமாகக் கோட்டை கட்டிக் கொண்டு வியாபாரம் செய்து வந்தார்கள். நேமிநாதர் கோயில் மட்டுமல்ல, நேமிநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த கபாலீசுவரர் கோயில் என்னும் சைவக் கோயிலும் அழிக்கப்பட்டது. இப்போதுள்ள கபாலீசுவரர் கோவில், பழைய கோயிலன்று; புதிதாகக் கட்டப்பட்ட கோயிலாகும்.

நேமிநாதர் கோயிலுக்கும், பழைய கபாலீசுவரர் கோயிலுக்கும் சொந்தமாக இருந்த நிலங்கள் யாவும் இப்போது கிருஸ்துவக் கோயிலுக்குச் சொந்தமாய் விட்டன. போர்ச்சுகீசியர் மயிலாப்பூரில் இருந்தபோது இது நடைபெற்றிருக்க வேண்டும்.

மயிலாப்பூரில், நேமிநாத சுவாமி ஆலயம் என்னும் ஜைனக்கோயில் இருந்தது என்பதற்கு இலக்கியச் சான்றுகளும், எபிகிராபி (சாசனச்) சான்றுகளும், ஆர்க்கியாலஜி சான்றுகளும் உள்ளன. அவற்றை ஆராய்வோம்.

முதலில் இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம்.

தமிழில் திருநூற்றந்தாதி என்னும் ஒரு தோத்திர நூல் உண்டு. இது ஜைன நூல், மயிலாப்பூரில் கோயில் கொண்டிருந்த நேமிநாத சுவாமியின் பேரில் அவிரோதி யாழ்வார் என்னும் ஜைனரால் பாடப்பட்டது.

அவிரோழி யாழ்வார் என்பவர் முதலில் வைணவராக இருந்தார். இவர் பல சாத்திரங்களைக் கற்றவர். இவர், மயிலாப்பூர் நேமிநாதர் கோயில் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, அக்கோயிலில் ஒரு ஜைன ஆசாரியார் சீடர்களுக்குச் சாத்திர பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கண்ட அவிரோதி யாழ்வார், அவ்விடஞ் சற்று நின்று, ஆசாரியார் கூறிய ஒரு சூத்திரத்திற்குப் பொருள் விளங்காமையால் அதன் பொருளைக் கூறும்படி கேட்டார். ஆசாரியார், ஜைனருக்கன்றி மற்றவருக்கு அதன் பொருள் கூறமுடியாதென்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

சூத்திரத்தின் பொருளை அறிய அவாக்கொண்ட அவிரோதி யாழ்வார், உடனே ஜைன சமயத்தில் சேர்ந்து, நேமி நாதர் ஆலயத்தை வலம்வந்தார். வலம்வரும்போது நேமி நாத சுவாமி பேரில் திருநூற்றந்தாதி பாடினார். இவ்வாறு ஜைனரான அவிரோதி யாழ்வாருக்கு ஜைன ஆசாரியார் சூத்திரத்தின் பொருளை விளக்கிக் கூறினார்.

இந்நூலின் முதல்பாட்டு, மயிலாப்பூரில் நேமிநாத சுவாமிகோயில் ரெகண்டிருந்தார் என்பதைக் கூறுகிறது. அப்பாட்டு இது,

மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்(கு)
அறமே பொழியு மருட்கொண்டலே யதரஞ் சிவந்த
நிறமே கரியபொண் மாணிக்கமே நெடுநாளாழித்துப்
புறமே திரிந்த பிழையடியேனைப் பொறுத்தருளே.

திருநூற்றந்தாதி நூறு செய்யுட்களை யுடையது. இந்த நூலுக்குப் பழைய உரை ஒன்று ஒன்று உண்டு. உரையாசிரியர் யார் என்பது தெரியவில்லை. ஏட்டுப் பிரதியாக இருந்த இந்த நூலைப் பழைய உரையுடன் மதுரைத் தமிழ்ச்சங்கத்தார் 1905ஆம் ஆண்டில் அச்சிட்டார்கள்.

மயிலாப்பூரில் நேமிநாதர் கோயில் இருந்தது எனபதற்கு இன்னொரு இலக்கியச் சான்றும் உண்டு. அதுதான் நேமிநாதம் என்னும் இலக்கண நூல், நேமிநாதத்தை இயற்றியவர் குணவீர பண்டிதர் என்னும் ஜைனர். இவர், மயிலாப்பூரில் கோயில் கொண்டிருந்த நேமிநாதர் பெயரினால் நேதிநாதம் என்னும் இந்த இலக்கண் நூலை எழுதினார். இதனை. இதன் உரையாசிரியர் தெளிவாகக் கூறுகிறார். அவர் கூறுவது இது : 

“இந்நூல் (நேமிநாதம்) என்ன பெயர்த்தோ எனின், இந்நூல், எய்திய சிறப்பின் எழுத்தையும் சொல்லையும் மெய்தெரி வகையின் விளங்க நாடித் தேனிமிர் பைம்பொழிற் றென் மயிலாபுரி, நீனிறக் கடவுள் நேமிநாதர், தந்திருப்பெயராற் செய்தமையான் நேதிநாதம் என்னும் பெயர்த்து.”

