மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/021-052
20. கொங்கு நாட்டுப்
பிராமி எழுத்துச் சாசனங்கள்
அரசலூர்
கோயம்புத்தூர் மாவட்டத்து ஈரோடு தாலுகாவில் உள்ளது அரசலூர். இது ஈரோடு நகரத்திலிருந்து பன்னிரண்டு மைல் தூரத்திலிருக்கிறது. இங்குள்ள மலைக்கு நாகமலை என்றும் அரசலூர் மலையென்றும் பெயர் உண்டு. இந்த மலையில் தரை மட்டத்திலிருந்து அறுபதடி உயரத்தில் ஆண்டிப்பாறை என்னுங் குகையும் அக்குகையில் கற்படுக்கைகளும் கல்வெட்டு எழுத்துகளும் உள்ளன. கல்வெட்டெழுத்துக்களில் ஒன்று பிராமி எழுத்து. மற்ற இரண்டு வட்டெழுத்து. இங்கு நம்முடைய ஆய்வுக்குரியது பிராமி எழுத்து மட்டுமே.
இங்குக் கல்வெட்டெழுத்துக்கள் இருப்பதை 1961ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்நூலாசிரியர் மயிலை சீனி. வேங்கடசாமி, ஈரோடு புலவர் செ. இராசு மற்றுஞ் சில நண்பர்கள் சென்று கண்டு, இவ்வெழுத்துக்களைக் காகிதத்தில் மைப்படி எடுத்துச் சுதேசமித்திரன்1, செந்தமிழ்ச் செல்வி பத்திரிக்கைகளில் வெளியிட்டு உலகத்துக்கு அறிமுகப்படுத்தினார்கள். இந்த விவரம் தெரிந்தபிறகு அரசாங்கத்து எபிகிராபி இலாகா இம்மலைக்குச் சென்று இந்தச் சாசனங்களைக் கண்டு 1961-62 ஆண்டு அறிக்கையில் வெளியிட்டது2. இந்த இலாகாவின் 1961 - 62ஆம் ஆண்டின் 280-282 எண்களுள்ள சாசன எழுத்துகளாக இந்த கல்வெட்டெழுத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எபிகிராபி இலாகாவின் 1963-64ஆம் ஆண்டின் 4362- 4364ஆம் எண்ணுள்ள போட்டோ (நிழற்பட) நெகிடிவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்தப் பிராமிக் கல்வெட்டெழுத்தை (280 of 1961 -62) ஆராய்வோம். இந்தப் பிராமி எழுத்துக்கள் இரண்டு வரிகளாக எழுதப்பட்டுள்ளன. முதல்வரியில் பதினான்கு எழுத்துகளும் இரண்டாவது வரியில் பதிமூன்று எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்களை எபிகிராபி இலாகா இவ்வாறு படித்திருக்கிறது:
எழுத்துப் புணர்(ரு)த்தான் மா(லை)ய்
வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன்
ஐராவதம் மகாதேவன் அவர்கள் இவ்வெழுத்துக்களை இவ்வாறு படித்துள்ளார்.3
ஏழு தானம் பண்வ (வி)த்தான் மணிய்
வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன்
மணிக்கல் வாணிகனாகிய தேவன் சாத்தன் இந்த ஏழு படுக்கைகளைச் (ஆசனங்களை) செய்வித்தான் என்று இதற்கு இவர் விளக்கங் கூறுகிறார். இவர் ‘ஏழு படுக்கைகள்’ என்று கூறுவது தவறு. இக்குகையில் மூன்று படுக்கைகள் மட்டும் இருக்கின்றன. ஆகவே, இவர் ஏழு படுக்கைகள் என்று கூறுவது பிழைபடுகிறது. கல்வெட்டில் ‘எழுத்தும்’ என்னும் வாசகம் தெளிவாகத் தெரிகிறது.
டி.வி. மகாவிங்கம் அவர்கள் இவ்வெழுத்துக்களை வேறு விதமாக வாசித்துள்ளார்.4
சித்தம், தீர்த்தம் பூண தத்தான் மாளாய
வண்ணக்கன் தேவன் சாத்தன்
என்று இவர் படிக்கிறார்.
இந்தச் சாசன எழுத்துகளில் இரண்டாவது வரியின் வாசகம் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பதில் யாருக்கும் யாதொரு ஐயமும். இல்லை. இதை எல்லோரும் கருத்து மாறுபாடு இல்லாமல் சரியாகவே வாசித்திருக்கிறார்கள். முதல் வரி எழுத்துக்களை வாசிப்பதில் மட்டும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாசித்துள்ளனர். இதுபற்றி ஆய்ந்து பார்த்து இதன் சரியான வாசகம் இன்னதென்பதை நாம் காண்போம்.
முதல் வரியின் முதல் எழுத்து வட்டமாகவும் நடுவில் புள்ளியுடனும் காணப்படுகிறது. இது ‘சித்தம்’ என்னும் மங்கலச் சொல்லின் குறியீடு என்று டி. வி. மகாலிங்கம் கருதுகிறார். சாசன எழுத்து இலாகா இதை எ என்று வாசித்திருக்கிறது. ஐ. மகாதேவன் அவர்கள் ஏ என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் கூறுவது போல இது ‘சித்தம்’ என்பதன் குறியீடு அன்று. பிராமி எழுத்து எ என்பதாகும். முக்கோண வடிவமாகவுள்ளது பிராமி எ என்னும் எழுத்து. அது கல்வெட்டில் வட்டமாகவும் சில சமயங்களில் எழுதப்படுகிறது. உதாரணமாக, மதுரைக்கு அடுத்துள்ள யானைமலைப் பிராமி எழுத்தில் எகர எழுத்து ஏறக்குறைய வட்டமாக எழுதப்பட்டிருப்பது காண்க. இந்த எழுத்து எகரம் என்பதில் ஐயமேயில்லை. ஐ. மகாதேவன் அவர்கள் இதை ஏ என்று வாசிப்பது சரியன்று. ஏனென்றால், இந்த எழுத்தின் உள்ளே ஒரு புள்ளி தெளிவாகக் காணப்படுகிறது. புள்ளியிருப்பதினாலே ஏகாரமன்று, எகரமே என்பது தெளிவாகத் தெரிகிறது. மெய்யெழுத்துகளும் எகர ஒகரக் குற்றெழுத்துகளும் புள்ளி பெறும் என்று இலக்கணம் கூறுகிறது. ஆகவே, அந்த இலக்கணப்படி இது ஏகாரம் அன்று, எகரமே என்பது திட்டமாகத் தெரிகின்றது. (புள்ளி பெற வேண்டிய எழுத்துகளுக்குப் பெரும்பாலும் புள்ளியிடாமலே ஏட்டுச்சுவடியிலும் செப்பேட்டிலும் கல்லிலும் எழுதுவது வழக்கம். அபூர்வமாகத்தான் புள்ளியிட்டெழுதப்படுகின்றன. இந்த எகர எழுத்துக்குப் புள்ளியிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.)
அடுத்த இரண்டாவது எழுத்தைப் பார்ப்போம். இதை டி.வி. மகாலிங்கம் அவர்கள் தி என்று வாசிக்கிறார். இது ழு என்பது தெளிவு. சாசன எழுத்து இலாகாவும் ஐ. மகாதேவனும் இதை ழு என்றே சரியாக வாசித்திருக்கிறார்கள். முதல் இரண்டு எழுத்தும் சேர்ந்தே எழு என்றாகிறது.
இனி அடுத்த 3ஆவது 4ஆவது எழுத்துகளைப் பார்ப்போம். இவை த்து என்பவை. சாசன எழுத்து இலாகா த்து என்றே வாசித்திருக்கிறது. மகாலிங்கம் த்த என்று வாசிக்கிறார். ஐ. மகாதேவன் தாந என்று வாசிக்கிறார். இப்படி வாசிப்பதற்கு யாதொரு காரணமும் இல்லை. இவ்வெழுத்துக்கள் ‘த்து’ என்பதே.
ஐந்தாவது எழுத்து ம அல்லது ம் என்பது. புள்ளியில்லையானாலும் ம் என்றே வாசிக்கலாம். ஐ. மகாதேவனும் டி.வி. மகாலிங்கமும் ம் என்றே சரியாக வாசித்துள்ளனர். சாசன எழுத்து இலாகா இந்த எழுத்தை ப் என்று படித்திருக்கிறது. இவ்வெழுத்து ம் என்பதில் ஐயமில்லை. முதல் ஐந்து எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தால் எழுத்தும் என்றாகிறது.
இனி அடுத்த ஆறு எழுத்துக்களைப் (6 முதல் 11 வரை) பார்ப்போம். 6ஆவது எழுத்து பு என்பது. 7ஆவது எழுத்து ண என்பது. 8ஆவது எழுத்து ரு என்பது. சாசன இலாகா இதை ர என்றும் ர் என்றும் வாசிக்கிறது. டி.வி. மகாலிங்கம் த என்றும், ஐ மகாதேவன் வ (வி) என்றும் வாசிக்கிறார்கள். இது பிராமி ரு என்பதில் ஐயமில்லை. ர் என்று இருக்க வேண்டிய இது ரு என்று எழுதப்பட்டிருக்கிறது. 9ஆம் பத்தாம் எழுத்துக்கள் த்தா என்பன. 11ஆவது எழுத்து ன் என்பது. இந்த எழுத்துக்களை ஒன்றாகச் சேர்த்தால் புணருத்தான் என்றாகிறது. ஐ. மகாதேவன் இவற்றைப் பண்வித்தான் என்றும் டி.வி. மகாலிங்கம் பூணதத்தான் என்றும் வாசிப்பது சரியாகத் தோன்றவில்லை. சாசன இலாகா படித்துள்ள புணர்த்தான் அல்லது புணருத்தான் என்பதே சரியென்று தெரிகிறது. ஆகவே, முதல் பதினொரு எழுத்துக்களைச் சேர்த்து வாசித்தால் எழுத்தும் புணர்த்தான் என்றாகிறது.
