மாஜி கடவுள்கள்/தார் தேவன்
- தார் தேவன், ஓடின் தேவனின் குமாரன்; பல திருக்குமாரர்கள் ஓடினுக்கு, எனினும் தார் தேவனே, முதல்வன், முக்கியமானவன், தந்தையை மிஞ்சக்கூடிய வல்லமை பெற்றவன், தரணியோரின் பக்தியையும் பாசத்தையும் அதிக அளவில் பெற்று, ஆதிக்கம் செலுத்தினவன். இந்த ஆற்றல் மிக்க கடவுளுக்கு, இரண்டு ஆடுகள் பூட்டப்பட்ட ரதம்! அதிலேறித்தான் அண்டமெங்கும் சென்று வருவார் இந்த அதிசூரர்.
தார்தேவன்
சுதர்சனம்—என்பது அவருடைய சக்ராயுதத்தின் பெயர்—பாஞ்ச சன்யம் என்பது அவருடைய, சங்கின் பெயர், என்று நம் நாட்டுப் புராணிகர்கள், விஷ்ணுவுக்காகக் கட்டிய கதைகளிலே கூறினர். ட்யூடன் புராணிகன், இதுபோலவே, கடவுள்களுக்குப் பெயர் சூட்டியதுடன், வாகனங்களுக்கும் பெயரிட்டான். மக்கள் கடவுளின் திருநாமத்தைப் ‘பஜித்தது’ போலவே வாகனங்களையும் கருவிகளையும், பஜித்து வந்தனர்.
ஆக்கவும் அழிக்கவும், ரட்சிக்கவும் தண்டிக்கவும், ஆற்றல்கொண்ட ஒரு முழுமுதற் கடவுள் போதும், என்ற அளவில், ஆத்திகம் அமையவில்லை. பலப் பல கடவுள்களைத் தேடவும் நாடவும், ஒவ்வோர் கடவுளைப் பற்றி ஒவ்வோர் விதமாகப் புகழ் பாடவுமாக இருந்தனர். பல கடவுள்களைப் பற்றிய எண்ணம் இருந்ததால், ஒன்றுக்கொன்று தொடர்பு என்ன என்பது பற்றியும் யாராரின் ஆற்றல் எதெதிலே சிறந்திருந்தது என்பதற்கும் பல கற்பனைகளைக் கட்டவேண்டி நேரிட்டது. இதனால், புராணப் புளுகுகள் மலை என வளர்ந்தன—அவ்வளவையும் நம்புவதுதான் ஆத்திகர் கடமை என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்து வந்தது, அந்நாளில், ட்யூடன் மக்களுக்கு.
கடவுள் என்றால், மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைக் கடந்தவர், எட்டி எட்டிப் பார்ப்பவருக்கும் எட்டாப் பொருளாக இருப்பவர், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர், என்ற தத்துவார்த்தப் பேச்சுகள் கிளம்பு முன்னம், கடவுள் ஒன்றல்ல, பல! ஓருரு அல்ல, பல்வேறு உருவங்கள்! பல கடவுள்களுமாகக் கூடி உலகைப் பரிபாலித்தனர் என்றல்ல, தங்களுக்குள் பகைத்துக்கொண்டும், போரிட்டுக்கொண்டும் வாழ்ந்து வந்தனர் என்றெல்லாம் கதைகள் இருந்துவந்தன. அவ்வளவும் அறிவுக்கு ஒவ்வாதவையே, எனினும் நம்பினவன் நற்கதி பெறுவான், நம்பாதவன் தலையில் இடிவிழும், நாசமாவான் என்றுதான், மதகுருமார்கள், மிரட்டி வைத்தனர் எந்தச் சமயத்தில் எந்தக் கடவுளுக்குக் கோபம் வருமோ, என்ற அச்சம் பிடித்தாட்டியபடி இருந்தது பேதை மக்களை. எல்லாக் கடவுள்களையும், மகிழ்வித்தால்தான், தங்களுக்குக் கேடேதும் ஏற்படாது என்ற எண்ணம் உண்டாகவே, மக்கள் தங்கள் நேரத்தில் மிகப் பெரும் பகுதியை, கடவுட் கூட்டத்தினை மகிழ்விக்கும் காரியத்துக்கே செலவிட்டு வந்தனர். ஒவ்வோர் கடவுளுக்கும் ஒவ்வோர் சமயம், திருவிழாவாக பூஜைக்குரிய சமயமாகக் குறிக்கப்பட்டு, அந்தமுறை தவறாமல், மக்கள், ‘பக்தி’ செலுத்தி வந்தனர்.ஓடின்தான் ஒப்பற்ற முழுமுதற் கடவுளாயிற்றே—அண்டபிண்ட சராசரத்துக்கும் ஆதிகாரணமான ஐயனாயிற்றே, அவன் அருள் கிடைத்தால் போதுமே, அவன் ஆணைப்படிதானே, அணுவும் அசையும், ஆழ்கடலும் அடங்கி நிற்கும், அவனைப் பஜித்தால் போதுமே, என்று ட்யூடன் மக்கள் எண்ணவில்லை; ஓடின் ஒப்பற்ற கடவுள்தான்—அவர் அருள் தேவைதான்—அவருக்கான பூஜைகள் புரியவேண்டியதுதான்—ஆனால்......!! என்று கூறிப் பெருமூச்செறிந்தனர். அவர்களின் கண்ணுக்கும் கருத்துக்கும், புராணிகர்கள், வேறோர் கடவுளையும் சிருஷ்டித்துக் காட்டினர்.
