உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/காக்கைகள் வாழ்க

விக்கிமூலம் இலிருந்து

எட்டு மணியும் அடித்தது.
இன்னும் தனது படுக்கையில்
குட்டி யப்பன் தூங்கினன்,
குறட்டை விட்டு அருமையாய்.

காகா, காகா!’ சத்தமோ
காதைத் துளைக்க லானது.
ஆஹா! ஊஹூ!’ என்றவன்
ஆத்தி ரத்தில் விழித்தனன்.

கண்ணை விழித்துப் பார்க்கையில்
காகக் கூட்டம் ஒன்றினைக்
கண்டான், தன்னைச் சுற்றிலும்
கடிக்க லானான், பற்களை.

தூக்கந் தன்னைக் கெடுக்கவா
துணிந்து வந்தீர்?’ என்றதும்
காக்கை யாவும் ஒன்றுபோல்
‘காகா, காகா’ என்றன.


கோபம் கொண்டு அவனுமே
குதித்துக் கொண்டு எழுந்தனன்.
காகா, காகா கா’வெனக்
கடுமை யாகக் கத்தின.

நாகம் போலச் சீறினன்;
நாயைப் போலப் பாய்ந்தனன்.
காகா’ என்றே திரும்பவும்
கத்திக் கொண்டே எழும்பின.

வேக மாக அவனுமே
விரட்ட எண்ணி ஓடினன்.
காகா காகா கா’வெனக்
கதறிக் கொண்டே பறந்தன.

விரைந்தே அவனும் அவைகளை
விரட்டிக் கொண்டே ஓடினன்.
துரத்திச் சென்றான். ஆதலால்,
சோம்பல் பறந்து போனதே!

தூக்கம் தன்னைப் போக்கவும்,
சுறுசு றுப்பாய் ஓடவும்
ஊக்கம் தந்த காக்கைகள்
உலகில் வாழ்க, வாழ்கவே!