உள்ளடக்கத்துக்குச் செல்

மாஜி கடவுள்கள்/துகிலுரிந்த துச்சாதனி

விக்கிமூலம் இலிருந்து


முதல் வாயிற்படி புகுந்ததும், அழகியின் கிரீடம் பறிக்கப்பட்டது. இரண்டாம் வாசலில், காதணி போயிற்று, மூன்றாம் வாசலில் கழுத்தணி போயிற்று, நான்காம் வாயலில் நகை பல போயின, ஐந்தாம் வாயலில் இடுப்பணி பறித்தனர்—இவ்வளவுக்கும் அவள் சினம் கொள்ளவில்லை; இந்தச் சீரழிவுகள் ஏன் என்று வருந்தவுமில்லை, ‘செல்! செல்! என் காதலன் இருக்குமிடம் அழைத்துச் செல்!’ என்றே கூவினாள். ஆறாம் வாயலில் அந்த ஆரணங்கின் ஆடையும் பறிக்கப்பட்டது. தோகையின் துகிலுரியப்பட்டது. ‘ஏனோ இச்செயல்?’ என்று கேட்டாள். ‘என் செய்வேன், ஏந்திழையே! எமது அரசி அலாட்டூவின் ஆக்கினை இது’ என்றான் காவலன்.

துகிலுரிந்த துச்சாதனி

வாயில் காப்போய்! வாயில் காப்போய்! வருவாய் விரைந்து, கதவு திறக்க. காதலன் உள்ளான், கடுகித் திறவாய்! காண்பேன் அவனை, கதவு திறமினோ! திறந்திட மறுத்தால், இருந்திடேன் வாளா! தூள் தூளாகும் தெரிவாய் கதவும். தொடர்ந்து உடைப்பேன் தொல் கதவெல்லாம், வாயில் காப்போய்! வருக விரைந்தே! இறந்தோரை எழுப்பி, இருப்போர் மீதேவி இல்லாதொழித்திடுவேன், இதை நீ அறிக! இருப்போர் சிறுதொகை, இறந்தோர் மிகுதி. எனவே, உடனே, திற நீ கதவு”

காதலனைக் காணாது, எங்கெங்கோ தேடி அலுத்து, உடல் இளைத்து, உளம் பதைத்துப்போன காரிகை, அறிந்தாள் அவன் இருக்குமிடம். அங்கு கட்டு உண்டு, கடுவிஷக்கண்ணருண்டு, கதவுகள் பல உண்டு, காட்டு முறைகளுண்டு, என்று கேள்விப்பட்டாள்—ஆனால் காதலன் அங்குளான் என்பதறிந்ததும், இவை எலாம் மறந்தாள், ஏகினாள் கடுகி, தாளிடப்பட்ட கதவு கண்டாள், தடதடவெனத் தட்டி நின்றாள், திறந்திட யாரும் வராதது கண்டு, காரிகை கூவி நின்றாள்,

“வாயில் காப்போய்! வாயில் காப்போய்!

வருவாய் விரைந்து கதவு திறக்க” என்று.

இவ்வளவு போதும், இங்குள்ள கலாரசிகர்களுக்கு—படித்துப் படித்து, ரசித்து, ரசித்து, பதங்களைப் பிரித்துப் பிரித்து, பொருள் உரைத்துப், பூரித்துப் போவர், கேட்போர் பூரிக்காவிடினுங்கூட.

காதலியைத் தேடி ஓடிடும் காதலனைப் பற்றியே கேள்விப்பட்டுள்ளோம்; இஃதோ புதுமை, அருமை, காதலனைத் தேடி அலைகிறாள் காதலி! காடுமேடு மட்டுமோ? அல்ல! அல்ல! இருக்குமிடம் தெரியும்வரை தேடித் திரிகிறாள். கண்டாள் இடத்தை—கொண்டாள் வேட்கை—விண்டாள் தன் விரகத்தை கவிதா சக்தியுடன். கவிதை அறிவாளோ அக்காரிகை என்று கேளாதீர்! காதலில் மலர்வது கவிதை! அப்பூங்கொடியோ, காதலின் உருவம்—காதலே, அவள்—என்றெல்லாம், கூறிக் களிப்பர்.

