உள்ளடக்கத்துக்குச் செல்

மாஜி கடவுள்கள்/ஜுவஸ்

விக்கிமூலம் இலிருந்து

தந்தையைப் போரில் வென்ற ஜுவஸ், தந்தையின் அரியாசனத்தில் அமர்ந்துதாரன் மந்திராலோசனைப்படி ஆட்சி புரியலானான். தந்தை குரோனாஸ் விழுங்கிய குழந்தைகளை எல்லாம், மீண்டும் அவன் உள்ளிருந்து வெளியே, உயிருடன் கொண்டுவருவதற்காக கடும் விஷமொன்றைத் தயாரித்து குரோன்சை பருகச் செய்தான். உடனே உள்ளே இருந்த பாசிடன், ப்ளுட்டோ, ஹெஸ்ட்டியா, டெமீடா, ஹீரா எனும் குழந்தைகள் யாவும் வெளியே வந்தன, உயிருடன் இவைமட்டுமா, குழந்தையென நம்பி விழுங்கிவிட்டானே, கல், அதுவுங்கூட வெளியே வந்துவிட்டதாம். உடன்பிறந்தார்களை தந்தையின் வயிறாகிய சவக் குழியிலிருந்து மீட்டான்.

ஜுவஸ்

தலைப்பைக் கண்டே, சீறிச் சபித்திட வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும், ஆத்தீகத்தின் பாதுகாவலர் தாமே என்ற எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கு.

“ஆதி அந்தமில்லாத கடவுளையா, ‘மாஜி’ என்று கூறுகிறாய்; மதியீனனே! மந்திரியா, ராஜதந்திரியா, மன்னனா, சீமானா, மகேசனாயிற்றே! மன்னன் மாஜியாவதுண்டு, மந்திரி மாஜியாவதுண்டு, கடவுளை ‘மாஜி’ என்கிறாயே மமதையாளனே! இந்தப் பாபம் உன்னைச் சும்மாவிடுமா” என்று சுடுசொல் பல கூற எண்ணுவர், நாம் ஏதோ நாத்தீகம் பேசுகிறோம் என்ற எண்ணம் கொண்டு.

தலைப்பை மீண்டும், பார்க்கும்படி, கருத்துடன் கவனித்துப் பார்க்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

‘மாஜி கடவுள்’ அல்ல, தலைப்பு; மாஜி கடவுள்கள்!! என்பது தலைப்பு; புரிகிறதா உண்மை?

பல கடவுள்களை, பூஜித்துக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது, எல்லா இடத்திலும்.

தந்தைச்சாமி, தாய்ச்சாமி, தாய்ச்சாமிக்கு ஒரு சக்களத்திச்சாமி, பிள்ளைச்சாமி, பெண்சாமி, என இவ்வண்ணம், பல தெய்வ வழிபாடு இருந்து வந்தது—அறிவுத் தெளிவு இல்லாதிருந்தபோது—உலகில் பல நாடுகளில்.

ஒருவனே தேவன்!—என்ற அடிப்படை உண்மையும், ஒழுக்கமே மதம் என்ற உன்னதக் கோட்பாடும், அறிவுத் துறையிலே. அரியாசனம் ஏறுவதற்கு முன்பு, பல தெய்வ வழிபாடுதான், அங்கெல்லாம் இருந்து வந்தது.

பகலுக்கு ஒரு தெய்வம், இரவுக்கு இன்னொன்று! பஞ்சம் தரும் தேவதை ஒன்று, அதைப்போக்கும் தெய்வம் மற்றொன்று; படைகலக்கும் தெய்வமொன்று, இடிமுழக்கும் தெய்வம் ஒன்று, என்ற விதமாக, எண்ணற்ற கடவுட் கூட்டத்தை, மக்கள் கும்பிட்டு வந்தனர்—பல்வேறு நாடுகளில்.

மனமாசு நீக்கக்கூடிய பகுத்தறிவுக் கதிர் தோன்றிய பிறகு, பல தெய்வ வழிபாடு என்பது, உண்மையான ஆத்தீகமாகாது—மதமாகாது—அருள் பெறும் வழியாகாது—மனமருள் கொண்ட மக்களை, சூது மதிமிகுந்த பூஜாரிக் கூட்டம், பிடித்தாட்டவே, கட்டிவிடப்பட்ட, கற்பனை இது, என்ற எண்ணம் வெற்றி பெற்றது; அந்த வெற்றியின் காரணமாக, பல கடவுள்கள், மாஜிகளாயினர்!

அந்த மாஜி கடவுள்களையே, நாம் மதத்தின் மாசு போக்கும் செயலைக்கூட, நாத்தீகமோ, என்று மருட்சியுடன் எண்ணும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறோம்.

