மாஜி கடவுள்கள்/ஓடின்
- தங்கச் சிம்மாசனத்தின் மீது வீற்றிருக்கும் இந்தத் தனிப் பெருங்கடவுள், நீல நிறத் தலைப்பாகையும் மேகவர்ணப் பட்டாடையும் அணிந்துகொண்டு கம்பீரமாகக் காணப்படுவான். நல்ல உயரம், அதற்கேற்ற காத்திரம்! கண் மட்டுந்தான் ஒன்று!!......அவன் தோளின்மீது இருபுறத்திலும் இரண்டு அண்டங்காக்கைகள் உட்கார்ந்துகொண்டிருக்கும்! காலடியிலே இரண்டு ஓநாய்கள் படுத்துக்கிடக்கும்!
ஓடின்
ஒற்றைக்கண் தேவன் ஓடின், ஓர் மூலதெய்வம். பன்னெடுங்காலம் பக்திமான்களின் பூஜையைப் பெற்றுக் கொண்டு பரந்தாமனாக விளங்கி வந்தவன்; பராக்கிரமம் மிகுந்த ஓடின், பல தீரச்செயல்கள் புரிந்து, இகம், பரம் இரண்டிலும் ஏக சக்கராதிபத்யம் செலுத்தி வந்தான். ஓடின் புகழ், பாசுரமாக்கப்பட்டு, செயல்கள் திருவிளையாடற் புராணமாக்கப்பட்டு, பாமரரும் புலவரும், அரசனும் ஆண்டியும், ஒரு சேரக் கொண்டாடக்கூடிய விதமான தேவனாகப் பலகாலம் விளங்கியவன், இந்த ஓடின்.
ஜெர்மனி, அதை அடுத்துள்ள நாடுகள், பிரிட்டன், ஆகிய பல நாடுகளிலே, ஓடின், தேவதேவனாகப் பூஜிக்கப்பட்டு வந்தான். சிவனாருக்குக் கைலாயமும் விஷ்ணுவுக்கு வைகுந்தமும், குறிப்பிடப்படுவதுபோல, இந்தத் தேவனுக்கு, பழங்கால, டியூடானிக் மக்கள் ஆஸ்கார்ட் எனும், இடத்தைக் குறிப்பிட்டிருந்தனர்.
வைகுந்தமாவது கைலாயமாவது, அதெல்லாம், மனப்பிராந்தி, மதவாதிகளிலே மட்டரகமானவர்களின் கற்பனை, பித்துப்பிள்ளை விளையாட்டு என்று இன்று ஒரு சிலரால் கூற முடிந்தபோதிலும்கூட, பாமரர்களில் பெரும்பாலோர், கைலாயம் என்பது உண்மையாகவே இருப்பதாகவும், அங்கு ஒரு புறத்தில் சிவ—சக்தி நடனம் நடந்து கொண்டிருப்பதுபோலவும், மற்றோர் புறத்திலே முருகனின் மயில், தன் கலாபத்தை விரித்தாடுவதை, தினைப் புனத்தழகி திருமதி வள்ளி அம்மையார் கண்டு களிப்படைவது போலவும், ஆறுமுகங்களிலே, ஒரு முகத்தால் ஐயன் சிங்காரவேலன், இக்காட்சியைக் கண்டு ஆனந்திப்பதுபோலவும், தம்பிக்கு இந்தச் சுவைதான் தெரியுமே தவிர, ‘அப்பம் அவல்பொரி’ இவைகளின் ருசி என்ன தெரிகிறது என்று எண்ணியபடி, ‘மூஷிகவாகனன்’ ஓர் புறம் இருப்பதுபோலவும், நம்பிக்கொண்டுதானே இருக்கிறார்கள். மறுத்துப் பாருங்கள், பாமரரின் கோபம் எப்படிக் கிளம்புகிறது என்பது தெரியும்! இப்பொய்யுரைகளையே கொண்ட புராணங்களை, கிருபானந்தர்கள் கீதக் குரலிலே எடுத்துரைக்கும்போது, மன்னார்சாமிகள், மகிழ்வதைப் பாருங்கள்! மதி குழம்பியிருந்தபோது, தெளிவற்றவர்கள், கட்டிவிட்ட இத்தகைய பொய், இயல், இசை, நாடகமாகி, இன்றளவு வரையிலே, மக்கள் மன்றத்திலே, உலவ முடிகிறது.
சிலர் அறிவர், இவையெல்லாம் எத்தரின் கருவிகள் என்று. எனினும் எடுத்து இயம்பமாட்டார்கள், ஏமாளிகளின் கோபம் தம்மைத் தாக்குமே என்ற அச்சத்தால்.அறிந்தோர் அச்சத்தால் அடங்கிக் கிடக்க, பாமரர், பழைய குட்டையிலேயே ஊறிக்கிடக்கும் நிலை காண்கிறோம் நம் நாட்டில்.
