மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/011-052
10 கணைக்கால் இரும்பொறை
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறைக்குப் பிறகு கொங்குநாட்டை யரசாண்டவன் கணைக்கால் இரும்பொறை. இவன், முன்னவனுக்கு எந்த முறையில் உறவினன் என்பது தெரியவில்லை. இவனைப் பற்றிய முழுவரலாறுந் தெரியவில்லை. கொங்குச் சேரரின் துறைமுகமாகிய தொண்டிப்பட்டினத்தின் கோட்டைக் கதவில் கணைக்காலிரும்பொறை, தனக்கு அடங்காத மூவனுடைய பல்லைப் பிடுங்கிப் பதித்திருந்தான் என்று அப்பட்டினத்திலிருந்த கணைக்காலிரும்பொறையின் புலவர் பொய்கையார் கூறுகிறார்.1
இவன் காலத்தில் சோழ நாட்டை அரசாண்டவன் செங்கணான் என்பவன். செங்கட்சோழன் என்றும் இவனைக் கூறுவர். செங்கட் சோழன் பாண்டியனையும் கொங்குச் சேரரையும் வென்று அரசாண்டான். சோழ நாட்டுப் போர் (திருப்போர்ப்புரம்) என்னும் ஊரில் செங்கணானுக்கும் கணைக்காலிரும்பொறைக்கும் போர் நடந்தது. அந்தப்போரில் கணைக்காலிரும்பொறை தோல்வியடைந்ததுமல்லாமல் சோழனால் சிறைப்பிடிக்கப்பட்டுக் குடவாயில் (கும்பகோணம்) சிறையில் வைக்கப்பட்டான். அப்போது கணைக்காலிரும்பொறையின் புலவராகிய பொய்கையார் இவனை விடுவிப்பதற்காகச் செங்கட்சோழன்மேல் களவழி நாற்பது என்னும் நூலைப் பாடினார்.
குடவாயிற் சிறைச்சாலையிலிருந்த கணைக்காலிரும் பொறை நீர் வேட்கை கொண்டு ‘தண்ணீர் தா’ என்று கேட்டபோது சிறைச் சாலையிலிருந்தவர் உடனே தண்ணீர் தராமல் காலங்கழித்துக் கொடுத்தனர். கணைக்காலிரும்பொறை அந்நீரை யுண்ணாமல் ஒரு செய்யுளைப் பாடித் துஞ்சினான் (துஞ்சினான் - உறங்கினான்). அந்தச் செய்யுள் புறநானூற்றில்74ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அச்செய்யுள் இது:
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளிற் றப்பார்.
தொடர்ப்படு ஞமலியின் இடர்படுத் திரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே.'
இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “சேரமான் கணைக்காலிரும்பொறை சோழன் செங்கணானொடு திருப்போர்ப் புரத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடாவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து தண்ணீர் தாவென்று பெறாது பெயர்த்துப் பெற்றுக் கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.”
(திருப்போர்ப்புரம் - போர் என்னும் ஊருக்கு அருகில். பொருது - போர் செய்து. பற்றுக்கோட்பட்டு - பிடிக்கப்பட்டு. பெயர்த்துப் பெற்று - காலந்தாழ்ந்துப் பெற்று. துஞ்சிய - இறந்த, தூங்கின.)
பிற்காலத்து நூலாகிய கலிங்கத்துப் பரணி இதைக் கூறுகிறது. பொய்கையார் களவழி பாடின பிறகு அதைக் கேட்டுச் சோழன் கணைக்காலிரும்பொறையை விடுதலை செய்தான் என்று அந்நூல் கூறுகிறது.2
களவழி நாற்பது செங்கட் சோழனைச் செங்கண்மால் (செய்யுள் 4, 5, 11) என்றும் செங்கட்சினமால் (செய்யுள் 15, 21, 29, 30, 40) என்றும் செம்பியன் (சோழன் - செய்யுள் 6, 23, 33,38) என்றும் சேய் (செய்யுள் 13, 18) என்றும் பைம்பூட்சேய் (செய்யுள் 34) என்றும் கூறுகிறது. தோற்றுப் போன கணைக்காலிரும்பொறையின் பெயரைக் கூறவில்லை. ‘கொங்கரை அட்டகளத்து’ என்றும் (செய்யுள் 14) ‘புனநாடன் வஞ்சிக்கோ’ என்றும் (செய்யுள் 39) கூறுகிறது.
