மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/010-052
9. யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறைக்குப் பிறகு கொங்கு நாட்டையரசாண்டவன் அவனுடைய தம்பி மகனான இளஞ்சேரல் இரும்பொறை (ஒன்பதாம் பத்தின் தலைவன்). இளஞ்சேரல் இரும்பொறைக்குப் பின் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொங்கு நாட்டை யரசாண்டான்.
மாந்தரன் சேரல் என்பது இவனுடைய பெயர். யானையின் கண் போன்ற கண்ணையுடையவன் (புறம். 22:29). ஆகையால் யானைக்கட் சேய் என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். ‘வேழ நோக்கின் விறல் வெஞ்செய்’ என்றும் இவன் கூறப்படுகின்றான். வேழம் யானை; நோக்கு - பார்வை. சேய் - பிள்ளை, மகன். இவனுடைய பாட்டனான செல்வக்கடுங்கோ வாழியாதனுக்கு மாந்தரஞ் சேரல் என்னும் பெயரும் உண்டு. இவனுக்கும் மாந்தரஞ் சேரல் என்னும் பெயர் உண்டு. ஒரே பெயரைக் கொண்டிருந்த இவ்விருவரையும் பிரித்துக் காட்டுவதற்காக, ‘யானைக்கட்சேய்’ என்னும் அடைமொழி கொடுத்து இவன் கூறப்படுகிறான். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (யா.சே.மா. சே.இ.) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறான். தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்கு மக்கட்பேறு இல்லாமலிருந்தும் வேள்வி செய்து ஒரு மகனைப் பெற்றான் என்று அறிந்தோம். அந்த வேள்வியினால் பிறந்த மகன் இவனாக இருக்கலாம் என்று தோன்றுகிறான்.1
யா. சே. மா. சே. இரும்பொறை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சில போர்களைச் செய்தான். அப்போர்களில் இவனுக்கு வெற்றியுந் தோல்வியுங் கிடைத்தன. விளங்கில் என்னும் ஊரில் இவன் பகைவருடன் போர் செய்து வெற்றிபெற்றான். அவ்வமயம், இந்த வெற்றியைப் பாடுவதற்கு இப்போது கபிலர் இல்லையே என்று இவன் மனவருத்தம் அடைந்தான். (இவனுடைய பாட்டனான செல்வக் கடுங்கோ வாழியாதனைக் (மாந்தரஞ் சேரலைக்) கபிலர் ஏழாம் பத்துப் பாடினார்) தன்னைப் பாடுவதற்கு இப்போது கபிலர் இல்லையே என்று இவன் வருந்தியதைக் கண்டு பொருந்தில் இளங்கீரனார், கபிலரைப் போலவே நான் உன்னைப் பாடுவேன் என்று கூறினார்.
“செறுத்த செய்யுள் செய்செந் நாவின்
வெறுத்த வேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவல் மன்னால் பகைவரைக் கடப்பே” (புறம்.53:11-15)
புலவர் இளங்கீரனார் இவ்வாறு கூறிய பிறகு இவன் மேல் ஒரு பத்துச் செய்யுட்களைப் பாடியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் பத்து, பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்தாக இருக்கவேண்டும். பத்தாம்பத்து இப்போது கிடைக்கவில்லை. அது மறைந்து போயிற்று.
யா. சே. மா. சே. இரும்பொறைக்கும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர் நடந்தது. அந்தப் போர் எந்த இடத்தில் நடந்ததென்று தெரியவில்லை. அந்தப் போரில் இவன் வெற்றியடைவது திண்ணம் என்று இவன் உறுதியாக நம்பினான். ஆனால், இவனுக்குத் தோல்வி ஏற்பட்டது. சோழன் வென்றான். சோழனுடைய வெற்றிக்கும் இவனுடைய தோல்விக்கும் காரணமாக இருந்தவன் மலையமான் அரசனாகிய தேர்வண்மலையன் என்பவன். போர் நடந்த போது தேர்வண்மலையன் சோழனுக்கு உதவியாக வந்து இவனைத் தோல்வியுறச் செய்தான். இந்தச் செய்தியைப் புறநானூறு 125ஆம் செய்யுளினால் அறிகிறோம். இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “சேர மான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச் சோழற்குத் துப்பாகிய தேர்வண் மலையனைப் பாடியது” என்று கூறுகிறது. (பொருதவழி போர் செய்தபோது; துப்பு - பலம்.)