இந்த மாஜி கடவுள்கள் ஒரு காலத்தில், விண்ணை முட்டும் கோபுரங்கள் கொண்ட கோயில்களிலே கொலுவீற்றிருந்தனர்—பூஜாரிக் கூட்டம் புடைசூழ, பக்தர் குழாம் பாதம் தொழ, பாவலரும் நாவலரும் பக்திப் பாசுரங்கள் பலப்பல கூறிட, நாடாள்வோன் நவநிதியும் காணிக்கையாகத் தர, கோலோச்சி வந்ததுண்டு.

இந்த மாஜி கடவுள்களின் அருமை பெருமை, அருள் தரும் திறமை, ஆற்றல் ஆகியவை பற்றி பெரிய புராணங்களைத் தீட்டித் தந்தனர், அருட்கவிகள், என்று பாமரரால் புகழப்பட்ட கவிவாணர்கள்.

எனினும், இன்று அவை எலாம், மாஜி கடவுள்களே!!

கொட்டு முழக்கு கேட்கும் கோயிலிலே, அல்ல, இந்த மாஜி கடவுள்கள், இன்று இருப்பது—கண்காட்சிச் சாலைகளிலே!

பூஜாரிகள் மந்திர உச்சாடனம் செய்ய, பூமான்கள் காணிக்கை கொட்ட, பக்திமான்கள் பரவசப்பட, அல்ல, இந்த உருவங்கள், இன்று இருப்பது.

ஆராய்ச்சியாளர்கள் படம்பிடிக்க, சரித்திரக்காரர்கள் சம்பவங்களைத் தொகுக்க, மாணவர்கள் காலத்தையும் கருத்தையும் ஒப்பிட்டுப் படிக்க உதவும் உருவங்களாகிவிட்டன.

எந்தெந்த நாடுகளிலே, ஏத்தி ஏத்தித் தொழப்பட்டு வந்தனவோ, அங்கெல்லாம் இன்று ஏக தெய்வக் கொள்கை அரசு செலுத்துவதால், இந்த மாஜி கடவுள்கள் ஒரு காலத்துக் கற்பனைகள், பழங்காலத்து நினைவுகள், பூஜாரியின் கருவிகள், என்றாகிவிட்டன. பகுத்தறிவாளர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும், பாமரர்களுக்கும் தெளிவு பிறக்கும் வண்ணம், நல்லறிவு அந்த நாடெல்லாம், பரப்பப்பட்டுவிட்டது. நானாவிதமான உருவங்களுடன், நாட்டு மக்களையும் நாடாள்வோரையும், மருட்டிக் கொண்டிருந்த உருவங்கள், இன்று மாஜி கடவுள்களாகிவிட்டன.

அந்த மாஜி கடவுள்களிலே, ஒருவர் ஜூவஸ்—பெருந்தெய்வம்—மூலத்தெய்வம்!

இந்த மாஜி கடவுளின், சக்தியைப் பற்றிய கதைகளை, இன்று, அறிவுள்ளோர் அனைவரும், பூஜாரியும் புலவனும் சேர்த்துத் தயாரித்த சரடுகள் என்று கூறுகின்றனர்—ஆனால், மாஜியாகா முன்பு, ஜூவசுக்கு இருந்துவந்த மதிப்பும் செல்வாக்கும், அளவிட முடியாது! புராணங்கள் பலப்பல, பூஜைகள் பலவிதம்!

ஜூவஸ், கிரேக்கர்கள், பூஜித்து வந்த, பெருந்தேவன்—தேவர்க்கரசன்—தேஜோன்மயமானவன்!

ரோம் நாட்டவர், இதே கடவுளை, ஜூபிட்டர், என்ற பெயரால் பூஜித்தனர்.

ஜுவசின் “திருக்கல்யாண” குணத்தைக் கொண்டாடிப் பாமாலை சூட்ட, அந்த நாட்டில் ‘கம்பன்’ இல்லாமல் இல்லை!

🞸🞸🞸🞸


கருத்தெலாம் அறியும் கண்ணன்
பாரெலாம் பார்த்திருந்தான்!
பத்தரை மாற்றுத்தங்கம்,
பகவான் வீற்றிருந்த பீடம்.
என்னகாண் அவன்தன் ஆற்றல்
என்றுள இடியோன் அவனே.


தேவர்தம் உலகைத்தானே
தன் திருப்பாதம் தாங்கும்,
ஆசனமாகக் கொண்டான்
அருத்திறன் உடையோன், கண்டாய்.
அவனுரை கேட்ட அண்டம்
அதிர்ந்திடும் அச்சம்கொண்டே
அவன்சிரம் அசையக்கண்டு
தேவரும் பெருவர் திட்டம்.
விதி எனும் கோலும் ஆடும்
வினை எலாம் ஓடும் அவன்முன்
ஆண்டவன் அவன்முன் அண்டம்
அதிர்ந்திடும் அச்சம் கொண்டே!

