உள்ளடக்கத்துக்குச் செல்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/002

விக்கிமூலம் இலிருந்து

சித்தார்த்தரின் இல்லற வாழ்க்கை

சித்தார்த்தர் பிறப்பு

இந்திய தேசம் என்றும் நாவலந்தீவு என்றும் கூறப்படுகிற பரதகண்டத்திலே, மத்திய தேசத்திலே சாக்கிய ஜனபதத்திலே கபிலவத்து என்னும் அழகான நகரம் ஒன்று இருந்தது. ஒரு காலத்தில் அந்த நகரத்தை ஜயசேனன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவ்வரசனுக்குச் சிம்மஹணு என்னும் மகன் பிறந்தான். சிம்மஹணுவுக்குச் சுத்தோதனர், சுல்லோதனர், தோதோதனர், அமிதோதனர், மிதோதனர் என்னும் ஐந்து ஆண்மக்களும், அமிதை, பிரமிதை என்னும் இரண்டு பெண்மகளிரும் பிறந்தனர். இவர்களுள் மூத்த மகனான சுத்தோதனர், தமது தந்தை காலமானபிறகு, அந்நாட்டின் அரசரானார். சுத்தோதன அரசரின் மூத்த மனைவியாரான மஹாமாயா தேவிக்கு ஒரு ஆண்மகவும், இளைய மனைவியாரான பிரஜாபதி கௌதமிக்கு ஒரு ஆண்மகவும், ஒரு பெண்மகவும் ஆக மூன்று மக்கள் பிறந்தனர். மாயா தேவிக்குப் பிறந்த மகனுக்குச் சித்தார்த்தன் என்று பெயர்சூட்டினார்கள். பிரஜாகௌதமைக்குப் பிறந்த மகனுக்கு நந்தன் என்றும், மகளுக்கு நந்தை என்றும் பெயர்சூட்டினார்கள். இவர்களுள் சித்தார்த்த குமாரன் போதி ஞானம் அடைந்து புத்த பகவானாக விளங்கினார். இவருடைய வரலாற்றினை விரிவாகக் கூறுவோம்.

கபிலவத்து நகரத்திலே ஆண்டுதோறும் நடைபெற்ற விழாக்களில் ஆஷாடவிழா என்பதும் ஒன்று. இந்த விழா வேனிற்காலத்திலே ஆறு நாட்கள் கொண்டாடப்படும். இவ்விழாவின்போது நகரமக்கள் ஆடை அணிகள் அணிந்து, விருந்து உண்டு, ஆடல்பாடல் வேடிக்கை வினோதங்களில் மகிழ்ந்திருப்பர். சுத்தோதன அரசரும் நறுமண நீரில் நீராடி உயர்ந்த ஆடைஅணிகள் அணிந்து நறுமணம் பூசி அறுசுவையுண்டி அருந்தி அரசவையிலே அமைச்சர், சேனைத்தலைவர் முதலிய குழுவினர் சூழ அரியாசனத்தில் வீற்றிருந்து ஆஷாடவிழாக் கொண்டாடுவார்.

வழக்கம்போல ஆஷாடவிழா வந்தது. நகரமக்கள் அவ்விழாவை நன்கு கொண்டாடினர். அரண்மனையில் அரசியாராகிய மாயாதேவியாரும் இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தார். ஆறுநாட்கள் விழாவைக் கொண்டாடிய பிறகு ஏழாம் நாளாகிய ஆஷாட பௌர்ணமியன்று மாயாதேவியார் நறுமண நீராடி நல்லாடையணிந்து ஏழை எளியவருக்கும் ஏனையோருக்கும் உணவு உடை முதலியன வழங்கினார். பின்னர் தாமும் அறுசுவை உணவு அருந்தி அஷ்டாங்க சீலம் என்னும் நோன்புநோற்றார். இரவானதும் படுக்கையறை சென்று கட்டிலிற்படுத்துக் கண்ணுறங்கினார். இரவு கழிந்து விடியற்காலையில் ஒரு கனவு கண்டார்.

மாயாதேவியார் கண்ட கனவு இது: இந்திரனால் நியமிக்கப்பட்ட திக்குப் பாலர்களான திருதராட்டிரன் விரூபாக்கன், விரூளாக்ஷன், வைசிரவணன் என்னும் நான்கு தேவர்கள் வந்து மாயாதேவியார் படுத்திருந்த படுக்கையைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய், இமயமலைக்குச் சென்று அங்கிருந்த மனோசிலை என்னும் பெரிய பாறையின் மேலே ஒரு சால மரத்தின் கீழே வைத்து ஒரு புறமாக ஒதுங்கி நின்றார்கள். அப்போது அந்தத் தேவர்களின் மனைவியரான தேவிமார் வந்து மாயாதேவியாரை அழைத்துக் கொண்டுபோய் அருகிலிருந்த அநுவதப்தம் என்னும் ஏரியில் நீராட்டினார்கள். நீராட்டிய பின்னர் உயர்தரமான ஆடை அணிகளை அணிவித்து நறுமணச் சாந்துபூசி மலர் மாலைகளைச் சூட்டினார்கள். பிறகு, அருகிலே இருந்த வெள்ளிப்பாறையின்மேல் அமைந்திருந்த பொன்மாளிகைக்குள் மாயாதேவியாரை அழைத்துக்கொண்டுபோய் அங்கிருந்த ஒரு கட்டிலில் மேற்குப்புறமாகத் தலைவைத்துப் படுக்கவைத்தனர்.

மாயாதேவியார் படுத்திருந்தபோது, அருகிலிருந்த மலைகளின்மேலே மிக்க அழகுள்ள வெள்ளையானையின் இளங்கன்று ஒன்று உலாவித் திரிந்து கொண்டிருந்தது. அந்த யானைக்கன்று பொன்நிறமான பாறைகளின்மேலே நடந்து மாளிகை இருந்த வெள்ளிப்பாறைக்கு வந்தது. பாறையின் வடபுறமாக வந்து தும்பிக்கையிலே ஒரு வெண்டாமரைப் பூவை ஏந்திக்கொண்டு பிளிறிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்து மாயாதேவியார் படுத்திருந்த கட்டிலருகில் வந்தது. வந்து, கட்டிலை மூன்றுமுறை வலமாகச்சுற்றி, தேவியாரின் வலதுபக்கமாக அவர் வயிற்றுக்குள் நுழைந்துவிட்டது.

இவ்வாறு மாயாதேவியார் விடியற்காலையில் ஒரு கனவு கண்டார். போதிசத்துவர், தாம் எழுந்தருளியிருந்த துடிதலோகத்தை விட்டு இறங்கிவந்து மாயாதேவியாரின் திருவயிற்றில் கருவாக அமைந்தருளியதைத்தான் தேவியார், வெள்ளை யானைக்கன்று தமது வயிற்றில் நுழைந்ததாகக் கனவு கண்டார்.

இவ்வாறு கனவு கண்ட மாயாதேவியார் விழித்தெழுந்து தாம்கண்ட கனவை அரசரிடம் கூறினார். சுத்தோதன அரசர், நூல்களைக் கற்றறிந்த அந்தணர் அறுபத்து நால்வரை அழைத்து, அறுசுவை உணவுகளை உண்பித்து, அரசியார் கண்ட கனவை அவர்களுக்குக் கூறி அதன் கருத்து என்னவென்று கேட்டார். கனவை ஆராய்ந்து பார்த்த அந்தணர்கள் அதன் கருத்தைத் தெரிவித்தார்கள். அரசியாருக்குக் கருப்பம் வாய்த்திருப்பதை இக்கனவு தெரிவிக்கிறது; அரசியாருக்கு ஒரு ஆண்மகவு பிறக்கும்; அந்தக் குழந்தை பெரியவனாக வளர்ந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளுமானால் பெரிய சக்கரவர்த்தியாக விளங்கும்; இல்லறத்தில் புகாமல் துறவறத்தை மேற்கொள்ளுமானால் பெறுதற்கரிய புத்த ஞானம்பெற்று புத்தராக விளங்கும் என்று அவர்கள் கூறினார்கள்.

மாயாதேவியாரின் திருவயிற்றிலே கருவாக அமர்ந்த போதிசத்துவர் இனிது வளர்ந்து வந்தார். தேவியாரும் யாதொரு துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியோடு இருந்தார்.

மாயாதேவியார் வயிறுவாய்த்துப் பத்துத் திங்கள் ஆயின. அப்போது அவருக்குத் தமது பெற்றோரைக் காணவேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று. தமது எண்ணத்தை அரசருக்குத் தெரிவித்தார். அரசரும் உடன்பட்டு, கபிலவத்து நகரத்திலிருந்து தேவியாரின் பெற்றோர் வசிக்கும் தேவதகா நகரம் வரையில் சாலைகளை அலங்காரம் செய்வித்தார். பிறகு, தோழியரும் ஏவல் மகளிரும் பரிவாரங்களும் அமைச்சரும் புடைசூழ்ந்துசெல்ல, தேவியாரைப் பல்லக்கில் ஏற்றி அவரைத் தாயகத்திற்கு அனுப்பினார். இவ்வாறு தேவதகா நகரத்திற்குப் புறப்பட்டுச்சென்ற தேவியார், இடைவழியிலே இருந்த உலும்பினி வனம் என்னும் சோலையை அடைந்தார்.

அன்று வைசாகப் பௌர்ணமி நாள். உலும்பினி வனம் அழகான பூக்கள் நிறைந்து மணம் கமழ்ந்து திவ்வியமாக விளங்கிற்று. குயில் மயில் கிளி முதலிய பறவையினங்கள் மரங்களில் அமர்ந்து இனிமையாகப் பாடிக்கொண்டிருந்தன. அவை, கண்ணுக்கும் காதுக்கும் இனிமை பயத்தன. மலர்களில் தேனைச் சுவைத்த தேனீக்களும் தும்பிகளும் வண்டுகளும் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.

இந்த உலும்பினி வனத்திற்சென்று அவ்வனத்தின் இனிய காட்சிகளைக் காணவேண்டுமென்று மாயா தேவியார் ஆசைகொண்டார். அவர் விரும்பியபடியே அவருடன் சென்றவர் அவரை அவ்வனத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தேவியார் உலும்பினி வனத்தின் இனிய காட்சிகளையும் பூக்களின் வனப்பையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக அந்தத் தோட்டத்தின் ஓரிடத்திலே இருந்த அழகான சாலமரத்தின் அருகில் வந்தார். அந்த மரம் முழுவதும் பூங்கொத்துக்கள் நிறைந்து மலர்ந்து மணங்கமழ்ந்து நின்றது. தேவியார் மரத்தடியில்சென்று அதன் கிளையொன்றைப் பிடிக்கக் கையைத்தூக்கினார். அப்பூங்கிளை அவர் கைக்குத் தாழ்ந்து கொடுத்தது.

அவ்வமயம், அவர் வயிறு வாய்த்துப் பத்துத்திங்கள் நிறைந்து கருவுயிர்க்கும் காலமாயிருந்தது. அவருக்குக் கர்மஜ வாயு சலித்தது. இதனை அறிந்த அமைச்சரும் பரிவாரங்களும், அரசியாரைச் சூழத் திரைகளை அமைத்து விலகிநின்று காவல் புரிந்தார்கள். தேவியார் சாலமரத்தின் பூங்கிளையை ஒரு கையினால் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கியிருந்தார். இவ்வாறு இருக்கும்போதே அவர் வயிற்றிலிருந்து போதிசத்துவர் குழந்தையாகப் பிறந்தார். தாயும்சேயும் யாதொரு துன்பமும் இல்லாமல் சுகமே இருந்தார்கள்.

போதிசத்துவர் குழந்தையாகத் திருவவதாரம் செய்தபோது, அநாகாமிக பிரம தேவர்கள் நால்வரும் அக்குழந்தையைப் பொன்வலையிலே ஏந்தினார்கள்.1 சதுர் மகாராஜிக தேவர்கள் நால்வரும் அவர்களிடமிருந்து அக் குழந்தையை ஏற்று அமைச்சர் இடத்தில் கொடுத்தார்கள்.2 அப்போது குழந்தையாகிய போதிசத்துவர் தரையில் இறங்கினார். அவர் அடிவைத்த இடத்தில் தாமரை மலர்கள் தோன்றி அவர் பாதத்தைத் தாங்கின. அக்குழந்தை அப்பூக்களின்மேலே ஏழு அடி நடந்தது. “நான் உலகத்திலே பெரியவன்; உயர்ந்தவன்; முதன்மையானவன். இதுவே என்னுடைய கடைசிப் பிறப்பு. இனி எனக்கு வேறு பிறவிஇல்லை,” என்று அந்தத் தெய்வீகக் குழந்தை கூறிற்று.

மாயாதேவியாருக்குக் குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டவுடனே, கபிலவத்து நகரத்திலிருந்தும் தேவதகா நகரத்திலிருந்தும் சுற்றத்தார் உலும்பினி வனத்திற்கு வந்து போதிசத்துவராகிய குழந்தை-யையும் மாயாதேவியாரையும் கபிலவத்து நகரத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.