தேவகுமாரன் தார் வந்து நின்றான்—பூஜையைப் பெற—பக்தர்களின் காணிக்கையைப் பெற—மூடநம்பிக்கையின் விளைவைக் காண!
தார் தேவன், ஓடின் தேவனின் குமாரன்; பல திருக்குமாரர்கள் ஓடினுக்கு, எனினும் தார் தேவனே, முதல்வன், முக்கியமானவன், தந்தையை மிஞ்சக்கூடிய வல்லமை பெற்றவன், தரணியோரின் பக்தியையும் பாசத்தையும் அதிக அளவில் பெற்று, ஆதிக்கம் செலுத்தினவன்.
ட்யூடன் புராணிகர் சிருஷ்டித்த இந்தத் தார் தேவன் இடியாதிபதி—சம்மட்டிக் சூரன்—சர்வ வல்லமையுள்ளவன்!
ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆற்றல் கொண்டவன், என்பதை எடுத்துக்காட்டும், உடலமைப்பு! எதிர்ப்போரை நொருக்கிவிடத்தக்க வலிமை வாய்ந்த கருவியான, சம்மட்டி, கரத்தில்! இந்தச் சம்மட்டியின் பெயர், முஜோல்னர் என்பதாகும்.முருகனின் வேலாயுதம், சிவனாரின் சூலாயுதம், விஷ்ணுவின் சக்ராயுதம் போலவே, தார் தேவனுக்கு ஒரு சம்மட்டியாயுதம்—அதற்கு ஒரு திருநாமம்! வேலும் சூலமும், சக்கரமும் சங்கும், பூஜைக்குரியனவாகக் கருதப்படுவது போலவே, ஆதி நாட்களில் ட்யூடன் மக்கள், முஜோல்னரைப் பூஜைக்குரிய புனிதப் பொருளாகக் கருதினர்.
இந்த ஆற்றல்மிக்க கடவுளுக்கு, இரண்டு ஆடுகள் பூட்டப்பட்ட ரதம்! அதிலேறித்தான், அண்டமெங்கும் சென்று வருவார், இந்த அதிசூரர்.
தகப்பனாம் ஓடினுக்கு, வாயுவேக மனோவேகமாகச் செல்லக்கூடிய குதிரை இருந்தது என்று புரரணிகன் புகழ்ந்தபோது, அற்புதமான குதிரை! தேவாம்சம் பெற்ற புரவி! என்று பக்தர்கள் கொண்டாடினர்; அதே பக்தியுடனேயே, தார் தேவனின் ஆடுகளையும் கொண்டாடினர்! கருடன், மயில் இரண்டையும் இங்கு ‘பாமரர்’ ஒரேவிதமான பக்தியுடன்தானே கொண்டாடுகின்றனர்!
கொண்டாடினர்!—அங்கு. கொண்டாடுகின்றனர்!!—இங்கு. இறந்தகாலம், அங்கெல்லாம். நிகழ்காலம், இந்நாட்டிலே!!
பசுவும் புலியும் ஒரே துறையில் தண்ணீர் குடிக்குமாம், ‘தர்மயுகத்தில்’ அப்போதும், தப்பித்தவறி, புலி சற்று, பகை உணர்ச்சியைக் காட்டினால்போதும், வைகுந்தநாதனின் ‘சுதர்சனம்’ பறந்து வந்து, புலியின் சிரத்தை அறுத்தெறிந்து, விடுமாம், என்று இன்றும் பாமரர் கதை பேசுகிறார்களல்லவா, அதுபோலவே, முன்னாட்களில், மூடமதியினராக, ட்யூடன் மக்கள் இருந்து வந்தபோது, உலகிலே, எங்கேனும், ஏதேனும், அக்ரமம் நேரிட்டால், உடனே, தார்தேவனின் ‘சம்மட்டி ஆயுதம்’ கிளம்பும், அக்ரமத்தை நொருக்க, என்று கதை பேசிக் காலந்தள்ளி வந்தனர்.
தார்தேவனின் இந்தச் சம்மட்டியின், சக்தியை விளக்கப் பலப்பல கதைகளைக் கட்டினர் புராணிகர்கள்—பல பாசுரங்களை இயற்றினர் புலவர்கள்—பக்தர்கள் பாடிப் பரவசமடைந்தனர்—பூஜாரிகள் கொழுத்தனர். இன்று ட்யூடன் இனத்தின் வாழையடி வாழையாக உள்ள, மக்களிடம் சென்று தார்தேவனின் திருவிளையாடலைக் குறித்துக் கேட்டால், கைகொட்டிச் சிரிப்பர், நமது நாட்டவர் போல, திருவிளையாடற் புராணத்தை எடுத்துக் கொடுத்து, பூரிப்படையார்.
