உள்ளடக்கத்துக்குச் செல்

மாஜி கடவுள்கள்/அபாலோ

விக்கிமூலம் இலிருந்து


கிரீஸ், ரோம் நாடுகளில், கண்ணன், கந்தன் போன்ற ஆணழகர்களைச் சித்தரித்துத் தொழுது வந்தனர், கடவுட் கொள்கையிலே தெளிவு இல்லாத காலத்தில் இந்த நாட்டுக் கண்ணனுக்கும் முருகனுக்கும் எழிலில் எந்த வகையிலும் குறைவில்லாதவாதான், கிரேக்க நாட்டுச் சூரிய பகவான், ஆணழகன் அபாலோ தேவன்.

அபாலோ

மலக்கண்ணன்! கார்முகில் வண்ணன்! முல்லைச் சிரிப்பால் எவரையும் வெல்லவல்ல வசீகரமானவன்! பவழம், அவன் இதழ்! பாதமும் தாமரை! இதுபோன்ற எழில் ததும்பும் உருவம் எங்கு உண்டு. கண்டோர் தம் கலி தீர்ந்தது என்றுதானே கொண்டாடுவர்! கற்பனை என்றே வைத்துக் கொள்ளுவோம்—கட்டுக்கதையாகவே இருக்கட்டும்—பொறுத்தமற்ற புளுகு அந்தப் புராணம் என்றே வைத்துக் கொள்ளுவோம்—இருப்பினும் “கண்டதுண்டோ கண்ணன்போல்! புவியில்—” என்று உருகிக் கேட்பர் பக்தர்கள், கோபாலகிருஷ்ணனைப் பற்றி வெண்ணெய் திருடுவதும், வேய்குழல் ஊதி கோபியரை மயக்குவதும், மாயம் பல புரிவதும் ‘மகிமை’கள் என்று எண்ணுவது மதமா—என்று கேட்கும்போது, கதையைத் தள்ளு, எழில் உருவைப் பார்—இப்படிப்பட்ட உருவத்தை, அழகை, அழகு ததும்பும் கலையை கலையின் ஒரு பகுதியான சிற்பத்தை, சிறுமதியாளனே! நம் பெரியோர்கள் போற்றி வந்தனர். அந்தப் பண்பாட்டையா பாழ்படுத்த வந்தாய்—பாவீ!—உனக்குக் கண்ணில்லையா, கண்டதுண்டோ கண்ணன் போல்—புவியில் கண்டதுண்டோ!—என்று கேட்கிறார்கள், இங்குள்ள பக்தர்கள்.

பலருக்கு அசட்டுத்தனமான ஒரு எண்ணம். அழகின் உருவங்களாக ஆண்டவனைச் சித்தரித்த, பண்பும், கலை உள்ளமும் நம் நாட்டு ஏகபோகச் சொத்து என்று எண்ணுகின்றனர்—அதிலும், கிருஷ்ணன், முருகன், இருவரும் அழகே உருவெடுத்தவர்கள், அவனியில் இவர் போன்ற கடவுளர் வேறு எங்கும், எவருடைய கற்பனையிலும் உதித்ததே கிடையாது என்று பெருமையாகப் பேசிக்கொள்வர், பூஜாரியின் பிரசார போதையில் சிக்குண்டவர்கள். முருகன் என்றாலே அழகன் என்பதுதான் பொருள் என்று விளக்கம் கூறுவர்.