போதிசத்துவர் பிறந்தருளிய அதே வேளையில் யசோதரை தேவியாரும், சன்னன், காளுதாயி என்பவர்களும் தோன்றினர்; கந்தகன் என்னும் குதிரையும், போதிமரமும், நான்கு நாழி நிதிக்குவியலும் தோன்றின.

அசிதமுனிவர் கூறியது

சுத்தோதன அரசருடைய தகப்பனாரான சிங்கஹணு அரசருக்கு அசிதர் என்னும் பெயருள்ள புரோகிதர் ஒருவர் இருந்தார். இந்தப் புரோகிதர்தான் சுத்தோதன அரசருக்கு அவர் சிறுவராக இருந்தபோது வில்வித்தை முதலிய கலைகளைக் கற்பித்தார். சிங்கஹணு அரசர் காலஞ்சென்றபிறகு அசிதர் தமது புரோகிதத் தொழிலைவிட்டு, அரசருடைய ஆராமத்தோட்டத்திலே தபசு செய்துகொண்டிருந்தார். அசித முனிவர் ஐந்துவிதமான அபிக்ஞைகளையும் எட்டு விதமான சமாபத்திகளையும் அடைந்தார். சில வேளைகளில் இவர் தமது சித்தியினாலே தேவலோகத்திற்குப் போய் அங்குத் தங்கித் தபசு செய்துவிட்டு மீண்டும் தமது இடத்திற்குத் திரும்பிவருவது வழக்கம்.

போதிசத்துவர் மாயாதேவியார் திருவயிற்றிலே தங்கிக் குழந்தையாகத் திருவவதாரம் செய்திருப்பதை அசித முனிவர் அறிந்து, அக்குழந்தையைக் காண்பதற்காக அரண்மனைக்கு வந்தார். சுத்தோதன அரசர், முனிவரை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்து வணங்கிநின்றார். அப்போது அசித முனிவர், “அரச! உமக்கு ஆண்மகன் பிறந்த செய்திஅறிந்து இவ்விடம் வந்தேன். அக்குழந்தையை நான் பார்க்க வேண்டும்”. என்று கூறினார். இதைக்கேட்ட அரசர் தாமே தமது கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டுவந்து முனிவருக்குக் காட்டி, “மகனே! முனிவரை வணங்கி நற்பேறு பெறுக.” என்று கூறினார். அப்போது குழந்தையின் பாதங்கள் தற்செயலாக முனிவருடைய தலையில்பட்டன. ஏனென்றால், போதிசத்துவர்கள் புத்த நிலையையடைகிற பிறப்பிலே பிறரை வணங்குவது மரபன்று. இதனை ஞானக்கண்ணினால் அறிந்த அசிதமுனிவர், உடனே ஆசனத்தை விட்டு எழுந்துநின்று குழந்தையைக் கைகூப்பி வணங்கினார். முனிவர் குழந்தையை வணங்குவதைக் கண்ட அரசன் பெரிதும் வியப்படைந்து, தாங்கமுடியாத அன்போடு குழந்தையின் கால்களில் தானும் தன் தலையை வைத்து வணங்கினார்.

அசித முனிவர், குழந்தையின் திருமேனியில் காணப்பட்ட எண்பது விதமான மகா புருஷ லக்ஷணங்களைக் கண்டு, தமது ஞானக் கண்ணினால் சிந்தித்துப் பார்த்து, இந்தக் குழந்தை புத்தர் ஆகப்போவதை அறிந்து ஆனந்தங்கொண்டு மகிழ்ந்தார். பிறகு, இக்குழந்தை புத்த பதவியடையும்போது, தாம் உயிர்வாழ்ந்திருந்து பார்க்க முடியாது என்பதை உணர்ந்து வருத்தத்தோடு அழுதார். முனிவர் முதலில் மகிழ்ந்ததையும் பின்னர் அழுததையுங்கண்ட அமைச்சர்கள் அதற்குக் காரணங் கேட்டார்கள். முனிவர் இவ்வாறு விளக்கங்கூறினார்: “போதிசத்துவராகிய இந்தக் குழந்தைக்கு யாதொரு தீங்கும் வராது. இவர் புத்த பதவியையடையப் போகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், இவர் புத்தராவதற்கு முன்பே நான் இறந்துவிடுவேன். ஆகையினால் அப்போது இவரைக் காணமுடியாதே என்பதற்காக வருத்தம் அடைந்தேன்” என்று கூறினார்.

பின்னர் அசித முனிவர் அரண்மனையை விட்டுப் புறப்பட்டுச்சென்று தன் தங்கையின் வீட்டுக்குப்போய், தங்கையின் மகனான நாலக குமாரனை அழைத்து, சுத்தோதன அரசருடைய குழந்தை தனது முப்பத்தைந்தாவது வயதில் புத்த பதவியடையப் போகிறதென்பதையும் அச்சமயத்தில் தாம் உயிருடன் வாழ்ந்திருக்க முடியாது என்பதையும் கூறி, “குழந்தாய்! நீ இப்போதே இல்லறத்தை விட்டுத் துறவு பூண்டிருப்பாயாக. அவர் புத்தஞானம் பெற்றபிறகு அவரிடம் சென்று உபதேசம்பெற்று அதன்படி ஒழுகுவாயாக” என்று மொழிந்தார்.

அம்மானாகிய அசித முனிவர் கூறியதைக்கேட்ட நாலக குமாரன், அவர் கூறியதை ஏற்றுக்கொண்டு அப்போதே துறவுகொண்டார். தலை முடியையும் தாடியையும் மழித்துப்போட்டு, போதிசத்துவர் இருந்த திசைநோக்கி வணங்கி,3 “உலகத்திலே யார் மேலான உத்தமராக இருக்கிறாரோ அவருக்காக நான் காவியாடை தரிக்கிறேன்” என்று கூறி காவி ஆடை அணிந்துகொண்டார். பிறகு நாலகர் இமயமலைச் சாரலில்சென்று தவம் செய்துகொண்டிருந்தார்.

குழந்தைப் பருவம்

போதிசத்துவர் பிறந்த ஐந்தாம் நாள் அவருக்குப் பெயர்சூட்டுவிழா நடந்தது. கல்வியில் தேர்ந்த நூற்றெட்டு நிமித்திகர்களை அரசர் அழைத்து அவர்களுக்கு அறுசுவை உணவுகளை விருந்தளித்தார். பிறகு, “என் மகனுடைய இலட்சணங்களை அறிந்து அவனுக்கு ஏற்ற பெயரைச் சூட்டுங்கள். அன்றியும், அவன் வாழ்க்கையில் நடைபெறப் போகிறவைகளையும் பிழையில்லாமல் கணித்துக் கூறுங்கள்” என்று கேட்டார். இந்த நூற்றெட்டு நிமித்திகர்களில் இராமர், தஜர், இலக்குமணர், மந்த்ரி, கொண்டஞ்ஞர், போஜர், சுயாமர், சுதத்தர் என்னும் எண்மரும் மிகத்தேர்ந்த நிமித்திகர்கள். இவர்களுள்ளும் கொண்டஞ்ஞர், வயதில் இளையவராக இருந்தாலும், கணித நூலிலே மற்றவரைவிட மிகத் தேர்ந்தவராக இருந்தார்.

அரசர் கேட்டுக்கொண்டபடியே பேர்போன இந்த எட்டு நிமித்திகர்களும் போதிசத்துவ குமாரனுடைய திருமேனியிலே காணப்பட்ட அங்க அடையாளங்களைக் கூர்ந்து நோக்கினார்கள். இவர்களில் ஏழுபேர் தமது இரண்டு கைவிரல்களைக் காட்டி, இந்தக் குமாரன் இல்லறத்தில் இருந்தால் சக்கரவர்த்தி ஆவார்; துறவு பூண்டால் புத்தர் ஆவார் என்று இரண்டுவிதக் கருத்தைக் கூறினார்கள்.

ஆனால், ஆண்டில் இளையவராகிய கொண்டஞ்ஞர், குழந்தையின் நெற்றியின் நடுவிலே வலமாகச் சுருண்டு வளர்ந்திருக்க ஊர்ஷ்ண உரோமத்தைக் கண்டு, ஒரு விரலை மட்டும் காட்டி “இந்தக் குழந்தை கட்டாயம் இல்லறத்தைவிட்டுத் துறவறம் பூண்டு புத்தர் ஆவார்” என்று அறுதிஇட்டுக் கூறினார். மேலும், “இவர் உலகத்திற்கு அர்த்தசித்தி4 செய்யப் போகிறவர். ஆகையினாலே இவருக்குச் சித்தார்த்தர் என்று பெயர் சூட்டுவது தகுதியாகும்” என்றும் கூறினார்.

கொண்டஞ்ஞ முனிவர் கூறியதைக்கேட்ட சுத்தோதன அரசர், “வாழ்க்கையிலே வெறுப்பை உண்டாக்கும் காரணங்களைக் கண்டு மக்கள் துறவுகொள்வது வழக்கம். வாழ்க்கையில் வெறுப்புக்கொண்டு துறவுபூண்டவர் வீடுபேறடைவதற்குரிய காரியங்களைச் செய்கிறார்கள். என்னுடைய குமாரன் எந்தெந்தக் காரணங்களினால் உலக வாழ்க்கையில் வெறுப்படைவான் என்பதைக் கண்டு கூறவேண்டும்.” என்று கேட்டார்.

இவ்வாறு அரசர் கூறியதைக் கேட்ட நிமித்திகர் மேலும் ஆராய்ந்துபார்த்து இவ்வாறு சொன்னார்: “வயது முதிர்ந்த கிழவர், நோயாளி, பிணம், துறவி ஆகிய இந்நான்குபேரைக் காண்பாரானால் உமது குமாரன் உலக வாழ்க்கையை வெறுத்துத் துறவு கொள்வார்.”

இவ்வாறு நிமித்திகர் சொன்னதைக்கேட்ட சுத்தோதன அரசர், தமது குமாரன் சக்கரவர்த்தியாக விளங்கவேண்டும் என்று விரும்பி, தனது மகனை இல்லறத்திலேயே நிற்கச் செய்வதற்கு வேண்டிய உபாயங்களையெல்லாம் யோசித்தார். ‘தொண்டு’ கிழவர்களும் நோயாளிகளும் பிணங்களும் சந்நியாசிகளும் சித்தார்த்த குமாரனுடைய பார்வையில் படாதபடித் தடுக்க நான்கு திசைகளிலும் நான்குமைல் தூரம் காவலாளிகளை ஏற்படுத்தினார்.

எட்டு நிமித்திகர்களில் இளைஞரான கொண்டஞ்ஞரைத் தவிர மற்ற ஏழு நிமித்திகரும் தமது பிள்ளைகளை அழைத்து, “சுத்தோதன அரசரின் மகனான சித்தார்த்த குமாரன் புத்த பதவியை அடைவார். அப்போது நாங்கள் உயிருடன் இருப்போமோ மாட்டோமோ, தெரியாது. ஆனால், நீங்கள் அவரிடஞ்சென்று அவர் உபதேசத்தைக்கேட்டு அவருடன் துறவு கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

பின்னர் இந்த ஏழு நிமித்திகரும் காலப்போக்கில் காலஞ்சென்றுவிட்டார்கள். இளைஞராக இருந்த கொண்டஞ்ஞர் காலப்போக்கில் பெரியவராகிப் பிறகு கிழவராக இருந்தார். சித்தார்த்த குமாரன், துறவு பூண்டார் என்னும் செய்தியைக் கேட்டு, கொண்டஞ்ஞர், ஏழு நிமித்திகரின் குமாரர்களிடம் சென்று தாம் புத்தரிடம் உபதேசம் பெறப்போவதாகக் கூறி அவர்களையும் தம்முடன் வரும்படி அழைத்தார். அவர்களில் மூவர் இணங்கவில்லை. நால்வர் மட்டும் இசைந்து கொண்டஞ்ஞருடன் சென்றார்கள். இந்த ஐவரும் முதன்முதலில் புத்தரிடம் ஞானோபதேசம் பெற்றுப் பௌத்தரானார்கள்.

சுத்தோதன அரசன், தனக்குக் குழந்தை பிறந்ததற்காக மகிழ்ந்து ஏராளமான பொன்னையும் பொருளையும் வழங்கித் தானதருமங்கள் செய்தார்.

சித்தார்த்த குமாரன் பிறந்த ஏழாம்நாள் மாயா தேவியார் காலமானார்.

“உலும்பினி வனத்துள் ஒண்குழைத் தேவி
வலம்படு மருங்குல் வடுநோ யுறாமல்
ஆன்றோன் அவ்வழித் தோன்றினன் ஆதலின்
ஈன்றோள் ஏழ்நாள் இன்னுயிர் வைத்தாள்”
5

புத்தரைப் பெற்றெடுத்த தாயார் வேறு குழந்தைகளைப் பெறக் கூடாது என்பது மரபு.