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஆழ்கடல், பூமி, எனும் எல்லாவற்றையும் படைத்துள்ள சக்தியே, கடவுள், எனவே, வேறு யாருக்கும், வேறு எந்தப் பொருளுக்கும், இல்லாத வலிமையும் மகிமையும், உள்ளவரே, கடவுள், என்று இன்று பேசப்படுகிறது. இது தெளிவுபெற்ற ஆத்திகம் என்றும் கூறப்படுகிறது. முன்பு, இந்தத் ‘தெளிவும்’ கிடையாது. கடவுளுக்கும், மற்றவர்களுக்கு நேரிடுவது போலவே, கஷ்டம், ஆபத்து, பகை, பாசம், சஞ்சலம், ஏற்படும்! சில சமயம், தோல்வியும் துயரமும் உண்டாகும்! சில வேளைகளில் கடவுள் விரட்டப்படுவார், விண்ணுலகை விட்டே!! பிறகு, மீண்டும் போரிட்டு, ‘ராஜ்யத்தை’ மீட்டுக் கொள்வார்! இப்படி எல்லாம் புராணங்கள்.
கடவுளைப்பற்றி இவ்விதம் கதைகளைக் கட்டுகிறோமே, இவைகளைப் படிக்கும்போது, ஒரு காட்டரசனுக்கும் கடவுளுக்கும், என்ன பேதம் என்று மக்கள் எண்ணக்கூடுமே, கடவுட் தன்மைக்கே இழுக்கை அல்லவா இந்தக் கதைகள் உண்டாக்குகின்றன என்று மக்கள் எண்ணக்கூடுமே என்பதுபற்றிப் புராணிகர்கள் கவலைப்படவே இல்லை! அவர்களுக்கு இருந்த துணிவெல்லாம், கடவுட் சம்பந்தமான கதைகளை, யாராவது ஆராயத் தொடங்கினால், சந்தேகித்தால், கேலி பேசினால், கண்டித்தால், பாமர மக்களைக் கிளப்பிவிட்டு, நாத்திகன் எனப் பழிசுமத்தி அழித்துவிடலாம் என்பதுதான். அவ்விதம் அழிக்கவும் முடிந்தது அவர்களால்! பல பேர்களை!! சித்ரவதைக்கும் கொலைக்கும் தப்பிப் பிழைத்த ஒரு சிலரால்தான், நெடுங்காலத்துக்குப் பிறகு, உலகு, உண்மை ஒளியைக் காண முடிந்தது.
தார்தேவனுக்கு அந்நாட்களிலே இருந்துவந்த செல்வாக்கு, ராஜயாதிகாரிகளையே நடுநடுங்கச் செய்யக் கூடியது; ஆற்றலை விளக்கிவிட அவ்வளவு ‘அற்புதக் கதைகளை’க் கட்டி வைத்தனர். பாமரர் படித்தும், படிப்போர் பக்கநின்று கேட்டும் பக்திமான்களாயினர். அவர்களின் மனக்கண்முன், விண்ணும், அதிலே கொலுவீற்றிருக்கும் தாரும், அவன் ரதத்தில் பூட்டப்பட்ட ஆடுகளும், கரத்தில் இருந்த சம்மட்டியாயுதமும், தெரிந்த வண்ணம் இருந்தன. தார்தேவனை, அவர்கள், ஓடினை விடப் பலசாலி, என்று எண்ணினர், அருளை நாடினர்—பூஜைகள் பலப்பல செய்து.
“ஓ! பக்திமான்களே! ஓடின் தேவன் பெற்றெடுத்த ஒப்பிலா மணியாம், தார்தேவனின், வீரதீரச் செயலைக் கூறுவேன் கேளீர்!” என்று புராணிகன் கூறுவான், ட்யூடன் மக்கள், அந்தப் புராணிகன், தார்தேவன்கூடவே பழகி, இவ்வளவையும் நேரில் கண்டறிந்து கூறுகிறான் என்று எண்ணுபவர்போல, வாய் பிளந்தபடி, அவன் கூறும் அபத்தக் கதைகளைக் கேட்பர்.சிங்கமுகாசூரன்...மகிஷாசூரன்—என்று பகைவர்களும், அவர்களைச் ‘சம்ஹரிக்க’ பகவான் கிளம்பியதுமான கதைகளை, இன்றும் நம்நாட்டுப் பாமரமக்கள் எவ்வளவு பக்தி சிரத்தையுடன் கேட்டு ரசிக்கின்றனர்! பாமரர் மட்டுமா? பாராளுமன்ற நிபுணர்களும்கூட அல்லவா, இத்தகு பச்சைப் புளுகுகளைப் பரப்புவதற்குக் கிளம்புகின்றனர், வெட்கத்தை விரட்டிவிட்டு, பாமரன், சொல்வதை அப்படியே நம்புகிறான்—அதாவது, மகிஷாசூரன் என்றால், எருமைக்கடா முகம்கொண்ட சூரன், என்று உள்ளபடி நம்புகிறான்—பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் பேர்வழியோ, இதற்கு ஒரு தத்துவார்த்தம் கூறுவார்—எருமைக்கடா முகம் என்றால், எருமை முகம் என்றே பொருள் அல்ல...வலிமையும் கொடுமையும் விளங்கிடும் விதமான முகம் என்பது தத்துவார்த்தம் என்று கூறுவார். இவ்வுளவே வித்தியாசம்! என்னதான் தத்துவார்த்தம் கூறினாலும், அறிவுக்குப் பொருந்தாததும், எத்தகைய மாண்பையும் வளர்க்க முடியாததும், கடவுட் கொள்கைக்கே ஊறுதேடுவதுமான கதைகளைப் பாமரரிடம் பரவவிடுவது தீமையைத் தருமே, தெளிவை உண்டாக்காதே, என்பதுபற்றி, இந்தக், கற்றும் மற்றவர் போலவே உள்ளவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. இவ்விதமான கதைகளின்மீது கட்டப்பட்டுள்ள, கோகுலாஷ்டமி, ராமநவமி, சிவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, அவிட்டம், போன்ற பண்டிகைகளைக் கொண்டாடி பாமரரை மேலும் பாழ்குழியில், தள்ளும் பணிபுரிகின்றனர்.