இனி முதல் வரியில் உள்ள கடைசி மூன்று எழுத்துக்களைப் பார்ப்போம். பன்னிரண்டாவது எழுத்து ம என்பது.
இதற்கு அடுத்த (13ஆவது) எழுத்து சரியாக எழுதப்படாததால் பலவித ஊகங்களுக்கு இடமளிக்கிறது. எழுத்தைப் பொறித்த கற்றச்சனுடைய கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறு இது. இதை ணி என்று கொள்வதே பல விதத்திலும் பொருத்தமாகத் தோன்றுகிறது. இந்தச் சாசனத்தில் வேறு மூன்று ணகர எழுத்துக்கள் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ணி எழுத்தைக் கற்றச்சன் செம்மையாகப் பொறிக்காமல் விட்டுவிட்டான்.
கடைசி (14ஆவது) எழுத்து ய அல்லது ய் என்பது. இதில் சந்தேகத்துக்கு இடமேயில்லை. இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்து மணிய் என்று வாசிக்கலாம்.
இந்தப் பிராமி எழுத்தின் முழு வாசகமும் இவ்வாறு அமைகிறது:
எழுத்தும் புணரு(ர்)த்தான் மணிய
வண்ணக்கன் தேவன் சாத்தன்
மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் (முனிவருக்கு இக்குகையைத் தானஞ் செய்தது மட்டும் அல்லாமல், இந்த எழுத்துக்களையும்) புணர்த்தினான் (எழுதினான், பொறித்தான்) என்பது இதன் கருத்து.
விளக்கம்:
மணிய் வண்ணக்கன் என்பது மணிக்கல் வண்ணக்கன் என்று பொருளுள்ளது. இகர, ஈற்றுச் சொல்லுடன் யகரமெய் சேர்த்து மணிய் என்று எழுதப்படுகிறது. இப்படி எழுதுவது அக்காலத்து வழக்கம். கொங்கு நாட்டில் விலையுயர்ந்த மணிக்கற்கள் அக்காலத்தில் அதிகமாகக் கிடைத்தன.
வண்ணக்கன் என்பது பொன், வெள்ளி நாணயங்களின் பரிசோதனை என்னும் பொருள் உள்ள சொல். சங்க இலக்கியங்களில் சில வண்ணக்கர்கள் கூறப்படுகின்றனர். புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் என்னும் புலவர் நற்றிணை 294 ஆம் செய்யுளைப் பாடியவர். வடம வண்ணக்கன் தாமோதரனார் குறுந்தொகை 85 ஆம் செய்யுளைப் பாடியவர். வண்ணக்கன் சோருமருங்குமரனார் என்பவர் நற்றிணை 257ஆம் செய்யுளைப் பாடியுள்ளார். அரசலூர் மலைக் குகையில் தவஞ் செய்த முனிவருக்குக் கற்படுக்கையைத் தானஞ் செய்த தேவன் சாத்தன் மணிக்கல் வண்ணக்கன்.
மணிக்கல் வண்ணக்கனான தேவன் சாத்தன் இம்மலைக் குகையில் முனிவருக்கு இடங்களைத் தானஞ் செய்ததோடு இந்தச் சாசன எழுத்துக்களையும் பொறித்தான் என்பது இதன் கருத்தாகும். எழுத்தும் புணர்த்தான் என்பதிலுள்ள உம் என்னும் இடைச்சொல், இவனே சாசன எழுத்தையும் பொறித்தான் (எழுதினான்) என்பதைக் குறிக்கிறது.
புகழியூர் (புகழூர்)
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் இருக்கிறது. இந்த ஊர், திருச்சிராப்பள்ளி - ஈரோடு இருப்புப் பாதையில் ஒரு நிலையமாக இருக்கிறது. புகழூருக்கு இரண்டு கல் தொலைவில் வேலாயுதம்பாளையம் என்னும் கிராமத்துக்கு அருகில் ஆறுநாட்டார் மலை என்னும் பெயருள்ள தாழ்வான குன்றுகளில், இயற்கையாக அமைந்துள்ள குகைகள் இருக்கின்றன. இக்குகைகளின் பாறையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. பிராமி எழுத்துக்கள் கி.பி. 300க்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்தபடியால் இவை கடைச்சங்க காலத்திலே எழுப்பப் பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இடங்கள் கடைச்சங்க காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளாக இருந்தவை.
பௌத்த மத, ஜைன மதத் துறவிகள் ஊருக்கு அப்பால் மலைக் குகைகளில் இருந்து தவம் செய்வது அக்காலத்து வழக்கம். அவர்கள் படுப்பதற்காகக் கல்லிலேயே பாய் தலையணைபோல அமைத்துக் கொடுப்பது ஊரார் கடமையாக இருந்தது. அந்த முறையில் இந்தக் குகைகளிலே, கற்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்குள்ள பிராமி எழுத்துக்கள் இந்தப் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயரைக் கூறுகின்றன.
ஆறு நாட்டார் மலையில் உள்ள பிராமி எழுத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் 1927- 28ஆம் ஆண்டின் 343ஆம் பதிவு எண்ணுள்ள எழுத்துக்கள் இவை (343 of 1927 - 28). இந்த எழுத்துக்கள் இரண்டு வரியாக எழுதப்பட்டுள்ளன. முதல் வரியில் பத்து எழுத்துக்களும், இரண்டாம் வரியில் ஒன்பது எழுத்துக்களும் இருக்கின்றன. இந்தக் கல்லில் புள்ளிகளும் புரைசல்களும் இருப்பதனால் சில எழுத்துகள் செம்மையாகத் தெரியவில்லை. ஆனாலும், கூர்ந்து பார்த்து அவற்றைப் படிக்க இயலும் (படம் காண்க).
திரு ரு டி.வி மகாலிங்கம் இவ்வெழுத்துக்களை இவ்வாறு படிக்கிறார்:5 ‘கருவூர் பொன் வாணிகள், நேர்த்தி அதிட்டானம்.’ இவ்வாறு படித்து, நேர்த்தி என்றால் நேர்ந்து கொள்ளுதல் (பிரார்த்தனை செய்துகொள்ளுதல்) என்று விளக்கங் கூறுகிறார். கருவூர் பொன் வாணிகள் நேர்ந்துகொண்டு அமைக்கப்பட்ட அதிஷ்டானம் என்று கருத்துத் தெரிவிக்கிறார்.
திரு. ஐரவாதம் மகாதேவன் இதைக் கீழ்க்கண்டவாறு படிக்கிறார்:6
வாணிகன் நத்தி என்பதை வாணிகன் + அத்தி என்று பிரித்து, ‘கருவூர் பொன் வாணிகன் அத்தியினுடைய அதிட்டானம் (இடம்)’ என்று பொருள் கூறுகிறார்.
இவர்கள் ‘கருவூர் பொன் வாணிகன் அதிட்டானம்’ என்று வாசித்தது முழுவதும் சரியே. தவறு இல்லை. ஆனால், இரண்டாவது வரியின் முதல்மூன்று எழுத்துகளை வாசித்தலில் தவறு காணப்படுகிறது. இந்த எழுத்துகளில் கல் பொளிந்து எழுத்துகளின் சரியான உருவம் தெரியவில்லை. இக்காரணத்தினால் மகாலிங்கம் அவர்கள் இவ்வெழுத்துக்களை நேர்த்தி என்று வாசிக்கிறார். மகாதேவன் அவர்கள் நத்தி என்று வாசிக்கிறார். இப்படிப் படிப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை. இரண்டாவது வரியின் முதலெழுத்தை உற்று நோக்கினால் அது பொ என்று தோன்றுகிறது. அடுத்துள்ள இரண்டு எழுத்துகளையும் சேர்த்து வாசித்தால் பொத்தி என்று படிக்கலாம். அதாவது கருவூர் பொன் வாணிகனுடைய பெயர் ‘பொத்தி’ என்பது. ஆகவே, இந்த எழுத்துகளின் முழு வாசகம் இது:
கருவூர் பொன் வாணிகன்
பொத்தி அதிட்டானம்
கருவூரில் பொன் வாணிகம் செய்த பொத்தி என்பவர் இந்த அதிட்டானத்தை (முனிவர் இருக்கையை) அமைத்தார் என்பது இதன் கருத்து. இருக்கையை யமைத்தார் என்றால், குகையிலுள்ள பாறைகளைச் செப்பஞ் செய்து கற்படுக்கைகளை அமைத்தார் என்பது பொருள்.
விளக்கம்:
கருவூர், கொங்கு நாட்டையரசாண்ட சேர அரசர்களுக்குச் சங்க காலத்தில் தலைநகரமாக இருந்தது என்பதை அறிவோம். அவ்வூர் அக்காலத்தில் பேர்போன வாணிகப் பட்டணமாக இருந்தது. இங்கு, கிரேக்க ரோமர்கள் (யவனர்கள்) வந்து வாணிகஞ் செய்தார்கள். இவ்வூரில் பொன் வாணிகஞ் செய்தவர்களில் ஒருவர் பெயர் பொத்தி என்பது. பொத்தன், பொத்தி என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கி வந்தது. பொத்த குட்டன் என்னுந் தமிழன் ஒருவன் இலங்கை அநுராதபுரத்திலே செல்வாக்குள்ளவனாக இருந்தான். அவன், தான் விரும்பிய படியெல்லாம் இலங்கை மன்னர்களைச் சிம்மாசனம் ஏற்றினான் என்று மகாவம்சத்தின் பிற்பகுதியான சூலவம்சம் என்னும் நூல் கூறுகிறது. பொத்தி என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பொத்தியார் என்று கூறப்படுகிறார். அவர் இயற்றிய செய்யுட்கள் புறநானூற்றில் (புறம். 217, 220, 221, 222, 223) உள்ளன.