மாயாதேவியார் காலஞ்சென்றபடியினாலே அவர் தங்கையாராகிய மகாபிரஜாபதி கௌதமி என்பவர் சுத்தோதன அரசருடைய பட்டமகிஷியானார். இவர்தான் சித்தார்த்த குமாரனை வளர்த்தார். தமது அரசகுலத்திலே பிறந்து, நல்ல குணங்களும் நல்லஅழகும் உடைய ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து அவளைச் செவிலித் தாயாக அமைத்துக் குழந்தையை நல்லவண்ணம் வளர்க்கும்படி அரசர் ஏற்பாடு செய்தார். சித்தார்த்த குமாரன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரண்மனையிலே வளர்ந்துவந்தார். இவ்வாறு சில ஆண்டுகள் கழிந்தன.

நாஞ்சில் விழா

அக்காலத்திலே வப்பமங்கலம் என்னும் நாஞ்சில் விழா கொண்டாடுவது வழக்கம். அவ்விழாவன்று அரசரும் அமைச்சரும் வயலுக்குச்சென்று ஏரினால் நிலத்தை உழுவார்கள். அந்த வழக்கப்படி ஓர் ஆண்டு வப்பமங்கல விழாவைக் கொண்டாடுவதற்காகச் சுத்தோதன அரசர், அமைச்சரும் பரிவாரங்களும் சூழ்ந்துவர, அலங்கரிக்கப்பட்ட நகர வீதிகளின் வழியாக, இளம்பிள்ளையாகிய சித்தார்த்த குமாரனுடன் சிவிகையில் அமர்ந்து வயற்புறத்திற்குச் சென்றார். சென்று, அங்கே நாவலந்தோப்பில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் சித்தார்த்த குமாரனைச் செவிலித் தாயரோடு இருக்கச்செய்து, அமைச்சருடன் வயலுக்குப் போனார். வயலுக்குப்போய் அரசர் பொன் கலப்பையினாலும் அமைச்சர்கள் வெள்ளிக் கலப்பைகளினாலும் நிலத்தை உழுதார்கள். நூற்றெட்டுக் கலப்பைகளினாலே நிலங்கள் உழப்பட்டன. குடிமக்கள் வெள்ளாடை அணிந்து, மலர்மாலை சூடி, வயலைச் சுற்றிலும் நின்று அரசர் ஏர் உழுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சித்தார்த்த குமாரனுடைய செவிலித் தாயர்களும் இந்தக் கொண்டாட்டத்தைக் காண்பதற்காகக் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவ்வமயம் கூடாரத்தில் தங்கியிருந்த சித்தார்த்த குமாரன், தன் அருகில் ஒருவரும் இல்லாததைக் கண்டு, பதுமாசனம் அமர்ந்து, தியானம் செய்துகொண்டிருந்தார். அதாவது அநாபான ஸ்மிருதி (மூச்சை நிறுத்தல்) செய்து முதலாவது தியானத்தில் அமர்ந்திருந்தார். சிறிதுநேரம் சென்ற பின்னர் செவிலித்தாயர் கூடாரத்திற்குள்ளே வந்தார்கள். வந்து சித்தார்த்த குமாரன் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். உடனே அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தார்கள். அரசர் விரைந்துவந்து இந்தப் புதுமையைக் கண்டு வியப்படைந்து. “மகனே, இது நான் உனக்குச் செய்கிற இரண்டாவது வணக்கம்” என்று கூறித் தமதுகைகளைத் தலைக்குமேல் கூப்பி வணங்கினார்.

இளமைப் பருவம்

சித்தார்த்த குமாரனுக்கு வயது எட்டு ஆயிற்று, அவருக்குக் கல்விப் பயிற்சி செய்விக்க விரும்பிச் சுத்தோதன அரசர், அமைச்சர்களை அழைத்து ஆலோசனை செய்தார். அமைச்சர்கள் “கல்வியிற் சிறந்தவர் விசுவாமித்திரர்.6 குமாரனுக்குக் கல்வி கற்பிக்கத் தகுந்தவர் விசுவாமித்திரரே. அவரையே ஆசிரியராக நியமிக்கவேண்டும்” என்று ஒரே கருத்தாகக் கூறினார்கள். சுத்தோதன அரசர், விசுவாமித்திரரை அழைத்துத் தன் மகனுக்குக் கல்வி கற்பிக்கும்படி ஏற்பாடு செய்தார்.

குறிப்பிட்ட ஒரு நன்னாளில் சாக்கிய குலத்துப் பெரியவர்கள் எல்லோரும் கல்விச் சாலையில் வந்து கூடினார்கள். சித்தார்த்த குமாரனுடன் கல்வி பயில்வதற்காக அவருக்கு ஒத்த வயதினரான ஐந்நூறு சாக்கியச் சிறுவர்களும் வந்திருந்தார்கள். சுத்தோதன அரசர், அமைச்சர் முதலானவர்களுடன் சித்தார்த்த குமாரனை அழைத்துக்கொண்டு கல்விச் சாலைக்குவந்து, தானதருமங்களை ஏராளமாக வழங்கி அரச குமாரனை விசுவாமித்திரரிடம் ஒப்படைத்துத் தாதிமார்களையும் விட்டுவிட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.

ஆசிரியராகிய விசுவாமித்திரர் சித்தார்தத குமாரனின் சிறப்பையும் அவரிடம் காணப்பட்ட அறிவு ஒளியையும் கண்டு மகிழ்ந்து தம்மையறியாமலே அவரை வணங்கினார். பிறகு அவருக்குக் கல்வி கற்பிக்கத் தொடங்கினார். அப்போது சித்தார்த்த குமாரன் அவரைப் பார்த்து, “ஆசிரியரே! தாங்கள் எந்த எழுத்தைக் கற்பிக்கப் போகிறீர்கள்? தேவலோகத்து எழுத்துக்களையா, அல்லது மண்ணுலகத்து எழுத்துக்களையா? மண்ணுலகத்துச் சாத்திரங்களையா, விண்ணுலகத்துச் சாத்திரங்களையா கற்பிக்கப் போகிறீர்கள்? அவற்றையெல்லாம் நானே அறிய வல்லேன்” என்று கூறினார். சித்தார்த்த குமாரன் தமது முற்பிறப்பிலே பாரமீ தர்மங்களைச் செய்திருந்தபடியினாலே அவருக்கு அறிவு விளக்கம் ஏற்பட்டிருந்தது.

விசுவாமித்திரர் வியப்படைந்து, மனதில் கோபங்கொள்ளாமலும் பொறாமைப்படாமலும் மகிழ்ச்சியுடன் இவ்வாறு சொன்னார்: “இவ்வற்புதக் குழந்தை எல்லாக் கல்விகளையும் கல்லாமலே கற்றிருக்கிறது. நான் உலகத்துக் கல்வி ஒன்றையே கற்றிருக்கிறேன். இக்குழந்தை தெய்வீகக் கல்வியையும் அறிந்திருக்கிறது. இவ்வாறு ஓதாமலே உணர்ந்த இக்குழந்தை என்னிடம் கல்விகற்க வந்திருப்பது வியப்பாகும்,” என்றுகூறி வியப்படைந்தார்.

பிறகு விசுவாமித்திரர் மற்றச் சாக்கியச்சிறுவர் ஐந்நூற்றுவருக்கும் கல்வி கற்பித்துவந்தார். சித்தார்த்த குமாரன் ஓதாமலே எல்லாக் கல்வியையும் உணர்ந்து கொண்டார்.

இவ்வாறு நிகழுங்காலத்தில், அரசகுமாரர் பயிலவேண்டிய படைக்கலப் பயிற்சியையும், போர் முறைகளையும் சித்தார்த்த குமாரனுக்குக் கற்பிக்கச் சுத்தோதன அரசர் எண்ணங்கொண்டார். அவர் அமைச்சர்களுடன் கலந்து, வில்வித்தையில் வல்லவர் யார் என்பதை ஆலோசித்தார். அப்போது அமைச்சர்கள் “சுப்ரபுத்தர் என்பவருடைய மகனான சாந்திதேவர் ஆயுதப் பயிற்சியில் வல்லவர். அவரே சித்தார்த்த குமாரனுக்கு ஆசிரியராக இருக்கத்தக்கவர்” என்று கூறினார்கள்.

சுத்தோதன அரசர், சாந்திதேவரை அழைத்துச் சித்தார்த்த குமாரனுக்குப் படைக்கலப் பயிற்சி கொடுக்கும்படி கேட்டார். சாந்திதேவரும் மனமகிழ்ந்து இசைந்தார்.

சித்தார்த்த குமாரனும் ஐந்நூறு சாக்கியக் குமாரரும் சாந்திதேவரிடம் படைக்கலப் பயிற்சிபெற ஒப்படைக்கப்பட்டார்கள். பயிற்சி செய்வதற்குரிய பெரியதோர் தோட்டத்திலே இவர்கள் பயிற்சி செய்யத் தொடங்கினார்கள். சாந்திதேவர், சித்தார்த்த குமாரனுக்கு வில்வித்தை ஆரம்பித்து வைக்கத் தொடங்கினார். அப்போது சித்தார்த்த குமாரன் அவரைப் பார்த்து, “ஆசிரியரே! என்னைப் பொறுத்தவரையில் எனக்கு நானே வித்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். இவர்களுக்குப் பயிற்சியைக் கற்பித்துக் கொடுங்கள்” என்று வணக்கமாகக் கூறினார்.

சாந்திதேவர் மற்ற எல்லோருக்கும் வில்வித்தை, வாள் வித்தை, வேல்வித்தை, யானையேற்றம் குதிரை ஏற்றம், தேர் ஓட்டம் முதலிய போர்ச் செயலுக்குரிய எல்லா வித்தைகளையும் ஐயம்திரிபு இல்லாமல் நன்கு கற்பித்தார். இவ்வித்தைகளில் எல்லோரும் தேர்ச்சியடைந்து சிறந்து விளங்கினார்கள். சித்தார்த்த குமாரனும் இவ்வித்தைகள் எல்லாவற்றிலும் தமக்குத்தாமே கற்றுத் தேர்ந்தார்.

சித்தார்த்த குமாரனுடைய திறமையையும் நுட்ப அறிவையும்கண்ட சாந்திதேவர் அவரைப் புகழ்ந்து வியந்தார். “இளைஞராகிய இவர் தமக்குத்தாமே இவ்வித்தைகளை யெல்லாம் கற்றுத்தேர்ந்தது வியப்பானது. கற்றது மட்டும் அல்லாமல் மற்றவர்களைவிடத் திறமைசாலியாக இருப்பது அதனினும் வியப்பானது” என்று கூறி மகிழ்ந்தார்.

சித்தார்த்தரின் அருள் உள்ளம்

சித்தார்த்த குமாரனுடைய சாத்திரக் கல்வியும் படைக்கலக் கல்வியும் பன்னிரண்டு வயதில் முற்றுப்பெற்றன. பிறகு, குமாரன் மற்ற இளைஞருடன் சேர்ந்து குதிரை யானை சவாரி செய்தல் வேட்டையாடல் முதலிய விளையாட்டுகளில் காலங்கழித்தார்.

ஒருநாள் இவர்கள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆகாயத்திலே அன்னப் பறவைகள் வேகமாகப் பறந்துபோவதைக் கண்டார்கள். அப்போது தேவதத்தன் என்னும் சிறுவன், தனது வில்வித்தையின் நுட்பத்தைக் காட்டவிரும்பி, வில்லில் அம்பைவைத்துக் குறிபார்த்து ஒரு பறவையை எய்தான். பறவையின் இறக்கையில்பட்ட அம்பு ஊடுருவிப் போகாமல் சிறகிலேயே தைத்துக்கொண்டது. உடனே பறவை சிறிது தூரத்திற்கப்பால் தோட்டத்தில் விழுந்தது. பறவை கீழே விழுந்ததைக் கண்ட சித்தார்த்த குமாரன் ஓடிச்சென்று பறவையைத் தமது இரண்டு கைகளினாலும் அன்புடன் எடுத்து அப்பறவை படும் துன்பத்தைக்கண்டு மனம் வருந்தினார். பிறகு தரையில் உட்கார்ந்து அதை மெல்ல மடியின்மேல் வைத்துக்கொண்டு சிறகில் பொத்திக்கொண்டிருந்த அம்பை மெதுவாக வெளியே எடுத்தார். பிறகு புண்ணில் தைலம் தடவி அதற்குத் தீனி கொடுத்துக் காப்பாற்றினார். சில நாட்களில் பறவையின் புண் ஆறி நலம்அடைந்தது.

தேவதத்தன், சித்தார்த்த குமாரனிடம் சிலரை அனுப்பி அன்னப் பறவையைத் தன்னிடம் சேர்ப்பிக்கும்படிக் கேட்டான். அவர்கள் வந்து, “தேவதத்தன் அம்பு எய்து அன்னப் பறவையை வீழ்த்தினார். அப்பறவை உமது தோட்டத்தில் விழுந்தது. அதைத் தரும்படிக் கேட்கிறார்” என்று கூறினார்கள்.