தார் தேவனின் திருவிளையாடல்களை அடிப்படையாகக் கொண்டு, திருவிழாக்களும், பண்டிகைகளும் நடத்திக் கொண்டு வந்த ட்யூடன் மக்களிடையே அறிவுத் தெளிவு ஏற்பட்டு, அவர்கள் உண்மை ஒளியைக்கண்டு, உலகிலே உயர்ந்த நிலை அடைந்தனர். இதற்கான வழிகளிலே. அந்நாட்டு அறிவாளிகள் பணிபுரிந்தனர்.
கடவுளுக்குப் பெண்டுபிள்ளை இருப்பதாகவும், போரும் பகையும் காதலும் கேளிக்கையும் உண்டு என்பதாகவும், எண்ணுவது மடைமை என்று இடித்துரைத்தனர்–வெறி கொண்டவர்களின் தாக்குதலுக்கு அஞ்சி அவர்கள், உண்மை கூறுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. இன்னல் பல ஏற்பட்டன! இழித்தும் பழித்தும் பேசப்பட்டனர்! சொல்லொணாக் கொடுமைகளுக்காளாயினர், எனினும், பாமரரின் மனப்பிராந்தியை ஓட்டாமல் விடுவதில்லை என்று சூள் உரைத்துச் சொந்த வாழ்வை மறந்து பணி புரிந்தனர், வெற்றி கண்டனர்—தார் தேவன், மாஜி கடவுளானான்.
ஒரு அரசனை விரட்டுவது என்பதே, எவ்வளவோ ஆபத்தான காரியம். மன்னன் என்றால் அவனிடம் படை உண்டு; கோட்டை கொத்தளம் உண்டு; கொலைகாரர் பலர் உண்டு; அவன் பக்கம் நின்று பணி புரிவதைப் புண்ணிய காரியமாகக் கருதும் பாமரர் கூட்டம் உண்டு, பணம் உண்டு! இவ்வளவையும் எதிர்த்து, மன்னனை விரட்டி மக்களாட்சியை அமைப்பது, புரட்சி என்பர்!
இதற்கே, எவ்வளவோ பேர், களத்திலே பிணமாக நேரிட்டிருக்கிறது! கொட்டிய இரத்தம் கொஞ்சமல்ல! சித்திரவதைகள், எவ்வளவோ! சிறையிலே வாடினவர்கள் நாடு கடத்தப்பட்டவர்கள், ஏராளம்!
ஒரு மன்னனை விரட்ட இவ்வளவு கஷ்டம் என்றால், மக்களால், தலைமுறை தலைமுறையாகக் “கடவுள்” ஆக ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழப்பட்டு, வந்த ஓடின், தார், எனும் தேவர்களை மாஜிகளாக்குவதற்காகச் செய்யப்பட்ட புரட்சிகள், எவ்வளவு பயங்கரமான ஆபத்துக்களை உண்டாக்கியிருக்கும், அறிவு பரப்பும் படையினருக்கு என்பதை எண்ணிப்பார்க்கும்போதுதான், பகுத்தறிவுவாதிகளின் ஆற்றலும் தன்னலமதிப்பும், தெளிவாகத் தெரியும்.
ஒரு மன்னனை, கொடுங்கோலனை வீழ்த்துவது புரட்சி என்று பூரிப்புடன் பெருமையுடன் கூறப்படுகிறது—உண்மையுந்தான் அது—கடவுள்களை மாஜிகளாக்கிய சம்பவங்கள், இவைகளைவிட எவ்வளவு பெரும் புரட்சிகள் என்று எண்ணிப் பார்க்கும்போதுதான், பகுத்தறிவுப் படையினரின், மாண்பு விளங்கும். மக்களாட்சியை அமைக்க, மாவீரர் நடத்திய புரட்சிகளைவிட, பலவகையிலும், வீரமிக்கவை, அறிவாட்சி அமைக்கப் பகுத்தறிவுவாதிகள் மேற்கொண்ட புரட்சிகள். அந்தப் புரட்சிகளின் பலனாகத்தான், தார்தேவன், மாஜி கடவுளானான்!
