மாஜி கடவுள்கள்/ஆர்ட்டிமிஸ்
- அபாலோவின் உடன்பிறந்தவள்தான் ஆர்ட்டிமிஸ். அபாலோ சூரியதேவன், அதுபோல, ஆரட்டிமிஸ் சந்திரக்கடவுள். அபாலோ போலவே அழகு, ஆர்ட்டிமிசிடம் குடி கொண்டிருந்தது. தேவருலகு பெருமூச்செறிந்தது அவளை எண்ணி எண்ணி. அவளோ கன்னியாகவே காலந் தள்ள உறுதிகொண்டு, ஜூவசிடம் வாதாடி, வரம் பெற்றுவிட்டாள்.
ஆர்ட்டிமிஸ்
லாடோனாவுக்கு இரட்டைக் குழந்தைகளல்லவா பிறந்தன—ஆண்தான் அபாலோ—ஆர்ட்டிமிஸ், பெண். அபாலோ சூரியதேவன், அதுபோல, ஆர்ட்டிமிஸ் சந்திரக் கடவுள். பகலெல்லாம் தேர் ஏறிச்சென்று சூரிய ஒளியைத் தருபவன் அபாலோ, உடன்பிறந்தாளாகிய ஆர்ட்டிமிஸ் இரவில் ரதமேறி சந்திர ஒளியை வழங்குபவள். இவ்வளவு அற்புதமான செயல் புரிந்துவரும் இருவரைப் பெற்றதனால் களிப்புற்றாள் லாடோனா. நாளாவட்டத்திலே இந்தக் களிப்பு, கர்வமாக மாறலாயிற்று. யாரே எனக்கெதிரே அவனியிலே, என்று கூறிக் கொள்ளலானாள்.
நையோபி என்ற மாது நகைத்தாள். அசடே! உனக்கு இருமக்கள்—எனக்கு பதினான்கு—ஏழு ஆண், ஏழு பெண்—எனவே நானே பாக்யசாலி!—என்று பேசினாள், கோபம் பிறந்தது லாடோனாவுக்கு. ஹீராதேவியாரிடம் கொடுமை பல அனுபவித்த லாடோனா, தானே கொடுமைக்காரியாக மாறினாள். அதிலும், நையோபி, அபாலோ, ஆரிட்டிமிஸ் இருவருக்கும் பூஜைகள் செய்வது தேவையற்ற காரியம் என்று கூறினதும் கோபம் அதிகரித்தது. மகனையும் மகளையும் அழைத்து அந்த மமதை கொண்டவளின் மக்களைக் கொன்றுவிட்டு வாருங்கள் என்று கட்டளையிட்டாள். காரணமற்ற கோபம்! கருணையற்ற செயல்! எனினும் மாதாவின் கட்டளை, மீறலாமா? மீறினாரா, தந்தை ஜமதகனியின் கட்டளையை, பரசுராமர்; தாயின் தலையை வெட்டினாரல்லவா?
கிளம்பினர், அபாலோவும் ஆர்ட்டிமிசும். ஆண்களை அபாலோ அழித்தார்—பெண்களை ஆர்ட்டிமிஸ் கொன்றாள். கடைக்கோட்டி பெண் குழந்தை தாயின் மார்பிலே ஒட்டிக்கொண்டதாம் திகிலுடன்—நையோபி அழுதபடி கெஞ்சினாள், இந்தக் குழந்தையையாவது கொல்லாமல் விடுக, என்று. இந்த நிலை கண்டு, மற்றக் கடவுளர் மனம் இளகிற்று. இந்த ஒரு குழந்தையை விட்டுவிடு, என்று ஆர்ட்டிமிசுக்குச் சொல்லித் தடுத்தனர் போலும் என்று எண்ணுகிறீர்களா! இல்லை, இல்லை! நையோபியை, குழந்தையுடன் கல்லுருவாக்கிவிட்டனர்.
தாயின் சொல்கேட்டு, கொலைபாதகச் செயல் புரிந்த ஆர்ட்டிமிஸ்தான் குளிர்ச்சி தரும் நிலவொளியை வழங்கி வந்தாள்.
அபாலோ போலவே அழகு, ஆர்ட்டிமிசிடம் குடி கொண்டிருந்தது. தேவருலகு பெருமூச்செறிந்தது அவளை எண்ணி எண்ணி. அவளோ கன்னியாகவே காலந்தள்ள உறுதிகொண்டு ஜூவசிடம் வாதாடி, வரம் பெற்றுவிட்டாள். அழகு வீணாகிறதே என்ற ஏக்கம், தேவர்களுக்கு. என்ன செய்வது, ஜூவசே வரம் அளித்துவிட்டாரே!