எனவே, இந்த எழுத்துக்களில் காணப்படுகிற பொன் வாணிகனுடைய பெயர் பொத்தி என்பதில் ஐயமில்லை. மகாதேவன் நெத்தி என்று படிப்பது தவறு. நெத்தி என்னும் பெயர் இருந்ததாகச் சான்று இல்லை. டி.வி. மகாலிங்கம் நேர்த்தி என்று படிப்பதும் பொருத்தமாக இல்லை.
அதிட்டானம் என்பது அதிஷ்டானம் என்னும் சொல்லின் தமிழாக்கம். இங்கு இது இந்தக் குகையைக் குறிக்கின்றது.
✽ ✽ ✽
புகழூர்ச் சாசனம் இன்னொன்றைப் பார்ப்போம். இது சாசன எழுத்து இலாகாவில் 1927 - 28ஆம் ஆண்டு தொகுப்பில் 346ஆம் எண்ணாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரே வரியில் இருபத்தொரு பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பாறைக் கல்லில் புரைசல்களும் புள்ளிகளும் கலந்திருப்பதால் சில எழுத்துக்களின் சரியான வடிவம் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது ஆனாலும் வாசிக்கக் கூடியதாக இருக்கிறது. இதில் காணப்படுகிற பிராமி எழுத்துகளின் வரிவடிவம் இது. புள்ளியிட்டுக் காட்டப்பட்டிருப்பவை பாறையில் உள்ள புரைசல்கள்.
இதன் இப்போதைய எழுத்து வடிவம் இது:
ந ள ளி வ ஊ ர ப பி ட ந தை ம க ன கீ ர ன கொ ற் ற ன
இவ்வெழுத்துக்களுக்குப் புள்ளியிட்டுப் படித்தால் இவ்வாறாகிறது.
நள்ளிவ் ஊர்ப் பிடந்தைமகன் கீரன் கொற்றன்
திரு. டி. வி. மகாலிங்கம் அவர்கள் இதை இவ்வாறு படிக்கிறார்:
நாளாளபஊர் பிடந்தை மகன் கீரன்கொற்றன்
இவ்வாறு படித்துப் பின்னர்க் கீழ்க்கண்டவாறு விளக்கங் கூறுகிறார். ஆதன் + தந்தை = ஆந்தை என்பது போல, பிடன் + தந்தை = பிடந்தை என்றாயிற்று. பிடன் = படாரன், பட்டரான். தந்தை = பெரியவன், மேலானவன், உயர்ந்தவன், புனிதமானவன்?7 ‘பிடன் தந்தை மகன் கீரன் கொற்றன்’ என்றும், ‘நாளாளப ஊர்’ என்றும் இவர் கூறுவது சரியெனத் தோன்றவில்லை.
திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இந்த எழுத்துக்களைக் கீழ்வருமாறு வாசிக்கிறார்:
நல்லிய ஊர்ஆ பிடந்தை மகள் கீரன்கொற்ற... ...
இவ்வாறு வாசித்த இவர் ‘நல்லியூர் பிடந்தையின் மக்களான கீரன், கொற்ற(ன்)’ என்று விளக்கங் கூறுகிறார். மகள் என்பதை மக்கள் என்று கூறுகிறார்.8
திரு. மகாலிங்கம் நாளாளப ஊர் என்று படிப்பது தவறு. திரு. மகாதேவன் நல்லி ஊர் என்று படிப்பது ஓரளவு சரி. 7ஆவது எழுத்தை மகாலிங்கம் அடியோடு விட்டுவிட்டார். மகாதேவன் அவர்கள் அதைப் பிராமி அ என்று வாசித்துள்ளார். அது பிராமி ப் என்னும் எழுத்தாகும். மகாலிங்கம் ‘மகன்’ என்று படிப்பது சரி. மகாதேவன் ‘மகள்’ என்று வாசித்து ‘மக்கள்’ என்று பொருள் கூறுவது சரியெனத் தோன்றவில்லை. மகன் என்பதே சரியானது. கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளின் பெயர் என்று மகாலிங்கம் கூறுவது சரி. கீரன், கொற்றன் இரண்டு ஆட்கள் என்று மகாதேவன் கூறுவது சரியெனத் தோன்றவில்லை.
இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம்.
நள்ளிவ்ஊர்ப் பிடந்தை மகன் கீரன் கொற்ற(ன்)
என்பது இதன் வாசகம். கொற்றன் என்பதில் கடைசி எழுத்தாகிய ன் சாசனத்தில் இல்லை.
இதை விளக்கிக் கூறுவோம்.
முதல் மூன்று எழுத்துகளை நள்ளி என்று படிப்பதே சரியாகும். பிராமி எழுத்துகளில் ல, ள எழுத்துகளுக்கு மிகச் சிறு வேற்றுமைதான் உண்டு. லகரத்தின் வலது பக்கத்தின் கீழே, கீழாக வளைந்த கோடு இட்டால் ளகரமாகிறது. இந்தச் சாசன எழுத்தின் நிழற்படத்தை உற்று நோக்கினால் ளகரமாகத் தோன்றுவதைக் காணலாம். ஆகையால், நள்ளி என்று வாசிப்பதுதான் சரி என்று தெரிகிறது. மேலும், நல்லி என்ற பெயர் சங்க காலத்தில் காணப்படவில்லை. நள்ளி என்னும் ஒரு அரசன் கூறப்படுகிறான்.
“நளிமலை நாடன் நள்ளி” (சிறுபாண். 107), “கழல் தொடித் தடக்கைக் கலிமான் நள்ளி” (அகம். 238: 14), “திண்தேர் நள்ளி கானம்” (குறுந். 210:1), “வல்வில் இளையர் பெருமகன் நள்ளி” (அகம். 152:15), " 66 கொள்ளார் ஓட்டிய நள்ளி” (புறம். 158: 28) என்பன காண்க. கண்டீரக் கோப் பெருநள்ளி சங்கச் செய்யுட்களில் கூறப்படுகிறான். இவன் கொங்கு நாட்டில் கண்டீரம் என்னும் ஊரின் அரசன். இவன் பெயரால் அக்காலத்தில் நள்ளி ஊர் என்னும் ஊர் இருந்திருக்க வேண்டும் என்பது இந்தக் கல்வெட்டெழுத்தினால் தெரிகிறது.
இனி, இதற்கு அடுத்தபடியாக உள்ள நான்கு எழுத்துகளைப் பார்ப்போம். கல்வெட்டில் இவ்வெழுத்துகள் வ்ஊர்ப் என்று காணப்படுகிறது. இதில் முதல் எழுத்தை மகாலிங்கம் அவர்கள் ப என்று படித்து முதல் மூன்று எழுத்துகளுடன் சேர்த்து ‘நாளாளப்’ என்று படித்துள்ளார். மகாதேவன் அவர்கள் ய் என்று படித்து முதல் மூன்று எழுத்துக்களுடன் சேர்த்து ‘நல்லிய் என்று படித்துள்ளார். இந்த எழுத்தை உற்று நோக்கினால் வ் என்று தோன்றுகிறது. இதனுடன் அடுத்துள்ள ஊகார எழுத்தைச் சேர்த்தால் வ்ஊ என்றாகும். வூ என்னும் எழுத்துதான் இவ்வாறு வ்ஊ என்று எழுதப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் எழுத்துகள் சாசனங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருப்பதைக் கல்வெட்டெழுத்துகளிலும் செப்பேடுகளிலும் காணலாம். இந்த நான்கு எழுத்துக்களை (வ்ஊர்ப்) முன் மூன்று எழுத்துகளுடன் கூட்டினால் நள்ளிவ்வூர்ப் என்றாகிறது.
பிறகு, இதற்கு அடுத்த நான்கு எழுத்துகளைப் பார்ப்போம் (8 முதல் 11 எழுத்துகள்). அது பிடந்தை என்றிருக்கிறது. இதை மகாலிங்கமும் மகாதேவனும் பிடந்தை என்று சரியாகவே வாசித்திருக்கிறார்கள். ஆனால், பிடந்தை என்பதை பிட்டன் + தந்தை என்று பிரித்து, பிட்டனுடைய தந்தை என்றும் பிடன் என்பதற்குப் படாரன், பட்டாரன் என்றும் மகாலிங்கம் அவர்கள் விளக்கங் கூறுவது சரியாகவும் இல்லை, பொருத்தமாகவும் இல்லை.
பிட்டன் என்னும் பெயருள்ள சேனைத் தலைவன் ஒருவன் சங்க இலக்கியங்களில் கூறப்படுகிறான் (அகம். 77, 143; புறம். 172, 186; புறம். 169, 171 செய்யுள்களின் அடிக்குறிப்பு). அவன் பிட்டங்கொற்றன் என்றுங் கூறப்படுகிறான். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் புறம். 171ஆம் செய்யுளில் பிட்டங்கொற்றனைக் கூறுகிறார். அச்செய்யுளில் அவர் பிட்டங்கொற்றனை எந்தை என்று கூறுகிறார் (புறம். 171: 12). புலவர் ஒரு அரசனை எந்தை என்று கூறவேண்டியதில்லை. அப்படிக் கூறிய மரபும் இல்லை பிட்டெனுக்குப் பிட்டெந்தை என்னும் பெயர் இருந்திருக்க வேண்டுமென்று இதனால் தெரிகிறது. பிட்டெந்தை என்னும் பெயரே இந்தச் சாசன எழுத்தில் பிடந்தை என்று எழுதப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
இதற்கு அடுத்துள்ள மூன்று எழுத்துக்கள் மகன் என்பது. இதை மகாதேவன் ‘மகள்’ என்று படித்து அது ‘மக்கள்’ என்னும் பொருளுடைய சொல் என்று கருதுகிறார். மகன் என்பதே சரியான வாசகம்.
