மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19/023
உணவும் உடம்பும்
உலகத்தில் வாழும் பிராணிகள் எல்லாம் பிறந்தது முதல் இறக்கும் வரையில் உணவை உண்டு வாழ்கின்றன. மனிதராகிய நாமும் பிறந்தது முதல் இறக்கும் வரையில் உணவை உண்டு வாழ்கிறோம். ஆனால், மற்றப் பிராணிகளின் உணவிலும், மனிதரின் உணவிலும் சில வேறுபாடுகள் உண்டு, அவ்வேறுபாடுகளில் முக்கியமானது, மனிதன் தான் உண்கிற உணவைச் சமைத்துச் சாப்பிடுகிறான். மற்றப் பிராணிகள் உணவைச் சமைத்துச் சாப்பிடுவது இல்லை. ஆதிகாலத்தில், மற்றப் பிராணிகளைப் போலவே மனிதனும் உணவைச் சமைக்காமல் அருந்தினான். பிறகு நெருப்பைக் கண்டு பிடித்துச் சமைத்து உண்ணக் கற்றுக்கொண்டான். இதனால், பல வகைப்பட்ட உணவுகளை உண்ணப் பழகிக்கொண்டான். வெவ்வேறு வகைளில் விலங்குகளிலிருந்து பிரிந்து உயர்வடைந்தது போலவே மனிதன் உணவு உண்பதிலும் விலங்ககளிலிருந்து பரிந்து உயர்வடைந்துவிட்டான்.
மனிதன் நல்ல முறையில் பகுத்தறிவுள்ள விஞ்ஞான முறையில் உணவு உண்ணக் கற்றுக்கொண்டபோதிலும், பெரும்பான்மையோர் உடம்புக்கேற்ற தகந்த உணவை உண்பதில்லை. சயன்ஸ் என்னும் விஞ்ஞான முறைப்படி உணவை உண்ணத் தெரிந்து கொள்ளாத படியினாலே மனிதரில் பெரும்பான்மையோர் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். உடல் நலம் இல்லாமல் துன்புறுகின்றனர், உடல் நலத்துக்குத் தகுதியான உணவு வகைகளைத் தெரிந்து உண்பார் களானால் பெரும்பாலும் நோயில்லாமலும் உடல் நலத்தோடும் நன்றாக வாழலாம்.
வயிற்றைச் “சோற்றுத் துருத்தி” என்றும் ‘தூராத் துருத்தி’ என்றும் கூறுவர். ஏனென்றால், உண்ட உணவு ஜீரணமாகி வேளை தோறும் பசிக்கிறது. பசிக்கும் போதெல்லாம் புசிக்கிறோம். ஆனால், ‘சோற்றுத்துருத்தி’ வேளை தோறும் உணவைக் கேட்கிறது. பசியைப் போக்குவதற்கு மட்டும் நாம் உணவு கொள்வதில்லை. உடம்பில் பலமும் சக்தியும் உண்டாவதற்காகவும் உணவு உண்கிறோம். ஆகவே, கிடைத்ததை உண்டு பசியாறுவோம் என்பது பொருந்தாது.
‘கனியேனும் வறிய செங்காயேனும்
உதிர் சருகு கந்த மூலங்களேனும்,
கனல்வாதை வந்தெய்தின் அள்ளிப்புசித்து நான்
கண்மூடி மௌனியாகித்
தனியே இருப்பதற்கு எண்ணினேன் எண்ணமிது
சாமி நீ யறியாததோ?’
என்று தாயுமான சுவாமிகள் கடவுளை வேண்டியது போல, கிடைத்த இலை காய்கனிகளை மட்டும் உண்டு வாழ்வது அவரைப் போன்ற யோகிகளுக்கும் துறவிகளுக்கும் தகுமேயன்றி உலகத்திலே “நோயற்ற வாழ்வு நான் வாழவேண்டும்” என்று விரும்புகிற நம்மைப் போன்றவருக்குப் பொருந்தாது. ஆகவே விஞ்ஞான முறைப்படி உடல் நலத்துக்கு ஏற்ற நல்லுணவை நாம் உண்ணவேண்டும். விஞ்ஞான முறைப்படி நம்முடைய உணவை நாம் அமைத்துக் கொள்ளவேண்டும்.