கன்னியாக இருக்க வரம் பெற்றாளே தவிர, ஆர்ட்டிமிசுக்குக் காதலே உதிக்கவில்லை என்று எண்ணாதீர்கள்.
கோரியா நாட்டிலே, ஒரு ஆடு மாடு மேய்க்கும் இளைஞன் மீது, ஆர்ட்டிமிசுக்குக் காதல்—தற்செயலாக
அவன் ஓர் மலையடிவாரத்திலே படுத்துறங்குகிறான். ஆர்ட்டிமிஸ் விண்ணுலகைவிட்டுக் கிளம்பி நிலவொளியைப் பரப்பிக்கொண்டு செல்கிறாள், ரதத்தில். தற்செயலாகக் கீழே பார்க்க, கட்டழகன் கண் அயர்ந்திருக்கக் கண்டு, காதல் கொண்டு விடுகிறாள்—நொடிப்பொழுதில் கீழே வருகிறாள்—அவனை எழுப்பவில்லை—அன்பின் அறிகுறியாக அவன் உதடுகளில் முத்தமிடுகிறாள். இன்பமயமான உணர்ச்சியுடன் இளைஞன், இலேசாகக் கண்களை திறந்து பார்க்கிறான், அவன் மனதை மயக்கும் அழகிய இளமங்கை தெரிகிறாள், அடுத்த விநாடி மறைகிறாள். கனவா, நனவா?—திகைக்கிறான் இளைஞன்! மனதிலே இந்தக் கேள்வி குடைகிறது—முத்தமிட்டாளே—யார்...? ஏக்கத்துடன் யோசிக்கிறான். மனம் குழம்புகிறது. நித்திரையில் வந்து நெஞ்சில் இடம் கொண்ட நேரிழையாள் யாரோ, அறியேன்—அந்தரம் விட்டிறங்கி அழகுத்தேவதை வந்து, அதரம் தனில் அதரம் பதித்த அற்புதம் யாரோ தெரியேன் என்று பலப் பலவாறு எண்ணுகிறான், ஏங்குகிறான். ஆர்ட்டிமிசோ, தேர் ஓட்டிக்கொண்டிருக்கிறாள். அவளுடைய நினைவால் நைந்து உருகும் இளைஞன் பெயர், எண்டிமியான். கன்னியின் இதயத்திலே காதல் முளைத்தது கண்ட ஜூவஸ், எண்டிமியானைச் சும்மா விடுவாரா! அவரோ வரம் அளித்துவிட்டார், ஆர்ட்டிமிசுக்கு, கன்னியாக இருந்துவிட—இவனோ, கன்னி உள்ளத்திலே காதல் அரும்பிடச் செய்துவிட்டான்—வரம் என்ன கதியாவது! பிடி சாபம் என்றார் ஜுவஸ். மரணம்—அல்லது நீங்காத நித்திரை—எது வேண்டும், கேள்—என்றார்—நீங்காத நித்திரை!—என்றான் எண்டிமியான்—அன்று முதல், லாட்மஸ் மலைக்குகையிலே, தூங்கியவண்ணம் இருக்கிறான் எண்டிமியான். ஆர்ட்டிமிஸ் இரவுக் காலங்களில் அவனைக் கண்டுவிட்டுப் போகிறாள், ஆனால் அவன் விழித்துக் கொள்வதில்லை! இப்படி ஒரு காதல் ஆர்ட்டிமிசுக்கு.
ஓரியான் என்ற ஒரு வேட்டையாடும் இளைஞன் மீது ஆர்ட்டிமிசுக்குக் காதல் பிறந்தது, மற்றோர் சமயம்—இதுவும் பலிக்கவில்லை. ஒரு நாள், இந்த ஓரியான் ஏழுவன் தேவதைகளைக் கண்டு, சொக்கிவிட்டான்—அவர்களைத் துரத்தினான்! தேவதைகள், ஆர்ட்டிமிசை வேண்டிட ஆர்ட்டிமிஸ், அவர்களைப் புழுக்களாக மாற்றி, பிறகு நட்சத்திரங்களாக்கினார்.
ஓரியானைக் கண்டது இந்தவிதமாக.