🞸🞸🞸🞸

இக்கருத்துப்பட, திருப்புகழ் பாடினவர், சாமான்யக் கவிராயர் அல்ல—Homer—உலக மகாகவிகளில் ஒருவர் என்று, எவரும் வியந்து, கூறும் ஹோமர்!

இந்தத் திருப்புகழ், இன்று, கவியின் கற்பனைத்திறத்துக்கும், கவிதையின் சிறப்புக்கும், எடுத்துக்காட்டாக இருக்கிறதேயன்றி, ஜூவசின் பால், பக்தி செலுத்தும்படி, மக்களைத் தூண்டும், சக்தி பெறவில்லை!

மனக்கண்முன், சித்தரித்துப் பாருங்கள்!

பிரம்மாண்டமான ஆலயம்! ஆஜானுபாகுவான உருவமாக, ஜூவஸ் தேவன், சிலை உருவில், இருக்கிறார். மணிமாடங்கள்! மண்டபங்கள்! திருக்குளங்கள்! பூம்பொழில்கள்! மதில்கள்! பிரகாரங்கள்! மடைப்பள்ளிகள்! எல்லாம், செல்வத்தின் சிறப்பை விளக்குவன்போல் உள்ளன. பட்டத்தரசன், அவன் மனதைத் தொட்டுவென்ற அழகி, படைத்தலைவன், பொருள் காப்போன், வணிகவேந்தன், கலைவாணன், எனும் பலரும், தொழுது நிற்கிறார்கள், ஜூவஸ் முன்பு.

எதிரே, நெரித்த புருவமும், மேல் நோக்கிய கண்களுடனும், நின்று கொண்டிருக்கிறான், பூஜாரி. அவன்முன் காணிக்கைப் பொருள்கள் குவிந்திருக்கின்றன!

இங்கு இன்றும், கேட்கப்படும், சஹஸ்ரநாமம்—அர்ச்சனை—கிடையாது போலும், என்று எண்ண வேண்டாம்! ஜூவசின், திருவிளையாடல் புராணத்தைப் பார்த்தால், யூகித்துக் கொள்ளலாம், அன்று, அந்தப் பூஜாரிகள், என்னவென்ன கூறி, அர்ச்சித்திருப்பார்கள் என்பதை.

உற்றுக்கேளுங்கள், அவன் அர்ச்சிப்பதும் கேட்கும். அதுகேட்டு, பக்தர் குழாம், நெஞ்சு நெகிழ நிற்பதும் தெரியும், மனக்கண்ணுக்கு.

🞸🞸🞸🞸


ஜெகமதைப் படைத்தாய் போற்றி!
தேவனே! ஜூவஸ்! போற்றி!
அமரர்தம் முதல்வா போற்றி!
அவுணரை அழித்தாய் போற்றி!
தீரனே, போற்றி, போற்றி!
திருஅருள் தாராய், போற்றி!
இடிப்படை கொண்டாய் போற்றி!
இகபர அரசே போற்றி!
மழைதனைப் பொழிவாய் போற்றி!
மாபுயல் விடுவாய் போற்றி!
மேக சம்ஹாரா போற்றி!
மேதினி காப்போய் போற்றி.

🞸🞸🞸🞸

அர்ச்சனை, இதுபோன்றுதான் இருந்திருக்கவேண்டும்—ஏனெனில் இப்படிப்பட்ட வல்லமைகள் கொண்ட கடவுளாகவே, ஜுவஸ், சித்தரிக்கப்பட்டு. அக்கால மக்களால், பக்தி விசுவாசத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டு, வந்தார். இது மட்டுமா அர்ச்சனை? விபரீதமான, கடவுட் தன்மைக்கு மட்டுமல்ல, சாமான்யமான மனிதத் தன்மைக்கேகூட முரண்பட்டதான, கேடுபயப்பதான செயல்களையே, சிறப்புக்களாக்கிக் காட்டும், அர்ச்சனைகளும் உண்டு.

🞸🞸🞸🞸

தந்தையை வென்றாய் போற்றி!
தங்கை மணாளா போற்றி!!

என்று பூஜாரி, அர்ச்சித்திருப்பார்! ஏனெனில் ஜூவசின், திருவிளையாடற் புராணத்திலே, அவர் தன் தந்தையுடன் போரிட்டு வென்றதும், தங்கையைத் தாரமாக்கிக் கொண்டதும் சிறப்பாக, விளக்கப்பட்டிருக்கிறது! எனவேதான், இன்று முருகனை வழிபடுபவர்கள் துதிக்கவில்லையா, தந்தைக்குபதேசம் செய்தவா, போற்றி போற்றி, தத்தைமொழி குறமகளை மணந்தவா போற்றி, போற்றி, என்று. அதுபோல, அன்று ஜூவசை, அந்நாட்டுப் பூஜாரிகள் அர்ச்சித்திருக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

அந்த அர்ச்சனைகள் எல்லாம் இன்று, ஆடிடும் சிறாரும் கேட்டு, ஆம் என்று ஏற்க முடியாத, கேலியுரைகளாகிவிட்டன.