கிரீஸ், ரோம், நாடுகளில், கண்ணன், கந்தன் போன்ற ஆணழகர்களைச் சித்தரித்துத் தொழுது வந்தனர், கடவுட் கொள்கையிலே தெளிவு இல்லாத காலத்தில். இந்த நாட்டுக் கண்ணனுக்கும் முருகனுக்கும் எழிலில் எந்த வகையிலும் குறைவில்லாதவர்தான், கிரேக்க நாட்டுச் சூரிய பகவான், ஆணழகன் அபாலோ தேவன். அபாலோவின் உருவை ஓவியமாகக் காண்பவர், அந்த நாட்களில், கிரேக்க நாட்டிலே, கலை உள்ளம் நேர்த்தியாகத்தான் இருந்தது என்பதை உணருவர்—அதேபோது, அழகின் உருவமான அபாலோ தேவனும் மாஜி கடவுள்தான் என்பதை அறியவேண்டும், இந்த நாட்டு ஆத்திகர்கள். கலையிருக்கிறது எனவே கைவிடோம் என்று அபாலோ தேவனை இன்று கிரேக்க நாட்டிலே தொழுது கொண்டிருப்பவர் கிடையாது, ஆணழகன் அபாலோவின் அழகுபோல அவனியிலே கண்டதுண்டோ என்று பாடிடும் பாவையரும் கிடையாது. அழகு ததும்பத்தான் செய்கிறது ஓவியத்தில் சிற்பத்தில்! அணி அழகு மிளரத்தான் செய்கிறது கவிதையில்! எனினும் கற்பனைதான் அபாலோ—அதிலும் உண்மைக் கடவுட் கொள்கைக்கு ஒவ்வாத கற்பனை-அறிவுக்குப் பொருந்தாத கற்பனை, எனவே அறிவு வளர வேண்டுமானால், அபாலோ மாஜியாகத்தான் வேண்டும் என்று கிரேக்க நாட்டவர் தீர்மானித்தனர். இங்குதான், கடவுளை, கண்கவர் வனப்புள்ள உருவமாகக் கல்லில் செதுக்கவும், உலோகத்தில் சமைக்கவும் முடிந்தது, மற்ற நாட்டவர் எவருக்குமே இந்தக் கற்பனையும் திறமையும் இருந்ததில்லை என்று எண்ணுபவர்கள், கிரேக்க நாட்டு மாஜி கடவுள் அபாலோவின் ஓவியத்தைக் காணவேண்டும். கண்ணுள்ளோர் எவரும் கண்ணனிடமும் கந்தனிடமும் உள்ள கவர்ச்சிகரம் அபாலோவிடம் இல்லை என்று கூறிவிட முடியாது. அருளொழுகும் கண்கள்—சந்தேகம் இல்லை! ஆஜானுபாஹு—புராண பாஷைப்படி!! கிரேக்கர்கள், அபாலோ தேவனைத்தான் அழகிற் சிறந்தோன் என்று பூஜித்து வந்தனர்.

ஜுவஸ் தேவனுடைய திருக்குமாரன், இந்த அபாலோ—ஆனால் பட்டமகிஷிக்குப் பிறந்தவனல்ல, ஜுவசின் பரந்த காதல் சாம்ராஜ்யத்தில் உதித்த பாலகன்.

லாடோனா என்ற காரிகையை ஜூவஸ் காதலித்தான்—விளைவு இரட்டைக் குழவி—ஒன்று அபாலோ, மற்றொன்று பெண், இரண்டும் இணையிலா எழிலுருவங்கள்!

ஜூவசின் தேவியார் ஹீரா அம்மையாருக்குச் ‘சேதி’ தெரிந்தது—சீற்றம் மிகுந்தது—லாடோனாவை விரட்டினார்கள். பெரியதோர் பாம்பை ஏவினார்களாம், லாடோனாவைத் துரத்த—ஜுவசுக்குக் காதலை அர்ப்பணித்த காரிகை, கருவுற்றிருந்த நிலையில் ஓடினாள், ஓடினாள், எட்டுத் திக்கும், புகலிடம் தேடி! காப்பாற்ற எவரும் முன்வரவில்லை—அனைவருக்கும் அச்சம், ஹீரா தேவியார் சீறுவார்களல்லவா!!

கடலிலே ஒரு தீவு, ஓரிடத்திலேயும் தங்காமல், தெப்பக்கட்டை போல மிதந்து சென்றவண்ணம் இருந்ததாம். தீவின் பெயர், டீலாஸ்—இந்தத் தீவை, நிலைத்து நிற்கும்படிச் செய்து, அதிலே தங்கும்படி அருள்பாலித்தான், பாசிடன். பாவை, அங்குதான் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