இவன் காலத்தில் பாண்டி நாட்டை யரசாண்டவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். அந்தப் பாண்டியனுடன் யா.சே.மா.சே. இரும்பொறை போர் செய்தான். போர் எந்த இடத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, அந்தப் போரில் இவன் தோற்றது மட்டுமல்லாமல் பாண்டியனால் சிறைப் பிடிக்கப்பட்டுச் சிறையில் வைக்கப்பட்டான். ஆனால், எவ்விதமாகவோ சிறையிலிருந்து தப்பி வெளிவந்து தன்னுடைய நாட்டையரசாண்டான். இந்தச் செய்தியைக் குறுங்கோழியூர் கிழார் இவனைப் பாடிய செய்யுளி லிருந்து அறிகிறோம் (புறம். 17). அந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதிற் போய்க் கட்டி வெய்தினானைப் பாடியது” என்று கூறுகிறது. (பிணியிருந்த - கட்டப்பட்டிருந்த, சிறைப் பட்டிருந்த. கட்டில் எய்தினானை -சிம்மாசனம் ஏறியவனை; கட்டில் - சிம்மாசனம்.)
கருவூர்ப் போர்
யானைக்கட்சேய் மாந்தரன் சேரல் இரும்பொறை தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் தோல்வியடைந்ததை யறிந்தோம். இவன் காலத்தில் சோழ நாட்டைச் சில சோழ அரசர்கள் அரசாண்டு வந்தனர். அவர்களில், உறையூரிலிருந்து அரசாண்ட கிள்ளிவளவனும் ஒருவன். இந்தக் கிள்ளிவளவனைப் பிற்காலத்தவர் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்றும் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்றுங் கூறுவர். குளமுற்றம் குராப்பள்ளி என்னும் இரண்டு இடங்களில் இவன் இறந்துபோனான் என்பது இதன் பொருள் அன்று. குளமுற்றம், குராப்பள்ளி இரண்டும் ஒரே இடத்தைக் குறிக்கின்றன. குராப்பள்ளியில் இறந்த கிள்ளிவளவன் வேறு, குளமுற்றத்தில் இறந்து போன கிள்ளிவளவன் வேறு என்று கருதவேண்டா. இரு பெயரும் ஒருவரையே குறிக்கின்றன.2
இந்தக் கிள்ளிவளவன் கருவூரை (கொங்கு நாட்டுக் கருவூரை) முற்றுகையிட்டான். அப்போது கருவூர்க் கோட்டைக்குள் இருந்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இரும்பொறை, வெளியே வந்து கிள்ளிவளவனுடன் போர் செய்யாமல் கோட்டைக் குள்ளேயே இருந்தான். அப்போது ஆலத்தூர்கிழார் என்னும் புலவர் சோழனிடம் வந்து, ‘போருக்கு வராமல் இருக்கிறவனுடன் நீ போர் செய்து முற்றுகை இடுவது தகுதியன்று’ என்று கூறினார்.3 கிள்ளிவளவன் புலவர் சொல்லை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து முற்றுகை செய்தான். மாந்தரஞ் சேரல், போருக்கு வராமலிருந்த காரணம், தனக்கு வெளியிலிருந்து வரவேண்டிய அரசரின் உதவியை எதிர்பார்த்திருந்ததுதான். இவன் எதிர்பார்த்திருந்த உதவி கிடைத்தபிறகு இவன் கிள்ளிவளவனுடன் போர்செய்தான். போரின் முடிவு அவனுக்குத் தோல்வியாக இருந்தது. சோழன் கிள்ளிவளவனே வென்றான்.
