உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 2/022-052

விக்கிமூலம் இலிருந்து


பல்லவர்

குறிப்பு: மகேந்திரவர்மன் (1955), என்ற தலைப்பில் மயிலை சீனி. வேங்கடசாமி
எழுதிய நூலிலிருந்து இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

1. மகேந்திர வர்மன்

அரசியல்

மகேந்திரவர்மனுடைய தகப்னரான சிம்மவிஷ்ணு காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு பல்லவ இராச்சியத்தை அரசாண்டார். சிம்மவிஷ்ணு ஆட்சியை ஏற்றுக் கொண்டபோது, அவருடைய பல்லவ இராச்சியம் ஆந்திர நாட்டையும் தொண்டைமண்டலத்தையும் கொண்டதாக இருந்தது. பிறகு சிம்மவிஷ்ணு சோழநாட்டை வென்று தமது பல்லவ இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டார். இச்செய்தி வேலூர்ப் பாளையம், காசாகுடி செப்பேட்டுச் சாசனங்களினாலே தெரிகிறது.

“நெல் வயல்களையும் கமுகஞ் சோலைகளையும் தனக்கு நகைகளாகப் பூண்டு விளங்குகின்ற கவீரனுடைய மகளினால் (காவிரி ஆற்றினால்) பொலிகின்ற சோழர்களின் சோழநாட்டை அவன் (சிம்மவிஷ்ணு) விரைவில் கைப்பற்றினான்” என்று வேலூர்ப்பாளையச் சாசனத்தின் 10 ஆவது வடமொழிச் செய்யுள் கூறுகிறது.[1]

“பிறகு அவனிசிம்மனாகிய சிம்மவிஷ்ணு அரசாட்சிக்கு வந்தான். அவன் தன் பகைவர்களை ஒழிக்கக் கருதி மலய களபா மாளவ சோழ பாண்டிய அரசர்களையும், தன் கைவன்மையினால் தருக்கியிருந்த சிங்கள அரசனையும் கேரளனையும் வென்றான்.” என்று காசாகுடி செப்பேட்டுச் சாசனம் 20 ஆவது செய்யுளில் கூறுகிறது.[2]

இந்தச் சாசனப் பகுதிகளினாலே நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், சிம்மவிஷ்ணு சோழநாட்டின் மேல் படையெடுத்தபோது, சோழனுக்குத் துணையாகக் களபர, மாளவ, பாண்டிய, சிங்கள, கேரள அரசர்கள் வந்தார்கள் என்பதும் அவர்களையெல்லாம் சிம்மவிஷ்ணு வென்று சோழநாட்டைக் கைப்பற்றிக் கொண்டான் என்பதும் ஆகும். இவ்வாறு சிம்மவிஷ்ணு காலத்தில் பல்லவ இராச்சியம் வடக்கே கிருஷ்ணாநதி முதல் தெற்கே புதுக்கோட்டை வரையில் பரவி

யிருந்தது. அஃதாவது ஆந்திரதேசம் தொண்டைமண்டலம் சோழ மண்டலம் ஆகிய மூன்று நாடுகளைக் கொண்டிருந்தது.

சிம்மவிஷ்ணுவின் மகனாகிய மகேந்திரவர்மன் இளவரசனாக இருந்தபோது ஆந்திரநாட்டிலே தங்கியிருந்தான். தெலுங்கு நாட்டிலே குண்டூர் மாவட்டத்திலே சேஜர்லா என்னும் இடத்தில் உள்ள கபோதே சுவரன் கோவில் சாசனம் ஒன்று, மகநேந்திரவர்மன் அக்கோயிலில் திருப்பணி செய்ததைக் கூறுகிறபடியினாலே இளவரசனாக இருந்த போது இவன் தெலுங்கு நாட்டில் இருந்தான் என்பது நன்கு தெரிகிறது.

சிம்மவிஷ்ணு ஏறக்குறைய கி. பி. 600 இல் காலமானான். பிறகு, அவன் மகனான மகேந்திரவர்மன் அரசன் ஆனான். மகேந்திரவர்மன் ஏறக்குறைய கி. பி. 600 முதல் 630 வரையில் அரசாண்டான்.

பல்லவ அரச குடும்பத்தில் ம்கேந்திரன் என்னும் பெயர் உடையவர்களில் இவன் முதல்வன். ஆகையினாலே சரித்திரத்தில் இவன் மகேந்திரவர்மன் முதலாவன் (மகேந்திரவர்மன் ஐ) என்று கூறப்படுகிறான்.