லாடோனாவின் நிலை பிறகு நிம்மதி என்று எண்ணாதீர்கள். விடவில்லை விண்ணவன் தேவி—விரட்டினார்கள் மீண்டும். லாடோனா, காடு மலைகளெல்லாம் சுற்றித் திரியவேண்டி நேரிட்டது. ஒருநாள் அம்மைக்குத் தாகவிடாய்—அங்கு ஒரு குளத்தருகே சிலர் இருந்தனர்—அவலட்சணம் பிடித்த அற்பர்கள்—ஐயா! தாகம்! தண்ணீர்!-என்று தவித்த மாது கேட்க, அந்த அற்பர்கள், கேலி செய்தனர், பாவையின் பரிதாப நிலையைக் கண்டு பச்சாதாபம் காட்டவில்லை. ஜூவசுக்கு இது தெரிந்தது—உடனே அந்த அற்பர்களை, தவளைகளாகிவிடச் சாபமிட்டார். லாடோனா மேலும் பல அல்லல்களை அனுபவித்தாள்—கடைசியில் தேவரும் மாந்தரும் அவளை உத்தமி என்று கொண்டாட வேண்டிய நிலையும் பெற்றாள். லாடோனா தேவிக்கு, ஆர்காஸ், டீலாஸ், ஈஜிப்ட் ஆகிய இடங்களிலே ஆலயங்கள் அமைக்கப்பட்டன.

அபாலோ தேவன், வில்வித்தை, தேரோட்டம், யாழ் வாசித்தல், முதலிய வித்தைகளில் சமர்த்தனாகி, சூரியரதத்தை அன்றாடம் ஓட்டிச்செல்லும் உயரிய நிலையை அடைந்தான்.

புயல் வேகத்திலே செல்லும் புரவிகள் பூட்டப்பட்ட பொன்னாலான ரதம்—அபாலோவுக்கு—காலை முதல் மாலைவரை, தேரைச் செலுத்துவான், மாலையிலே பொன் ஓடம் தயாராக இருக்கும், அதிலேறிப் பொழுது போக்குவான். சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, எதன்மீதும், மோதிக்கொள்ளாதபடி, பாதை தெரிந்து, தேரைச் செலுத்துவது, அபாலோவின் திருப்பணி. சிறிதளவு தவறு நேரிட்டாலும், பெரும் அழிவு நேரிடும் அவ்வளவு பொறுப்பான வேலை, இதைத் திறம்படச் செய்துவந்தான் அபாலோ.

ஆற்றல்மிக்க அபாலோவுக்கோ இவ்வளவு பொறுப்பான, கடினமான வேலை இருந்தது—எனினும் காதல் வைபவத்துக்கு நேரம் கிடைக்கவில்லை என்று எண்ணிவிடாதீர்கள். உண்டு! பலப்பல!!

கிளைமின் என்ற பூலோக சுந்தரியைக் காதலித்தான் அபாலோ, ஒரு மகன் பிறந்து, மருத்துவ நிபுணனானான்–செத்தவரைப் பிழைப்பிக்கச் செய்துவிட்டான். உடனே, கோயில்கள் எழும்பின, மருத்துவதேவனுக்கு—பக்தர்கள் திரண்டனர். தீராதவியாதிகளைத் தீர்த்துவைக்கும் தேவனின் திருத்தலத்தை நாடி சாரை சாரையாகப் பக்தர் கூட்டம் செல்லலாயிற்று. அவன் திருக்கோயிலில் ஓரிரவு படுத்திருந்தால் போதும், நோய் பறந்தே போகும், என்றான் பூஜாரி—மக்கள் நம்பினர்.

புதிய தேவன்! புதிய கோயில்! பக்தர்கள் கூட்டம் அங்கே!—ஜூவசுக்குக் கோபம் கொதித்தது—பொறாமைத்தீ மூண்டுவிட்டது. இவன் யார், நமது பெருமையை அழித்துவிடக் கிளம்பிய புயல்! இவனைவிட்டு வைப்பது தவறு—என்று எண்ணி, ப்ளுடோ தேவனை அழைத்து, புதிய தேவன் தலையிலே இடிவிழச் செய் என்று கட்டளையிட்டான். ப்ளுடோ தேவன், இடி ஆயுதம் தயாரிப்பவரிடம் கேட்க, அவர்கள் இடியாயுதம் தந்தனர்—வீசினான், அபாலோவின் ஆற்றல்மிக்க மகன்மீது—மகன் மாண்டான்—செத்தவரைப் பிழைக்கச்செய்த மருத்துவதேவன் மாண்டான். தாங்கொணாக் கோபம், சோகம், அபாலோவுக்கு—சீற்றத்தை இடியாயுதம் தயாரித்தவர்மீது காட்ட முனைந்தான். ஜுவஸ், அபாலோவைக் கடவுள் ஸ்தானத்திலிருந்து நீக்கி, பூலோகத்திலே சென்று உழலும்படிச் சாபம் பிறப்பித்தார். சில காலம் அதுபோல் பூவுலகில் இருந்துவிட்டுப் பிறகு, அபாலோ கடவுளருலகு வந்து பழைய பணி புரிந்துவந்தார்.