இந்நிலை, சரித காலத்துக்கு முன்பு, டியூடானியர்களிடையே இருந்தது. அப்போது அரசோச்சிய மூல தெய்வந்தான், ஓடின்! அறிவு கிளம்புமட்டும், ஈடு இணையற்றவனாக விளங்கி வந்தான், விண்ணுலகில்.
ஆஸ்கார்டில், அதிஅற்புதமான சக்தி வாய்ந்த ஓடின், தேவிமார், தம்பிமார்கள், குமாரர்கள், குட்டிக் கடவுளர்கள் ஆகியோர் புடைசூழக் கொலுவீற்றிருந்து, ‘அண்டர்’ நாயகனாக ஆட்சிசெய்து வந்தான். அவன் ஆணைப்படி நடக்கவேண்டும் அனைவரும்—மீறுபவர் படுபாதாளத்திலே தள்ளப்படுவர்! அவன் சொல்லை ஏற்கவேண்டும் சட்டமாக, மீறினோர் அழிக்கப்படுவர். அவன் விருப்பத்தின்படியே விண்ணும் மண்ணும் விளங்கவேண்டும். அவ்வளவு பலம், ஓடினுக்கு!
ஆஸ்கார்டிலே, ஓடின் ஓர் உயரமான, உன்னதமான ஆசனத்தில் அமர்ந்திருப்பான் ஒற்றைக் கண்தான் இருந்தது. எனினும், எங்கு என்ன நடைபெறினும் அவனால் கண்டறிய முடியும்.
தங்கச் சிம்மாசனத்தின்மீது வீற்றிருக்கும் இந்தத் தனிப்பெருங் கடவுள், நீலநிறத் தலைப்பாகையும், மேகவர்ணப் பட்டாடையும் அணிந்துகொண்டு, கெம்பீரமாகக் காணப்படுவான். நல்ல உயரம், அதற்கேற்ற காத்திரம்! கண்மட்டுந்தான், ஒன்று!!
டியூடானிக் ஆண்டவன் இவ்வண்ணம், அலங்கார ரூபனாக வீற்றிருக்கும்போது, அவன் தோளின்மீது, இருபுறத்திலும், இரண்டு அண்டங்காக்கைகள் உட்கார்ந்து கொண்டிருக்கும்! காலடியிலே, இரண்டு, ஓநாய்கள் படுத்துக்கிடக்கும்! கருடன் மகாவிஷ்ணுவுக்கும், காளை சிவனாருக்கும், உண்டல்லவா!!
இந்த இரு அண்டங் காக்கைகள், அவ்வப்போது கிளம்பிப்போய், பல இடங்களிலும் நடைபெறுவனவற்றைக் கண்டறிந்து வந்து ஓடினுக்கு உரைக்குமாம்—அதனாலேயே, ஓடின் இருக்குமிடத்திலிருந்தே, எங்கும் நடைபெறும், சேதியை அறிந்துகொள்ளும் ‘சக்தி’ பெற முடிந்தது.
இரு அண்டங் காக்கைகளிலே ஒன்றின் பெயர், ‘சிந்தனை’—மற்றொன்றின் பெயர், ‘நினைவு’!
ஓநாய்களிலே ஒன்றின் பெயர், ‘பேராசை’—மற்றொன்றின் பெயர், ‘பெருந் திண்டி.’
இந்தப் பரிவாரங்களுடன் வீற்றிருந்த வண்ணம், அண்டத்தைப் பரிபாலித்து வந்தான், இந்த அதிசயத் தேவன்.
இன்று ஜெர்மனியில், பெர்லின் நகரிலோ, இங்கிலாந்தில் இலண்டன் நகரிலோ, சென்று, ஓடின் தேவனின் ஆலயம் எங்குளது, என்று கேட்டால் கைகொட்டிச் சிரிப்பர், ஓய்வுடையோர். பிறர், அதையும் செய்யார். ஓடின் ஓர் மாஜி கடவுள்! தெளிவு பிறந்ததும், இந்தத் தேவன் இறந்தான்! பகுத்தறிவு கிளம்பியதும், இந்தப் பகவான் மறைந்தார்? பாமரரும் இன்று நம்புவதில்லை, இப்படிப்பட்ட தேவனை!
எனினும் ஓர் காலத்திலே கவிவாணர் பாட, புவியாள்வோர் காணிக்கையைக் கொட்ட, பூஜாரிகள் அர்ச்சிக்க, பாமரர் பயபக்தியுடன் தொழுது நிற்க, சர்வசக்தி வாய்ந்தவராக, ஓடின், தேவாலயங்களிலே வீற்றிருந்தார்.
அண்டங் காக்கை இரண்டுடையாய் போற்றி!
அமரர் நாயகனே, அதிபலதேவா போற்றி!
நீலப்பாகை உடையாய் போற்றி!
ஒற்றைக் கண்ணா! ஓடின்! போற்றி!
