உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/015-052

விக்கிமூலம் இலிருந்து

14. கொங்கு நாட்டுச் சமய நிலை

ஏனைய தமிழ்நாடுகளில் இருந்ததுபோலவே கொங்கு நாட்டிலும் அக்காலத்தில் சிவன், திருமால், முருகன், கொற்றவை முதலிய தெய்வ வழிபாடுகள் நடந்தன. முருகன் வழிபாடு அக்காலத்தில் சிறப்பாக இருந்தது. குன்றுகளிலும் மலைகளிலும் முருகனுக்குக் கோயில்கள் இருந்தன. கொங்கு நாட்டுத் திருச்செங்கோடுமலை அக்காலத்தில் முருகன் கோயிலுக்குப் பேர்பெற்றிருந்தது. திருமால் (மாயோன்) வழிபாடும் இருந்தது. செல்வக் கடுங்கோ வாழியாதன் மாயவண்ணனாகிய திருமாலை வழிபட்டான். அவன் திருமால் கோயிலுக்கு ஒகந்தூர் என்னும் ஊரைத் தானங் கொடுத்தான்.1 ஆயர்கள் திருமாலைக் கண்ணன் உருவில் வழிபட்டனர்.

வெற்றிக் கடவுளாகிய கொற்றவை வீரர்களின் தெய்வம். அயிரை மலைக் கொற்றவையைச் சேர அரசர், தங்களுடைய குல தெய்வமாக வணங்கினார்கள். கொங்கு நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடையில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அயிரை மலையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது. அயிரை மலைக் கொற்றவையைச் சேர அரசரும் கொங்குச் சேரரும் குலதெய்வமாக வழிபட்டார்கள்.

பூதம் என்னும் தெய்வ வழிபாடும் கொங்கு நாட்டில் அக்காலத்தில் இருந்தது. கொங்கு நாட்டின் தலைநகரமான வஞ்சிக் கருவூரில் இளஞ்சேரல் இரும்பொறை பூதங்களுக்குக் கோயில் கட்டித் திருவிழாச் செய்தான்.2 சிலப்பதிகாரம் நடுகற் காதையிலும் இச்செய்தி கூறப்படுகிறது.3

தமிழ்நாட்டின் வேறு ஊர்களிலும் பூதவழிபாடு அக்காலத்தில் இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்தின் நடுவிலே, பட்டினப்பாக்கத்துக்கும் மருவூர்ப்பாக்கத்துக்கும் மத்தியில் இருந்த நாளங்காடித் தோட்டத்தில் பூதசதுக்கம் என்னும் இடத்தில் பூதத்துக்குப் பேர்போன கோயில் இருந்தது. அது நகரத்தின் காவல் தெய்வம் (சிலம்பு. 5: 65- 67). சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையில் அவ்வூரார் இந்தப் பூதத்தை வணங்கின சிறப்புக் கூறப்படுகிறது (அடி. 59 - 88).

பூதம் என்றால் இந்தக் காலத்தில் துர்த்தேவதை என்றும் இழிந்தவர் வழிபடப்படும் சிறுதெய்வம் என்றும் கருதப்படுகிறது. ஆனால், சங்க காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் பூதம் என்றால் சிறந்த தெய்வமாகக் கருதப்பட்டது. அக்காலத்தில் மனிதருக்குப் பூதத்தின் பெயர் சூட்டப்பட்டது. சங்கப் புலவர் சிலர் பூதன் என்னும் பெயர் கொண்டிருந்ததைக் காண்கிறோம். இளம்பூதனார், ஈழத்துப் பூதன் தேவனார், கரும்பிள்ளை பூதனார், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதனார், காவன் முல்லைப் பூதனார், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார், குன்றம்பூதனார், கோடை பாடிய பெரும்பூதனார், சேந்தம் பூதனார், மருங்கூர் பாகை சேந்தன் பூதனார், பூதபாண்டியன், வெண்பூதனார் முதலியோர் பூதன் என்னும் பெயர் பெற்றிருந்ததை அறிகிறோம். பிற்காலத்தில் பூதத்தாழ்வார் என்று பெயர் பெற்ற வைணவப் பக்தர் இருந்தார்.