அந்த அர்ச்சனைகளில் வல்லவர்களான, பூஜாரிகள், யாரும் இன்று கிடையாது கிரீசில்!

அந்த ஆலயங்களே இன்று அங்கு, கிடையாது!!

ஆலயங்களென்ன, அந்த ஆண்டவனே, இன்று அங்கு கிடையாது! ஜூவஸ் ஒரு மாஜி கடவுள்!!

வெள்ளை நிறப்புரவிகள் நான்கு, தேரில் பூட்டப்பட்டிருக்கும். செயல்திறம் கொண்ட உருவும் அமைந்தவராக இருப்பார்.

வெண்ணிறத் தலையணி பூண்ட பூஜாரிகள் அவர் சேவைக்கு இருப்பர்.

வெண்ணிற மிருகங்களையே, அவருக்குப் பலி தருவார்கள். ஜுபிடர், என்ற பெயருடன், ரோம் நாட்டவர், இதே தேவனைப் பூஜித்து வந்தனர்! அங்கும், இன்று, ஜூபிடர் ஒர் மாஜி கடவுள்தான்!

பூமாலையோ பாமாலையோ சூட்டிடுவார், யாரும் இல்லை—கோயில் இல்லை—கோலாகல உற்சவம் இல்லை—ஜுபிடரும் ஜுவஸ் போலவே, மறைந்து போனார், மக்கள் மனதிலிருந்து, மார்க்கத் துறையிலிருந்து, மாஜிகளாயினர் மக்களின் மதி துலங்கிய பிறகு!

மான் மழுவேந்தி, புலித்தோலாடை பூண்டு, இமயத்தில் வீற்றிருக்கும். முக்கண்ணனைத் தொழுது மகிழும் “பேறு” பெற்ற புராணீக மதத்தவர், நம்மிடை அநேகர் உண்டு.

ஜூவசின், சிறப்பும் அதுபோலவே, போற்றப்பட்டு வந்தது, கிரேக்கர்களால்.

ஒலிம்பஸ், எனும் உயரமானதோர் மலைமீதுதான் ஜுவஸ் கொலுவீற்றிருந்ததாகக் கதை. கரத்திலே, வெற்றிதரும் படைக்கருவி. கெம்பீரமான தோற்றம்! நீண்டு சுருண்டு வளைந்த, கேசம்! ஆட்டுத்தோலாடை அணிவார் சிலசமயம்! சில வேளைகளில், பட்டாடை மேனியை அழகு செய்து, கீழேயும் புரளும். சிவனாருக்கருகே, ரிஷபம், நந்தி, இருக்குமாமே! ஜுவசின் அருகே எப்போதும் கழுகு இருக்குமாம்!

கோலம் இதுபோல்—குணாதிசயத்தை விளக்கும் செயல்கள், பல உண்டு. அவைகளை நம்புவதுதான் ஆத்திகம், சந்தேகிப்பது நாத்திகம், என்றுதான் பொது விதி இருந்தது; அந்நாளில், அங்கு!

இப்படி எல்லாமா நடந்திருக்கும்? என்று கேட்பவன் பாபி! இப்படி எல்லாம் செய்வதா, கடவுட் தன்மைக்கு அழகு? என்று கேட்பவன் நாத்திகன்! அவன் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுவான்! அவனை இம்சிப்பது “தேவப்பிரீதியான காரியம்.”

ஆதி அந்தமற்ற தன்மைதானே, இன்றைய ஆத்திகம், அன்றைய ஆத்திகம், அவ்விதம் இல்லை. ஜுவஸ் தேவனுக்கு, தகப்பனார் தாயார் உண்டு, பாட்டன் பாட்டியும் உண்டு; அவர்களுக்குள், பகை, போர், மூண்டதுமுண்டு. கடவுள்களா, இப்படிச் செய்திருக்க முடியும். காட்டுமிராண்டி ஜாதியிலே நடைபெறும் செயல் போலிருக்கின்றதே என்று கூறத்தோன்றும். ஆனால் அந்தக் காலத்திலே, கூறியிருந்தால், கூறினவன் நா அறுக்கப்பட்டிருக்கும்—அந்த நாள் ஆத்திகம், அந்தக் கதைகளை நம்பும்படி வலியுறுத்திற்று.

கேளுங்கள், ஜூவஸ் தேவனின் பிறப்பு வளர்ப்பை, கடவுள், பிறக்கிறார். அது ஆத்திகம்!

உலகம் தோன்றா முன்பு, எல்லாம் இருள்மயமாக இருந்தபோது, குழப்பம் எனும் தேவனும் இருளி எனும் தேவியும் மட்டும் இருந்தனர். தெளிவான உருவுடன் அல்ல.