இவ்வாறு உரைப் பாயிரத்தில் உரையாசிரியர் எழுதுகிற படியினாலே, மயிலாப்பூரிலே நேதிநாதர் கோயில் இருந்தது என்பதும், அந் நேமிநாதர் பெயரினாலே நேமிநாதம் என்னும் இலக்கண நூல் செய்யப்பட்டது என்பதும் தெளிவாகிறது.

நேமிநாதம் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. எப்படி என்றால் திரிபுவன தேவன் என்னும் சோழன் காலத்தில் இந் நூலாசிரியரான குணவீர பண்டிதர் இருந்தார். ஆகையினால் என்க. நேமிநாதம் உரையுடன் அச்சிடப்பட்டிருக்கிறது.

மயிலாப்பூரில் ஜைனக் கோயில் ஒன்று இருந்தது என்பதைத் திருக்கலம்பகம் என்னும் நூல் கூறுகிறது. திருக்கலம்பகம் என்பது உதீசித்தேவர் என்னும் ஜைனரால் இயற்றப்பட்ட நூல், இந்நூலின் ஒரு செய்யுள்.

மயிலாபுரி நின்றவர் அரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவர் அலர்பூவில் நடந்தவர். (செய்யுள் 74.)

என்று கூறுகிறது.

மயிலாப்பூரில் கோயில்கொண்டிருந்த நேமிநாதருக்கு மயிலைநாதர் என்னும் வேறு பெயரும் உண்டு. மயிலைநாதர் என்பதற்கு மயிலாப்பூரில் எழுந்தருளிய கடவுள் என்று பொருள் மயிலைநாதர் என்னும் பெயரையுடைய ஒரு ஜைனர், நன்னூல் என்னும் பேர்போன தமிழ் இலக்கண நூலுக்கு உரை எழுதியிருக்கிறார். அந்த உரை மயிலைநாதர் உரை என்னும் பெயரோடு இன்றும் வழங்குகிறது. உரையாசிரியராகிய மயிலைநாதர் ஜைனர். இவர் மயிலாப்பூரிலே வாழ்ந்தவர் என்றும், மயிலாப்பூர் நேமிநாதக் கடவுளின் வேறு பெயராகிற மயிலைநாதர் என்னும் பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டிருந்தார் என்றும் கூறுவர்.

மயிலாப்பூரில் கோயில் கொண்டிருந்த நேமிநாத சுவாமியின் பேரில் பாடப்பட்ட தோத்திரப்பாக்கள் சில தமிழிலே யுள்ளன. திருநூற்றந்தாதி பாடிய அவிரோதி ஆழ்வாரே திருப்பள்ளி எழுச்சியாம் ‘திருவெம்பாவை’ என்னும் நூலை இயற்றியுள்ளார். அவை தமிழ் ஜைனர்களினால் படிக்கப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் இங்கு எழுதினால் இடம் பெருகும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துவோம்.

மயிலாப்பூர் நேமிநாதர் கோயில் இருந்ததென்பதற்கு இந்த இலக்கியச் சான்றுகள் உறுதி கூறுகின்றன.

இனி எபிகிராபி (சாசனச்) சான்று சான்று உள்ளதா என்பதை யாராய்வோம்.

மயிலாப்பூரில் சென்தோம் பெரிய சாலையில், சென்தோம் ஹைஸ்கூல் கட்டிடத்தின் மாடிக்குச் செல்லும் கருங்கற்படிகள் ஒன்றில் கீழ்கண்ட சாசனம் காணப்படுகிறது. இந்தச் சாசனம் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அறைகுறையாகவுள்ளது.

“.............உட்பட நேமிநாத ஸ்வாமிக்(கு)
..........க் குடுத்தோம் இவை பழந்தீபரா.........”

இந்த அறைகுறையான சாசனம், இங்கே இருந்த நேதிநாத சுவாமி கோயிலுக்கு யாரோ எதையோ தானம் செய்ததைக் கூறுகிறது. இந்தச் சாசனக்கல் நேமிநாத சுவாமி கோயிலருகில் இருந்திருக்க வேண்டும். பிற்காலத்தில் இதைக்கொண்டுவந்து படிக்கல்லாக அமைத்தார்கள் போலும். இந்தச் சாசனம் இங்கிருந்ததை Antiquities of Santhome Mylapore என்னும் நூலில் 74-ஆம் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தச் சாசனம் உள்ள கல் இப்போது மேற்படி இடத்தில் இல்லை. Rev. B.A. Figredo, Archdiocese of Madras-Mylaore அவர்கள் பொறுப்பில் வேறு இடத்தில் இருக்கிறது. இந்தச் சாசனம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

இனி, ஆர்க்கியாலஜி சான்றுகளைப் பார்ப்போம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தோமாஸ் கோயில் இருக்கும் இடத்தின் அருகில் பூமியைக் கிளறிப் பார்த்தபோது உடைந்துபோன கற்றூண்கள், சாசனக்கற்கள், கல் உருவங்கள் முதலியன அகப்பட்டன. அப்படி அகப்பட்டவைகளில் தலையுடைந்துபோன ஜைன உருவமும் ஒன்று. இந்த உருவமும் இப்போது மேற்படி தோமாஸ் கோவில் அதிகாரிகளிடம் இருக்கிறது. 