மகேந்திரவர்மன், தன் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து அரசாண்டான். மகேந்திரன் காலத்தில் பல்லவ இராச்சியத்தின் வட எல்லை குறைந்துவிட்டது. எப்டி என்றால், வாதாபி (பாதாமி) என்னும் ஊரைத் தலைநகரமாகக் கொண்டு அரசாண்ட சளுக்கிய அரசனாகிய இரண்டாம்புலிகேசி (இவன் கி. பி. 609 முதல் 642 வரையில் அரசாண்டான்) கி. பி. 610 இல் பல்லவ இராஜ்ஜியத்தின் மேல் படையெடுத்து வந்து ஆந்திர தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டான். அல்லாமலும் பல்லவரின் தலைநகரமான காஞ்சிபுரத்தின் மேலும் படையெடுத்து வந்தான். ஆனால், மகேந்திரவர்மன் புள்ளலூர் என்னும் இடத்தில் புலிகேசியை எதிர்த்துப் போரிட்டு அவனை முறியடித்துத் துரத்திவிட்டான்.

காசாகுடி செப்புப் பட்டயம் மகநேதிரனுடைய வெற்றியை இவ்வாறு கூறுகிறது:

“அதன் பிறகு மகேந்திரனுடைய புகழைப் போன்று புகழ் படைத்தவனும் ஆணையைச் செலுத்துபவனும் புள்ளலூரில் தன் பகைவரைப் புறங்கண்டவனுமான மகேந்திர வர்மன் என்னும் அரசன் மண்ணுலகத்தை அரசாண்டான்.”[3]

‘மகேந்திரன் வென்ற அரசன் யார்?’ என்று இந்தப் பட்டயம் கூறவில்லை. ஆனால், இரண்டாம் புலிகேசியைத்தான் இந்தச் சாசனம் குறிப்பிடுகிறது என்று தெரிகிறது. ஏனென்றால், அய்ஹொளெ சாசனம் புலிகேசியை இவ்வாறு புகழ்கிறது:

“அவன் (புலிகேசி), தன்னுடைய சேனையின் தூசியினாலே தன்னை எதிர்த்த பல்லவ மன்னனுடைய ஆற்றலை மழுங்கச்செய்து அவனைக் காஞ்சிபுரத்தின் மதிலுக்குள் மறையும்படி செய்தான்.” (செய்யுள் 20)

“பல்லவர்களின் சேனையாகிய குளிர்ந்த பனிக்குக் கடுஞ் கிரணமுள்ள சூரியனைப்போன்ற அவன் (புலிகேசி, சோழ பாண்டிய கேரளர்களுக்குப் பெரும் மகிழ்சியையுண்டாக்கினான்” (செய்யுள். 31)[4].

இந்தச் சாசனங்கள் இவ்வாறு கூறுவதிலிருந்து மகேந்திரவர்மனுடன் போர் செய்த சளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி என்பது ஐயமற விளங்குகிறது.

மகேந்திரவர்மன் புலிகேசியுடன் போர் செய்து வெற்றிகொண்ட இடமாகிய புள்ளலூர், செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் காஞ்சிபுரத்திற்கு வடக்கே 15 மைல் தூரத்தில் இருக்கிறது.

சளுக்கிய அரசனான புலிகேசியை மகேந்திரன் முறியடித்துத் துரத்திவிட்ட போதிலும், பல்லவநாட்டின் ஆந்திரப் பகுதி புலிகேசியின் வசமாயிற்று. தான் கைப்பற்றிய ஆந்திரநாட்டில், தன் தம்பியாகிய விஷ்ணுவர்த்தனனைப் புலிகேசி இளவரசனாக்கினான். வெங்கி என்னும் நகரத்தில் இளவரசனாக அமர்ந்த விஷ்ணுவர்த்தனன், தன்னைப் புலிகேசி இளவரசனாக்கினான். வெங்கி என்னும் நகரத்தில் இளவரச னாக அமர்ந்த விஷ்ணுவர்த்தனன், பிற்காலத்தில் தனி அரசனாகப் பிரிந்து கீழைச் சளுக்கிய வம்சத்தை உண்டாக்கினான். ஆகவே, பாதாமியைத் தலை நகரமாகக் கொண்டிருந்த மூல சளுக்கிய வம்சம், மேலைச் சளுக்கிய வம்சம் என்று சரித்திரத்தில் பெயர் பெறுவதாயிற்று.

புலிகேசி, பல்லவ இராச்சியத்தின் ஆந்திரப் பகுதியை வென்று கொண்டபடியினாலே, மகேந்திரனுடைய பல்லவ இராச்சியம், வடக்கே வட பெண்ணையாற்றிலிருந்து தெற்கே புதுக்கோட்டை வரையில் தொண்டைமண்டலத்தையும் சோழ மண்டலத்தையும் கொண்டதாக இருந்தது. அஃதாவது, நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி (வட பெண்ணைக்குத் தென்பகுதி), சித்தூர், செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய இராச்சியமாக இருந்தது.