அப்படியானால், எப்படி அவர்கள் தெரிந்திருக்க முடியும்? என்ற கேள்வி, கிளம்பும், உடனே. கேட்பது, நாத்திகம்!

குழப்பமெனும் தேவனும் இருளி எனும் தேவியும் இருந்தபோது, விண்ணோ மண்ணோ கடலோ, கிடையாது என்று கூறுகிறாயே; அது உண்மையானால், அவர்களைக் காண, யார் இருந்தனர், என்று கேட்கத் தோன்றும், ஆனால், கேட்கக்கூடாது. அந்நாளில் கேட்பது நாத்திகம்!

இப்படியும் ஒரு பைத்தியம் இருந்ததா, என்று கேட்பீர்கள், இதில் என்ன அதிசயம்? விமானம் பறக்கும் இந்த விஞ்ஞான காலத்திலேயும் நமது நாட்டிலே, ஆயிரம் தலை படைத்த ஆதிசேஷனைக் கண்டது யார், தலைகளை எண்ணிக் கணக்கெடுத்தது யார், ஆதிசேஷன்தான், அண்டத்தைத் தாங்கிக்கொண்டு, கீழே இருப்பதாகக் கூறுகிறாயே, அண்டத்திலே இருப்பவர்கள் அதை எப்படிப் பார்த்திட முடியும், என்று கேட்டுப் பாருங்களேன், மதவாதிகளை ஆத்திகர்களை, என்ன கோபம் வருகிறது பாருங்கள்—நாத்திகன் என்று எவ்வளவு ஆத்திரத்துடன் கூறுகிறார்கள், பாருங்கள்.

இன்று இங்கு நிலைமை இவ்விதம் இருக்கும்போது அந்த நாட்களில், கிரேக்க நாட்டு ஆத்திகர்கள், அவ்விதம் இருந்ததிலே ஆச்சரியமா கொள்கிறீர்கள். அதைப் பித்தம் என்று கூறினால், இன்னும் இங்குள்ள விசித்திர சித்தர்களின் போக்கை என்னவென்று சொல்வீர்கள்.

மனிதர்கள் கதை கிடக்கட்டும்—கடவுள்களின் கதையைக் கவனிப்போம்.

குழப்பதேவனும் இருளித்தேவியும், நீண்ட காலத்துக்குப் பிறகு, சலிப்பேற்பட்டு, தங்கள் அலுவலுக்கு உதவியாக எரியஸ் எனும், மகனை அழைத்தார்கள்.

மகன் செய்த, மகத்தான முதற்காரியம் என்ன தெரியுமோ? தந்தையை ஆட்சிப்பீடத்திலிருந்து விரட்டியதுதான்! விபரீதமாக இருக்கிறதே என்பீர்கள்—இதற்கே பதறாதீர்கள்—மேலும் உண்டு விபரீதம். தந்தையை விரட்டிய எரியஸ், தனிமையை விரும்பவில்லை! தாரம் தேவைப்பட்டது. என்ன செய்தான்? தாயையே தாரமாக்கிக் கொண்டான்.

மகனை மணாளனாகப் பெற்ற மாதாவும், அவன் மனம் கோணாமல் நடந்துகொண்டதுடன், ஈதர், எமிரா எனும் இரு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

இந்த இரு மக்களும், தம் பெற்றோரை விரட்டிவிட்டு, ஆட்சிப்பீடமேறினர். எராஸ் எனும் மகவு பிறந்தது. மூவருமாகச் சேர்ந்து, கடல், பூமி, இரண்டையும் படைத்தனர்.

பூமி பசுமையற்று, ஜீவனற்று இருந்தது. ஆதியில், எராஸ், தன் அதிசய அம்பை எய்தான்! செடியும் கொடியும் முளைத்தன! பட்சி வகைகள் பறந்தன! மீன்கள், குளங்களில் உலவின. மிருகங்கள், கானகங்களிலே உலவின; எங்கும் மகிழ்ச்சி—மலர்ச்சி!

பூமி—ஒரு தேவி! இந்த அம்புவிட்டு அற்புதம் நிகழ்த்திப் பிறகு, அந்த அணங்கு, துயிலெழுந்து, தன்னைச் சுற்றிலுமுள்ள சோபிதம் கண்டு, ரசித்து, காதலுள்ளம் கொண்டு, யுரானஸ் எனும் தேவனைச் சிருஷ்டித்தாள்—மணம் முடிந்தது—இருவருக்கும்.

பூமாதேவிக்கு, கியா எனப் பெயர்—மணாளன் பெயர் யுரானஸ்! கியா பூமி; யுரானஸ், விண்ணுலகு! விண்ணுக்கும் மண்ணுக்கும் திருமணம்!

