உள்ளடக்கத்துக்குச் செல்

மாஜி கடவுள்கள்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




முதற் பதிப்பு: அக்டோபர், 1953.

விலை சாதா பதிப்பு ரூ. 3-0-0
அட்டை பயிண்டு ரூ. 3-8-0

அட்டைப் படம்

மெரோடாக் டியாமட் தேவியைத் தாக்கச்
செல்லும் காட்சி.பக்கம்-191.

அண்ணாவின் நூல்கள்

மாஜி கடவுள்கள்
பார்வதி பி.ஏ.
காதல் ஜோதி
ரங்கோன் ராதா
வள்ளிநாயகியின் கோபம்
தமிழகம்
சூழ்நிலை
சாது
ஜெபமாலை
மக்கள் தீர்ப்பு
வாழ்க்கைப் புயல்
நூல் நிலையங்கள்
சொல்லும் பயனும்


நவபாரத் பிரஸ், 2/141 பிராட்வே, சென்னை-1.

பதிப்புரை

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதுதான் தமிழர் நெறி—தமிழரின் கடவுட் கொள்கை. இதற்கு மாறாக நூற்றுக்கணக்கான தெய்வங்களும் அவை பற்றி ஆயிரக்கணக்கான புராணங்களும் கட்டுக் கதைகளும் உலவுகின்றன நம் நாட்டில்.

இவற்றைக் கட்டுக்குலையாது கட்டிக் காப்பதற்கு, மந்திரிகள், மடாதிபதிகள், மதத் தரகர்கள் முதலிய பல தரத்தினர் முயன்றபடி உள்ளனர்.

இந்தப் புராணப் புளுகுகளைத் தெய்வத்தன்மை வாய்ந்தவை என்று சாதித்திட ஒரு புரோகிதக் கூட்டமும், அவற்றைக் கற்பனை நயமும் தத்துவ விளக்கங்களும் நிறைந்த இலக்கியங்கள் என்று கூறி, அப்படிப்பட்ட உயர்ந்த கற்பனைத்திறனை உலகில் வேறு எங்கும், எந்த நாட்டிலும் காணுதல் அரிது என வாதிட்டிட ஒரு கற்றறிந்தார் கூட்டமும் இன்றும் இங்குள்ளன.

கடலுக்கும் காற்றுக்கும் நம் பரதகண்டத்தில் மட்டுந்தான் கடவுளர் இருந்தனரா? இங்கு மட்டுமே அவர்களுக்குப் புராணங்களும் புனித ஆலயங்களும் பூசாரிகளும் இருந்தனரா? நம் நாட்டவரின் கற்பனைத் திறனைப்போல் வேறு எங்குமே கண்டதில்லை என்பதும் உண்மைதானா?

“இல்லை” என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. கிரேக்க நாட்டிலே, ரோமிலே, பாபிலோனிலே, பிரிட்டனிலே, ஈஜிப்ட்டிலே இன்னும் உலகின் பற்பல பாகங்களிலே நம் தெய்வங்களுக்கு எந்த வகையிலும் எண்ணிக்கையிலும், ஆற்றலிலும் குறைவில்லாத தெய்வங்கள் நிறைந்திருந்தன என்று எடுத்துக் காட்டுகிறார், மாஜி கடவுள்கள் என்ற இந்த நூலில். ஒரு காலத்திலே அவைகளுக்கும் வானளாவிய ஆலயங்கள் இருந்தன; கோலாகலமான பூஜைகள் இருந்தன. ஹோமர் போன்ற பெருங்கவிகள் பாடும் பெருமையையும் அவை பெற்றிருந்தன.

கண்ணன், கந்தன், வருணன், வாயு, சூரியன், சந்திரன் போன்ற தெய்வக் கதைகளுடன், பல்வேறு நாட்டுக் கடவுளரின் கதைகள் ஒத்திருப்பதையும், அந்நாட்டு மக்களின் கற்பனைத்திறன் எந்த அளவிலும் நமது கற்பனைத் திறனுக்குக் குறைந்தது அல்ல என்பதையும், தத்துவ விளக்கத்திற்கும் அவர்கள் கதையிலே பஞ்சமில்லை என்பதையும் “மாஜி கடவுள்கள்” விளக்கிக் காட்டுகிறது.

