உள்ளடக்கத்துக்குச் செல்

மாஜி கடவுள்கள்/கரமிழந்த கடவுள்

விக்கிமூலம் இலிருந்து


கரமிழந்த கடவுளுக்கு, மருத்துவக் கடவுள், உடனே வெள்ளியாலான விசித்திரமான கரத்தைத் தந்தான்! உண்மைக் கரம், எப்படிப் பயன்படுமோ அதேபோல இந்த வெள்ளிக் கரம் நுவாடா கடவுளுக்குப் பயன்பட்டது எனினும் அங்கம் இழந்தவன் கடவுளாக அரசோச்சுவது முறையல்ல, என்று எண்ணிய கடவுளா கூட்டம், நுவாடா தேவனைப் பீடத்திலிருந்து இறக்கிவிட்டு, புதிய கடவுளை பீடமேற்றத் தீர்மானித்ததாம்!

கரமிழந்த கடவுள்

ராதே! வராதே!!”
“போய்விடு! போய்விடு!”
“வீட்டைவிட்டு வெளியே போ!”
அந்தத் தேவனுடைய மாளிகையை அணுகினால், இதுதான் வரவேற்பு! மூன்று நாரைகள், மாளிகை வாயற்படியிலே இருந்துகொண்டு, தேவனைக் காணவருகிறவர்களுக்கு இந்தக் கடுமொழிகளை வீசுமாம்! முதல்நாரை, மாளிகையை நோக்கி யாராவது வருவதுகண்டதும், “வராதே! வராதே!” என்று கூவுமாம்! அதைப் பொருட்படுத்தாமல், மாளிகை எதிரே வந்து எவரேனும் நின்றால், இரண்டாவது நாரை, “போய்விடு! போய்விடு!” என்று கத்துமாம். போகாமல் நின்றால், மூன்றாவது நாரை, “வீட்டைவிட்டு வெளியே போ!” என்று கூவி விரட்டுமாம்.

வருகிறவர்களை விரட்டுவதற்காக இந்த விசித்திரமான மூன்று நாரைகளை வேலைக்கு அமர்த்திக்கொண்டு ஒரு தேவன், கோயில் கொண்டு எழுந்தருளியிருந்தான்—எங்கே? எஸ்கிமோக்கள் வாழ் நாட்டிலே அல்ல, சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட நாடு என்று பெருமை பெற்ற பிரிட்டனில்—பன்னெடுங் காலத்துக்கு முன்பு-பகுத்தறிவு வெற்றி பெறாத நாட்களில்.

பிரிட்டனிலும், ஏனைய நாடுகளிலே இருந்து வந்தது போலவே பல தெய்வ வணக்கம், இருந்து வந்தது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு ‘திவ்ய சொரூபம்’ ‘திருக்கலியாண குணம்‘. திரு அருளை நாடி, அத்தனை தேவதைகளையும், பிரிட்டிஷ் மக்கள் பூஜித்து வந்தனர். கோயில்களைக் கட்டினர்—கோலாகலமான திருவிழாக்களைச் செய்தனர்—பலி பல—பூஜாமுறை விதவிதமாக!

எந்தெந்தத் தேவனுக்கு எப்படி எப்படிப் பூஜை செய்வது, எப்போது செய்வது, செய்தால் கிடைக்கும் பலன் என்ன, செய்யத் தவறினால் ஏற்படும் கதி யாது என்பதுபற்றி, விளக்கம் கூறவும், கட்டளை பிறப்பிக்கவும், பூஜைகளின்போது காணிக்கை பெறவும், பூஜாரிக் கூட்டமும் இருந்து வந்ததது.

கடவுள்களின் சக்தியை பிரிட்டிஷ் மக்கள் நோடியாகக் காணமுடிவதில்லை, ஆனால் பூஜாரிகளின் சக்தியையோ, நேரடியாகக் கண்டனர்.—கண்டு கிலி கொண்டனர்.

பழங்காலப் பிரிட்டனில் பாமரரை ஆட்டிப் படைத்த பூஜாரிகளுக்கு, ட்ரூயிட் என்று பெயர். பூஜாரியின் புன் சிரிப்பைப் பெற, பாமரர் ‘தவம்’ கிடப்பர். புருவத்தை நெறித்தால், பாமரர் தம் கதி அதோகதியாகிவிட்டது என்று எண்ணிக் குமுறுவர். ட்ரூயிட்டுகளுக்கு அவ்வளவு மகத்தான செல்வாக்கு இருந்துவந்தது. தேவர்களுக்கும் மனிதருக்கும் இடையே நின்று, திரு அருளைக் கூட்டி வைக்கவோ, சாபத்தைப் பெற்றுத்தரவோ, ட்ரூயிட்டுக்களுக்கே அதிகாரம் இருக்கிறது என்று பாமரர் நம்பினர். எனவே அந்தப் பூஜாரிகளின் சொல்லை, நாடாளும் மன்னனுடைய சட்டத்தைவிட அதிக மேன்மையானதாகக் கருதிப் போற்றி வந்தனர். மன்னனுக்கு வரிகட்டத் தவறினால் ஏற்படக்கூடிய கேடு, சிறைவாசம்! ஆனால் பூஜாரிக்குக் காணிக்கை தரத் தவறிவிட்டாலோ, நரகவாசம் சம்பவிக்கும்! நரகமோ! நினைத்தாலே நெஞ்சிலே நெருப்பு! எனவே, பூஜாரிகளான ட்ரூயிட்டுகளிடம், பாமர மக்கள் அடிமையாகிக் கிடந்தனர்.

“நரபலி தந்தாக வேண்டும்—இன்ன தேவனின் கோபத்தைப் போக்க”–என்று ட்ரூயிட் கட்டளையிடுவான்—பலிபீடத்திலே மனிதன் வெட்டப்படுவான். “ஆயிரம் ஆடுகள் கேட்கிறாள் அன்னை”—என்பான் ட்ரூயிட், ஆட்டு மந்தைகளை ஓட்டிக்கொண்டு வருவர், பாமரர், ஆலயத்துக்கு!

“அந்த அழகான பெண்...?” ட்ரூயிட் கேட்பான்—“அர்ப்பணம்” என்பர் பாமரர், அடக்க ஒடுக்கமாக! ட்ரூயிட், புனிதப்பிறவி, கடவுளின் அருளைப் பெற்றவன், தேவதாம்சம்!

ட்ரூயிட், பூஜாரிமட்டுமா, அவன்தான் போதகாசிரியன், அவன்தான் சட்ட நிபுணன், சரித்திர ஆசானும் அவனே, சகல சாஸ்திரம் அறிந்துரைக்கும் பண்டிதனும் அவனே, மந்திரம் தெரிந்தவன், மருத்துவ வல்லுநன், இடிதேவன், ட்ரூயிட் கூப்பிட்டால் ஓடோடி வருவான், வானதேவனோ அவன் கேட்கும் வரமெலாம் தருவான். அவ்வளவு ஆற்றல் படைத்தவன் ட்ரூயிட், என்று பாமரர் நம்பினர், எனவே, அந்தப் பூஜாரிக் கூட்டம், பிரிட்டனில், மிகப் பெரிய செல்வாக்கு பெற்றுவிட்டது. ட்ரூயிட், வரி செலுத்தமாட்டான்—கேவலம் மன்னனா வரி கேட்பது, ஆண்டவனின் பிரதிநிதியிடம்!! போர் மூண்டால், கலப்பை தூக்கியும், கட்டை வெட்டியும், கனதனவானும், கடை கன்னிக்காரனும், வாள் தூக்குவர். ட்ரூயிட் களம் செல்லமாட்டான், ஆலயம் செல்வான், ஜெபமாலையுடன்! ட்ரூயிட்டால், யாரை வேண்டுமானாலும், ஜாதிப்பிரஷ்டம் செய்யமுடியும்.

இவ்வளவு ஆதிக்கம் செலுத்திவந்த ட்ரூயிட்டுகளின் பூண்டே அற்றுப் போய்விட்டது, அறிவு வளர்ந்ததும்! பூஜாரிகளின் பொய்யுரைகளைப் புனித உரைகளென எண்ணி ஏமாந்த மக்கள், ட்ரூயிடின் ஏவலர்களாக இருப்பதைப் புனிதமான ஒரு கடமை என்று எண்ணினர். பகுத்தறிவின் துணை கிடைத்ததும், ட்ரூயிடின் பேச்சு வெறும் புரட்டு என்பதை உணர்ந்தனர்.