தார், கடவுளாக இருந்தபோது, எத்தனை விதமான கதைகள்! நம்நாட்டுப் புராணிகன், தோற்றான், என்றுகூடக் கூறலாம், அவ்வளவு அற்புதக் கதைகள்!
கடவுட் கூட்டத்துக்கு எப்போதும் தொல்லை கொடுத்துக்கொண்டு வந்த, ஜோட்டூன் கூட்டம் ஒன்று இருந்ததாம்—தேவர்களுக்குத் தொல்லை தர அசுரக் கூட்டம் இருந்ததாக, நம் நாட்டுப் புராணிகர்கள் கூறுகிறார்களல்லவா, அதுபோல இந்த ஜோட்டூன்களுடன், அடிக்கடி போர் மூண்டுவிடும்! தார் தேவனின் சம்மட்டி ஆயுதத்தின் மகிமையினால்தான், இந்த ஜோட்டூன்கள் அழிக்கப்பட்டனர். தார் தேவனின் பெருமைக்கு முக்கியமான காரணம், இதுவேயாகும். கடவுள்களையே கலங்கச்செய்து கொண்டிருந்த ஜோட்டுன்களை அடக்கிய கடவுள், தார் தேவன்.நம் நாட்டுக் கந்தபுராணம் இல்லையா, முருகனின் வேலாயுதத்தின் மகிமையை விளக்க. அதுபோல, தார் தேவனின் சம்மட்டி ஆயுதத்தின் மகிமையை விளக்க, ஜோட்டூன் சம்ஹாரப் புராணம் கிளம்பிற்று.
சமுத்திரதேவன், ஒருமுறை, ஓடின் மாளிகைக்குச் சென்றான், விருந்துண்ண. ஓடினும் தாரும், குடும்பம் பூராவும், சமுத்திர தேவனுக்கு உபசாரம் செய்து மகிழ்வித்தனர்.
சமுத்திர தேவனிடம் இவ்வளவு கனிவு காட்டியதற்குக் காரணம், அந்தத் தேவன், பெரும் பணக்காரன் என்பதுதான். ஆழ்கடலுக்கு அடியில் அவனுக்கோர் அணி மாளிகையாம், அங்கு தங்கத்தை நெருப்பிலிட்டுச் சமையல் செய்வார்களாம்! ஈஜீர் என்ற திருநாமமுடைய இந்தச் சமுத்திரதேவனுக்கு, ரான் என்ற தேவியும், ஒன்பது குமாரிகளும் உண்டு! கடலிலே செல்வோர், தங்கக் குவியலைக் காணிக்கையாகச் செலுத்தினால்தான், தப்பமுடியும்! இதனால், சமுத்திர தேவனிடம் ஏராளமான தங்கம் குவிந்து கிடந்ததாம். கடவுளர் உலகிலேகூட, பணக்காரருக்கு ஒரு தனிமரியாதை!! எனவே, சமுத்திரதேவனுக்கு ஓடின் விமரிசையான விருந்தளித்தான். தேவரசம் தரப்பட்டது! தேவகானம் அளிக்கப்பட்டது, தேவர் தேவனாம் ஓடினால், கடலுலகக் கடவுளுக்கு மைசூர் மகாராஜாவுக்குத் திருவிதாங்கூர் மகரராஜா விருந்தளித்தால், கேரள நாட்டுக் கீதமொழிக் கன்னியரின் கானமும் நடனமும் நடக்குமல்லவா, அதுபோல! பிறகு, திருவிதாங்கூர் மன்னரை, மைசூரார், தமது ராஜ்யத்துக்கு வருமாறு அழைப்பாரல்லவா! அதுபோலவே, சமுத்திரதேவன், தன் ராஜ்யத்துக்கு ஒருமுறை வந்து போகும்படி, ஓடினைக் கேட்டுக் கொண்டார்.ஓடின், குடும்ப சகிதம் சமுத்திர லோகம் சென்றார், விருந்தாளியாக! கேட்கவேண்டுமா, கேளிக்கையை! தங்கத்தை விறகாக்கும் தேவனாயிற்றே, ஈஜிர்! விருந்தும் வைபவமும் பிரமாதமாக இருந்தது. எனினும் ஒரு குறை தெரிந்தது! ஓடின் தந்ததுபோல, இனிமையான ரசபானம் தரவேண்டும் என்று ஈஜிர் விரும்பினான்—ஆனால், வந்திருக்கும் கடவுளருக்கெல்லாம், போதுமான அளவு, ‘ரசபானம்’ காய்ச்சுவதற்கேற்ற, பெரிய கொப்பரை இல்லையாம்!