பூதம் என்னும் தெய்வ வழிபாடு பிற்காலத்தில் மறைந்து போயிற்று. சங்க காலத்தில் தமிழ்நாடாக இருந்த துளு நாட்டிலும், அக்காலம் முதல் இக்காலம் வரையில் பூத வழிபாடு நடந்து வருகிறது. அங்குள்ள பூதக் கோயில்களுக்குப் பூததான என்று இக்காலத்தில் பெயர் கூறப்படுகிறது (பூததான - பூதஸ்தானம்). துளு நாட்டுப் பூததானக் கோவில்களில் பூதத்தின் உருவம் இல்லை. அத்தெய்வத்தின் ஊர்திகளான புலி, பன்றி, மாடு முதலியவற்றின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. சில பூததானங்களில் வாள் இருப்பதும் உண்டு. பூசாரி தெய்வம் ஏறி மருள் கொண்டு ஆடும்போது அந்த வாளைக் கையில் ஏந்தி ஆடுவார். பூதங்களின் மேல் பாடதான என்னும் பாட்டு (துளு மொழியில்) பாடப்படுகிறது. பாடதான என்பதற்குப் பிரார்த்தனைப் பாட்டு என்பது பொருள். துளுவ மொழி திராவிட இனத்து மொழி. அம்மொழியில் சிதைந்து போன பல தமிழ்ச் சொற்கள் இன்றும் வழங்கி வருகின்றன. துளு மொழியில் உள்ள பாடதானத்தைப்பற்றி இந்தியப் பழமை என்னும் ஆங்கில வெளியீட்டில் காண்க.4 துளு நாட்டிலும் இப்போது பூத வணக்கம் மறைந்து வருகிறது.

சங்க காலத்தில் கொங்கு நாட்டிலே வழிபடப்பட்டு வந்த பூதத் தெய்வ வணக்கம் பிற்காலத்தில் மறைந்து போயிற்று.

பத்தினித் தெய்வமாகிய கண்ணகியார் வீடுபேறடைந்தது கொங்குநாட்டில் என்று கருதப்படுகின்றது. இது பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. இது எப்படியானாலும் கொங்கிளங் கோசர், கொங்கு நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டது உண்மை. செங்குட்டுவன் சேர நாட்டு வஞ்சி மாநகரத்தில் பத்தினிக் கோட்டம் அமைத்து விழாச் செய்வதைக் கண்ட கொங்கிளங் கோசர், பத்தினித் தெய்வத்துக்குக் கொங்கு நாட்டில் கோயில் கட்டி வழிபட்டதைச் சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுகிறது.5 கொங்கிளங் கோசர் பத்தினித் தெய்வத்துக்குத் திருச்செங்கோடு மலைமேல் கோயில் அமைத்தனர் என்றும், அந்தக் கோயில் பிற்காலத்தில் (தேவாரக் காலத்திலேயே) அர்த்தநாரீசுவரர் கோயில் என்று மாற்றப்பட்டது என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

சங்க காலத்திலும் அதற்குப் பிறகும் கொங்கு நாட்டுக் கருவூரில் ஆண்டுதோறும் நடந்த பேர் போன திருவிழா உள்ளிவிழா என்பது. அவ்விழாவில் கொங்கர் மணிகளை அரையில் கட்டிக்கொண்டு கூத்தாடினார்கள்.6

பௌத்தர், ஜைனர் ஆகிய மதத்தாரும் அக்காலத்தில் கொங்கு நாட்டில் இருந்தார்கள். அந்த மதங்களின் துறவிகள் ஊர்களில் தங்காமல் காடுகளிலே மலைக்குகைகளில் இருந்து தவஞ் செய்தார்கள். அவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படவில்லை. அக்காலத்துத் துறவிகள் குன்றுகளிலும் மலைகளிலும் தங்கியிருந்து தவஞ் செய்ததைச் செய்யுளிலிருந்து அறிகிறோம்.

“பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க் கொன்றை
நீடிய சடையோ டாடா மேனிக்
குன்றுறை தவசியர் போலப் பலவுடன்
என்றூழ் நீளிடைப் பொற்பத் தோன்றும்
அருஞ்சுரம்.”
(நற்றிணை 141:3-7)

(ஞெமிர்ந்த - பரந்த. கொன்றை - சரக்கொன்றை மரம். புழற்காய் துளை பொருந்திய. ஆடாமேனி - அசையாத உடம்பு, அசையாமல் தியானத்தில் அமர்ந்திருத்தல்; நீராடாத உடம்பையுடையவர் என்றும் பொருள் கூறலாம். ஜைன முனிவர் நீராடக் கூடாது என்பது அவர்கள் கொள்கை. தவசியர் - தவம் செய்வோர்.)

ஆனால், கொங்கு நாட்டு மலைக்குகைகள் சிலவற்றில் காணப்படுகின்ற கற்படுக்கைகளும் அங்கு எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் அக்காலத்தில் அங்கே பௌத்த, சமண சமய முனிவர்கள் தங்கியிருந்ததைத் தெரிவிக்கின்றன. அந்த முனிவர்கள் கல்லின் மேலே படுப்பது வழக்கமாகையால் ஊரார் மலைக் குகைகளிலுள்ள கரடு முரடான பாறைகளைச் சமப்படுத்திப் பாயுந் தலையணையும்போல வழவழப்பாக அமைத்துக் கொடுத்தார்கள். அவைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயர்கள் அப்படுக்கைகளின் அருகில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டன. அந்தக் கற்படுக்கைகளும் எழுத்துகளும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகளினாலே அக்காலத்தில் கொங்கு நாட்டிலும் சமண, பௌத்தர்கள் இருந்தனர் என்பது தெரிகின்றது. இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்களைப் பற்றி இந்நூலில் வேறு இடத்தில் காண்க.