சித்தார்த்த குமாரன் அவர்களுக்கு இவ்வாறு விடை கூறினார்: “அம்பு தைத்த அன்னப் பறவை இறந்து போயிருந்தால், அது திருப்பிக் கொடுக்கப்படவேண்டும். அது இறந்து போகாமல் உயிருடன் இருப்பதால் அது அவருக்குரியதன்று.”

இதைக்கேட்ட தேவதத்தன் மீண்டும் அவர்களை அனுப்பி இவ்வாறு கூறினான்: “பறவை உயிருடன் இருந்தாலும் இறந்துபோனாலும் அது எனக்கே உரியது. என்னுடைய வில்வித்தையின் திறமையினாலே அதை அம்பெய்து கீழே வீழ்த்தினேன். ஆகையால் அது எனக்கே உரியது; உடனே அனுப்பிவைக்க வேண்டும்”.

இதற்குச் சித்தார்த்த குமாரன் கூறிய மறுமொழி இது: “எல்லா உயிர்களையும் காப்பாற்றவேண்டும் என்பது என் கொள்கை. புண்பட்ட இப்பறவையை நான் எடுத்துக் காப்பாற்றுகிறேன். இது எனக்குரியதன்று என்று நீங்கள் கருதினால், சாக்கிய குலத்துப் பெரியவர்களைக் கேளுங்கள். அவர்கள் முடிவுப்படி செய்கிறேன்”.

அதன்படியே சாக்கிய குலத்துப் பெரியவர்களைக் கேட்டார்கள். அவர்களில் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் இவ்வாறு கூறினார்: “யார் அன்புடன் போற்றிக் காக்கிறார்களோ அவர்களே உரிமையாளரும் உடமையாளரும் ஆவார். அழிக்கிறவர் உரிமையுடையவர் அல்லர்.” அவர் கூறிய இந்தத் தீர்ப்பை மற்றவர் எல்லோரும் ஒப்புக்கொண்டார்கள்.

இரம்மிய மாளிகை

சித்தார்த்த குமாரனுக்குப் பதினாறு வயது ஆயிற்று. அவரைத் துறவு கொள்ளாதபடித் தடுத்து இல்லறத்திலேயே நிறுத்தச் சுத்தோதன அரசர் கண்ணுங் கருத்துமாக இருந்தார். அரசர் மூன்று சிறந்த மாளிகைகளை அமைத்துச் சித்தார்த்த குமாரனுக்குக் கொடுத்தார். இந்த மாளிகைகள் கார்காலம் வேனிற்காலம் கூதிர்காலம் என்னும் மூன்று காலங்களில் தங்கி வசிப்பதற்கு ஏற்றதாக அமைந்திருந்தன.

கார்காலத்தில் வசிப்பதற்காக அமைக்கப்பட்டது இரம்மிய மாளிகை என்பது. இது ஒன்பது மாடிகளைக் கொண்டிருந்தது. ஒன்பது மாடிகளுள், மேல்மாடிகள் கீழ் மாடிகளைவிட ஒன்றுக்கொன்று உயரம் குறைவாக இருந்தன. மழைக்காலத்து வாடைக் காற்று மாளிகைக்குள் புகாதபடிக் கதவுகளும் சாளரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. மாளிகைச் சுவர்களில் நெருப்பு எரிவது போன்ற ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. தரையில் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருந்தன. இந்த மாளிகையில் இருந்த தலையணைகளும் திண்டுகளும் போர்வைகளும் ஆடைகளும் கம்பளிகளால் ஆனவை. கார்காலத்தின் குளிர் தோன்றாதபடி அமைந்திருந்தது இந்த மாளிகை.

சுரம்மிய மாளிகை

வேனிற்காலத்தில் தங்குவதற்காக அமைக்கப்பட்டது சுரம்மியம் என்னும் பெயருடைய மாளிகை. இந்த மாளிகை ஐந்துமாடிகளைக் கொண்டிருந்தது. வேனிற்காலத்துத் தென்றல்காற்று உள்ளே வீசுவதற்குத் தக்கவாறு இந்த மாளிகையின் கதவுகளும் சாளரங்களும் அமைந்திருந்தன. சுவர்களிலே செந்தாமரை, வெண்டாமரை, நீலத்தாமரை, செவ்வல்லி, வெள்ளல்லி முதலிய நீர்ப்பூக்கள் குளங்களில் மலர்ந்திருப்பது போன்ற ஓவியங்கள் அழகாக எழுதப்பட்டிருந்தன. இந்த மாளிகையிலே இருந்த தலையணைகளும் பஞ்சணைகளும், உடுத்தும் ஆடைகளும், போர்க்கும் போர்வைகளும் மெல்லிய பருத்தித் துணியால் அமைந்திருந்தன. சாளரங்களின் அருகிலே குளிர்ந்த நீர்க்குடங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கங்கே நீர் தெளிக்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மூலமாக விரும்பியபோதெல்லாம் மழை தூறுவதுபோலத் தண்ணீர் தெளிக்கச் செய்யலாம். இந்த மாளிகையின் கதவுகள் பகலில் மூடப்பட்டும் இரவில் திறக்கப்பட்டும் இருந்தன.

சுபதமாளிகை

சுபதமாளிகை என்னும் பெயரையுடைய மூன்றாவது மாளிகை பனிக்காலமாகிய கூதிர்க்காலத்தில் வசிப்பதற்காக அமைக்கப்பட்டது. இதில் ஏழு மாடிகள் இருந்தன. மாளிகைச் சுவர்களிலே சிலவிடங்களில் தீ எரிவது போலவும், சில இடங்களில் தாமரை அல்லி முதலிய நீர்ப்பூக்கள் மலர்ந்திருப்பது போலவும் ஓவியங்கள் கண்ணைக் கவரும்படி எழுதப்பட்டிருந்தன. இம்மாளிகையிலிருந்த ஆடைகளும் தலையணை முதலியவைகளும் கம்பளியும்பருத்தியும் கலந்து செய்யப்பட்டிருந்தன. கதவுகளில் சில, பகலில் திறக்கப்பட்டு இரவில் மூடப்பட்டும், சில, பகலில் மூடப்பட்டு இரவில் திறக்கப்பட்டும் இருந்தன.

இவ்வாறு கார்காலம் வேனிற்காலம் கூதிர்காலம் என்னும் மூன்று காலங்களையும் இன்பமாகக் கழிப்பதற்கு ஏற்றவாறு மூன்று மாளிகைகளை அரசர் அமைத்துக்கொடுத்தார்.

பணிவிடையாளர் பலரை ஏற்படுத்தினார். இனிய அறுசுவை உணவுகளை அமைத்துக் கொடுக்கவும் தூய மெல்லிய ஆடைகளை அவ்வப்போது அளிக்கவும் நறுமணச் சாந்துகளையும் மலர் மாலைகளையும் தொடுத்துக் கொடுக்கவும் ஏவலாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். இசைப்பாட்டுப் பாடும் அழகிய மகளிரும், குழல், யாழ், முழவு முதலிய இசைக் கருவிகளை வாசிக்கும் மகளிரும், நடனம் நாட்டியம் ஆடும் மங்கையரும் நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு சுத்தோதன அரசர் தமது குமாரன் இல்லற வாழ்க்கையிலேயே நிலை கொள்ளும்படியான பலவற்றையும் செய்துகொடுத்தார். மேலும், கண்ணுங்கருத்துமாகக் குமாரனைக் கவனித்து வந்தார். அசித முனிவரும் கொண்டஞ்ஞ நிமித்திகரும், சித்தார்த்த குமாரன் துறவுபூண்டு புத்தராவார் என்று கூறிய மொழிகள் சுத்தோதன அரசரின் மனத்தில் பதிந்திருந்தன. ஆகவே, தமது குமாரன் துறவு பூணாமல் இல்லறத்திலேயே இருக்கச்செய்யத் தம்மாலான முயற்சிகளையெல்லாம் செய்தார்.

சித்தார்த்தர் திருமணம்

சித்தார்த்த குமாரனுக்குத் திருமணவயது வந்ததையறிந்த சுத்தோதன அரசர், அவருக்குத் திருமணம் செய்துவைக்க எண்ணினார். அமைச்சர்களை அழைத்துத் தமது கருத்தைக் கூறினார். இக்கருத்தையறிந்த சாக்கிய குலத்தவர் எல்லோரும் தமது குமாரத்திகளை மணஞ்செய்து கொடுப்பதாகக் கூறினார்கள்.

சுத்தோதன அரசர் தமக்குள் இவ்வாறு எண்ணினார்: “குமாரனுடன் கலந்து யோசிக்காமல் நானாகவே மணமகளை ஏற்படுத்தினால் ஒருவேளை குமாரனுக்குப் பிடிக்காமல் இருக்கக்கூடும். குமாரனே யாரையேனும் தேர்ந்தெடுத்துக்கொள்ளச் சொன்னால், ஒருவேளை மணம் வேண்டாம் என்று மறுத்துக் கூறவும்கூடும். என் செய்வது! நாட்டிலுள்ள மங்கையர் எல்லோரையும் அரண்மனைக்கு வரச்செய்து, அவர்களில் யாரிடம் குமாரனுக்கு ஆசை பிறக்கிறது என்பதை உபாயமாக அறிந்துகொள்ள வேண்டும்” என்று தமக்குள் சிந்தித்தார்.

பிறகு வெள்ளியினாலும் பொன்னாலும் பலவிதமாக நகைகளையும் அணிகலன்களையும் ஏராளமாகச் செய்வித்து, “இன்று ஏழாம்நாள் சித்தார்த்த குமரன் மங்கையருக்குப் பரிசளிக்கப் போகிறார். பரிசுகளைப் பெற்றுக்கொள்ள மங்கையர் எல்லோரும் அரண்மனைக்கு வரவேண்டும்” என்று பறையறைவித்தார்

ஆறு நாட்கள் கழிந்தன. பரிசளிக்கப்படும் ஏழாம் நாள் வந்தது. சித்தார்த்த குமரன் வந்து அரண்மனையின் மண்டபத்திலே உயரிய ஆசனத்தில் அமர்ந்தார். நாட்டிலுள்ள உயர்குடிப் பெண்கள் எல்லோரும் அரண்மனைக்கு வந்தார்கள். வந்து ஒவ்வொருவராக அரச குமாரனை அணுகிப் பரிசுகளைப் பெற்றுச்சென்றார்கள். அரச குமாரனுடைய கம்பீரமான தோற்றத்தையும் அழகையும்கண்ட அம்மங்கையர் எல்லோரும், அரசகுமாரனை நேரே முகத்தைப்பாராமல் தலை குனிந்தவண்ணம் சென்று வணக்கம்செய்து அவர் கொடுத்த பரிசைப் பெற்றுக்கொண்டு போனார்கள். இவ்வாறு பரிசு நகைகள் எல்லாம் வழங்கப்பட்டன.

கடைசியாக, சாக்கிய குலத்து மகாநாமர் என்பவர் மகளான யசோதரை என்னும் கன்னிகை தாதியர் சூழ அவ்விடம் வந்தார். வந்து அரசகுமாரனை அணுகி, அவருடன் நெடுநாள் பழகியவர்போல, “குமார! எனக்கு என்னபரிசு கொடுக்கப்போகிறீர்கள்?” என்றுகேட்டார்.

“நீ நேரஞ்சென்று வந்தாய். பரிசுகளைக் கொடுத்தாய் விட்டது” என்றார் சித்தார்த்த குமாரன்.

“நான் என்ன தவறு செய்தேன்? எனக்கென்று ஏதேனும் பரிசு வைத்திருக்கக் கூடாதா?” என்றார் யசோதரையார்

“உனக்குப் பரிசு கொடுக்கக் கூடாதென்பதல்ல. நீ நேரங்கழித்து வந்தது தவறு” என்று சொல்லி, தன் கைவிரலில் அணிந்திருந்த ஆயிரம்பொன் விலையுள்ள கணையாழியைக் கழற்றிக்கொடுத்தார்.

யசோதரை குமாரி, “குமார! வேறு எதையேனுங் கொடுங்கள்” என்று கேட்டார்.

“வேண்டுமானால் என் கழுத்திலிருக்கும் முத்து மாலையை எடுத்துக்கொள்.” என்று கூறி அதைக் கழற்றினார்.

“தங்கள் கழுத்துக்கு இந்த முத்துமாலை வெகு அழகாக இருக்கிறது! அது அங்கேயே இருக்கட்டும்.” என்று சொல்லிவிட்டு யசோதரை குமாரி புன்சிரிப்புடன் போய்விட்டார்.

சுத்தோதன அரசன் ஏவலின்படி தூரத்திலிருந்து கருத்துடன் கவனித்துக் கொண்டிருந்த ஒற்றர்கள் இச்செய்தியை அரசருக்குத் தெரிவித்தார்கள். யசோதரை குமாரி வந்ததையும் குமாரனுடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்ததையும் அவருக்குக் குமாரன் மோதிரத்தையும் முத்து மாலையையும் வழங்கியதையும் பிறகு யசோதரை போய் விட்டதையும் விபரமாகக் கூறினார்கள். அரசர் மனம் மகிழ்ந்தார்.