கடைசியாக உள்ள ஏழு எழுத்துக்கள் ‘கீரன் கொற்றன்’ என்று முடிகின்றன. இவற்றை மகாலிங்கமும் மகாதேவனும் சரியாகவே வாசித்திருக்கிறார்கள். ஆனால் மகாதேவன், கீரன், கொற்றன் என்று இரண்டு பெயரைக் குறிக்கின்றன இவை என்று கருதுகிறார். இது தவறு என்று தெரிகிறது. பிட்டந்தையாகிய பிட்டனுக்குக் கொற்றன் என்றும் பெயர் உண்டு என்பதைச் சங்கச் செய்யுள்களிலிருந்தும் அறிந்தோம். பிட்டங்கொற்றன் என்னும் பெயரை எடுத்துக் காட்டினோம். அதுபோலவே, அவன் மகனான கீரனும் கொற்றன் என்று இதில் கூறப்படுகிறான். ஆகவே, கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளைக் குறிக்கிறது.
பிடந்தை மகன் கீரன் கொற்றன் நள்ளியூரில் இருந்தான் என்பதும் அவன் புகழூர் மலைக்குகையில் கற்படுக்கைகளை முனிவர்களுக்காக அமைத்துக் கொடுத்தான் என்பதும் இந்தக் கல்வெட்ழுெத்துக்களினால் அறியப்படுகின்றன. நள்ளியூர் என்று எழுதப்படவேண்டிய சொல் நள்ளிவ்ஊர் என்று வகர ஒற்றுச் சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, இதை நள்ளியூர் என்று திருத்திப் படிக்க வேண்டும்.
✽ ✽ ✽
புகழூரில் இன்னொரு சாசனம் மேலே சொன்ன சாசனத்தோடு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. இது, சாசன எழுத்து இலாகாவின் 1963-64 ஆம் ஆண்டின் 296ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டெழுத்தை திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள் தம்முடைய நூலில் ஆராயாமலும் குறிப்பிடாமலும் விட்டுவிட்டார். இதன் காரணம் தெரியவில்லை. ஆனால் திரு. ஐ. மகாதேவன் அவர்கள் இதைத் தம்முடைய கட்டுரையில் ஆராய்கிறார்.9 இது இரண்டு வரிகளில் எழுதப்பட்டிருக்கிறது. முதல் வரியில் பதினைந்து எழுத்துகளும், இரண்டாம் வரியில் பதினொரு எழுத்துக்களும் உள்ளன. (படம் காண்க).
இதை இவர் கீழ்க்கண்டவாறு படிக்கிறார்:
1. நல்லிஊர் ஆ பிடன் குறும்மகள்
2. கீரன் நோறி செயிபித பளி
இவ்வாறு படித்த பிறகு, நல்லியூர் பிடன் மக்களாகிய கீரனும் ஓரியும் செய்வித்த பள்ளி என்று விளக்கங் கூறுகிறார். கீரனும் ஓரியும் என்று இரண்டு மக்கள் இருந்தனர் என்று கூறிய இவர், இன்னொரு இடத்தில் கீரன் நோரி என்பவன் ஒரே மகன் என்று எழுதியுள்ளார்.10 இதில் மூன்றாவது எழுத்தாகிய லி மாற்றி எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தக் கல்வெட்டெழுத்தை இவர் நேரில் பார்த்துக் கையால் எழுதியிருக்கிறதாகத் தோன்றுகிறது. பார்த்து எழுதியதில் இவர் எழுத்துக்களைத் தவறாக எழுதியிருக்கிறார் என்பது தெரிகின்றது. இந்த 296ஆம் எண்ணுள்ள சாசனம் 346ஆம் எண்ணுள்ள சாசனத்தோடு தொடர்புடையது என்பதை இவர் அறியவில்லை (296 of 1963-64, 346 of 1926 -27).
இவர் காட்டியபடி முதல் வரியின் மூன்றாம் எழுத்து முறைதவறி எழுதப்பட்டிருக்கிறது இவர் படிக்கிற நல்லி என்பது நள்ளி என்பதாகும். இந்த ல, ள வித்தியசத்தை மேல் சாசனத்தில் விளக்கிக் கூறியுள்ளேன். முதல் வரியில் 6ஆவது எழுத்தை இவர் பிராமி ஆ என்று வாசித்திருக்கிறார். இது பிராமி ப் என்னும் எழுத்து. அடுத்து வரும் பிடன் என்பதுடன் இவ்வெழுத்தைச் சேர்த்தால் ‘நள்ளி ஊர்ப்பிடன்’ என்றாகிறது. பிடன் என்பது பிட்டன் ஆகும். (பழங்காலத்தில் ட எழுத்து ட்ட என்று வாசிக்கப்பட்டது என்று தோன்றுகிறது. வட்டதளி என்பது வட தளி என்று எழுதப்பட்டது காண்க). மேல் சாசனத்தில் கூறப்படுகிற பிடந்தையும் இந்தப் பிடனும் (பிட்டன்) ஒருவரே என்பது தெளிவாகத் தெரிகிறது.
அடுத்து உள்ள ‘குறும்மகள்’ என்பதில் மகர ஒற்று மிகையாகக் காணப்படுகிறது. அது ‘குறுமகள்’ என்றிருக்க வேண்டும். இளம் பெண் என்னும் பொருளுடைய குறுமகள் என்னுஞ்சொல் சங்கச் செய்யுள்களில் அதிகமாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றைக் காட்டுவோம். ‘நோவல் குறுமகள்’ (அகம். 25 :16), ‘ஒள்ளிழைக் குறுமகள்’ (நற். 253: 5), ‘மேதையங் குறுமகள்’ (அகம். 7:6). ‘பொலந்தொடிக் குறுமகள்’ (அகம். 219:9), ‘வாணுதற் குறுமகள்’ (அகம். 230:5), ‘பெருந்தோட் குறுமகள்’ (நற். 221:8), ‘ஆயிழை குறுமகள்’ (அகம். 161: 11), ‘மாண்புடைக் குறுமகள்’ (நற். 352:11), ‘மெல்லிய குறுமகள்’ (நற். 93:8), ‘வாழியோ குறுமகள்’ (நற். 75 :4), ‘மடமிகு குறுமகள்’ (நற். 319:8), ‘எல்வளைக் குறுமகள்’ (நற். 167:10), ‘அணியிற் குறுமகள்’ (நற். 184:8) முதலியன. குறும் மகள் என்பதை மகாதேவன் அவர்கள் குறும்மக்கள் என்று படிக்கிறார்.
இச்சாசனத்தில் குறும்மகன் என்று இருப்பதாக ஐ. மகாதேவன் எழுதுகிறார். குறும்மகன் என்பது பிழை என்றும் அது குறுமகன் என்று இருக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டுகிறார். குறுமகன் என்பதற்கு இளையமகன் என்றும் பொருள் கூறுகிறார்.11இது முற்றிலும் தவறு. குறுமகன் என்பதற்கு இளையமகன் என்பது பொருள் கிடையாது. அதற்குக் கீழ்மகன் என்பது பொருள். ஆனால், குறுமகள் என்றால் இளைய மகள், இளம்பெண் என்பது பொருள். இப்பொருளில் இச்சொல் சங்க இலக்கியங்களில் பயின்று வந்திருப்பதை மேலே எடுத்துக் காட்டினோம். குறு மகன் என்பதற்கு இளையமகன் என்பது பொருள் அன்று; கீழ்மகன், இழிந்தவன் என்பதே பொருள் உண்டு. உதாரணங் காட்டுவோம்.
குறுமகன் (சிலம்பு. 15: 95), குறுமகனால் கொலையுண்ண (சிலம்பு. 29. உரைப்பாட்டுமடை), கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்ப (சிலம்பு. 29. காவற்பெண்டரற்று), உருகெழுமூதூர் ஊர்க் குறு மாக்கள் (சிலம்பு. 30:109). பழைய அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் குறுமகன் என்பதற்குக் கீழ்மகன் என்று உரை எழுதியிருப்பதைக் காண்க. இதன் பொருளை யறியாமல் ஐ. மகாதேவன், குறுமகள் என்பதன் ஆண்பாற் பெயர் குறுமகன் என்று கருதுகிறார். சில பெண்பாற் பெயர்களுக்கு நேரான ஆண்பாற் பெயர்கள் இல்லை என்பதும் அப்படி வழங்குகிற ஆண்பாற் சொற்களுக்குத் தாழ்ந்த இழிவான பொருள் உள்ளன என்றும் அறிஞர்கள் அறிவார்கள். உதாரணமாக, இல்லாள் - இல்லான் என்னுஞ் சொற்களை எடுத்துக் கொள்வோம். இல்லாள் என்றால் வீட்டரசி, மனைவி, இல்லற வாழ்க்கையை நடத்துகிறவள் என்பது பொருள். இல்லாள் என்னுஞ் சொல்லுக்கு ஆண்பாற் சொல் கிடையாது. இல்லான் என்னுஞ் சொல் புருஷன், கணவன், இல்லறத்தை நடத்துகிறவன் என்னும் பொருள் உடையதன்று. மாறாக வறுமையாளன், தரித்திரமுடையவன் என்பது பொருள். “இல்லானை இல்லாளும் வேண்டாள்” (நல்வழி. 34) என்பது காண்க. இது போலவே, குறுமகள் என்பதற்குப் பொருள் வேறு. குறுமகன் என்பதற்குப் பொருள் வேறு. ஐ. மகாதேவன், இச்சாசனத்தில் வருகிற குறுமகள் என்பதைக் குறுமகன் என்று தவறாகப் படித்து அதற்கு எக்காலத்திலும் இல்லாத இளைய மகன் என்று பொருள் கூறியிருப்பது பொருந்தாது. இச்சாசனத்தில் உள்ள சொல் குறும்மகள் (குறுமகள்) என்பதே ஆகும்.