பூஜாரியிடம் தரும் காணிக்கை, அவன் மூலம் ஆண்டவனுக்குச் செல்கிறது, என்று எண்ணிவந்த ஏமாளித்தனத்தால், ட்ரூயிட்டுகளிடம், அன்று பாமரர் காணிக்கை தந்து வந்தனர், அவன் கட்டளையைச் சிரமேற் கொண்டனர், அதே நிலை இன்னமும் நம் நாட்டிலே இருந்திடக் காண்கிறோம், மற்ற எல்லா வகைகளிலும் புதுமை ஒளி புகுந்தும், மதத்துறையிலே மட்டும் இருள் கப்பிக்கொண்டிருக்கக் காண்கிறோம்—துணிந்து சிலர் இந்த இருளைக் கிழித்தெறிய முனைந்தால், அவர்களை நாத்தீகர் என்று நிந்திக்கவும் மதவிரோதிகள் என்று கண்டிக்கவும், பாமரர் மட்டுமல்ல, அவர்களைப் பாமரர்களாகவே இருந்திடச் செய்ய வேண்டும் என்ற சூது மதி படைத்த ‘மேதை’கள் சிலரும் கிளம்பிடக் காண்கிறோம். பிரிட்டனிலே நெடுங்காலம், ட்ரூயிட்டுகளை தேவ தூதர்கள் என்றுதான் நம்பினர்—அவர்கள், ஆட்டி வைத்தபடி எல்லாம் தான் ஆடினர்—எனினும், அறிவு வளர வளர, ட்ரூயிட்டுகளின் ஆதிக்கம் ஆடிற்று, பிறகு, வேர் நசித்தது, பெருங்காற்றின்போது வேர் நசித்த பெருமரங்கள், கீழே வீழ்வதுபோல, பகுத்தறிவுப் புயல் வீசியதும், பூஜாரிக் கூட்டத்தின் ஆதிக்கம் அழிந்துபட்டது. இன்று ட்ரூயிட்டுகளின் ஆதிக்கம், பிரிட்டனிலே பாட்டிமார், பேரப்பிள்ளைகளுக்குக் கூறும் கதையாகக்கூட இல்லை!! அந்த அளவுக்கு ட்ரூயீட்டுகளின் ஆதிக்கம் மண்ணோடு மண்ணாகிவிட்டது. இங்கோ!! எண்ணிப் பார்க்கும், பகுத்தறிவாளன், ஏக்கத்தைத்தான் பெற முடிகிறது! அவர் தொட்டால் பட்ட மரம் துளிர்விடும்! அவர் பாதம் பட்டால், பாலைவனம் பூஞ்சோலையாகிவிடும்! அவர் காலைக் கழுவி நீரைப் பருகினால், மலடி வயற்றிலே மாணிக்கம் பிறக்கும்!—என்று எண்ணும் மந்த மதியினரும், “ஆமாம்! அற்புதம் இல்லாமலா போய்விடும்! அவதார புருஷர்கள் இல்லாமலா உலகம் நிலைத்து இருக்கிறது!” என்று பேசி ஏய்த்திடும் கபடர்களும் இன்னும் இங்கு இருக்கிறார்கள்! ‘இருட்டறையில் உள்ளதடா உலகம்’ என்று கவி கூறுகிறார், இந்நாட்டு நிலையைக் கண்டு, இருள், இங்குமட்டுமல்ல, எங்கும் இருந்தது, பிரிட்டனிலே நிரம்ப இருந்தது. அந்த இருட்டரசின் அதிபர்களாக இருந்த ட்ரூயிட்டுகளின் பிடியிலே சிக்கித் தவித்தனர், பிரிட்டனில் பாமரர்! அறிவு அவர்களை விடுவித்தது! இங்கு, அறிவுக்குச் சிறை, தடை, தண்டனை, கண்டனம்! ட்ரூயிட்டுகள் இங்கு ஒழியவில்லை! பூஜாரிகளின் ஆதிக்கம் இங்கு இன்னமும் அழிந்துபடவில்லை. வானத்தைக் காட்டுகிறான், வறியோரை ஏமாற்றுகிறான்! புராணத்தைப் பேசுகிறான், பாமரரைச் சுரண்டுகிறான்! வரம் தருவார் இந்தத் தேவன், வாழைப்பழம் ஒரு குலை, தேங்காய் இருபத்தைந்து, தட்சணை எட்டு ரூபாய், என்கிறான், கொட்டிக் கொடுக்கிறான், குடிசைவாசி! கும்பி குளிர்ந்தது என்கிறான் பூஜாரி. குலை நோய் வளருகிறதே என்கிறான் குருட்டுக் குப்பன். ட்ரூயிட்டுகள் அங்கு இல்லை—இருக்க அறிவு இடமளிக்கவில்லை. இங்கு ட்ரூயிட்டுகள் இருக்கிறார்கள், அறிவு நுழையவிடாமல் ஆயிரத்தெட்டு தந்திர முறைகளைக் கையாளுகிறார்கள். புராணப் புளுகுக்கு இங்கு இன்றும் இடம் இருக்கிறது. பிரிட்டனிலும், அதுபோன்ற அறிவு வென்ற நாடுகளிலும் பல கடவுள்கள் என்ற பேச்சு கிடையாது—இன்று. ட்ரூயிட்டுகள் ஆதிக்கம் செலுத்திவந்த அன்று, பல கடவுள்கள் உண்டென நம்பிய மக்களே, பக்தர்கள்; சந்தேகிப்போர், பாபிகள்! அந்த நிலை இருந்தபோது மக்கள், மனதிலே புகுத்தப்பட்ட புராணம்தான், மூன்று நாரைகளை வாயிற் காப்பாளராகக் கொண்ட கடவுளின் கதை! பிரிட்டனிலே, இன்று அந்த நாரைகளைப் பூஜிப்பவர் கிடையாது. நாரைகளை வேலைக்கு அமர்த்திக்கொண்ட தேவனைத் தொழுபவரும் கிடையாது—இங்கு, முருகனின் மயிலுக்குப் பூஜை இருப்பதுபோல! “முருகனிடம் சென்று என் குறையைக் கூறி வருவாய், குயிலே.”—என்று இன்றும் இங்கு, குயில் மொழி மாது பாடிட, ஆயிரவர் கூடிக் கேட்டு, ரசித்திடக் காண்கிறோம். குயில், முருகனிடம் இருப்பது, என்பது புராணம், பிரிட்டனில், நாரை கொண்ட நாதன் இருந்தது போல! அந்தக் குயிலைக் கூவி அழைத்து, முருகனிடம் சென்று தன் குறையைக் கூறிவிட்டு வரும்படி, பக்தன் உருகிப் பாடுவதாக, பாவை இங்கு பண்பாடக் கேட்கிறோம்! அதிலும், ‘குறை என்ன?’ என்று, பாடலின் மூலம், தெரிந்து கொள்ளும்போது, ‘நாடே! நாடே!!’ என்று கதறிடத் தோன்றும், கருத்திலே தெளிவுபடைத்த எவருக்கும். குயில் மூலம் சொல்லி அனுப்பும் சேதி இது; நேற்றிரவு முழுவதும் நித்திரை வரவில்லை! அன்று அவர் அளித்த சுகம் என்மனதில் ஆறாத தாபத்தை மூட்டி விட்டது! அழகி வள்ளியிடம் அவர் கொஞ்சிக் கிடக்கிறார்! அடியாள் அன்ன ஆகாரமின்றி, அவதிப்படுகிறேன்! குயிலே! என் குறையை எடுத்துக் கூறி, முருகனை ஒரு முறை வந்துபோகச் சொல்லு!

இது பக்திரசப் பாடல்! இதைக் கேட்க ஒரு பெருமன்றம்!! இங்கு, இப்படி, இன்றும்.

பிரிட்டனிலும் புரட்டரின் பேச்சுக்குப் பாமரர் செவி சாய்த்திருந்தபோது, இதுபோன்ற பல கடவுள்கள், மக்கள் மனதிலே இடம்பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட கடவுள்களிலே ஒருவர்தான், மூன்று நாரையை மாளிகை வாயலில் நிறுத்தி வைத்து, யாரையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்து, ஆட்சி புரிந்துவந்த தேவன். பெயர் மைடர்—பாதாளலோக தேவன்! இவனிடம் மூன்று அற்புதப் பசுக்கள் உண்டு! அற்புத சக்தி படைத்த வேறு பல பொருள்கள் உண்டு! இவைகளை யாரும் களவாடாமலிருக்க, மூன்று நாரைகள் காவல் புரிந்த வண்ணம் இருந்துவந்தன! இவ்வளவு முன்யோசனையுடன் இருந்தானே அந்தத் தேவன், அவனுக்கு நேரிட்ட கதியைக் கேளுங்கள்! ஒரு கவிவாணன், மூன்று நாரைகளையே களவாடிக்கொண்டு போய்விட்டானாம்!! பசுக்களை, குட்டி தேவதைகள் களவாடிக்கொண்டு போய்விட்டனராம்!! இம்மட்டுமா! மகளை; யாரோ ஒரு தேவன், களவாடிக்கொண்டு போய்விட்டானாம்! ஐயோ பாவம்!—என்று இதற்குள் பரிதாபம் காட்டிவிடாதீர்கள்! மைடர் தேவன், நாரைகளையும் பசுக்களையும், மகளையும் மட்டுமல்ல, மனைவியையும் பறிகொடுத்து விட்டானாம். அவனுடைய மனைவியை அபகரித்துச் சென்ற தீயோன யார், அசுரன் யார், அக்ரமக்காரன் யார், யார் அந்த இராவணன்? யார் அந்தக் கொடியவன்? என்று பக்த சிகாமணிகள் பதை பதைத்துக் கேட்கவும் முடியாது, ஏனெனில், மைடர் தேவனின் மனைவியை அபகரித்துச் சென்றவன், பூஜைக்குரிய, வரமளிக்கவல்ல, வல்லமை மிகுந்த, அங்கஸ் என்ற, மற்றொரு கடவுள்தான்!!—அதிலும் இந்த அங்கஸ் தேவன், வேறு யாருமல்ல, மைடர் தேவனின் உடன்பிறந்தோன்! என்ன சொல்வது, பக்தர்கள்! யாரை நிந்திக்க முடியும்! நடைபெற்ற காரியமோ, பஞ்சமா பாதகத்திலே கொடியதோர் பாதகம்! செய்தவரோ கடவுள்! எப்படிக் கண்டிப்பது? கடவுள் ஒருவருக்கா இக்கதி? ஒரு கடவுளா இப்படி தீயசெயல் புரிந்தார்? கடவுளின் இலட்சணமும் குணமும் இப்படியா இருக்கும்? மனிதர்களிலேயே, கடை கெட்டவர்களிடமல்லவா இப்படிப்பட்ட இழிகுணம் இருந்திடும். அவ்வித இழிகுணம் கொண்டவர்களைச் சமூகம், கண்டிக்கும், தண்டிக்கும்! கடவுள் இப்படிச் செயவாரா!—என்று கேள்விக் கணைகளைத் தொடுத்திட, இன்று முன்வருபவர் பலர் இருக்கக்கூடும். அன்று பிரிட்டனில், அப்படிப்பட்ட ‘பாபிகள்’ கிடையாது! கடவுளின் லீலா விநோதங்களிலே இதுவுமொன்று என்று எண்ணிப் பூஜித்துவந்த ‘பக்தர்கள்’ காலம் அது. ட்ரூயிட் காலம். எனவே மைடர் கடவுளின் மனைவியைக் களவாடிய அங்கள் தேவனையும் தொழுது வந்தனர்.