என்று தோத்திரம் செய்துகொண்டுதான் வந்தனர்.
ஒற்றைக்கண்ணன்! முக்கண்ணன் தெரியும் நமது புராணீகர்களுக்கு. டியூடானியப் புராணீகன், தான் சிருஷ்டித்த கற்பனைக் கடவுளுக்கு, ஒரு கண்தான் வைத்தான் மற்றொன்றை இழக்கச் செய்தான்.
ஓடின், தேவனாகி, தேஜோனமயனாக விளங்குவதற்காக ‘தேவரசம்’ பருக விரும்பினான். இந்தத் தேவரசத்தைத் தயாரித்துக்கொண்டிருந்தவர்கள், நிபந்தனை விதித்தனர், ஓடினுக்கு. என்ன நிபந்தனைக்கும் இசைவேன், எனக்கு மட்டும், தேவரசம் தருக, என்று கேட்டாராம் ஓடின்.
உறுதி, கலங்காத தன்மை, தியாக உள்ளம், இவை உண்டா என்று பரிசோதிக்க விரும்பிய, தேவரசம் தயாரிப்போர், “உன் கண்களிலே ஒன்றைப் பிடுங்கி இந்தக் கிணற்றிலே எறியச் சம்மதமா?” என்று கேட்க, ஓடின், உடனே தன் இரு கண்களிலொன்றை எடுத்து எறிந்துவிட்டு, தேவரசம் பெற்றுப் பருகி, தேவனானான்!
கடவுள், ஆகிறார், கடவுள்! எப்படி இருக்கிறது. கடவுட் கொள்கை! நம்பக்கூடியதாக இல்லையே, என்பர்—ஆமாம், இன்று—! அன்று? வேதம், இது! தேவனின் திருவிளையாடல் இது! ஆத்தீகம், இதை நம்புவதுதான்!
ஆச்சரியமாக இருக்கிறதா? கடவுள் தேவரசம் பருகித்தானா கடவுட் தன்மை பெற்றார் என்பது கேட்டு!வேறுநாட்டு விவகாரம் இது, ஆகவே, வேகமாகக் கண்டிக்கக்கூடத் தோன்றும். இப்படிக்கூடவா, காட்டு மிராண்டித்தனமாக இருந்து வந்தனர், என்று கேலி பேசத் தோன்றும். இந்த நிலையில், டியூடன் மக்கள், இருந்தது, எப்போது? உலகப் பொது அறிவு ஏற்படா முன்னம்! சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வந்த சிந்தனைக் குழப்பம்! இது கேலிக்குரியதாகத் தோன்றுகிறது இப்போது. எனினும், இதே சிந்தனைக் குழப்பம், இன்றும் இங்கு இருக்கிறதே இதற்கு என்ன சொல்கிறீர்கள்! இதைப் போக்க என்ன செய்தீர்கள்? செய்பவர்களுக்குத் தரும் சிறப்பு என்ன? நாத்திகன், என்ற வசை!!
தேவரசம் தேடினான் தேவன் என்பது வேடிக்கை என்று கூறத்தோன்றும், டியூடன் தேவன் கதையைப் படிக்கும்போது. ஆனால் இப்போதும், நம்நாட்டு மக்கள் படிக்கிறார்கள்—படிக்கப் பக்கம் நின்று கேட்டு நெஞ்சம் நெக்குருக நிற்கிறார்களே, புராணங்களை! அவைகளிலே ஒன்று, கூர்மாவதாரமல்லவா! பகவான், ஆமையாகி, திருப்பாற்கடலிலே, மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறு ஆகவும் கொண்டு கடைந்து, ‘அமிர்தம்’ பெற முயற்சித்தபோது, மேரு, கடலுக்குள்ளே மூழ்கிவிடாதிருக்க, பகவான், ஆமையாகி, மலையைத் தாங்கிக்கொண்ட கதைதானே, கூர்மாவதாரம், இதை, இன்றும் நம்புகிறானே, நமது உடன்பிறந்தவன்! மறுத்துப் பேசுபவன், மாபாவி என்று ஏசப்படுகிறானே! இதற்கென்ன சொல்கிறீர்கள்.
தேவரசம் பருகிட ஒற்றைக்கண்ணனான ஓடினை, ஓடின் தேவனாகக் கொண்டாடப்பட்டு வந்த நாட்டு மக்களெல்லாம், மறந்து பல ஆயிரம் ஆண்டுகளான பிறகு, மனித அறிவு இப்படிப்பட்ட கதைகளெல்லாம் கட்டி, இறைவனை அறிவதற்கு முயன்றதே, என்ன விந்தை இது, என்று அவர்கள் எள்ளி நகையாடும் நாட்களில், ஓடின், மாஜி கடவுளான பிறகு, இங்கு, ‘பஸ்மாசூர் மோகினி’ கதை, காலட்சேபமாய், நாடகமாய், சினிமாவாய் நாட்டிலே உலவுகிறதே! இந்தக் கோணலைத் தடுக்க, யார் முன்வருகிறார்கள்! அமிர்தம்—ஆலகால விஷம்—மோகினி அவதாரம்—நீலகண்டன்—என்ற சொற்களும், அவைகளைச் சுற்றிக்கொண்டுள்ள கதைகளும், பாமரருக்கு மனப்பாடமாக இன்றும் இருக்கிறதே! படித்தோரும் இவை வெறும் கற்பனை என்று கூறப் பயப்படுகிறார்களே!! இதற்கென்ன செய்வது!