அதுவரையில் யார், சூரிய ரதத்தைச் செலுத்தியவர்? மகனை, ஏன் அபாலோ, தேவருலகுக்கு அறிமுகப்படுத்தவில்லை—காதலித்தவளைக் கடிமணம் புரிந்தாரா இல்லையா! பூலோகவாசிகளின் நோய் நொடியைத் தீர்த்து வைப்பது நல்ல காரியமல்லவா—அந்த திருத்தொண்டு புரிந்தவனை முழுமுதற் கடவுள் ஏன் ‘சம்ஹரித்தார்’ ‘துஷ்டநிக்ரஹம் சிஷ்டபரிபாலனம்’ என்பதுதானே கடவுளின் நீதி என்பார்கள், இந்தக் ‘கொலை’ ஏன்! என்பனபோன்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது. கேட்கத்தான் தோன்றும். ஆனால் கேட்பது நாத்திகம். அந்த நாள் பூஜாரியின் கடுமையான சட்டம் அது. நெடுநாள்வரை அவனுடைய ‘கப்சிப்’ தர்பார் நடைபெற்று வந்தது. ஆனால் கடைசியில் அவனுடைய குட்டு வெளிப்பட்டு மக்கள் வென்றனர்—இங்கல்ல—அங்கு! பூஜாரியின் புரட்டுரைகளை மெய்யென நம்பியபோது, கிரேக்க மக்கள் இதுபோன்ற பல கதைகளைப் பக்தியுடன் பாராயணம் செய்து வந்தனர்.

காதல் விவகாரத்தில் ஜூவசுக்குத்தான் வெற்றி மேல் வெற்றி. அபாலோவுக்கு அந்தத் துறையிலே, வேதனைதான் அடிக்கடி.

காதல் கணைகளை ஏவிடும்! கடவுள், க்யூபிட்—கிரேக்க நாட்டு மன்மதன்.

இவன் வில்லம்பு வைத்துக் கொண்டிருக்கக் கண்ட அபாலோ, வேடிக்கைக்காக கேலிமொழி புகன்றான். வெகுண்டெழுந்த க்யூபிட், என் கணையின் சக்தியைப் பார் என்றுகூறி, அபாலோமீது ஓர் கணையை ஏவினான்–காதல் சுரந்தது—ஆற்றுதேவன் பீனியஸ் என்பானின் மகள் டாப்பீன் என்பவள்மீது. காதல் தணலாகிவிட்டது அபாலோவுக்கு. க்யூபிட், தன் வல்லமையை அபாலோ உணரவேண்டும் என்பதற்காக, மற்றோர் காரியம் செய்தான். டாப்பீன் எனும் தையலின்மீது ஒரு கணை தொடுத்தான்—காதலைத் தூண்டும் கணையல்ல—காதலென்றாலே கடுவிஷம் என்று கருதி வெறுப்பை அடையச் செய்யும் கணை.

வேடிக்கையாகத்தானே இருக்கும்—அபாலோவுக்குத் தவிர—இந்தக் காட்சி.

அபாலோவுக்கோ அவள்மீது அடக்கொணாக் காதல்! அவளுக்கோ, காதல் என்றாலே வெறுப்பு, அபாலோ அணுகுகிறான், அவள் அஞ்சி ஓடுகிறாள், க்யூபிட் சிரிக்கிறான். அபாலோ துள்ளுமத வேட்கைக் கணையாலே தொல்லைப்படுபவன்—எனவே அவளை அடைந்தே தீருவது என்று துரத்துகிறான்—அவளுக்கோ காதல் என்றாலே நஞ்சு, எனவே அவள் ஓடுகிறாள்! துரத்துகிறான் தேவன், ஓடுகிறாள் அரசகுமாரி நெடுநேரம், நெடுந்தூரம். கடைசியில் களைத்துவிட்டாள்–எனினும் இணங்க முடியுமா—வெறுப்புக் கணையல்லவா வேலை செய்கிறது—எனவே அபாலோவிடம் சிக்காமலிருக்க, தன்னை உருமாற்றும்படி தந்தையை வேண்டுகிறாள்—அவன் அரசன்தான். எனினும் அவனுக்கு அந்த அற்புத ஆற்றல் இருந்ததுபோலும்—மகளை ஒரு மரமாக்கிவிடுகிறான். கைக்கு எட்டியும் பயனில்லை—அபாலோ அவதிப்படுகிறான். க்யூபிட் தன் வெற்றியைக் கொண்டாடுகிறான்.