கடவுளர் பலர்—குடும்பம் குடும்பமாகக் கடவுள்கள், பகுத்தறிவற்ற நிலையில் இருந்த பிரிட்டனுக்கு. ஆதி கடவுள் டானு அம்மை! அம்மையின் கணவன், பைல் தேவன். அடுத்த கடவுள் டாக்டா—இனிய முகத்தேவன். அவரவரின் நற்குணத்துக்குத் தக்க அளவு உணவுதரும் அற்புதமான பாத்திரம் கொண்டிருந்தவன் இந்த டாக்டா! வேட்டையாடிப் பிழைப்பவன், வேலை செய்து பிழைப்பவன், களவாடி வாழ்பவன், கட்டைவெட்டி வாழ்பவன், கட்டியங்கூறிப் பிழைப்பவன், களப்பணியாற்றி வாழ்பவன், என்று பலதிறப்பட்டவர்கள் உண்டல்லவா ஒரு நாட்டில்—அவ்விதம் உள்ளவர்கள் அனைவரும், தத்தமது உழைப்பினால் உண்டு வாழ்வதாக எண்ணமாட்டார்கள். டாக்டாவின் பாத்திரத்திலே இருந்து தரப்பட்டதை உண்டு வாழ்வதாகவே எண்ணுவர்! பாத்திரத்திலே இருந்து கிடைக்கும் உணவின் அளவு அதிகமாகும், ட்ரூயிட் பூஜாரிக்குக் காணிக்கை தந்தால், குறையும் பூஜாரியின் மனம் குளிரும்படிச் செய்யாவிட்டால்! இவ்விதமான எண்ணம் மக்களை ஆட்டிப்படைத்தது!!

டாக்டா தேவன் குதிரைத் தோலாலான பழுப்புநிற ஆடை அணிபவன்! மரத்தால் செய்யப்பட்ட யாழை வாசிப்பான்—பருவங்கள் அதனால் ஏற்படும். தீயோரை அழிக்க, பெரியதோர் கதாயுதம், இந்தக் கடவுளிடம் இருந்தது! அதை ஒரு வண்டியில் வைத்துத்தான் இழுத்து வருவார்கள்! நாலு தலையும் ஆயிரம் கால்களும் கொண்ட மாட்டா எனும் ராட்சதனை அழித்த பெருமை, உண்டு, டாக்டாவுக்கு. இந்தக் கடவுளுக்கு, பாயாசம் சாப்பிடுவதிலே, அமோகமான ஆவலாம்—நம்நாட்டுக் கோயில்களிலே இப்போதும், இன்னின்ன கடவுளுக்கு இன்னின்ன வகையான ‘பிரசாதம்’ தான் பிடிக்கும் என்று கூறப்பட்டு, நம்பப்பட்டு, செய்யப்பட்டு வருவதைக் காண்கிறோமல்லவா—ரங்கநாதருக்கு அக்காரவடிசலும், வெங்கடேஸ்வரருக்கு மிளகுவடையும், வரதராஜருக்கு தேங்குழலும் இட்லியும், நடராஜருக்கு பெரிய வடையும்,—விநாயகருக்கு, அப்பமோடு அவல் பொறியும், என்று அட்டவணையே தருகிறார்களல்லவா, இங்கு, அதுபோல, பிரிட்டனில், அறிவுத் தெளிவு இல்லாத நாட்களிலே, டாக்டா தேவனுக்கு பாயாசம் பிரியமானது என்று பூஜாரி கூறினான், பக்தர்கள் நம்பினர்!

இத்தகைய கல்யாண குணம் படைத்த டாக்டா தேவனுக்கும் போவான் தேவிக்கும், பிரிகித், அங்கஸ், மைடர், ஆக்மா, பாட்ப், என்று ஐவர் பிறந்தனர்—கைலையில் பிறக்கவில்லையா, விநாயகர், முருகன், என இரு குமாரர்கள், அதுபோல!

இந்த ஐவரில், அங்கஸ் தேவன், அழகன்—தங்க யாழ் உடையவன்—அவனுடைய முத்தங்கள், பறவைகளாகிவிடுமாம்! இந்தத் தேவன்தான், தன் உடன்பிறந்தோனான் மைடர் தேவனின் மனையாட்டியை அபகரித்துக் கொண்டு சென்றவன்.

ஆக்மா தேவன், தேன் மொழியான்—அவன் அருள் பெற்றோர் கவிவாணராவர்!

கடைசி குமாரன் பாட்ப்! இந்தக் கடவுள்தான் டாக்டா தேவனுக்குப் பிறகு, அரசோச்சலானான்.

செந்நிறத்தான் என்ற சிறப்புப் பெயர் உண்டு, பாட்புக்கு—பொன்னார் மேனியனே! என்றும் கார்நிறமேனியன் என்றும், சிவனையும் விஷ்ணுவையும் இன்று இங்கு பாடித் தொழுகிறார்கள், இருட்டறையில் பிரிட்டன் இருந்தபோது பாட்ப் தேவனை, செந்நிறத்தானே! என்று பாடித் தொழுதனர்—மஞ்சள் நிற வேலாயுதம், சிகப்பு நிற வேலாயுதம்–பழி தீர்ப்போன் என்ற பெயருடைய வாளாயுதம், பெருங்கோபன், சிறுங்கோபன் எனும் பெயருடைய வாட்கள், அலை அழிப்போன் எனும் பெயர் கொண்ட ஓடம், நிலத்திலும் நீரிலும் செல்லத்தக்க குதிரை, மாயக் கவசம், மந்திர வாள், இவைகள், செந்நிறத் தேவனிடம்!! இவை மட்டுமல்ல! அருமையான பல பன்றிகள் வைத்திருந்தானாம் இந்த பகவான்! கண்ணன் ஆடுமாடுகளை மேய்த்தவனல்லவா—பிரிட்டனில் பகவான் பன்றிகளை மேய்த்திருக்கிறான். அடிக்கடி அருமையான விருந்தளிப்பானாம் இந்தத் தேவன், மற்ற தேவர்களுக்கு—பன்றி இறைச்சியைப் பதமாகச் சமைத்து விருந்தளிக்கப்படுமாம்! விருந்தின் விசேஷம் இதுதான் என்று எண்ணாதீர்கள்—பன்றிகளைக் கொன்று சமைத்து, விருந்து உண்டானதும், கொல்லப்பட்ட பன்றிகள் மீண்டும் உயிர்பெற்று வருமாம்!!

பாட்ப் தேவன் தன் தேவி மாரிக்யூவுடன், கூடி வாழ்ந்து வந்தான், மக்களின் பூஜைக்குரியவனாக! பிறந்தான்—பிறந்ததும், கடவுளர் உலகு பெரும் பீதி கொண்டது—இந்தக் குழந்தையைக் கொன்றாக வேண்டும், இல்லையேல், விண்ணும் மண்ணும் அழியும்—இது விபரீதக் குழந்தை என்று கூறினான், மருத்துவத் தேவன். விபத்து நேரிடாதிருக்க, கடவுளின் குழந்தையை, மருத்துவக் கடவுள் கொன்று, இதயத்தைப் பிளந்துபார்க்க, அதிலே மூன்று பாம்புகள் இருந்தனவாம்! இவை வளர்ந்தால், தேவருலகும் மாந்தருலகும் அழிந்துபடும் என்று கூறி, பாம்புகளைக் கொன்று கொளுத்தி சாம்பலை ஆற்றிலே கொண்டுபோய் கரைக்க, நெருப்பாறாகிவிட்டதாம்! இப்படிப்பட்ட புராணங்களை, ட்ரூயிட்டுகள் கட்டிவிட்டனர், மக்கள் நம்பினர், கொட்டிக் கொடுத்தனர், காணிக்கையை, கட்டினர் பல கோயில்களை! எங்கே அந்தக் கோயில்கள்! இப்போதும் இங்கிலாந்து நாட்டிலே, காடுகளை அடுத்த மேடுகளிலே காட்டுவர் கற்கள் சிலவற்றை—இவைகள்தாம், ட்ரூயிட் காலக் கோயில்கள் என்று!