கதையோ, இந்த ரசத்தோடு முடிந்துவிடவில்லை—வளருகிறது.

வாயில்காப்போன் வந்தான், வனிதையைக் கண்டான், ஆனால் கதவைத் திறக்கவில்லை. ஓடிச் சென்று ‘சேதியை’ தன், எஜமானியிடம் கூறினான்.

🞸🞸🞸

“எழிலுருவோ அவள்?”

“ஆம்! அழகின் எல்லை”

“அலறித் துடித்து அழுகிறாளோ அவள்?”

“ஆமாம், கல்லும் கரையும் அக்கன்னியின் அழுகுரல் கேட்டால்”

“கதவுதிறமின் என்று கேட்டு நிற்கிறாளா?”

“ஆம்! திறவாது போனால், உடைத்தெறிவேன் என்று சூள் உரைக்கிறாள் அந்த வாட்கண்ணி!”

“சூள் உரைத்தவளை, இந்நாள் என்ன செய்கிறேன் பார். காவலா! கதவு திறவாதே!”

“கதறுகிறாளே!”

“அது எனக்குக் கீதம்!”

“கதறுவதை நிறுத்திக்கொண்டு கதவை உடைக்க முனைந்தால்?”

“ஆமாம்! அதுபோலும் செய்யக்கூடும், அந்த ஆட்கொல்லி. ஒன்று செய். கதவு திறந்து அவளை இங்கு அழைத்துவா. ஆனால், இங்கு, வழக்கமாக நாம் நடத்தும் மரியாதை முறைப்படி! துஷ்டச்சிறுக்கி உணரட்டும், நமது துரைத்தனத்தின் பெருமையை—ஆற்றலை அறியட்டும், அலைமோதும் மனம் கொண்ட அந்த அணங்கு”

🞸🞸🞸

காவலனும், எஜமானியும், பேசினர் இதுபோல். கதவைத் திறந்து, கதறி நின்ற காரிகையை, அந்தப் பிரம்மாண்டமான மாளிகைக்குள் அழைத்து வந்தான் காவலன். மையிருட்டு! பலவிதமான பறவைகள் அங்கு சிறகடித்து வட்டமிட்டுக்கொண்டிருந்தன. செவியைச் சிதைக்கும் விதமான கோரச் சத்தங்கள். எங்கும் புழுதி! துர்நாற்றம்! இந்த இடத்திலே, அழைத்துச் செல்லப்படுகிறாள், எழிலரசி. இவ்வளவையும் பொருட்படுத்தாமலே அவள் செல்கிறாள், இருதயநாதன், அங்கு இருக்கிறான், காண்போம், பெறுவோம் என்ற நம்பிக்கையுடன்.

வழக்கமான மரியாதையுடன் அழைத்து வா, என்று கட்டளையிட்டிருந்தாலல்லவா, காவலனுக்கு. அவன் மீறி நடக்கமுடியாது. எனவே அரசி கூறியபடியே, அழகிக்கு மரியாதைகள் நடத்தினான்.

என்ன அந்த மரியாதை?

முதற் வாயிற்படி புகுந்ததும், அழகியின், கிரீடம் பறிக்கப்பட்டது. இரண்டாம் வாசலில், காதணி போயிற்று, மூன்றாம் வாசலில் கழுத்தணி போயிற்று, நான்காம் வாயலில் நகை பல போயின, ஐந்தாம் வாயலில் இடுப்பணி பறித்தனர்—இவ்வளவுக்கும் அவள் சினம் கொள்ளவில்லை, இந்தச் சீரழிவுகள் ஏன் என்று வருந்தவுமில்லை, ‘செல்! செல்! என் காதலன் இருக்குமிடம் அழைத்துச் செல்!’ என்றே கூவினாள். ஆறாம் வாயலில் அந்த ஆரணங்கின் ஆடையும் பறிக்கப்பட்டது; தோகையின் துகிலுரியப்பட்டது. ‘ஏனோ இச்செயல்?’ என்று கேட்டாள். ‘என்செய்வேன் ஏந்திழையே! எமது அரசி அலாட்டூவின் ஆக்கினை இது’ என்றான் காவலன்.