தோமாஸ் கோவிலுக்கு அருகில் உள்ள செய்ன்ட் தாமஸ் கான்வென்ட் என்னும் கிருஸ்துவக் கன்னி ஸ்தீரிகள் மடத்தின் முன்பு ஒரு பெரிய ஜைனத் திருமேனி இருந்ததாம். இதைப்பற்றி “சென்தோம், மயிலாப்பூரின் பழமை” என்னும் ஆங்கில நூலில் இவ்வாறு எழுதப் பட்டிருக்கிறது. “சென்தோமிலுள்ள செய்ன்ட் தாமஸ் கான்வென்ட்டில், அந்த இடத்தைக் கன்னிஸ்திரீகள் சுவாதீனம் செய்து கொண்டபோது, அங்கு ஒரு கற்சிலை உருவம் இருந்ததாகவும், அந்த உருவத்தை அவர்கள் மடப்பள்ளிக்கு அருகில் ஒரு பள்ளத்தில் புதைத்து விட்டதாகவும் அறிந்தேன். அந்த உருவத்தின் முழங்கால்களிலும் இடுப்பிலும் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தன என்று ஒரு சுதேச கன்னி ஸ்திரீ சொன்னார். அந்த உருவச் சிலையைப் பற்றி இன்னொரு கன்னி ஸ்திரீ சொன்னது : அனாதைப் பிள்ளைகள் விடுதிக்கு வலதுபக்கத்தில் வெள்ளைக் கல்லினால் செய்யப்பட்ட ஒரு சிலை, ஜைன உருவம் போன்றது, கைகளைச் சேர்த்துக் கூப்பியதுபோல் இருந்தது. அந்த உருவம் வழியில் இருந்தபடியினாலே, அதை ஒரு ஸ்திரீ, அனாதைப் பிள்ளைகள் விளையாடும் இடத்துக்கு அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் போட்டு புதைத்து விட்டாள்.” பக்கம் 175.

செய்ன்ட் தாமஸ் கோயிலுக்கு எதிரில் உள்ள அனாதைப் பிள்ளைகள் நிலையம் உள்ள இடம் முன்பு, கன்னிஸ்திரீ மடத்துக்கு உரியதாக இருந்தது. அப்போது அந்த இடத்தில் ஆறு தூண்கள் உள்ள ஒரு பந்தல் இருந்தது. ஒவ்வொரு தூணின் மேலும் வெள்ளைக் கல்லினால் செய்யப்பட்ட தெய்வ உருவங்கள் இருந்தன என்று மேற்படி நூலில் 180-ஆம் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

இங்குக் கூறப்பட்டவைகள் ஜைன உருவங்களாகும். முன்பு கன்னிஸ்திரீ மடத்திற்குரியதாக இருந்து, பிறகு அனாதைப் பிள்ளைகள் இடமாக மாறிய இடத்தில் ஆறு தூண்களில் இருந்ததாகக் கூறப்படுகிற உருவங்களை, சென்னை ஆர்க்கியாலஜி இலாகா படம் பிடித்து இருக்கிறார்கள். அந்தப்படம் ஜைன உருவப் படம் என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

சென்தோம் பெரிய சாலையில், சென்தோம் சர்ச்சுக்கு அருகில் உள்ள ஊமைச் செவிட்டுப் பிள்ளைகள் பாடசாலைக் கட்டடமும் அதைச் சேர்ந்த பெரிய மைதானமும் முன்பு தனகோட்டி ராஜு என்பவருக்கு உரியதாக இருந்தது. அந்த இடத்தை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தோண்டியபோது, செம்பினால் செய்யப்பட்ட ஜைன அல்லது புத்தவிக்கிரகம் ஒன்று கிடைத்ததென்றும், அதைத் தாம் வீட்டில் வைத்திருந்ததாகவும், அது பிறகு களவு போய்விட்டதென்றும் அவர் கூறியிருக்கிறார். மேற்படி புத்தகம் பக்கம் 171.

தனகோட்டி ராஜு புத்தவிக்கிரகமோ அல்லது ஜைன விக்கிரகமோ என்று சந்தேகத்தோடு கூறுகிற செம்பு விக்கிரகம், ஜைன விக்கிரகமாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், இந்தச் செம்பு விக்கிரகம் அகப்பட்ட இடத்தின் அருகில் கிடைத்த உருவங்கள் ஜைன உருவங்களாக இருப்பதால், இதுவும் ஜைன உருவமாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதலாம்.