பிரிட்டன், அயர்லாந்து, பிரான்சு, அதை அடுத்த நாடுகள், இவ்வளவு பரந்த பூபாகத்திலே அரசோச்சி வந்தனர், அர்த்தமற்ற கதைகளைக் கட்டிவிட்டு, பாமரர் மனதிலே அச்சமூட்டி அடிமை கொண்ட ட்ரூயிட்டுகள்.

அவர்களின் புரட்டுரைகளில், பொருள் இல்லையே, கூறப்படும் கதைகளிலே, மனித குல மேம்பாட்டுக்கான நற்கருத்துக்களும் காணோமே, என்ற எண்ணம் பிறக்கவே நெடுங்காலம் பிடித்தது. பாயாசத்தைப் பருகுபவன் ட்ரூயிடே தவிர டாக்டா தேவனல்ல, என்ற எண்ணமே தலைகாட்டப் பயப்பட்டது நெடுங்காலம். மெள்ள மெள்ள ஆனால் தொடர்ந்து, அறிவு, பரவலாயிற்று—சிந்திக்கத் தொடங்கினர்—ஆராயத் தொடங்கினர்—காரணம், விளக்கம், தேடலாயினர். பூஜாரிகளின் புனிதக் கதைகள் பொய்யுரைகள் என்ற தெளிவு பிறந்தது. பிறந்ததும், அதை வெளியே எடுத்துக் கூறத் துணிவின்றி இருந்தனர், சில காலம். பிறகு ஒருசிலர், பேசலாயினர்—பேசினோர் பெருந்தொல்லைக்கு ஆளாயினர். மத ஆதிக்கக்காரர்களின் கொடுமைகளைத் தாங்கிக்கொண்ட சிலர், உயிரை இழந்தாலும் கவலையில்லை, உண்மையை உலகுக்கு அறிவிப்பேன் என்று கூறினர். உறுமினர் ட்ரூயிட்டுகள்! ஊராள்வோனை ஏவினர், உத்தம மதத்தைப் பழிக்கும் உலுத்தர்களின் தலையை வெட்டும்படி. தலைகள் வெட்டப்பட்டன! பகுத்தறிவாளர் படையின் முதல் வரிசையினர், பிணமாயினர். ஆனால், அடுத்த வரிசை, அதற்கு அடுத்த வரிசை, புதுப்புது வரிசைகள், என்று முன் வந்த வண்ணம் இருந்தனர் பகுத்தறிவாளர். தலைகளைச் சீவினோர் களைத்துப் போயினர்—பாமரர் மேலும் தெளிவு பெற்றனர். பகுத்தறிவுக்கணைகள் வேக வேகமாகக் கிளம்பின—மதப் போர்வைகளைக் கிழித்தெறிந்தன. ட்ரூயிட் பயப்படலானான்! பதறினான்! பக்கத் துணையாக படை, முடி தரித்தோன், மாளிகைவாசி ஆகியோரைச் சேர்த்துக்கொண்டான்—பலன் இல்லை! காரணம் காட்டு, இல்லையேல் கடையைக் கட்டு! என்று முழக்கமிட்டனர் பகுத்தறிவாளர். காரணம் என்ன காட்டமுடியும்! ஒரு கடவுளின் மனைவியை இன்னொரு கடவுள் திருடுவதற்கும், குழந்தையின் இதயத்திலே குவலயத்தையே அழிக்கும் கொடிய பாம்புகள் குடி புகுந்ததற்கும், காரணம் என்ன காட்டமுடியும்! ட்ரூயிட் தன் காலம் முடிவுற்றது என்று உணர்ந்தான், ஆதிக்கத்தை இழந்தான். பூஜாரி போகும்போது அவனுடைய கற்பனை உருவங்கள் மட்டும் போகாதிருக்க முடியுமா! டாக்டா தேவன், மைடர், அங்கஸ், பைல் தேவி, என்ற கடவுட் கூட்டம் அவ்வளவும், மறைந்தன—மாஜிகளாயின! ஒரு காலத்திலே ஐந்தாறு நாடுகளை ஆட்டிப் படைத்த கோலாகலக் கடவுள்கள், மாஜிகளாயின! இங்கு இன்றும் உள்ள காடன், மாடன், காட்டேரி, இருளன், இடும்பன், ஏகாத்தா எனும் தேவதைகளைவிட, செல்வாக்கு அதிகம் பெற்றிருந்த, டாக்டா, மைடர், அங்கஸ், என்பன போன்றவைகள் எல்லாம், பிரிட்டனில், அறிவுத் தெளிவு ஏற்பட்டதும், மாஜி கடவுள்களாயின.

சூரசம்மாரம், நம் நாட்டிலே இன்றும் திருவிழாவல்லவா! புராணம், தன் பிடியிலேதான் மக்களை வைத்துக் கொண்டிருக்கிறது. பாமரர், சூரனுடைய கோரஸ்வரூபம் உட்பட, புராணத்திலே குறிப்பிடப்படும் சகலவற்றையும் நம்புகிறார்கள், நம்ப மறுப்பவனை நாத்திகன் என்று நிந்திக்கிறார்கள். மற்றும் சிலரோ, இவைகளுக்குத் தத்துவாரத்தம் கூறி, புத்துயிரூட்டப் பார்க்கிறார்கள், சித்திர நடையும், ஓசை அழகும், உவமை நயமும், இந்தக் கதைகளிலே எவ்வளவு நிரம்பியுள்ளன! செவிச்சுவை உணரா மாக்களன்றோ இத்தகு கதைகளை ரசிக்க மறுக்கும்! என்று ஏசுவர், எதுகைமோனை வணிகர்கள். நாரை நாதனும், பாயாச பகவானும், பிரிட்டனிலே இருந்தார்களய்யா, கோயில் கட்டிப் பூஜித்தனர் மக்கள். எனினும், அறிவு வளர வளர, கடவுட் தன்மைக்கும் புராணக் கற்பனைகட்கும் நேர்மாறாக இருப்பதை உணர்ந்தனர்—மாஜிகளாயினர் அந்தக் கடவுள்கள் என்று எடுத்துரைத்தாலோ, ஏடா!மூடா! எமது புராண இதிகாசாதிகளிலே, உள்ள வருணனைக்கு ஈடாகக் குவலயத்திலே வேறு உண்டோ! விரிசடைக் கடவுள் திரிபுரமெரித்த காதையும், வேலேந்தி சூரனைக் கொன்ற காதையும், மராமரம் துளைத்த காகுத்தன் இலங்கையை அழித்த காதையும், எத்துணை வீரச்சுவை சொட்டும் காவியக் கனிகள் என்பதை அறிவாயோ! நாடு பலப்பல உண்டு! ஏடுகள் ஏராளம்! எனினும், எந்த ஒரு ஏட்டிலேனும் காட்டமுடியுமோ, தேவாசுர யுத்தம் போன்றதோர் பெரும் போராட்ட வருணனையை, என்று கேட்பர், விழிகளை உருட்டியபடி—அவர்தம் ஆர்ப்பரிப்பு கேட்டு பாமரரும் நம்புகின்றனர், நவரசம் ததும்பும் புராணக் கதைகளை, இங்குமட்டுமே கட்டினர், காவியக்காரர்கள்—பிற நாட்டாருக்கு அந்தத் திறமை இருந்ததில்லை, என்று எண்ணி ஏமாறுகின்றனர்.

கடவுள்களுக்கும் அசுரர்களுக்கும் மூண்ட போர்களும் கடவுள்களுக்குள்ளாகவே மூண்ட போர்களும் பழைய கடவுளுக்கும் புதிய கடவுளுக்கும் எழுந்த போர்களும், இங்குபோல, அங்கெலாமும் ஆதிநாட்களிலே கதைகளாகக் கூறப்பட்டு, நம்பப்பட்டுத்தான் இருந்தன. சில, இங்குள்ள புராணங்களை போட்டியிலே வெல்லுமளவுக்குப் பொய்யும் புனைசுருட்டும் நிரம்பியவை!

கடவுள்—மனம், வாக்கு, காயம் என்பவைகளுக்கு அப்பாற்பட்டது என்ற தெளிவு தோன்றாமுன்னம், பல கடவுள்கள் உண்டு என மக்கள் எண்ணிய நாட்களிலே, கடவுள்களுக்குள்ளாகச் சமர் நடந்ததாகக் கதை கட்டிவிடுவது எளிதான காரியந்தானே! பிரிட்டனிலும், அயர்லாந்திலும், ட்ரூயிட் பூஜாரிக் கூட்டம் ஆதிக்கம் செலுத்தி வந்த நாட்களிலே இவ்விதமான கதைகள், ஏராளமாக உலவி வந்தன!