இந்தத் தம்பதிகளுக்கு பலசாலிகளான 12 மக்கள் பிறந்தனர்—இவர்களுடைய ஆற்றலைக்கண்டு, யுரானஸ், அஞ்சினான். இந்தப் பிள்ளைகள் வளர்ந்தால், தமது ஆற்றலால் தன்னை அழித்துவிடுவர், என்ற அச்சங் கொண்டு, பன்னிருவரையும் பிடித்து, பாதளத்திலே கொண்டுபோய், இரும்புச் சங்கிலிகள் கொண்டு கட்டிவிட்டான்.

இந்தப் பன்னிருவரில், ஆறுபேர் ஆடவர், அறுவர் பெண்டிர். பாதாளச் சிறையிலிருந்து இந்தப் பிரம்மாண்டமான மக்கள், வெளிவர முடியாது, எனவே தனக்கு அழிவு கிடையாது, என்று அகமகிழ்ந்து யுரானஸ் இருந்தான்; மக்களைப் பெற்ற மாதாவுக்கோ, தாங்கொணாத் துயரம்; கணவனுடன் வாதாடிப் பார்த்தாள்; பலன் இல்லை—எனவே அவளும், பாதாளலோகம் சென்றுவிட்டாள்; தன்மக்களைத் தூண்டினாள், தகப்பனைத் தாக்கச் சொல்லி.

பன்னிருவரில், கடைக்கோட்டி, குரோனஸ்—அவன்தான் ஆர்த்தெழுந்தான் அன்னை உரைகேட்டு—கோடரி தந்தாள் அன்னை—கொண்டு சென்றான், தந்தையைத் தோற்கடித்து, சிம்மாசனம் ஏறினான்—தந்தை, மகனைச் சபித்தான், நீயும் உன் மகனாலேயே, மாளக்கடவாய் என்று.

குரோனஸ், தன் உடன்பிறந்தாரைப் பாதாளச் சிறையிலிருந்து மீட்டான்—தன் தங்கை, ரியா என்பாளை மணம் புரிந்துகொண்டான். ஒலிம்பஸ் எனும் உயர்மலை மீது, வெற்றிகண்ட குரோனஸ், வீற்றிருந்தான்.

ஒரு நன்னாள், மகனொருவன் பிறந்த சேதி கேட்டான் குரோனஸ், உடனே தந்தையிட்ட சாபம் கவனத்திற்கு வந்தது—பதறினான்—தாரமான தங்கையிடம் சென்றான். தருக மகவை! என்று கேட்டான். அவளும் அகமகிழ்ச்சியுடன் தர, வாங்கினவன், அவள் கண்டு பதறும்படி அதனைத் தன் வாயில் போட்டு, விழுங்கிவிட்டான்.

இப்படிப் பல குழந்தைகளை அவன் விழுங்கிக் கொண்டு இருந்தான்—சாவை தடுத்துக்கொள்ள, மாதாவின் மனம் பற்றி எரிந்தது. ஒரு மகவையாவது, காப்பாற்றியே தீருவது என்று, தீர்மானித்தாள். ஜூவஸ் பிறந்தான். பிறந்ததும், குழந்தையைச் சில தேவகன்னியரிடம் கொடுத்து, இடா மலையில் எவருக்கும் தெரியாவண்ணம், வளர்த்துவர ஏற்பாடு செய்தாள். கொடு குழந்தையை எனக் கொடியோன் கேட்டான். மன்றாடினாள்—அவன் பிடிவாதம் செய்தான்—எனவே, தந்திரமிக்க அவள், ஒரு பெருங்கல்லை, ஆடைபோர்த்து, அவனிடம் தந்தாள் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டுதானே! அப்படியே விழுங்கினான், தன்னைக் கொல்லப்பிறந்த குழந்தையை விழுங்கியதாகவே எண்ணி எக்களிப்புக் கொண்டான். குழந்தையோ, தேவகுமாரிகள் சீராட்டிப் பாராட்டி, வளர்க்க, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது.

இடாமலையில் ஒரு குகையில் இங்ஙனம் வளர்ந்து வந்த ஜுவசுக்குப் பால்தரும் பணியினை ஏற்றுக்கொண்டிருந்ததாம், ஒரு ஆடு—அதற்குப் பெயர், அமால்தியா என்பதாகும் ... ஆண்டவனுக்குப் பாலூட்டியதற்காக அந்த ஆட்டுக்குப் பரமபதம் பிறகு கிட்டிற்றாம்.