கரூர் தாலுகாவைச் சேர்ந்த புகழூருக்கு 2 கல் தூரத்தில் ஆறு நாட்டார்மலை என்னும் மலையில் கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக்கள் உள்ளன. இவ்வெழுத்துக்கள், இக்குன்றில் பௌத்த அல்லது ஜைன மதத் துறவிகள் அக்காலத்தில் தங்கியிருந்து தவஞ் செய்ததைக் குறிக்கின்றன.

ஆறுநாட்டார்மலைக்கு ஏழு கல்லுக்கப்பால் உள்ள அர்த்தநாரி பாளையம் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூரின் பழைய பெயர் தெரியவில்லை. இவ்வூர் வயல்களின் மத்தியில் கற்பாறைக் குன்றும் அதில் நீர் உள்ள சுனையும் இருக்கின்றன. இங்குள்ள பொடவில் ஐந்து கற்படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குக் கடைச்சங்க காலத்தில் சமண அல்லது பௌத்த சமயத் துறவிகள் தங்கியிருந்தனர் என்பதை இக்கற்படுக்கைகள் சான்று கூறுகின்றன. இக்குன்று இக்காலத்தில் பஞ்ச பாண்டவ மலை என்றும் இங்குள்ள சுனை ஐவர் சுனை என்றும் பெயர் பெற்றுள்ளன.7

கோயம்புத்தூர் மாவட்டம் ஈரோடு தாலுக்காவில் ஈரோடுக்குப் போகிற சாலையில் உள்ளது அரசலூர் மலை. இம்மலையில் ஓரிடத்தில் இயற்கையாக அமைந்த குகையில் சில கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக் கல்வெட்டும் உள்ளன. இவை, கடைச்சங்க காலத்தில் இங்கு சமண முனிவர்கள் இருந்ததைத் தெரிவிக்கின்றன.8

திருச்செங்கோடு மலைமேல் ஓரிடத்தில் சமண முனிவர்கள் இருந்து தவஞ் செய்தனர் என்பதற்குச் சான்றாக அங்குக் கற்பாறைகளில் கற்படுக்கைகள் காணப்படுகின்றன.

கொங்கு நாட்டிலிருந்த கடைச்சங்க காலத்துச் சைவ வைணவக் கோயில்கள் எவை என்பது தெரியவில்லை. திருச்செங்கோட்டுமலை மேல் உள்ள முருகன் (சுப்பிரமணியர்) கோயில் மிகப் பழமையானது. இங்குள்ள அர்த்தநாரீசுவரர் கோயில் என்று இப்போது பெயர் பெற்றுள்ள கோயில் ஆதிகாலத்தில் கண்ணகிக் கோயிலாக இருந்து பிற்காலத்தில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டது என்பது பேராசிரியர் முத் தமிழ்ப் புலவர் விபுலாநந்த அடிகள் போன்ற அறிஞர்கள் கண்ட முடிவு.

பொதினி (பழனி) மலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலும் மிகப் பழமையானது. பழனி மலைகள் சங்க காலத்தில் கொங்கு நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்திருந்தன.

✽ ✽ ✽

அடிக்குறிப்புகள்

1. “மாயவண்ணனை மனனுறப் பெற்று அவற்கு, ஒத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்து” (7ஆம் பத்து, பதிகம்)

2. அருந்திறல் மரபில் பெருஞ் சதுக்கமர்ந்த, வெந்திறல் பூதரைத் தந்திவண் நிறீஇ, ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல், இன்னிசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறை (9ஆம் பத்து, பதிகம்)

3. சதுக்கப் பூதரை வஞ்சியுள் தந்து, மதுக்கொள் வேள்வி வேட்டோன். (நடுகற்காதை 147 - 148).

4. Indian Antiquary XXIII. P. 19.

5. அது கேட்டுக் கொங்கிளங்கோசர் தங்கள் நாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்று மாறாதாயிற்று. (உரைபெறு கட்டுரை).

6. கொங்கர், மணியரை யத்து மறுகின் ஆடும், உள்ளி விழவு. அகம். 368: 16-18) ‘மதுரை ஆவணி அவிட்டமே உறையூர் பங்குனி உத்திரமே கருவூர் உள்ளிவிழாவேயென இவை’ (இறையனார் அகப்பொருள் 17ஆவது சூத்திர உரை.)

7. Annual Report on South Indian Epigraphy. 1927-28. Part II Para I.

8. சுதேசமித்திரன் 1961, ஜீன் 4தேதி, Annual Report on S.I. Epigraphy, 1961 - 62.P. 10.