இழுத்துச் செல்லப்பட்டாள், மேலும் மேலும்—நெடுந்தூரம் கடைசியில் ஓர் கொலுமண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டாள். அங்கு வீற்றிருந்தாள், அலாட்டூ அரசி. கெம்பீரமாக அவள் எதிரே நின்றாள், ஆடையிழந்த அழகி!

“பங்கம் பல அடைந்தும் இவள் பெண் சிங்கமென நிற்பதைக் காணீர்!” என்று சுடுசொல் கூறினாள், அலாட்டூ அரசி.

“இவளை இவ்வளவு இம்சித்தது போதாது! காதலன் அல்லவா வேண்டும், காதலன்! தருகிறேன், இவளுக்குக் கடுமையான நோய்கள் அனைத்தையும்” என்று ஆர்ப்பரித்தாள்.

நாம்டார், எனும் நோயூட்டும் தீயதேவனை அழைத்தாள்—இவளைத் தீண்டு, தேவனே! தேகமெங்கும், நோயை மூட்டிவிடு; என்று உத்தரவிட்டாள். நாம்டாரின் நாசமூட்டும் சக்தி, நங்கையின் உடலெங்கும் நோயை ஊட்டிற்று. அழகி, அழுகலானாள்.

ஆனால், அவளுக்கு வந்த அவதி, அவளோடு நின்றதோ! இல்லை! அவனியெங்கும் பரவிற்று. உற்பத்தியே நின்றுவிட்டது.

🞸🞸🞸

எவ்வளவு எக்களிப்புக் கொள்வர், இவ்வளவு ‘கதை’ கிடைத்துவிட்டால்! வாயலுக்கு வாயல், அழகி செல்ல எவ்வளவு நேரம் பிடித்திருக்குமோ, அதுபோல் நூறு மடங்கு அதிக நேரம் பிடித்திருக்குமே, அருங்கவிவாணர்களுக்கு. ‘கவிச் சக்ரவர்த்தி’ கம்பரிடம், மட்டும், இந்தக் காரிகையின் கதை சிக்கிவிட்டிருந்தால், அந்த ஆறாம் வாயற்படியைக் கடக்க, எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்! ஒரு நூறு செய்யுள் செய்து, ‘அம்மவோ! அற்புதங்கொல்! காணற்கரிய காட்சியாமே!’ என்ற செருகல்களை வைத்து, இன்ப ரசத்தை இழைத்துக் குழைத்து, அரி அரப் பிரம்மாதியரே வந்து தடுப்பினும், இன்னுமோர் இருபது செய்யுளேனும் இயற்றாது விடின், இம்மை மறுமை இரண்டிலும் சுகம் இராது என்று கூறியிருந்திருப்பார். நல்ல வேளை, அந்த ஆடையிழந்த அணங்கு, கம்பரின் கருத்திலே தோன்றவில்லை.

🞸🞸🞸

இந்தக் கதையைத் தொடருமுன்பு, நண்பர்கள் யோசிக்க வேண்டும், சாவித்திரி, துரோபதை, எனும் இரு கற்பனைகளின், ‘கூட்டு’ போல, இக்கதை இருக்கிறதல்லவா, என்பதை.

🞸🞸🞸🞸

நாதனைச் தேடிச்சென்ற நல்லாளுக்கு இப்பொல்லா நிலை வந்தது கண்டு, நானிலம் நடுங்கியது மட்டுமல்ல, கடவுளர்களும், கோபித்தனர்.

ஏனெனில், இவ்வளவு இம்சைக்கும் இழிவுக்கும் ஆளான ஆரணங்கு, வேறு யாரும் அல்ல, தேவலோகத்தின் ராணி!—பல கடவுள்களில் ஒருவள்!!