என்னய்யா பைத்யக்காரத்தனம்! தேவன் என்கிறீர், மகிமை மிகுந்தவன் என்கிறீர்! ஆழ்கடல் முழுவதும் அவன் ஆணைக்கு அடங்கும் என்று கூறுகிறீர்—அடுப்பு நெருப்பிலே, தங்கத்தைத் தூவுகிறான் என்று அளக்கிறீர். அப்படிப்பட்டவன் அரண்மனையில், பாயசம் காய்ச்சப் பாண்டம் இல்லை என்று கூறுகிறீரே! இதென்ன விந்தை!!—என்று கேட்கத் தோன்றும், கிருத்திகை அமாவாசைகளுக்குக்கூட. ஏனெனில், விஷயம், நம் நாட்டுக் கடவுளைப் பற்றியதல்ல, எனவே தைரியமாகக் கேட்கத் தோன்றும்—கடவுளுக்குப் பாண்டம் கிடைக்கவில்லையா! என்று கேலி பேசத் தோன்றும். ஆனால், ட்யூடன் மக்கள் அந்தக் காலத்தில், இவ்விதம் கேட்கவில்லை—கேட்பது பாபம் என்று எண்ணினர்—அவ்வளவு பைத்தியக்காரர்களாகவா இருந்தனர் அந்த மக்கள்? என்று கேட்கத் தோன்றும்—ஆமாம்! அவ்வளவு அறிவீனாகளாகத்தான் இருந்தனர்—அந்த அறிவீனத்தையே ஆத்திகம் என்று கொண்டாடினர். அவர்கள் அந்நாளில் இருந்த நிலையில் இன்று இல்லை—அவர்கள் அந்நாளில் இருந்த நிலையை கேட்டுக், கேலிபேசும் கண்ணியர்கள், இந்நாளிலும் நம் நாட்டிலே, பாமரரில் பெரும்பாலோர், இதுபோன்ற அறிவுக்கொவ்வாத கதைகளைப் புண்ய ஏடுகளாகப் போற்றுகிறார்களே, இதற்கென்ன செய்கிறார்கள்?ஆடு ஏறும் ஆண்டவன்! சம்மட்டி ஏந்தும் சர்வேசன்! பாண்டம் தேடிய பகவான்! என்றெல்லாம், தார், ஓடின் போன்ற ட்யூடன் கடவுள்களைப் பற்றிய கதைகள் கூறப்படும்போது, கேலியும் கண்டனமும் தானாக, இயற்கையாகத் தோன்றி, இப்படியெல்லாமா, மூடநம்பிக்கை இருந்தது என்று கூறிடத் தோன்றுகிறதே—தவிர, தோடுடைய செவியன், விடை ஏறி, ஓர் தூவெண் மதிசூடி, காடுடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர்கள்வன்—என்று, இன்றும், பாசுரம் படிக்கும்போது இப்படியும் கடவுளைச் சித்தரிப்பதா என்று கேட்டால் சீற்றம்தானே பிறக்கிறது! சரியா? சிந்தித்துப் பாருங்கள்!!
பாயசம் காய்ச்சப் பாண்டமின்றிக் கவலைப்பட்ட சமுத்திர தேவனைப் பார்த்து, விருந்துக்கு வந்திருந்த தார் தேவன், நான் கொண்டு வருகிறேன், பெரியதோர் பாண்டம் என்று கூறினான்.
தார் தேவன் இவ்வண்ணம் கூறியதற்குக் காரணம், ஒன்பது உலகிலும் உள்ள பாண்டங்களை எல்லாம்விடப் பெரியதோர் பாண்டம், இருக்குமிடம் தனக்குத் தெரியுமென்று, டையர் என்ற ஒரு கடவுள் தந்த தகவல்தான். சரி, என்றான் சமுத்திரராஜன்—உடனே தார் தேவன், டையர் தேவனுடன், பாண்டம் கொண்டுவரக் கிளம்பினான்.
அண்டசராசரத்துக்கு அப்பாலுள்ள ஓர் இடத்தில் நாய்முகம் கொண்ட ஓர் அசுரன்—அவன், இந்த டையர் தேவனுக்கு, ஸ்வீகாரத் தகப்பனாம்! அவனிடமே அவ்வளவு பெரிய பாண்டம் இருந்ததாம். அதைக் கொண்டுவரக் கிளம்பினான் தார்.
தாரோ, தேவன்—தேடுவதோ பாண்டம்!!டான் கிஸ்டர், டான் கிரிஸ்னர் எனும் இரண்டு ஆடுகளையும், ரதத்தில் பூட்டினான்; தார்—ரதம் வாயுவேகம் மனோவேகமாகச் சென்றது—வழியில், ஓர்வாண்டல் என்றோர் நண்பன் வீடு—அங்கு சென்று இளைப்பாறினர். பிறகு கால் நடையாகவே கிளம்பி. நாய்முக அசுரன் இருக்குமிடம் சென்றனர்—இந்த அசுரன் பெயர், ஹைமர்.