இந்நாளிலும் இங்குள்ள இந்நிலை, டியூடன் நாடுகளிலே பன்னெடுங் காலத்துக்கு முன்பு இருந்து வந்தது. அந்தப் பழைய காடி, பருக உதவாது என்று சாக்கடையில் கொட்டிவிட்டு, அறிவு எனும் அருவிநீரை அள்ளிக் குடித்து அந்நாட்டு மக்கள், தெளிவு பெற்றனர்! நாமோ இன்றும், பஞ்சகவ்யம் சாப்பிடும், பண்பிலேயே இருக்கிறோம்!
நாகரிகமும் நல்லறிவும் இல்லாத நாட்களிலே, டியூடன் மக்களின் மனதிலே மருட்சியையும் பக்தியையும் மூட்டி வந்த ஓடின், பல தேவிமார்களை மணம் புரிந்து கொண்டு பல குமாரர்களைப் பெற்றெடுத்ததாகப் புராணம் இருந்தது.
ஓடினின் முதல் மனைவி, ஜோர்ட் என்பவர்—ஏறத்தாழ நமது நாட்டுப் புராணிகர்கள், சித்தரித்துக் காட்டிய பூமாதேவி! டியூடன் பூமாதேவியின் புத்திரன்தான் தார் தேவன்—முருகன்போல, தந்தையைவிட இந்தத் தனயன் பராக்கிரமசாலி!அழகன் பால்டர் என்பவன் மற்றோர் மகன்! இவனைப் பெற்றெடுத்த தேவியின் பெயர், பிரிக் பெருமாட்டி!! ஒன்பது தேவகுமாரிகளை மணம் புரிந்திருந்தார் ஓடின். ஹெய் மிடால் என்று மற்றோர் மகனும் உண்டு, இந்த மகேசனுக்கு. லாக் என்றோர் தம்பி, இருந்தான். மற்றும் பல தம்பிமார்கள்! பெரிய குடும்பம்!!
கடவுளுக்கு இப்படிக் குடும்பம், குழந்தை குட்டிகள், என்றெல்லாம் கூறுவது கேலிக்கூத்து—மதமாகாது என்று, ஏதாவதோர் கல்லூரியில் பேசலாம்—மக்களிடம் சென்று பேசமுடியுமா? பார்வதி, கங்கா—தேவிமார்! முருகன், விநாயகன், பிள்ளைமார்! மைத்துனன், மகா விஷ்ணு! நந்தி, நாரதர் இசை தர! ரிஷபம், வாகனமாக இருக்க!—இப்படி இருக்கும் ‘சிவனாரின் குடும்பம்’ பெரிய குடும்பமாயிற்றே! கேலி செய்தால், சைவர் எவ்வளவு சீறுகின்றனர். இன்றும்!! அந்தச் சீற்றம் இருந்தது, அறிவுத் தெளிவு இல்லாத காலத்தில் டியூடன் மக்களுக்கு! அவர்கள், ஓடின் தேவனால்தான், உலகு, அலைகடலால் அழிந்து போகாமலிருக்கிறது, என்று நம்பித் தொழுது வந்தனர். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். கோயில் கட்டினர்—கோலாகலத் திருவிழா நடத்தினர்! பரமசிவனைப் பதிகம் பாடியும், முருகனைப் பிள்ளைத் தமிழ் பாடியும், விநாயகருக்கு அகவல் பாடியும், அருள்பெற நம்மவர்கள் விரும்புவது போலவே டியூடன் மக்களும், கடவுளின் குடும்பத்தினரில், ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையாகப் பூசித்துப் பலன் வேண்டினர். அவர்கள் அன்று செய்து வந்ததை, எல்லாம் அறிவீனம் என்று கண்டறிந்து விட்டொழித்தனர். நமது பாமரரோ, அந்தப் பழயதையே உண்டு வருகின்றனர்—படித்தவர்களோ, அந்தப் ‘பழயதுக்கு’ ஊறுகாய் தேடித் தருகின்றனர்.கடவுட் தன்மை என்பதை விளக்கவும், மக்கள் மனதிலே ஏற்படக்கூடிய, தீய எண்ணங்களைத் தீய்த்து, அவர்களின் மனதைத் தூய்மையானதாக்கவும், கற்பனைக் கதைகள் பயன்படட்டுமே என்று வாதிடும் போக்கினரும்கூட உண்டு, இந்நாளில்! ஆனால், இதற்குக்கூடப் பயன்பட முடியாதபடியானவைகளும், பண்புக்கு ஊறு தேடுபவைகளும் உள்ள செயல்களையே, தேவனின் திருவிளையாடல் என்று தீட்டி வைத்துள்ளனர், புராணங்களில். இப்படிப்பட்ட, “திருவிளையாடல்களைக்” கொண்டே தேவனுக்கு, சிறப்புப் பெயர்களிட்டு, அர்ச்சித்தனர்!
