உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/019-052

விக்கிமூலம் இலிருந்து


18. கொங்கு நாட்டுச் சங்க நூல்கள்

பதிற்றுப்பத்து

கடைச்சங்க காலத்து நூல்களில் பதிற்றுப்பத்தும் ஒன்று. இதில் சேர நாட்டுச் சேர அரசர்கள் அறுவரும் கொங்கு நாட்டுச் சேர அரசர் நால்வரும் பாடப்பட்டுள்ளனர். ஆகையால், இந்நூலின் பிற்பகுதி கொங்கு நாட்டுப் பொறையரைப் பற்றியது.

இவற்றில் ஏழாம் பத்து, கொங்கு நாட்டை யரசாண்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் மேல் கபிலர் பாடியது., இதற்குக் கபிலர் நூறாயிரம் (ஒரு லட்சம்) காணம் பரிசாகப் பெற்றார். மற்றும், கொங்கு நாட்டிலுள்ள நன்றா (இப்போது திருநணா?) என்னும் மலை மேலிருந்து கண்ணுக்குத் தெரிந்த நாடுகளின் வருவாயை இவ்வரசன் கபிலருக்குக் கொடுத்தான் என்று 7ஆம் பத்துப் பதிகத்தின் அடிக்குறிப்புக் கூறுகிறது.

பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மேல் அரிசில்கிழார் பாடியது., இதற்காக இவர் பெற்ற பரிசு ஒன்பது நூறாயிரம் (ஒன்பது இலட்சம்) காணமும் அமைச்சுப் பதவியுமாம். தகடூர்ப் போர் நடந்தபோது அரிசில்கிழார் போர்க்களத்தில் இருந்து அப்போரை நேரில் கண்டவர். அக்காலத்தில் இவர் பாடிய செய்யுட்கள் தகடூர் யாத்திரை என்னும் நூலில் தொகுக்கப்பட்டிருந்தன.

பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்து, இளஞ்சேரல் இரும்பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது. இதற்கு இவர் 32 ஆயிரம் காணமும் ஊரும் மனையும் நிலங்களும் பரிசாகப் பெற்றார் என்று பதிகச் செய்யுளின் அடிக்குறிப்புக் கூறுகிறது.

பதிற்றுப்பத்தின் பத்தாம் பத்து இப்போது மறைந்து விட்டது. இது சேரமான் (யானைக்கட்சேய்) மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது என்று கருதப்படுகிறது. இப்படிக் கருதுவதற்குக் காரணம் புறநானூறு 53 ஆம் செய்யுள், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை விளங்கில் என்னும் ஊரில் பகைவருடன் போர் செய்து வென்றான். அப்போது அவன் தன்னைப் பாடுவதற்கு இக்காலத்தில் கபிலர் இல்லையே என்று கவலையடைந்தான். (இவனுடைய பாட்டனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதனை 7ஆம் பத்தில் பாடிய கபிலர் முன்னமே இறந்து போனார்.) அரசன் கவலைப்படுவதை அறிந்த பொருந்தில் இளங்கீரனார் கபிலரைப் போன்று உம்மை நான் பாடுவேன் என்று கூறினார்.

“செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயின் நன்றுமன் என்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவல் மன்னாற் பகைவரைக் கடப்பே”
(புறம்.53:11-15)

இவ்வாறு இந்தப் புலவர் பாடியிருக்கிறபடியால் இவரே இவ்வரசன் மேல் பத்தாம் பத்துப் பாடியிருக்கலாம் என்று கருதுவது தவறாகாது.

பதிற்றுப்பத்தில் 7, 8, 9, 10ஆம் பத்துகள் கொங்குச் சேரர் மேல் பாடப்பட்டவை என்பதும், ஆகவே அவை கொங்கு நாட்டு இலக்கியம் என்பதும் தெரிகின்றன.