இக்காலத்தில் மனித வாழ்க்கை, விஞ்ஞானத்தோடு இயைந்ததாக அமைந்துவிட்டது. மனிதன், மற்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறியிருப்பதுபோலவே உணவுத் துறையிலும் விஞ்ஞானத்தின் உதவியினால் முன்னேறியிருக்கிறான். பல நூற்றாண்டுகளில் ஏற்பட்ட அனுபவத்தினாலும் விஞ்ஞான ஆராய்ச்சி முறையினாலும் உணவைப் பற்றிய நல்ல அனுபவத்தை மனிதர் அடைந்துள்ளனர். அந்த முறைப்படி உடல் நலத்துக்கு ஏற்ற நல்லுணவை உட்கொண்டு நோயற்ற வாழ்வு வாழப் பழகிக்கொள்வோமாக.
உடலுக்கு உரம் அளிக்கும் உணவுப் பொருள்கள் எவை? நோய் வராமல் தடுக்க எத்தகைய உணவுகளை உண்ணவேண்டும்? எப்படிப்பட்ட உணவை உட்கொண்டால் நோயில்லாமல் வாழலாம்? இக்கேள்விகளுக்கு அறிஞர்கள் தக்க விடை கூறியுள்ளனர்.
நாம் உண்ணும் உணவில், உடம்புக்கு வெப்பம் தருகிற மாவுப் பொருள்கள் இருக்கவேண்டும். மாவுப் பொருளை ஸ்டார்ச் என்று கூறுவர். தசைகளுக்கு உரம் தருகிற புரதப் பொருள்கள் இருக்க வேண்டும். எலும்புகளுக்கு பலந்தருகிறவையும் இரத்தத்தைத் தக்க முறையில் வைப்பவையும் ஆன உலோகப் பொருள்களும், உப்புப் பொருள்களும் இருக்கவேண்டும். வைட்டமின் என்னும் உயிர்ச்சத்துப் பொருள்கள் இருக்கவேண்டும். இவையெல்லாம் கலந்துள்ள உணவை உட்கொள்வோமானால் உடம்பில் நோயில்லாமல் நன்றாக வாழலாம். ஆனால், இந்தப் பொருள்களையெல்லாம் எங்குப் போய்த் தேடுவது? இவை எல்லாம் எங்கே கிடைக்கும் என்று கவலைப்பட வேண்டாம். நாம் உண்ணும் உணவில் எந்தெந்த சத்துக்கள் என்னென்ன உலோகங்கள், உப்புகள், வைட்டமின்கள் கலந்திருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அப்பொருள்களை நம் உணவில் கொள்வோமானால் அதுவே போதுமானது. நாம் உண்ணும் உணவுகளில் பலவிதமான சத்துக்களும் இருக்கின்றன. எந்தெந்தப் பொருளில் என்னென்ன சத்துகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பிறகு, அவைகளை எப்படிக் கலந்து உண்ணவேண்டும் என்பதை யறிந்து கொள்ளவேண்டும். இவைகளைத் தெளிவாகக் கூறுவோம்.
தானிய உணவு
உலகத்திலே உள்ள எல்லா மக்களுக்கும் முக்கிய உணவாக அமைந்தவை தானிய வகைகளே. அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம், கம்பு முதலிய தானிய வகைகள் உணவாக உண்ணப்படுகின்றன. சீனா, ஜப்பான், பர்மா, மலாயா, கிழக்கிந்தியத் தீவுகள், இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில், உலகத்திலேயுள்ள ஒருபகுதி மக்கள் அரிசியை முக்கிய ஆதாரமாகக் கொண்டு வாழ்கிறார்கள். ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா கண்டங்களில் வசிப்பவர் கோதுமையை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர். சில நாடுகளில் சோளம் முக்கிய உணவாக இருக்கிறது. தென் இந்தியாவில் நாம் அரிசியை முக்கிய உணவாகக் கொள்கிறோம்.
தானிய உணவில் பொதுவாக (உடம்புக்கு அனலைத் தருகிற) மாவுசத்து இருக்கிறது. ஆகவே இது உணவு வகையில் முக்கியமானது. நம்மவர்களில் சரிபாதிபேர், முக்கியமாகக் கிராமத்தில் வாழ்பவர் கேழ்வரகை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். கம்பு, சோளம், கோதுமையும் சிறுபான்மை நமது உணவாக இக்காலத்தில் அமைந்திருக்கின்றன. இந்த உணவுப் பொருள்களில் உள்ள குற்றங்குறைகளையும், நன்மை தீமைகளையும் ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டியது உடல் நலம் பெறுவோர் கடமையாகும். ஆகவே, தானியப் பொருள்களின் இயல்பை ஆராய்வோம்.