விண்ணுலகாதிபதியாக நுவாடா தேவன் கொலுவீற்றிருந்தபோது, ஒரு அசுரக் கூட்டம் கடவுட் கூட்டத்தைத் தாக்கிற்று—கடவுளின் கரம் துண்டிக்கப்பட்டுவிட்டது!

ஆமாமய்யா, கடவுளின் கரம்தான்! சிரிக்கிறீர்களா!! இவ்வளவு பைத்யக்காரத்தனமான கருத்தா, பிரிட்டனிலே இருந்தது என்று எண்ணும்போது கைகொட்டிச் சிரிக்கத்தான் தோன்றும்! பிரிட்டனிலே இந்தப் பைத்யக்காரத்தனமான கதை பகவத் புராணம், முன்பு, மூடுபனி போல குருட்டறிவு இருந்த நாட்களில், இன்றல்ல! இந்தப் பைத்யக்காரத்தனத்தை அந்த நாட்டு மக்கள் விட்டொழித்து, பலப்பல நூற்றாண்டுகளாகிவிட்டன. நாம்? துடுக்குத்தனமாக நடந்துகொண்ட பிரமதேவனுடைய சிரத்தைச் சிவபெருமான் கிள்ளிய கதையை—கதை என்று கூறுவதுகூடப் பாபம், என்று இன்றும் சொல்கிறோம்! கபாலி! என்று அர்ச்சிக்கிறோம். பாடுகிறோம் இந்த சிரமறுத்த செயலைப் புகழ்ந்து. பக்தர்கள், கடவுளின் செயலா இது என்று கேட்பவனை, கோபப் பார்வையாலேயே சுட்டுச் சாம்பலாக்கிவிடுவர்! பிரிட்டன், குப்பைமேட்டுக்கு அனுப்பிவிட்டது கரமிழந்த கடவுள் கதையை!! நாம், சிரமிழந்த பிரமன் கதையை, நம்புபவரே ஆத்தீகர் என்று கூறும் மேதைகளை உலவவிட்டிருக்கிறோம்.

நம்நாட்டுப் பாமரருக்கு இன்னும் உள்ள பித்தம், அந்த நாட்களிலே பிரிட்டனில் பாமரருக்கு இருந்தபோது, கட்டிவிடப்பட்ட கதை, நுவாடா தேவன், அசுரருடன் போரிட்டபோது, கரமிழந்தான் என்பது.

கரமிழந்த கடவுளுக்கு, மருத்துவக் கடவுள், உடனே வெள்ளியாலான விசித்திரமான கரத்தைத் தந்தான்! உண்மைக் கரம், எப்படிப் பயன்படுமோ அதேபோல இந்த வெள்ளிக் கரம், நுவாடா கடவுளுக்குப் பயன்பட்டது எனினும், அங்கம் இழந்தவன் கடவுளாக அரசோச்சுவது முறையல்ல, என்று எண்ணிய கடவுளர் கூட்டம். நுவாடா தேவனைப் பீடத்திலிருந்து இறக்கிவிட்டு, புதிய கடவுளை பீடமேற்றத் தீர்மானித்ததாம்!

சமுத்திர லோகத்திலே அரசோச்சிக்கொண்டிருந்த கடவுளர் பலர்! மூலக் கடவுள் அங்கு, எலாதன்—அவனுடைய திருக்குமாரனாம், ப்ரெஸ் தேவனைத் தேர்ந்தெடுத்தனர், கடவுளாக வீற்றிருந்து ஆட்சி நடாத்த!

ப்ரெசுக்கு, இது மட்டுமல்ல, டாக்டா தேவனின் திருக்குமாரி ப்ரிகத் தேவியைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டது.

பழைய கடவுள் கரமிழந்து பதவி இழந்தார்.

புதிய கடவுளாகப் ப்ரெஸ் பீடமேறினார், பரிகத் தேவியாருடன்!

கடவுள் உலகுச் சேதிதான்—காட்டுராஜாக் கூட்டத்துக் கதை அல்ல!!

அரசாள வந்த ஆண்டவன் சமுத்திரலோகவாசிகளிடமே அதிகப் பிரியம் கொண்டவன். எனவே, புதிய பிரஜைகளைக் கொடுமையாக நடத்தலானான். தாங்கொணா வரிச் சுமைகள்! சொல்லொணாக் கஷ்டங்கள்! பழைய கடவுள்களெல்லாம், பஞ்சத்தால் அடிபட்டு, எலும்பு முறியப் பாடுபட வேண்டி நேரிட்டதாம். டாக்டா தேவனே, கோட்டை கொத்தளம் கட்டிப் பிழைக்கும் நிலை அடைந்தார்! கடவுளா கோட்டை கொத்தளம் கட்டினார்—என்று கேட்பீர், கேவிக்குரலில், அவ்விதம் அன்று அறியாமையிலே உழன்ற மக்கள் நம்பினர்; பிட்டுக்கு மண் சுமந்த படலத்தைத் தித்திக்கும் தமிழில் திருவாளர் பண்டிதர் ரேடியோ மூலம் பரப்பிடக் கேட்கிறோம், இங்கு, இன்று! கொடுங்கோலாட்சி கண்டு குமுறினர் கடவுளர்கள், ப்ரெஸ் கடவுளோ, புதிய அரசை ஆட்டிப் படைத்து வந்தான்.

இந்நிலையில், மருத்துவத் தேவன், மகன் மையாக் என்பவன், தன் மாந்தரீக மருத்துவத் திறமையால், நுவாடா கடவுளின், வெட்டுண்ட கரத்தை, புதைகுழியிலிருந்து கொண்டுவரச் செய்து ஒட்டவைத்துவிட்டான்! கடவுள் இழந்த கரத்தைப் பெற்றார். எல்லோரும் களித்தனர்—ஒரு கடவுளுக்கு மட்டும் கோபம் கொப்பளித்தது! யாருக்கு? மையாக் தேவனின் தந்தையாம் மருத்துவத் தேவனுக்கு! என்னை மிஞ்சும் திறமைசாலியாகவா, என் மகன் இருப்பது, என்று எண்ணினான், கோபமும் பொறாமையும் குபுகுபுவெனக் கிளம்பிற்று. மகனை அழைத்தான், சம்மட்டி கொண்டு மண்டையை நொறுக்கினான். மும்முறை மையாக் தன் மருத்துவ முறையால் உயிர் தப்பினான், நான்காம் அடி மண்டையைப் பிளந்ததுடன், மூளையையே இரு துண்டுகளாக்கிவிடவே, மையாக் தேவன் மாண்டு போனான்! அவனைப் புதைத்த இடத்திலே 365 புல் முளைத்தனவாம்! அவை ஒவ்வொன்றும், மனிதனுடைய உடலிலே உள்ள 365 நரம்புகளிலேயும் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் அற்புத மூலிகைகளாயினவாம்!

எப்படி இருக்கிறது தந்தை—மகன் உறவு,—கடவுலுலகில்!!

நுவாடா பழைய பொலிவும் வலிவும் பெற்றது, பழைய கடவுள்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டிற்று.

இந்த மாறுதலைச் சட்டை செய்யவில்லை, புதிய கடவுள்—தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. கவிதைக் கடவுளான ஆக்மா தேவனையே அவமதிப்பாக நடத்தினான், கவிக் கடவுள் கடுங்கோபம் கொண்டு, ஏசல் பாடினார் ப்ரெசைக் குறித்து, உடனே புதிய கடவுளின் முகமெலாம் கொப்புளங்கள் கிளம்பி, அகோரமாகிவிட்டன. கூடினர் கடவுள்கள்—இனி இந்த அவலட்சணத்தை நாங்கள் ஆளவிடோம் என்று முழக்கமிட்டு, ப்ரெசை விரட்டினர் பழைய கடவுளாம் நுவாடாவுக்கு முடிசூட்டினர்

முடி இழந்த ப்ரெஸ், சமுத்திரலோகம் சென்று தந்தையிடம் முறையிட, தந்தை தன் படையைத் திரட்டிக் கொண்டு கிளம்பினார், போருக்கு! விண்ணுலகுக்கும் சமுத்திர லோகத்துக்கும் போர்!!

விண்ணுலகிலும் கடவுள் பெருமன்றம் கூடிற்று போர்த்திட்டம் வகுக்க.

லக் தேவன், வந்தான் விண்ணுலகினருக்குத் துணை செய்ய. துவக்கத்திலே அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவன் தன் ஆற்றலை விளக்கிக் காட்டினான்—சகலகலா வல்லவன்—சர்வ சக்தி வாய்ந்தவன் லக் தேவன் என்பது விளக்கப்பட்ட பிறகு, விண்ணகத்தார், லக் தேவனை பதின்மூன்று நாள் கடவுள் வேலை பார்க்கும்படி அனுமதித்தார்கள்.

