மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/014-052
13. இரும்பொறை அரசரின் ஆட்சி முறை
தமிழ்நாட்டில் மட்டுமன்று, பாரத நாடு முழுவதிலும் அந்தப் பழங்காலத்தில் அரசர்கள் ஆட்சி செய்வதற்குத் துணையாக ஐம்பெருங் குழுவினர் இருந்தார்கள். ஐம்பெருங்குழு என்பது அமைச்சர், புரோகிதர், சேனைத் தலைவர், தூதுவர், சாரணர் என்பவர்கள். ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர் சிலர் இருந்தார்கள், புரோகிதர் என்பவர் மதச் சார்பான காரியங்களைக் கவனித்தனர். அக்காலத்தில் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்று நான்கு வகையான சேனைகள் அரசர்களுக்கு இருந்தன. கொங்கு நாட்டு அரசருக்குச் சிறப்பாக யானைப்படை இருந்தது. ஒவ்வொரு படைக்கும் ஒவ்வொரு தலைவனும், அவர்களுக்குத் தலைவனாக சேனாதிபதியும் இருந்தனர். தூதுவர்கள் அரசன் கட்டளைப்படி அரச காரியங்களை வேற்றரசரிடஞ் சென்று காரியங்களை முடித்தார்கள். ஒற்றர்கள் மாறு வேடம் பூண்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடக்கும் அரசியல் இரகசியங்களைத் தெரிந்துவந்து அரசனுக்குக் கூறினார்கள். தமிழ் நாட்டு அரசர்களிடத்திலும் இவ்வாறு ஐம்பெருங்குழுக்கள் இருந்து அரசாட்சி செய்தன. கொங்கு நாட்டிலும் ஐம்பெருங் குழுவைக் கொண்டு அரசாட்சி நடந்தது. ஆனால், கொங்கு நாட்டு ஐம்பெருங் குழுவைப் பற்றிஅதிகமாகத் தெரியவில்லை.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சர் அரிசில் கிழார் என்னும் புலவர். சிறந்த புலவராக இருந்த இவர் இவ்வரசன்மேல் 8ஆம் பத்துப் பாடினார். இச்செய்திகளை 8ஆம் பத்துப் பதிகத்தினாலும் அதன் அடிக்குறிப்பினாலும் அறிகிறோம். இப்புலவரின் செய்யுட்கள் சில தகடூர் யாத்திரை என்னும் நூலில் காணப்படுகின்றன.
இளஞ்சேரல் இரும்பொறைக்கு அமைச்சராக இருந்தவர் மையூர் கிழான் என்பவர். இவர். இவ்வரசனுடைய தாய்மாமன் ஆவர்.
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய வயது சென்ற அரண்மனைப் புரோகிதனைத் தவஞ்செய்யக் காட்டுக்கு அனுப்பினான்.1 இளஞ்சேரலிரும்பொறை தன்னுடைய அமைச்சனான மையூர்கிழானைத் தன்னுடைய புரோகிதனைக் காட்டிலும் அறநெறியுடையவனாகச் செய்தான்.2
பெருஞ்சேரல் இரும்பொறையின் மறவன் (சேனைத் தலைவன்) பிட்டங்கொற்றன் (புறம். 172:8-10; அகம். 77:15-16, 143:10-12). அரசன் பகையரசர்மேல் போருக்குச் சென்றால், அவன் கீழடங்கிய சிற்றரசர்கள் தங்களுடைய சேனைகளை அழைத்துக் கொண்டு அவனுக்கு உதவியாகச் சென்றனர்.
குடிமக்களிடமிருந்து இறை(வரி) தண்டுவதற்குச் சிலர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். கொங்குநாட்டில் வரி வசூல் செய்தவர் கோசர் என்பவர். அவர்கள் கண்டிப்புள்ளவர். அவர்கள் ஊர்ஊராகப் போய்ப் பொது அம்பலத்தில் (ஆலமரம், அரச மரங்களின் கீழே) தங்கிச் சங்குகளை முழங்கியும் பறையடித்தும் தாங்கள் இறை வசூல் செய்ய வந்திருப்பதைத் தெரிவித்தார்கள். பிறகு, ஊராரிடத்தில் இறைத் தொகையை வசூல் செய்துகொண்டு போய் அரசனிடங் கொடுத்தார்கள். இந்தச் செய்தியைக் கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த ஔவையார் கூறுகிறார்.3
இரும்பொறையரசர்களின் ஆட்சிமுறை பற்றி அதிகமாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆட்சி சேர சோழ பாண்டியரின் ஆட்சியைப் போலவே இருந்தது என்பதில் ஐயமில்லை.
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
1. (முழுதுணர்ந்து ஒழுகும் நரைமூதாளனை உண்மையும் மாண்பும் வளனும் எச்சமும், தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கென, வேறுபடு நனந்தலைப் பெயரக்,கூறினை பெருமநின் படிமையானே), (8ஆம் பத்து 4: 24–28)
2. (‘மெய்யூர் அமைச்சியல் மையூர் கிழானைப் புரையறு கேள்விப் புரோசுமயக்கி’ (9ஆம் பத்து பதிகம் அடி 11-12) புரோசு - புரோகிதன்.
3. (“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறை கொள்பு, தொன் மூதாலத்துக் பொதியிற் றோன்றிய, நாலூர்க் கோசர் நன்மொழிபோல, வாயாகின்றே.” (குறும்- 15:1-4)