மாஜி கடவுள்கள்/அதீனே
- முழுமுதற் கடவுள் ஜூவஸ் தேவனுக்கு ஒருநாள் தாங்கமுடியாத மண்டைக் குடைச்சல்!! மண்டைக் குடைச்சலால் அவதிப்பட்ட மகேசனுக்கு, மருந்திட தேவர் பலர் முனைந்தனர்—யாராலும் முடியவில்லை தலைவலியைப் போக்க. கடவுளர் உலகே கலங்குகிறது. கடைசியில் ஜுவசே, தன் மகன் ஹீபாஸ்டஸ் என்பானை அழைத்து; “கோடரி கொண்டு என் மண்டையைப் பிள!” என்று உத்தரவிட்டார். தந்தைசொல் மீறாத தனயனும் அதுபோலவே செய்தான். மண்டை பிளந்ததும், உள்ளேயிருந்து, வடிவழகுடன் வெளிவந்தாள் அதீனே என்ற கடவுள்—குழந்தை வடிவிலே அல்ல, பருவ மங்கையாக, சகல அலங்காரத்துடன்.
அதீனே
விந்தையான இந்தக் கதைகள், நமது நாட்டுக்கு மட்டுமே சொந்தமாக உள்ள கற்பனைத் திறமை என்று களிப்புடன் கூறிக்கொள்ளும் கருத்துக் குருடர்களும் உளரல்லவா. அவர்கள் பிடித்தால் ஆச்சரியத்தால் மூர்ச்சையாகி விடக்கூடிய விதமான விந்தைகள் நிரம்பிய கதைகளைக் கட்டினர், தாம் தொழுதுவந்த கடவுள்களைப்பற்றி, கிரேக்க, ரோம் நாடுகளிலே, முன்னாளில் இருந்துவந்த புராணீகர்கள்.
முழுமுதற் கடவுள் ஜூவஸ் தேவனுக்கு ஒருநாள் தாங்க முடியாத மண்டைக் குடைச்சலாம்!! ஆரம்பமே, எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அவரோ அண்டபிண்ட சராசரங்களைப் படைத்த ஐயன்—சகல சக்தியும் படைத்த தேவதேவன், ஆனால் புராணீகன் கூறுகிறான், அவருக்கு மண்டைக் குடைச்சல் நோய் என்று. கடவுளுக்கும் இதே கதிதானா—நமக்கும்தான் வருகிறது மண்டைக் குடைச்சல், மகேசனுக்கும்தான் வருகிறது, ஆகவே நம்மையும் கடவுளையும்விட மண்டைக் குடைச்சல் நோய்தான், மகாசக்தி வாய்ந்தது போலிருக்கிறதே என்று கூறத்தோன்றும், கதையை அலசும்போது. பிணி, மூப்பு, என்பவைகளைக்கூடக் கடக்க முடியாதவராகவா, கடவுளைச் சித்தரிப்பது—சாதாரண காவிகட்டிகளுக்குக்கூறும் ‘மகிமை’ அளவுக்குக் கூடவா, கடவுள் சம்பந்தமாகக் கூறலாகாது என்றும் கேட்கத் தோன்றும். ஆனால் கேட்க அனுமதி கிடையாது—ஆத்தீகம் சீறிப் பாயும். கடவுளுக்குத் தலைவலி வந்தது என்பதுபோன்ற கதைகளல்ல. நம்மிடம் உள்ள புராண இதிகாசங்கள், இங்குள்ளவை இகபரசுகம் தரும் மார்க்க போதனைகளும், நன்னெறி கூறிடும் அறஉரைகள் கொண்ட அற்புத ஏடுகள் என்று வாதிடுவர் சிலர். பிறநாட்டாரின் கதைகள், பித்துப்பிள்ளை விளையாட்டு போன்றவை—எனவே தான், கடவுளுக்குத் தலைவலி வந்தது என்றுகூடக் கதைகள் உள்ளன, என்று கூறிக் கைகொட்டிச் சிரிப்பர் சில பேர். ஆனால், இதுபோன்ற கதைகளைக் கட்டினது மட்டுமல்ல, அவைகளை யொட்டி வளர்ந்த திருவிழாக்களையும் பூஜைகளையும்கூட நம்மவர்கள், இன்றளவு வரையில் விடவில்லை. ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்குத் தலைவலி உண்டாகிறது என்றும் அதற்காக அவருக்கு பத்து அரைத்துப் பூசுவது என்றும் இப்போதும், பூஜை, ஒன்று நடைபெறுகிறது. இதை அனுமதிப்பதும் ஆதரிப்பதும் ஆத்தீகம் என்னும், இது அர்த்தமற்ற வீண் விளையாட்டு என்று கூறுவது நாத்தீகம் என்றும், பேசுகிறார்கள். ஜூவசுக்கு ஏற்பட்ட ‘தலைவலி’ கதைக்காக இன்று, கிரீசிலோ ரோம் நாட்டிலோ, ‘மருந்திடு’ விழா நடத்த மன்னார்சாமிகளும் துணிவதில்லை—ஜுவசே இல்லை. இங்கோ, ரங்கநாதருக்குத் தலைவலி வருவதும் மருந்திடுவதும் பக்திமான்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