பல்லவரின் தலைநகரம் காஞ்சிபுரம் மகேந்திரவர்மன் காஞ்சிபுரத்தில் இருந்து அரசாண்டான். பல்லவரின் துறைமுகப்பட்டினம் கடன்மல்லை. கடன்மல்லையிலே மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் (முதலாவன்) (இவனுக்கு மாமல்லன் என்னும் சிறப்புப்பெயர் உண்டு) இளவரசனாக இருந்தான்.

மல்லை அல்லது கடன்மல்லை என்னும் துறைமுகப்பட்டினத்திற்கு மகேந்திரன் காலத்தில் மகாபலிபுரம் என்னும் பெயர் வழங்கவில்லை. மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் பல்லவ நாட்டின் மன்னனான பிறகு, தன் சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்னும் பெயரை மல்லைக்குச் சூட்டி மாமல்லபுரம் என்று வழங்கினான். (மாமல்லபுரம் என்னும் பெயர் பிற்காலத்தில் மகாபலிபுரம் என்று மருவி வழங்கலாயிற்று) ஆகவே, மகேந்திரவர்மன் காலத்தில் மாமல்லபுரம் மல்லை என்றும் கடல்மல்லை என்றும் பெயர்பெற்றிருந்தது.[5]

இவன் தன் பெயரினால் மகேந்திரமங்களலம் என்னும் ஊரை மாமண்டூர்ப்பற்றில் ஏற்படுத்தினான் என்பதைத் திருப்பருத்திக் குன்றத்து வர்த்தமானர் கோயில் சாசனத்தினால் அறியலாம்.[6]

மாமண்டூரில் ஓர் ஏரியைச் சித்ரமேகத் தடாகம் என்று தன் பெயரினால் ஏற்படுத்தினான்.

தன் பெயரினால் இன்னொரு ஊராகிய மகேந்திர வாடியை (மகேந்திரபாடி) உண்டாக்கினான். இவ்வூர் வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா சோளிங் கூருக்குத் தென் கிழக்கே மூன்று மைலில் உள்ளது.

மகேந்திரவாடியில் மகேந்திரத் தடாகம் என்னும் ஏரியைத் தன் பெயரினால் உண்டாக்கினான்.

மகேந்திரன் சோழநாட்டிலே தன் பெயரால் மகேந்திரப்பள்ளி என்னும் ஊரையமைத்து அதில் தன் பெயரால் மகேந்திரப்பள்ளி என்னும் சிவன்கோயிைைல அமைத்தான் என்று தெரிகிறது. மகேந்திரப்பள்ளி என்பது மயேந்திரப் பள்ளி என்று மருவி வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தர் இந்தக் கோயிலைக் பாடியுள்ளார். அவர் பாடிய ஒரு பாடல் இது:

“நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டன்நன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.”

மகேந்திரவர்மன் குகைகோயில்களை அமைத்ததோடு செங்கல் கருங்கல் முதலியவைகளைக் கொண்டும் சில கோயில்களை அமைத்தான். அவ்வாறு அமைத்த கோயில்களில் மயேந்திரப் பள்ளிக் கோயிலும் ஒன்றாக இருக்கலாம். இவன் கட்டுக் கோயிலை யும் அமைத்தான் என்பதை துப்ராய் அவர்கள் எழுதிய ‘மகேந்திரவர்மனின் காஞ்சி புரக் கல்வெட்டுக்கள்.’[7] என்னும் சிறு நூலில் காண்க.

மகேந்திரவர்மன் பல சிறப்புப் பெயர்களைக் கொண்டிருந்தான். மகேந்திரன், மகேந்திரவர்மன், மகேந்திர விக்ரமவர்மன், மகேந்திரப்போத்தரசன், பகாப்பிடுகு, லளிதாங்குரன், குணபரன், மத்தவிலாசன், அவனிபாஜனன், சத்யசந்தன், புருஷோத்தமன், சத்துருமல்லன், சங்கீர்ணஜாதி, சித்ரகாரப்புலி, சேத்தகாரி, விசித்ரசித்தன், அலுப்தகாமன், கலகப்பிரியன், அபிமுகன், மகாமேகன், நரேந்திரன் முதலிய சிறப்புப்பெயர்களை இவன் கொண்டிருந்தான்.