(முந்திய சாசனத்தில் கீரன் கொற்றன் கூறப்பட்டது போல இந்தச் சாசனத்தில் கீரன் கொற்றி கூறப்படுகிறாள். முன் சாசனத்தில் கூறப்பட்ட கீரன் கொற்றன் பிடந்தையின் மகனாக இருப்பதுபோல, இச்சாசனத்தில் கூறப்படுகிற கீரன் கொற்றியும் பிடன் (பிடந்தை) மகள் என்று கூறப்படுகிறாள். எனவே, கீரன் கொற்றனும் கீரன் கொற்றியும் தமயன் தங்கையர் என்றும் இவர்கள் பிடன் (பிடந்தையின்) மக்கள் என்றும் தெரிகின்றனர். பிடனாகிய பிட்டன், ‘கொற்றன்’ என்று கூறப்பட்டது போலவே இவர்களும் கீரன் கொற்றன், கீரன் கொற்றி என்று கூறப்படுவதும் இதனை வலியுறுத்துகிறது. இந்தச் சான்றுகளினாலே, புகழூர்க் குகையில் தமயனும் தங்கையுமான இவர்கள் இருவரும் சேர்ந்து முனிவர்களுக்கு இவ்விடத்தைத் தானஞ் செய்தார்களென்பது தெரிகின்றது. மேல் இரண்டு பிராமி எழுத்துக்களைக் கொண்டு இக்குகையில் கற்படுக்கைகளைத் தானம் செய்தவர் பரம்பரையை இவ்வாறு அமைக்கலாம்:
பிடந்தை (பிடன், பிட்டன்)
┌──────────────┴────────────────┐
கீரன் கொற்றன் கீரங்கொற்றி
(மகன்) (மகள்)
(346 of 1927-28) (296 of 1963-64)
குறிப்பு: பக்கம் 223, 228இல்1 பிராமி எழுத்துகளின் படத்தில் முதல் எழுத்துக்க என்று எழுதப்பட்டுள்ளது தவறு; அந்த எழுத்துகள் என்று எழுதப்பட வேண்டும். ஓவியரின் தவறு இது.
புகழூருக்கு அடுத்த வேலாயுதம்பாளையம் என்னுங் கிராமத்து ஆறுநாட்டார் மலைக் குகையில் ஒரு பிராமி எழுத்து இருக்கிறது. இது, சாசன எழுத்து (எபிகிராபி) இலாகாவின் சாசனத் தொகுப்பில் 7- 28ஆம் ஆண்டு 344 ஆம் எண் உள்ளது (No. 344 of 7- 28) இந்த எழுத்தின் படம் காண்க.
இந்த பிராமி எழுத்துகள் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படுகிற போதிலும் சில எழுத்துக்கள் புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகின்றன.
இந்த எழுத்தின் வாசகத்தைத் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள்,
1. கொற்றந்தை ளவன்
2. மூன்று
என்று படித்து, கொற்றந்தை (இ)ளவன். மூன்று. (ஒரு முற்றுப் பெறாத சாசனம்) என்று விளக்கங் கூறியுள்ளார்.12 முதல் வரியில் நான்காவது எழுத்து புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதை இவர் ந் (தந்தகரம்) என்று வாசிக்கிறார். அதற்கு அடுத்துள்ள எழுத்தும் (ஐந்தாவது எழுத்து) புரைசல்களுடன் காணப்படுகிறது. அதை இவர் தை என்று வாசிக்கிறார். முதல் வரியில் கடைசி இரண்டு எழுத்துக்களை இவர் வன் என்று வாசிக்கிறார். இரண்டாவது வரியில் முதல் எழுத்து புரைசல்களுடன் சேர்ந்திருக்கிறது. இதை இவர் மு என்று வாசிக்கிறார். இவ்வாறு இவர் வாசித்திருப்பது தவறு என்று தோன்றுகிறது. முதல் வரியின் கடைசி இரண்டு எழுத்துகள் இவர் படிப்பதுபோல வன் அல்ல. அவை எயி என்னும் எழுத்துகள். இரண்டாவது வரியில் முதல் எழுத்து புரைசலுடன் சேர்ந்து மு போலக் காணப்பட்டாலும் அது ம என்னும் எழுத்தே.
திரு. டி.வி மகாலிங்கம் அவர்கள் இந்த எழுத்துக்களைப் படித்து ஏறக்குறைய சரியான முடிவுக்கு வந்திருக்கிறார். ஆனால், இதன் கருத்தைத் தெளிவாகவும் நன்றாகவும் விளக்காமல் விட்டுவிட்டார்.13 இந்தச் சாசனத்தின் முதல் வரியில் ஐந்தாவது எழுத்து புரைசல்களுடன் சேர்ந்து இன்ன எழுத்து என்று தெளிவாகத் தெரியவில்லை. ஞை என்றும் தை என்றும் சொ என்றும் படிக்கும்படி இது காணப்படுகிறது. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதைத் தை என்று வாசித்திருப்பதை மேலே சுட்டிக்காட்டினோம். டி.வி. மகாலிங்கம் அவர்கள் இதை எ என்று வாசித்திருப்பது சரிதான். இதை எ என்றும் ஏ என்றும் வாசிக்கலாம். கடைசி எழுத்தை மகாதேவன் அவர்கள் ன் என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் அவர்கள் யி என்று வாசிக்கிறார். இது ய போலவும் தோன்றுகிறது. இந்த யகரத்தின் கீழே ஒரு கோடு ர கரத்தைக் குறிப்பது போன்று காணப்படுகிறது. இதை மகாலிங்கம் கவனித்திருக்கிறார். ஆனால், இது கல்லில் இயற்கையாக உள்ள புரைசல் என்று தோன்றுகிறது. இரண்டாவது வரியில் உள்ள மூன்று எழுத்துகளை மகாலிங்கம் அவர்கள் சரியாகவே மன்று என்று வாசித்துள்ளார்.
1. கொற்றக் கொள எயி
2. மன்று
என்று வாசித்துக் கொற்ற என்பதற்கு ‘அரசனுக்குரிய’ அல்லது ‘வீரமுடைய’ என்று விளக்கங்கூறி, மன்று என்பது மண்டபத்தைக் குறிக்கிறது என்று கூறி முடிக்கிறார். ஆனால், இவர் படித்த கொள என்பதற்கு இவர் விளக்கங்கூறவில்லை. அதைப் பற்றி ஒன்றுமே கூறாமல் விட்டுவிட்டார். எயி என்று இருப்பது எயினரைக் குறிக்கிறது என்று கூறுகிறார். இவர் படித்துள்ள வாசகமும் தெளிவு இல்லாமல் குழப்பமாகவே இருக்கிறது.
இந்த எழுத்துகளை நாம் படிப்போம்.
முதல் வரியில் முதல் நான்கு எழுத்துகளில் ஐயம் ஒன்றும் இல்லை. அவை கொற்றக் என்னும் எழுத்துகள். ஐந்தாவது எழுத்து அதிகப் புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதைத் தை என்றும் கொ என்றும் படித்தார்கள். அதைக் க என்று படிப்பதே பொருத்தமும் சரியும் ஆகும். ககரத்தை யடுத்துக் கல்லில் புரைசல் இருக்கிறது. அதனுடன் அடுத்த ள கரத்தைச் சேர்த்துக் கள என்று வாசிக்கலாம். இதற்கு அடுத்த எழுத்துகள் எயி என்பவை. இதன் பக்கத்தில் ஒரு எழுத்து இருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் காணப்படவில்லை. அது ல் ஆக இருக்கலாம். அதைச் சேர்த்துப் படித்தால் கடைசி மூன்று எழுத்துகள் எயில் என்றாகிறது. இரண்டாவது வரியில் உள்ள மூன்று எழுத்துகளின் வாசகம் மன்று என்பது. (மகரத்தின் கீழேயுள்ள புரைசல் மு போலத் தோன்றுகிறது.) எனவே, இந்த எழுத்துகளை, என்றும் தை என்றும் சொ என்றும் படிக்கும்படி இது காணப்படுகிறது. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதைத் தை என்று வாசித்திருப்பதை மேலே சுட்டிக்காட்டினோம். டி.வி. மகாலிங்கம் அவர்கள் இதை எ என்று வாசித்திருப்பது சரிதான். இதை எ என்றும் ஏ என்றும் வாசிக்கலாம். கடைசி எழுத்தை மகாதேவன் அவர்கள் ன் என்று வாசித்துள்ளார். மகாலிங்கம் அவர்கள் யி என்று வாசிக்கிறார். இது ய போலவும் தோன்றுகிறது. இந்த யகரத்தின் கீழே ஒரு கோடு ர கரத்தைக் குறிப்பது போன்று காணப்படுகிறது. இதை மகாலிங்கம் கவனித்திருக்கிறார். ஆனால், இது கல்லில் இயற்கையாக உள்ள புரைசல் என்று தோன்றுகிறது. இரண்டாவது வரியில் உள்ள மூன்று எழுத்துகளை மகாலிங்கம் அவர்கள் சரியாகவே மன்று என்று வாசித்துள்ளார்.
1. கொற்றக் கொள எயி
2. மன்று
என்று வாசித்துக் கொற்ற என்பதற்கு ‘அரசனுக்குரிய’ அல்லது ‘வீரமுடைய’ என்று விளக்கங்கூறி, மன்று என்பது மண்டபத்தைக் குறிக்கிறது என்று கூறி முடிக்கிறார். ஆனால், இவர் படித்த கொள என்பதற்கு இவர் விளக்கங்கூறவில்லை. அதைப் பற்றி ஒன்றுமே கூறாமல் விட்டுவிட்டார். எயி என்று இருப்பது எயினரைக் குறிக்கிறது என்று கூறுகிறார். இவர் படித்துள்ள வாசகமும் தெளிவு இல்லாமல் குழப்பமாகவே இருக்கிறது.