சென்தோமுக்கு அருகில் உள்ள மயிலாப்பூர் அப்பு முதலி தெருவில், புலிக்காட்டு கிராமணி தென்னந்தோட்டத்தில் (இந்தத் தோட்டம் இப்போது விற்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.) இரண்டு ஜைன உருவச் சிலைகள் இருந்தன. அவற்றில் ஒன்று பார்சுவநாதர் உருவம். மற்றொன்று மகாவீரர் உருவம். இரண்டும் கருங்கல் உருவங்கள். இப்போது இவ்வுருவங்கள் இக்கட்டுரையாளரின் நண்பர் ஒருவரிடம் இருக்கின்றன.

இவையெல்லாம் மயிலாப்பூரில் முற்காலத்தில் ஜைனக் கோயில் இருந்தது என்பதை நன்கு தெரிவிக்கின்றன அல்லவா?

நல்லறிவு மன்றத்தார்



ஸ்ரீ

ஸ்ரீஜிநாயநம:

1மயிலாப்பூர் பதிகம் 1

அறுசீர் அடி ஆசிரிய விருத்தம்

பெருகலர் மாமழை பெய்தொரு சுரர்முகில் பெயர்வது போலிமையோர் அருமலர் தூவிய அலைகடல் மேல்வரு அரிகுல நாயகரூர்
கருமலி ஆலய மொடுமணி மாளிகை கடியிதழ் தாதெனவத்
திருமலி தாமரை கருமலி பொன்மலி திருமயி லாபுரியே. 1

துருவம ரைவுடல் கொடுசுழல் வோர்தம துணையடி சேரினவர்
குருவநன் மாமணி யவைதிசை யேதரு மரிகுல நாயகரூர்
அருவநன் மாமணி யொளிகலன் வானவர் அருநர்செய் மாதவருநீள்
தெருளெனு மாறுகல் சிவணிமுன் னீர்புணர் திருமயி லாபுரியே. 2

ஒளிதரு தண்ணிழல் குலவியோ ரோசனை யுயரமொ ரோசனையிற்
களிதரு நாண்மல ரணியும் சோகுடை யரிகுல நாயகரூர்
விளிதரு மூடமும் வினையும் விடாமயல் வீடரு நால்வகையிற்
றெளிதரு சாவகர் செழுமனை யேமலி திருமயி லாபுரியே. 3

நிமிரும சோகமு நினைவில சோகமு நெடுமொழி யாகியபோழ்
துமிழ்வள வாடக விடமுன் மேவிய வரிகுல நாயகரூர்
இமிழ்திரை வேலையி னிடைமண லாகிய வொளிநீ; அவணுடையும்
திமிரம தாமென வெறிதிரை நீர்பெயர் திருமயி லாபுரியே. 4

வரிவளை யார்திரு மருவல ராய்நல மருவிய செல்வமதா
யரிவையை மூவுல கலரெழ நேர்புண ரரிகுல நாயகரூர்
விரியுமு னாண்மதி வெயினிலை யாகவா முதல்வெளி யாயுறைய
திருவிதை யோகிக ளிருவினை தீர்தருந் திருமயி லாபுரியே. 5

வினையிருள் போழ்வன மிசையல சோதியை விலையுமி லாதனதா
மனையமு மாமணி யருளின மாள்கொளு மரிகுல நாயகரூர்
நனையணி ஞாழலி னறைகமழ் வீகளை வரியளி தும்பிகள் சேர்?
தினையெனு மீமிசை சிறுதுளி ரேதரு திருமயி லாபுரியே. 6

உவ்வுடை நாண்மதி யொளிமுக வாணுதல் உழைவிழி யேழையர்மேல்
அவ்வுடை யாரரு நாருடை யாரெனு மரிகுல நாயகரூர்
நவ்வுடை யார்துகி னகிவினை யோதிம நடைநறை நாறுகுழல்
இவ்வுடை யாமொழி யவர்மலி பொன்மலி திருமயி லாபுரியே. 7

பவகத மாகிய பகைபசி நோய்பல பழவினை வேரறுவித்
தவகத மாகிய வகிலவ சோகுடை யரிகுல நாயகரூர்
சிவகதி யேதரு தொழுபவர் தீவினை சேரவி லக்கிவிடுந்
திவதொனி யேமொழி பவரிட மாநில திருமயி லாபுரியே. 8

புயலொரு பூமிசை வருமென வானவர் புதுமலர் தூயவர்மேல்
அயலிரு சாமரை குலாவ வுலாவு மரிகுல நாயகரூர்
இயலிசை தேர்பவ ரிருநிதி யீபவர் இருடிகள் யாவருநற்
செயலவி ரோதிகள் திருவுடை யாரறி திருமயி லாபுரியே. 9

முற்றும்

அடிக்குறிப்புகள்

1. பதிகத்தில் பத்துப்பாட்டுக்கள் இருக்க வேண்டும். ஆனால், ஏட்டுப் பிரதியில் 10-வது பாட்டு, காணப்படவில்லை.