மற்றோர் சமயத்தில், அபாலோவுக்கு, காதல் விருந்து கிடைத்தது—கிளைமின் என்ற தேவதையிடம்! ப்யேடன் என்ற மகன் பிறந்தான். அபாலோ, தன் காதலியுடன் குடும்ப வாழ்க்கை நடத்தவில்லை—விருந்து முடிந்தது, விளைவு பிறந்தது. தன் வேலைக்குச் சென்றுவிட்டான். தேவதை, தன் குமாரனை வளர்த்து வந்தாள். “உன் தந்தை சாமான்யரல்ல! விண்ணும் மண்ணும் வியந்திடும் அழகன், ஆற்றல் மிக்கோன்—அபாலோவின் மகனடா நீ!”— என்று அன்னை அடிக்கடி கூறி வந்தாள். மகனுக்கு மமதை இது கேட்டு.

ஒரு நாள் வேறோர் தேவகுமாரன், ப்யேடனைக் கேலி செய்தான் அபாலோதான் உன் தந்தை என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டுவிட்டான். ப்யேடன் கோபம் கொண்டான், வருத்தமாகவும் இருந்தது. தாயிடம் முறையிட, அவள், அபாலோவிடம் சென்று கேள், ஆதாரம் தருவார், என்றாள். எனவே ப்யேடன், கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், அபாலோ வாழுமிடம் சென்றான். கண்களைப்பறித்து விடுவதுபோல மின்னிக்கொண்டிருந்தது அபாலோ தேவனின் தங்கமாளிகை. ரதம், தயாராகக் காத்துக்கொண்டிருந்தது. அச்சமயம் வந்து சேர்ந்தான் ப்யேடன். அன்புடன் அபாலோ, அவனை அருகழைத்து, “மகனே! என்னவேண்டும்? எங்கே வந்தாய்?” என்று கேட்டான். “கெடுமதி படைத்தவனொருவன் கேலி பேசுகிறான் தந்தையே! நான் தங்கள் குமாரன் என்பதை நிரூபிக்க ஆதாரம் வேண்டுமாம்” என்றான். “ஆதாரமா! விண்ணும் மண்ணும் அறிய நான் கூறுகிறேன், நீ என் மகன் என்று” என்றான் அபாலோ. ப்யேடன் அவசர புத்தியுள்ளவன்—எனவே அவனுக்கு ஒரு பைத்தியக்காரத்தனமான யோசனை உதித்தது. தந்தையே! இன்று ஒரு நாள், நான் தங்களுக்குப் பதிலாகத் தேர் ஓட்டிச் செல்ல அனுமதி அளிக்க வேண்டுகிறேன்—அப்போது அனைவரும் அறிந்து கொள்வர், நான் யார் என்பதை—என்றுரைத்தான். அபாலோ திகைத்துப்போனான். “மகனே! ஆபத்தான விளையாட்டு வேண்டாம். என்னால் தவிர வேறு ஒருவரால், இந்தப் புரவிகளை அடக்கிச் செலுத்த முடியாது, விபரீதமான காரியம் வேண்டாம். வேறு எதுவாயினும் கேள், தருகிறேன்” என்று கொஞ்சுமொழி கூறினான்—மகன் கேட்கவில்லை. பிடிவாதக்காரன்! எது கேட்டாலும் தருகிறேன் என்று முதலிலேயே வாக்களித்துவிட்டான் அபாலோ. தவற முடியுமா? அதிலும், ஸ்டைக்ஸ் நதியின் மீது ஆணையிட்டு வாக்களித்துவிட்டான்—அதை மீறுவது பெரும் ஆபத்து. ஏனெனில், மீறுபவர் அந்த ஆற்றுநீரைப் பருகவேண்டும்—பருகினதும் ஓராண்டுக் காலம் முழு முட்டாளாகிவிடுவர்—பிறகு ஒன்பதாண்டு கடவுளுலகிலிருந்து தள்ளி வைக்கப்படுவர். எனவே அபாலோ இணங்குவது தவிர வேறு வழியில்லை. புத்திமதி சொன்னான்—சவுக்கை எடுக்காதே—பாதைமீது பார்வை இருக்கட்டும்—பக்குவமாக ஓட்டு,—என்று பலப்பல கூறி, ப்யேடனைத் தேரில் அமர்த்தினான். காலைத் தட்டிக்கொண்டு கிளம்பின குதிரைகள். இரண்டொரு மணி நேரம், தேர் நேர்வழி சென்றது. பிறகோ! புரவிகள் புயலாயின! ப்யேடனால் அடக்க முடியவில்லை. தேர், பாதையைவிட்டு ஓட ஆரம்பித்தது—ப்யேடன் மிரண்டுவிட்டான். சூரிய ரதம் பாதை தவறி ஓடுவது கண்டு பதைக்காதார் இல்லை. சந்திரன் நட்சத்திரம் யாவும் மிரண்டு ஓடலாயின, தேரின் கீழ் சிக்காதிருக்க. பூமிக்கு அருகே சூரிய ரதம்! கடல் வற்றுகிறது, வெப்பத்தால் ஆறுகள் மணல் மேடுகளாகின்றன! காடுகள், நெருப்பாகின்றன! மக்கள் கருத்துப்போகிறார்கள். எங்கும் ஒரே திகில்! ஒரே கதறல்! அழிவுக்காலம் நெருங்கிவிட்டதோ என்று அனைவரும் அலறுகின்றனர். ஒரே அல்லோல கல்லோலம். ப்யேடனுக்குப் பெரும்பீதி, ரதமோ புயல் வேகத்திலே!