இந்த எழுத்துகளை நாம் படிப்போம்.
முதல் வரியில் முதல் நான்கு எழுத்துகளில் ஐயம் ஒன்றும் இல்லை. அவை கொற்றக் என்னும் எழுத்துகள். ஐந்தாவது எழுத்து அதிகப் புரைசல்களுடன் சேர்ந்து காணப்படுகிறது. அதைத் தை என்றும் கொ என்றும் படித்தார்கள். அதைக் க என்று படிப்பதே பொருத்தமும் சரியும் ஆகும். ககரத்தை யடுத்துக் கல்லில் புரைசல் இருக்கிறது. அதனுடன் அடுத்த ள கரத்தைச் சேர்த்துக் கள என்று வாசிக்கலாம். இதற்கு அடுத்த எழுத்துகள் எயி என்பவை. இதன் பக்கத்தில் ஒரு எழுத்து இருக்க வேண்டும். அது இந்தப் படத்தில் காணப்படவில்லை. அது ல் ஆக இருக்கலாம். அதைச் சேர்த்துப் படித்தால் கடைசி மூன்று எழுத்துகள் எயில் என்றாகிறது. இரண்டாவது வரியில் உள்ள மூன்று எழுத்துகளின் வாசகம் மன்று என்பது. (மகரத்தின் கீழேயுள்ள புரைசல் மு போலத் தோன்றுகிறது.) எனவே, இந்த எழுத்துகளை,
1. கொற்றக்களஎயி(ல்)
2. மன்று
என்று வாசிக்கலாம்.
கொற்றக் களத்து (கொற்றக்களம் - வெற்றிக்களம்) எயிலைச் சேர்ந்த மன்று என்பது இந்த வாசகத்தின் கருத்து. கொற்றக்களம் என்பது ஒரு இடத்தின் பெயர். கொற்றக்களம் என்னும் ஊரில் இருந்த எயிலுக்கு (கோட்டைக்கு) உரியது இந்த மன்று (குகை). அதாவது, கொற்றக்களத்து எயிலைச் சேர்ந்தவர்கள் இந்த மன்றத்தை முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்தார்கள் என்பது இதன் திரண்ட பொருளாகும்.
புகழூரில் உள்ள இன்னொரு கல்வெட்டெழுத்தைப் பார்ப்போம். இதுவும் மேற்சொன்ன இடத்திலேயே இருக்கிறது. இது சாசன எழுத்து லாகாவில் 1927 -28 ஆம் 28 ஆம் ஆண்டில் 347 ஆம் எண்ணுள்ளதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த எழுத்து எழுதியுள்ள பாறையில் புரைசலும் புள்ளியும் கலந்திருப்பதனால் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை (படம் காண்க).
இந்த எழுத்துகளை ஐ. மகாதேவன் அவர்கள், ... ... ணாகன் மகன் (இ)ளங்கீரன்'
என்று வாசிக்கிறார்.14
இந்தப் பிராமி எழுத்தின் இன்னொரு படம் இவ்வாறு காணப்படுகிறது.
திரு.டி.வி. மகாலிங்கம் அவர்கள் இதை இவ்வாறு வாசித்திருக்கிறார்.15 ‘ணாகன் மகன் பெருங்கீரன்’. இவர் இவ்வாறு படிப்பது சரியான வாசகமே.
நாகன் என்று இருக்கவேண்டியது ணாகன் என்று டண்ணகரத்தில் தொடங்கப்பட்டிருப்பது பிராகிருத பாஷையின் சாயல் என்று இவர் கூறுகிறார். எழுத்தைப் பொறித்த கற்றச்சனுடைய பிழை என்றும் கருதலாம். பிராமி எழுத்துக்களில் ந கரத்துக்கும் ண கரத்துக்கும் மிகச் சிறு வேறுபாடுதான் உண்டு. இந்த வேறுபாட்டைச் சிற்பி உணராத படியால் இத்தவறு ஏற்பட்டிருக்கிறது.
நாகன், கீரன் என்னும் பெயர்கள் சங்க காலத்தில் மனிதருக்குப் பெயராக வழங்கி வந்தன. இப்பெயர்கள் சில அடைமொழிகளுடன் சேர்த்து வழங்கி வந்தன. இளநாகன், இளிசந்தநாகன், வெண்ணாகன், நன்னாகன், மூப்பேர்நாகன் முதலிய பெயர்களைக் காண்க. அல்லங்கீரன், இளங்கீரன், புல்லங்கீரன், கழார்க்கீரன், கீரங்கீரன், குறுங்கீரன், நக்கீரன், மோசிகீரன், மூலங்கீரன் முதலிய பெயர்களைக் காண்க. இந்தக் கல்வெட்டெழுத்தில் கூறப்பட்டவன் பெருங்கீரன் என்பவன். இவன் நாகனுடைய மகன். நாகனுடைய மகன் பெருங்கீரன் இந்தக் குகையில் கற்படுக்கையை அமைத்ததாக இந்தச் சாசனம் கூறுகிறது.
கீழ்க்கண்டவை புகழூர் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளில் சரித்திர ஆராய்ச்சிக்கு மிக முக்கியமானவை. 1927 ஆம் ஆண்டில் கண்டு பிடிக்கப்பட்ட இவை, எபிகிராபி இலாகாவின் 1927 – 28 ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்படுகின்றன.16 ஒரே கருத்துள்ள இந்தச் சாசனம் இரண்டு இடங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இரண்டு சாசனங்களாகக் கருதப்பட்டாலும் உண்மையில் இவை இரண்டும் ஒன்றே. இரண்டின் வாசகமும் ஒன்றே. இரண்டாவது சாசனத்தில் சில எழுத்துகள் மறைந்து விட்டன. ஆனால், இரண்டு சாசன எழுத்துகளையும் ஒப்பிட்டுப்பார்த்து, விடுபட்டுள்ள எழுத்துகளைச் சேர்த்துப் படித்துப் பொருள் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. இந்தச் சாசன எழுத்துக்கள் இவை:
இவற்றின் வாசகம் இது:
தி அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைய
கோ ஆதன் சேல்லிரும் பொறை மகன்
பெருங் கடுங்கோன் மகனிளங்
கடுங்கோ ளங்கோ ஆக அறுத்த கல்
இந்த இரண்டு சாசனக் கல்வெட்டுகளும் ஒரே பொருளைக் குறிக்கின்றன. அமணன் யாற்றூர் செங்காயபன் உறையகோ ஆதன் சே(ர)லிரும் பொறை மகன் பெருங் கடுங்கோன் மகனிளங்கடுங்கோ இளங்கோ ஆக இருந்தபோது அறுத்த கல் என்பது இதன் பொருள்.
இடையில் எழுத்து மறைந்துபோன இரண்டாவது சாசனத்திலும் இதே செய்தி கூறப்படுகிறது. இரண்டு சாசனங்களின் கடைசிச் சொற்களில் மட்டும் சிறு வேறுபாடு காணப்படுகிறது. அது, முதல் சாசனத்தில் அறுத்த கல் என்றும், இரண்டாவது சாசனத்தில் அறுபித (அறுபித்த) கல் என்றும் காணப்படுகின்றன.
இவ்விரண்டிலும் மூன்று அரசர்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. கோ ஆதன் சே(ர)லிரும்பொறையும் அவன் மகனான பெருங் கடுங்கோனும் அவன் மகனான இளங்கடுங்கோனும் கூறப்படுகின்றனர். பேரனான இளங்கடுங்கோன் இளவரசனாக இருந்தபோது அமண முனிவராகிய ஆற்றூர் செங்காயபன் என்பவர் (மலைக்குகையில்) வசிப்பதற்கு அறுத்துக் கொடுத்த கல் (மலைக்குகை) என்று இச்சாசனங்கள் கூறுகின்றன.
சமண முனிவர்கள் மலைக்குகைகளில் வசித்துக் கற்பாறைகளில் படுத்து உறங்குவது அக்காலத்து வழக்கம் என்று அறிவோம். அரச பரம்பரையைச் சேர்ந்த இளங்கடுங்கோ மலைக்குகையின் கற்றரையைச் செம்மையாக அமைத்து முனிவருக்குத் தானமாகக் கொடுத்தான் என்பது இதன் கருத்து.
இந்தச் சாசன எழுத்துக்களை ஐ. மகாதேவன் ஆராய்ந்திருக்கிறார்.17 டி.வி.மகாலிங்கம் ஆராய்ந்திருக்கிறார்.18 ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.19
முதல் வரியில் முதல் எழுத்தாக இருப்பது தி. இது தா என்று வாசிக்கும்படியும் இருக்கிறது. ஐ. மகாதேவன் இதை தா என்று படித்து இதற்கு முன்பு இ என்னும் எழுத்தை இட்டு இதா என்று வாசிக்கிறார். இதா என்று வாசித்து ‘இதோ’ என்று பொருள் கூறுகிறார். ஆனால், இங்குக் காணப்படுவது தி என்னும் ஒரு எழுத்துதான். இதன் பொருள் திரு என்பது. இந்தச் சாசனம் எழுதப்பட்ட சமகாலத்தில் வெளியிடப்பட்ட சாதவாகன அரசர்களின் நாணயங்களில் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் முதல் எழுத்து தி என்றும் த்ரி என்றும் எழுதப்பட்டுள்ளன. இது திரு (ஸ்ரீ) என்பதைக் குறிக்கிறது என்பது இங்குக் கருதத்தக்கது. ஆகவே, இச்சாசனத்தின் முதலில் உள்ள தி என்பது திரு என்னும் சொல்லாக இருக்கலாம். இதைவிட வேறு பொருள் கொள்வதற்கு இல்லை. ‘இதோ’என்று கூறுவதாக மகாதேவன் கருதுவது பொருத்தமாக இல்லை. அமணன் என்று இருக்க வேண்டிய சொல் அமண்ணன் என்று ணகர ஒற்று இடப்பட்டிருக்கிறது. இது கற்றச்சனின் தவறாக அல்லது எழுதியவரின் தவறாக இருக்கலாம். யாற்றூர், செங்காயபன் என்னும் சொற்களில் யாதொரு கருத்து வேறுபாடும் இல்லை.