பிறகு சுத்தோதன அரசர் ஒரு நன்னாளில் மகாநாமரிடம் தூதுவரை அனுப்பித் தமது குமாரனுக்கு அவருடைய குமாரத்தியை மணம்செய்து கொடுக்கும்படிக் கேட்டார். மகாநாமர் இவ்வாறு விடை கூறினார்: “சாக்கிய குலத்தில் ஒரு வழக்கம் உண்டு. படைக்கலப் பயிற்சியில் யார் ஒருவர் சிறந்த வீரரோ அவருக்குத்தான் மணமகள் உரிமையானவள். படைக்கலப் பயிற்சியறியாதவருக்கு மணமகள் உரியவளல்லள். அரச குமாரன், வில்வித்தை மல்யுத்தம் முதலியவற்றில் மனம் செலுத்தாமலும் அவற்றைப் பயிலாமலும் இருக்கிறார் என்று அறிகிறேன். இப்படிப்பட்டவருக்கு என் மகளை எப்படி மணஞ்செய்து கொடுப்பேன்?”

மகாநாமர் கூறிய இந்தச் செய்தியைத் தூதுவர்வந்து சுத்தோதன அரசருக்குத் தெரிவித்தார்கள். இதைக்கேட்ட சுத்தோதன அரசர் தமக்குள், “மகாநாமர் சொல்லியது முழுவதும் உண்மை. இதற்கு என்ன செய்வது!” என்று சொல்லிக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.

அரசர் கவலையோடு இருப்பதைச் சித்தார்த்த குமாரன் அறிந்தார். அரசரை அணுகிக் காரணத்தை வினவினார். அரசர் காரணத்தைக் கூறவில்லை. குமாரன் மீண்டும்மீண்டும் வினவினார். கடைசியாக அரசர் காரணத்தை விளக்கிக் கூறினார். காரணத்தை அறிந்த குமாரன் “மகாராஜா! பறையறைந்து படைக்கலப் போட்டியை ஏற்படுத்துங்கள். நான் அதில் வெற்றியடையவதைப் பாருங்கள்” என்று கூறினார்.

அரசர் பெருமகிழ்ச்சியடைந்து, குமாரனைப் பார்த்து “மகனே, வீரர் அரங்கத்தில் நீ வெற்றி பெறுவாயா?” என்று ஆவலாகக் கேட்டார்.

“மகாராஜரே! அரங்கத்திற்கு நாள் குறிப்பிடுங்கள். படைக்கலப் பயிற்சி எல்லாவற்றிலும் நான் வெற்றியடைவதைப் பார்ப்பீர்கள்” என்றார் குமாரன்.

படைக்கலப் போட்டி

அரசர் பெருமகிழ் வெய்தினார். பிறகு பறையறைவித்துப் படைக்கலப்போட்டி நிகழப்போகும் நாளைத் தெரிவித்தார். அந்நாளும் வந்தது. படைக்கலப் பயிற்சியிலும் போர்ப் பயிற்சியிலும் சிறந்த சாக்கிய குமாரர்கள் எல்லோரும் களத்திற்கு வந்தார்கள். சித்தார்த்த குமாரனும் வந்தார்; சுத்தோதன அரசரும் வந்தார். வேடிக்கை பார்ப்பதற்கு நாட்டிலுள்ள எல்லோரும் வந்திருந்தார்கள்.

மகாநாமர் தமது மகள் யசோதரையை அழைத்துவந்து உயரமான மேடைமேல் அமரச்செய்தார். “படைக் கலப்போட்டியில் யார் வெற்றிபெறுகிறாரோ, அவருக்கு யசோதரையை மணம்செய்து கொடுப்பேன்” என்று தெரிவித்தார்.

இப்படைக்கலப் போட்டிக்குச் சகாதேவர் என்பவர் நடுநிலையாளராக நியமிக்கப்பட்டார். முதலில் அம்புஎய்யும் போட்டி நடந்தது. அதாவது, நெடுந்தூரம் அம்பு எய்யும் போட்டி. ஆனந்தன் என்பவர் இரண்டு குரோச தூரத்திலும், நந்தன் ஆறு குரோச தூரத்திலும், மற்றொருவர் எட்டுக் குரோச தூரத்திலும், சித்தார்த்த குமாரன் பத்துக் குரோச தூரத்திலும், அம்பு எய்வதற்குக் குறிகளை ஏற்படுத்தினார்கள். பிறகு இவர்கள் எல்லோரும் வில்லைவளைத்து அம்பு எய்தார்கள். அவரவர்கள் வைத்த குறி வரையில் அவரவர்கள் அம்பு எய்தனர்.

சித்தார்த்த குமாரன் முறை வந்தபோது, அவரிடம் வில்லைக் கொடுத்தார்கள். குறியை எய்வதற்கு முன்பு வில்லைச் சோதிப்பதற்காகக் குமாரன் வில்லை வளைத்தார். அது ஒடிந்து போயிற்று. அப்போது அவர், “வேறு நல்லவில் இங்கே இல்லையா” என்று கேட்டார்.

சுத்தோதன அரசர், “இருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

“எங்கே அதை எனக்குக் கொடுங்கள்” என்றார் குமாரன்.

“உன்னுடைய பாட்டன் சிம்மஹணு அரசனுடைய வில் ஒன்று உண்டு. அதை ஒருவரும் வளைக்க முடியாதபடியால் அது கோயிலில் வைக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறி அதைக் கொண்டுவந்து கொடுங்கள் என்று ஏவலாளருக்குக் கட்டளையிட்டார் சுத்தோதன அரசர்.

உடனே ஏவலாளர் விரைந்துசென்று அந்த வில்லைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். சித்தார்த்த குமாரன் அதனைக் கையில்வாங்கி நாணைப்பூட்டி அம்பு தொடுத்துக் குறிபார்த்து வில்லைவளைத்து அவ்வம்பை எய்தார். பத்துக் குரோசத்துக்கப்பால் இருந்த குறியில் அம்பு பாய்ந்து அதை ஊடுருவிச் சென்றது. அதைக் கண்ட எல்லோரும் கைகொட்டி ஆரவாரம் செய்துமகிழ்ந்தார்கள்.

தொலைதூரம் அம்பு எய்யும் போட்டியில் சித்தார்த்த குமாரன் வெற்றிபெற்றார்!

இரண்டாவதாக அம்பை ஊடுருவிச்செலுத்தும் போட்டிப்பந்தயம் நடந்தது. ஏழு பனைமரங்கள் வரிசையாக இருந்தன. அந்த ஏழு பனைமரங்களையும் ஊடுருவிச் செல்லும்படி அம்பு எய்யவேண்டும் என்பது பந்தயம். சிலர் ஒரு பனைமரத்தையும் சிலர் இரண்டு மரத்தையும் சிலர் மூன்று மரத்தையும் சிலர் நான்கு மரத்தையும் சிலர் ஐந்து மரத்தையும் ஊடுருவும்படி அம்பு எய்தனர். சித்தார்த்த குமாரன், எய்த அம்பு ஏழு மரங்களையும் துளைத்துக்கொண்டு அப்பால்சென்று தரையில் விழுந்து துண்டு துண்டாக ஒடிந்தது. இதைக் கண்டவர்கள் எல்லோரும் கைகொட்டி ஆரவாரம் செய்து புகழ்ந்தார்கள்.

பிறகு, நீர் நிறைந்த ஏழு இரும்புக் குடங்களை வரிசையாகச் சமதூரத்தில் வைத்து, தீ கொளுத்திய நாரை அம்பில் கட்டி அந்த அம்பைக் குடங்களின் ஊடே எய்யவேண்டும். ஏழு குடங்களையும் அம்பு துளைத்துச் செல்லவேண்டும்; நெருப்பும் அவியாமல் எரியவேண்டும். வில்வீரர்கள் இவ்வாறு அம்பு எய்தபோது சிலர் ஒரு குடத்தையும், சிலர் இரண்டு மூன்று குடங்களையும், சிலர் ஐந்து ஆறு குடங்களையும் எய்தார்கள். சித்தார்த்த குமாரன் ஏழு குடங்களையும் ஊடுருவிச் செல்லும்படியும் நெருப்பு அணையாதபடியும் அம்புஎய்து வெற்றிபெற்றார்.

பிறகு வாள் பந்தயம் நடந்தது. ஒரே வெட்டினால் ஏழு மரங்களைத் துண்டாக்க வேண்டும் என்பது பந்தயம். இந்தப் பந்தயத்திலும் சித்தார்த்த குமாரன் வெற்றிபெற்றார். ஒரே வீச்சினால் ஏழு மரங்களையும் வெட்டினார். ஆனால், வெட்டுண்ட மரங்கள் விழாமல் நின்றன. காற்று வீசியபோது வெட்டுண்ட மரங்கள் விழுந்தபோதுதான் ஏழு மரங்களும் வெட்டுண்டன என்பது தெரிந்தது.

இவ்வாறே குதிரைச் சவாரி செய்தல், மற்போர் செய்தல் முதலிய வீரர்க்குரிய பந்தயங்கள் எல்லாம் நடைபெற்றன. எல்லாப் பந்தயங்களிலும் சித்தார்த்த குமாரன் வெற்றிபெற்று எல்லோராலும் புகழப்பட்டார். தமது மகன் வெற்றிபெற்றதைக் கண்டு சுத்தோதன அரசர் அடங்காத மகிழ்ச்சி கொண்டார்.

அப்போது யாசோதரை குமாரியின் தந்தையான மகாநாமர் சொன்னார்: “சித்தார்த்த குமாரனைப் படைக்கலப் பயிற்சியறியாதவர் என்று எண்ணியிருந்தேன். இப்போது, அவர் முதல்தரமான வீரர் என்பதை நேரில் கண்டேன். வெற்றிபெற்ற குமாரருக்கு என் மகள் யசோதரையை மணம் செய்துகொடுக்க இசைகிறேன்” இவ்வாறு மகாநாமர் கூறியதைக் கேட்டு எல்லோரும் மகிழ்ச்சியாரவாரம் செய்தார்கள்.

குறிப்பிடப்பட்ட நல்ல நாளிலே சித்தார்த்த குமாரனுக்கும் யசோதரையாருக்கும் திருமணம் இனிது நடந்தது. சித்தார்த்த குமாரன் பலவிதமான நகைகளையும் அணிகலன்களையும் மணமகளுக்குப் பரிசு அளித்தார். யசோதரைகுமாரி, ஆடல்பாடல்களில் தேர்ந்த ஐந்நூறு பணிப்பெண்களுடன் அரண்மனைக்கு வந்தார்.

தேவேந்திர மாளிகை போன்ற அரண்மனையிலே சித்தார்த்த குமாரனும் யசோதரை குமாரியும் எல்லாவித இன்பசுகங்களைத் துய்த்து இந்திரனும் சசிதேவியும் போல வாழ்ந்தார்கள்.

சுத்தோதன அரசர், சித்தார்த்த குமாரனின் இல்வாழ்க்கையில் பெரிதும் கருத்தாக இருந்தார். சித்தார்த்த குமாரன் துறவுபூண்டு புத்தபதவியடைவார் என்று அசித முனிவர் சொல்லிய வாய்மொழி அரசருடைய மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. குமாரனை இல்வாழ்க்கையிலேயே இருக்கச்செய்து சக்கரவர்த்திப் பதவியைப் பெறச் செய்யவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆகவே, இல்லறத்தில் விருப்புக் கொள்ளும்படியான சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொடுத்தார். ஆடல், பாடல், இன்னிசை, குழல், யாழ், முழவு முதலிய கலைகளில் வல்லவரான அழகுள்ள இளமங்கையர் எப்போதும் குமாரனைச் சூழ்ந்திருந்து அவருக்கு மகிழ்ச்சியையூட்டிக் கொண்டிருக்க ஏற்பாடுசெய்தார். அரண்மனையைச் சூழ்ந்து கால் காததூரம் வரையில் சேவகர்களை நியமித்துக் கிழவர் துறவிகள் நோயாளிகள் பிணங்கள் முதலிய அருவெறுப்பைத் தரும் காட்சிகள் குமாரன் பார்வையில் படாதபடி காவல்வைத்தார். மேலும் அரண்மனையைவிட்டு வெளியில் வராதபடி எல்லாவற்றையும் மாளிகையிலேயே அமைத்துக்கொடுத்தார். இவ்வாறு, குமாரன் இல்வாழ்க்கையி-லேயே நிலைத்து நிற்கும்படிப் பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்து வைத்தார்.