கணைக்காலிரும்பொறைக்கும் செங்கட்சோழனுக்கும் இரண்டு இடங்களில் போர்கள் நடந்தன. கழுமலம் என்னும் ஊரிலும் பிறகு போர் என்னும் ஊரிலும் நடந்தன. கொங்கு நாட்டுக் கழுமலத்தில் செங்கணான் போரை வென்றான். இதைக் ‘காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்’ (செய். 36) ‘புனல் நாடன் வஞ்சிக்கோ அட்டகளத்து’ (செய். 39) என்பதனால் அறிகிறோம். கழுமலப்போரில் தோற்ற கணைக்காலிரும்பொறை பிறகு சோழநாட்டில் போர் என்னும் இடத்தில்3 சென்று செங்கணானுடன் போர்செய்தான். அந்தப் போரில் அவன் சிறைப்பட்டான். சிறையிலிருந்தபோது பொய்கையார் களவழி பாடினார். இச்செய்தியைக் களவழி நாற்பதின் பழைய உரைக்காரர் கூறுவதி லிருந்து அறிகிறோம். அவர் கூறுவது: “சோழன் செங்கணானும் சேரமான் கணைக்காலிரும்பொறையும் திருப்போர்புரத்துப் பொரு துடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பற்றிக் கொண்டு சோழன் செங்கணான் சிறை வைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடு கொண்ட களவழி நாற்பது முற்றிற்று.”
புறம் 74ஆம் பாட்டின் அடிக்குறிப்பு துஞ்சினான் என்று கூறுகிறது. துஞ்சினான் என்பதற்கு இறந்து போனான், தூங்கினான் என்று இரண்டு பொருள்கள் உண்டு. களவழி நாற்பதின் இறுதி வாசகம் ‘பொய்கையார் களம்பாடி வீடுகொண்டார்’ என்று கூறுகிறது. அதாவது களவழி நாற்பது பாடி, சிறையிலிருந்த கணைக்காலிரும்பொறையை விடுவித்தார் என்று கூறுகிறது. எனவே, கணைக்காலிரும்பொறை இறக்கவில்லை என்பதும் அவன் விடுதலையடைந்தான் என்பதும் தெரிகின்றன. இதனால், கணைக்கால் இரும்பொறை செங்கணானுக்குக் கீழடங்கி இருந்தான் என்பதும் செங்கணான் கொங்கு நாட்டின் அரசனானான் என்பதும் தெரிகின்றன. சோழன் செங்கணானும் கணைக்கால் இரும்பொறையும் ஏறத்தாழக் கி.பி. 200க்கும் 250க்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்தவராகலாம்.
சங்க காலத்துக் கொங்கு நாட்டு வரலாறு கணைக்கால் இரும்பொறையோடு முடிவடைகிறது. சேர அரசர் பரம்பரையில் இளைய வழியினரான பொறையர் கொங்கு நாட்டை ஏறத்தாழ கி. பி. முதல் நூற்றாண்டிலும் இரண்டாம் நூற்றாண்டிலும் ஏறத்தாழ இருநூறு ஆண்டு அரசாண்டார்கள். அவர்களில் கடைசி அரசன் கணைக்கால் இரும்பொறை. கணைக்கால் இரும்பொறை, சோழன். செங்கணானுக்குக் கீழடங்கிக் கொங்கு நாட்டை நெடுங்காலம் அரசாளவில்லை. ஏறத்தாழக் கி.பி. 250இல் தமிழகத்தைக் களப்பிரர் அல்லது களப்பாளர் என்னும் பெயருள்ள அயல்நாட்டு அரசர் கைப்பற்றிக்கொண்டு அரசாண்டார்கள். களப்பிரர், சேர சோழ பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஏறத்தாழ முந்நூறு ஆண்டு அரசாண்டார்கள். அப்போது கொங்கு நாடு களப்பிரர் ஆட்சிக்குட்பட்டிருக்க வேண்டும்.
களப்பிரர் ஆட்சிக் காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலமாகத் தெரிகிறது.
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
1. “மூவன், முழுவலி முள்எயிறு அழுத்திய கதவில், கானலந் தொண்டிப் பெருநன் வென்வேல், பெறலருந் தானைப் பொறையன்.” (நற். - 18:2-5)
2. ‘களவழிக் கவிதை பொய்கை உரைசெய்ய, உதியன் கால்வழித் தளையை வெட்டி அரசிட்ட அவனும்’தாழிசை – 18. (கலிங்கத்துப் பரணி, இராசபாரம்பரியம்) உதியன் – சேரன், – - இங்குக் கணைக்காலிரும்பொறையைக் குறிக்கிறது. கால்வழித்தளை - காலில் இடப்பட்ட விலங்கு.
3. போர் அல்லது போஓர் என்பது சோழநாட்டுக் காவிரிக் கரைமேல் இருந்த ஓர் ஊர். அவ்வூரிலிருந்த பழையன் என்பவன் சோழரின் சேனைத் தலைவன்.(அகம். 186: 15-16; 326:9-12, நற்.10: 7-8) போர் என்னும் ஊரில் வேறு சில பேர்களும் நடந்திருக்கின்றன. (புறம்.62,63,368. இவற்றின் அடிக்குறிப்பு காண்க.)