பதிற்றுப்பத்துச் செய்யுட்கள் வெறும் இயற்றமிழ்ச் செய்யுட்கள் மட்டுமன்று. இச்செய்யுட்கள் இசையுடன் பாடப்பட்டன என்பது தெரிகிறது. ஒவ்வொரு செய்யுளின் அடிக்குறிப்புகளிலிருந்து இதனையறிகிறோம். ஆகவே, புலவர்கள் இயற்றின இந்தச் செய்யுட்களை அந்தந்த அரசர் முன்னிலையில் பாடியபோது பாணரைக் கொண்டு இசையுடன் பாடப்பட்டன என்பது தெரிகிறது.

ஒவ்வொரு செய்யுளின் அடியிலும் துறை, தூக்கு, வண்ணம் என்னும் தலைப்பில் இசைக் குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. துறை என்பதில் காட்சி, வாழ்த்து, செந்துறைப் பாடாண்பாட்டு, பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு வஞ்சித் துறை பாடாண்பாட்டு முதலான குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. தூக்கு என்பதில் செந்தூக்கு, செந்தூக்கும் வஞ்சித் தூக்கும் என்று தூக்கு (தூக்கு தாளம்) குறிப்பிடப்பட்டுள்ளன. வண்ணம் என்பதில் ஒழுகு வண்ணம், சொற்சீர் வண்ணம் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை இசைத்தமிழைப் பற்றிய குறிப்புகள்.

தகடூர் யாத்திரை

கொங்கு நாட்டில் தகடூரை அரசாண்டவர் அதிகமான் பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் என்றும் அவர்கள் தகடூரைச் சூழ்ந்து கோட்டை மதிலைக் கட்டி அரண் அமைத்துக் கொண்டிருந்தார்கள் என்றும் கொங்கு நாட்டின் தென் பகுதிகளை அரசாண்ட பெருஞ்சேரலிரும்பொறை, தன் காலத்திலிருந்த அதிகமான் நெடுமான் அஞ்சியின் மேல் படை யெடுத்துச் சென்று தகடூரை முற்றுகையிட்டுப் போர் செய்தான் என்றும் அந்தப் போர் பலகாலம் நடந்து கடைசியில் பெருஞ்சேரலிரும்பொறை அதைக் கைப்பற்றினான் என்றும் கூறினோம். அந்தத் தகடூர்ப் போரைப் பற்றி ஒரு நூல் அக்காலத்திலேயே செய்யப்பட்டிருந்தது. அது சிலப்பதிகாரத்துக்கு முன்னரே இயற்றப்பட்ட நூல் என்பது ஆராய்ச்சியிலிருந்து தெரிகிறது. அதுதான் தகடூர் யாத்திரை என்னும் நூல்.

அக்காலத்தில் அரசர்கள் போர்செய்யும்போது புலவர்களும் போர்க்களத்துக்குச் சென்று எந்தெந்த வீரன் எந்தெந்த விதமாகப் போர் செய்கிறான் என்பதை நேரில் கண்டு அவர்களின் வீரத்தைப் புகழ்ந்து பாடுவது அக்காலத்து வழக்கமாக இருந்தது. தகடூர்ப் போரிலும் சில புலவர்கள் போர்க்களஞ் சென்று போர்ச் செயலைக் கண்டு பாடினார்கள். அவர்கள் பாடிய அந்தப் பாடல்களின் தொகுப்புதான் தகடூர் யாத்திரை என்னும் நூல். இப்போது நூல் முழுவதும் கிடைக்காதபடியால் அந்நூலில் எந்தெந்தப் புலவர்களின் செய்யுள்கள் இருந்தன என்பது இப்போது தெரியவில்லை. ஆனால், பொன்முடியார், அரிசில்கிழார் என்னும் புலவர்களின் செய்யுள்களும் அந்நூலில் இருந்தன என்பது திண்ணமாகத் தெரிகிறது.