மண்டைக் குடைச்சலால் அவதிப்பட்ட மகேசனுக்கு, மருந்திட, தேவர் பலர் முனைந்தனர்—யாராலும் முடியவில்லை, வலியைப் போக்க. கடவுளர் உலகே கலங்குகிறது. தேவதேவன் துடிதுடிக்கிறார், மண்டைக் குடைச்சலால், மற்றத் தேவர்கள், கைகளைப் பிசைந்து கொள்கின்றனர், என்ன செய்வது என்று தெரியாமல். கடைசியில், ஜுவசே, தன் மகன் ஹீபாஸ்டஸ் என்பானை அழைத்து, “கோடரிகொண்டு என் மண்டையைப் பிள!” என்று உத்திரவிட்டார். தந்தை சொல் மீறாத அந்தத் தனயனும் அதுபோலவே செய்தான். மண்டை பிளந்ததும், உள்ளேயிருந்து, வடிவழகுடன் வெளிவந்தாள் அதீனே என்ற கடவுள்—குழந்தை வடிவிலே அல்ல, பருவமங்கையாக, சகல அலங்காரத்துடன். மங்கை வெளிவந்தானதும், மகேசனின் மண்டைக் குடைச்சல் போய்விட்டது. தேவ மருத்துவர், பிறகு செய்யவேண்டியதைச் செய்து ஜுவசை முன்போலாக்கினர். மண்டையிற் பிறந்த அதீனே தேவதை, தற்காப்புக்காக நடத்தும் போர், சமாதானம், நெசவு என்பவைகளுக்கு அதிபதியானாள். கடவுளர் வரிசையில் இடம்பெற்றாள். அதீனே என்று கிரேக்கர் கொண்டாடும் இந்தத் தேவதையை, ரோம் நாட்டவர், மினர்வா என்ற பெயரிட்டுக் கொண்டாடினர். அம்மைக்கு அமோகமான திருவிழாக்கள்—சிறந்த சிலைகள்—அழகிய கோயில்கள்! கிரேக்க சாம்ராஜ்யத் தலைநகரின் பெயர், ஏதன்ஸ்—இந்தத் திருநகரின் பெயரே, இந்த அம்மையின் திருநாமத்தை ஒட்டித்தான் அமைந்தது. அதீனே, எப்போதும் ஜூவசின் உடனிருந்து ஆலோசனை கூறிவரும் அந்தஸ்த்து பெற்றுத் திகழ்ந்தார்கள். தற்காப்புக்காக யார் போரில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு தேவியின் ‘அருள்’ கிடைக்குமாம்.
இந்தத் தேவியாருக்கு பொறாமை மூண்டுவிட்டது ஒரு சம்பவத்தால்.
பூலோகத்திலே ஒரு மங்கை—அழகி—நெசவு வேலையிலே திறமைமிக்கவள். என்போலத் திறமைசாலி, பூலோகத்திலே மட்டுமல்ல தேவலோகத்திலும் கிடையாது என்று வீரம் பேசினாளாம். அதீனே தேவதைக்குக் கோபம் கொப்பளித்தது. கிழவிபோல வடிவமெடுத்து, பூலோகம் சென்று, அந்த மங்கையைக் கண்டு, நயமாகவும் பயமாகவும் எச்சரிக்கை செய்தார். “விண்ணிலே உள்ள அதீனே தேவதையே போட்டியிட்டாலும் வெற்றி எனக்குத்தான்” என்று அந்தப் பெண் பேசிட அதீனே கோபம் மிகுதியாகி தன் உருவைக் காட்டி, ‘போட்டி’ ஆரம்பமாகட்டும் என்றார். இருவரும் விதவிதமான வண்ணங்கள் கொண்டதும், சித்திரவேலைப்பாடுகள் நிரம்பியதுமான ஆடைகளை ‘நெய்து’ காட்டினர். அதீனேவுக்கே வெற்றி கிட்டும் என்பதை அறிந்து கொண்ட அசட்டுப் பெண் தூக்கிட்டுக்கொண்டு மாண்டு போனாள். மமதை பிடித்தவளை மாண்டாலும் சும்மாவிடக்கூடாது என்று எண்ணிய அதீனே, அவளைச் சிலந்தியாகும்படிச் சாபமிட்டுவிட்டாள். பிறகே கோபம் தணிந்தது. விண்ணகம் சென்றாள் இந்த விசித்திர தேவதை. சிலந்தி சதா, ‘வலை’ பின்னிக்கொண்டே இருக்கிறதல்லவா—ஏன்?-இதுதான் காரணம்—அதீனேவின் சாபம்!—என்று புராணீகன் விளக்கமும் தந்தான். இந்தப் பொய்யுரைகளை மறுக்கும் நெஞ்சு உரம் இல்லாததால், அதீனேவுக்குப் பூஜை பலசெய்து ‘அவள் அருளை’ப் பெற மக்கள் கோயில்களில் குவிந்தனர். இன்றும் அதீனே கோயிலின் ‘இடிபாடு’ ஏதன்ஸ் நகரில் காணப்படுகிறது. நாற்பது அடி உயரமுள்ள அழகிய சிலையைச் சமைத்து, பிரமாண்டமான கோயில் கட்டி அதிலே ‘பிரதிஷ்டை’ செய்து நெடுங்காலம், அதீனே தேவதையைப் பூஜித்து வந்தனர்—கிரீசிலும், ரோம் நாட்டிலும் அவ்வளவு செல்வாக்கும் மளமளவெனச் சரிந்து போய்விட்டது, உண்மை அறிவு மக்கள் உள்ளத்தில் இடம் பெற்ற காரணத்தால். இன்று சிலந்தியைக் காட்டி, அதீனே புராணம் பேசுவோர் அங்கு கிடையாது. நாமோ அணிலின் முதுகின் மீதுள்ள மூன்று பொன்னிற வரிகளைக் காட்டி, ஐயன் தடவிக்கொடுத்தான் என்று ஆத்தீகம் பேசுகிறோம். அங்கெல்லாம் அறிவுக்குப் பொருந்தாத கதைகளின்மீது கடவுட்கொள்கை கட்டப்படுவது கூடாது என்பதை உணர்ந்துகொண்டனர்—அதீனேவை மாஜியாக்கிவிட்டனர்.
❖