அந்த நாட்களிலே, சமுத்திர லோகாதிபதி, விண்ணுலகிலே வரி வசூலித்து வருவதற்காக 81 தூதுவர்களை அனுப்ப, லக் தேவன், அவர்களிலே 9 பேர் தவிர மற்றவர்களைக் கொன்றுவிட்டான்.

உயிர் தப்பிய 9 பேர்களும் ஓடோடிச் சென்று இதைக்கூற, எலாதனும் அவனுடைய பரிவாரமும் திகிலும் ஆச்சரியமும் கொண்டு, விண்ணுலகுக்குத் துணை நிற்கும் புதிய வீரன் யார் என்று யோசிக்கலாயினர்.

“அந்தப் பெரும் பலசாலி வேறு யாருமல்ல, என் பேரப்பிள்ளைதான். என் மகளை, விண்ணுலக மருத்துவ தேவனின் மகன் கயானுக்குத் தந்தேனல்லவா. இந்த லக் தேவன் கயானுவுடைய குமாரன்தான், என் பேரன்!” என்று விளக்கம் கூறினான் பாலர் தேவன்.

பேரனானால் என்ன, போருக்கழைக்கிறான் கிளம்புவோம், என்று ஆர்ப்பரித்தனர், கடலுலகக் கடவுளர்.

ஏழாண்டுகள் இரு தரப்பும் படை திரட்டின! பிறகு மூண்டது பயங்கரமான போர்!

பாலர் தேவன் தீக் கண்ணன்! அவனுடைய நெற்றியிலே உள்ள கண் மூடிக் கிடக்கும்—இறப்பையைத் தூக்கிப் பிடித்தால், பார்வையில் பட்டோர் தீய்ந்து போவர்! களத்திலே நின்றான் பாலர் தேவன்—கண்ணைத் திறவுங்கள் இந்தக் கடவுட் கூட்டத்தைச் சாம்பலாக்கிவிடுகிறேன் என்றான்—கண் இறப்பையைத் தூக்கினர், ஆனால் லக் தேவன், ஒரு மந்திரக் கல்லை எடுத்து வீச, அது பாலர் தேவனுடைய தீக்கண்ணில் பட்டு, கண் தெறித்து, பின் புறம்விழ, கடலுலகக் கடவுளர் படை சாம்பலாயிற்று! எஞ்சியிருந்தோர் பீதி கொண்டனர்! படை வரிசையிலே பெருங்குழப்பம்—பின்வாங்கி ஓடலாயினர், லக் தேவனின் படைகள் துரத்தலாயின! இந்தப் பெரும் போருக்குக் காரணமாக இருந்த ப்ரெஸ் பிடிபட்டான். லக் தேவனிடம் உயிர்ப்பிச்சைக் கேட்க, லக் தேவன், விண்ணுலகு தழைக்க ஒரு தேவ இரகசியம் கூறவேண்டுமென்று நிபந்தனை விதித்தான், ப்ரெஸ் இசைந்தான். எந்தநாளில் உழுவது, எந்தநாளிலே விதைப்பது, எந்தநாளிலே அறுவடை செய்வது, எனும் தேவரகசியத்தைத் தெரியச் செய்தால் உயிர் பிழைக்கலாம் என்று லக் தேவன் கூற, செவ்வாய்க்கிழமைதான், உழவுக்கு, விதை விதைக்க, அறுவடைக்கு ஏற்றநாள் என்ற மாபெரும் தேவ இரகசியத்தை ப்ரெஸ் கூறி, உயிரைக் காப்பாற்றிக்கொண்டான்.

இதற்கிடையில், டாக்டா தேவனுடைய அற்புத யாழ் கடலுலகத்தவரால் களவாடப்பட்டுவிட்டது. அதை மீட்பத்ற்காக லக் தேவனும் டாக்டா தேவனும் கடலகம் சென்றனர்—அங்கு ஒரு சுவரிலே யாழ் தொங்கவிடப்பட்டிருந்தது. கடவுள்களின் அற்புத சக்தி போலவே, அவர்களின் ஆயுதங்களுக்கும் உண்டு, என்ற எண்ணத்தால்தானே, இங்கு, ராமபாணம், ராவணனைக் கொன்று, இதயம் பூராவும் துளைத்து, பிறகு ஏழு கடலில் குளித்து, பிறகு இராமனுடைய அம்புறாத்தூணியிலே வந்து சேர்ந்தது, என்று புராணம் கூறுகிறது—இப்படி ஒரு புளுகா என்று கேட்பவர்மீது கண்டனத்தை வீசுகிறார்கள் பக்தர்கள்—இதே முறையிலே, பிரிட்டனில் பழங்காலப் புளுகன் கூறிய கதையிலே, கடவுளின் ஆயுதமும் அற்புத சக்தி வாய்ந்ததுதான்—எனவே, யாழ், தன் எஜமானனாம் டாக்டா தேவன் வருவது தெரிந்து, குதித்தோடி வந்ததாம்—வருகிற வழியிலே ஒன்பது கடலகக் கடவுளரையும் கொன்றதாம்.

டாக்டா தேவன், யாழை எடுத்து, நீலாம்பரி வாசிக்க, கடலகக் கடவுளர் நித்திரையிலாழ்ந்தனர், விண்ணகத்தார் வீடு திரும்பினர்.

விண்ணகக் கடவுளருக்கும் கடலகக் கடவுளருக்கும் நடைபெற்ற போராட்ட காதை இது!

வீரம், அற்புதம், சோகம், வியப்பு,—எது இல்லை, இந்தக் கதையிலே!

தத்துவார்த்தம் கூறவாவது, முடியாதா, இந்தக் கதைக்கு—இருளுக்கும் ஒளிக்கும் நடைபெறும் போராட்டமே இந்தப் புராண உருவிலே தாப்பட்டிருக்கிறது என்று வாதாட முடியாதா! முடியும், ஆனால் செய்யவில்லை!! அறிவு வென்றது. இவைகளெல்லாம், அர்த்தமற்றன என்று கண்டுகொண்டனர்—மனதிலே இவ்விதமான கதைகளைப் புகவிட்டால், மார்க்கத்தின் புனிதத்தையோ, கடவுட் கொள்கையின் மேன்மையையோ, உணரமுடியாது, என்று தெளிவு பெற்றனர், எனவே கரமிழந்த கடவுள், தாரமிழந்த கடவுள், போரிட்டு மாண்ட கடவுள், பழைய கடவுள், புதிய கடவுள், ஆண் கடவுள், பெண் கடவுள், அம்பு வீசும் கடவுள், அற்புத யாழ் வாசிக்கும் கடவுள், என்ற பலவிதமான கடவுள்களையும், கருத்தைக் குழப்பிவிடக் கூடிய, கற்பனைகள், மனித குலத்திலே மாசு மனம் படைத்தோர் காசு தேடக் கட்டிவிட்ட கதைகள், என்று ஆண்மையாளர்கள் கூறினர்—டாக்டாவும் நுவாடாவும், ப்ரிகத்தும் ப்ரெசும், அங்கசும் மைடரும், லக்தேவனும் பிறரும், மாஜி கடவுள்களாயினர்!! மானிலத்திலே மதிக்கத்தக்க இடம் கிடைத்தது பிரிட்டிஷ் மக்களுக்கு. புனிதக் கதை, பூர்வீகச் சொத்து, தர்மோபதேசக் கதை, என்று சாக்குகளைக் கூறிக்கொண்டு, நம் நாட்டவர்தான், ராமபாணம், வேலாயுதம், சூலாயுதம், சிரமறுத்தது, திரிபுரம் எரித்தது, அமிர்தம் கடைந்தது, ஆலகாலம் உண்டது, பிட்டுக்கு மண் சுமந்தது பிள்ளைக்கறி கேட்டது, போன்ற பழங்காலக் கற்பனைகளை இன்றளவும் மெய்யெனக் கூறிக்கொண்டு பொய்யறிவிலே நெளிந்து பாழ்படுகின்றனர். கடவுளருக்குத் தொட்டிலும் கட்டிலும், வாழ்வும் தாழ்வும், பிறப்பும் இறப்பும், போரும் பிறவும் உண்டு என்றுதான் முதலிலே எல்லா நாட்டவரும் எண்ணினர்—அங்கெல்லாம் மெய்யறிவு ஆட்சி செய்கிறது—புராணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விரட்டப்பட்டுவிட்டது–இங்கோ, கேள்வி கேட்பவனையே, நாத்தீகன் என்று நிந்திக்கிறார்கள். பிரிட்டனிலே, ஒரு காலத்திலே ஓங்காரச் சொரூபங்களாய் கருதப்பட்டு வந்தவைகள், மாஜி கடவுள்களாகிவிட்டதைக் கண்டபிறகாவது, கருத்திலே தெளிவு தோன்றலாகாதா!! உலகிலே வேறு எவருக்குமே தோன்றாத கற்பனை அலங்காரங்கள் இங்குதான் உதித்தன என்று எண்ணிக் கொண்டு, அந்தக் கற்பனைகள் காலத்தின் தாக்குதலால் புழுத்துப் போயினும், கைவிட மறுக்கும் கருத்துக் குருடர்களல்லவா இங்கு மதவாதிகளாக உள்ளனர். சில நாடுகளிலே, இந்த நாட்டிலே தீட்டப்பட்டதைவிட விந்தையான கடவுட் கதைகள் தீட்டப்பட்டு பாமரரால் திரு அருளைக் கூட்டுவிக்கும் புண்ய ஏடுகள் என்று போற்றப்பட்டுத்தான் வந்தன—எனினும் தெளிவு, தேங்கிக்கிடந்த மன மாசுகளை அப்புறப்படுத்திற்று, அவர்களெல்லாம் வாழலாயினர்.