அரிசி :
அரிசி, நமது நாட்டு முக்கிய உணவு அரிசியில் பலவகை உண்டு. அரிசியைச் சோறாகச் சமைத்து உண்கிறோம். பொங்கல், இட்டலி, தோசை, உப்புமா, உருண்டை, பிட்டு முதலிய பலகாரங்களாகவும் செய்து உண்கிறோம். அரிசியினால் மற்றும் பலவிதப் பலகாரங்கள் செய்கிறோம். தானியவகைகளில் அரிசிதான் குறைந்த சத்து உள்ளது. கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை என்னும் தானியங்கள் அரிசியைவிட அதிக சத்துள்ளவை. குறைந்த சத்துள்ள அரிசியில் சிறந்தது கார் அரிசி. இந்த அரிசி சிவந்த நிறமாக இருக்கும். இதன் மேல் உள்ள தவிடுதான் இதற்குச் செந்நிறம் அளிக்கிறது. இந்தத் தவிட்டில் தசை வளர்க்கும் சத்து அதிகமாக இருப்பதனால், கார் அரிசி, மற்ற அரிசியை விட மிகச் சத்துள்ளது. ஆனால், நாகரிகம் உள்ளவர் என்று நினைத்துக்கொண்டிருப்பவர் இந்தக் கார் அரிசியை உண்பது இல்லை. இவர்கள் மிக வெண்மை நிறமாக, மல்லிகைப் பூவைப்போல் இருக்கிற அரிசியைத் தேடி வாங்கி உண்பார்கள். தவிடு அறவே போகும்படி குற்றிய வெண்மையான அரிசி, சத்துள்ள அரிசி அன்று.
பச்சரிசி என்றும் புழுங்கல் அரிசி என்றும் அரிசியில் இரண்டு விதம் உண்டு. புழுங்கல் அரிசி என்பது, நெல்லை அவித்து உலர்த்தி உமி நீக்கிய அரிசி. புழுங்கல் அரிசியில் தவிடு முழுவதும் நீங்கிப் போவது இல்லை; சிறிதளவு தவிடு அரிசியுடன் ஒட்டிக் கொண்டிருக்கும். பச்சிரிசி என்பது நெல்லை அவிக்காமலே உமி நீக்கிய அரிசி. இதில் தவிடு பெரும்பாலும் நீங்கிவிடும். ஆகவே, தவிடுபோன பச்சரிசி அதிக சத்துடையதல்ல. புழுங்கல் அரிசியில் சிறிதளவு தவிடு இருப்பதால், அது பச்சரிசியை விடச் சத்துள்ளது.
அரிசியைச் சோறு சமைக்கும்போது, அதை நீரில் ஊற வைத்துப் பல தடவை நன்றாகக் கழுவிய பிறகு அரிசியை உலையில் இட்டுச் சோறு சமைக்கிறார்கள். இப்படி அரிசியைப் பல தடவை நீரில் கழுவுவது தவறு. அரிசியைக் கழுவுவதால் தவிடு - சிறிதளவுள்ள தவிடும் - முழுவதும் போய்விடுகிறது. தவிடு கழுவப்படுவதனால் அதிலுள்ள தசை வளர்க்கும் சத்து எடுபட்டுப் போகிறது. மேலும் சோறு வெந்த பிறகு, அதிலுள்ள கஞ்சியை வடித்து விடுகிறார்கள். கஞ்சியை வடித்து விடுகிறபடியினாலே, சோற்றிலுள்ள சத்து மேலும் கழிந்துவிடுகிறது. இவ்வாறு தவிட்டையும் கழுவிவிட்டு, கஞ்சியையும் வடித்துவிட்டு, வெறும் சோற்றை மட்டும் உண்பதனால் அரிசியில் உள்ள பெரும் பான்மையான சத்துக்கள் கழிந்துவிடுகின்றன. ஆகவே அரிசிச் சோற்றில் உணவுச் சத்து குறைவு; மிக மிகக் குறைவு.