இம்முறையில், ஓடினுக்கு, நாற்பத்தி ஒன்பது, பெயர்கள் உண்டு—அர்ச்சனைக்குரியனவாக!
பூலோகத்தைக் காணவும், வேறு பல உலகங்களைச் சுற்றிப் பார்க்கவும் ஓடின், வாயுவேக மனோவேகமாக ஓடக் கூடிய ஸ்லீட்னர் என்ற குதிரை மீதேறிச் செல்வாராம்.
ஓடினுடைய அற்புதச் சக்திகளைப் பற்றிப் பெரிதும் புகழ்ந்து கதை பல தீட்டிய டியூடானிக் புராணிகர், அதே கடவுளுக்குக் கஷ்டம் வருவதும் பகைவர் அவருக்கு எதிராகக் கிளம்புவதும், சில சமயங்களிலே, ஓடின் கடவுள் தோற்று ஓடுவதும் போன்ற கதைகளையும் தீட்டினர். கடவுள், சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே, எதையும், ஆக்கி அழிக்கும் ஆற்றல் உள்ளவரல்லவா, அவரைச் சாதாரணச் சிற்றரசன்போலச் சில சமயம் சித்தரித்துக் காட்டுகிறோமே, இது சரியா; சிந்தனைத் திறமுள்ளவர்கள் இதனை ஒப்புவரா, என்பது பற்றி எல்லாம் புராணிகன் எண்ணுவதில்லை, கடவுட் சம்பந்தமான கதைபற்றித்தான், சந்தேகிக்கவோ, ஆராயவோ கூடாதே—பாபம் என்று மதகுரு கட்டளை பிறப்பித்திருக்கிறானே! மதி குறைந்த மக்கள், ஏன், ஆராயப் போகிறார்கள் என்ற தைரியம் புராணீகனுக்கு. எனவே, முரண்பாடு மிகுந்த பல கதைகளைப் புனைந்தான், துணிவுடன். பக்தி காரணமாக சகலத்தையும் விழுங்கினர் மக்கள்.
இப்படிப்பட்ட, கடவுட் தன்மைக்கே முரணான கதையும் உண்டு, ஓடின் புராணத்திலே.
ஒரு சமயத்தில், ஆஸ்கார்ட் கடவுளர்களுக்கும், வான் மண்டலத்துத் தேவதைகளுக்கும் பெரும்போர் மூண்டு, ஓடின் தோற்றுவிட நேரிட்டது. ஆமாம்! மூலக் கடவுள் முறியடிக்கப்பட்டார், பரிவாரத்துடன். அவருடைய, மகன், அசகாய சூரன், தார்தேவனின் சக்தி வாய்ந்த சம்மட்டி உடைந்துவிட்டது, ஓடினின் மனம், அதைவிட அதிகமான அளவு உடைந்துவிட்டது. கடவுளர் உலகு கலக்கமடைந்தது. ஆஸ்கார்ட்—அதாவது டியூடானிய மக்கள் எதை, வைகுந்தம் என்றும் கைலாயம் என்றும் பயபக்தியுடன் கூறிவந்தனரோ, அந்தக் கடவுளர் உலகம், முற்றுகையிடப்பட்டது.
மூலக்கடவுளை முறியடிக்கக் கிளம்பிய, வான்மண்டல வீரன் பெயர், நிஜார்ட். இவன் வீரத்தின் முன்பு தாக்குப்பிடிக்கமுடியாமல், கடவுள்கள் மூலைக்கொருவராக ஓடலாயினர். வாயுவேக மனோவேகமாக ஓடக்கூடிய ஸ்லீப்னர் மீது ஏறிக்கொண்டு, ஓடின், ஆஸ்கார்டைவிட்டு, ஓடினார். அவர் மகன் தார், ஆடுகள் பூட்டப்பட்ட அற்புதத் தேர் ஏறி, ஆஸ்கார்டைவிட்டு வெளி ஏறினான்.