இங்குள்ள புராணங்கள், தேவாசுர யுத்தம் அல்லது தேவர்களுக்குள்ளாகப் போர் என்ற அளவுடன் நின்றுவிட்டன. அயர்லாந்து இதைவிட ஒருபடி மேலால் சென்று, தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் போர் நடந்ததாகவும் அந்தப் போரிலே மனிதர் வென்றதாகவும், கடவுள்கள் தம் ராஜ்யத்தை இழந்து, ‘கண்காணாச் சீமை’ சென்றதாகவும்கூடப் புராணம் தீட்டியிருக்கிறது.

லக் முதலாய கடவுளர், கடலகக் கடவுளரை வென்று தமது ஆதிக்கத்தை பிரிட்டனில் மட்டுமல்லாமல் அயர்லாந்திலும் பரப்பிப் பரிபாலனம் செய்து வந்தனர். கடவுளர் என்றால், இதுதானே முறை, வெற்றி அவர்கட்குத்தானே, அவர்களை வீழ்த்தக்கூடிய வல்லமை வேறு எவருக்கு உண்டாக முடியும் என்று சராசரி பக்தர் கூறுவர். அயர்லாந்திலே நடந்ததாகக் கூறப்படும் கற்பனையோ, இதற்கு நேர்மாறானது.

ஸ்பெயின் நாட்டு மனிதர்கள், அயர்லாந்து வளம்பற்றியும் அங்கு வாகை சூடி வாழ்ந்துவரும் கடவுளர்களைப்பற்றியும் கேள்விப்பட்டு, அப்படிப்பட்ட நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்று தீர்மானித்தனராம். வீரத் தலைவர்கள் சிலர் கிளம்பினர், படைகளுடன் கடவுளரின் அரசைக் கவிழ்க்க, போர் மூண்டது, மாந்தராக்கும் கடவுளருக்கும். கடவுட் கூட்டம் தோற்கடிக்கப்பட்டது. விரண்டோடினராம் கடவுளர், வெற்றி வீரர்களான மாந்தரிடம் அயர்லாந்தை விட்டுவிட்டு! இந்தக் கடவுட் கதை எப்படி இருக்கிறது! மாந்தரால் தோற்கடிக்கப்பட்டு, மணிமுடி இழந்து, மண்டலமிழந்து, கண்காணாச் சீமை தேடி, கடவுளர் கூட்டம் விரண்டோடுகிறது!

இப்படி ஒரு ‘தேவமாகதை’ அயர்லாந்தில்!

இன்று இந்தக் கற்பனையையா, வழிபாட்டுககுரிய மார்க்கமாகக் கருதுகிறார்கள், அந்நாட்டு மக்கள்? இல்லை, இல்லை! அவர்கள் அறிவு பெற்றுவிட்டார்களே, எப்படி ‘அபத்தங்களை’ நம்புவர்! இங்கு நம் நாட்டிலே, ஆண்டுதோறும், மண்ணாலே துரியன் உருவம் செய்து, மரக்கத்தி கொண்டு, பீமன் வேடம் அணிந்த பக்தன், வெட்டும் விழா நடத்துகின்றனர்! அதனைப் புண்யகாரியமென்று கருதுகின்றனர். அயரும் பிரிட்டனும் அந்த நாள் அர்த்தமற்ற கதைகளை, கவைக்குதவாதன, என்று கண்டு கொண்டன பல நூற்றாண்டுகளுக்கு முன்பே.

கடவுட் கதைகள், பொருத்தமும் அருத்தமும் இல்லாதிருக்கலாம், ஆனால், அவைகளிலே பொதிந்துள்ள நீதிகள், தேவையானவையன்றோ என்று பேசும் நாவுக்கரசர்களும், அந்தக் கதைகளிலே கலாரசம் காண்கிறோமே எங்ஙனம் தித்திக்கும் தேனேடுகளை விட்டொழிக்க முடியும் என்று உருகும் கலாவாணர்களும் இங்கு இன்றும் உள்ளனர்.

பிரிட்டனிலும் அயரிலும், பிரான்சிலும் ஸ்பெயினிலும், இத்தகைய ரசம் தேடிகள் இல்லாமலில்லை! எனினும் அவர்களால் அறிவின் வேகத்தைத் தடுக்கவோ, வளர்ச்சியைக் கெடுக்கவோ முடியவில்லை. ‘ரசம்’ நிரம்பிய கடவுட் கதைகள் அங்கெலாமும் இருக்கத்தான் செய்தன. கனவில் கண்ட காரிகைக்காகக் காதல் கொண்டு, உருகி உடல் கருகி உள்ளீரல் பற்றி எரிவது அவியாது என் செய்வேன் என்று ஏங்கிய கடவுட் கதைகூடத்தான் உண்டு. காயாத கானகத்தில் நின்றுலாவிய காரிகையைக் கண்டு, புல் மேயாத மான் வந்ததுண்டா, அதைத் தேடி வந்தேனே வள்ளிமானே என்று பாடிய முருகன் கதை போன்ற கடவுளரின் காதல் விளையாட்டுக் கதைகளும்தான் அங்கெலாம் இருந்தன. விரகதாபத்தால் உடல் கருகிய தேவன், புதுப்புது மலர்களை நாடிச் சென்று காதல் தேனை மொண்டு உண்டு களித்த கடவுள், காதலுக்காகப் பெரும் போரில் ஈடுபட்ட கடவுள், எனப் பலப்பல கடவுளர்கள், மக்களின் மனதிலே இடம் பெற்றுத்தான் இருந்தனர், மதி துலங்கும் வரையில்!

காட்டுமிராண்டிகளிடம் மட்டுமே காணப்படும் நடவடிக்கைகளை, அந்த நாட்களிலே. கடவுட் கதைகளிலே காணலாம்—மக்கள் அந்த நாட்களிலே, இப்படிப்பட்ட இழி செயலையா கடவுளர் செய்வர், என்று எண்ணினதில்லை, எண்ணுவதே பெரும்பாபம் என்றான் பூஜாரி! கடவுளருக்கு, இதுதான் முறை இது முறையல்ல என்று ஒரு நியதி உண்டா, கேவலம் மனிதப் பிறவிகள்போலவா, கடவுளரைக் கட்டுப்படுத்த முடியும் என்றான் பூஜாரி! ‘ஆமாமாம்!’ என்றனர் பாமரர்.

காதல் விளையாட்டுடன், கடவுளர் காமக் களியாட்டத்திலே ஈடுபட்டனர்—அம்மட்டோடு விடவில்லை—பெண்களைக் களவாடினர்—பிறன் மனைவியைக் கற்பழித்தனர்—சிறை வைத்தனர்—எனினும் தேவப் பதவியை இழக்கவுமில்லை; மக்களின் பூஜையையும் பெறாமலில்லை.

அங்கஸ் தேவன், தன் உடன்பிறந்தானான் மைடர் தேவன் மனையாட்டியான எடெயின் தேவியைக் களவாடிச் சென்று, கண்ணாடிப் பெட்டி ஒன்றிலே சிறை வைத்தான்—செல்லுமிடமெல்லாம் இந்த ‘சிங்காரச் சிறை’யை எடுத்துச் செல்வான்—மைடர் மீண்டும் மனையாட்டியை அழைத்துக் கொள்ளாதபடி தடுக்க. சிறைப்பட்ட சிங்காரியும், “அவர் இல்லாவிட்டால் இவர்” என்ற பெருநோக்கம் கொண்ட பெருமாட்டி போலும்! எனவே, அங்கஸ் தேவனின் இன்பவல்லியாகிவிட்டாள். அக்ரமம் செய்த அங்கஸ் தேவனை மற்றக் கடவுளர் தண்டித்தனரோ! இல்லை!! போர் மூண்டதோ? அதுவும் இல்லை. அங்கஸ் தேவன் பாபகாரியம் செய்தவன் என்பதால் அவனைப் பூஜிப்பது கூடாது என்று பூஜாரி கூறினானோ? இல்லை! வழக்கம் போல, அங்கஸ் கடவுளர்களிலே ஒருவனாகத்தான் இருந்து வந்தான்.

மனைவியைப் பறிகொடுத்த மைடர்மட்டும் மனவேதனைப்பட்டான்—இனி அந்தத் தூர்த்தையையும் துஷ்ட சிகாமணியையும் எப்படியாவது தொலைத்துவிட்டு மறு வேலை பார்க்கிறேன் என்று கோபத்துடன் மைடர் கிளம்பினானா? அதுவும் இல்லை! எப்படியாவது இழந்த இன்பத்தைப் பெறவேண்டும் என்றே துடியாய்த் துடித்தான்; சமயம் கிட்டவில்லை.