திருமயிலாப்பூர் பதிகம் - 2

உலர்தழைப்ப வொளிதிகழ்மூ
        வாமதிமுக்குடையானை யடலாராழி
வலர் தழைக்கும் வண்மயிலை
        மன்னவனை மணியைமுன்னா
ளலர்தவத்தின் பொருள்நாடி
        வேசத்துபாசத்தே யழுந்தி யந்தோ
நிலர்தொகுத்துக் குண்டிகையை
        நிறைப்பான்போ லமர்ந்திருந்த நீசனேனே. 1

எல்லிருக்கு மணிமுடிசாய்த் திந்திரரு
        நரேந்திரரு மெல்லை யில்லாச்
சொல்லிருக்குந் துறவோருந் தொழுமயிலாப்
        புரிநின்ற துணையை முன்னாள்
மல்லிருக்கு மலர்கொண்டு வணங்காதே
        மாதரார் வலைப்பட்டந்தோ
யில்லிருக்க நல்லறஞ்செய்யா திறுமாந்
        திட்டிருந்த வேழையேனே. 2

முதிர்முகிலிற் புலியரவ முரசியம்ப
        முனிகணமு முறையினேற்ற
வதிர்முழவக் கடல்நடு வண்டந்தரமே
        வந்துதிரு மயிலைநின்ற
சதுமுகனைத் தாழாதே தத்துவத்தின்
        றன் மையினைத் தவிர்ந்து நாளும்
கதிர்புறம்பாய்ப் பேர்த்ததுகண் கருத்தரியா
        தொழிந்ததகலுந் தீயனேனே. 3

தாட்டவிழ் தாமரை நடந்ததத்துவனை
        முத்திமுதற் பொருளையென்றும்
வாட்டமிலா வளமயிலை வரதன்பால்
        வந்தணுகி யன்னாளின்னாள்
யீட்டமுடன் மலர்கொண்டாங் கிறைஞ்சாதே
        மறஞ்சாய்ந்த வகையே பேணிக்
காட்டநிலா வெரித்தாதோ கண்படாப்போந்
        திருந்தவா கள்வனேனே. 4

பூச்சரிக்கும் பொன்னடியெம் புங்கவனை
        புனையகலம் பொருந்து நூல்கள்
நாச்செரிக்கும் வகைதெரிந்த நாண்முதலாய்
        நன்மயிலை நண்ணிநானிப்
பாச்சரிக்கும் வகையறிந்து பாடாதே
        பாவையர்தம் பயனேபார்த்து
பேய்ச்சுரைக்கு நீரிறைத்துப் பெரிதாய
        பிழைசெய்தேன் பித்தனேனே. 5

பூத்தேரும் பொன்னடியெம் புங்கவனைப்
        பொன்னெயில்மூன் றுடையகோனை
மாத்தேருந் தளிர்மருகில் மன்னுனூ
        மயிலா புரியில் நின்றமாலை
நாத்தேரு முறையதனால் நவிலாதே
        நடலைவாழ் வ தனைநத்திப்
பேய்த்தேரை நீரென்று பின்னோக்கித்
        திரிந்தவா பித்தனேனே. 6

பொழிலிறைப்பூஞ் சினைப்பிண்டிப் பொன்னெயிலு
        ளிருந்தானை வினைகளெல்லாம்
வழிப்படுத்தி வென்றானை வளமயிலை
        யச்சுதனை வுன்னாமுன்னாள்
பழிப்படுக்கும் பாவங்கள் பலசெய்து
        பலகதிக்கோர் பயனுமின்றி
வழிகிடக்க வூர்தோறும் நுழைந்துமயக்
        குற்றுதவா மதியிலேனே. 7

அடல்வலையும் வெந்திறலா லனங்கனெனு
        மலராசை யகத்திப்பூக
மடல்வலையப் பொழில்மயிலை மரகதமா
        மலைதன்னை யன்னாளின்னாள்
உடல்வலைய முறப்பணித்தங் கொண்பொருளை
        யோராதே பிறவியென்னுங்
கடல்வலையங் கைநீந்திக் கரைகாணக்
        கருதினேன் கபடனேனே. 8

பொற்றலைவிற் பொலிகவர மலர்ப்பொடியை
        யிளந்தென்றல் புகுந்துவீச
மற்றலரு மணியணை மேல் மதிவட்டக்
        குடைநிழற்கீழ் மயிலைமன்னி
சொற்றலையிற் றுன்பறுக்குந் துறவோனை
        யறவோனைத் தொடராமுன்னாள்
புற்றலையிற் றவிடுகுத்திப் புந்தியேன்
        சிந்தியவா பொறியற்றேனே. 9

அமைச்சிந்தித் தருநகரத் தாழ்ந்தழுந்தி
        வீழாம லடைந்தோர்க் கெல்லாம்
சமைந்திந்த வகத்திருந்த மடமயிலை
        அச்சுதனைச்சாரா முன்னா
ளெமைதிண்ண முடையவர்மற் றிவரவ
        ரென்றவரொ டெழுந்துகத்தி
உமிதின்னும் பெருபயனா லுனைநினையா
        துலகலைந்தே னேழையேனே. 10