வெற்றி பெற்ற வான் மண்டலத்தார், ஓடின் அரசோச்சி அமர்ந்திருந்த பீடத்தில், உல் என்பவனை அமரச் செய்தனர். புதிய கடவுளானான், இந்த, உல்! கடவுள் எனும் அந்தஸ்தை இழந்து, ஓடின், தன் குடும்பத்துடன், ஒரு பாதுகாப்பான இடம் போய்ச் சேர்ந்தான். ஜுனகத் நவாப், ஓடிவிட்டார், என்று படிக்கும்போதே சிரிப்பு வருகிறதல்லவா நமக்கு, இவனும் ஒரு மன்னனா என்று—இங்கு, கடவுள் ஓடுகிறார், தோற்று—தலை தப்பினால் போதும் என்று!!
ஓடினுடைய தம்பி, லாக்தேவன் மட்டும், புதிய கடவுளின் பொன்னடி தொழுபவன்போலப் பாசாங்கு செய்து கொண்டு, ஆஸ்கார்டிலேயே வசித்து வந்தான்.
சர்வ வல்லமையுள்ள கடவுள் தோற்று ஓடி, தனி இடம் தேடியதோடு, வான் மண்டலத்தாரை வீழ்த்த, என்ன செய்வதென்று யோசித்த வண்ணம் இருந்தார்.
ஹாப்டன், என்றோர் அசுரன் இருந்தான்—அவனுக்கோர் மகன்—அவனை, ஓடின், சிறு குழந்தையாக இருக்கும்போதே, களவாடிச் சென்று, வளர்த்துவரலானான்.
இந்த அசுர குலத்தாருக்கும் வான் மண்டலத்தாருக்கும் தீராத பகை இருந்துவந்தது—எனவேதான், அசுரக் குழந்தையை ஆஸ்கார்டு கடவுள், அக்கரையுடன் வளர்க்கலானார்—பிறகு பகை மூட்டிவிட. குழந்தை வளர்ந்தது—ஓடின், தன் மந்திர பலத்தைப் பிரயோகித்து, இந்தக் குழந்தையை ஓர் மாவீரனாக்கினான்.
ஹாடிங் எனும் இந்த அசுர வீரன், ஆஸ்கார்டு மீது பிறகு படை எடுத்துச் சென்றான் பழிவாங்கும் உணர்ச்சியுடன். தன் வேலை முடியும் வரையில் வேறு எக்காரியத்திலும் ஈடுபட மறுத்து, தலைமயிரை சடை சடையாக வளர்த்து, கத்தரித்துக் கொள்ளவில்லையாம் இந்த அசுரன்.
ஆஸ்கார்டு போகும் வழியிலேயே இந்த அசகாயச் சூரனுக்கு ஆபத்து வந்தது. லாக் தேவன், இவனைப் பிடித்து, ஒரு காட்டில் மரத்தில் கட்டிவிட்டான். காவலாளிகளை அமர்த்தினான், அவன் தப்பிப் போகாதிருக்க.
ஹாடிங், ஒரு மந்திரப் பாட்டுப் பாடினான்—உடனே, அந்தக் காவலாளிகள், மாயத் தூக்கத்திலாழ்ந்தனர். ஒரு பெரிய ஓநாய் கோரப் பசியுடன் வந்தது அவனைக் கொல்ல, மற்றோர் மந்திரப் பாட்டுப் பாடினான், ஓநாய் செத்தது! இன்னொரு பாட்டு; அவன் மீது பூட்டப்பட்ட தளைகள் யாவும் பொடிப் பொடியாயின. இவ்வளவு வல்லமையுள்ள மந்திரப் பாடல்களையும், ஓடின்தான் ஹாடிங்குக்குக் கற்றுக்கொடுத்திருந்தான்!
வேடிக்கை பாருங்கள், இவ்வளவு மந்திர பலமும், ஓடினுக்குப் பயன்படவில்லை, தோற்றோடிவிட்டான். அவனே பிறகு, மந்திர பலத்தை இன்னொருவனுக்கு அளிக்கிறான்!
ஹாடிங்கின் கஷ்டம் இவ்வளவோடு நிற்கவில்லை. ஓநாய் ஒழிந்தது. ஆனால் ஓர் ஒய்யாரி வந்தாள் அவன் முன்—காதல் செய்யலானாள்.
“பாவாய்! பழிதீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள என்னை நாடாதே—” என்கிறான் வீரன்.
“பாராய் என் அழகை! கூறாய ஓர் காதல் மொழி” என்று கெஞ்சுகிறாள் அவள்.
அவள் ஓர் அரக்க குல அணங்கு. பெயர், ஹார்ட் கிரெப். அரக்கி எனினும், விரும்பியபடி எல்லாம், வடிவமெடுக்கக்கூடியவள். விஸ்வரூபம் எடுக்கிறாள் ஓர் சமயம், விண்ணும் மண்ணும் நிரம்பிட நிற்கிறாள்.—மறுவிநாடி அந்த மாயாவதி, அதிரூப சுந்தரியாகி, அன்பைப் பொழிகிறாள்.அவளுடைய கொஞ்சுமொழியில் மயங்கவில்லை, மாவீரன்—போர்—போர் என்று கொக்கரித்தான். அவளும் அவனை விடவில்லை—ஆண் உருவெடுத்து, ஆயுதம் தாங்கி அவனுடன் சென்றாள், போருக்கு.