கரி, நரி, பரி, கருங்குருவி, ஓணான் முதலியவற்றுக்கெல்லாம், பரமபதம் கிடைத்ததாக, நம்மிடம் புராணம் உண்டல்லவா? கிரேக்கப் புராணீகன் ஆட்டுக்கும் பரமபதம் அளித்தான். இன்று, ஆடு அமரர் உலகு அடைந்த கதையைக் கூறினால், கிரேக்க நாட்டிலும், அறிவு முன்னேறியுள்ள எந்த நாட்டிலும் கைகொட்டித்தான் சிரிப்பார்கள். இங்கோ, ஓணான் முக்திபெற்ற கதையைக் கேலியாக, யாரேனும் பேசினால், ஓம் சாந்தி என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்யும் நல்லவருங்கூட, பாவீ! நாத்திகா! என்று கோபிப்பர்! அறிவு இங்கு அந்த அளவுக்கு ஒத்துழையாமை செய்கிறது.

ஜூவசின் பாலபருவம் இப்படி இருந்தது—தந்தை அப்படி ஒரு குழந்தை இருப்பதாகவே, அறியாமலும், தாயின் பாசத்தைப்பெற முடியாமலும், தாதிமார் தயவால் வாழும் நிலை. ஓரளவுக்கு நமது புராணங்களில், முருகன் வளர்ப்புக்குக் கார்த்திகைப் பெண்களைக் குறிப்பிடுவதுபோல!!

குழந்தை அழுது, அந்தச் சத்தம், தந்தையின் காதிலே விழுந்தால் என்ன செய்வது என்பதற்காக, தந்திரமான ஓர் ஏற்பாடும் இருந்ததாம். பூஜாரிகள் பலர் கூவுவதும் கொக்கரிப்பதும், கூத்தாடுவதும், ஆயுதங்களைக் கொண்டு பேரொலி கிளப்புவதுமாக இருப்பராம். இந்த அமளிச் சத்தத்திலே அமிழ்ந்து போகுமாம், ஜுவசின் அழுகைச் சத்தம்.

குரோனஸ், குதூகலமாக வாழ்ந்து வருகையில், குழந்தை ஜூவஸ் வளர்ந்து வரும் செய்தி எட்டிற்று. அச்சமும் ஆத்திரமும் கொண்டான்; ஜூவசைக் கொல்லத் தீர்மானித்தான். ஆனால் தந்தை போர்க்கோலம் பூணுமுன், தனயன் கிளம்பித் தாக்கினான். தகப்பன் தோற்கடிக்கப்பட்டான். வெற்றி பெற்ற ஜூவஸ், தந்தையின் அரியாசனத்தில் அமர்ந்து தாயின் மந்திராலோசனைப்படி ஆட்சி புரியலானான். குரோனஸ் விழுங்கிய குழந்தைகளை எல்லாம், மீண்டும் அவன் உள்ளிருந்து வெளியே, உயிருடன்கொண்டு வருவதற்காக, கடும்விஷமொன்றைத் தயாரித்து, குரோன்சை பருகச்செய்தான்—உடனே, உள்ளே இருந்த, பாசிடன், ப்ளுட்டோ, ஹெஸ்ட்டியா, டெமீடர், ஹீரா எனும், குழந்தைகள் யாவும் வெளியே வந்தன, உயிருடன். இவைமட்டுமா, குழந்தையென நம்பி விழுங்கிவிட்டானே, கல், அதுவுங்கூட வெளியே வந்துவிட்டதாம். உடன்பிறந்தார்களை, தந்தையின் வயிறாகிய சவக்குழியிலிருந்து மீட்டான்.

இப்படிப்பட்ட ஆற்றலைக் காட்டிய ஜுவஸ் ஆண்டவனானான், அதற்குப் பிறகும், ஜூவஸ், அசுரர்களுடன் போர் புரியவும், தன் ஆதிக்கத்தை எதிர்த்த தேவர்களுடன் போர் புரியவும் நேரிட்டது. எல்லாவற்றிலும், ஜுவஸ் வெற்றி பெற்றான். எனவே, அவன் ஆதிக்கத்துக்கு அண்டம் அடங்கிற்று.

இத்தகு, கதைகளை, புண்ய கதைகளாகக் கொண்டு, நெடுங்காலம் வரையில், கிரேக்க மக்கள், ஜுவசைப் பூஜித்து வந்தனர்.

கடவுள் எனத் தொழுகிறோமே, தாய் தந்தை, பாட்டன் பாட்டி, என்று குடும்பம் கற்பிக்கிறோமே, வம்சாவளிக்குக் கதை கூறுகிறோமே, சரியா, என்று புராணீகனும் எண்ணவில்லை, மக்களும் எண்ணவில்லை. அவ்விதமான எண்ணமே, நாத்தீகமாகக் கருதப்பட்டது.