முதல் வரியின் கடைசியில் உறைய என்னுஞ் சொல் இருக்கிறது. இதை மகாதேவன் உறைய் என்று வாசித்துள்ளார். இது தவறு என்று தோன்றுகிறது. உறைய என்பதே இதன் வாசகம். “ஆற்றூர் செங்காய பன் உறைய ... ... அறுத்த கல்” என்று வாக்கியம் செம்மையாக முடிகிறது காண்க. இதற்கு மாறாக வாசிப்பது தவறு என்று தோன்றுகிறது.
இனி இந்தச் சாசனங்களில் வருகிற அரசர்களின் பெயர்களைப் பார்ப்போம். முதல் சாசனத்தில் கோ ஆதன் சேரலிரும்பொறை என்று பெயர் காணப்படுகிறது. இரண்டாவது சாசனத்தில் இது (சே)ல்லிரும் புறை என்று எழுதப்பட்டிருக்கிறது. இரும்பொறை என்பதே சரியான வாசகம். சேரலிரும்பொறை என்னும் பெயரில் இரண்டாவது எழுத் தாகிய ரகரம் கல்வெட்டில் விடப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்களில் சேரலிரும்பொறை என்னும் பெயரைக் காண்கிறோம். குடக்கோ இளஞ் சேரலிரும்பொறை, அஞ்துவஞ்சேரல் இரும்பொறை, கோப்பெருஞ் சேரலிரும்பொறை, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் பெயர்களைக் காண்க இதனால், சேரலிரும்பொறை என்னும் பெயர் இந்தச் சாசனங்களில் சேல்லிரும்பொறை என்று தவறாக எழுதப்பட்டிருப்பது நன்கு தெரிகின்றது.
ஆனால், ஐராவதம் மகாதேவன் செல்லிரும்பொறை என்று படிக்கிறார். இதற்குச் சான்றாக இவர் காட்டுகிற சான்றுகளாவன: செல்லிக்கோமான் (அகம். 216), செல்வக் கோமான் (பதிற்று. 67), செல்வக்கடுங்கோ (பதிற்று. பதிகம் 8), சேரமான் இக்கற் பள்ளித் துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன் (புறம். 387), செல்லிக்கோமான், செல்வக் கோமான், செல்வக்கடுங்கோ என்னும் பெயர்களில் செல் இருக்கிற படியால், இந்தக் கல்வெட்டில் வருகிற பெயர் செல்லிரும் பொறை என்று இவர் எழுதுகிறார். இது பற்றி வாதிக்கவேண்டுவதில்லை. இவர் கூறுவதில் உள்ள செல், செல்வம் என்னும் சொல் இச்சாசனத்தில் இடம் பெறவில்லை. சேரல் என்பதே தவறாக சேலிரும்பொறை என்று எழுதப்பட்டிருக்கிறது.
இந்தச் சாசனங்களில் கூறப்படுகிற அரசர்கள் யார் என்பது பற்றிப் பார்ப்போம். திரு. ஐ. மகாதேவன், இச்சாசனங்களில் கூறப்படுகிற அரசர்களைப் பதிற்றுப்பத்து 7,8,9 ஆம் பத்துக்களின் தலைவர்களுடன் பொருந்திக் கூறுகிறார். ‘கோ ஆதன் செல்லிரும்பொறை’ என்று கல்வெட்டில் கூறப்படுகிறவன் 7 ஆம் பத்தின் தலைவனாகிய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும், கடுங்கோன் என்று கல்வெட்டில் கூறப்படுகிறவன் 8ஆம் பத்தின் தலைவனாகிய தகடூர் எறிந்த பெருஞ் சேரலிரும்பொறை என்றும், இளங்கடுங்கோ என்று கல்வெட்டில் கூறப்படுகிறவன் 9 ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரலிரும் பொறை என்றும் பொருந்திக் கூறுகிறார்.
கல்வெட்டில் கூறப்படுகிற முதல் அரசன் பெயர் கோ ஆதன் சே(ர)ல்லிரும் பொறை என்பது. ஐ. மகாதேவன் ‘செல்லிரும் பொறை’ என்று வாசிப்பது தவறு. 7 ஆம் பத்தின் தலைவன் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று கூறப்படுகிறான். இதில் வருகிற கடுங்கோ என்னும் பெயர் இந்தக் கல்வெட்டுகளில் கூறப்படவில்லை. கல்வெட்டுகள் கூறுகிற கோ ஆதன் சேரலிரும் பொறைக்குக் கடுங்கோ என்னும் பெயர் இருந்திருந்தால் அப்பெயரைச் சாசனங்கள் கூறியிருக்கு மன்றோ? மற்ற இரண்டு அரசர்களைப் பெருங்கடுங்கோன், இளங்கடுங்கோன் என்றும் கல்வெட்டுகள் சிறப்பாகக் கூறுகின்றன. முதல் அரசனுக்கு கடுங்கோ என்னும் பெயரைக் கல்வெட்டுக்கள் கூறாதபடியால், சேரலிரும்பொறையும் செல்வக் கடுங்கோவாழியாதனும் வெவ்வேறு அரசர் என்பதும் இருவருக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை என்பதும் வெளிப்படை திரு. மகாதேவன் செல் என்னும் பிழையான பொருளற்ற சொல்லை வைத்துக்கொண்டு செல்வக் கடுங்கோவுடன் பொருத்துவது ஏற்கத்தக்கதன்று. ‘செல்லிரும் பொறை’ என்று எந்த அரசனுக்கும் பெயர் இருந்ததில்லை என்பதைச் சங்க இலக்கியம் பயின்றோர் நன்கறிவார்கள்.
கல்வெட்டுகள் இரண்டாவது அரசனாகக் கூறுகிற பெருங்கடுங்கோனைப் பதிற்றுப்பத்தின் 8ஆம் பத்துத் தலைவனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையுடன் திரு. மகாதேவன் பொருத்திக் கூறுவதும் தவறு. இவ்விரண்டு அரசர்களுக்கும் யாதொரு பொருத்தமும் இல்லை. ஏனென்றால், 8 ஆம் பத்தில் பெருஞ்சேரலிரும் பொறையைப் பாடுகிற அரிசில் கிழார் அவனுடைய அமைச்சனாக இருந்தவர். மேலும், அவன் செய்த தகடூர்ப் போரில், போர்க்களத்தில் உடன் இருந்தவர். அவர் இவ்வரசனைப் பாடிய செய்யுட்களில் இவனைக் கடுங்கோன் என்று ஓரிடத்திலாவது கூறவில்லை. தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறைக்குக் கடுங்கோன் என்று பெயர் இருந்திருக்குமானால் அந்தச் சிறப்பான பெயரை அவர் கூறாமல் விட்டிருப்பாரா? ஆகவே சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோன் பதிற்றுப்பத்து 8 ஆம் பத்துத் தலைவனாகிய பெருஞ்சேரலிரும்பொறையல்லன் என்பது வெளிப்படை. ஐ. மகாதேவன் இருவரையும் ஒருவராக இணைத்துப் பிணைப்பது ஏற்கத்தக்கதன்று.
கல்வெட்டுகள் கூறுகிற இளங்கடுங்கோவைப் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தின் தலைவனான இளஞ்சேரல் இரும்பொறையுடன் திரு. மகாதேவன் பொருத்திக் கூறுவதும் தவறாக இருக்கிறது. இளஞ்சேரலிரும்பொறை மீது 9 ஆம் பத்துப் பாடின பெருங்குன்றூர்கிழார் அச்செய்யுட்கள் ஒன்றிலேனும் அவனைக் கடுங்கோ அல்லது இளங்கடுங்கோ என்று கூறவே இல்லை. இந்தச் சிறப்பு அவனுக்கு இருந்திருக்குமானால் இதனை அவர் கூறாமல் விட்டிருப்பாரா? இப்பெயர் இவனுக்கு இல்லாதபடியால் அவர் இப்பெயரைக் கூறவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
மேலும், சாசனங்கள் பெருங்கடுங்கோவின் மகன் இளங்கடுங்கோ என்று கூறுகின்றன. திரு. மகாதேவன், பெருங்கடுங்கோவைத் தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை என்றும், இளங்கடுங்கோவை அவன் மகனான இளஞ்சேரல் இரும்பொறை என்றுங் கூறுகிறார். இதிலும் இவர் தவறுபடுகிறார். தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும் பொறையின் மகன் இளஞ்சேரலிரும்பொறை என்று இவர் கூறுவது தவறு. பெருஞ்சேரலிரும்பொறையின் தம்பியாகிய குட்டுவன் இரும்பொறையின் மகன் இளஞ்சேரலிரும்பொறை என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.