இருவரும் பல ஆபத்துக்களைக் கடந்து, ஆஸ்கார்டுக்குப் பயணமாயினர். இடையில், மாயாவதிக்கு ஒரு பிசாசு கொடுத்த சாபத்தின் காரணமாக, ‘பெருங்கை’யால் சாவு ஏற்பட்டது.
‘பெருங்கை’—என்றால் என்ன! ஒரு கரம்! அண்டபிண்ட சராசரத்தையும் அடக்கி அழிக்கக்கூடியது! எப்போதேனும் தோன்றும்; மறையும்!
யாருடைய கரம்? புராணிகன் கூறுவதில்லை! கடவுளுக்கும் இல்லாத சக்தி, எப்படி அந்தக் கரத்துக்குக் கிடைத்தது? விளக்கம் கிடையாது! விளக்கம் கேட்கக்கூடாதே! பாபமல்லவா!! எனவே இதையும் நம்பினர் மக்கள்.
ஹாடிங், ஓர் ஓநாயை மீண்டும் எதிர்த்துப் போராட நேரிட்டது—அதைக் கொன்று, அதன் குடலைத் தின்றானாம்—உடனே, எவராலும் அடக்கமுடியாத அளவு, பலம் ஏற்பட்டுவிட்டது.
இனி அவனுடைய எதிர்ப்பைச் சமாளிப்பது வீண் என்று கண்டுகொண்ட, வான்மண்டலத்தார், சமாதானமாக விரும்பினர்.
ஓடினுடைய பீடத்திலிருந்த உல், தார் தேவனிடம் தூது சென்றான். சமரசம் ஏற்பட்டது. மீண்டும் ஓடின், கடவுளானான்!
இதுபோன்று, மற்றோர் முறையும் ஓடின், ‘கடவுள் வேலை’யை விட்டுவிட்டு, ஓட நேரிட்டது.ஹாதர் என்பவன், கிளம்பி, தன் பராக்கிரமத்தால் கடவுள்களைத் தோற்கடித்து, தேவலோகத்தைத் தன் தாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான். ஓடின், தார், பால்டர் எனும் பல கடவுள்களும் ஒன்றுகூடிப் போரிட்டும், பயனில்லை. மீண்டும் ஓடின், பதவி இழந்து, நாடோடியாக நேரிட்டது. பால்டரும் இறந்துவிட்டான்.
சோகத்துடன், ஓடின், ஆரூடக்காரரிடம் சென்றான்—ஆண்டவன் போகிறான், ஆரூடம் கேட்க! ஆரூடக்காரர், உன் அவமானத்தைப் போக்கி, பழிக்குப் பழிவாங்க, உனக்கோர் பாலகன் பிறப்பான், அவ்விதமான பாலகனைப் பெற்றெடுக்கக்கூடிய பாக்யவதி ரிண்டா என்பவளை, நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றார்.
‘நாம் கோகுலத்தில் பிறப்போம் கம்சனைக் கொல்ல’ என்று அசரீரி கூறுவதுபோலத்தான், இதுவும்.
ரிண்டா எனும் மங்கை, ருதேனியர்களின் மன்னனின் மகள். அவளை அடைய விரும்பி, ஓடின், மானிட உருவெடுத்துச் சென்று மன்னனிடம் பணியாளாகி, அவன் மனம் மகிழத்தக்க பல செயல் புரிந்து, மன்னன் மகிழ்ந்திருக்கும் நேரமாகப் பார்த்து, “மன்னா! எனக்கு உன் மகள், ரிண்டா தேவியை மணமுடித்துத் தரவேண்டும்” என்று கேட்டான். மாவீரனை மருகனாகப் பெறுவதிலே, மன்னனுக்கு விருப்பந்தான்—எனினும் மகளின் சம்மதத்தைப் பெற்ற பிறகே, மணம், என்று கூறிவிட்டான். எனவே, ஓடின், ரிண்டாவின் காதலைப் பெற முயற்சித்தான்.
அவளோ, “இவன் வீரன் என்பது சரி—ஆனால் வயோதிகன்! நானோ இளமங்கை! எனக்கோ இவன் மணாளனாவது!” என்று சீறினாள். ஓடினோ அவளை அடைந்தாக வேண்டும்—காதலுக்காக அல்லவாயினும், அவளை மனைவியாகப் பெற்று, ஒரு மகனை அவள் தத்தெடுத்துத் தந்தால்தான், இழந்த மானத்தை மீட்கமுடியும்—அதற்காக அவள் வேண்டும். அவளோ, வயோதிகனை மணாளனாகக் கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் செய்கிறாள். ஓடின், விதவிதமான காதல் விளையாட்டுகளெல்லாம் செய்து பார்க்கிறார்—ஒன்றும் பலிக்கவில்லை. அவளை முத்தமிடச் சென்றாராம் ஓர் முறை, ஓங்கிக்கொடுத்தாளாம் ஓர் அறை, கன்னத்தில்!