அசுரனுடைய அரண்மனையை அடைந்ததும் அங்கு, பல தலை கொண்ட பயங்கர ராட்சசக் கிழவி, இவர்களை வரவேற்றாள். ஏனெனில் அவள், டையர் தேவனின் பாட்டி! அவள், அசுரஜாதி எனினும் அவள் பேரன், கடவுள் ஜாதி!! கதை, வெறும் கேலிக் கூத்தாக இருக்கிறதே என்று சொல்வீர்கள்! கடவுள் கதை! திருவிளையாடற் புராணம்! சந்தேகித்தால் பாபம்!! என்று கூறுவர், மதவாதிகள்.
பாட்டி அசுர ஜாதி, அகோர ரூபம்—ஆனால் அவள் மகள், அதிரூப சுந்தரி! இவளுடைய உதவி டையருக்கும். டையர் தயவால் தார் தேவனுக்கும் கிடைத்தது.
மாலையில், வீடுவந்தான் நாய்முகாசூரன்—பெரிய பெரிய மீன்களுடன்! தார் தேவனையும் டையரையும் கண்டதும் கடுங்கோபம் கொண்டான். அவனுடைய கோபப்பார்வை பட்ட மாத்திரத்தில், அங்கிருந்த பல பொருள்கள் பொடிப் பொடியாகிவிட்டன. அவனைச் சாந்தப்படுத்தி, டையரும் அவன் நண்பனும் விருந்தாளிகளாக வந்திருப்பதை அதிரூப சுந்தரி வினயமாக எடுத்துக் கூறினாள்.
பிறகு, சாப்பிட உட்கார்ந்தனர். மூன்று காளைகளைச் சுட்டு, விருந்துக்குக் கறியாக வைத்தான் அசுரன். இரண்டு காளைகளை, தார் தேவன் வேகமாகத் தின்று தீர்த்துவிட்டான்—இந்தத் திருவிளையாடலைக் கண்டு அசுரனே திடுக்கிட்டுப் போனான்—அதேபோது கோபமும் பிறந்தது. ஏனெனில், யார், தனக்குச் சமமாகச் சாப்பிடவில்லையோ அவர்களைக் கொன்றுவிடுவது, அவன் சபதம். மிகச் சாதாரண உருவுடன் உள்ள தார், எப்படியும் தன் அளவு சாப்பிடமுடியாது, ஆகையால் அவனைக் கொன்றுவிட முடியும் என்று எண்ணித்தான். அசுரன், மூன்று எருதுகளைப் பொசுக்கிவைத்தான் விருந்துக்கு—தார் தேவனோ, இரண்டு எருதுகளை விழுங்கிவிட்டார் ஆகவே கொல்வதற்கில்லை! இந்தத் துயரம் தாக்கிற்று அசுரனை.
அந்த நாள் பக்தர்கள் முன், பூஜாரி பாடியிருப்பானல்லவா, இதுபற்றி! இப்போது காளிகோயில் பூஜாரி பாடுகிறானே, பல்லுக்கு பல் காதம், பல்லிடுக்கு முக்காதம், என்று, உடனே பக்தர்கள், ஆமாமாம் ஆமாமாம், என்று ஆமோதிக்கிறார்களல்லவா, அதுபோல.
தார் தேவனின் திருக்கோயிலில், திருவிழாச் சமயத்திலே, கூடியுள்ள பக்தர்கள் முன்னிலையில் பூஜாரி,
நாய்முக அசுரன் கண்டான்
நமதரும் தார்தேவனை!
நாலில் ஒன்று குறையக் காளை
நல்ல கறி சமைத்து வைத்தான்
பாரெல்லாம் அறிய அப்போ
பகவானும் என்ன செய்தார்!
பாவிமகன் செய்யும் சூது
படுசூரண மாகவேதான்,
காளை இரண்டைக் கனவேகத்தில்
மென்று தின்று ஏப்பம் விட்டார்!
இவைகள், தேவனின் திருவிளையாடல்களாக, தெளிவில்லாத மக்களால் அந்நாளில் கொண்டாடப்பட்டன—இப்போதல்ல. இப்போதும், மலை மலையாக இருந்த சோற்றைத் தின்று வைகை ஆறு முழுவதையுமே குடித்துத் தீர்த்த குண்டோதரன் கதையைப் புண்யம் பெறக் கேட்டு ஆனந்திக்கும் போக்கு, நம் நாட்டிலே இருக்கிறது—வேறெங்கும் இல்லை!!
தார் தேவனின் இந்தத் திருவிளையாடலால் திடுக்கிட்டுப்போன, ஹைமர், மறுநாள், வழக்கப்படி, மீன் பிடிக்கச் சென்றான்—தார் தேவனும் உடன் கிளம்பினான்.
“பயலே! என்னோடு வராதே! ஆபத்துகள் எனக்குப் பூச்செண்டுகள்! உன்னால் ஆகாது, என்போல, விளையாட போ, போ!” என்றான், அசுரன்
“ஆபத்துகள் எனக்கு உதிர் சரகுபோல!” என்றான் தார்.
“நான் ஆழ்கடலின் நடுவே சென்று மீன் பிடிப்பவன்! அலை மலையென எழும்பும்! அறியாச் சிறுவனே! அங்கு வந்தால் அச்சம் உன்னைத் தாக்கும். வீட்டிலேயே இரு” என்கிறான் அசுரன்.