ஒலிம்பஸ் மலையையும் அதன்மீதமர்ந்து அண்டத்தைப் பரிபாலிக்கும் தேவனையும் குறித்து, சந்தேகப்படுபவன், சண்டாளனாகக் கருதப்பட்டான். காவியங்கள் புனைந்தனர், ஜூவசின் அருமை பெருமை பற்றி! பூசைகள் ஏராளம்! மலைமலையாகக் காணிக்கைகள்! மந்தை மந்தையாக மெய்யன்பர்கள்! கோயில்கள் பிரம்மாண்டமான அளவில்! இவ்விதமான கோலாகலத்துடன் கிரேக்க மக்களின் கருத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த, ஜூவசுக்கு, இன்று என்ன மதிப்பு தருகின்றனர், கிரேக்க மக்கள்! கடவுள், என்ற நிலையே இல்லை. கடவுள், இப்படிப்பட்ட குணமும் செயலும், கொண்டவராக இருக்கமுடியாது. குடும்பக் கலகமும் கொடிய ஆயுதம் கொண்டு கொல்வதும், ராஜ்யத்தைப் பிடிப்பதும், ரணகளத்தில் உழல்வதுமாக இருப்பது, ஆண்டவனுக்குரிய இலட்சணமல்ல, மக்களின் மதியில் மூடுபனி மிகுந்திருந்தபோது மூண்டெழுந்த அச்சமும் ஆவலுமே, இவ்விதமான கற்பனைகள் முளைக்க இடமளித்தது. இயற்கையின் கோலாகலத்துக்கு விளக்கம் கிடைக்காதபோது, பிரபஞ்ச உற்பத்திக்கு காரணம் விளங்காதபோது பாமரர் பலவிதமான, கற்பனைகளைக் காரணமாகக் கொள்ளத் தொடங்கினர். ஒலியும் ஒளியும் அவர்களுக்கு, பயத்தை மூட்டிற்று! புயலும் மழையும் அவர்களுக்குப் பீதியைத் தந்தன! உயரமான மலைகளும், விரிந்து பரந்து கிடந்த கடலும் அவர்களுக்கு ஆச்சரிய மூட்டின. இந்த அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டு, பல கடவுள்கள், விண்ணில் இருந்து தீரவேண்டும் என்ற எண்ணம் உதித்தது—பயம் பிறந்தது—பக்தி உதித்தது—கடவுள்களைச் சாந்தப்படுத்த வேண்டும், சந்தோஷப்படுத்த வேண்டும், உதவி பெறவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பூஜாரிகளாயினர் தந்திரமிக்கோர், மக்களின் அச்சத்தையும் ஆவலையும் அடிப்படையாக்க கொண்டு, கற்பனைக் கதைகளைக் கோத்தனர், புலவர்கள்; பூஜாரிகள், இவைகளைப் புண்ய கதைகளாக்கினர்; கோயில்கள் கட்டப்பட்டன; கூட்டம் கூட்டமாகக் கடவுள்கள் அமைக்கப்பட்டனர்.

இந்த அஞ்ஞானம் தொலையவும் மெய்ஞானம் பிறக்கவும், பகுத்தறிவாளர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல.

இப்படி எல்லாம் இருக்கமுடியுமா, என்ற எண்ணம் தோன்றியபோதே, பயத்தால் நடுங்கிப் போனவர்கள், எவ்வளவு பேரோ! மெல்லிய குரலில் மெத்த வேண்டியவர்கள் என்று நம்பிக்கொண்டு, சிலரிடம் கூறி, அவர்களாலேயே, பித்தன் என்றும் பேய்ச்சித்தன் என்றும் பழிக்கப்பட்டவர்கள் எவ்வளவு பேர்களோ! காட்டிக் கொடுக்கப்பட்டவர்கள், எத்துணை பேர்களோ! துணிந்து, பலரறியத் தமது சந்தேகத்தைக் கூறி, எதிர்ப்புணர்ச்சியைக் காட்டி, அதனால், சித்ரவதைக்கு ஆளானவர்கள், எவ்வளவு பேரோ!

பலிபீடத்தில் ஏராளமான இரத்தம் சிந்தப்பட்ட பிறகே, பகுத்தறிவாளரின், குரல், மக்கள் செவியில் விழவும், பாமரரின் சிந்தனையில் தெளிவு பிறக்கவும் முடிந்தது. கடவுள்கள் என்ற நிலைபெற்ற கற்பனையுடன் அறிவு, மோதுதல் செய்யவேண்டி நேரிட்டபோது, பாமரமக்கள் கற்பனையின் பக்கம்தானே திரண்டு நிற்பர்! பாமரரின், பகையினால், வீழந்தவர் போக, மிச்சமிருந்த பகுத்தறிவாளர்கள், தூக்குமேடைக்கும் அஞ்சாது, உண்மையை உரைத்தனர்—உழைத்தனர்—வாதிட்டனர்—போரிட்டனர்—வென்றனர். ஜூவஸ், மாஜி கடவுளானார்! அறிவு வென்றது! அஞ்ஞானம் தொலைந்தது!!

"https://ta.wikisource.org/w/index.php?title=மாஜி_கடவுள்கள்/ஜுவஸ்&oldid=1790540" இலிருந்து மீள்விக்கப்பட்டது