முற்றும்

திருமயிலாப்பூர் ஸ்ரீநேமிநாதஸ்வாமி பதிகம்-3

தருமனீ தயவடிவுநீ சகலாகமஞ்சொலுஞ் சதுரனீ
யொருவனீ பலவறிவுநீ யுலகங்கள் மூன்றையுமுடையனீ
திருவுநீ ஜினநாதனீ திசையாடை மேவியச்செல்வனீ
நிருபனீ திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 1

காலன்வந்துடல் மங்கும்போது கலக்கம் வந்தணுகாமலுன்
சீலமந்திரமைந்து மென்னிடச்சிந்தை தன்னிலிருத்துவாய்
மேலவானவர் போற்றிடும்பத்துவிற்பிரமாண சரீரனே
நீலனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 2

பாசதொந்தமழுந்தியே வலைப்பட்டமானதுபோலவே
பேசொணாதவிடும்பைகொண்டு பிறந்தநானுடல்வாடவோ
வாசமேவு மசோகநீழலின்வர தனே யடியார்கள்மேல்
நேசனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 3

அலையும்வாரிதிபோல நெஞ்சனுதினமு மாசையழுந்தியே
யுலையின்மேன் மெழுகாகுமெந்தனை யுறுதி முத்தியில்வைப்பையே
சொலையிலாநெறி வேந்தனே யொளிகுலவு முக்குடையாளனே
நிலையனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 4

பொறியினால் வருபாவம்வந்து புகாமலானது புக்கினுஞ்
செறியும் வேதனைநரகில் வீழ்ந்து திகைத்திடாமல் விலக்குவாய்
வெறியுலாவிய வனசமாமலர்மேல் நடந்தருள்வீரனே
நெறியனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 5

உனைவணங்கினர்பிறவி யொன்றிலுயரு முத்தியிலேறுவ
ரௌவறிந்து முனிருபதங்களை யேற்றிலேன் மலர்சாற்றிலேன்
வினைகடிந்தருடீரனே முழு மெய்யனே நெறியையனே
நினைவனே திருமயிலைமேவிய நேமிநாத ஸ்வாமியே. 6

மதியிலா முழுமூடர் தம்முடன் மருவியுன்னை மறந்துயான்
புதிய தாமரரையிலையி னீரதுபோலுழன்றிடவோ சொலாய்

கதிகணான்கையும் வென் றிடும்புகழ் கைவலத்திருமார்பனே
நீதியனே திருமயிலைமேவிய நேமிநா தஸ்வாமியே. 7

எட்டுவல்வினைவென்ற பின்னையோரெட்டு நற்குணமேவினை
தொட்டநாற்கதி விட்டனைமிகு சுகமடைந்தனை தூய்மையாற்
சிட்டர்போற்றிய தேவனே தன்மதேசிகா சிவலோகனே
நிட்டனே திருமயிலைமேவிய நேமிநா தஸ்வாமியே. 8

தீதிலா தபிறப்பில்வந்து ஜனித்துமுன்னிட திருவறஞ்
சாதியாம லவத்தில் நாள்பலதள்ளிடாமலெனையாளுவாய்
ஆதிதேவர நாதிதேவரென்றாரு மேத்தருகந்தனே
நீதிசேர் திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 9

அமையுமிப்பிறவிக்கடற்குள முந்தியான்றிரியாமலுன்
கமலநற்பதமடைய வென்னிடர்கவலை தன்னையகற்றுவா
யிமையவர்க்கிறைதந் தளித்திடுமெந்தையே யருகந்தனே
நிமலனே திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 10

நாடியேயுனை நம்பினேனெனை நழுவவிட்டுவிடாமலுன்
ஆடகமலர்பொற்பதந் தனையடையவே கிருபையருளுவாய்
தோடுமொன்பது மொன்பதுந் தொடராவநந்தசு கேசனே
நீடுவாழ் திருமயிலைமேவிய நேமிநாதஸ்வாமியே. 11

எத்தனை ஜனனம்மெடுத்தன மின்னமெத்தனைஜன்மமோ
அத்தைநானறியேனின் நற்பதமடையவே கிருபையருளுவாய்
முத்துரத்தினமிழைத்துவைத்த விசித்திரமுக்குடையாளனே
நித்தனே திருமயிலைமேவிய நேமிநா தஸ்வாமியே. 12

தருமனே யெமைகாலபாசமறுத்துந் தயவிலாமலே
பொருதும் வெல்வினையெட்டலைத் திடுபுங்கவாதீதில் வேதனே
பருதிமாமதி யொளிகள் சேருனை நாடியெத்தனைப்பல்புகழ்
நிருபமா திருமயிலைமேவிய நேமிநா தஸ்வாமியே. 13

முற்றும்

இல்லறத்தார்க்குரிய தசதர்மம்

குரு வணக்கம்

முறைபொறியில் மறைநீங்கி மூவுலகிற் பொருள்களெலாங்
குறைவின்றி யொருங் குணர்ந்த குணதரன்சே வடிவணங்கி
நிறையுடைய மாதவரு மேனோரு நின்றுவப்ப
வறைகுவன் தசதன்ம மறநெறிய தியல்பினால், 1
குளிர்நாவற் பரதத்துக் குருநாட்டுச் சுசிமைகோன்
களியானை யரிவண்ணன் காதலிள மகளிரொடு
மருளாழி யான் கணத்துக் கிறைவன்றன் னடிவணங்கி
விளியாத மனை யறத்தை விரிக்கு மென் றுரைத்தனனே. 2