“கடலின் மறுகரை சென்று, கிளிஞ்சல் எடுக்கவும் நான் தயார், நீ கிளம்பு” என்றான் தார் தேவன்.
இருவரும் கிளம்பினர் படகில். படகு, செல்கிறது, செல்கிறது, பயங்கரமான வேகத்தில்; தார் தேவன், திகில் கொள்ளவில்லை. கடைசியில் மீன் பிடிக்கலாயினர். அசுரன் பிரம்மாண்டமான மீன்களைப் பிடித்துக் காட்டினான், தன் ஆற்றலை விளக்க! தார் சும்மா இருப்பாரா! தன் ஆற்றலை விளக்க அவரும் மீன் பிடிக்கலானார். தூண்டிலை வீசினார்—மீன் ஒன்று சிக்கிற்று—அது மிக மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்று இருவரும் யூகித்தனர், ஏனெனில், அவர்களுடைய படகே, கிடுகிடுவென ஆடத் தொடங்கிற்று, தூண்டிலில் சிக்கிய மீன், தப்பித்துக் கொள்ள முயன்று, போரிட்ட காரணத்தால், தார் தேவன் தன் முழு வலிவையும் கொண்டு தூண்டிலைத் தூக்குகிறார்—முடியவில்லை. அகோரச் சத்தம கேட்கிறது—படகு கவிழ்ந்துவிடும் போலிருக்கிறது. நாய்முகாசூரனுக்கு நடுக்கம் பிறந்துவிட்டது. கடைசியில் தார் தேவன், தூண்டிலைத் தூக்கினார்—மீனல்ல—பெரும்பாம்பு—சாதாரணப் பாம்பல்ல, கடவுள்களை எல்லாம் கலங்கச்செய்து கொண்டு, கடலுக்கு அடித்தளத்திலே படுத்துக்கொண்டு, கடல் முழுவதும் பரந்துகிடக்கும் அளவுள்ள மிட்கார்டு எனும் பாம்பு!
அண்டத்தை எல்லாம் தாங்கும் ஆதிசேஷன் கதை இல்லையா, நம்நாட்டில்—அதுபோல, ஆழ்கடலைக் கலக்கும், மிட்கார்டு கதை ட்யூடானியருக்கு,
மிட்கார்டு, போராடுகிறது—தார் தேவன், அதை அழித்தே தீருவதென்று ஆற்றலுடன் போராடுகிறார். பலரையும் மிரட்டிப் பிழைத்து வந்த நாய்முகாசூரன் நடுக்கத்துடன் இதைக் கண்டு, என்ன விபரீதம் நேரிடுமோ என்று எண்ணி, தூண்டிலை அறுத்துவிட, பாம்பு, அண்டம் அதிர்ந்ததோ என்று கூறத்தக்கவிதமான சத்தத்துடன், கடலடி வீழ்ந்தது, கடுங்கோபம் பிறந்தது தார் தேவனுக்கு! சம்மட்டியால் ஓர் அடி கொடுத்தார்—அசுரன், ஆழ்கடலிலே வீழ்ந்தான். அங்கே, மிட்கார்டு, விஷத்தைக் கக்குகிறது! எனவே, மேலே கிளம்பினான் கிலியுடன்—படகிலே வந்தமர்ந்தான்—தார் தேவனும், போகட்டும் என்று விட்டுவிட்டார். இருவரும் வீடு திரும்பினர்.வீட்டிலே, தார் தேவனின் பலத்தைப் பரீட்சிக்க, வேறு பல சோதனைகளை நடத்தினான் நாய்முகாசூரன்—தாருக்கே வெற்றி. கடைசியாக எந்தப் பாண்டத்துக்காக வந்தாரோ, அதையே காட்டி, “நீ பலசாலி என்பது உண்மையானால், அந்தப் பாண்டத்தைத் தூக்கிக்கொண்டு, நடந்துகாட்டு, பார்க்கலாம்” என்றான் அசுரன். தார் தேவன் இதுதான் சமயமென்று, பாண்டத்தைத் தூக்கிக் கொண்டு, நடக்கலானான்—அசுரன் பின் தொடர்ந்தான், ஆனால் பிடிக்கமுடியவில்லை. தாரும் டையரும், பாண்டத்தை எடுத்துக்கொண்டு பல லோகங்களையும் கடந்து, சமுத்திர தேவனிடம் வந்து சேர்ந்தனர். பாயசம் அந்தப் பாண்டத்தில் காய்ச்சப்பட்டு, கடவுள்கள் பருகிக் களித்தினர்.
பாயசம் காய்ச்சும் பாண்டம் தேடி, தார் தேவன் நடத்திய திருவிளையாடலைப் போல, பலப் பல உண்டு. அவ்வளவும், அறிவுக்குத் துளியும் பொருந்தாதன—எனினும் அவைகளை நம்புபவனே ஆத்திகன்—மறுப்பவன் நாத்திகன், என்றனர் அந்த நாள் மதவாதிகள்.
❖