பூலோகவாசிகளின் புலம்பல் கேட்டு, நித்திரையிலிருந்து ஜூவஸ் விழித்துக்கொண்டார்.—நொடியில் விஷயம் தெரிந்துவிட்டது—இடியாயுதத்தை வீசி, ப்யேடனைக் கொன்று, பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். தேர் என்ன ஆயிற்று—இடியாயுதம் தேரை நொறுக்கிற்றா, என்றெல்லாம் கேட்கக்கூடாது. புராணமென்றால், கேட்டுக் கொள்ளவேண்டும்—நம்பிக்கையுடன்—கேள்விகள், பாபச் சின்னங்கள்!!

அபாலோவின் காதல் விளைவுகள் பலவும் இப்படி அரும்பிலேயே அழிக்கப்பட்டுப் போயின. அபாலோமீது அடங்காத காதல் கொண்டிருந்தாள், கிளைட்டை என்ற கன்னி! அந்தக் காதலை அபாலோ பொருட்படுத்தவே இல்லை. அவளோ, அபாலோ ரதத்தில் ஏறிச்செல்லும் திக்கையே நோக்கியவண்ணம் இருந்துவந்தாள். கடைசியில் அவளுடைய பரிதாபகரமான நிலைகண்டு, மற்றக் கடவுளர், அவளைச் சூரியகாந்திப் பூவாக்கிவிட்டனர். சூரியகாந்திப் பூ, சூரியனை நோக்கியபடியே இருப்பது இதனால்தான் என்கிறான் புராணிகன்.

அபாலோவுக்கு இசையிலும் நிபுணத்துவம் உண்டு–மைடாஸ் என்ற அரசன் அபாலோவைவிட நேர்த்தியான இசைவாணன் உண்டு என்று சொன்ன குற்றத்துக்காக, அந்த அரசனுக்குக் ‘கழுதைக்காது’ வளரும்படி ஒரு முறை அபாலோ சபித்துவிட்டானாம்.

இந்த ‘சூரியபுராணம்’ கிரேக்கரின் புண்ய கதையாக இருந்துவந்தது, நெடுங்காலம்.

அபாலோ தேவனுக்கு பிரம்மாண்டமான கோயில்களைக் கட்டினர், கிரேக்கர்கள். பூஜைகள் விமரிசையாக நடந்துவந்தன, அபாலோ தேவனுக்கு. கவிதைக்குக் குறைவில்லை! எல்லா வைபவமும் இருந்துவந்தது, அபாலோவுக்கு, மக்கள் புத்தறிவு பெறும் வரையில். பிறகோ, பழமையை, புரட்டை, பூஜாரியின் பொய்யுரையைச் சுட்டெரித்த அறிவுச் சுடர் தோன்றிற்று—அபாலோ மாஜி கடவுளானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மாஜி_கடவுள்கள்/அபாலோ&oldid=1790544" இலிருந்து மீள்விக்கப்பட்டது