தேவலோக ராணிக்குத்தான் காதல் இப்படி! அவள்தான், காதலனைத் தேடி அலைகிறாள் பல இடங்களிலும். கடைசியில் அவள் சென்ற இடம், நரகலோகம். அந்த நரகலோக ராணிதான், அலாட்டூ. அவள்தான், தேவலோக ராணியைத் துகிலுரிந்துவிட்டதுடன், நோயையும் ஏவுகிறாள். ஏன்? தேவலோக ராணிமீது நரகலோக ராணிக்கு அவ்வளவு பொறாமை—கோபம்!

வஞ்சம் தீர்த்துக்கொண்டாள் இஷ்டார் எனும் பெயர் கொண்ட தேவலோக ராணிமீது.

பிறகு, இந்த அக்ரமத்தைப் பெரிய கடவுள்கள் அடக்கியதுடன், தேவலோக ராணியை நரகலோகத்திலிருந்து மீட்டனர்.

🞸🞸🞸

இந்தக் கற்பனை, எள்ளளவேனும், மட்டமா, நம் நாட்டுப் பழம் புராணங்கட்கு? எவர் கூறுவர்? இந்தப் புராணத்திலே, நமது கலாரசிகர்கள் தேடிடும் ‘நவரசம்’ ஏராளம். இதுவும் கடவுளின் கதைதான்—நரர் கதை அல்ல.

பாபிலோனியா நாட்டுப் புராணம் இது. தேவலோக ராணி இஷ்டார், டாமூஜ் எனும் திவ்ய ரூபனிடம் காதல் கொண்டு, அவனை அடைய நாகலோகம் சென்று, அங்கு, வஞ்சனை மிக்க அலாட்டூ தேவதையால் அவமானப்படுத்தப்பட்டு, நோயூட்டப்பட்டு, நொந்து கிடக்க, இஷ்டாரை ரட்சித்து, அவளை, மூல தெய்வங்கள், மீட்ட புராணம்.

இஷ்டார், அலாட்டூ, டாமூஜ், இவை யாவும் காவிய பாத்திரங்களாகமட்டும் இல்லை, கடவுள்கள்! கோயில் கட்டிக் கும்பிட்டு வந்தனர், பாபிலோனியா நாட்டு மக்கள். பூஜைகளுக்கும், புனிதத்தன்மைக்கும் குறைவு கிடையாது. இப்போது, இஷ்டாரும் இல்லை, டாமூஜும் இல்லை, இடர் செய்த அலாட்டூவும் இல்லை. இவர்களுக்காக எழுப்பப்பட்ட கோயில்களும் இல்லை, இவர்கள் பற்றிய பண்டிகை இல்லை, தேரும் திருவிழாவும் இல்லை, திருப்பாசுரம் இல்லை,—இவை யாவும் மாஜிகளாயின!! இவை போன்ற கற்பனைக் கடவுள்களை நம்பிக் கருத்தழியாதீர், என்று அறிஞர்கள் கூறினபோது, பாபிலோனிய மக்கள் எளிதிலே நம்பினரா? நம்புவரா? எங்கள் மூதாதையரின் தெய்வங்களைப், புராண மகிமையைப், பூஜையின் புனிதத் தன்மையைக் குறை கூறுகிறாயே, ஏடா! மூடா! இது நீ நாசமாவாயடா! என்றுதான் சபித்தனர். ஆனால் அவர்களின் கோபம்தான் அடங்கிற்று, புத்தறிவின் வேகம் அடங்கவில்லை. இஷ்டாரும் அலாட்டூவும், பிறவும், அந்த நாட்டு மக்களின் கருத்தை விட்டகன்று, யாரேனும் கவனப்படுத்தினாலும், அது எங்கள் பழம் பழம் மூதாதையர்கள் அறிவுக் குழப்பத்தின்போது உண்டானவை, என்று கேலியுடன் பேசும் நிலை பிறக்கும்வரை, புத்தறிவுப் பிரசாரம் ஓயவில்லை.