அரிசியைக் கழுவிய நீரையும் சோற்றை வடித்த கஞ்சியையும் கிராமவாசிகள் மாடுகளுக்குக் குடிக்கக் கொடுக்கிறார்கள். இது மாடுகளுக்குச் சிறந்த உணவாகிறது.
அரிசியைத் தவிடுபோகக் கழுவாமல் சமைக்க வேண்டும். பொங்கலாகச் சமைப்பது நல்லது. அவலில் தவிடு இருப்பதனால், அரிசியைவிட அவல் சத்துள்ள உணவு.
என்ன? கேவலம் தவிட்டில் அவ்வளவு சத்து இருக்கிறதா? என்று சிலர் வியப்படையக் கூடும். ஆம். தவிடு சத்துள்ளது. உடம்புக்குப் பலமும் உறுதியும் அளிக்கும் பொருள்களில் தவிடு முக்கியமானது. இதைப் பற்றி இந்நூலில் பின்னர் எழுதுவோம்.
முற்காலத்தில் நெல்லை உரலில் இட்டு உலக்கையால் குற்றி உமி நீக்கி அரிசி எடுப்பார்கள். அப்படிச் செய்வதால் அரிசியின் மேலுள்ள தவிடு முழுவதும் பிரிந்துபோகாமல் ஓரளவு அரிசியில் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தக் கைக்குற்றல் அரிசியைச் சமைத்து சாப்பிட்டதால் உடம்புக்குப் பலம் உண்டாயிற்று. இப்போது கைக்குற்றல் அரிசி கிடைப்பதில்லை. மிஷினில் நெல்லைக்குற்றி அரிசி எடுக்கிறார்கள். மிஷினில் அரிசி உண்டாக்கும்போது அரிசியில் உள்ள தவிட்டை அறவே நீக்கிவிட்டு, வெண்மையான அரிசி உண்டாக்குகிறார்கள். வெண்மையான அரிசி, தவிடு நீக்கிய அரிசியாகையால், அதில் தசை வளர்ச்சிக்குரியசத்து இல்லை.
ஆகவே, அரிசிச் சோறு தானிய வகையில் மிகவும் கீழ்த்தரமானது. தசைவளர்ச்சிக்குரிய சத்து இல்லாதது.
அரிசி, மற்றத் தானியங்களைப் போலவே மாவு சத்துப் பொருள். வெறும் அரிசிச்சோற்றில் உடம்புக்கு வேண்டிய வெப்பத்தைத் தருகிற மாவுப் பொருள் மட்டும் உண்டு. இது ஒன்றுதான் அரிசிச் சோற்றினால் நமக்குக் கிடைக்கிற நன்மை. வாய்ப்புள்ளவர் நெல்லைத் தவிடு நீக்காமல் அரிசியாக்கிச் சோறு சமைத்து உண்ணவேண்டும். அந்த வாய்ப்பு இல்லாதவர், இழந்து போன தவிட்டுச் சத்தை வேறு விதத்தில் பெறவேண்டும். எவ்வாறு பெறுவது என்பதை இந்நூலில் வேறு இடத்தில் கூறுவோம்.
கேழ்வரகு :
அரிசிக்கு அடுத்தபடியாக நமது நாட்டில் உண்ணப்படும் தானியம் கேழ்வரகு ஆகும். இதைப் பெரும்பாலும் கிராமவாசிகள் - உழைப்பாளிகள் - உண்கிறார்கள். கேழ்வரகு உண்பது அனாகரிகமானது என்று உண்மையறியாதவர் தவறாகக் கருதுகிறார்கள். அரிசியைவிடச் சத்துள்ள தானியம் கேழ்வரகு. கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் களியாகவும், பிட்டாகவும், கூழாகவும், அடையாகவும் சமைத்து உண்ணலாம். தசைகளுக்குப் பலந்தருகிற தவிடு கேழ்வரகில் சேர்ந்திருக்கிறபடியால் இது அரிசியைவிட நல்ல பலந்தருகிற உணவாகும். தசைகளுக்கு உரமளிக்கிற தவிடும், உடல் நலத்துக்கு வேண்டிய வெப்பம் அளிக்கிறமாவும் கேழ்வரகில் இருக்கிறபடியால், கேழ்வரகு அரிசியை விடச் சிறந்த உணவு ஆகும். இதனால்தான், கேழ்வரகு உண்பவர் உடல் உரம் பெற்று நன்றாக இருப்பதையும், அரிசி உண்பவர் அவ்வளவு உரம் பெறாமல் இருப்பதையும், கண்கூடாகக் கண்டு வருகிறோம். சிலருக்கு கேழ்வரகு உணவு உடம்புக்கு ஒத்துக்கொள்வதில்லை. இப்படிப்பட்டவர் நெய், பால், தயிர் இவைகளைக் கேழ்வரகுடன் சேர்த்துக் கொண்டால், உடம்புக்கு ஒத்துப் போகும். கேழ்வரகில் கால்ஸியம் இரும்பு என்னும் சத்துக்களும் உள்ளன.