வனதேவதைகள் கிடைக்காததால், ஓரியான் மனம் உடைந்து போகவில்லை, வேறு தேடினான்—ஒரு மன்னன் மகள் மீது மையல் கொண்டு அவளைக் களவாடிச் செல்ல முயன்றான்—மன்னன் அவன் கண்களைக் கெடுத்துவிட்டான். பிறகு சூரியன் அருளால் பார்வையைத் திரும்பப் பெற்றான்.
இந்த ஓரியான் மீது ஆர்ட்டிமிசுக்குக் காதல்!
இருவரும் நண்பர்களாயினர்—இது தெரிந்தது அபாலோவுக்கு, உடன்பிறந்தாளுக்கு ஏற்பட்ட காதல் பொறுத்தமற்றது என்று எண்ணி, அதைத் தடுக்கத் தீர்மானித்தான் அபாலோ. ஒருநாள் அபாலோ, ஆர்ட்டிமிசிடம், வில்வித்தையின் சிறப்புக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, குறிதவறாமல் அம்பு எய்த முடியுமா உனக்கு. அதோபார், கடலில், கருப்பாக ஏதோ மிதந்து கொண்டிருக்கிறது, அதைக் குறி வைத்து அம்பு எய்திடு பார்க்கலாம், என்றான்—தன் திறமையை அபாலோ குறைவாக மதிப்பிடுவது கண்ட ஆர்ட்டிமிஸ் கோபம்கொண்டு, “இது ஒரு பிரமாதமா!” என்று கூறி, அம்பை எய்தாள்—கருப்பாகத் தெரிந்த, குறி பார்த்து, அபாலோ நகைத்தான்—தன் தந்திரம் பலித்தது என்று—ஏனெனில் கருப்பாகத் தெரிந்தது, ஓரியான்! கடலில் நீராடிக் கொண்டிருந்தான்! காதலித்தவளின் அம்பு அவனைக் கொன்றுவிட்டது, ஆர்ட்டிமிஸ் புலம்பினாள்—பலன் இல்லை! மாண்ட காதலனை, நட்சத்திரமாக்கினாள்.
வேறோர் சமயம், ஆர்ட்டிமிஸ், வனதேவதை சிலருடன் நீராடிக்கொண்டிருந்ததை, மறைந்திருந்து பார்த்தான், ஆக்ட்டியான் என்ற இளைஞன். வேட்டை நாய்களுடன் அவன் அந்தக் காட்டுக்கு, மான் வேட்டைக்காக வந்திருந்தான். நீர் அருந்தச் சென்றான்—சிரிப்பொலி கேட்கவே, புதரருகே மறைந்திருந்தான், தேவலோகப் பூவையர் நீராடக் கண்டான். ஆர்ட்டிமிஸ் கடுங்கோபம் கொண்டு, ஆக்ட்டியானை மானாகும்படிச் சபித்துவிட்டாள், மானுருக்கொண்டான் ஆக்ட்டியான், மனித உள்ளம் மட்டும் இருந்தது! அதேபோது, மான் வேட்டைக்காக அவன் அழைத்து வந்திருந்த வேட்டை நாய்கள் ஓடி வந்தன. திகைத்தான் ஆக்ட்டியான்—மனித உள்ளம், உருவம்!! வேட்டை நாய்கள், மானைக்கண்டால் சும்மா விடுமா—துரத்தின—ஓடுகிறான் ஆக்ட்டியான் மானுருவில்! அவன் வந்ததோ மான் வேட்டைக்கு—இப்போது அவனே வேட்டையாடப்படுகிறான்! அவனுடைய சொந்த நாய்களால்— வேட்டை நாய்கள் மானின்மீது பாய்ந்து, கடித்து, பிய்த்துப் பிய்த்துப் போட்டுவிட்டன.
இவ்விதமெல்லாம் ஆர்ட்டிமிசைப் பற்றிக் கதைகள்.
அபாலோ தேவனுக்கு இருந்தது போலவே, ஆர்ட்டிமிசுக்கும், கிரேக்க நாட்டிலே அமோகமான செல்வாக்கு பெரிய பெரிய கோயில்கள்—கோலாகலமான பூஜைகள்—நிலவொளி வழங்கும் கன்னித் தெய்வமாம், ஆர்ட்டிமிசுக்கு. எல்லாம், கட்டுக் கதைகளை மக்கள் நம்பிக் கொண்டிருந்த வரையில்! பிறகு? மாஜிதான், ஆர்ட்டிமிசும்!!
❖