போரில் கருவூர்க் கோட்டையைக் கிள்ளிவளவன் தீயிட்டுக் கொளுத்தினான். மாடமாளிகைகள் எரிந்து விழுந்தன.4
சோழன், கொங்கு நாட்டின் தலைநகரை வென்றபடியால் கொங்குநாடு முழுவதையுமே வென்றான் என்பது பொருளன்று. கோவூர்க்கிழார் கிள்ளிவளவனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடினார் (“கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே” என்றும், “வஞ்சி முற்றம் வயக்களனாக, அஞ்சாமறவர் ஆட்போர் பழித்துக் கொண்டனை பெரும குடபுலத்திதரி” என்றுங் கூறுகிறார் - புறம் 373). வஞ்சி - கருவூர், குடபுலம் - கொங்கு நாடு. இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு, “சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூரெறிந்தானைப் பாடியது” என்று கூறுகிறது. மாறோக்கத்து நப்பசலையாரும் சோழனுடைய கருவூர் வெற்றியைப் புகழ்ந்து பாடியுள்ளார்.5
கிள்ளிவளவன் கருவூரை வென்றபோதிலும் அதை அவன் ஆட்சி செய்யவில்லை. யா.க.சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறை அதை மீட்டுக் கொண்டிருக்க வேண்டும். கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூரை முற்றுகை செய்திருந்த காலத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரநாட்டு முசிறிப் பட்டினத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த படிமம் (தெய்வ உருவம்) ஒன்றை எடுத்துக் கொண்டு போனான் என்பது தெரிகின்றது. கிள்ளிவளவன் கருவூரை முற்றுகையிட்டபோது, யா. க. சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு உதவி செய்யச் சேரன் தன்னுடைய சேனைகளைக் கொங்கு நாட்டுக்கு அனுப்பியிருக்கக் கூடும். அந்தச் சமயத்தில் பாண்டியன் நெடுஞ்செழியன் முசிறியை முற்றுகையிட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. பாண்டியன் முசிறியை முற்றுகையிட்டு அங்கிருந்து படிமத்தைக் கொண்டுபோன செய்தியைத் தாயங் கண்ணனாரின் செய்யுளிலிருந்து அறிகிறோம்.6 இந்தப் பாண்டியனின் காலத்தவரான நக்கீரரும் இவனுடைய முசிறிப் போரைக் கூறுகிறார்.7
பாண்டியன் முசிறியிலிருந்து கொண்டுபோன படிமம், சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகியின் பத்தினிப் படிவமாக இருக்கக் கூடும் என்று எளங்குளம் குஞ்சன் பிள்ளை தாம் மலையாள மொழியில் எழுதிய கேரளம் அஞ்சும் ஆறும் நூற்றாண்டுகளில் என்னும் நூலில் எழுதுகிறார். அது கண்ணகியின் படிமமாக இருக்க முடியாது; வேறு ஏதோ படிமமாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. குஞ்சன் பிள்ளையின் கருத்தை இந்துசூடன் அவர்களும் மறுத்துக் கூறுகிறார்.8
குளமுற்றத்துத் (குராப்பள்ளித்) துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கு நாட்டின் தலைநகரத்தை முற்றுகையிட்டு வென்றதும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரநாட்டு முசிறிப்பட்டினத்தை முற்றுகையிட்டு வென்றதும் ஆகிய நிகழ்ச்சிகள், அக்காலத்தில் சேர நாட்டிலும் கொங்கு நாட்டிலும் சேர அரசர்கள் வலிமை குறைந்து இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. சேரன் செங் குட்டுவன் காலத்துக்குப் பிறகு சேர அரசர்கள் பலமில்லாதவர்களாக இருந்தார்கள் என்பது தெரிகின்றது.
யா. க. சே. மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கு முன்பு கொங்கு நாட்டை யரசாண்ட இளஞ்சேரல் இரும்பொறை, சோழநாட்டு இளஞ் சேட் சென்னியை வென்றான் என்றும் சதுக்கப்பூதர் என்னும் தெய்வங்களைத் தன்னுடைய தலைநகரத்தில் கொண்டுவந்து அமைத்தான் என்றும் அறிந்தோம். அந்தப் பூதங்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பேர்போன பூதங்களாக (தெய்வங்களாக) இருக்கக்கூடும். அந்தத் தெய்வ உருவங்களை இளஞ்சேரல் இரும்பொறை அங்கிருந்து கொண்டுவந்து தன் நாட்டில் அமைத்துத் திருவிழாச் செய்தான். அந்தப் பகையை ஈடுசெய்வதற்காகவே குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கொங்கு நாட்டுக் கருவூரின் மேல் படை யெடுத்துச் சென்றான் என்று கருதத் தோன்றுகிறது. கிள்ளிவளவன் தன் போர் முயற்சியில் வெற்றியைக் கண்டான்.