கம்பு :
கேழ்வரகுக்கு அடுத்தபடியாக உள்ள தானியம் கம்பு. அரிசியை விட அதிக சத்துள்ள தானியம் இது. கம்பிலுள்ள தவிடும் எடுபடாமல் அதிலேயே இருப்பதனால், கேழ்வரகைப்போலவே இதுவும் சத்துள்ள உணவு. இதைப் பலகாரமாகச் செய்து உண்கிறார்கள். இதிலிருந்து உடல் நலத்துக்குரிய உயிர்ச்சத்துப் பொருளை உண்டாக்கலாம். அதன் விபரத்தை இந்நூலின் மற்றோர் இடத்தில் கூறுவோம்.
சோளம் :
சோளமும் அரிசியைவிட சத்துள்ள உணவு. இதில், அரிசியை விடப் பன்மடங்கு கொழுப்புப் பொருள்கள் உண்டு கோதுமையில் இருப்பதுபோல, சோளத்திலும் பிசு பிசுப்புத்தன்மை இருப்பதனால் கோதுமையை ரொட்டி சுடுவதுபோலச் சோளத்திலும் ரொட்டி சுடலாம். கேழ்வரகு, கம்பு போலவே, சோளமும் சத்துள்ள நல்ல உணவு. தவிடு எடுபடாத சோளத்தில் தசைகளுக்கு. உரமளிக்கும் சத்தும், உடம்புக்கு வெப்பம் அளிக்கும் மாவுப் பொருளும் உண்டு.
கோதுமை :
தானிய வகைகளில் மிகச் சத்துள்ளது கோதுமை. தவிடு எடுபடாத முழு கோதுமையைத்தான் இங்குக் கூறுகிறோம். மிஷினில் குத்தித் தவிடு போக்கிய கோதுமையில், அரிசியைப் போலவே, சத்து கிடையாது. கடைகளில் விற்கப்படும் கோதுமை மா, கோதுமை நொய் (ரவை) முதலியவை தவிடு எடுபட்டவை. இவைகளில், தசைகளுக்கு உரம் அளிக்கிற சத்துப்பொருள் இல்லை. உடம்புக்கு வெப்பம் அளிக்கிற மாவு சத்துமட்டும் இருக்கிறது. ஆகையினால் கோதுமையை உண்போர், கடையில் மாவாகவும், நொய்யாகவும் வாங்காமல், முழு கோதுமையை வாங்கி அரைத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு அரைக்கப்பட்ட முழு கோதுமை மாவில், அல்லது முழு கோதுமை நொய்யில் தசைகளுக்கு உரமளிக்கும் தவிடும், உடலுக்கு வெப்பம் அளிக்கும் மாவுப் பொருளும் இருக்கிறபடியால், மிக நல்ல உணவாகும். கோதுமையில் பிசுப்புத்தன்மை இருப்பதனால் இதை ரொட்டி செய்ய முடிகிறது. அரிசி, கம்பு, கேழ்வரகில் பிசுப்புத்தன்மை இல்லாதபடியால் அவைகளில் ரொட்டி செய்ய முடிவதில்லை.
கோதுமையைப் பூரி, சப்பாத்தி, உப்புமா முதலியனவும் செய்து உண்ணலாம். கோதுமை - தவிடு போகாத கோதுமை - தானிய வகைகளில் முதன்மையானது! சிறந்தது. கோதுமைக்கு அடுத்தபடியுள்ள தானியங்கள் சோளமும் கேழ்வரகும் கம்பும் ஆகும். அரிசி தானிய வகைகளில் கடைசித் தரமானது.