அங்கஸ், அழகுத் தெய்வமல்லவா!—எனவே அவனிடம் பல பெண்தேவதைகள் காமுற்றுவிடுவது வழக்கம். அப்படி மோகம்கொண்ட ஒரு தேவ மாது, எடெயின் தேவியை, ஈயாக மாற்றிவிட்டு, அங்கஸ் தேவனின் அன்பைப் பெற்றாள்.

ஒரு கடவுளுக்கு வாழ்க்கைப்பட்டு, மற்றோர் கடவுளால் களவாடப்பட்டு, கடைசியில் ஈயாக மாற்றப்பட்ட, எடெயின் என்ன செய்வாள்! ஏழாண்டுக் காலம் பறந்து திரிந்தாள், ஈ!!

இதுபோதுதான், அயர்லாந்துக்கு மாந்தர் மன்னரானது. அந்த மன்னன் ஒரு விருந்து நடத்திக்கொண்டிருந்தபோது, பறந்து வந்து, பான வட்டிலில் வீழ்ந்துவிட்டது—ஈ அவள் கருவிலே சென்றுவிட்டது. அழகிய ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பூலோகத்திலே மானிடக் குழந்தையாகப் பிறந்த எடெயின், கண்டவர் ஆச்சரியப்படும் கட்டழகியானாள். அந்த அழகியின் புகழ் அயர் முழுவதும் பரவிற்று. அயர் மன்னனே அவளைக் கண்டு பரவசமடைந்து திருமணம் செய்துகொண்டான்.

அப்போதுதான் மைடர் தேவனுக்கு, தன் மாஜி மனைவி அயர் மன்னனின் பட்டத்தரசியானது தெரிந்தது. பாசம் விடவில்லை. பூலோகம் சென்றான் வடிவழகன் உருவில். எடெயினைக் கண்டு, அவளுடைய ‘பூர்வோத்திரத்தை’ எடுத்துக் கூறி, கடவுளருலகுக்கு வந்துவிடும்படி கெஞ்சினான்—அந்த வஞ்சி மறுத்துவிட்டாள்!

மைடர் தேவனுக்கோ தணியாத தாபம். என்ன தந்திரம் செய்தேனும், தன் முன்னாள் மனைவியை மீண்டும் பெறவேண்டும் என்று தீர்மானித்தான்.

அழகும் கெம்பீரமும் வாய்ந்த இளைஞன் உருவிலே மன்னன் கொலுமண்டபம் சென்று, அவனைச் சொக்கட்டான் விளையாட்டுக்கு அழைத்தான்.

தோற்றவர், கெலித்தவர் கேட்பதைத் தந்தாகவேண்டும் என்பது நிபந்தனை. சொக்கட்டானில் மன்னன் வென்றான்—மைடர் தேவன் தோற்றான்—மன்னன், அயர் நாட்டிலே பெரிய பாதை அமைத்துத் தருமாறு கேட்க மைடர் அதன்படியே செய்து முடித்தான்.

மறு ஆண்டு, மீண்டும் மைடர் தேவன், சொக்கட்டான் ஆடினான்—இம்முறை வென்றான்.—“என்ன வேண்டும் கேள்! தரக் கடமைப்பட்டிருக்கிறேன்!”—என்றான் மன்னன். மன்னன் மனதிலே பேரிடி வீழ்ந்தது, மைடரின் பேச்சு கேட்டு; “நிபந்தனையின்படி நான் கேட்கும் பொருளைத் தந்தாகவேண்டும். மன்னா! உன் மனைவியைக் கொடு!!”—என்றான் மைடர். மன்னன் மனம் குழம்பிற்று. “அடுத்த ஆண்டு வா, அழைத்துச் செல் என் அழகு மனைவியை” என்றுகூறி அனுப்பிவிட்டான். குறிப்பிட்ட நாளில் மைடர் வந்தான், ஆனால் மனைவியை இழக்கத் துணிவானா மன்னன்! காவலர்களைத் திணித்து வைத்தான் அரண்மனை எங்கும், மைடர் உள்ளே நுழையாதபடி!! மாயாவியல்லவா மைடர் தேவன்! உள்ளே வந்துசேர்ந்தான் ஆயிரத்தெட்டு கட்டு காவலையும் சட்டை செய்யாமல். எடெயினை அழைத்தான். அந்த எழிலரசியும் இசைந்தாள். இருவரும் அன்னப்பட்சி உருவமெடுத்து பறந்து சென்றனர்.

கடவுளருகிலே இழந்த கருந்தனத்தை, பூலோகத்திலே, ‘மறு ஜென்மத்திலே’ கண்டெடுத்தான்—எனினும் களித்தான் மைடர்!

மன்னனோ, தாங்கொணா மனவேதனை அடைந்து எங்கு இருந்தாலும், என் எழிலரசியை நான் கொணர்ந்தே தீருவேன் என்று சூளுரைத்துவிட்டு, படை திரட்டிக் கொண்டு, எட்டுத் திக்கும் சென்று தேடினான். கடைசியில், பாதாள லோகத்திலே மைடர் இருப்பதும், அங்குதான் எடெயின் இருப்பதும் தெரியவந்தது. கடவுளருலகு சென்று, பூமியைத் தோண்டலானான்—பாதாள லோகம்சென்று பாவையை மீட்பேன் என்று கூறினான்.

பாதாள லோகத்திலே மைடர் பதைத்தான்! பாவி தோண்டியபடி இருக்கிறானே, நமது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடுவான் போலிருக்கிறதே, பிறகு, எல்லோருக்குமே தெரிந்துவிடுமே பாதாளலோகம், தெரிந்துவிட்டால், நமது மகிமை மங்கிவிடுமே, என்ன செய்வது என்று பதைத்து, எடெயின் போன்ற ஐம்பது எழில் மங்கையரை அனுப்பினான், மன்னன்முன்! மன்னனோ, “இந்தப் பூங்கொடிகளுக்காகவா நான் பூலோகத்திலிருந்து பாதாளலோகம் நுழையப் பாதை வெட்டுகிறேன்! எனக்கு, என் எழிலரசிதான் வேண்டும்”—என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். கடைசியில், தன் அரசு அழியாமலிருக்க எடெயினைத் தருவது தவிர வேறு மார்க்கமில்லை என்பது மைடருக்குத் தெரிந்துவிட்டது. “அழைத்துச் செல்” என்று கூறிவிட்டான் ஆயாசத்துடன். அழகி எடெயினை அழைத்துக்கொண்டு சென்றான், அயர் மன்னன்!

இப்படி ஒரு புராணம்!! இன்பவல்லிகளுக்காகக் கடவுளர் பட்டபாடும், கெட்டகேடும் இவ்விதமாக இருந்திருக்கிறது—புராணப்படி. மனிதத் தன்மைக்கே மாறானதும், ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகிய எந்தப் பண்புக்கும் முரணானதுமான நிகழ்ச்சிகள்—இவை தேவகதைகள்! தெளிவற்ற நிலையிலே, அயர் மக்களும், பிரிட்டானியரும் இருந்தபோது காமச் சேட்டைகளைக்கூடக் கடவுளரின் திருவிளையாடல் என்றே எண்ணினர், பயபக்தியுடன். ஒரு கதையாவது, காரணம் கேட்டால், விளக்கம் கேட்டால், நிற்காது நிலைக்காது!—பொறுத்தமற்ற சம்பவங்களைப் பின்னித் தருகிறான் புராணீகன், மேலே ‘கடவுள் முலாம்’ பூசித் தருகிறான். எனினும், ஏன், எப்படி, என்று கேட்பவன், பாபி!! எனவே, இத்தகைய ஆபாசமான கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டனர், பூஜாரி பெருமையாகக் கூறியபோது. இப்படிப்பட்ட இழி செயல்களை இறைவன்மீது ஏற்றிக் கூறுவது, மடைமை மட்டுமல்ல, கொடுமையுமாகும், என்ற அறிவு பிறக்க நெடுங்காலம் பிடித்தது. ஆனால் அறிவு அரும்பளவு தெரிந்தது, அது வளர, மலர, இடமளித்தனர் அங்கெல்லாம்—இங்கோ கபடர்கள், கருத்துத் துறையிலே புது மலர் பூத்திடக்கூடாது என்பதற்காக, மிருகத்தனமான முறைகளைக்கூடக் கையாண்டிருக்கிறார்கள். கருத்துலகத்துக் கருகிய மொட்டுகள் இங்கு ஏராளம்! அவ்வளவு திறமையாக மத ஆதிக்கக்காரர், மடைமையைக கட்டிக் காத்துக் கொழுக்க வைக்கிறார்கள். எனவேதான், பிரிட்டனிலும், அயரிலும், ஸ்பெயினிலும், பிறநாடுகளிலும் ஏற்பட்ட அறிவுப் புரட்சி இங்கு, பையப்பைய, பயந்து பயந்து, அக்கம்பக்கம் பார்த்துப் பார்த்து, நுழையவேண்டி இருக்கிறது!

அங்கு, எண்ணற்ற மாஜி கடவுள்கள்! அறிவு பரவிற்று, இருளுருவங்கள் தானாக மறைந்தன!