அங்கும், இங்குபோல், இத்தகு கதைகளை, அப்படியே பார்த்தால், அறிவுக்குப் புறம்பாகவேதான் தோன்றும். ஆனால் இஷ்டாரைச் சக்தியாகவும், டாமூஜ் எனும் தேவனை இன்பமாகவும், அலாட்டூ தேவியைத் துன்பமாகவும், வைத்துக், கதையைப் பார்த்தால், ஆழ்ந்த கருத்து விளங்கும் என்றுகூடக் கூறிப் பார்த்தனர். ஆனால் இளைஞர்கள் சிரித்தனர்.

துன்பத்தைத் துடைத்து இன்பம் பெறச் சக்தியால் முடியும் என்ற தத்துவத்தை, சாதாரணமாகவே, நாங்கள் புரிந்துகொள்வோம், புராணிகரே! அதற்காக நீர், ஆறு வாயிலுள்ள அரண்மனைக்கு அழைத்துச் சென்று, எம் எதிரே ஆடை இழந்த அழகியை நிற்கவைத்து, கோரமுகத் தேவனைக் காட்டி, ஏன் கொடுமைப்படுத்துகிறீர்—என்று கேட்டுக் கை கொட்டிச் சிரித்தனர். நாளாகவாக, இந்தத் ‘தேவதைகள்’ மதிப்பிழந்து, மக்கள், உண்மை அறிவை நாடலாயினர். அந்த நீண்ட பயணம், இன்று உலகிலே பெரும் பகுதியிலே, ஒரே தெய்வ வழிபாடு என்ற நிலைக்குச் சென்றிருக்கிறது. இங்கோ, முப்பத்து முக்கோடி தேவரும் இருந்தாக வேண்டும் என்று வாதாடுகின்றனர். அவர்களைப்பற்றி உள்ள கதைகளிலே காணப்படும் ஆபாசங்களை எடுத்துக்காட்டினாலோ, மூக்கும் முழியும் சிவக்க, முறைத்துப் பார்க்கின்றனர்.

ஏன்? கற்பனைகளைக் கண்டிப்பதை, கடவுள் உணர்ச்சியைக் கண்டிக்கும் கயமை என்று தவறாக எண்ணிக்கொண்டு அன்பர் பலர், காய்கின்றனர். இது அவசியமா என்று கேட்கின்றனர். கடவுள்மீது ஏனோ நமக்குக் கசப்பு, எனவேதான், இதுபோல் எழுதிவருகிறோம் என்றும் எண்ணினர். இவ்வளவும், தவறான கருத்தின்மீது கட்டப்பட்ட அவசியமற்ற அபவாதங்கள்.

உலகிலே, எத்தனையோ நாடுகளிள் எண்ணற்ற கடவுள்களை, வழிபாட்டுக்குரியனவாகக் கொண்டு, பற்பலவகை விழாக்களை நடத்தியும் வெறியாட்டத்தில் ஈடுபட்டும், வந்தனர். அவர்கள் அவ்வளவு பேரும், ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாகவும், முறை மாறினால் அழிவு நேரிடும், இவ்வுலகில் மட்டுமல்ல, மேல் உலகிலும் என்று அஞ்சியே, சிற்சில சமயங்களிலே, தாம் கொண்ட நம்பிக்கைகள் சரியல்லவோ, என்ற சந்தேகம் மனதிலே கிளம்பிய உடனே ‘சந்தேகச் சாத்தானை விரட்டிச் சற்குருவின் பாதத்தை நாடு’ என்ற போக்கு கொண்டனர். ஆனால் அவர்களின் அச்சத்தையும் ஆவலையும், சின்னாபின்னப்படுத்துமளவு வேகத்துடன், புத்தறிவு தாக்கலாயிற்று. பிடிவாதமாகவும், பயங்கரமான கருவிகளைத் தூக்கிப் போரிட்டும், பழைமை தோற்றுத்தான் போயிற்று. தோல்வி அடையுமுன்போ, தோத்திரம், மந்திரம், மணி மாலை, மண்டைஓடு, சுடலை மண், முதலிய எதை எதையோ காட்டி மிரட்டிக்கொண்டிருந்தது.