செல்வக்கடுங்கோ வாழியாதன் (7ஆம் பத்து)
┌──────────────┴────────────────┐
பெருஞ்சேரலிரும்பொறை குட்டுவன்இரும்பொறை
(எட்டாம் பத்து) இளஞ்சேரலிரும்பொறை
(ஒன்பதாம் பத்து)
எனவே, கல்வெட்டுகளில் கூறப்படுகிற அரசர்களைப் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்து அரசர்களுடன் பொருத்துவது பொருத்தமாக இல்லை; தவறாகவே இருக்கிறது (பாலை பாடிய) பெருங்கடுங்கோ, (மருதம் பாடிய) இளங்கடுங்கோ என்னும் இரண்டு சேர அரசர்களைச் சங்க இலக்கியங்கள் கூறுவதை திரு. மகாதேவன் அறியவில்லை. இவ்விரு பெயர்களும் சாசனப் பெயர்களுடன் பொருந்துவது வெளிப்படை. இப்பெயர்களுடன் அவர் பொருந்திக் கூறாமல் அல்லது மறுத்துக் கூறாமல் விட்டது இந்தப் பெயர்களை அவர் அறியாததுதான் காரணம். சங்க காலத்துக் கல்வெட்டுக்களை அறிவதற்குச் சங்க காலத்து இலக்கியங்கள் மிகவும் பயன்படுகின்றன.
பாலை பாடிய பெருங்கடுங்கோவும் மருதம் பாடிய இளங்கடுங்கோவும் இக்கல்வெட்டுகளில் கூறப்படுகிற பெருங்கடுங்கோவும் இளங்கடுங்கோவுமாக இருக்கக்கூடுமோ? கல்வெட்டுகளில் கூறப் படுகிற இவர்கள், தந்தையும் மகனும் என்று கூறப்படுகின்றனர். அன்றியும், ‘பாலை பாடிய’, ‘மருதம் பாடிய’ என்னும் அடை மொழிகள் சாசனங்களில் கூறப்படவில்லை. சங்க இலக்கியங்கள் கூறுகிற இவர்கள் தந்தையும் மகனுமா என்று தெரியவில்லை. பாலை பாடிய பெருங்கடுங்கோ, மருதம் பாடிய இளங்கடுங்கோ இருவரையும் சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோ இளங்கடுங்கோவுடன் பொருத்திக் கூறலாம் என்று தோன்றுகிறது. ஆனால், உறுதியாகத் துணிந்து கூற இயலவில்லை.
எனவே, புகழூர்ச் சாசனங்கள் குறிப்பிடுகிற கோ ஆதன் சேரலிரும்பொறை, அவன் மகன் பெருங்கடுங்கோன், அவன் மகன் இளங் கடுங்கோன் ஆகிய மூவரையும் பதிற்றுப்பத்து 7, 8, 9 ஆம் பத்துகளின் 9 அரசர்களாகிய செல்வக்கடுங்கோ வாழியாதன், தகடூர் எறிந்த பெருஞ்சேரலிரும்பொறை, இளம்சேரலிரும்பொறை என்பவர்களுடன் பொருத்துவதற்குப் போதிய சான்று இல்லை. அதுபோலவே, சாசனங்கள் கூறுகிற பெருங்கடுங்கோன் இளங்கடுங்கோன் என்பவரைப்
பாலை பாடிய பெருங்கடுங்கோ மருதம் பாடிய இளங்கடுங்கோவுடன் பொருத்துவதற்கும் சான்று இல்லை. வேறு சான்றுகள் கிடைக்கிறவரையில், இவர்களைப் பிணைத்துப் பொருத்திச் சரித்திரத்தில் குழப்பம் உண்டாக்காமலிருப்பதே இப்போதைக்குச் சரி என்று தோன்றுகிறது.
இந்தச் சாசனங்களில் காணப்படுகிற அரசர்கள் கொங்கு நாட்டை யரசாண்ட இரும்பொறையரசர் மரபைச் சேர்ந்தவர் என்பதும் இவர்களும் கொங்கு நாட்டை யரசாண்டவர்கள் என்பதும் திட்டமாகத் தெரிகின்றன. ஆனால், இவர்களின் வரலாறு தெரியவில்லை.
கொங்கு நாட்டு மலைகளில், இன்னும் சில பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் இருக்கும் என்று தோன்றுகிறது. அவற்றைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். முக்கியமாகக் கொங்கு நாட்டவர் இதுபற்றி முயற்சி செய்வார்களாக.
✽ ✽ ✽
அடிக்குறிப்புகள்
1. 1961 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை சுதேசமித்திரன். (உள்ளூர்) சென்னை பதிப்பு.
2. Annual Report on Indian Epigraphy for 1961-62. P. 10.
3. Corpus of Tamil Brahmi Inscriptions by Iravatham Mahadevan. P. 67. Seminar on Inscriptions 1966.
4. PP. 290 - 298. Early South Indian Palaeography by T.V. Mahalingam. 1967.
5. P. 281-82 Early South Indian Palaeography - 1967.
6. No 66.P. 67. Seminar on Inscriptions, 1966.
7. Page, 283 - 84, Early south Indian Palaeography, 1967.
8. No.58.P. 66 Seminar on Inscriptions 1966. Historical Tamil Inscriptions. Iravatham Mahadevan. Paper read at the Tamil Conference Ceminar held at Kula Lumpur, 1966.
9. No. 59 page 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil - Brahmi Inscriptions. (I. Mahadevan. Paper read at the Tamil conference seminar held at Kula lumpur, 1966.
10. Historical Tamil Brahmi Inscription Kula lumpur, 1966.
11. Historical Tamil Brahmi Inscription.
12. No. 65, Page 67. Corpus of the Tamil - Brahmi Inscriptions. Seminar on Inscriptions 1966.
13. P. 282-83. Early South Indian Palaeography, 1967.
14. No. 67, Page 67. Corpus of the Tamil - Brahmi Inscriptions. Seminar on Inscription. 1966.
15. P. 428 Early South Indian Palaeography. 1967.
16. Annual Report S.I. Epigraphy 1977-1978. Pt II Para I.
17. Corpus of the Tamil brahmi Inscriptions.
18. P. 279-80 Early South Indian Palaeography.
19. Historical Tamil - Brahmi Inscriptions. I. Mahadevan, Paper read at the Tamil Conference ceminar held at Kula lumpur. 1966.
BIBLIOGRAPHY
1. The Silappadikaram, English Translation by V.R. Ramachandra Dikshitar, 1939.
2. Mysore and Coorg from Inscriptions, Lewis. Rice, 1909.
3. Indian Culture.
4. Roman Trade with Deccan, Dr. B.A., Salitore, Preceedings of the Deccan History Conference, Hydrabad Session, 1945.
5. Epigraphia Carnatica.
6. Ancient Karnataka: History of Tuluva, Baskar Anand Saletore, 1936.
7. Ancient India and South Indian History and Culture, Dr. S. Krishnaswami Aiyengar.
8. Cera Kings of the Sangam Period, K.G. Sesha Aiyer, 1937.
9. A Comprehensive History of India, Vol. II, Edited by K.A.Nilakanta Sastri, 1957.
10. The Chronology of Early Tamils, K.N. Sivaraja Pillai, 1932.
11. The Colas, Vol, I. K.A. Nilakanta Sastri.
12. The Secret Chamber, V.T. Indo-Chudan, 1969.
13. The History of the Tamils, P.T. Srinivasa Iyengar, 1929.
14. Kanchipuram in Early South Indian History, T.V. Mahalingam, 1969.
15. ‘Historical Tamil Brahmi Inscriptions’, Iravatham Mahadevan, 1966.
16. Early South Indian Palaeography, T.V. Mahalingam, 1967.
17. Mahavamso, English Translation, W. Geiger, 1912.
18. Dipavamso, Edited and Translated by H. Oldenberg, 1879.
19. South Indian Epigraphy, (Annual Report on), Madras.
20. Indian Antiquary.
21. The Journal of the Numismatic Society of India.
22. Journal of Bombay Branch of Royal Asiatic Society.
23. Roman History from Coins, Michael Grant. 1968.
24. The Commerce Between Roman Empire and India, Warmington, 1928.
25. ‘Roman Coins found in India’, R. Sewell, pp. 591-637, I.R.A.S., 1904.
26. ‘Corpus of Tamil Brahmi Inscriptions’, Iravatham Mahadevan, Seminar on
Inscriptions, 1966.
27. Salem Manual.
28. Salem Gazeteer.
29. Coimbatore Manual.
30. Coimbatore Gazeteer.
தமிழ் நூல்கள்
1. அகநானூறு (அகம்)
2. புறநானூறு (புறம்)
3. நற்றிணை (நற்)
4. குறுந்தொகை (குறும்)
5. ஐங்குறுநூறு (ஐம்)
6. பதிற்றுப்பத்து (பதிற்று)
7. சிலப்பதிகாரம் (சிலம்பு)
8. முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்)
9. களவழி நாற்பது - பொய்கையார்.
10. சேரன் செங்குட்டுவன் - மயிலை சீனி. வேங்கடசாமி.
11. சேர மன்னர் வரலாறு- ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை
12. சேரன் செங்குட்டுவன் - மு. இராகவையங்கார்
13. சேர வேந்தர் செய்யுட்கோடை மு. இராகவையங்கார்.
14. சேரன் வஞ்சி - டாக்டர்எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார்.
15. கவிராஜ மார்க்கம் - (கன்னட மொழிச் செய்யுளிலக்கணம்)
நிருபதுங்கவர்மன்.
16. கேரளம் ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் - எளங்குலம்குஞ்சன்பிள்ளை (மலையாளம்)
17. புறத்திரட்டு – வையாபுரிப்பிள்ளை பதிப்பு. சென்னைப் பல்கலைக்கழகம்.
18. துளுநாட்டுவரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி.
19. கொங்கு மண்டல சதகம் - கார்மேகக் கோனார்.
20. கொங்கு நாடு - புலவர் குழந்தை 1968.
21. சேரர் வரலாறு - துடிசைகிழார்.
22. கொங்குநாடு - கி.அ. முத்துசாமிக்கோனார்.
23. அப்பர், சம்பந்தர் - தேவாரம்.
24. திருமங்கையாழ்வார் – பெரிய திருமொழி. (நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்)
✽ ✽ ✽