சேர நாட்டின் மேற்குக் கடற்கரையில் இருந்த பேர்போன தொண்டித் துறைமுகப்பட்டினம் இவன் காலத்திலும் கொங்குச் சோழரின் துறைமுகமாக இருந்தது. தொண்டிப் பட்டினத்தின் கடற்கரையில் கழிகளும் தென்னை மரங்களும் வயல்களும் மலைகளும் இருந்தன.
“கலையிறைஞ்சிய கோட்டாழை
அகல்வயல் மலைவேலி
நிலவுமணல் வியன்கானல்
தெண்கழிமிசை தீப்பூவின்
தண்தொண்டியோர் அடுபொருந”(புறம்.7:19-13)
(தாழை - தென்னை)
இவன் நீதியாகச் செங்கோல் செலுத்தினான். ‘அறந்துஞ்சும் செங்கோலையே’ (புறம். 20:17). தேவர் உலகம் போல இவனுடைய நாடு இருந்தது. ‘புத்தேளுலகத்தற்று’ (புறம். 22 : 35). இவனுடைய ஆட்சியில் மக்களுக்கு அமைதியும் இன்பமும் இருந்தது.
குறுங்கோழியூர்கிழார் இவ்வரசனைப் பாடியுள்ளார் (புறம். 17:20, 22). பொருந்தில் இளங்கீரனார் இவனைப் பாடினார் (புறம். 53) இப் புலவரே இவன்மீது பத்தாம் பத்தைப் பாடியிருக்க வேண்டும் என்பதை முன்னமே கூறினோம். புலத்துறை முற்றிய கூடலூர்கிழாரை இந்த அரசன் ஆதரித்தான். இவரைக் கொண்டு இவன் ஐங்குறுநூறு என்னும் தொகைநூலைத் தொகுப்பித்தான். (“இத்தொகை தொகுத்தார், புலத்துறை முற்றிய கூடலூர்கிழார்; இத்தொகை தொகுப்பித்தார் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையார்” என்று ஐங்குறுநூற்றின் இறுதியில் எழுதப்பட்டிருக்கிறது.)
யா.சே.மா.சே. இரும்பொறை எத்தனை யாண்டு அரசாண்டான் என்பது தெரியவில்லை. புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் வானநூல் அறிந்தவர். ஒருநாள் இரவு வானத்தில் விண்மீன் ஒன்று சுடர்விட்டு எரிந்து விழுந்ததை அவர் கண்டார். அப்போது அவர் வானநூலைக் கணித்துப் பார்த்து யா.சே.மா.சே. இரும்பொறை ஏழாம் நாள் இறந்து விடுவான் என்று அறிந்தார். வானத்தில் விண்மீன் எறிந்து விழுந்தால் அரசன் இறந்து விடுவான் என்பது வானநூலார் நம்பிக்கை. புலவர் கணித்துக் கூறியபடியே ஏழாம் நாள் இவ்வரசன் இறந்து போனான். அப்போது அப்புலவர் இவன்மீது ‘ஆனந்தப் பையுள்’ பாடினார் (புறம் 229). இச்செய்யுளின் அடிக்குறிப்பு “கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இன்ன நாளிற்றுஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துப் பாடியது” என்று கூறுகிறது (துஞ்சுதல் - இறந்துபோதல்). யா.சே. மா.சே. இரும்பொறை ஏறாத்தாழ கி. பி. 170 முதல் 190 வரையில் அரசாண்டான் என்று கருதலாம்.