விம்பசாரனின் அச்சம்

அக்காலத்திலேயே சாக்கிய ஜனபதத்துக்குத் தெற்கேயிருந்த மகத தேசத்திலே சிரேணிக குலத்தில் பிறந்த விம்பசாரன் என்னும் அரசன் அரசாண்டு கொண்டிருந்தான். விம்பசாரன், வேறு அரசர் யாரேனும் வந்து தன்னைவென்று தனது அரசாட்சியைக் கவர்ந்து கொள்வரோ என்று அச்சங்கொண்டிருந்தான். ஆகவே, அடிக்கடி அமைச்சர்களுடன் கலந்து இதுபற்றி ஆலோசிப்பது வழக்கம். வழக்கம்போல ஒரு சமயம் அமைச்சர்களுடன் ஆலோசனைசெய்தான். “அறிவுமிக்க அமைச்சர்களே! நம்மை வெல்லக்கூடிய ஆற்றல் உடைய வேற்றரசர் யாரேனும் உளரோ? இருந்தால் அவர்களை எவ்வாறு வெல்வது? என்பதை ஆராய்ந்து சொல்லுங்கள்” என்று கூறினான்.

அமைச்சர்கள், ஒற்றறிந்துவர பல நாடுகளுக்கு ஒற்றர்களை அனுப்பினார்கள். ஒற்றர்கள் நாடெங்கும் சென்றுஆராய்ந்தனர். விம்பசார அரசனை வெல்லும் ஆற்றல் உள்ள அரசர் ஒருவரும் இலர் என்பதைக் கண்டனர். ஆனால், வடக்கே சென்ற ஒற்றர்கள் இந்தச் செய்தியை அறிந்தார்கள் : இமயமலைச் சாரலில் சாக்கிய ஜனபதத்தில் கபிலவத்து நகரத்தில் சுத்தோதன அரசருக்கு ஒரு குமாரன் பிறந்திருப்பதையும் அக்குமாரனின் திருமேனியிலே முப்பத்திரண்டு மகாபுருஷ லக்ஷணங்கள் அமைந்திருப்பதையும் இக்குமாரன் இல்லற வாழ்க்கையில் இருந்தால் அரசர்களை வென்று சக்கரவர்த்தியாக விளங்குவார் என்றும், துறவறம் மேற்கொண்டால் பெறுதற்கரிய புத்தபதவியை அடைவார் என்றும் நிமித்திகர் கணித்துக் கூறியிருப்பதையும் ஒற்றர்கள் அறிந்தார்கள். உடனே, மகத நாட்டிற்கு விரைந்துவந்து இச்செய்திகளை அமைச்சர்களுக்குக் கூறினார்கள்.

அமைச்சர்கள் விம்பசார அரசனுக்கு இச்செய்திகளைத் தெரிவித்து உடனே நால்வகைச் சேனைகளைப் பலப்படுத்தும்படியும் சக்கரவர்த்தியாகப் போகிற சிறுவனை விரைவில் அழிக்கவேண்டும் என்றும் யோசனை கூறினார்கள்.

விம்பசார அரசன் இதைப்பற்றி நெடுநேரம் யோசித்தான். கடைசியில் அமைச்சரிடம் இவ்வாறு கூறினான்: சித்தார்த்த குமாரன் மீது போர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கிடைத்தற்கரிய சக்கரவர்த்திப் பதவியைச் சித்தார்த்தகுமாரன் பெற்றால், சக்கரவர்த்திகள் நீதி முறைப்படி நடப்பார்களாகையினாலே, அவருக்குக் கீழடங்கி நாம் அரசாட்சியை நடத்தலாம். அவர் துறவுபூண்டு புத்த பதவியையடைந்தால், அவரிடம் அறநெறிகேட்டு அவருக்குச் சீடராகலாம், ஆகவே இரண்டு விதத்திலும் நமக்கு நன்மையே.

இவ்வாறு விம்பசார அரசன் கூறியதைக் கேட்ட அமைச்சர்கள் சரி என்று அவர் கருத்தை ஒப்புக்கொண்டார்கள்.

சித்தார்த்தர் கேட்ட தெய்விகக் குரல்

சித்தார்த்த குமாரன் உலக போகத்தில் மூழ்கி அரண்மனையிலே இன்ப சுகங்களைத் துய்த்துக்கொண்டு கவலையற்ற வாழ்க்கை வாழ்ந்தபோதிலும் நாளடைவில் அவருக்கு இல்வாழ்க்கையில் வெறுப்புத்தோன்றிற்று.

இன்ப வாழ்க்கையில் வெறுப்புத் தட்டியது. அவருடைய உள்ளத்தில் ஏதோ இரகசியச் செய்தி புலப்பட்டது. “குமாரனே! விழித்துக்கொள், தெளிவுகொள். நிலையற்ற அழிந்துபோகிற ஐம்புல இன்ப சுகங்களில் காலங்கழிக்காதே. நிலையாமையை உணர்ந்து நிலைபெற்ற இன்பத்தைநாடி மக்களுக்கு நல்வழி காட்டு. நீ வந்த வேலையை நிறைவேற்ற முற்படு” என்று ஏதோ ஒரு குரல் தன் உள்ளத்தில் கூறுவதுபோல அவருக்குத் தோன்றிற்று.

இந்தக் குரல் நாளுக்குநாள் உரத்த குரலாகக் கேட்பதுபோலத் தோன்றியது. அழகிய இளமங்கையரின் இன்னிசைப் பாடல்களைக் கேட்கும்போதும் இதே குரல் அவர் காதில்கேட்டது. யாழின் அமிழ்தம் போன்ற இன்னிசையிலும் இதே குரல் இவர் உள்ளத்தைத் தூண்டியது. வேய்ங்குழலின் தீஞ்சுவை நாதத்திலும் இக்குரல் கேட்டது. ஆடல் பாடல்களிலும் நாட்டிய நடனங்களிலும் இச்செய்தியே இவர் மனத்தில் பதிந்தது.

அரசபோகங்களிலும் இல்லற வாழ்க்கையிலும் அவர் உள்ளம் வெறுப்படைந்தது.

சுத்தோதனர் கண்ட கனவு

ஓர் இரவில், சுத்தோதன அரசர் கண்ணுறங்கியபோது அவருக்குச் சில கனவுகள் தோன்றின. அன்றிரவு அவர்கண்ட கனவுகள் இவை:

தேவேந்திரனுடைய கொடிபோன்ற பெரிய கொடியொன்றை, எண்ணிறந்த மக்கள் கூட்டமாகச் சூழ்ந்து தூக்கிக்கொண்டு கபிலவத்து நகரத்தின் வழியாகச்சென்று கிழக்குவாயில் வழியாகப் போனார்கள்.

சித்தார்த்த குமாரன் அமர்ந்திருந்த தேரைப் பத்துப் பெரிய யானைகள் இழுத்துக்கொண்டு நகரத்தின் தென்புறவாயில் வழியாகச்சென்றன.

நான்கு வெண்ணிறக் குதிரைகள் பூட்டப்பட்ட உன்னதமான தேரிலே சித்தார்த்த குமாரன் அமர்ந்து நகரத்தின் மேற்குவாயில் வழியாகச்சென்றார். நவமணிகள் பதிக்கப்பட்ட பெரிய சக்கராயுதம் ஒன்று சுழன்ற வண்ணம் ஆகாயத்தில் பறந்து நகரத்தின் வடக்குப்புற வாயில் வழியாகச்சென்றது.

நகரத்தின் நான்கு சாலைகள் கூடுகிற நாற்சந்தியிலே சித்தார்த்த குமாரன் அமர்ந்து பேரொலியுண்டாகும்படி முரசைக் கொட்டிக்கொண்டிருந்தார்.

நகரத்தின் நடுவே ஒரு உயரமான இடத்தில் அமர்ந்து சித்தார்த்த குமாரன் முத்து, மணி, மாணிக்கம், இரத்தினம் முதலியவற்றைச் சிதறிக் கொண்டிருக்க அவற்றை மக்கள் திரண்டுவந்து பொறுக்கிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு கனவுகளைக் கண்ட சுத்தோதன அரசர் விழித்தெழுந்தார். நிமித்திகர்களை அழைத்து இக்கனவுகளின் கருத்தைத் தெரிவிக்கும்படிக் கேட்டார். அவர்கள் இக்கனவுகளின் கருத்துத் தெரியாமல் திகைத்தார்கள். ஒரு நிமித்திகர் நெடுநேரம் யோசித்து இவ்வாறு விளக்கம் கூறினார்.

கொடியை மக்கள் தூக்கிக்கொண்டு போனது, சித்தார்த்த குமாரன் தேவர்கள் சூழ இந்நகரத்தை விட்டு வெளிச்சென்று துறவு கொள்வார் என்பதைக் குறிக்கிறது.

பத்து மதயானைகள் இழுத்த தேரை ஊர்ந்துசென்றது, பத்துப் பாரமிதைகளைச் செய்திருப்பதனாலே, அப்பாரமிதைகளின் உதவிகொண்டு சித்தார்த்த குமாரன் உயர்ந்த போதிஞானம் அடைவார் என்பதைக் குறிக்கிறது.

நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறிச்சென்றது, குமாரன் நிச்சயமாகப் புத்தஞானத்தை அடைவார் என்பதைக் குறிக்கிறது.

வானத்தில் சக்கராயுதம் சுழன்றுசென்றது, குமாரன் போதிஞானம் பெற்று அறநெறியைத் தேவருக்கும் மனிதருக்கும் போதிப்பார் என்பதைத் தெரிவிக்கிறது.

குமரன் பேரொலியுடன் முரசு கொட்டியது, அவர் போதிஞானம் பெற்று உபதேசம் செய்யும் அறநெறி உலகத்திலே வெகுதூரம் பரவும் என்பதைத் தெரிவிக்கிறது.

உயரமான இடத்தில் அமர்ந்து மணியையும் முத்தையும் வீச அதனை மக்கள் பொறுக்கினார்கள் என்னும் கனவு, புத்த பதவியை அடைந்து உலகத்திலே புத்த தர்மத்தைப் பரப்புவார் என்பதையும் அதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் குறிக்கின்றன.

இவ்வாறு நிமித்திகர் கனவுக்கு விளக்கம் கூறியதைக் கேட்டுச் சுத்தோதன அரசர் பெரிதும் கவலையடைந்தார். தமது மகனைத் துறவுகொள்ளாமல் தடுத்து எவ்விதத்திலும் இல்லறத்திலேயே நிறுத்தவேண்டும் என்று உறுதிகொண்டார். ஆகவே அரண்மனையிலும் நகர வாயில்களிலும் அதிகமாகக் காவலாளர்களை நியமித்துச் சித்தார்த்த குமரன் நகரத்துக்கு வெளியேபோகாதபடி பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்தார். மேலும் அழகுள்ள இளமங்கையர் பலரை அவருக்கு ஊழியராக அமர்த்தினார்.

உலாவச் சென்றது

ஒருநாள் சித்தார்த்த குமரன் அரண்மனைக்கப்பால் உள்ள பூஞ்சோலைக்குப் போக நினைத்தார். சன்னன் என்னும் பெயருள்ள தேர்ப்பாகனிடம் தமது எண்ணத்தைக் கூறித் தேரைக்கொண்டுவரக் கட்டளையிட்டார். சன்னன், குமரனின் விருப்பத்தைச் சுத்தோதன அரசருக்குத் தெரிவித்தான். அரசர், பூஞ்சோலைக்குச் செல்லும் சாலைகளில் நீர் தெளித்துத் தோரணங்களும் கொடிகளும் கட்டிப் பூரண கும்பங்கள் வைத்து அலங்காரம்செய்யக் கட்டளையிட்டார். மேலும், கிழவர் நோயாளர் முதலியோர் அவ்விடத்தில் வராதபடி சேவகர்களைக் காவல் வைத்தார்.

பூஞ்சோலையைப் பழுத்த இலைகளும் காய்ந்த சருகுகளும் இல்லாதபடித் தூய்மை செய்வித்தார். கொடிச் சீலைகள் கொடிகள் முதலியவற்றைக் கட்டி அழகுபடுத்தினார். பூஞ்சோலையில் ஆண் பெயருள்ள மரங்களுக்கு வேஷ்டிகள் கட்டியும் பெண் பெயருள்ள மரங்களுக்குச் சேலைகள் அணிவித்தும் அழகுபடுத்தினார். மற்றும் அப்பூஞ்சோலையின் காட்சிகளை அழகும் இனிமையும் உள்ளதாக்கினார்.

நான்கு காட்சிகள்

சன்னன் நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரைக் கொண்டுவந்து நிறுத்தினான். சித்தார்த்த குமாரன் மெல்லிய பட்டாடைகளை அணிந்து தேரில் அமர்ந்து பூஞ்சோலையைக் காணச்சென்றார். செல்லும் வழியிலே, எந்தெந்தக் காட்சிகளை இவர் காணக்கூடாதென்று சுத்தோதன அரசர் தடுத்துவைத்தாரோ அக்காட்சிகள், தெய்வச் செயலாக இவருடைய பார்வையில்பட்டன. வழியிலே தொண்டுக் கிழவர் கூனிக்குனிந்துத் தடியூன்றித் தள்ளாடி நடந்து, இருமிக் கொண்டிருந்ததைக் குமரன் கண்டார். நரைத்த தலையும் திரைத்த தோலும் குழி விழுந்து பார்வையற்ற கண்களும் உடைய இந்த முதுமைக்காட்சியை இதற்கு முன்பு கண்டிராத சித்தார்த்த குமாரன், தேர்ப்பாகனை விளித்து, “சன்னா! இது என்ன? அவர் ஏன் இப்படி இருக்கிறார்?” என்றுகேட்டார்.