ஒரு காலத்திலே மக்களால் போற்றிப் புகழப்பட்ட கடவுள்கள் அந்த நாடுகளிலே இன்று இல்லை. அவைகள் மாஜிகளாக்கப்பட்டுச் சிற்பங்களாகச், சித்திரங்களாகக், காட்சிப் பொருள்களாகக், காட்சிச் சாலைகளிலே விளங்குகின்றன. ஆனால் நமது நாட்டிலோ, பல லட்சங்கள் செலவில், புதிய புதிய கோயில்கள், கும்பாபிஷேகங்கள், நாள்தோறும் பாலாபிஷேகம், பள்ளியறைக் காட்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கினறன!

இந்நிலை நாட்டிற்கு நல்லதா, இந்தத் தீங்கைப் போக்கவேண்டாமா என்ற அண்ணாவின் அரிய சிந்தனையின் பயன் இந்த “மாஜி கடவுள்கள்”. உலகில் மக்கள் அறிவு விளக்கம் பெறாது இருந்த நாளில், இயற்கையின் தன்மை அறியாது, அவற்றைக் கண்டு அஞ்சிக்கிடந்த காலத்தில், பூஜாரிகளும், புராணிகர்களும் தோன்றி, மக்களின் அறியாமையையும் அச்சத்தையும் பயன்படுத்திக் கொண்டு தெய்வங்களையும் தெய்வக் கதைகளையும் படைத்தனர். இடிக்கும் மின்னலுக்கும் கடவுள், எண்ணற்ற இயற்கைச் சக்திகளுக்குக் கடவுள், அந்தக் கடவுள்களுக்குப் பெண்டு, பிள்ளை, அவர்களுக்குள்ளே போட்டி பூசல் போர் என்ற ஆபாசக் கதைகள் முளைத்தன.

இந்நூலில் கடவுளர் பலரைச் சித்தரித்திருக்கிறார் அண்ணா. அவைகளிலே தந்தையைக் கொன்ற கடவுள், தாயைத்-தங்கையைத் தாரமாக்கிக்கொண்ட கடவுள், காம விகாரம் பிடித்த கடவுள், பஞ்சமா பாதகங்களை அஞ்சாது செய்த கடவுள்–இவைபோன்று இன்னும் பல வேடிக்கையான கடவுளர்களைக் காண்பீர்கள்.

இந்த ஆபாசங்களும் அபத்தங்களும் பல நூற்றாண்டுகள் வரை புராணிகர்களாலும் பூசாரிகளாலும் வளம் பெற்று வளர்ந்தன. மக்கள் அறிவு விளக்கம் பெறப்பெற இவைகளிலுள்ள பொய்மையினை உணரலாயினர், சிந்திக்கவும் செய்தனர். உண்மை உணர்ந்த பலர் வெளியில் சொல்லப் பயந்தனர் என்றாலும், ஒரு சிலர் அஞ்சாது கூறி, அதனால் அந்நாளில் நாடு கடத்தப்படுதல், சிறைக்குள் தள்ளப்படுதல் முதலிய பல கொடுமைகளுக்கு ஆளாயினர்.

அப்படிப்பட்ட காலத்தில் தோன்றியவர்தான் கிரேக்க நாட்டு தத்துவஞானி சாக்ரட்டீஸ். கடவுள் கதைகளின் ஆபாசங்களையும், எத்தர்களின் புரட்டுக்களையும் எடுத்துக் கூறினார் அவர். அதன் பயனாக நாத்திகன் என்ற குற்றம் சாட்டப்பட்டு விஷமூட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்.