கோதுமை சிறந்த உணவு என்று கூறினோம். ஆனால் முக்கியமாக ஒன்றை நன்கு தெரிந்துகொள்ளவேண்டும். கோதுமை முக்கிய உணவாகக் கொள்ளும் நாட்டினர் வெறும் கோதுமை ரொட்டியை மட்டும் உண்பதில்லை. கோதுமை ரொட்டியோடு, வெண்ணையைத் தொட்டுக் கொண்டு உண்கிறார்கள். பூரி, சப்பாத்தியாகக் (கோதுமை) செய்து உண்போர். அவற்றை நெய்யில் சுட்டுச் சாப்பிடுகிறார்கள். காரணம் என்ன? கோதுமையை எந்தவிதமாகக் சாப்பிட்டாலும் அதனுடன் நெய் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். எண்ணெய் மட்டும் சேர்த்துக் கொண்டால் போதாது. எண்ணெயில் பூரி, சப்பாத்தி செய்து உண்போர், அதனுடன் மாமிசம், மீன், முட்டை முதலியவற்றைச் சேர்த்துக் கொண்டால் தீமை ஒன்றும்வராது. மாமிச உணவு உண்ணாத, மரக்கரி உணவு மட்டும் உண்கிறவர்கள், கோதுமையை ரொட்டியாகவோ பூரி சப்பாத்தியாகவோ அல்லது வேறு விதமாகவோ சாப்பிட்டால் அதனுடன் நெய் அல்லது வெண்ணெயைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். நெய் வெண்ணெய் சேர்க்காமல் கோதுமையை நெடுங்காலம் உபயோகிப்பவர்களுக்கு மாலைக்கண், கல்லடப்பு என்னும் நோய்கள் உண்டாகும். இக்காரணம் பற்றித்தான் கோதுமையை முக்கிய உணவாகக் கொள்கிறவர்கள் நெய் அல்லது வெண்ணையை உபயோகிக்கிறார்கள். இந்நூலெழுதுபவர், இரவில் கோதுமையை உணவாகக் கொண்டு வருகிறார். நெய் அல்லது வெண்ணெய் சேர்க்காவிட்டால் கண் எரிச்சலும் மலச்சிக்கலும், உண்டாகி உடல் நலம் கெடுவதையும், நல்ல நெய் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் இருப்பதையும் அனுபவ வாயிலாகக் கண்டிருக்கிறார். ஆகவே, கோதுமையை வழக்கமாக உண்ணும் பழக்கம் உள்ளவர் கலப்பில்லாத நல்ல நெய்யைச் சேர்த்துக் கொள்ளவேண்டும். நெய் சேர்த்துக் கொள்ளாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே உண்டாகும். நல்ல நெய் கிடைக்காதவர்களுக்கு மீன், முட்டை இறைச்சிகளைச் சேர்த்துக்கொள்வதனால் மேற்படி தீமைகள் உண்டாகாது.
குறிப்பு : மக்கள் முக்கிய உணவாகக் கொள்ளும் தானியங்களைப் பற்றிக் கூறினோம். முக்கியமாக அரிசியும் கோதுமையும் தான் பெரும்பான்மையான மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. ஆனால் கடைகளில் விற்கும் அரிசியும், கோதுமையும் தவிடு போக்கியவைகளாக உள்ளன. தசைகளுக்கு உரமளிக்கிற தவிடு இவற்றில் இல்லை. ஆனால், உடல் நலத்திற்கு அவசியமாக வேண்டப்படுகிற வெப்பம் உண்டாக்குகிற ஸ்டார்ச் என்னும் மாவுப் பொருள் உண்டு. இவற்றில் தானியங்களில் எல்லாம் மாவுப் பொருள்களே முக்கியமாகவுள்ளன. மாவுப் பொருள்களாகிய, அரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம், கோதுமை முதலிய உணவுகளை உண்ணும் போது வாயில் சுரக்கும் உமிழ் நீரோடு கலந்து குழப்பி உண்ண வேண்டும். ஏனென்றால், உமிழ் நீருக்கு மாவுப் பொருள்களைச் செரிக்கச் செய்கிற தன்மை உண்டு. ஆகவே, பல்லையும் உமிழ் நீரையும் நன்கு பயன்படுத்தி உடல் நலம்பெறக் கற்றுக்கொள்ள வேண்டும்.