1. மயேந்திரப் போத்தரெசரு

2. ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதி ராஜன்

3. ஸ்ரீ மஹேந்த்ர விக்கிரம

இந்தப் படத்தில் முதலாவது, மகேந்திரவர்மன் காலத்துத் தமிழ் எழுத்து. வல்லம் குகைக் கோயிலில் உள்ளது. ‘மயேந்திரப் போத்த ரெசரு’ என்பது இதன் வாசகசம். இரண்டாவது வடமொழி எழுத்து. ‘ஸ்ரீ மஹேந்த்ர போத்ராதி ராஜன்’ என்பது இதன் வாசகம். இது மகாபளிபுரத்து வராகப்பெருமாள் குகைக்கோயிலில் உள்ளது. இது பிராகிருதப் பெயர் என்று தோன்றுகிறது. மூன்றாவது வடமொழி எழுத்து. இது பல்லாவரத்துக் குகைக் கோயிலிலும் திருச்சிராப்பள்ளிக் குகைக்கோயிலிலும், எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்ரீ மஹேந்த்ர விக்ரம’ என்பது இதன் வாசகம். கீழேயுள்ளது மகந்ேதிரவர்மன் காலத்துத் தமிழ் எழுத்து; திருச்சிராப்பள்ளி குகைக்கோயிலில் உள்ளது. ‘பிணபிணக்கு’ என்பது இதன் வாசகம். பிணபிணக்கு என்பது இவன் சிறப்புப் பெயர்களில் ஒன்று.

சிவிபுந்து, நில்விலோனையம்பு, வேந்துலவித்து, பசரம்பு, சிலம்பு, மலாயு, கடுந்தரம்பு, நயம்பு முதலிய தெலுங்குப் பெயர்களையும் இவன் கொண்டிருந்தான். இப் பெயர்களை இவன் ஆந்திர நாட்டில் இளவரசனாக இருந்தபோது பெற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

இவன் சிற்பக்கலை இசைக்கலை ஓவியக்கலை காவியக்கலை முதலிய கலைகளில் சிறந்தவன். குகைக் கோயில்களைத் தமிழ்நாட்டில் முதன் முதலாக அமைத்தவன் இவனே. இதனால் இவனுக்குச் சேதகாரி என்னும் பெயர் ஏற்பட்டது.

இசைக்கலையின் நுட்பத்தை அறிந்தவனாதலால், இவனுக்குச் சங்கீர்ணஜாதி என்னும் பெயர் உண்டாயிற்று. ஓவியக்கலையில் தேர்ந்தவன் ஆனபடியினாலே இவனுக்குச் சித்திரகாரப்புலி என்னும் பெயர் உண்டாயிற்று. மத்த விலாசம் என்னும் நகைச்சுவை நாடக நூலை இயற்றிய படியினாலே இவனுக்கு மத்த விலாசன் என்னும் பெயர் ஏற்பட்டது.


  1. 1. S. I. I. Vol II. Page, 501-516
  2. 2. S. I. I. Vol II. Page, 342 - 361
  3. 1. S. I. I. Vol II. Page, 342 - 361
  4. 2. S. I. I. Vol IV. Page, 11.
  5. 1. பல்லவர் காலத்துக்கு முன்னே கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் ‘காஞ்சிபுரத்தைத்’ தலைநகரமாகக்கொண்டு தொண்டை நாட்டை அரசாண்ட தொண்டைமான் இளந்திரயன் என்னும் சோழமன்னன் காலத்திலும் கடல்மல்லை, தொண்டைநாட்டின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படையில் கடல்மல்லை, நீர்ப்பெயற்று அல்லது நீர்ப் பெயர்த்து என்று கூறப்படுகிறது. (நீர்ப்பெயற்றெல்லை போகி. அடி.319). இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “நீர்ப் பெயற்றென்னும் ஊரின் எல்லையிலேபோய்” என்று எழுதுகிறார். கடல்மல்லைக்கு நீர்ப்பெயர்த்து (நீர்ப்பெயற்று) என்னும் பெயரும் உண்டுபோலும். நீர்ப்பாயல் என்னும் பெயரும் வழங்கிற்று என்று சிலர் கருதுகின்றனர். நீர்ப்பாயல் என்பது வடமொழியில் ஜலசயனம் என்று கூறப்பட்டது என்பர். எனவே கடல்மல்லை என்னும் தொண்டைநாட்டின் துறைமுகப்பட்டினம் நெடுங்காலமாக இருந்துவந்த தென்பதும் அது மகேந்திரவர்மன் காலத்திலும் பல்லவரின் துறைமுகமாக அமைந்திருந்தது என்பதும் தெரிகின்றன. மகேந்திரவர்மன் காலத்திற்குப் பிறகு அவன் மகன் நரசிம்மவர்மனால் கடல்மல்லை, மாமல்லபுரம் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டது. நரசிம்மவர்மன் மாமல்லபுரத்தைப் புதிதாக உண்டாக்கினான் என்று சில மேல நாட்டு ஆசிரியர் கூறுவது சரியன்று.
  6. 1. Epi. Ind. Vol ll. No 15. P. 115.
  7. 2. Conjeevaram Inscriptions of Mahendravaram