இல்லறத்தார்க்கு அணுவிரதம்

ஆற்றிய நல்விரதத் தரசனுந் தேவியரு
மேற்றுமின் னடிகளெனக் குரியனதா மென்றிறைஞ்சிக்
கூற்றுவனைக் குதித்துயர்ந்த கோட்டமில் சீர் மாதவரு
மேற்றினா ரணுவிரத மில்லறத்தாற் குரியனவே. 3

இல்லறத்தார்க்குரிய பத்து கடமைகள்

கொல்லாமை பொய்யாமை கள்ளாமை காமத்தை
யொல்லாமை யொண்பொருளை வரைதலோ டிவைபிறவும்
பொல்லாத புலசுதேன்கள் ளிருளுண்ணா நிலைமையொடு
நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம். 4

1. கொல்லா விரதத்தின் பயன்

பல்லார்தற் பணிவதுவும் பகைகெடத்தாம் பெருகுதலு
மில்லார்க்கொன் றீவதுவும் யினியெனவே நுகர்வதுவும்
நல்லார்கண்டு வப்பதுவும் நலிவிலா தின்புறலும்
கொல்லாத நல்வி ரதங் காத்ததன் பயனாகும். 5

புலைக்குடியிற் பிறப்பதுவும் பொல்லாங்கில் வளர்வதுவு
மலைப்புண்டு வருந்துவது மருஞ்சிறையி லகப்படலும்
நிலைக்கழுவி லூர்வதுவும் நின்றுறுப்புக் குறைவதுவும்
கொலைத்தொழிலால் மடிவித்த கொடுவினையின் பயனாகும். 6

2. பொய் பேசாததன் பயன்

ஐயெனத்தாம் பெருகுதலு மறிவினால் விளங்குதலு
மெய்யறங்கேட் டுணர்வதுவு முணர்ந்து பிறர்க் குரைப்பதுவுஞ்
செய்தவை நன் றாகுதலுஞ் சிறந்தார் சொற் றேருதலும்
பொய்யுரையா நல்விரதம் போற்றியதன் பயனாகும். 7

கருப்பையின் மூங்கைகளாய்க் கண்டார்கண் டிழிப்பதுவுஞ்
சொற்பயிலி னிசைகேளாச் செவிடுகளாய்ச் சுழல்வதுவுஞ்
தற்செயலாய்க் கொடுவினைகள் தாம்பலவந் தெய்துதலும்
பொய்த்துரைத்துப் பொதியரையின் பொருள்விழைவின் பயனாகும். 8

3. கள்ளாமையின் பயன்

வள்ளல்களாய் வழங்குவதும் வரையறையிற் பெருஞ்செல்வ
மெள்ளற்பாடி ன்மையு மினியெனவே நுகர்வதுவும்
தள்ளாத விழுநிதியந் தலைத்தலைவந் தெய்துதலுங்
கள்ளாத நல்விரதங் காத்ததன் பயனாகும். 9

வளமையிற் சிறுகுடியிற் பிறத்தலும் வருந்திவாழ்ந்
திளமைகண் ணூண்காணாத் திரிந்துண்டெய் துழல்வதுவு
முளதென்ற பொருள் கெட்டுண் ணீரற்றுழல்வதுவுங்
களவின்கட் கன்றியதீக் கடுவினையின் பயனாகும். 10

4. பிறன்தாரம் நச்சாமையின் பயன்

மறந்துஞ்சும் நெடுநல்வேல் மன்னர்தம் மகளிரையுஞ்
சிறந்துய்ந்த விழுநிதியச் செல்வர்தம் மகளிரையுங்
கறங்கியநற் றூரியத்துக் கடிமனையிற் கெழுமுதலும்
பிறன்றாரம் நத்தாத பெருவிரதப் பயனாகும். 11

பேடிகளாய்ப் பிறப்பதுவும் பெண்டீரிற் கடையராய்
நாடியுண் டுழல்வதுவும் நலனழிந் தலியராய்
பாடியுண்ணுங் கூத்தராய்ப் பலகடையின் முட்டுதலும்
பீடின்றிப் பிறன்றாரம் பிழைத்ததன் பயனாகும். 12

5. உலோபகுணமின்மையின் பயன்

உருளாத விழுநிதிய மொன்பதுக்குந் தலைவராய்
இருளாத பெருங்குலத்துக் கிறைவாய்த் தோன்றுதலுந்
தெருளாத களிறூர்ந்து தேசுமிக் கூறுதலும்
பொருளாக முன்வரைந்த புண்ணியத்தின் பயனாகும். 13