“அவர் ஒரு கிழவர்” என்றான் சன்னன்

“கிழவர் என்றால் என்ன?”

“கிழவர் என்றால் இளமை நீங்கிய முதியவர். இவருடைய உடம்பும் பொறிகளும் புலன்களும் வலிமை குன்றிவிட்டன. இளமையோடிருந்த இவர் நரைத்துத் திரைத்து மூப்படைந்து தள்ளாதவராயிருக்கிறார். மரணம் இவரை எதிர்நோக்கியிருக்கிறது”

“கிழத்தனம் இவருக்கு மட்டுமா? எல்லோருக்கும் உண்டா?”

“எல்லோருக்கும் கிழத்தனம் உண்டு. இளைஞர் எல்லோரும் முதியவராக வேண்டியவரே.”

“நானும் கிழவன் ஆவேனா?”

“ஆமாம், சுவாமி! ஏழை பணக்காரன், அரசன் ஆண்டி எல்லோருக்கும் கிழத்தனம் உண்டு.”

இதைக்கேட்ட சித்தார்த்த குமாரனுக்கு மனத்தில் பல சிந்தனைகள் தோன்றின.

இது போதும். தேரை மாளிகைக்குத் திருப்புக என்று கூறினார்.

சித்தார்த்த குமரன் மாளிகையையடைந்ததும் தான்கண்ட காட்சியைப்பற்றித் தனக்குள்ளே ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.

சுத்தோதன அரசர் தேர்ப்பாகனை அழைத்து “குமரன் சந்தோஷமாகக் காட்சிகளைக் கண்டாரா?” என்று கேட்டார். தேர்ப்பாகன் குமரன் கண்டதையும் அவர் தன்னைக்கேட்ட கேள்விகளையும்தான் பதில் சொன்னதையும் விவரமாகக் கூறினான்.

சுத்தோதன அரசர், தன் மகன் சித்தார்த்தரை உலகஇன்பத்தில் பற்றுக் கொள்ளும்படிச் செய்யஎண்ணி மேலும் அழகான இளங்கன்னியரை அவருடைய ஊழியத்தில் அமர்த்தினார்.

சில காலஞ்சென்றபிறகு சித்தார்த்த குமரன் மறுபடியும் பூஞ்சோலைக்குப் போய் உலாவ விரும்பினார். அவர் தேர்ப்பாகனை அழைத்துத் தேரைக் கொண்டுவரச் சொல்லி அதில் அமர்ந்துசென்றார். செல்லும் வழியில் இதுவரையில் கண்டிராத ஒரு காட்சியைக் கண்டார். நோயாளி ஒருவர் நோயினால் வருந்தி, இருந்த இடத்திலேயே மலமூத்திரங்களைக் கழித்து அதிலே விழுந்து எழுந்திருக்க முடியாமல் இருக்க, அவருடைய சுற்றத்தார் அவரைத் தூக்கிநிறுத்திக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட கௌதமர் சன்னனிடம், இது என்ன? இவர் ஏன் இப்படி இருக்கிறார்? என்று கேட்டார்.

“இவர் ஒரு நோயாளி” என்றான் சன்னன்.

“நோய் என்றால் என்ன?”

“இந்த நோயிலிருந்து இவர் பிழைக்கமாட்டார்”

“நோயிலிருந்து மீள முடியாதா? எனக்கும் நோய் வருமா?”

“எல்லோருக்கும் நோய் வரும். நோயிலிருந்து மீள முடியாது”

கிழத்தனமும் நோயும் மனிதருக்கு வரும் என்பதை அறிந்தபோது சித்தார்த்த குமாரனுக்குச் சிந்தையில் ஏதோ எண்ணம் தோன்றிற்று. அவர் ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு மாளிகைக்குத் திரும்பிச்சென்றார். சுத்தோதன அரசன் தேர்ப்பாகனை அழைத்துக் குமரன் உலாவச்சென்றதைப் பற்றி விசாரித்தார். சன்னன் வழியில் நடந்ததைக் கூறினான்.

சுத்தோதனர் தம்முடைய குமாரனின் மனத்தை உலகஇச்சையில் ஈடுபடும்படிச் செய்ய மேலும், அழகுள்ள இளமங்கையரைச் சித்தார்த்தரின் ஊழியத்தில் அமர்த்தினார்.

சில காலத்துக்குப் பிறகு சித்தார்த்த குமரன் மீண்டும் பூஞ்சோலைக்குப்போய் உலாவிவர விரும்பினார். சன்னன் கொண்டுவந்து நிறுத்தின தேரில் ஏறி உலாவப் போனார். போகும் வழியிலே ஓரிடத்தில் சிலர் கூட்டமாக இருந்து ஒரு பிணத்தைக் கொளுத்துவதற்கு ஈமவிறகை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சித்தார்த்தர் அதனைக் கண்டு இவர்கள் என்னசெய்து கொண்டிருக்கிறார்கள் என்று சன்னனைக் கேட்டார்.

“யாரோ ஒருவரின் வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் இறந்துபோனார். அவரை அடக்கம் செய்கிறார்கள்” என்று கூறினான் சன்னன். தேரை அருகில் ஓட்டச் சொன்னார். தேரும் அருகில் சென்றது. கௌதமர் பிணத்தைப் பார்த்தார்.

“இறப்பு என்றால் என்ன? வாழ்க்கை முடிந்துவிட்டது என்றால் என்ன?”

“தாய் தந்தையரும் உற்றார் உறவினரும் இனி அவரைப் பார்க்கமுடியாது. இறந்து போனவரும் தன் உற்றார் உறவினரைப் பார்க்கமுடியாது” என்று சன்னன் கூறினான்.

“சாகாமலிருக்க முடியாதா? நானும் இறந்து விடுவேனா? தாய் தந்தையரையும் உற்றார் உறவினரையும் நான் பார்க்க முடியாமலும் அவர் என்னைப் பார்க்க முடியாமலும் இறந்துபோகும் நிலை வருமா?”

“ஆம். சுவாமி. சாவு எல்லோருக்கும் உண்டு” என்றான் சன்னன்.

தேரை மாளிகைக்குத் திருப்பச்சொல்லிச் சித்தார்த்த குமரன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தார். சுத்தோதன அரசர் சன்னன் மூலமாகச் செய்தியையறிந்தார். சித்தார்த்தருக்குத் துறவு எண்ணம் வராதபடித் தன் குமரனின் வாழ்க்கையில் இன்பங்களையே காணும்படி அவர் பல ஏற்பாடுகளைச் செய்தமைத்தார்.

சிலகாலஞ் சென்றபிறகு மீண்டும் பூஞ்சோலைக்குப்போகச் சித்தார்த்த குமரன் விரும்பினார். சன்னன் அவரைத் தேரில் அமர்த்தித் தேரைச் செலுத்திக்கொண்டு போனான். வழியிலே ஒரு துறவி தலையை மழித்து மஞ்சள் ஆடை அணிந்துகொண்டு ஓரிடத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்டார். “இவர் ஏன் இப்படி இருக்கிறார்?” என்று தேர்ப்பாகனைக் கேட்டார்.

“இவர் ஒரு துறவி - சன்னியாசி?!” என்று கூறினான் சன்னன்.

“இவர் என்ன செய்கிறார்?”

“பிறவித் துன்பத்தை நீக்கி மோட்சம் அடைவதற்கு இவர் தியானம் செய்து கொண்டு இருக்கிறார்?” என்று கூறினான் சன்னன்.

சித்தார்த்த குமரன் சிந்தனையில் ஆழ்ந்தார். மாளிகைக்குச் சென்றும் அவர் சிந்தனையில் மூழ்கியிருந்தார்.

சுத்தோதன அரசர் தன் மகனான சித்தார்த்தரை உலக இன்பத்தில் ஈடுபடச்செய்து அவரைச் சக்கரவர்த்தியாக்க எண்ணி எத்தனையோ இன்ப சுகங்களை அவருக்கு அளித்தும் அவை யாவும் பயன்படவில்லை. சித்தார்த்த குமரனுக்கு உலக வாழ்க்கையில் உள்ள துன்பங்களே தெரிந்தன. இன்பமான சுகபோகங்களிலேயே சூழப்பட்டிருந்தும் அவருடைய மனம் இன்பசுகங்களை நாடவில்லை. துன்பம் இல்லாத ஒரு நிலையைக்காண அவர் எண்ணினார்.

சித்தார்த்தரின் சிந்தனை

தாம் கண்ட இக்காட்சிகளைப் பற்றிச் சித்தார்த்தக் குமாரன் தமக்குள் இவ்வாறு எண்ணினார் : மனிதராகப் பிறந்த மக்கள் மூத்துக் கிழவராகி நரை திரையடைகிறார்கள். முதுமையடைந்த இவர்களை மக்கள் இகழ்ந்து வெறுக்கிறார்கள். எல்லோருக்கும் நரை திரை மூப்பு வருகிறது. நானும் நரை திரை மூப்பு அடைவேன். ஆகையால் கிழத்தன்மையைக் கண்டு அருவெறுப்புக் கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் நினைத்தபோது அவருக்கிருந்த யௌவனமதம் (இளமையைப் பற்றிய பற்று) அவர் மனத்தைவிட்டு நீங்கியது.

பிறகு நோயாளியைப் பற்றி நினைத்தார். நோயும் பிணியும் எல்லோருக்கும் வருகின்றன. பிணியாளர்களைக் கண்டால் மற்றவர்கள் வெறுப்படைகிறார்கள். அவ்வாறு வெறுப்பது தவறு. நானும் நோயி லிருந்தும் பிணிகளிலிருந்தும் தப்ப முடியாது என்று எண்ணினார். அப்போது அவருக்கிருந்த ஆரோக்கிய மதம் (உடம்பைப் பற்றிய பற்று), அவரை விட்டு நீங்கியது.

பின்னர்ப் பிணத்தைப் பற்றி நினைத்தார். சாவு எல்லோருக்கும் ஏற்படுகிறது. ஆனால், அதை உணராதவர்கள் பிணத்தைக் காணும்போது அதை வெறுத்து அருவெறுப்படைகிறார்கள். அவ்வாறு வெறுப்பது தவறு. சாவிலிருந்து ஒருவரும் தப்பமுடியாது. எனக்கும் மரணம் உண்டு என்று எண்ணியபோது, அவருக்கிருந்த ஜீவித மதம் (வாழ்க்கைப் பற்று) அவரைவிட்டு அகன்றது.

கடைசியாகச் சந்நியாசியைப் பற்றி யோசித்தார். தீய எண்ணங்களும் தீய செயல்களும் இல்வாழ்க்கையினால் ஏற்படுகின்றன. இல்லறத்தில் உயரிய எண்ணங்களுக்கும் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் இடமில்லை. உயர்ந்த எண்ணங்களுக்கும் உயர்ந்த ஒழுக்கத்திற்கும் துறவறம் நல்லது, என்று நினைத்து அதில் விருப்பங்கொண்டார்.

இவ்வாறு தமக்குள் எண்ணியவண்ணம் சித்தார்த்த குமாரன் பூஞ்சோலையை யடைந்தார். அங்குப் பலவித இனிய இயற்கைக் காட்சிகளைக் கண்டார். மாலை நேரமானவுடன் தெளிந்த நீருள்ள குளத்திலே நீராடினார். நீராடிய பிறகு ஒரு கற்பாறையில் அமர்ந்து தமது உடம்பை நன்றாக அலங்காரம் செய்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார். அப்போது பணிவிடையாளர் வந்து அவரைத் தேவேந்திரன்போல அலங்காரம் செய்தனர். ஆனால், இல்லற வாழ்க்கையின் துன்பங்களும் துறவற வாழ்க்கையின் மேன்மைகளும் அவர் மனத்தைவிட்டு அகலாமல் இருந்தன. அவர் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது.

அரண்மனை திரும்பியது

தேவேந்திரனைப் போன்று அலங்கரிக்கப்பட்ட சித்தார்த்த குமாரன் பூஞ்சோலையிலிருந்து அரண்மனைக்குப் புறப்பட்டார். இன்னிசை முழங்க, பரிவாரங்கள் புடைசூழ அவர் தேரில் அமர்ந்தார். அவ்வமயம் சுத்தோதன அரசரால் அனுப்பப்பட்ட ஒருவர் வந்து, யசோதரைத் தேவியாருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்த செய்தியைத் தெரிவித்தார். இதைக்கேட்ட இவர், தாம் செய்ய நினைத்திருக்கும் முயற்சிக்கு ஒரு தடைபிறந்தது என்று மனதில் நினைத்து, “எனக்கு ஒரு இராகுலன் பிறந்தான்” என்று தமக்குத்தாமே கூறிக்கொண்டார். இதைக்கேட்டு வந்த ஆள் சுத்தோதன அரசரிடம்போய் இவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டதைத் தெரிவித்தார், அதைக்கேட்ட சுத்தோதன அரசர், சித்தார்த்த குமரன் கருதிய பொருளை அறியாமல், தமது பேரனுக்கு இராகுலன் என்று பெயர் சூட்டினார்.