யா.சே. மா.சே. இரும்பொறையின் காலத்தில் சோழநாட்டையர சாண்டவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன், பாண்டிநாட்டை யரசாண்டவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், சேர நாட்டை யரசாண்டவன் செங்குட்டுவனின் மகனான குட்டு வஞ்சேரல் (கோக்கோதை மார்பன்). இவர்கள் சேரன் செங்குட்டுவன் காலத்துக்குப் பிறகு (கி.பி. 180க்குப் பிறகு) அரசாண்டார்கள்.
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
1. ‘1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்' என்னும் பெயரினால் ஆங்கிலத்தில் முதன் முதலாகத் தமிழ் நாட்டுச் சரித்திரத்தை எழுதியவர் கனகசபைப் பிள்ளையவர்கள். அவர் காலத்தில் சங்க இலக்கியங்கள் அச்சில் வராமல் ஏட்டுச் சுவடிகளாக இருந்தன. ஆகவே சங்க இலக்கியங்களை ஏட்டுச் சுவடியில் படித்து அந்நூலை எழுதினார். அதில் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சேரன் செங்குட்டுவனுடைய மகன் என்று பிழையாக எழுதினார். அவர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்காரும் அப்படியே எழுதி விட்டார். அவரைப் பின்பற்றி பானர்ஜி என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஜூனியர் ஹிஸ்டரி. ஆப் இந்தியா’ என்னும் நூலில் 94 ஆம் பக்கத்தில் அதே தவற்றைச்செய்து விட்டார். கே.ஜி. சேஷையர் அவர்கள் யானைக்கட்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறையைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். The last Great cera of the Sangam Period by K.G. Sesha Aiyer, Dr. S.K. Aiyengar Commemoration Volume. P. 217 -221).
2. I.A. XXIX. P, 250 N. 2 P. 49-5). The Colas Vol. I K.A. Nilakanta Sastri (1935).
3. “தண்ணென் பொருறை வெண்மனல் சிதையக் கருங்கைக் கொல்லன் யரஞ்செய் யவ்வாய், நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து, வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவு தொறுங், கடிமரந்தடியும் ஓசை தன்னூர், நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப, ஆங்கினி திருந்த வேந்தனொடீங்குநின், சிலைத்தார் முரசங் கறங்க, மலைத்தனையென்பது நாணுத்தக வுடைத்தே. (புறம்: 36:5-13) இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு “சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் முற்றியிருந்தானைப் பாடியது” என்று கூறுகிறது.
4. “வேந்து புறங்கொடுத்த வீய்ந்துகு பறந்தலை, மாட மயங்கெரி மண்டிக் கோடிறுபு, உருமு எறி மலையின் இருநிலஞ்சேர” (புறம்.379:19-21)
5. எழு சமங்கடந்த எழுவுறழ் திணிதோள், கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ, யாங்கன மொழிகோ யானே ஓங்கிய, வரையளந்தறியாப் பொன்படு நெடுங்கோட்டு, இமயஞ் சூட்டிய ஏமவிற்பொறி, மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய, வாடாவஞ்சி நாட்டு நின், பீடுகெழு நோன்றாள் பாடுங்காலே.” (புறம். 39: 11-18) இமயஞ்சூட்டிய ஏமவிற்பொறி சேர அரசரின் முன்னோன் ஒருவன் இமயமலை யுச்சியில் பாறை பொன்றின்மேல் பொறித்து வைத்த வில்லின் அடையாளம். வானவன் – சேர அரசர்பரைக்குப் பொதுப் பெயர். வாடாவஞ்சி - வஞ்சி மாநகரமாகிய கருவூர்.
6. “சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க, யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து யவனர் தந்த வினைமாண் நன்கலம், பொன்னொடு வந்து கறியொடு பெயரும், வளங்கெழு முசிறியார்ப் பெழ வளைஇ, அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய, நெடுநல் யானை யடுபோர்ச் செழியன்” (அகம். 149: 7-13).
7. “கொய்சுவற் புரவிக் கொடித் தேர்ச் செழியன், முதுநீர் முன்னுறை முசிறி முற்றிக், களிறுபட வெருக்கிய கல்லென் ஞாட்பின் அரும்புண்ணுறுநர்”. (அகம். 57:14-17).
8. P. 83 - 84 The Secret Chamber V.T. Indo Chudan 1969.