சாக்ரட்டீஸ் இறந்தார். அவர் கொள்கை இறக்கவில்லை; மாறாக ஆக்கம் பெற்றது. அவர் மறைவுக்குப் பின்னர் அவர் கொள்கையைப் பலர் சிந்தித்தனர். சிலர் வாதிட்டனர். அதன் பலன், ஒருகாலத்தில் கோலாகலமாக வீற்றிருந்த பல கடவுள்களும் மாஜிகளாக்கப்பட்டு, காட்சிச்சாலைக்கு அனுப்பப்பட்டன. புராணப் புளுகுகள் புண்ணிய கதைகள் அல்ல என்ற உண்மை தெளிவாயிற்று. “இறைவன் ஒருவன், அவன் உருவமற்றவன், அவன் அருள் பெறப் பொய்மை நிறைந்த பூசாரிகளின் தரகு தேவையில்லை, தூய்மையும் நல்லொழுக்கமுமே போதும்” என்ற அறிவு மலர்ந்தது அங்கே.

நம் நாட்டிலும் கடவுளர் கதைகளின் ஆபாசப் போக்கினைக் கண்டு சிந்தித்து மக்களுக்கு எடுத்துக் கூறிய அறிஞர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோன்றினர்.

“நட்டகல்லைத் தெய்வமென்று
       நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணென்று
      சொல்லுமந் திரமேதடா
நட்டகல்லும் பேசுமோ
       நாதனுள் ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம்
       கறிச்சுவை யறியுமோ?”

என்ற பகுத்தறிவுப் பாடல் எழுந்தது ஆனாலும் அந்த உயர்ந்த நெறியைப் பரவவிடவில்லை இந்த நாட்டுச் சுயநலவாதிகள். இந்நாட்டு மக்களுக்குப் புராணபோதை நன்கு ஊட்டப்பட்டது. இலக்கியம், சமயம், சாத்திரம், பழக்கவழக்கம் என்ற போர்வையில் அந்தக் கேடு நிறைந்த பழமை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையை மாற்றி மக்களின் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்க, அரசியல், பேச்சு, எழுத்து, நாடகம், சினிமா என்ற பல்வேறு துறைகளிலும் பணிபுரிகின்றார் அண்ணா.

“மாஜி கடவுள்கள்”, கடவுளர்கள் பற்றி நமக்குத் தரப்பட்டுள்ள கருத்துக்கள் தவறானவை என்பதை விளக்குகிறது. கடவுள் தன்மை பற்றி நாம் நன்கு சிந்தித்து நல்லதொரு முடிவு காண உதவுகிறது. ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்ற தமிழரின் செந்நெறி பரவ வழிவகுக்கிறது.

இதில் ஒருசில கட்டுரைகள் “திராவிட நாடு” இதழில் வெளி வந்தவை; பல புதிதாக எழுதிச் சேர்க்கப்பட்டவை. சீனம் போன்ற இன்னும் சில நாட்டுக் கடவுளர்கள் பற்றியும் எழுதிச் சேர்க்க அண்ணா நினைத்திருந்தார். அதற்குள்ளாக அரசாங்க அழைப்பு வந்ததால், வெஞ்சிறை ஏகினார், அச்சுத்தாள்களைக்கூட அவர்கள் பார்த்துப் பிழை திருத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அண்ணா சிறையில், மக்களிடையே இருந்து பிரிக்கப்பட்டுள்ள நிலையில். ஆனாலும் அவருடைய கொள்கைகள், பட்டி தொட்டிகளிலும், அவர்தம் அருமைத் தம்பிமார்களால் பரப்பப்படுகின்றன. அவர்களின் நூல்கள் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஊக்கமும் உணர்ச்சியும் அளித்து வருகின்றன. அந்தப் பணியிலே “மாஜி கடவுள்களும்” ஈடுபடுகிறது.

‘மாஜி கடவுள்கள்’ அண்ணா கருதிய பணியைத் தமிழகத்தில செய்யும் என்று நம்புகிறோம்.

இந்நூலையும், இன்னும் பல நூல்களையும் வெளியிடும் வாய்ப்பினை எங்களுக்கு அளித்து வருகின்றமைக்கு அண்ணா அவர்களுக்கு எங்கள் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்குகின்றோம்.

சென்னை.

க. அ. செல்லப்பன்.

27—10—53

உள்ளடக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=மாஜி_கடவுள்கள்&oldid=1790527" இலிருந்து மீள்விக்கப்பட்டது