எவ்வளவு இழிவு வருவதானாலும் சரி, பொறுத்துக் கொள்ளத்தானே வேண்டும். பலமுறை முயன்றார் பகவான்! கடைசியில் அவளுக்குப் பிசாசு பிடிக்கும்படி செய்து, அதை ஓட்டும் மந்திரவாதியாக மாறி, அவள் மனதை மயக்கி, மணமுடித்துக்கொண்டார்.
போயி—எனும் குமாரனைப் பெற்றெடுத்தாள், ரிண்டா. இந்தக் குமாரன், தந்தையை விரட்டிய தருக்கரைத் தோற்கடித்து, ஓடினை மீண்டும் கடவுளாசனத்தில் இருக்கச் செய்தான்.
இப்படி இருக்கிறது ஓடின் புராணம்!
ஒன்றுக்கொன்று பொருத்தமோ, ஒன்றினுக்காவது பொருளோ, எதிலாவது, உண்மையான கடவுட் தன்மையோ, கடுகளவும் காணமுடியாத கதைகள். எனினும் அவைகளை, ட்யூடன மக்கள், பயபக்தியுடன் பாராயணம் செய்வதை, மதக் கடமையாகக் கருதினர். அவர்களுக்கு அந்தக் காலத்திலே கிடைத்த கம்பன்கள், காவியம் பாடினர்—ராஜாக்கள் கோயில் கட்டினர்—தம்பிரான்கள் தோன்றினர்—பக்திப் பிரவாகம், பல மண்டலங்களிலும் பெருக்கெடுத்தோடியது.
எவ்வளவு ஆபாசம், எத்துணை சதி, வஞ்சனை, நிரம்பியதாக உள்ளன இக்கதைகள்—இவைகளைக்கொண்டு, கடவுளுக்குப் பெருமை கற்பிக்க எண்ணுகிறீர்களே, பேதையரே! நீங்களா, உண்மை ஆத்திகர்கள்? இதுவா, மார்க்கம்? என்று, கேட்கும் துணிவும் தெளிவும் ஏற்பட நெடுங்காலம் பிடித்தது. ஆனால் தெளிவு ஏற்பட்டதும், கேட்டனர், அங்கு. கேட்டபோது, அவர்களுக்குக் கேடு செய்தனர் மூடர்கள். எனினும் அவர்கள் உண்மையை நிலைநாட்ட அஞ்சவில்லை. உயிர் பெரிதல்ல, உலகை உருக்குலையச் செய்யும் உத்தமர்களின் பிடியிலிருந்து மக்களை மீட்பதே பெரிது என்று எண்ணிப் பணிபுரிந்தனர்—வெற்றி பெற்றனர்—ஓடின் ஓட்டமெடுத்தான், கோயிலிலிருந்து!! மாஜி கடவுளானான்!
“அண்டங் காக்கையைக் கண்டேன்!” என்று புளுகு பேசிய பூஜாரிகள்—“ஓநாய்கள் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டு வந்தது சொப்பனத்தில்” என்று பிதற்றிய பேதையர், தெளிவு பெறுவது, எளிதான காரியமல்ல, மதவெறியை எதிர்த்து நிற்பது; ஆபத்தான காரியம். எனினும், நல்லறிவாளர்கள், எதிர்த்து நின்றனர், வெற்றி கண்டனர்; விரட்டி அடித்தனர், கற்பனைகளை.
கடவுளுக்குக் குடும்பம்; அதிலே கலகம்!
கடவுளுக்கு எதிரிகள்—அதனால் அவர் தோற்று ஓடுவது!!
இவைகளை நம்பிய மக்களின் தொகை, ஏராளம், அன்று.
இன்று, அவைகளைக் கேட்டுத் துள்ளி விளையாடும் பிள்ளைகளும், எள்ளி நகையாடும்—அங்கு!
இங்கோ, இன்றும், தக்கனைச் சிவனார் கொன்ற புராணத்தை நம்ப மறுப்பவன், பாபியாகக் கருதப்படுகிறான். கடவுள்களுக்குள் சண்டை—தேவலோகத்தில் கலகம்— ஒரு தேவனை மற்றோர் தேவன் தோற்கடிப்பது—என்பன போன்ற புராணக் கதைகளை, புண்ய கதைகளாகக் கொண்டு, புத்தியின் போக்கையே, பாமரர் பாழ்படுத்திக் கொள்கின்றனர்.
எவ்வளவோ கோலாகலமாக ‘வாழ்வு’ நடத்திய, ஓடின், மாஜி கடவுளானதை, நம் நாட்டுப் பாமரர் அறியார். அறிந்தவர்கள் உரைக்கவும் அஞ்சுகின்றனர்!
❖