வெறுமனையிற் பிறத்தலும் வேண்டியது பெறாமையும்
சிறுமனையிற் சிதலெரிப்பச் செய்தொழிலற் றிருப்பதுவு
மறுதொழிலுங் கிடையாதே யலமாந்தெய் துழல்வ துவு
முறுபொருளை வரையாத உலோபத்தின் பயனாகும். 14

6. ஊனுண்ணாததன் பயன்

வெறிகமழ் தண் ணாற்றம் விளங்கியநற் குடி பிறப்பும்
பொறியமை நல் யாக்கையும் புத்திரர்பெற் றுவப்பதுவு
மறிவினால் விளங்குதலும் அறனைமிகக் கூறுதலும்
பிறிதினூணுண்ணாத பெருவிரதப் பயனாகும். 15

மக்கட்பே நிலராயும் பெறினும் பெற்றிழந்திடலும்
துக்கச்செய் தொழுநோயுந் தோன்றியபல் சிரங்குகளுங்
கைக்கோட்டுக் கழலைகளும் கழுவறாச் சீயுடம்பு
மக்காலத் தரு ளின்றி யறைந்த நுண் பயனாகும். 16

7. தேனுண்ணாததன் பயன்

ஊனமிலா வுறுப்பமைவு முறுதூய்மை யுடைமையுங்
கானிலந்தோய் வின்மையுங் கண்ணிமைப் பிலாமையும்
வானகத்து வச்சிரராய் மகிழ்ந்துவீற் றிருப்பதுவுந்
தேனுண்ணா நல்விரதந் தேர்ந்ததன் பயனாகும். 17

மான்றோலினிடப்பட்ட மானிடர்தம் மகவாகிப்
பேன் றூங்கும் மயிரினராய்ப் பேய்போலச் சுழல்வதுவும்
யீன்றவளே கான்றுமிழ்ந் திழித்துரைக்கும் நிலைமையும்
தேனுவந்து முன்னுண்ட தீவினையின் பயனாகும். 18

8. கட் குடியாததன் பயன்

ஒள்ளியார் ஓதுவதும் ஓதினது மறவாமற்
றெள்ளியறங் கேட்பதுவுங் கேட்டவற்றை யுரைப்பதுவுங்
கொள்ளற்பா டுடைமையும் கூறாச்சொல் லின்மையுங்
கள்ளுண்ணா நல்விரதங் காத்ததன் பயனாகும். 19

உள்ளுணரா தொழுகுதலு முறுதூய்மை யின்மையு
மெள்ளற்பா டிழிதொழில்செய் திழிகுலத்திற் றோன்றுதலும்
கொள்ளற்பா டின்மையுங் கூறாச்சொல் கூறுதலுங்
கள்ளுண்டு களித்தாடிக் கழிந்ததன் பயனாகும். 20

9. இரவுண்ணா நோன்பு காத்தலின் பயன்

அருளுடைமை யாவர்க்கும் மன்பென்று மகலாமை
பொளுடைமை பொய்ப்பாடில் புல்லினார் பிரிவின்மை
தெருளுடைமை தேசொளிவிட் டிலங்குதலும் திண்வனப்பும்
இருளுண்ணா நல்விரதங் காத்ததன் பயனாகும். 21

அருளிண்மை யறங்கொளினு மாய்ந்துணரும் அருளின்மை
பொருளின்மை பொல்லாங்கு பொய்ப்பாடில் வாழ்க்கையு
மருளிகளாய் மயலுற் றவர்போல மயங்குதலும்
இருளுண்டு நல்விரத மிகழ்ந்ததன் பயனாகும். 22

மௌனவிரதப் பயன்

தானத்தால் விளங்குதலும் தன்சொல்மிக்கூறுதலும்
ஞானத்தால் விளங்குதலும் நால்வரிற் றலைவராய்
வானகத்தி னிந்திரராய் மகிழ்ந்து வீற் றிருப்பதுவும்
மோனத்தா லாகிய நன்முழுவிர தப் பயனாகும். 23

10. தவசியரைப் பணிந்ததன் பயன்

வச்சிரக்கை வானவர்க்கு வையமெல்லா முழுநாளுஞ்
சக்கரமா மன்னவற்கும் பலவாசு தேவர்கட்கு
மக்கரமா தேவியரா யணிப் பட்டந் தாங்குதலும்
நற்றவரைத் தான்பணிந்த நல்விரதப் பயனாகும். 24

கழுதைநா யூர்ப்பன்றி காரட்டை மூஞ்சுறு
மழுகநாற் கணத்துப்புழு வாகவே தோன்றுதலும்
விழுமிய நன்மாதவரை வீங்கியதோர் மானத்தால்
தொழுதடியைப் பணியா துவர்த்துமிழ்ந்த பயனாகும். 25

பிணக்கில்லா மாதவரைப் பிணக்கறுக்க வெனவேத்தி
வணக்கத்தா லுயர்குலமாம் வழுவில்லா வுவகையோ
டுணக்கொடுப்பிற் றுப்புரவ முவந்ததனால் வனப்பாகுந்
தணப்பில்லா நல்விரதந் தாங்கியதன் பயனாகும். 26

முற்றும்.

✽ ✽ ✽