சரித்திரச் செய்தியைக் கூறுகிற தகடூர் யாத்திரை இப்போது மறைந்து விட்டது. அந்நூலின் சில செய்யுட்கள் மட்டுமே இப்போது கிடைத்துள்ளன. இந்நூல் சென்ற 19ஆம் நூற்றாண்டில், திருநெல்வேலி தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியார் வீட்டில் இருந்தது. பிறகு, இந்தச் சுவடி மறைந்து போயிற்று. இதுபற்றி டாக்டர் உ.வே.சாமி நாதையர் என் சரித்திரம் என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்.

“அங்கே தொல்காப்பிய உரைச் சுவடி ஒன்றில், ‘நாங்குனேரியிலிருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த தகடூர் யாத்திரைப் பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு, இப்பிரதியை இரவலாக வாங்கிக் கொண்டேன்’ என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று குறிப்பிடவில்லை ... ... பிற்காலத்தில் நாங்குனேரியில் நான்கு முறை ஏடு தேடியதுபோது தகடூர் யாத்திரை கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தைவிட்டு யாத்திரை செய்துவிட்டதைப் போல இந்த அருமையான நூலும் போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்.”

கொங்கு நாட்டு அரசர்கள் இருவர் நடத்திய போரைக் கூறுவது தகடூர் யாத்திரை என்னும் நூல். இதில் அக்காலத்திலிருந்த புலவர்கள் இந்தப் போரைப் பற்றிப் பாடிய செய்யுட்கள் தொகுக்கப்பட்டிருந்தன. எனவே, இந்த நூல் கொங்கு நாட்டில் உண்டான நூல்களில் ஒன்றாகும்.

இந்நூலைத் தொகுத்தவர் யார், தொகுப்பித்தவர் யார் என்பதும் தெரியவில்லை. நூலே மறைந்துவிட்டபோது இச்செய்திகளை எவ்வாறு அறியமுடியும்? மறைந்து போன தமிழ் நூல்கள் என்னும் புத்தகத்தில், தகடூர் யாத்திரை என்னுந் தலைப்பில் இந்நூலைப் பற்றிய ஏனைய விஷயங்களை அறியலாம்.

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு, எட்டுத்தொகை நூல்களில் மூன்றாவது தொகை நூல். அகவற் பாக்களினால் அமைந்த இந்நூல் மிகக் குறைந்த அடிகளைக் கொண்டது. மூன்று அடிச் சிற்றெல்லையையும் ஆறடிப் பேரெல்லையையுங் கொண்டது. ஐந்து அகப் பொருள் துறைகளைப் பற்றிக் கூறுகிறது. இக்காரணங்களினாலே இந்நூல் ஐங்குறுநூறு என்று பெயர் பெற்றுள்ளது. ஓரம்போகியார், அம்மூவனார், கபிலர், ஓதல் ஆந்தையார், பேயனார் என்னும் ஐந்து புலவர்கள் இந்நூற் செய்யுள்களைப் பாடியவர்கள்.

“மருதம் ஓரம்போகி, நெய்தல் அம்மூவன்,
கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய
பாலை ஓதலாந்தை, பனிமுல்லை பேயனே,
நூலையோ தைங்குறு நூறு.”

என்னும் பழைய செய்யுளால் இதனையறியலாம்.

இந்த நூலைத் தொகுப்பித்தவர், கொங்கு நாட்டையரசாண்ட யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. தொகுத்தவர் இவ்வரசனால் ஆதரிக்கப்பெற்றவராகிய புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். புலவர் கூடலூர்கிழார், இவ்வரசன் இறந்த பிறகும் வாழ்ந்திருந்தார். இவ்வரசன். இறந்தபோது இவன்மேல் கையறுநிலை பாடினார் (புறம்.229) அச்செய்யுளின் அடிக்குறிப்பு, “கோச் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சுமென அஞ்சி, அவன் துஞ்சியவிடத்துப் பாடியது” என்று கூறுகிறது.