சித்தார்த்த குமாரன் தேரில் அமர்ந்து ஊர்வலமாகத் தமது அரண்மனைக்குத் திரும்பி வந்தார். வரும்வழியில் ஆடவரும்மகளிரும் தத்தம் இல்லங்களில் இருந்து இவரைக் கண்டுமகிழ்ந்தார்கள். ஒரு மாளிகையின் மேல்மாடியில் இருந்த கிரிசா கௌதமி என்பவள் சித்தார்த்த குமாரனைக் கண்டுமகிழ்ந்து இவ்வாறு பாடினாள் :

“நிப்புதா நூன ஸா மாதா
நிப்புதோ நூன ஸோ பிதா
நிப்புதா நூன ஸா நாரீ
யஸ்ஸா யங் ஈதிஸோ பதி”

இவரை மகனாகப்பெற்ற தாய் மகிழ்ச்சியுள்ளவள். இவரை மகனாகப்பெற்ற தந்தை மகிழ்ச்சியுள்ளவர். இவரைக் கணவனாகப்பெற்ற மங்கை மகிழ்ச்சியுள்ளவள் என்பது இப்பாட்டின் கருத்தாகும்.

இவ்வாறு கிரிசா கௌதமி பாடியதைக்கேட்ட சித்தார்த்த குமாரன், உலகத் துன்பங்களினின்று விடுதலைபெறக் கருதிக்கொண்டிருப்பவர் ஆதலின், இப்பாடலுக்கு இவ்வாறு வேறுபொருள் கொண்டார்; காமம், பகை, இறுமாப்பு, பொய்க்காட்சி முதலிய நிப்புதம் (தீ) அவிந்தால், நிர்வாண மோக்ஷம் என்னும் இன்பம் உண்டாகும். இவ்வாறு தமக்குள் வேறுபொருள் கருதிய இவர், இத்தகைய நினைப்பை உண்டாக்கிய கிரிசா கௌதமிக்கு நன்கொடை வழங்கக்கருதி, தமது கழுத்தில் அணிந்திருந்த ஆயிரக்கணக்கான பொன்மதிப்புள்ள முத்து மாலையைக் கழற்றி ஒரு ஆளிடம் கொடுத்து அவளுக்கு வழங்கினார். சித்தார்த்த குமாரன் அனுப்பிய முத்துமாலையை ஏற்றுக்கொண்ட கௌதமி, அவர் தன்னைக் காதலித்ததாகக் கருதிக் கொண்டாள்.

அந்த இரவு

பூஞ்சோலையிலிருந்து நகர்வலமாக அரண்மனைக்கு வந்த சித்தார்த்த குமாரன் அரண்மனையை யடைந்து தேரை விட்டிறங்கி அரண்மனைக்குள் சென்று ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது, தேவலோகத்து மங்கையரைப் போன்று அழகு வாய்ந்த பெண்கள், நல்ல ஆடையணிகளை அணிந்து கண்ணையும் கருத்தையும் கவரும் இனியதோற்றம் உடையவராக அவ்விடம்வந்து இசைக் கருவிகளை வாசித்தும் நடனம் ஆடியும் இசை பாடியும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினார்கள். ஆனால், மக்கள் வாழ்க்கையின் துன்பங்களைக்கண்டு வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டிருந்த சித்தார்த்த குமாரனுக்கு இவர்கள் நிகழ்த்திய ஆடல் பாடல்களில் மனம் செல்லவில்லை. இவர்களின் ஆடல்கள் அவர் கண்ணைக் கவரவில்லை. இனிய பாடல்கள் செவிக்கு இன்பம் ஊட்டவில்லை. ஆகவே, சித்தார்த்த குமாரன் உலக வாழ்க்கையை வெறுத்தவராய்க் கட்டிலிற்படுத்து உறங்கிவிட்டார். அரச குமாரன் கண்ணுறங்கியதைக் கண்டு இளமங்கையர் தாம் நிகழ்த்திய ஆடல் பாடல்களை நிறுத்தி, இசைக் கருவிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அவ்விடத்திலேயே தாங்களும் உறங்கிவிட்டார்கள்.

எல்லோரும் கண்ணுறங்கும் நள்ளிரவிலே சித்தார்த்த குமாரன் விழித்தெழுந்தார். மகளிர் கண்ணுறங்குவதைக் கண்டார். அந்தக் காட்சி அவருக்கு வெறுப்பை உண்டாக்கிற்று. சில மகளிர் வாயைத் திறந்துகொண்டு உறங்கினர். சிலர் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. சில மகளிர் வாய்பிதற்றினர். அவர்களின் கூந்தல் அவிழ்ந்தும் ஆடைகள் விலகியும் கிடந்தன. இந்த விகாரக் காட்சிகளைக் கண்ட சித்தார்த்த குமாரன் மனவெறுப்புடன் தனக்குள் இவ்வாறு எண்ணினார்: சற்று முன்பு இவர்கள் தேவலோகப் பெண்களைப்போன்று காணப்பட்டனர். இப்போது வெறுக்கத்தக்கக் காட்சியளிக்கின்றனர். சற்று முன்பு இந்த இடம் தெய்வலோகம்போன்று இருந்தது. இப்போது இடுகாடு போலக் காணப்படுகிறது. உலகம் தீப்பிடித்தெரியும் வீடுபோன்று காணப்படுகிறது. இவ்வாறு அவர் தமக்குள் எண்ணிக்கொண்டபோது இப்பொழுதே இல்லற வாழ்க்கையைவிட்டு விலகிப்போக வேண்டும் என்னும் எண்ணம் அவருக்கு உண்டாயிற்று.

உடனே சித்தார்த்த குமாரன் கட்டிலை விட்டெழுந்து மண்டபத்தைக்கடந்து வாயில் அருகிலே வந்து, “யார் அங்கே” என்று பணியாளர்களை விளித்தார். “அரசே, அடியேன் சன்னன்” என்று கூறித் தேர்ப்பாகன் அவரை வணங்கிநின்றான். “சன்னா! இப்பொழுது நான் அரண்மனையை விட்டுப் புறப்படப்போகிறேன். குதிரையை இங்குக் கொண்டுவா” என்று கட்டளையிட்டார். சன்னன் தலைவணங்கிக் குதிரைக் கொட்டிலுக்குச் சென்றான்.

சித்தார்த்த குமாரன், தமது குழந்தையைப் பார்க்க எண்ணி, யசோதரை அரசியார் உறங்குகிற அறையை நோக்கிச்சென்றார். சென்று, ஓசைபடாமல் மெல்லக் கதவைத் திறந்தார். மங்கலான ஒளியைக் கொடுத்துக்கொண்டு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. விளக்குகளுக்கு இடப்பட்டிருந்த எண்ணெயிலிருந்து இனிய நறுமணம் அவ்வறையில் கமழ்ந்து கொண்டிருந்தது. அவ்வறையில் இருந்த கட்டிலில், மல்லிகைப் பூக்களைத் தூவிய மெல்லிய பஞ்சணையின் மேலே யசோதரை அரசியார், தமது குழந்தையை வலது கையினால் அணைத்துக்கொண்டு கண்ணுறங்கிக் கொண்டிருந்தார்.

சித்தார்த்த குமாரன் அறைக்குள்ளே செல்ல வாயில்நிலையின் மேல் அடி வைத்தார். அப்போது அவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் உதித்தது. “உள்ளேபோய்த் தேவியின் கையை விலக்கிக் குழந்தையைப் பார்ப்போமானால், தேவி விழித்துக் கொள்வாள். அதனால், என்னுடைய துறவுக்குத் தடை ஏற்படக்கூடும். ஆகவே, நான் சென்று புத்த நிலையையடைந்த பிறகு என் மகனை வந்து காண்பேன்” என்று தமக்குள் எண்ணினார்.

சித்தார்த்தர் வெளியேறியது

உலகத்தின் நான்கு திசைகளிலும் காவல்பூண்ட சதுர் மகாராஜிக தேவர்கள், சித்தார்த்த குமாரன் இல்லறத்தைவிட்டுப் போகிறதையறிந்து, தமது பரிவாரங்களுடன் கபிலவத்து நகரத்துக்கு வந்து ஒருவரும் அறியாதபடி அரண்மனையை யடைந்தார்கள். கிழக்குத் திசைக்குக் காவல்பூண்ட திருதராஷ்டிரன் என்னும் தேவன், தன்னைச் சேர்ந்த கந்தர்வ பரிவாரங்களுடன் இன்னிசை பாடிக்கொண்டு ஆகாயவழியே வந்து மும்முறை அரண்மனையை வலம்வந்து தரையில் இறங்கிச் சித்தார்த்தகுமாரன் இருந்த பக்கமாகத் தலைகுனிந்து கைகூப்பி வணங்கினான். தெற்குத் திசைக்குக் காவல்பூண்ட விரூதாக்ஷன் என்னும் தேவன், தனது கும்பாண்டர் என்னும் பரிவாரங்களுடன் இனிய நறுமணப் பொருட்களை ஏந்திக்கொண்டு ஆகாயவழியே வந்து அரண்மனையை மும்முறைவலம் வந்து தரையில் இறங்கி அரச குமாரனை வணங்கிநின்றான். மேற்குத் திசைக்குக் காவல் பூண்ட விருளாக்ஷன் என்னும் தேவன், தனது பரிவாரங்களாகிய இயக்கருடன் தீவட்டி விளக்கு முதலியவைகளை ஏந்திக்கொண்டு ஆகாயவழியே வந்து அரண்மனையை வலமாகச்சுற்றித் தரையில்இறங்கி வணங்கிநின்றான். வடக்குத் திசைக்குக் காவல்பூண்ட வைசிரவணன் என்னும் தேவன், தனது பரிவாரங்களாகிய நாகர்களுடன் நவரத்தினங்களையும் அணிகலன்களையும் ஏந்திக்கொண்டு வந்து அரண்மனையை வலமாகச் சுற்றித் தரையில் இறங்கி வணங்கிநின்றான்.

பின்னர்த் தேவலோகத்திலிருந்து சக்கரன் (இந்திரன்), தேவர்கள் புடைசூழத் தேவலோகத்து மலர்களையும் நறுமணப் பொருள்களையும் நவமணி மாலைகளையும் ஏந்திக்கொண்டு விண்ணிலிருந்து இறங்கி மும்முறை வலம்வந்து சித்தார்த்த குமாரனைக் கைகூப்பி வணங்கிநின்றான்.


இல்வாழ்க்கையின் அன்புப் பிடியினின்று மீள்வது அருமையாயினும் சித்தார்த்த குமாரன், எல்லா மக்களும் உய்வதற்கு நன்னெறியைக் காணவேண்டும் என்னும் பெருங்கருணையினாலே உந்தப்பட்டு, மகனைக்காண அறைக்குள்ளே செல்லாமல் வெளியே வந்துவிட்டார். தாம் துறவுகொண்டால் தமது சுற்றத்தாரும் மற்றவரும் மனம் வருந்துவார்கள் என்றாலும், தாம் துறவுகொள்வது உலக மக்களின் நன்மைக்காகவாதலின் இவர்களின் வருத்தத்தைப் பொருட்படுத்தாமல் உப்பரிகையினின்றும் இறங்கிக் கீழேவந்தார். பிரயாணத்திற்கு ஆயத்தப்படுத்திய கந்தகன் என்னும் குதிரையுடன் சன்னன் வாயிலில் காத்திருந்தான். சித்தார்த்த குமரன் குதிரைமேல் அமர்ந்து, சன்னனைக் குதிரையின் வாலைப் பிடித்துக்கொள்ளச் சொல்லித் தென்கிழக்குப் பக்கமாகக் குதிரையைச் செலுத்தினார்.

அடிக்குறிப்புகள்

1. அநாகாமிக பிரமதேவர் - தூய மனமுடைய மகாபிரமர்

2. சதுர் மகாராஜிக தேவர் - நான்கு திக்குப்பாலகர். திருதராட்டிரன், விருபாக்கன், விருளாக்ஷன், வைசிரவணன் என்பவர்.

3. போதிசத்துவர் புத்தரான பிறகு, நாலக முனிவர் இமயமலையிலிருந்து வந்து அவரிடம் ஞானோபதேசம்பெற்று மீண்டும் இமயமலைக்குச் சென்றார். நாலக முனிவருக்குப் புத்தர் அருளிய உபதேசங்களைச் சூத்திர நிபாதத்தின் நாலகச் சூத்திரங்களில் காணலாம்.

4. அர்த்தசித்தி - உயர்ந்த மேன்மையைக் கொடுப்பது.

5. விம்பசார காவியம்

6. இவரைச் சர்வமித்திரர் என்றும் கூறுவர்.