புத்தறிவின் ஒளிமுன்பு, பழையகாலக் கற்பனையிலே உருவான பல ‘தேவதைகள்’ இருக்குமிடம் தெரியாமல் மறைந்தன. இன்று, அந்த நாடுகளிலே உள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்ல, முதியோர்களுக்குங்கூட, பழைய தெய்வங்களின் பெயரும் தெரியாது. ஒரு காலத்தில் பராக்கிரம்மிக்கன என்று கருதப்பட்டு, பாராண்ட மன்னரின் குமாரிகளையேகூடப் பலி கேட்டுப் பெற்று, விண்ணை முட்டும் கோபுரங்களும், விகசிதமணி மண்டபங்களும் படைத்துச், சுட்டுவிரலையே செங்கோலாக்கிக் கொண்ட பூஜாரிகள் புடைசூழ வீற்றிருந்த ‘தேவதைகள்’ இன்று, தேடித் தேடிப் பார்த்தாலும் காணமுடியாத நிலை, அங்கெல்லாம் ஆகிவிட்டது. இதனால் அங்கெல்லாம் அஞ்ஞானமும் நாத்திகமும் தலைவிரித்தாடிற்று என்றோ, அருள்மொழி மடிந்து மருளுரை மிகுந்தது என்றோ, கூறுவதற்குமில்லை. அந்த நாடுகளெல்லாம், நமது நாட்டைவிட நல்ல நிலையிலேயே உள்ளன; நாசமுறவில்லை.

மாடி வீடு கட்டுவதற்கு, முதலில், மரம் கொண்டோ, வெறும் மண்மேடாகக் கொண்டோ, கட்டடமமைப்போர் பணிபுரிவர்—ஆனால் அடுக்கு உயர உயர, அந்த முறை மாறும்—மாடி வீடு கட்டியானதும், முதலிலே நிறுத்திய, மரக்குவியல், அல்லது, மண் குவியல், இதனை, வைத்துக் கொண்டிரார்—நீக்கிவிட்டு, மாடி சென்று உலவுவர். கதிர் முற்றியதும், பயிரை அழிப்பதா, இப்பயிரன்றோ கதிர் அளித்தது, என்று எண்ணமாட்டார்கள்—அறுவடை செய்வர்—எந்தப் பயிர், செந்நெல்லைத் தந்ததோ, அதனை மிதிப்பர், துவைப்பர், அடிப்பர்.

கருத்துலக அறுவடையும் அதுபோன்றதே. இதனை அறியாதார், ஆயாசமடைவர்—ஆர்ப்பரிக்கவும் செய்வர். அவர்களேகூட, இம்முறை, அவனியில் பல்வேறு இடங்களிலும் நடந்ததேயன்றி வேறல்ல, புதிதுமல்ல, பொல்லாங்கு நிரம்பியதல்ல, புல்லறிவாளர் போக்கல்ல, என்பதை அறிவர். அதற்காகவே, கற்பனைத் திறனுடனும் காவிய ரசனையுடனும், பண்டை நாட்களிலே, இங்கு, ஆக்கப்பட்ட அருமையான தேவதைகளைப்போல, பலவற்றை உலகிலே பல்வேறு இடங்களிலே, அந்தந்த நாட்டு மக்கள் கொண்டிருந்தனர்—கோல் கொண்டோரெல்லாம் குப்புற வீழ்ந்து வணங்கினர் அவற்றின் முன்பு. ஆனால், புத்தறிவு பிறந்ததும், அவைகளின் ஆதிக்கம் போயவிட்டது–மெய்ஞ்ஞானம் உதித்தது; ஏறிச்செல்ல வாகனமும், வாரி அணைக்க மனைவியரும், இல்லாத ஏகதெய்வக் கொள்கை நிலைநாட்டப்பட்டது என்பதை விளக்குவது அவசியம் என்று எண்ணுகிறோம். இங்கு முன்பு இருந்த, கவிவாணர்கள், கற்பனையில் தேறினவர்கள், மனவளம் கொண்டிருந்த அளவிலும் வகையிலும், உலகில் வேறு எங்கும், எவரும் கொண்டிருந்ததில்லை என்ற பொய்யுரையையும், இந்த விளக்கம், பொடியாக்கிவிடும் என்பது நமது நம்பிக்கை.