ஐங்குறுநூறுக்குப் பிற்காலத்திலே கடவுள் வாழ்த்துப் பாடியவர், பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தப் பெருந்தேவனாரே ஏனைய தொகை நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடினார். ஐங்குறுநூற்றுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அந்த உரையாசிரியரின் பெயர் தெரியவில்லை.

இந்நூல் 1903ஆம் ஆண்டில் முதல்முதலாக அச்சுப் புத்தகமாக வெளிவந்தது. இதன் பதிப்பாசிரியர் உத்தமதானபுரம் வே. சாமிநாதையர் அவர்கள். திருவாவடுதுறை ஆதீனத்தாரும் திருமலை மகாவித்துவான் சண்முகம் பிள்ளையவர்களும் ஜே.எம். வேலுப்பிள்ளையவர்களும் ஆழ்வார் திருநகரி தே. இலக்குமணக் கவிராயர் அவர்களும் தங்களுடைய கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்து இந்நூலைப் பதிப்பிக்க உதவி செய்தனர்.

இந்நூல் மருதத்திணை, வேட்கைப் பத்து, வேழப்பத்து, கள்வன் பத்து, தோழிக்குரைத்த பத்து, புலவிப்பத்து, தோழிகூற்றுப் பத்து, கிழத்திகூற்றுப் பத்து, புனலாட்டுப் பத்து, புலவி விராய பத்து, எருமைப் பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

நெய்தல்திணை, தாய்க்குரைத்த பத்து, தோழிக்குரைத்த பத்து, கிழவற்குரைத்த பத்து, பாணற்குரைத்த பத்து, ஞாழற் பத்து, வெள்ளாங்குருகுப் பத்து, சிறுவெண் காக்கைப் பத்து, தொண்டிப் பத்து, நெய்தற் பத்து, வளைப்பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

குறிஞ்சித்திணை, அன்னாய் வாழிப் பத்து, அன்னாய்ப் பத்து, அம்மவாழிப்பத்து, தெய்யோப் பத்து, வெறிப்பத்து, குன்றக் குறவன் பத்து, கேழற் பத்து, குரக்குப் பத்து, கிள்ளைப் பத்து, மஞ்ஞைப் பத்து என்னும் பத்துப் பகுதிகளையுடையது.

பாலைத்திணை, செலவழுங்குவித்த பத்து, செலவுப் பத்து, இடைச்சுரப்பத்து, தலைவியிரங்கு பத்து, இளவேனிற்பத்து, வரவுரைத்த பத்து, முன்னிலைப் பத்து, மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து, உடன்போக்கின் கண் இடைச்சுரத்துரைத்த பத்து, மறுதரவுப் பத்து என்னும் பத்துப் பிரிவுகளையுடையது.

முல்லைத்திணை, செவிலிகூற்றுப் பத்து, கிழவன் பருவம் பாராட்டுப் பத்து, விரவுப்பத்து, புறவு அணிப் பத்து, பாசறைப் பத்து, பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து, தோழி வற்புறுத்த பத்து, பாணன் பத்து, தேர்வியங்கொண்ட பத்து, வரவுச் சிறப்புரைத்த பத்து என்னும் பத்துத் துறைகளைக் கொண்டுள்ளது.

நெய்தற்றிணையில், கிழவற்குரைத்த பத்தில் 9ஆம் 10ஆம் செய்யுட்கள் மறைந்து போய்விட்டன. முல்லைத் திணையில் கிழவன்பருவம் பாராட்டுப் பத்தில் ஆறாம் செய்யுளின் இரண்டாம் அடியிலும் தேர்வியங்கொண்ட பத்தின் பத்தாம் செய்யுளின் இரண்டாம் அடியிலும் சில எழுத்துகள் மறைந்துள்ளன.

ஐங்குறுநூற்றைப் பாடிய புலவர் எல்லோரும் கொங்கு நாட்டவர் அல்லர். கபிலர் மட்டுங் கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்தவர். இந்நூலைத் தொகுத்த கூடலூர் கிழார், கொங்கு நாட்டுப் புலவர்.

✽ ✽ ✽